மணவிலக்கம் என்னும் கருத்தியல் கருவி: ஜோதிர்லதா கிரிஜாவின் தலைமுறை இடைவெளிகள்


மனிதச் சிந்தனை என்பது எப்போதும் மனித மைய நோக்கம் கொண்தாக இருக்கிறது. நிலம், நீர், வளி, ஒளி, வானம் என ஐந்து பரப்புகளும் இணைந்திருப்பதும், அவ்விணைவுக்குள் தாவரங்கள்-அவற்றின் உட்பிரிவுகளான செடிகள், கொடிகள், மரங்கள் என்பனவும், விலங்குகள் – அதற்குள் நடப்பன, ஊர்வன, பறப்பன, நீந்துவன என்பனவும் முக்கியமானவை என்றாலும் மனிதர்கள் இவையெல்லாம் தங்களுக்காக உருவாக்கப்பட்டவை என்றே நினைக்கின்றனர். அவர்கள் உருவாக்கும் சொற்கள் எப்போதும் மனிதர்களை மையமிட்டே பொருளை – அர்த்தத்தை உற்பத்தி செய்கின்றன. உலகம் என்ற சொல்லை மனிதர்களின் வெளியாகவே புரிந்து வைத்திருக்கிறது மனித மனம். 

‘உலகம் கெட்டுப்போச்சு’ என்ற சொல்லை உபயோகிக்கும்போது நதிநீர் சாக்கடையாகிவிட்டதையும், நிலம் துளையிடப்பட்டு அடியாழத்தில் இருக்கும் வளிச் சேர்மானங்களையும் நீர்நிலைச் சேர்மங்களையும் வெளிக் கொண்டுவந்து பயன்படுத்துவதையும், மணல்படுகைகள் வெட்டி எடுக்கப்பட்டு விற்பனைப் பொருட்களாக மாறுவதையும் காடுகள் அழிக்கப்படுவதையும் பற்றி நினைப்பதில்லை. உலகம் இருக்கிறது என்பதை உணரவேண்டும் என்றால், மனிதர்கள் இருந்துகொண்டே இருக்கவேண்டும். ஐந்து மண்டலங்களால் ஆன இந்த பூமியின் இருப்பு இயற்கைப் பொருட்களால் ஆனது மட்டுமல்ல. செயற்கைப் பொருட்களாலும் நிரப்பப்பட்டதே. செயற்கைப் பொருட்களைச் செய்வதற்கு மனிதர்கள் தேவை. ஒருவிதத்தில் மனிதர்களே செயற்கைப் பொருட்கள்தான். அறிவியலின் நிகழ்வுதகழ்வுப்படி ஓர் ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து உருவாக்கும் பண்டமாகவும் பிண்டமாகவும் உயிரியாகவும் மனிதர்கள் இருக்கிறார்கள். 

மனிதர்களை உருவாக்கும் தொழிற்சாலை குடும்பவெளி. அக்குடும்பவெளியை நிர்வகிக்க உருவாக்கப்படும் நடைமுறைகளே அறங்கள். குடும்ப அறங்களை உருவாக்கியது தனிமனிதர்களின் தேவைகளும் நெருக்கடிகளுமே என்பது மானிடவியல் என்னும் அறிவுப்புலப்பார்வை. ஆனால் சமயப்பார்வைகள் இதற்கு மாறானவை. குடும்ப வெளிக்குள் ஒருத்தியோ ஒருவனோ உறுப்பினராக ஆவதைத் தீர்மானித்தது கடவுளின் செயல் என்கின்றன சமயங்கள். சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன திருமணங்கள் என்ற புகழ்பெற்ற சொற்றொடரின் மாற்றுவடிவங்களை ஒவ்வொரு சமய நடவடிக்கைகளும் முன்வைக்கின்றன. அதன் காரணமாகவே குடும்ப அமைப்பு புனிதமானது என்றும், அதன் உறுப்பினர்களாக இருப்பவர்கள் சமய நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பட வேண்டுமென்றும் சொல்கின்றன.

நவீனத்துவம் எல்லா வகையிலும் மரபுக்கு எதிரானது. மரபான குடும்ப வாழ்க்கைமுறை பிணைப்பையும் மேல்கீழ் என்ற அதிகாரத்துவ அடுக்கை ஏற்பதையும், மேல் நிலையில் இருப்பவர்களின் ஆணைக்கு அடங்கி நடப்பதையும் வலியுறுத்திய நிலையில் நவீனக் குடும்ப அமைப்பு தனிமனிதர்களின் சுதந்திரத்தையும் விடுதலையையும் முன்வைத்து மரபோடு முரண்பட்டது. ஆணை அதிகாரம் மிக்கவனாகவும் பெண்ணை அவனைச் சார்ந்து இருக்கவேண்டியவளாகவும் நம்பவைப்பதற்கான சடங்குகளைக் கொண்ட மரபான திருமண முறைகளை நிராகரிப்பதிலிருந்து நவீனத் திருமணம் வடிவம் கொள்கிறது. மதச்சட்டங்களை முன்வைக்கும் புரோகிதர்களை – குருமார்களை விலக்குவதிலிருந்தும் கோயில்களைக் கைவிட்டு மண்டபங்களையும் அரசாங்கத் திருமணப் பதிவு நிலையங்களையும் மணம் நடக்கும் வெளிகளாக ஆக்கியதிலிருந்து குடும்ப அமைப்பின் மாறுதல்கள் தொடங்கின.

ஆணையும் பெண்ணையும் பிரித்துப் பார்க்க அனுமதிக்காத குடும்ப அமைப்பைக் கேள்விக்குட்படுத்துவன நவீன அரசுகள் உருவாக்கும் குடும்பச் சட்டங்கள். குடும்ப அமைப்பைச் சமய நடவடிக்கைகளின் பகுதியிலிருந்து பிரித்து அரசின் சட்ட வெளிக்குள் கொண்டுவரும் நடவடிக்கை என்ற வகையில் திருமணச்சட்டங்கள் அல்லது குடும்பச் சட்டங்கள் என்பன வரவேற்கத்தக்கன. இந்தியாவில் குடும்ப அமைப்பைக் கட்டுப்படுத்தும் பொதுச் சட்டம் 1956 இல் கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு விவாகரத்து உரிமைகள் சட்டப்படி வழங்கப்பட்டன. ஆனால் அதற்கு முன்பே ஒவ்வொரு சமயவாழ்க்கையும் வெவ்வேறு வகையிலான பிரிவுகளையும் திருமண நடைமுறைகளையும் பின்பற்றி வந்தன. அவற்றில் நெருக்கடிகளும் முரண்பாடுகளும் ஏற்பட்டபோது தனித்தனியாகச் சட்டங்களும் இயற்றப்பெற்றன. காலனி ஆட்சியாளர்களின் சமயமாகக் கருதப்படும் கிறித்தவ சமயம் இந்தியாவில் விவாகரத்தை அனுமதித்த முதல் சமயம். பிரித்தானியர்கள் காலத்தில்- 1869 இல் உருவாக்கப்பட்ட கிறித்தவக் குடும்ப நடைமுறைச் சட்டம் மணவிலக்கத்தை கிறித்தவர்களுக்கு மட்டும் அனுமதித்துள்ளது. அதன்பிறகு 1936 பார்சி சமூகமும் 1939 இசுலாமிய சமூகமும் விவாகரத்தை அங்கீகரித்து சட்டம் இயற்றும் நெருக்கடியை உருவாக்கியுள்ளன. இதில் கடைசியாகச் சேர்ந்த சமயம் இந்துசமயம். இந்திய விடுதலைக்குப் பின்னர் 1955 இல் கொண்டுவரப்பட்ட விவாகரத்துச் சட்டத்தின் வழியாகவே இந்துசமயத்தைச் சேர்ந்தவர்களின் குடும்ப வாழ்க்கை, அரசின் சட்ட வளையத்திற்குள் வந்தது. இந்து சமயத்திலிருந்து தங்களைப் பெரிதாகப் பிரித்துப் பார்க்காத தன்மைக் கொண்ட, சீக்கிய, ஜைன, புத்த மதத்தைச் சேர்ந்தவர்களும் அதே சட்டவரைவின்படி இழுத்துக் கொள்ளப்பட்டனர். மூன்றுமுறை தலாக் என்ற சொல்லைச் சொன்னால் போதும் மணவிலக்கம் தரப்பட்டதாக ஆகிவிடும் என்ற நடைமுறைக்கெதிராகப் புதிய முத்தலாக் சட்டம் இப்போது (2019) இயற்றப்பட்டுள்ளது. மணவாழ்க்கை சார்ந்து இசுலாமியப் பெண்களுக்கு கூடுதல் உரிமைகள் வழங்கும் நோக்கம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதன் சாதக பாதகங்கள் இனிமேல்தான் வெளிப்படும். 

அரசின் கவனத்திற்குள் வருவதின் வெளிப்பாடு, எல்லாவற்றையும் அதன் பேரேடுகளில் பதிவு செய்தலே ஆகும். இந்தியத் திருமணங்கள் 1956 முதல் முறைப்படி பதிவுசெய்யப்படும் ஒன்றாக மாறின. எல்லாவற்றிலும் சட்டத்தை மதிக்காத இந்திய மனோபாவம் திருமணப்பதிவுச் சட்டத்திலும் வெளிப்படுகிறது. இன்றும்கூட பதிவுபெறாத குடும்பங்கள் இருக்கவே செய்கின்றன. திருமணங்களைப் பதிவுசெய்ய வேண்டும் எனச் சொன்னதின் மறுதலையாகப் பிரிதல் என்னும் நிகழ்வு ஏற்கப்பட்டது. மணவிலக்கல், விவாகரத்து என்ற சொல்லின் ஆட்சி பிணைப்பும் சேர்ந்து வாழ்தலும் தரும் வலியையும் பாரத்தையும் தூக்கி எறியும் மனத் தைரியத்தின் அடையாளம். பன்னெடுங்காலச் சமய வாழ்க்கையின் வழியாக உருவாக்கப்பட்ட குடும்ப அமைப்பில் பெரும் உடைப்பாக அமைந்தது மணவிலக்கம். குடும்ப வாழ்க்கையில் அதற்கு முன்னும் உடைப்புகள் இருந்தன. துறவு வாழ்க்கை என்பது ஒருவித உடைப்பே. இல்லறத்தின் மாற்றாகத் துறவறம் பேசப்பட்ட வரலாறு நமக்குத் தெரியும். குடும்பப் பாரம் சுமக்க விரும்பாதவர்களின் வழிமுறைதான் துறவறம். துறவிகளும் துறவு வாழ்க்கை முறையும் சமய வாழ்க்கையின் ஏற்கத்தக்கதாகவும் கொண்டாடப்படுவதாகவும் இருக்கின்றன. அத்துறவு திருமணத்திற்கு முன்பு நடக்கும் நிலையிலேயே கொண்டாடப்படுகின்றன. புனிதமானதாகக் கருதப்படுகின்றன. மணிமேகலையின் துறவும் சேவைகளும் கதைதழுவிய நெடுங்கவிதையின் உரிப்பொருளாகியிருக்கின்றது. நம்காலத்துப் புனிதப் பெண்ணாக அன்னை தெரேசா கொண்டாடப்பட்டாள். பண்டைக்கால ஆண் துறவிகள் முனிவர்களாகவும் ரிஷிகளாகவும் புனிதப் பேருருக்களாக வலம் வந்தனர். அண்மைக்காலத் துறவி ஒருவரை – அப்துல் கலாமை அன்பின் குறியீடாக்கி, அதிகாரத்தைக் கையளித்துப் பார்த்தது இந்தியச் சமூகம். 

திருமணத்திற்குப் பின்னான துறவு குற்ற மனத்தின் வெளிப்பாடு. அதனைச் சமயங்கள் கொண்டாடுவதில்லை; பரிந்துரைப்பதுமில்லை. பரிந்துரைத்தாலும் ஆண்களுக்கு மட்டுமே ஏற்கத்தக்க ஒன்றாக இருக்கின்றன. குடும்பத்திற்குள் நுழைந்துவிட்ட பெண்ணொருத்தியின் துறவைப் பெருமையாகச் சொன்ன இலக்கியங்கள் எதுவும் வாசிக்கக் கிடைக்கவில்லை. மணவிலக்கம் அல்லது விவாகரத்து என்னும் சொல்லாடல் ஒருவிதத்தில் துறவின் நீட்சி என்றாலும் அதில் இருக்கும் குற்றமனத்தை நீக்கிய விடுதலை என்பதுதான் இதன் சிறப்பு. துறவுக்குப் பின் இல்லறம் நினைத்துப் பார்க்கக்கூடாத ஒன்று. ஆனால் மணவிலக்கலுக்குப் பின்னான மறுமணம் தனியொருவரின் விருப்பத்தை முன்வைக்கும் நகர்வு. 

மனைமாட்சியைப் போற்றிய மரபிலக்கியத்திற்கு மாற்றாக மணவிலக்கத்தை முன்வைத்த பனுவல்களை நவீனத் தமிழ் இலக்கியம் எழுதியது. தனது கற்பை அக்னியில் இறங்கி நிரூபித்த சீதைக்கே, ராமனைவிட்டுப் பிரிந்துபோவதற்கான காரணங்கள் இருந்தன எனப் புனைகதையில் சொன்னார் புதுமைப்பித்தன். நோயும் குழந்தையின்மையும் ஒத்த கல்வியின்மையும் நடைமுறை வாழ்க்கையோடு ஒத்துப்போகும் பெண்களிடமிருந்து ஆண்கள் விவாகரத்துக் கோரிய கதைகள் ஆண்களின் நியாயங்களைப் பேசின. அதன் தொடர்ச்சியாகப் பெண்களின் நியாயங்களைப் பேசும் எழுத்துகளும் வரத்தொடங்கின. ஆண் எழுத்தாளர்களே கூடப் பிரிந்து வாழ்தலுக்கான பெண்களின் நியாயங்களை முன்வைத்துக் கதைகள் எழுதினார்கள். அவர்கள் எழுதியதைவிடவும் பெண்கள் எழுதிய போது சொல்லப்பட்ட காரணங்களும் சூழலும் ஏற்கத் தக்கனவாக இருந்தன. 



1979 இல் ஆனந்தவிகடனில் ஜோதிர்லதா கிரிஜா எழுதிய தலைமுறை இடைவெளிகள் கதை, விவாகரத்தை முன்வைத்து வாதங்களை அடுக்குகிறது. கதைக்குள் இருக்கும் முரண்பட்ட பாத்திரங்கள் ஆண் -பெண் அல்ல என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. தாயும் மகளும் முரண்பட்டு நிற்கும் – தலைமுறை இடைவெளிப் புனைவாக்கி நம்பத்தக்க வாதங்களை உரையாடலாக ஆக்கியுள்ளார் ஜோதிர்லதா கிரிஜா. கதையின் தொடக்கமே மகளுக்கும் அம்மாவுக்குமான முரண்பாட்டை பளிச்சென்று முன்வைக்கும் விதமான உரையாடலில் தொடங்குகிறது:

“என்னடி பானு! என்ன எழுதிண்டிருக்கே..? என்று கவலையும் வேதனையும் வெளிப்பட்ட குரலில் வினவினாள் கமலம்.
“லெட்டர்”
“யாருக்கு…?”
“வேற யாருக்கு எல்லாம் உன் மாப்பிள்ளைக்கு தான்”
“என்னன்னு..?”
“உன்கிட்ட சொல்லனுமா என்ன..?
“ஏண்டி பெத்த தாயார் கிட்ட பேசுற பேச்சாடா இது..?

அம்மாவின் முடிவுகளோடும் கருத்துகளோடும் ஒத்துப்போகாத மகள் எழுதிய கடிதம் எப்படித் தொடங்கியது எனச் சொல்வதின் வழியாகவே புதிய தலைமுறைப் பெண்ணான பானுமதியின் மனப்பாங்கைச் சொல்லிவிடுகிறார்.

“உங்கள் கடிதம் கிடைத்தது…? என்று மொட்டையாகத் தொடங்கப்பட்டு இருந்ததை பார்த்ததும் ‘மரியாதை கெட்ட கழுதை’ என்று மகளை மனசுக்குள் திட்டிவிட்டு அவள் அதை மேலே படிக்கலானாள்

… ஆறு ஆண்டுகளாக என்னை ஏறெடுத்துப் பார்க்காமல் இருந்த உங்களுக்கு திடீரென்று என் மேல் கரிசனம் ஏற்பட்டிருக்கும் காரணம் எனக்குப் புரியவே செய்கிறது உங்கள் சுயநலம் ஈடேற நான் இடம்கொடுக்க மாட்டேன் உங்களால் ஆனதைப் பார்த்துக்கொள்ளுங்கள் கடந்து போனவற்றுக்காக நீங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்டு கடிதத்தில் எழுதியிருப்பவை எல்லாம் வெறும் பாசாங்கு என்பதைக்கூட புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நான் ஒன்றும் அறிவு கெட்டவள் இல்லை. என் வாழ்க்கையில் இனிமேல் நீங்கள் குறிக்கிடுவதை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன். உங்களிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்கு நான் தீர்மானித்திருக்கிறேன். அதற்கான வக்கீல் நோட்டீஸ் விரைவில் உங்களை வந்தடையும். அதுதான் என்னிடமிருந்து உங்களுக்கு வரவிருக்கும் அடுத்த தபாலாக இருக்கும்”

கணவனோடு சேர்ந்து வாழ்வதே பெண்ணின் அடையாளம் என நினைக்கும் அம்மாவிலிருந்து விலகப்போகும் பானுமதி, அம்மா அவளது அப்பாவைச் சார்ந்து வாழ நேர்ந்த சூழலைச் சரியான விதத்தில் முன்வைக்கிறாள். தன் வாழ்க்கைக்கான – உணவு, உடை, உறையுள் என்ற அன்றாட த்தேவைக்கான வழியில்லாத நிலையில் தான் ஒரு பெண், ஆணைச் சார்ந்து வாழும்படி நெருக்கடிக்குள்ளாகிறாள். இல்லையென்றால் அவனது செயல்பாடுகளையும் முறையற்ற பாலுறவுத் தேடல்களையும் சகித்துக்கொள்ள மாட்டாள் எனச் சொல்கிறாள். அம்மாவுக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் உரையாடல் மொழி பெண்ணின் -மகளின் அறிவையும் நிகழ்கால நியாயங்களையும் பேசுகின்றன.

“உன்னை எட்டு வருஷம் தள்ளி வைத்துக் கொடுமைப் படுத்தின அப்பாவைத் தேடிண்டு போய் அவர் கால்லே விழுந்து வாழ்ந்தியே, எதுக்காக? வயித்துப் பிழைப்புக்கு வழி இல்லாததால் தானே? ஓட்டலில் வேலை செஞ்சுண்டிருந்த தாத்தா செத்துப் போனதும் நாளைய சோத்துக்கு என்ன வழின்னு தெரியாத நிலையில் அப்பாவைத் தேடிண்டு ஓடினே.. என்னத்துக்காக..?”
“பானு! நீ கேக்கிற கேள்வி ரொம்ப நியாயமான கேள்வியாகவே இருக்கட்டும். ஆனா சோறு மட்டுமே வாழ்க்கையிலெ லட்சியம்கிறது சரியில்லே. ஒரு பொண்ணு தன் புருஷனோட வாழ்றதுதான் அவளுக்கு நல்லதுங்கிறது அனாதி காலம் தொட்டு இருந்துண்டிருக்கிற வழக்கம்…”
“இருக்கட்டும்.. ஆனா புருஷன் புருஷனாய் இருக்கணும் அட்லீஸ்ட் மனுசனாவாவது இருக்கணும்..”

“அம்மா ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ, காலம் மாறிண்டிருக்கு .. நீ வாழ்ந்த காலம் வேற.. நாங்க வாழுற காலம் வேறு.. என் மாதிரி சில பெண்கள் தான் இப்படி தைரியமான முடிவுக்கு வரா.. மத்தவா மாறல்ல. பரம்பரை பரம்பரையா பெண்கள் கிட்ட உன் மாதிரி பெரியவா வளர்த்து வந்திருக்கிற பயம். கோழைத்தனம். சமூகத்தைப் பார்த்து நடுங்குகிறது. கணவனே தெய்வம் நினைக்கிறது. இது மாதிரியான குணங்கள்ளாம் இன்னும் நம்ம பெண்களை விட்டு போகல்லே.. அதுக்கு ரொம்ப நாள் ஆகும்.. ஆனா என்னை மாதிரியும் சில பேர் நடக்கத் தொடங்கி இருக்கா. என் மாதிரியான பெண்கள் தொகை அதிகமாகாமல் இருக்கணும்னா அதுக்கு ஒரே வழி ஆண்கள் திருந்தனும்..

குடும்ப அமைப்புக்குள் நிலவும் ஏற்றத்தாழ்வுகளையும் பெண்ணுக்குக் கிடைக்கும் அவமரியாதைகளையும் முன்வைக்கும் மகள், அந்த அமைப்பு ஒருவித்தில் ஆண்டான் – அடிமைத் தன்மையைக் கொண்டிருக்கிறது என்ற கடுமையான விமரிசனத்தையும் முன்வைக்கிறாள். இந்த உலகத்திற்குத் தேவை சின்னதான சமத்துவ வாழ்வு. வேறெங்கோ இருப்பதாகச் சொல்லப்படும் சொர்க்கம் என்பது எல்லாரையும் சமமாக ஏற்கும் நிகழ்கால வாழ்க்கையிலேயே கிடைக்கும். அதை நமது குடும்பத்திற்குள் ஏற்படுத்த வேண்டுமென்றால் கணவனும் மனைவியும் இடைவெளியை அதிகரிக்காத இணைகளாகத் திகழவேண்டும். என்னுடைய கணவனின் நோக்கம் சுயநலமானது. என்னுடைய அப்பா – உன்னுடைய கணவர் உன்மேல் செலுத்தியது ஆதிக்கம். சுயநலமும் ஆதிக்கமும் இல்லாத மனிதர்களால் ஆன குடும்ப வாழ்க்கையை நான் வேண்டுகிறேன். அதை உருவாக்க நினைக்கும் இப்போது முதல் கட்டமாக மணவிலக்கத்தைக் கோரப் போகிறேன் எனச் சொல்கிறாள்.

“வயித்துப் பிழைப்புக்காக ஒருத்தரை அண்டி இன்னொருத்தர் வாழுறது என்கிற நிலைமையிலதான் அடிமைத்தனம்கிற் கேவலமே உருவாறது.. எல்லாரும் சமம்கிற சின்ன நியாயத்தைப் பெரிய மனசோட ஏத்துண்டு எல்லாருமே வாழத்தொடங்கினா இந்த உலகம் சொர்க்கமாயிடும் சுருக்கமாச் சொன்னா, ஒவ்வொருத்தரும் அவா அவா சொந்தக் கால்களாலே நிக்க முடிஞ்சா இது மாதிரிக் கொடுமைகளை எதிர்க்கிற தைரியம் சிறுகச்சிறகாவது வரும். நீ உன் சொந்தக் கால்களாலெ நிக்க முடியாமத்தான் அப்பாவை தேடிண்டு உன் மதிப்பு மரியாதை கவுரவம் இதை எல்லாம் மூட்டை கட்டி வைச்சுட்டுப் போனேங்கிறத நினைச்சுப் பார்த்தா.. என் கோபம் உனக்கு புரியும்

ஆதிக்கமனத்து ஆண்களிடமிருந்து விலகிவிடுவதே பெண்களின் லட்சியமாக இருக்கக் கூடாது; சமத்துவம் பேணும் ஆண்களைக் கண்டறிந்து அவர்களோடு இணைந்து உருவாக்கும் மறுமண வாழ்க்கையையும் கோடி காட்டுகிறது ஜோதிர்லதா கிரிஜாவின் கதை. என்னைத் தள்ளிவைத்த கணவனிடமிருந்து விவாகரத்துப் பெற்றபின் சந்திரனோடு புதுவாழ்வைத் தொடங்கப் போகிறேன் என்பதை அம்மாவிடம் சொல்லவில்லை என்றாலும் அவள் அதைச் செய்யத்தான் போகிறாள். ஏனென்றால் சந்திரன் இவளைப் புதிவிதக் கருத்தியலை ஏற்கும் ஆண் என நம்புகிறாள். அதனை நினைவோட்டமாக எழுதுகிறார் கதாசிரியர். 

பெரும்பாலான ஆண்கள் இன்னமும் தங்கள் நியாயமில்லாத பழைய உரிமைகளை வைத்துக்கொண்டு பெண்களைப் படுத்திக் கொண்டிருக்கிற நிலையில் சந்திரனைப் போன்றவர்களும் சிறுகச் சிறுக தோன்றத் தொடங்கி இருப்பதையும் அவள் நினைத்துப் பார்த்தாள். இனி தன்னையொத்த பெண்களுடையவும் சந்திரனைப் போன்ற இளைஞர் உடையவும் எண்ணிக்கை கால ஓட்டத்தை ஒட்டி கொஞ்சமாக பெருகும் என்று எண்ணி அவள் தனக்குள் மகிழ்ச்சியுடன் சிரித்துக்கொண்டாள்

எனக்கதை முடிகிறது. விவாகரத்தை முன் நிபந்தனையாக்கித் தாயோடு வாதாடும் பானுமதியும் விவாகரத்துக்குப் பின்னான அவளின் வாழ்க்கையில் பங்கேற்கப் போகும் சந்திரனும் மரபு வாழ்க்கையிலிருந்து விலகிய நவீன வாழ்க்கையின் பிரதிநிதிகள். இவர்களைப் போன்றவர்களின் எண்ணிக்கைப் பெருக்கமே நவீனத்துவ வாழ்க்கையின் அடையாளங்கள். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்