வல்லுநராக ஏற்றுக்கொண்ட துறை
இணைப்பேராசிரியர் ஆகி நெல்லைக்கு வந்தபோது திருவனந்தபுரம் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தான் என்னை ஏற்றுக் கொண்ட தமிழ்த்துறை. அதற்குச் சில காரணங்கள் இருந்தது. திருவனந்தபுரத்திற்கும் திருநெல்வேலிக்குமிடையே உள்ள தூரம். திருவனந்தபுரம் தமிழ்த் துறைக்கு ஒரு வல்லுநரை அழைக்க வேண்டுமென்றால் மதுரை அல்லது கோவையிலிருந்துதான் அழைக்க வேண்டும். ஆனால் காலையில் கிளம்பிப் பல்கலைக்கழக வேலை நேரத்திற்குள் வரக்கூடிய தூரத்தில் இருந்தது நெல்லை. பொதுவாக நாடகத்துறை வல்லுநர்களைத் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையினர் அதிகமும் ஏற்பதில்லை. அவர்களை இன்னொரு துறையினராகக் கருதி விலக்கி வைப்பார்கள்.அதற்கு மாறாக நாடகத் துறை வல்லுநராக என்னை அறிந்தவர்கள் கேரளப்பல்கலைக்கழகத் தமிழ் துறையிலும் பல்கலைக்கழகக் கல்லூரியிலும் இருந்தார்கள் என்பது இன்னொரு காரணம். 1997 பிப்பிரவரியில் நெல்லையில் பணிக்குச் சேர்ந்த என்னை அதே ஆண்டு ஏப்பிரலில் முதல் அழைப்பாக சுந்தரனார் அறக்கட்டளையின் சொற்பொழிவுக்காக அழைக்கப்பட்டேன். அழைத்தவர் அப்போதைய துறைத்தலைவர் சி.சுப்பிரமணிய பிள்ளை. பல்கலைக்கழக வளாகத்தில் இல்லாமல், நகரில் இருந்த சைவ சபையில், சு...