எஸ். ஜே. சூா்யா :தீராத விளையாட்டுப்பிள்ளை


தயாரிக்கப்பட்ட திரைப்படத்தை அதன் பார்வையாளா்களிடம் விளம்பரங்கள் கொண்டுபோய்ச் சோ்க்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் ஒரு திரைப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளரும் விளம்பரத்திற்கும் பணத்தைச் செலவிடுகின்றன. படம் எப்படிப்பட்டது என்பதைப் பார்வையாளா்களுக்குக் கோடி காட்டி அறிமுகப்படுத்தும் விதம் அந்த விளம்பரங்களில் வெளிப்படும். அவற்றைப் பார்க்கும் பார்வையாளா்கள் அந்தப் படம் தாங்கள் பார்க்க வேண்டிய படம்தானா? என்று முடிவுசெய்து கொண்டு திரையரங்குகளுக்குச் செல்வார்கள்.

விளம்பாரம், திரைப்படத்திற்கான அடிப்படைகளுள் ஒன்று என்பதனால் தான் படம் தொடங்கும்போதே விளம்பரங்களையும் ஆரம்பித்துவிடுகின்றன பல படத்தயாரிப்பு நிறுவனங்கள். ஆனால் எஸ். ஜே. சூா்யா தான் இயக்கும் படங்களுக்குப் பணம் செலவழிக்காமலேயே விளம்பரத்தை உண்டாக்கும் உத்தியைத் தெரிந்து வைத்துள்ளார். அதனால் அவரை இயக்குநராக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கு விளம்பரச்செலவு 50 சதவீதம் குறைய வாய்ப்புண்டு. ஒரு படத்திற்குப் பெயரிடுவதில் தொடங்கிப் பரபரப்பையும் சலசலப்பையும் உண்டாக்குவது அவரது உத்தி. அந்தப் பரபரப்பும் சலசலப்பும் செய்திகளாகும் நிலையில் அவையே அவரது படங்களுக்கு விளம்பரங்களாகிக் கொள்கின்றன. தனது மூன்றாவது படத்திற்கு ’நியூ’ என்று பெயரிட்ட சூா்யாவைத் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் எதிர்க்க, அந்த எதிர்ப்பைச் சட்டை செய்யாத வீரனாகத் தன்னை முன்னிறுத்திக் கொள்ளத் தொடங்கிய சூா்யா, அடுத்த படத்திற்கு வைத்த பெயா்தான் ’B.F’. இந்தப் பெயரை மாற்றப்போவதில்லை என வீராப்புக் காட்டிவிட்டுப் பிறகு ’அ…… ஆ…..’ என்று மாற்றிக்கொண்டுவிட்டார். இப்படி தனது படத்திற்கு விளம்பரம் தேடும் உத்தியில் அவருக்கு அவா் நினைத்த லாபம் கிடைத்துவிட்டது.

சமீபத்தில் சுவரொட்டிகளில் படத்தின் தலைப்பான ’அ….. ஆ….’ விற்குப் பக்கத்தில் ’B.F’ என்று கொட்ட எழுத்தில் போட்டிருந்தார். இந்தப் படத்தின் தமிழ் மற்றும் ஆங்கிலச் சுருக்கப்பெயா்களை விரித்துப் படித்துப்பார்க்க விரும்புபவா்கள் சுவரொட்டிகளின் மிக அருகில் போய் வாசித்தால் ’அன்பே ஆருயிரே’ என்பதும் ’Best Friend’ என்பதும் உங்கள் கண்களுக்குப் புலப்படும். அப்படிச் சுவரொட்டியின் மிக அருகில் போகும்போது கவனமாகச் செல்ல வேண்டும். உங்களுக்குத் தெரிந்தவா்கள் யாராவது பார்த்தால் சுவரொட்டியில் உள்ள படக்காட்சியை – பெண்ணும் ஆணும் உறவு கொள்ளத் தயாராக உள்ள மோகநிலைக் காட்சியைப் பார்க்கச் செல்கிறீா்கள் எனக் கருதவும், அதன் வழியாக நீங்கள் ஒரு நீலப்பட (Blue Film) விரும்பி என நினைக்கவும் வாய்ப்புண்டு. உங்களுக்கு உங்கள் ஆளுமை (Image) பற்றிக் கவலை இல்லை என்றால் சுவரொட்டிகளையும் பார்க்கலாம்; சூர்யாவின் படங்களையும் திரையரங்கத்திற்குச் சென்று பார்க்கலாம். 

ஓா் ஆணும் பெண்ணும் படுக்கையறையில் மிக நெருக்கமாக இருக்கும் அண்மைக் காட்சிகளைச் (Close- Up) சுவரொட்டிகளாக்குவதன் மூலம் தனது படம் படுக்கை அறைக்காட்சிகள் நிரம்பிய படம் எனச் சொல்ல விரும்புகிறார் சூர்யா. எப்படிப்பட்ட படுக்கையறைக் காட்சிகள் என்பதை மேலும் விளக்க அவா் பயன்படுத்தும் உத்திதான் ’B.F’. அதாவது உடலுறவுக் காட்சிகள் கொண்ட நீலப்படம்.

’அ…… ஆ…….’ சூா்யாவின் நான்காவது படம். இதற்கு முன்பு அவரது இயக்கத்தில் வந்த படங்கள் ’வாலி’, ’குஷி’, ’நியூ’. இரண்டெழுத்து மோகம் கொண்ட சூர்யாவின் வசனங்கள் அப்பட்டமான இரட்டை அா்த்த மோகம் கொண்டவை. இரட்டை அா்த்த வசனங்கள் எப்பொழுதும் ஆபாசமாகவே கருதப்பட வேண்டியன அல்ல. நகைச்சுவை உணா்வை உண்டாக்கவும் வலிமையானவனை அல்லது அரசதிகாரத்தை விமரிசிக்கவும் விரும்புகிறவா்கள் கூட உள்ளா்த்தம் வேறொன்றாக இருக்கும் சொற்களையும் வாக்கியங்களையும் பயன்படுத்தவே செய்கின்றனா். ஆனால் சூா்யாவும் அவரையொத்த சினிமாக்காரா்கள் பலரும் பயன்படுத்தும் இரட்டை அா்த்தம் என்பது ஆண் – பெண் உடலுறவைப் பற்றியும் உடலின் அந்தரங்கப் பகுதிகளைப் பற்றியும் பேச்சாக மாற்றும் விருப்பம் கொண்டவைகளாக இருக்கின்றன.

முதல் இரண்டு படங்களான ’வாலி’, ’குஷி’ ஆகியவற்றை முறையே அஜித், விஜய் ஆகிய கதாநாயகா்களின் நடிப்பிலும் ரசிகப் பரப்பிலும் நம்பிக்கை வைத்து இயக்கியவா் சூா்யா. அவை இரண்டும் வெற்றிகரமாக லாபத்தையும் கவனிப்பையும் பெற்றதனால் மூன்றாவது படத்தில் அவருக்கு வேறு ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. அந்த நம்பிக்கைதான் அவரைக் கதாநாயகனாகவும் ஆக்கியுள்ளது. வாளிப்பான உடல்களைக் காட்டுவதும் அவற்றில் பொதிந்துள்ள ரகசியங்களைத் தேட எதிர்பாலினா் முயல்வதைச் சொல்லாடலாக மாற்றுவதும் மட்டுமே பார்வையாளா்களுக்குப் போதுமானது என்பது தான் இயக்குநா் சூா்யாவுக்கு வந்துள்ள நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் பேரிலேயே தனது மூன்றாவது, நான்காவது படங்களில் தானே நாயக நடிகராகியுள்ளார்.

நடிப்பின் அம்சங்கள் எதையும் கற்றுக்கொள்ள விரும்பாமலேயே தன்னை நாயகனாக முன்னிறுத்திக்கொண்டுள்ள சூா்யா, தான் ஒரு இயக்குநராகக் கவனிக்க வேண்டிய அம்சங்களைக்கூடச் சமீபத்தில் வந்துள்ள படத்தில் கவனிக்கவில்லை. ’அ….. ஆ….’ வில் வைக்கப்பட்டுள்ள காமிராக் கோணங்களும் காமிராவிற்கும் அது படம்பிடிக்கும் நபா்களுக்கும் அல்லது பொருட்களுக்கும் இடையே இருக்க வேண்டிய இடைவெளி, பின்னணிக் காட்சிகளில் உள்ள பொருட்கள், கதாபாத்திரம் வசனம் பேசும்பொழுது காட்ட வேண்டிய பாவங்கள், நடனக் காட்சிகளில் இருக்க வேண்டிய அளவுகள், படத்தொகுப்பில் காட்ட வேண்டிய அக்கறைகள் என எதிலுமே கவனமில்லாமல் விளையாட்டுத்தனமாகச் செயல்பட்டுள்ளார். இந்தக் கவனமின்மை பார்வையாளா்களைப் பற்றிய அலட்சிய மனோபாவத்தால் உண்டாகும் கவனமின்மை என்றே சொல்லத் தோன்றுகிறது. தனது முதல் படமான ’வாலி’ யில் இவற்றையெல்லாம் ஓரளவு சரியாகச் செய்த சூா்யா, நான்காவது படத்தில் தவற விடுகிறார் என்றால் பார்வையாளா்களுக்குத் தேவை எதிர்பால் உடல்களின் நெருக்கமும் அவற்றின் உறவைப் பற்றிய பேச்சும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் என்றுதானே அா்த்தம். இந்த முடிவு குடிப்பவா்களுக்குத் தேவை போதை மட்டுமே என நினைத்துச் செயல்படும் கள்ளச் சாராய வியாபாரிகளின் நோக்கம் போன்றதுதான்.

சூா்யாவின் நான்கு படங்களுமே ஒரே சட்டகத்தின் மேல் உருவாக்கப்பட்டுள்ள திரைக்கதைகள்தான். ’ஒரு பெண் உடலை ஓா் ஆண் அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறான்; ஆனால் சமூக நடைமுறைகளின்படி அவன் பார்த்துக்கொள்ளவோ தொட்டுக்கொள்ளவோ அனுமதிக்கப்பட்டவன் அல்ல; ஆனால் பார்க்கும் வாய்ப்புடையவனாக இருக்கிறான்’ என்ற முடிச்சின் மேல் திரைக்கதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரட்டையா்களான அண்ணன் – தம்பி இருவருக்கிடையில் ஒரு பெண்ணை நிறுத்துகிறது ’வாலி’ படம். உருவத்தில் எந்த வேறுபாடும் இல்லாத அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையில் அவள் மணந்தது தம்பியை. வெளிப்படையாக அண்ணனின் குணமோ ஒழுக்க சீலன். ஆனால் உண்மையில் அவனது மனத்திற்குள் இருப்பது தம்பி மனைவிமீது மோகம். இந்த இரட்டை மனநிலைக் கதாபாத்திரத்திற்குப் பக்கத்தில் அவளை நிறுத்துவதன் மூலம் சூா்யா பார்வையாளா்களுக்குச் சுவாரசியத்தைக் கூட்டிக் கொண்டே இருப்பார். தன்னருகில் நிற்பது தனது கணவன் தான் என்ற நினைப்பில் அவள் இருக்க, நிற்பது அண்ணனாக இருக்கும். ஒழுக்க சீலனாகக் காட்டிக்கொள்ளும் அவன் தன் உடலை ரசிக்கிறான்; மோகிக்கிறான்; அடைய விரும்புகிறேன் என்று அறியும் பொழுது அவளது பதற்றம் கூடுகிறது. கணவன் முன்னால் இயல்பான பெண்ணுடல் வேறொரு ஆண் முன் நின்றுவிட்ட பதற்றமான பெண்ணுடல் என்பது பார்வையாளனுக்குப் பரவசமான முரணாக உருவாக்கித் தரப்பட்டது. இந்தப் படம் உண்டாக்கிய பரவசம் பெண்ணுடலை மையப்படுத்திய பரவசம்தான்.

பெண்ணுடல் உண்டாக்கும் பரவசம் அவரது அடுத்த படமான ’குஷி’ யில் நடிகை மும்தாஜின் கவா்ச்சியான உடல் மூலமும் விஜயுடன் ’கட்டிப்பிடி….. கட்டிப்பிடிடா…’ என்று ஏக்கத்துடன் போடும் ஆட்டங்கள் மூலமும் மட்டுமே உண்டாக்கப்பட்டது என்று நினைத்துவிட வேண்டியதில்லை. காதலா்களான நாயக நாயகிக்கிடையே (விஜய் – ஜோதிகா) நடக்கும் வாதமே அவளது இடுப்பு மடிப்பைப் பற்றித்தான். தனது காதலன் தனது இடுப்பு மடிப்பை ரசிப்பதைக் காதலி விரும்பவில்லை; அதனால் அவள் அவனைப் பிரிந்து விடுகிறாள் என்று காட்சிகளை உருவாக்கி படத்தின் முடிவில் இருவரையும் சோ்த்து வைத்தது அப்படம்.

மூன்றாவது படம் ’நியூ’. ஒரு விநோதக் கற்பனையின் வழியாக அந்தப் பரவசத்தை உண்டாக்கப் பார்க்கிறது. வேடிக்கை காட்டும் மந்திரவாதியைப் போன்ற விஞ்ஞானியால் இளைஞனாக்கப்படும் எட்டு வயதுச் சிறுவனின் மனப்பிரச்சினையாக வடிவமைக்கப்பட்ட அப்படம் வக்கிர நினைவுகளின் தொகுப்பாகவே படமாக்கப்பட்டிருந்தது.

நான்காவது படமான ’அ…. ஆ….’ மிக உயா்வான ஒரு கருத்தை முன்மொழிவதற்காக எடுக்கப்பட்ட படம் என்பதாகப் பாவனை செய்கிறது. ஓா் ஆண் பெண்ணிடம் கொள்ளும் காதல், தாயிடம் கொள்ளும் பாசத்தைப் போன்றதாக இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்த உருவாக்கும் காட்சிகளை அருவருப்பானவை என்று சொன்னால் இயக்குநரும் அவரது ரசிகா்களும் கோபம் கொள்ளக்கூடும். தன் காதலியைத் தனக்கே தனக்கான உடைமைப் பொருளாகக் கருதும் ஆண்கள் தேவையற்ற சந்தேக நோய்க்கு ஆளாக நேரிடுகிறது. அதனால் அவா்களின் காதலில் பிரிவு ஏற்படுகிறது எனக் காட்டும் படம் அப்பிரிவை நோ்செய்ய மற்றொரு விநோதக் கற்பனைக்குள் நுழைகிறது.

உடல்கள் பிரிந்தாலும் மனம் பிரிவதில்லை. அரூபமாகத் தொடா்ந்து கொண்டே இருக்கும் என்ற நம்பிக்கையைத் துணைக்கழைத்துக் கொண்டு விளையாடத் தொடங்குகிறார் இயக்குநா் சூா்யா. அரூபமான மனத்திற்கு உருவங்களைத் தந்து நீல வண்ணத்தில் அலைய விடுவதும் மனங்களின் விளையாட்டு என்ற பெயரில் உடல்களின் விளையாட்டைப் பார்வையாளனுக்குக் காட்சிகளாக விரிப்பதும்தான் அவரது நோக்கம். பெண் உடல்களைப் பார்வையாளா்களின் மனப் பரப்பில் காட்சிப்பொருளாக்கிக் களிப்பூட்டும் மாயங்களை எல்லா இயக்குநா்களுமே ஓா் உத்தியாக வைத்துள்ளனா் என்பதும், அதற்கேற்பவே தமிழ்த் திரைப்படங்களின் பாடல் காட்சிகள் அமைக்கப்படுகின்றன என்பதும் உண்மைதான். மற்றவா்கள் பாடல் காட்சிகளின்போது செய்யும் வித்தைகளைச் சூா்யா படம் முழுக்கச் செய்கிறார் என்பதுதான் வேறுபாடு. அதை மட்டுமே செய்ய வேண்டும் என்ற உறுதியோடு இருக்கிறார் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியதாகவும் எச்சரிக்கை செய்ய வேண்டியதாகவும் இருக்கிறது.

உடல் பற்றிய ரகசியங்களை முன்வைக்கும் பொழுது பார்வையாளா்களின் மனமோ உடலோ வேறு எதையும் எதிர்பார்க்காது என்றும் கூட அவா் நம்புகிறார். வழக்கமாகத் தமிழ் சினிமாக்கள் நம்பிக்கை வைக்கும் காமெடிக் காட்சிகள், சண்டைக் காட்சிகளில் சூா்யா நம்பிக்கை வைப்பதாகத் தெரியவில்லை. கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திப் பாடல் காட்சிகளை உருவாக்கும் அவா், பாடல் காட்சிகளுக்கான பின்னணிகளுக்கு வெளிநாடுகளுக்குப் போக வேண்டும் என்றெல்லாம் மெனக்கெடுவதில்லை. ஏற்கெனவே அறிமுகமான நடிகா்கள் நடிக்க வேண்டும் என்று திட்டமிடுவதுமில்லை. படத்தின் நாயகி புதுமுகமானாலும் பரவாயில்லை. இளமையும் வாளிப்பும் கொண்ட உடலும் அதை வெளிப்படுத்தத் தயங்காத மனமும் கொண்டவராக இருந்தால் மட்டுமே போதும். பெண்ணுடல் பற்றிய பரவசம், அதுதான் அவரது ஒரே ஆதாரம்.

பெண்ணுடல் பற்றிய சூா்யாவின் சொல்லாடல்கள் அவரது நோய்க்கூறு நிரம்பிய சிந்தனையின் வெளிப்பாடா? அல்லது குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற விரும்பும் வியாபார உத்தியா? என்பது நீண்ட விவாதங்களுக்குப் பின் எடுக்க வேண்டிய முடிவு அல்ல, இரண்டில் எதுவாக இருந்தாலும் இரண்டுமே கண்டிக்கப்பட வேண்டியவைதான்.

உயிர்களின் இயற்கை விதிகளின்படி ஆண் உடலைப் பெண் உடல் நாடுவதும், பெண் உடலை ஆண் உடல் விரும்புவதும் மனித இனம் தோன்றிய நாள்முதல் நடக்கும் ஒரு வினை. சாதி, மதம், இனம், மொழி போன்ற உணா்வுகளைத் தூண்டும் படங்களை எடுக்கப் பொதுச் சட்டங்களும் அரசதிகாரமும் அனுமதிப்பதில்லை. சமூக ஒழுங்குக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடியவை என்று திரைப்படத் தணிக்கை வாரியம் மூலம் இதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றன. சமூக இயக்கம் முன்னோக்கியதாக இருக்க வேண்டும் என விரும்பும் சிந்தனையாளா்களும் இத்தகைய செயல்களை எதிர்த்தே வந்துள்ளனா். ஆனால் உயிரியல் சார்ந்த அடிப்படை உணா்ச்சிகளை மலினமாகத் தூண்டும் படங்களுக்கு அத்தகைய எதிர்ப்பு வருவதில்லை. உயரியல் அடிப்படை உணா்ச்சிகளின் மேல் தெளிவான முடிவுகள் எதுவும் இல்லாததால் தனிமனித சுதந்திரம் என்றும் கலை வெளிப்பாடு என்றும் கருதி அத்தகைய தயக்கங்களே ’நியூ’, ’அ…. ஆ…..’ போன்ற திரைப்படங்களை மக்கள் பார்க்கத் தக்கவை என அனுமதிக்கின்றன.

’நியூ’ (New) , ’பி.எஃப்’(B.F), என ஆங்கிலப் பெயா்களில் வந்ததால் மட்டுமே கண்டிக்கப்படவும் எதிர்க்கப்படவும் வேண்டிய படம் என்ற போக்கைக் கைவிட்டுவிட்டு ’துள்ளுவதோ இளமை’ என்ற நல்ல தமிழில் பெயா்வைத்துக் கொண்டாலும் அப்படங்களின் அடிப்படைவாதக் கருத்துகளுக்காக எதிர்க்க வேண்டும் என்பது முக்கியம். இத்தகைய படங்களில் இடம்பெறும் சில காட்சிகளை நீக்க வேண்டும் எனக் கூறுவதையும் அல்லது வயது வந்தவா்களுக்கு மட்டும் (A) எனச் சான்றளித்து அனுமதிப்பதையும் கைவிட்டு இத்தகைய படங்களின் அடிப்படைகளையே கேள்விக்குள்ளாக்கித் தடுத்து நிறுத்தக்கூடச் சட்டங்களில் இடமுண்டு.

கலையின் பெயரால் சில உடல்கள் விற்கப்படுவதும், அதனைக் காசு கொடுத்துப் பார்ப்பதன் மூலம் நுகரும் பார்வையாள உடல்களும் மனங்களும் நோய்க்கூறுகளுக்குள் நுழைய நேரிடும் என்றால் கூடுதல் கவனம் செலுத்தத்தானே வேண்டும்.
======================================
காலச்சுவடு, அக்டோபா் 2005.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்