கலைஞர் மு. கருணாநிதி:காலத்துக்கும் நினைக்கப்பட வேண்டியவர்

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்திவ் வுலகு

என்பது எல்லா மனிதர்களுக்கும் பொருந்துவதில்லை.சிலர் இதனை மறுத்து நேற்று இருந்தேன்; இன்று இருக்கிறேன்; நாளையும் இருப்பேன் என்று உறுதிகாட்டுகிறாகிறார்கள். அவர்களைச் சாவு நெருங்கிவதில்லை. 

மரணத்தை அறிய முயன்று தோற்றுக்கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள். மரணத்தை அறிதல் இருப்பவர்களுக்குச் சாத்தியமில்லை. மரணத்தை அறிந்தவர்கள் -சந்தித்தவர்கள் திரும்பவும் வந்து அதன் இயல்புகளைச் சொல்லப்போவதில்லை. அறியப்படாத நிரந்தரமாக இருக்கும் மரணம் ஒரு நிகழ்வாக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. நிகழ்வு என்றால் நிகழ்த்துபவர் வேண்டும். தானே நிகழ்த்திக்கொள்வதா? இன்னொருவரால் நிகழ்த்தப்படுகிறதா? தன்வினையா? பிறவினையா? நிகழ்காலமா? கடந்தகாலமா? எதிர்காலமா? 

செத்தாரைத் துஞ்சினாரெனச் சொல்லவேண்டும் என்கிறது இலக்கண வழக்கு. சாவைக் குறிக்க இப்போதெல்லாம் அதிகம் பயன்படும் சொல்லாக இருக்கிறது மரணம். மரண அஞ்சலிகள், மலர் அஞ்சலிகளை விடவும் மதிப்புமிக்கவையாக மாறிக் கொண்டிருக்கின்றன. மரணம் பலவிதங்களில் காலத்தோடான சொல்லாடல். காலத்தோடு சொல்லாடிப்பார்க்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது. காலத்தோடு சொல்லாடிப் பார்ப்பவர்கள் அதனை வெல்ல வேண்டுமெனத் திட்டமிட்டு வாழ்கிறார்கள்; மரணத்தை மறுக்கிறார்கள். மரணத்தை வெல்லும் செயல்களைத் தங்களின் வாழ்நாளில் செய்துகொண்டே இருப்பதன் மூலம் காலத்தை வெல்கிறார்கள். காலத்தை வெல்லும் இருப்புகளை விட்டுவிட்டுச் செல்லும்போது அவர்கள் நினைக்கப்படுகிறார்கள். நினைவில் வாழ்பவர்கள் நீண்ட வாழ்நாளைக் கொண்டவர்களாகிறார்கள். உடலை இல்லாமல்போனாலும் பெருந்திரளின் மனம் படிவங்களில் படிந்துகிடக்கிறார்கள். அவற்றின் வழியே அவர்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள். கலைஞர் மு.கருணாநிதி காலத்தோடு போட்டுபோடவும், காலத்தை வெல்லவும் தொடர்ச்சியாக முயன்றவர். வரலாற்றில் இடம் பிடிப்பதின் மூலம் வரலாறாக ஆனவர். “தமிழர்களே! தமிழர்களே!!.. என்னை நீங்கள் கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாகத்தான் மிதப்பேன். அதில் நீங்கள் ஏறிப்பயணம் செய்யலாம்” என்ற சொற்கோர்வைகள் திரும்பத்திரும்ப ஒலித்துக்கொண்டிருந்த குரல். இந்தக் குரலில் அவரது பிடிவாதமும், தன்னை இந்தச் சமூகத்திற்குக் கொடுத்துவிட்டேன்; அதனால் எனக்கு மரணமில்லை என்ற கர்வமும் இருக்கிறது.

திரு.மு.கருணாநிதியின் வாழ்வு எல்லாவகையிலும் கொண்டாடத்தக்கதொரு பெருவாழ்வு. மணிவிழாக்கொண்டாடுவதற்காக அறுபதாண்டுகள் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கும் - நம்பும் மனிதர்கள் நிரம்பிய காலத்தில் ஒருவர் 94 ஆண்டுகள் வாழ்ந்ததைப் பெரும்வாழ்வின் உச்சம் என்றுதான் சொல்லவேண்டும். அவரது இருப்பின் தொடக்கம் இப்போதைய நாகப்பட்டணம் மாவட்டம் திருக்குவளை என்னும் கிராமம்.1924, ஜூன் 3 இல் பிறந்த அவர் தமிழர்கள் வாழும் நிலப்பரப்பின் பெருவெளிகளில் -கிராமங்கள், நகரங்கள் எனப் பயணம் செய்து சென்னையின் காவேரி மருத்துவமனையில் 2018 ஆகஸ்டு 7 -க்குப் பிறகு இல்லாமல் ஆகியிருக்கிறார். இல்லாமல் ஆகியிருக்கிறார் என்று பதிவுகள் – தனிமனிதர்களின் பதிவுகளும் அரசாங்கப்பதிவுகளும் சொல்லக்கூடும். ஆனால் அவர் இருக்கிறார். நினைக்கப்படுவார்; அவரது எழுத்துகளின் வழியாக நினைக்கப்படுதலோடு நிகழ்த்தவும் படுவார். நினைக்கப்படும் செயல்களைச் செய்தவர்கள் நிகழ்த்தப்படும் செயலாக மாறும்போது இருக்கிறவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

கலைஞர் மு.கருணாநிதியின் உடல் புதைக்கப்பட்டபோதும் அவரது பிடிவாதமான எதிர்பார்ப்பொன்று நிறைவேற்றப்பட்டது. கரகரத்த அவரது குரலால் ஒவ்வொரு நாளும் உச்சரித்துக்கொண்டே இருந்த அவரது தலைவர் அண்ணாதுரையின் நினைவிடத்தின் அருகிலேயே அவரது உடலும் புதைக்கப்பட்டது. எல்லா நேரமும் பொதுவெளி மனிதர்களுக்காகவே சிந்தித்த ஒருவரது தனிப்பட்ட விருப்பமாக அதனைக் கொள்ளமுடியாது என்றாலும் சாவு தனிமனிதர்கள் எதிர்கொள்ளும் நிகழ்வு. அதற்குப் பிந்திய இருப்பு பற்றிய நினைவுகளும் தனிமனிதர்களுக்கானவையே. 

வாழ்நாள் முழுவதும் தன்னை நம்பிய மக்கள் திரளின் சமூக மேம்பாட்டிற்காகவும் பொருளியல் வளர்ச்சிகளுக்காகவும் சிந்தித்தவர். சிந்தித்தவைகளைச் செயல்படுத்துவதற்கான அதிகாரத்தை அடைவதற்காக அவர் நடத்திய போராட்டங்கள் பலவிதமானவை. தாய்மொழிக்கு ஆபத்து என்பதற்காக முன்னெடுத்த போராட்டங்கள் பெரும்பாலும் நடைமுறைப் போராட்டங்கள். அரசியல் சட்ட எல்லைக்குள் மாநிலங்களுக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகளுக்காக நடத்தியனவெல்லாம் பெரும்பாலும் சட்டமுறைப் போராட்டங்கள். கடைசியாக அந்தத் தலைவரின் உயிரற்ற உடலை முன்வைத்து இவ்விருவகைப் போராட்டங்களும் நடந்தன என்பது விநோதமான நடப்பு. கடற்கரையில் அந்த உடலைப் புதைப்பதற்காக அவரது மகனும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்தலைவருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வரைச் சந்தித்துக் கோரிக்கை வைத்த நடைமுறைப் போராட்டம் தோற்றுப்போனது. அந்தத் தோல்வி தந்த பாடம் சட்டப் போராட்டத்தை நாடச்செய்தது. வெற்றியையும் பெற்றுத் தந்தது.போராட்டமே வாழ்க்கையான ஒருவரின் சாவும் போராட்ட வெற்றியைத் தனதாக்கிய வரலாறு மறக்கமுடியாத வரலாறு. 

எழுத்து வெளிப்பாடுகள்
காலத்தை வெல்லும் கருவிகள் என்னவாகவெல்லாம் இருக்கின்றன? இதற்கான பதில்களே அவர்களின் வாழ்க்கைத் தேடல்களாக ஆகின்றன. கலைஞர் அவர்கள் காலத்தை வெல்லும் கருவிகள் ஒன்றாக இல்லை; பலவாக இருக்கின்றன என்பதை உணர்ந்தவர். அதன் காரணமாக ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவிக்கொண்டே இருந்தார். அப்படித் தாவினாலும் முந்தியதைக் கைவிடாமல் கைபிடித்தும் அழைத்துக்கொண்டே வந்தார். தன்னை வெளிப்படுத்திக்கொள்ளவும், தனது கருத்துகளைச் சொல்லவும் அவர் தேர்ந்தெடுத்த முதல் கருவி எழுத்து. அதுவே கடைசிவரை கைக்கொள்ளவேண்டிய முதன்மைக் கருவி என்பதையும் உணர்ந்து செயல்பட்டவர். கையெழுத்துப் பத்திரிகைக்கு எழுதும் சிறுவனாகத் தொடங்கி அவர் எழுதிய எழுத்துகள் வகைகளும் வடிவங்களும் விதம்விதமானவை.
நேரடியாகத் தகவலைச் சொல்லும் செய்தியாளர் என்ற நிலையிலிருந்து உடன்பிறப்புகளை விளித்துக் கடிதம் மூலம் தகவலைச் சொல்லும் எழுத்துமுறைக்குள் நுட்பங்களை உருவாக்கித் தொடர்ச்சியாக எழுதிய “உடன்பிறப்புகளுக்காக” கடிதங்களே சில பத்துத் தொகுதிகளாக இருக்கின்றன. கடிதங்களைக் கட்டுரைகளாக மாற்றியும் சில நூறு கட்டுரைகளை எழுதியிருக்கிறார் கலைஞர். அவரது கவிதைகளும் கூட மேடைப்பேச்சின் நேரடியுரைத்தலின் தன்மையோடு வெளிப்பட்டவையே. அகத்தின் எழுச்சியாக வெளிப்படும் கவிதைகளை அவர் எழுதியவரல்ல. அதற்கு மாறாக சொல்லாட்சிகளில் வெளிப்படும் இசைநயம், ஒலிச்சித்திரம், அதன் உச்சரிப்பின் வழியாக நினைவூட்டும் படிமம் அல்லது புறநிலைப் பாத்திரங்கள் போன்றனவற்றை அடையாளப்படுத்துவன. மௌன வாசிப்பைக் கோராமல், உரத்த வாசிப்பைக் கோரும் மேடைக்கவிதைகள் அவை. 
அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வை முதன்மையான இலக்கிய நோக்கமாகக் கொண்ட கருணாநிதியின் வெளிப்பாட்டு வடிவங்கள் அதற்கேற்ற நேரடி உரைப்பு வடிவங்களான கடிதம், கட்டுரை, கவிதை வடிவங்களையே முதலில் தேர்வு செய்தன. பெருங்கூட்டத்திற்குக் கலையின் பல் தளச் சாத்தியங்களைப் பயன்படுத்தி மகிழ்ச்சிப்படுத்துவதோடு தங்களின் சமூக, அரசியல் கருத்துகளையும் சொல்லவேண்டுமெனத் திராவிட இயக்க எழுத்தாளர்கள் திட்டமிட்டுக்கொண்டு தேடிய முக்கியமான வடிவம் நாடகம். நாயகன் – எதிர்கதாநாயகன் என்ற பாத்திர முரணை உருவாக்கிக் காட்சிகளையும் அங்கங்களையும் கட்டியெழுப்பும் நாடக வடிவத்தைத் தன்னுடைய நாடகபாணியாக உருவாக்கியவர் கலைஞர். இதற்கு அவருக்கு முன்மாதிரியாக இருந்தவை இந்திய/தமிழ் மரபு நாடகப்பிரதியின் வடிவங்கள் அல்ல. இந்திய/ தமிழ் மரபு நாடகப்பிரதிகள் எடுத்துரைப்புச் சொல்முறையைக் கொண்டவை. விதூஷகன் அல்லது கட்டியங்காரன் வழியாகப் பாத்திர அறிமுகங்களைச் செய்யும் மரபை நாட்டார் நாடக மரபிலும் பரதரின் செவ்வியல் நாடகமரபிலும் காணலாம். இம்மரபைக் கவனத்துடன் ஒதுக்கிவிட்டு ஐரோப்பிய நவீனத்துவத்திலிருந்து – சமூக அக்கறையையும் விழிப்புணர்வையும் முன்வைப்பதற்கேற்ற சமூக நவீனத்துவத்திலிருந்து நாடக வடிவத்தைக் கையாண்டவர் கலைஞர் மு.கருணாநிதி. அவர் மட்டுமல்லாமல் அவருக்கு வழிகாட்டிய சி.என். அண்ணாதுரையின் புகழ்பெற்ற நாடகங்களான வேலைக்காரி, ஓரிரவு போன்றனவற்றின் உள்கட்டமைப்பு வடிவமும் இத்தகையனவே.
ஐரோப்பிய நடப்பியல் பாணி நாடகாசிரியர்களான இப்சன், செகாவ் போன்றவர்களின் பாணியிலிருந்து விலகியதும் பெர்னாட்ஷா, மோலியர் போன்றவர்களின் நாடகபாணியைப் பின்பற்றியதுமான சமூக நவீனத்துவம் அடிப்படையில் விமரிசன நடப்பியலுக்கான வடிவம் எனலாம். எண்வகை மெய்ப்பாடுகளில் முதல்வகையான நகையை – நகையின் உட்பிரிவுகளான எள்ளல், இளமை, பேதமை, மடன் என்ற நான்கையும் உண்டாக்கும் நோக்கங்களை முதன்மையாகக் கொண்டவை. அதன் மறுதலையாக அழுகையையும் அழுகையின் நிமித்தங்களையும் குறைவாக எழுப்பவல்லவை. இந்த நோக்கத்தோடு அவர் பழனியப்பன் (நச்சுக்கோப்பை அல்லது சாந்தா), தூக்குமேடை, ஒரே முத்தம், பரப்பிரம்ம், இரத்தக்கண்ணீர் (மகான் பெற்ற மகன்), மணிமகுடம், உதயசூரியன், காகிதப்பூ, திருவாளர் தேசியம்பிள்ளை, சிலப்பதிகாரம், நானே அறிவாளி, புனிதராஜ்ஜியம், என 12 முழு நீள நாடகங்களையும், பரதராமாயணம், அனார்க்கலி, சாக்ரடீஸ், சேரன் செங்குட்டுவன் முதலான 4 ஓரங்க நாடகங்களையும் எழுதியவர் கருணாநிதி. இந்த நாடகங்களில் சிலவும். சில நாடகங்களில் ஒன்றிரண்டு பகுதிகளும் பின்னர் அவர் திரைக்கதை வசனங்கள் எழுதிய திரைப்படங்களாகவும் வெளிப்பட்டுள்ளன. 
கலைஞர் மு.கருணாநிதியின் எழுதிய 1947 இல் வந்த ராஜகுமாரி தொடங்கி 2011வந்த பொன்னர் சங்கர் வரையிலான படங்களுக்கான வசனத்தில் 1952 இல் வெளிவந்த பராசக்தி படத்துக்கு எழுதிய வசனம் இதுவரையிலான வசனமொழியில் உச்சம் என்றே சொல்லவேண்டும். உணர்ச்சிகளின் இன்னொரு பெயரான மெய்ப்பாடுகளின் எட்டுவகையும் அடுக்கப்பட்ட வெளியேறிய காட்சிகளையும் பாத்திரங்களையும் கொண்ட அந்தப் படம் தமிழ்ச் சினிமாவின் வரலாற்றில் பலவிதமான திருப்புமுனைப் படம். மலைக்கள்ளன், மனோகரா, பூம்புகார், காஞ்சித்தலைவன், அவன் பித்தனா, நெஞ்சுக்கு நீதி, பாலைவன ரோஜாக்கள் போன்ற படங்களின் வெற்றிக்கான காரணங்களில் ஒன்றாக இல்லாமல் முதன்மையான காரணமாக இருந்ததே கலைஞர் எழுதிய வசனங்களே என்பதைத் தமிழ்ச் சினிமாவின் தொடர்ச்சியான ரசிகனாக உணர்ந்தவன் நான். 
அவரது புனைகதை உலகத்தில் சிறுகதைகளில் எழுதப்பெற்ற மனிதர்களும் சமூக நாவல்களில் எழுதப்பெற்ற மனிதர்களும் வரலாற்றுப்புதினங்களில் உலவும் பாத்திரங்களுமெனப் புனைவுப்பாத்திரங்கள் சில நூறைத்தாண்டக் கூடியன. நடப்பு சமூகத்தோடு தொடர்ச்சியாக முரண்படக்கூடிய வகைமாதிரிகளை எழுதுவதையே புனைகதைக் கோட்பாடாகத் தெரிவுசெய்திருந்தார் என்பதை ‘ கலைஞரின் சிறுகதைகள்’ தொகுப்பை வாசிக்கும் ஒருவரால் புரிந்துகொள்ள முடியும். சமூக நாவல்களில் மையப்பாத்திரங்களாக அமைந்துள்ள பாத்திரங்கள் அனைவருமே திராவிட இயக்கக் கருத்தியலை உள்வாங்கி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயன்ற வகைமாதிரிகள். ஆனால் வரலாற்றுப் புனைவுகளில் உலவுபவர்கள் தமிழ்ப் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டத் தங்களைத் தியாகம் செய்த வீரர்கள். சங்க இலக்கியப் பாத்திரங்களாகவும் இடைக்கால வரலாற்றுப் பாத்திரங்களாகவும் அறியப்பட்ட மனிதர்களைத் தனது வரலாற்றுப் புனைகதைகளில் மறு உருவாக்கம் செய்தார். அப்படியான மறு உருவாக்கத்தின் போது நிகழ்கால அரசியலின் தேவைக்கேற்ப மாற்றங்களையும் கையாண்டார் என்பதைப் பொன்னர் சங்கர், பாயும்புலி பண்டாரக வன்னியன், தென்பாண்டிச் சிங்கம் போன்றவற்றை வாசிக்கும்போது உணரமுடியும். 
காலத்தை வெல்லும் கருவியாக எழுத்து இருக்கும் என்பதை உலகுக்கு உணர்த்திச் சென்றவர்கள் பற்பலர். தமிழ்நிலப்பரப்பில் பழைமையான உதாரணமாக இருப்பவன் கணியன் பூங்குன்றன். அவரை விடவும் காத்திரமாக வெளிப்பட்டவன் வள்ளுவன். அவரைக் கடப்பதற்காகத் தொடர்நிலைச்செய்யுளில் ஒரு நெடுங்கதையை எழுதிச் சாதித்து வாழ்பவன் இளங்கோ. அவனுக்கிணையாக மணிமேகலையை எழுதிக்காட்டிய சாத்தன். இவர்களுக்கெல்லாம் சாவில்லை. அவர்களைப் போலவே கம்பனுக்கு மரணமில்லை; ஆண்டாளுக்கு அழிவில்லை; பாரதிக்கும் அவரது தாசனுக்கும் கூடக் கூற்றின் அழைப்புகள் இல்லை. அழைப்புக்குப் பதில் சொல்லிவிட்டுத் தங்கள் எழுத்தின் வழியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். மரணத்திற்குப் பின்னும் அவர்களது வாழ்வு என்பது அவர்கள் எழுதிச் சென்ற பாத்திரங்கள் வழியான வாழ்வே என்பதைத் தமிழ்ச் சமூகம் இப்போதும் நினைவுகூர்கிறது. இந்த வரிசையில் நம்காலத்தில் புதுமைப்பித்தனின் பாத்திரங்களைப் போலவும் ஜெயகாந்தனின் பாத்திரங்களைப் போலவும் கலைஞர் எழுதிய நாடகப்பாத்திரங்களின் வழியாகவும் திரைப்பட மாந்தர்கள் வழியாகவும் புனைகதைப் பாத்திரங்கள் வழியாகவும் கலைஞரின் வாழ்நாள் இன்னும் பல பத்தாண்டுகளுக்கு நீளும் என்பதில் ஐயமில்லை. 

எழுத்து அல்லது சொல் என்னும் கருவியைவிடவும் காத்திரமான கருவியாக இருக்க க்கூடியது செயல் என்றொரு வாதம் உண்டு. செயலே அனைத்தையும் தீர்மானிக்கும் ஆற்றல். அறிவு அற்றம் காக்கும் கருவி ஆனால் செயல் அனைத்தையும் காக்கும் பேராற்றல் என்ற நம்பிக்கையே அதிகாரத்தை நோக்கி மனிதர்களை நகர்த்துகின்றது. அதிகாரத்தின் பாதை வன்மும் வேதனையும் அச்சமும் நிரம்பியது என வரலாறு சொல்லியுள்ள போதிலும் அதை அடைந்தபின் செய்யும் வினைகளின் வழியாக எல்லாவற்றையும் துடைத்துவிட முடியும் என்றும் வரலாறு சொல்லிச்சென்றுள்ளது. அதிகாரத்தின் பாதை பொதுச்சேவையை நோக்கி நகர்த்துவதை மட்டுமே செய்வதில்லை. அதில் நுழைந்தவர்களைப் பெரும்பணக்காரர்களாகவும் ஆக்கியிருக்கிறது. அவர்களிடம் இருக்கும் நம்பிக்கையும் காலத்தை வெல்லவேண்டும் என்ற ஆசைதான் என்பதும் விநோத முரணே. தலைமுறை தலைமுறைக்குச் சொத்துச் சேர்ப்பதின் மூலம் தலைமுறைகள் வழியாகக் காலத்தை வெல்லமுடியும் என்ற நம்பிக்கை இல்லாமலா அப்படிச் சொத்துச் சேர்க்கிறார்கள். காலத்தை வெல்லும் முனைப்பில் ஈடுபட்ட கலைஞர் மு.கருணாநிதி அறிந்த பரப்பிலெல்லாம் தன்னை நிலைநாட்டிக்கொள்ளப் பாடுபட்டவர் என்பதை அவரது வாழ்க்கைப்பாடம் சொல்லிச் சென்றுள்ளது.

அரசியல் வெளிப்பாடு

இந்திய அரசியல் என்பது எப்போதும் பொருளியல் விடுதலைக்கான போராட்டமாக இருந்ததில்லை. அப்படி இருந்த பொருளியல் போராட்ட சக்திகள் இந்தியாவில் வெற்றியும் பெற்றதில்லை. குறிப்பிட்ட சூழலில் வெற்றிபெற்ற பொருளியல் சக்திகள் கூட அந்த வெற்றியைப் பண்பாட்டுப் போராளிகளிடம் கையளித்துவிட்டுப் பிசைந்து நின்றதையே அண்மைக்கால இந்திய/ தமிழக வரலாறு காட்டுகின்றது. காலனிய ஆட்சியாளர்களுக் கெதிரான விடுதலைப்போராட்டத்திலும் பின் காலனிய காலகட்டத்து நவீன இந்தியாவை உருவாக்கும் போராட்டத்திலும் முதன்மையான முரண்பாடுகள் பொருளியல் அரசியலுக்கும் பண்பாட்டு அரசியலுக்கும் இடையேயானதாகவே இருந்துள்ளது. பண்பாட்டு அரசியலே வெற்றிக்கான கருவி. அதன் வழியே அடைந்த வெற்றியைப் பொருளியல் சக்திகளிடம் கையளித்துவிட்டுப் பண்பாட்டுப் போராளிகள் பின் தங்கிவிடுவார்கள். இதுவும் இந்திய வரலாற்றில் நிகழும் சிக்கலான விநோத முரண்களில் ஒன்று. சுதேசியம் பேசிய இந்திய தேசியக்காங்கிரஸின் வெற்றிப் பண்பாட்டு அலகுகளால் தனது தன்னிலையை உருவாக்கிய மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியின் போராட்ட வடிவங்களால் தான் நிறைவேறியது. அவர் அடைந்த வெற்றியை அரசியல் வடிவமாக்கும் வழிவகை அறியாமல் பொருளியல் நவீனத்துவம் பேசிய பண்டித நேருவிடம் கையளித்துவிட்டு ஒதுங்கினார் காந்தியார்.
தமிழ்நாட்டில் வடவர்களின் பொருளியல் சுரண்டலுக்கெதிராக அரசியல் செய்ய நினைத்த பெரியாரின் போராட்டங்கள் பார்ப்பண எதிர்ப்பு, இந்துசமயக் கடவுளர்களை முன்வைத்து ஏமாற்றும் சமய நம்பிக்கை எதிர்ப்பு என்ற பண்பாட்டு வடிவங்களாகவே இருந்தன. அவரது போராட்டங்களின் திரட்சிக்குப் பின்னர் அதனைப் பயன்படுத்தித் தமிழகத்தில் அரசியல் வெற்றியை அடைந்தது திராவிட முன்னேற்றக் கழகம். அதுவும்கூட இந்தி எதிர்ப்பு போன்ற பருண்மையான பண்பாட்டுச் சொல்லாடல்களையே முன்வைக்க வேண்டியிருந்தது. ஆனால் அதிகாரம் கைவரப்பெற்ற பின் அதன் நடவடிக்கைகள் பொருளியல் நடவடிக்கை சார்ந்தனவாக இருந்தன.

பொருளியல் நடவடிக்கைகள் சார்ந்த பருண்மையான மாற்றங்களைச் செய்யும் வாய்ப்பு தி.மு.க.வின் முதல் முதலமைச்சரான சி.என். அண்ணாதுரைக்கு வாய்க்கவில்லை. மிகக் குறைந்த கால அளவே முதல்வராக இருந்த அவர் தேர்தல் வாக்குறுதிகள் சொன்ன திரள் மக்களின் ஆசையை நிறைவேற்றும் படியரிசித்திட்டம் போன்ற, தமிழ்நாடு பெயர்மாற்றுத் திட்டம், இருமொழிக்கொள்கை போன்றவற்றையே நடைமுறைப்படுத்த முடிந்தது. ஆனால் அவர் நினைத்ததையும் அவரால் முன்மொழியப்படாத தையும் தனது ஆட்சி நிர்வாக அறிவால் செய்து முடித்தவர் கலைஞர் கருணாநிதி.

தமிழர்களின் அறிவை உற்பத்தி சார்ந்த அறிவாகவும் பயன்பாட்டு அறிவாகவும் வளர்த்தெடுக்கும் விதமாகக் ஆரம்பக்கல்விக்கும் உயர்கல்விக்கும் தேவையான அடிப்படைக்கட்டுமானங்களை- பல்கலைக்கழகங்களாகவும், சிறப்புநிலைக் கல்லூரிகளாகவும், தொழில் அறிவைத் தரும் கல்வி வளாகங்களாகவும், உயர்நிலைப்பள்ளிகளாகவும், ஆரம்பப் பள்ளிகளாகவும் உருவாக்கிய திட்டங்களைத் தந்த அரசு நிர்வாகம் கலைஞரின் அரசு நிர்வாகமே. இன்று தமிழகம் அறிவு ஏற்றுமதி மூலம் ஈட்டும் அந்நிய செலாவணிக்குப் பின்னணியில் அவரது தொலைநோக்குப் பார்வையும் இருமொழிக் கொள்கையும் இருப்பதை எவரும் மறுத்துவிட முடியாது. 

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பெற்ற பெரிய அணைகளுக்கு இனையாகப் பல்வேறு மாவட்டங்களில் சிறிய, குறு அணைகளைக் கட்டி நீர்மேலாண்மையில் முக்கியமான இடத்தைத் தமிழகம் அடையக்காரணமாக இருந்தும் அவரது ஆட்சி நிர்வாகமே. நீர்ப்பாசனத்திற்கு உதவும் வகையில் மின்சாரப் பங்கீடும், இலவச மின்சாரமும், உரமானியங்களும் வழங்கிய பின்னணியில் தான் தமிழக வேளாண்மை இன்றளவும் உற்பத்தியில் தன்னைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. தொழில் வாய்ப்புள்ள நகரங்களின் கட்டமைப்பை விரிவாக்கியதோடு நவீனத் தொழில்களான பின்னலாடை, மோட்டார் வாகனத் தயாரிப்பு மற்றும் உதிரிப்பாகங்கள் உற்பத்தி, அலைபேசிகள், தொலைக்காட்சிகள், கணினி மென்பொருட்கள் எனத் தகவல் தொழில்நுட்பத்தில் தமிழக வளர்ச்சி முக்கியமானது. ஏற்றுமதிக்கான துணிகள் தொடங்கி இந்திய மக்களுக்குத் தேவையான துணிகள் வரை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளைக் கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற நகரங்களில் வளர்த்தெடுத்ததும் அவரது நிர்வாகமே. வன்கருவிகளையும் வீட்டுபயோகப் பொருட்களையும் உற்பத்திசெய்யும் தொழிற்பேட்டைகளைப் பெருநகரங்கள் தோறும் தொடங்கி வளர்த்தெடுத்ததில் அவரது தொழிற்கொள்கைக்கு முக்கியப் பங்குண்டு.

உற்பத்திசார்ந்த தொழிற்சாலைகளுக்காக மட்டுமல்லாமல் சேவைப்பிரிவுத் திட்டங்களுக்காகவும் கலைஞர் எப்போதும் நினைக்கப்படுவார். கண்ணொளித் திட்டம், கைரிக்சா ஒழிப்புத்திட்டம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், இடுபயிர்கள் காப்பீட்டுத்திட்டம் எனச் சமூக நலத்திட்டங்கள் பலவற்றைக் கொண்டுவந்தவர் அவர். குடிமைப்பொருள்களின் சீரான விநியோகம் மூலம் ஏழ்மை ஒழிப்பு முயற்சிகளை மேற்கொண்டவர். பெண்களின் கல்வி, திருமணம் போன்றவற்றிற்கு உதவும் சமூக நலத்திட்டங்களோடு சொத்தில் பெண்களுக்கும் சமபங்கு உண்டு என்பதைச் சட்டமாக்கியவர். இந்திய சமூகத்தில் காணப்படும் சாதி ஏற்றத்தாழ்வுகளைத் தனது எழுத்துகளில் கடுமையாக விமரிசனம் செய்த கலைஞர் அவற்றைக் களைவதற்காக திட்டங்களை – இட ஒதுக்கீடு தொடங்கி மானியங்கள் வழங்குதல், வேலை வாய்ப்பு அளித்தல், அதிகாரத்தில் பங்கு பெறும் விதமான நிர்வாகச் சீரமைப்பு எனப் பலவற்றைச் செய்தவர்.

காலத்தை வெல்லும் போராட்ட த்தைத் தொடர்ச்சியாக நடத்திவிட்டுப் போயிருக்கும் அவரைத் தமிழ்ச் சமூகம் நினைத்துக் கொள்ளும்படியாகச் சொல்லிக்கொண்டே இருக்கலாம். அதன் மறுதலையாக அவரது திட்டங்களின் பலனை உரியவர்கள் அடைய முடியாமல் போன நிலையைப் பற்றிய விமரிசனங்களையும் முன்வைக்க முடியும். தன்னை முன்னிறுத்தி – தனது சொந்த அரசியல் வெற்றியை முன்னிறுத்தி – தனது குடும்பத்தை முன்னிறுத்தித் தமிழக நலனை விட்டுக்கொடுத்தார் என்ற பார்வைகளில் பொருள் இல்லாமல் இல்லை. அதன் விளைவாக அவரையும் அவரது கட்சியையும் ஆட்சிக்கட்டிலிலிருந்து மக்கள் இறக்கவும் செய்தார்கள் என்பது அதன் விளைவுகளே. தேர்தல் அரசியலில் தனியொருவராகத் தோல்வியை அடைந்தவர் அல்ல. போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் வென்றவர். ஆனால் அவரது கட்சி பலநேரங்களில் தோல்வியைக் கண்டது. ஆனால் அதன் தோல்விகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து மறு உயிர்ப்புச் செய்தவரும் அவரே. அவரது இன்மையைத் தொடர்ச்சியாகத் தமிழ்ச்சமூகம் நினைவில் கொள்ளும்.


எனது வாழ்க்கைக்குள் அவர்

தனிமனிதனாக அவரை நினைத்துக்கொள்ள எனக்கொரு காரணம் உண்டு. அவர் தான் என்னை நகரத்துக்குப் போய்ப் படியென்று அனுப்பிவைத்தார். அதற்காக எந்நாளும் அவரை நினைவில் கொள்வேன்: கலைஞர்: 
அண்ணாதுரையின் மறைவுக்குப் பின் (பிப்ரவரி 1969) முதல்வரானார் கலைஞர். அப்போது நான் தொடக்கப் பள்ளியின் இறுதி வகுப்பு மாணவன். முதல்வரான இரண்டு ஆண்டுகளுக்குப்பின் எட்டாம் வகுப்புக்கு மாவட்ட அளவில் பொதுத்தேர்வு அறிமுகமானது. அந்த அறிமுகத்தோடு கிராமப்புற மாணவர்களின் திறமைக்கு ஊக்கம் அளிக்கும் திட்டத்தையும் அறிமுகம் செய்தார்.
ஒவ்வொரு பள்ளியிலும் எட்டாம் வகுப்பில் முதலிடம் பெறும் மாணாக்கர்களுக்குத் தனியாகத் திறனறித் தேர்வு நடத்தி ஒவ்வொரு பஞ்சாயத்து ஒன்றியத்திலிருந்தும் இருவர் தெரிவு செய்யப் பட்டார்கள். அப்படித் தெரிவுசெய்யப்பட்ட மாணாக்கருக்கு ஒருவருடத்திற்குரிய ஊக்கத் தொகையாக ரூ. 500 வழங்கப்பட்டது. முதல் ஆண்டில் உதவித்தொகை பெற்றவர்களின் படிப்பில் எவ்வகையிலும் மாற்றத்தை உண்டாக்கவில்லை. கிராமப்புறப் பள்ளியில் படித்தால் பெரிதாக மாற்றம் உண்டாகாது என்பதை உணர்ந்து அடுத்த ஆண்டு முதல், தேர்வுபெற்ற மாணாக்கர்கள் நகர்ப்புறப் பள்ளிகளில் சேர்ந்து பயிலலாம். விடுதியில் தங்கிப் படிக்கலாம் என மாற்றப்பட்டது.அப்படியான 10 பள்ளிகளின் பெயர்களும் அடையாளப் படுத்தித் தரப்பட்டது.
அவர்கள் படித்த ஊரிலேயே படித்தால் ரூ 500/- தரப்படும். விடுதியில் தங்கிப்படித்தால் ரூ 500/ -க்குப் பதிலாக ரூ 1000/- வழங்கப்படும் என மாற்றி அறிவித்தார் கலைஞர். மதுரை மாவட்டம் எழுமலை உயர்நிலைப்பள்ளியில் படித்த நான், சேடபட்டி ஒன்றியத்தின் முதலிரண்டு பேர்களில் ஒருவனாகத் தேர்வுபெற்றேன். விடுதியோடு கூடிய திண்டுக்கல் டட்லி மாணவனாக ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்தேன். 60 வீடுகள் கொண்ட தச்சபட்டி என்னும் சின்னக் கிராமத்திலிருந்து விடுதியில் தங்கி, பள்ளிப்படிப்புக்குப் போன முதல் ஆள். மலைக்கோட்டை என்னும் பெரும் கல்லான திண்டுக்கல் பெருநகருக்குப் போனபோது கால்களில் செருப்பு இல்லை. பல்விளக்கும் பற்பசையோ, பிரஸோ, அறிமுகம் ஆகியிருக்கவில்லை. துணிப்பையில் திணித்த கால்ச்சட்டையோடு மதுரை வந்து திண்டுக்கல்லுக்குப் போன முதல் ரயில் பயணம்
அப்போதுதான்.ட்ரங்குப்பெட்டியும் களிமண் தட்டும் அங்குதான் வாங்கினேன். அந்தப் பள்ளிக்குப் பக்கத்தில் அவரது உயரத்தைவிட 2 மடங்கு உயரமான பெரியார் சிலை நிற்கும். தினசரி அதன் அருகில் இருக்கும் வாசகசாலையில் விடுதலையும் முரசொலியும் படிக்கக் கிடைக்கும். அவரது சிலக்குப் பக்கத்தில் போடப்பட்ட மேடையில் தான் பெரியார் ஈ.வெ.ரா.வின் பேச்சைக் கேட்டேன். அந்தப் பேச்சைக் கேட்கும்படி தூண்டியவர் டட்லி உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்புக்குத் தமிழ்பாடம் எடுத்த அய்யா அந்தோனிசாமி அவர்கள்.

பெரியார் சீடரான அந்தோணிசாமி தனது பெயரில் உள்ள சாமியைக்கூடச் சொல்ல மாட்டார். அந்தோனி என்று சொன்னால் போதும். என்பதை வகுப்பிலேயே சொல்லியிருக்கிறார். நீயும் கூட என் பெயரை - அந்தோனி என்று சொல்லி அழைக்கலாம் என்று சொல்வார். கூப்பிடுறதுக்குத் தானே பெயர் என்று சொன்னதின் பின்னணியில் ஐரோப்பிய மனம் இருந்ததை நான் அப்போது உணரவில்லை
அந்தத். தமிழாசிரியர் தான் கடவுளா? அப்படின்னா? என்ற கேள்வியைக் கேட்கத் தூண்டினார்.நாத்திகம் என்பது ஒரு வாழ்முறை என்பதைச் செய்துகாட்டினார். சர்ச்சுக்குப் போகமாட்டார். பள்ளியில் தினந்தோறும் நடக்கும் காலைப் பிரார்த்தனையில் ஒருநாளும் அவர் பைபிள் வாசித்து ஜெபம் செய்ததில்லை. அவரது மகனும் நான் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் போதுதான் படித்தான். அவன் தான் அணில், கோகுலம் போன்ற சிறுவர் பத்திரிகைகளையும் இந்துநேசன் போன்ற ரகசியமாகப் படிக்கும் இதழ்களையும் அறிமுகப்படுத்தினான்.அவன் படித்தது ஆங்கில வழியில். தமிழாசிரியரின் மகன் ஆங்கில வழியில் படிப்பது ஏன் என்ற கேள்வி அப்போதே உண்டு. அவனை வம்புக்கிழுக்க அது போதுமானதாக இருந்தது. அவனை வம்புக்கிழுத்ததற்குப் பதிலாக அய்யா அந்தோனிசாமியிடம் கேட்டிருந்தால் தமிழ் மட்டும் போதாது; ஆங்கிலமும் வேண்டும் என்பதைச் சொல்லியிருப்பார்.
வகுப்பில் பேசியிருக்கிறார். ஏன் இந்தி வேண்டாம்; ஆங்கிலம் வேண்டும் என்பதைச் சொல்லியிருக்கிறார். உணர்தலுக்கும் புரிதலுக்கும் தேவை தாய்மொழி. உலகத்தோடு உறவுகொள்ளத் தேவை ஆங்கிலம் என்பதைப் புரிய வைத்த அய்யா அந்தோனிசாமி கலைஞரின் மரணத்தோடு நினைவில் வருகிறார்.

இந்த மாற்றங்களுக்கெல்லாம் காரணம் கலைஞரின் கிராமப்புற மாணாக்கருக்கருக்கான திறனறி தேர்வும், பள்ளிக்கல்வியில் மீதமிருக்கும் 3 ஆண்டுகளுக்கும் வருடம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்ற உத்தரவாதமும்தான். அப்போது வழங்கப்பட்ட 1000 ரூபாய் என்பது இப்போது 50000 ரூபாய் மதிப்புடையது. 11 மாதங்களுக்குக் கட்டவேண்டிய விடுதிக் கட்டணம் போகப் பாதிப்பணம் மிச்சமிருக்கும்.படிக்கும் காலத்திலேயே படிப்புச் செலவு, விடுதிச் செலவெல்லாம் போக வீட்டுக்கும் 300 - 400 வரை கொடுக்க முடிந்தது. அந்த வாய்ப்பை எனக்கு வழங்கியது கலைஞர் உருவாக்கிய கிராமப்புற மாணாக்கர்களுக்கான மேம்பாட்டுத்திட்டம்தான்.
என்னைப்போலச் சில நூறு கிராமத்தான்களை ஒவ்வொரு ஆண்டும் நகரத்திற்கு இடம்பெயரச் செய்தவர் கலைஞர். அவர்களுக்கு விடுதி வாழ்க்கையை அறிமுகம் செய்தது அவர்தான். அதன் தொடர்ச்சியாகக் கல்லூரிக்கல்வியை வழங்கியதும் அவரது அந்தத் திட்டம்தான்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்