வித்தியாசங்களில் மிளிர்கின்ற வானவில்
“வெட்டு ஒன்று; துண்டு ரெண்டு” – இப்படிப் பேசுபவர்களைப் பெரும்பாலோருக்குப் பிடித்துப்போகிறது. இந்தச் சொற்றொடரைக் கிராமத்துப் பஞ்சாயத்துகளில் நீங்கள் கேட்டிருக்கக்கூடும் . பஞ்சாயத்துகளில் தீர்ப்புச் சொல்லும் நாட்டாண்மைகள் தங்களை – தங்களது தீர்ப்பை – முடிவை இப்படியான ஒன்றாகக் காட்டிக் கொள்ளவே விரும்புகிறார்கள். அப்படிச் சொல்லும் தீர்ப்புகளைப் பஞ்சாயத்தில் உட்கார்ந்திருக்கும் பலரும் ஏற்றுக்கொண்டும் மறுப்பு சொல்லாமல் வீடு திரும்புவதையும் பார்த்திருக்கலாம். கணவன் – மனைவி உறவுச்சிக்கல், தந்தை -மகன் குடும்பச்சிக்கல், அண்ணன் – தம்பி சொத்துத்தகராறு, பக்கத்து நிலத்துக்காரருடன் வாய்க்கால், வரப்புத் தகராறு, அடுத்த தெருக்காரருடன் கோயில் தகராறு போன்றவற்றில் தீர்ப்பு சொல்பவர்கள் கறாரான ஒரு முடிவை – வெட்டு ஒன்னு; துண்டு ரெண்டு என்பதுபோலச் சொல்லிவிட வேண்டுமென்றே எதிர்பார்க்கிறார்கள். வழக்கென்று வந்துவிட்டால் வாய்தா வாங்கி இழுத்தடிக்கும் வேலையெல்லாம் நீதிமன்றங்களின் – வழக்குரைஞர்களின் வேலை. கிராமத்து பஞ்சாயத்து என்றால் ‘கையிலெ காசு; வாயிலெ தோசை’ என்பதுபோல முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.