தேர்வின் மொழி

 அண்மையில் தென்மாவட்ட மாணவர்கள் தாங்கள் பயிலும் பல்கலைக்கழகத்திற்கெதிராகப் போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். தொடக்க நிலையில் தங்கள் கல்லூரிகளின் வாசல்களில் ஆரம்பித்த போராட்டம் உடனடியாகப் பல்கலைக்கழக வாசலை நோக்கித் திரும்பியது. மொத்தமாகத் திரண்டுபோய்ப் பல்கலைக்கழக வாசலை முற்றுகையிட்டார்கள். வழக்கம்போல பல்கலைக்கழக நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை ஆரம்பித்தது. ஆனால் முடிவுகள் எட்டப்படவில்லை.

எல்லாவகையான போராட்டங்களும் இப்படி முடிவதில்லை. கோரிக்கைகளில் சில ஏற்றுக்கொள்ளப்படும். அதனால் போராட்டக்காரர்கள் தங்களின் மற்ற கோரிக்கைகளை வலியுறுத்தாமல் பணிக்குத் திரும்பிவிடுவார்கள். பிடிவாதமாகப் போராட்டக்காரர்களும் இருப்பதில்லை. நிர்வாகமும் விட்டுக்கொடுக்காமல் கடுமை காட்டுவதில்லை. ஆனால் இந்தப் போராட்டம் அப்படியானதாக அமையவில்லை. நிர்வாகம் இறங்கிவரத் தயாரில்லை. போராடிய மாணாக்கர்கள் தோல்வியை ஒத்துக்கொள்ளத் தயாராக இல்லை. விளைவு காவல்துறையினரின் தடியடி; மாணாக்கர்களுக்குக் காயம்; மருத்துவமனைக்கு மட்டுமில்லாமல் காவல் நிலையத்திற்கும் செல்லவேண்டிய நிலை.

பத்திரிகைகள் நடந்தனவற்றைப் பதிவுசெய்தனவே ஒழியப் போராடியவர்களுக்கு ஆதரவுக் குரலாக எழுதவில்லை. இப்படி ஏன் நிகழ்கிறது. நியாயமான போராட்டங்களுக்கு ஊடகங்களும் பொதுச்சமூகம் ஆதரவு அளிக்கத்தானே செய்வார்கள். ஆனால் இந்தப் போராட்டத்திற்கு அத்தகைய ஆதரவு இல்லாமல் போனதேன்? ஆதரவில்லாத போராட்டமென்றால் நியாயமில்லாத போராட்டமாகத் தானே இருக்கமுடியும்? அப்படியானல் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஏற்கத்தக்கதாக இல்லாமல் இருக்கக் கூடுமோ என்ற ஐயமும் உண்டாகக் கூடும். அந்த மாணவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை முழுமையாக ஏற்க முடியாத கோரிக்கைகள் என்று சொல்ல முடியாது

  

· பட்டப்படிப்பில் தங்கள் விடைகளைத் தமிழில் எழுத அனுமதி வேண்டுமென்பது மாணவர்களின் முதல் கோரிக்கை.

 

· தங்களின் வருகைப்பதிவுக் குறைவுக்காக வசூலிக்கப்படும் தண்டத்தொகையை வசூலிக்கக் கூடாது என்பது இரண்டாவது கோரிக்கை.

  

இவ்விருகோரிக்கைகளில் இரண்டாவது கோரிக்கை எந்தக் காலத்திலும் ஏற்கத்தக்கதாக இருக்காது. வகுப்புக்கு வராமல் படிப்பதற்கெனத் தனியாகத் தொலைநிலைக் கல்வி இயக்ககம் இருக்கிறது. அதன் வழியாகப் படிப்பவர்களுக்கும்கூடக் குறைந்தபட்ச வருகைப்பதிவு எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால் வகுப்பறை வழியாகக் கல்வி கற்பித்தலில் வருகைப் பதிவுக்கென விதிகள் இருக்கின்றன. 75 சதவீதம் வருகை இருக்கவேண்டும். அதில் 10 சதவீதம் குறைந்தால் தண்டத் தொகை வசூலிக்கப்படும். பாதிக்கும் குறைந்தால் தேர்வு எழுத முடியாது. இதில் கல்வி நிறுவனங்கள் இதுவரை கண்டும் காணாமல் இருக்கின்றன என்பதுவே உண்மை. அப்படியிருப்பது மாணவர்களின் நலன் சார்ந்ததாகச் சொல்லப்படுவது உண்மையல்ல. வருகைப்பதிவுக் கோரிக்கையை மாணவர்களும் தொடர்ந்து வலியுறுத்த மாட்டார்கள். தண்டத் தொகைக்கான பட்டியல்களைக் கல்லூரிகள் ஒட்டிவிட்டால் பணத்தைச் செலுத்திவிட்டுத் தேர்வெழுதப் போய்விடுவார்கள். ஆனால் தேர்வை ஆங்கிலத்தில் மட்டுமே எழுதவேண்டும்; தமிழில் எழுதக் கூடாது என்றால் நிச்சயம் திணறித்தான் போவார்கள். ஏனென்றால் பலகாலப் பழக்கத்தைக் கைவிடச் சொல்லும் எச்சரிக்கை.

 

இந்தக் கோரிக்கையின் முழுப்பரிமாணத்தையும் தெரிந்துகொள்ளாதவர்கள் பல்கலைக்கழகம் தமிழ்மொழிக்கெதிராக இருப்பதாகவும், ஆங்கில ஆதரவுப் போக்கில் செயல்படுவதாகவும் புரிந்துகொள்ள வாய்ப்புகளுண்டு. மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு எழுதவேண்டுமெனச் சொல்லும் பல்கலைக் கழக நிர்வாகம் அனைவரும் ஆங்கிலம் வழியாகவே கல்வி கற்கவேண்டுமென வலியுறுத்தவில்லை என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். ஒருவர் தனது பட்டப்பிடிப்பிற்கான, படிப்புவழியாகமீடியமாக ஆங்கிலத்தைத் தேர்வுசெய்துவிட்டு தமிழில் தேர்வு எழுதுவதையே தடைசெய்கிறது. எவரொருவரும் தனது பட்டப்படிப்பிற்கான கற்றல் மொழியாகத் தமிழைத் தேர்வுசெய்துகொண்டு தமிழிலேயே தேர்வு எழுத விரும்பினால் இந்தத் தடை இருக்கப்போவதில்லை. அதனைப் பெருக்கினால் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தமிழில் கற்பித்தலும் தேர்வு எழுதுதலும் தீவிரமாகும். அதைச் செய்ய மாணவர்களும் தயாராக இல்லை. அவர்களுக்காக மறைமுகாமகக் குரல் கொடுக்கும் ஆசிரியர்களும் தயாராக இல்லை. ஆங்கில வழிப்பாடங்களைத் தமிழில் நடத்தும் ஆசிரியர்களிடம் இதை எதிர்பார்க்கவும் முடியாது.


இந்தச் சிக்கல் ஒரு பல்கலைக்கழகத்தின் தேர்வுச் சிக்கல் என்று நாம் புரிந்துகொண்டால் நாம் அறியாமையில் இருக்கிறோம் என்பது பொருள். இது தமிழ்நாட்டின் கல்விப்பிரச்சினையோடு தொடர்புடையது. நமக்கு ஆங்கிலம் வேண்டும் என்று திட்டங்கள் தீட்டிக்கொண்டு ஆங்கில வழிக்கல்வியைத் தருவதாக அரசும், பல்கலைக்கழகங்களும் சொல்கின்றன. ஆனால் உண்மையில் தமிழக மாணவர்களின் மொழித்திறன் அழிப்புதான் தீவிரமாக நடக்கிறது.


தமிழகத்தில் பள்ளிக் கல்விக்குப் பிந்திய பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு போன்ற உயர்பட்டங்கள் பெரும்பாலும் ஆங்கிலவழிப் பாடங்களாகவே உள்ளன. ஒரு சில கல்லூரிகளில் அதுவும் அரசுக் கல்லூரிகளில் மட்டுமே தமிழ் வழிக்கல்வியாக கலையியல் பட்டங்கள் கற்பிக்கப்படுகின்றன. பட்டமேற்படிப்புக் கல்வி என்பது ஏறத்தாழ தொண்ணூறு சதவீதம் ஆங்கில வழிக்கல்வி தான். மாணவர்களுக்குத் தரப்படும் சான்றிதழ்களில் படிப்பு மொழி என்ற இடத்தில் ஆங்கில வழி எனக் குறிக்கப் படுவதையே அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் அவர்கள் தேர்வு எழுதும்முறை தமிழ் வழியாக இருக்கிறது என்பதுதான் நடைமுறை உண்மை.

தமிழகப் பல்கலைக்கழகங்கள் பெரும்பாலானவற்றில் பட்ட வகுப்பு பயிலும் மாணவர்களில் 90 சதவீதம்பேர் தமிழில் தான் தேர்வுகளை எழுதுகிறார்கள். ஆங்கில வழிக் கல்வி பயிலும் முதுநிலைப் பட்ட வகுப்புத் தாள்கள் கூடத் தமிழில் தான் எழுதப்படுகின்றன. சமூக அறிவியல் பாடங்களான வரலாறு, சமூகவியல், பொருளாதாரம், மானுடவியல், தொடர்பியல், வணிகவியல், போன்ற பாடங்கள் மிகக் குறைவான சதவீதத்தினரால் தமிழில் எழுதப்பட்ட நிலை சென்ற நூற்றாண்டில் கடைசி ஆண்டுகளிலேயே தொடங்கி விட்டன. இப்போது கலைப் பாடங்கள் மட்டுமல்ல அறிவியல் பாடங்களும் கூடத் தமிழில்தான் எழுதப்படுகின்றன. தேர்வுத் தாள்களைத் திருத்தும் ஆசிரியர்களைக் கேட்டால் மறுக்கப்போவதில்லை. ஏனென்றால் அவர்களே வகுப்பறைகளில் இரண்டு மொழியின் வழியாகவே கற்பிக்கின்றனர்

தங்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களில் ஆங்கில வழிக் கல்வி எனக் குறிக்கப்படுவதை விரும்பும் மாணாக்கர்கள் தேர்வுகளைத் தமிழில் எழுதும் நிலை தான் இருக்கிறது என்பது ஒருவித நகைமுரண் தான் என்றாலும் உண்மை நிலை அதுதான். ஒட்டு மொத்த வினாக்களுக்கும் முழுமையாகத் தமிழில் எழுதினால் கூடப் பரவாயில்லை என்று மன்னிக்கலாம். ஒரே கேள்வியில் பாதி ஆங்கிலமும் பாதி தமிழும் கலந்த மொழி நடையில் இருக்கிறது என்பதைப் பல ஆசிரியர்கள் வேதனையுடன் பேசிக் கொள்வதைக் கேட்டிருக்கிறேன் . ஒரே வாக்கியத்திலேயே கூடப் பாதித் தமிழும் பாதி ஆங்கிலமும் கலந்து எழுதும் நிலையும் இருக்கிறது.

 

தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் பேசும் ஆங்கிலம் கலந்த தமிழ்ப் பேச்சு நடை உயர்கல்வி கற்கும் மாணவர்களின் தேர்வுத்தாள்களின் மொழி நடையாக இருப்பது வேதனையான ஒன்று. எந்தப் பல்கலைக் கழகமும் அதன் எதிர்மறை விளைவுகளைப் பற்றிக் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும்; தமிழ் வழியில் கல்வி கற்கும் மாணவர் தமிழில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும் என வலியுறுத்தும் விதிகள் இங்கு நடைமுறையில் இல்லை. இருந்தாலும் கறாராகப் பின்பற்றப்படுவதில்லை. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இப்போது அதை வலியுறுத்துகிறது. பின்பற்றவேண்டுமென்கிறது

இருக்கும் அந்த விதியைக் கறாராகப் பின்பற்றினால் மாணாக்கர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படும் என்பது முன் வைக்கப்படும் வாதமாக இருக்கிறது.தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படும் என்பது ஒருவிதத்தில் உண்மை தான். அதிகப்படியான சதவீதத்தில் தேர்ச்சி பெற்று வெளியேறாத நிலையில் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகமாகக் கூடாது என்ற அக்கறை புரிந்து கொள்ளக் கூடியதே. அந்த எண்ணிக்கைப் பெருக்கம் சமூகத்தில் பிணக்குகளை உருவாக்கும் என்பதும் கூட உண்மைதான். ஆனால் தேர்ச்சி பெற்று வாங்கிய படிப்பின் சாரத்தை எந்த ஒரு மொழியிலும் வெளிப்படுத்த இயலாத மாணவராக அவர்கள் வெளியேறுகிறார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அப்படி வெளியேறி வேலை தேடி அலையும் பட்டதாரிகளாலும் சமூகப் பிணக்குகள் உருவாகாது எனச் சொல்ல முடியுமா.? நிகழ்கால இந்தியாவின் முக்கியப் பிரச்சினைகளில் இதுதானே தலையான பிரச்சினை.

ஆங்கில வழியில் பாடங்களைப் படிக்கும் ஒரு மாணவர் பள்ளிக் கல்வியில் பன்னிரண்டு ஆண்டுகள் தாய் மொழியையும் ஒரு பாடமாகவும் படிக்கிறார். ஆனால் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னும் அவர்கள் நினைக்கிற ஒரு விசயத்தை அல்லது கற்ற அறிவியல் அல்லது சமூக அறிவியல் பாடங்களைத் தமிழில் சொல்லவோ அல்லது எழுதவோ இயலாதவராகவே வெளியேறுகிறார்கள். இதே நிலை தான் தமிழ் வழிக் கல்வி கற்கும் மாணாக்கர்களிடமும் இருக்கிறது.பாடங்கள் அனைத்தையும் தமிழ் வழியில் படிக்கும் அவர்கள் ஆங்கிலத்தை ஒரு பாடமாகப் பன்னிரண்டு ஆண்டுகள் படித்த பின்பும் அந்த மொழியைத் தொடர்பு மொழியாகக் கூடப் பயன் படுத்த முடியாத நிலைதான் இருக்கிறது.

  

இந்தப் பிரச்சினை வெறும் மொழிப்பிரச்சினை என்ற எல்லையைத் தாண்டி தரமான கல்வியைத் தரமுடியாமல் தவிக்கும் உயர்கல்வியின் தலையாய பிரச்சினையாகக் கவனிக்கப்பட வேண்டும். பாடங்களைப் பயிலும் மொழி எதுவாக இருக்கிறதோ அதுவே தேர்வுகள் எழுதும் மொழியாகவும் இருக்க வேண்டும் என்பதைப் பயிற்று மொழிப் பிரச்சினையாகப் பார்க்காமல், மொழிக்கல்வியின் பிரச்சினையாகவும் கவனிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்