அடையாளப்பிரதிகளும் அடையாளம் தேடும் முகங்களும்……



· பல்வேறு மாநிலங்களின் பாராம்பரியக் கலைகளிலிருந்து


உருவாக்கி, இந்திய நாடகம் (Indian Theatre) ஒன்றைக் கட்டமைத்து விட முடியுமா….?
இந்தியா பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட துணைக் கண்டம் என்பதை மறுதலித்து, ‘ இந்தியா ஒரு நாடு’ எனப் பேசுகிறவர்களும் நம்புகிறவர்களும், ‘இந்திய நாடகத்தை’ உருவாக்கி விடலாம் என நம்புகின்றனர்.ஆனால் தேசிய இனங்களின் சுய நிர்ணயம், அவற்றின் பண்பாட்டுத் தனித் தன்மைகள் ஆகியவற்றில் நம்பிக்கையுடையவர்கள் மொழிவாரி நாடகத்தை (Language or Vernacular theatre) முன்னிறுத்துகின்றனர். அவர்கள் தங்கள் மாநில அடையாளங்கள் கொண்ட அரங்கைத் தேடுகின்றனர். தமிழ் அடையாளங்கள் கொண்ட ஒரு அரங்கை - தமிழ் நாடகத்தை (Tamil theatre) கட்டமைக்க முயல்கின்றனர். இவ்விரு முயற்சியும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இவ்விரண்டுமே சாத்தியமா என்றால் பதில் சாத்தியமில்லை என்பது தான்.

இந்திய நாடகம் ஒன்று உருவாக்கப்பட்டுவிட்டது என்று வைத்துக் கொண்டால், அதில் தமிழகத்தின் கூத்து, கேரளத்தின் கதகளி, கர்நாடகத்தின் யட்சகானம், உத்தரபிரதேசத்தின் நௌதங்கி , பீகாரின் தமாஸா, வங்காளத்தின் ஜாத்ரா, பஞ்சாபின் பங்காரா எனப் பலவற்றின் பாகங்கள் அல்லது கூறுகள் இணைக்கப்பட்டதாக இருக்கும். ஒருவிதத்தில் பலவண்ணத்துணிகளை இணைத்து ஒட்டுப் போட்ட சட்டை போல. அதே போல தமிழ் நாடகமும், வடமாவட்டங்களின் தெருக்கூத்து கொஞ்சம், தென்மாவட்டங்களின் கணியான் கூத்து, தேவராட்டம், கரகாட்டம், இன்னும் தஞ்சாவூர்ப் பகுதியின் கூத்து, பொய்க்கால் குதிரை, பொம்மலாட்டம் ஆகியனவற்றிலிருந்து கொஞ்சம், நீலகிரி, ஏற்காடு, பாபநாச மலைகளில் வாழும் பழங்குடிகளின் நடனங்களிலிருந்து கொஞ்சம் என எடுத்து தமிழ் நாடகத்தை உருவாக்கலாம். இதுவும் இன்னொரு ஒட்டுப் போட்ட சட்டை தான்.

இப்படி ஒட்டுப் போட்டாலும் அவற்றின் சாராம்சமாகப் பாட்டும், நடனமும் இருப்பதை நாம் அறிவோம். பாட்டும் நடனமும் தமிழகப் பாரம்பரியக் கலைகளிலும் மட்டுமல்ல, எல்¢லா மாநிலப் பாரம்பரியக் கலைகளிலும் இன்னும் சொல்லப் போனால் கீழ்த்திசை நாடுகளின் ( Oriental ) பாரம்பரியக் கலைகள் எல்லாவற்றிலும் சாராம்சமாக இருக்கின்றன.
மேற்கத்திய அறிவுலகமும் கலையுலகமும் புத்தம் புதிய இயக்கங்களை ( isms) நவீனம் என்ற பெயரில் முன்னிறுத்தி எல்லாவற்றையும் எதிர்கொள்வதும் விளக்குவதுமாக இருக்கும் பொழுது, நாம் ஏன் பாரம்பரியத்தில் நவீனத்தைத் தேடுகிறோம்.

மேற்கத்திய அறிவுலகமும் கலையுலகமும் மிகையதார்த்தம் ( Surrealism), குறியீட்டியல் (Symbalism) , அபத்த நாடகங்கள் (Absurd theatre ) குரூர அரங்கு ( Theatre of cruelty) , காவியபாணி அரங்கு ( Epic theatre) சூழல் அரங்கு ( Environmental theatre) போன்றவற்றை நவீன நாடகங்களை முன்னிறுத்தியுள்ளது. பல்வேறு கலைப்படைப்புகளிலும் வெளிப்பட்ட இவ்வியக்கங்களின் சாராம்சம் ஒன்றுதான். அது யதார்த்தத்தை நிராகரித்து, யதார்த்தமல்லாததை ( Non-realistic) முன்னிறுத்துவதன் மூலம், யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளச் செய்வது என்கிற சாராம்சம் தான் அவ்வியக்கங்களின் அடிப்படை.

நமது பாரம்பரியக் கலைகளும் கூட யதார்த்தத்தை முன்னிறுத்துவதில்லை. யதார்த்தமற்ற பாணியே ( Non realistic style) இவற்றின் தன்மையும். இந்தக் காரணத்திற்காக மட்டுமே நாம் நம் நவீனத்தை நம் பாரம்பரியத்தில் தேடுகிறோம் என்பதில்லை. இதற்கு பின்னால் ஒரு அரசியல் பிரச்சினையும் இருக்கிறது. அந்த அரசியல் , பின் காலனிய அரசியல் ( Post Colonial Politics) என அழைக்கப்படும் அரசியல் ஆகும். இந்த அரசியலும் அதன் ஊடாகக் கலை இலக்கியங்களை விளங்கிக் கொள்ள முயலும் பார்வையும் விடுதலை அடைந்த எல்லாக் காலனி நாடுகளிலும் வெளிப்படும் பார்வைகள் தான்.

காலனியாக இருந்து விடுதலை அடைந்த நாட்டு மக்களிடம் அவர்களின் தேச அடையாளத்தைத் தேடுதல், இன அடையாளத்தைத் தேடுதல், மொழி அடையாளத்தைத் தேடுதல் எனப் பலவகையான அடையாளங்களைத் தேடும் கருத்தோட்டங்கள் செல்வாக்குப் பெறுதல் என்பது இயல்பான ஒன்றுதான். அடையாளம் தேடும் அரசியல் தவிர்க்க முடியாதது. ஆனால் அதே நேரத்தில் மிகுந்த கவனமாகவும் தேர்வு செய்ய வேண்டிய அரசியலும் ஆகும். தேசம், இனம், மொழி , மதம் என்ற பெயரால் சுமத்தப்படும் அடையாளங்கள் நாளடைவில் பெரும் தடைகளாக மாறி, மாற்றுச் சிந்தனைகளைப் பற்றி யோசிக்க விடாமல் செய்துவிடும் ஆபத்துக்கள் கொண்டவை. தனிமனிதனாகவும் புதிய சிந்தனைகளை ஏற்பவனாகவும் வேறுபாடுகளற்ற புதிய உலகத்தைக் கனவு காண்பவனாகவும் விளங்க வேண்டிய மனித உயிரியைப் பாசிச மனோபாவத்தில் தள்ளிவிடும் ஆபத்துக் கொண்ட இவ்வடையாளங்களின் எல்லைகளையும் வீச்சுக்களையும் அறிந்தே நிராகரிப்பதில் தான் நவீன மனிதனின் சிந்தனையும் செயல்பாடுகளும் வெற்றி பெறும்.

நீண்ட காலம் - ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகள் காலனிநாட்டுக் குடிமக்களாக இருந்த இந்தியர்கள் தங்களின் நாடகவடிவமாக, காலனியாக ஆவதற்கு முன்பு இருந்த பாரம்பரியக் கலைகளிலிருந்து உருவாக்கப்பட்ட , நாடக வடிவத்தை நவீன நாடகமாக அடையாளப்படுத்த முயல்கின்றனர். இந்த முயற்சியின் நோக்கமும் தத்துவமும் புரிந்து கொள்ளக்கூடியன தான். ஆனால் நடைமுறையில் நிகழ்காலத்தின் தேவைகளையும் சிந்தனைப் போக்குகளையும் புரிந்து கொண்டவை அல்ல என்று உறுதியாகச் சொல்லலாம்.

கலை இலக்கியங்களில் ‘இந்திய அடையாளம்‘ நிச்சயம் சாத்தியமில்லை என்று உரத்துச் சொல்லி விட்டு, தமிழ் அடையாளமும் சாத்தியமில்லை என்று தான் சொல்லத் தோன்று கிறது என்ற போதிலும், ‘தேசம் சார்ந்து, இனம் சார்ந்து, மொழி சார்ந்து அடையாளங்கள் உள்ளன; கலை இலக்கியங்களில் அவற்றைக் கண்டடைய வேண்டும்; நமது புத்தாக்கங்களில் அவற்றைப் பயன்படுத்த வேண்டும்; அதன் மூலமே எல்லா விடுதலைகளும் சாத்தியமாகும்‘ எனக்கூறும் - கூச்சல் எழுப்பும் - கூட்டத்தின் மீது கோபம் கொள்வதும் இயலாது. ‘சாத்தியங்கள் இல்லை‘ என்று தெரிந்த போதிலும் ‘தேடுதலில் ஒரு அர்த்தமும் இல்லை‘ என்று சொல்லி விடவும் முடியாது. கொஞ்சம் குழப்பம் தான். இந்தக் குழப்பத்தின் பின்னணியில் ஒரு நிர்ப்பந்தம் - மிகப்பெரிய அச்சுறுத்தல் இருப்பது மட்டும் புரிகிறது.

அழிக்கப்படும் அடையாளம்

கலை, இலக்கியங்களின் வெளிப்பாட்டு ஊடகம் எழுத்து, காகிதம் அல்லது கென்வாஸ், அரங்கம் என்றிருந்த நிலைமாறி ஒட்டு மொத்தமும் சொல்லுலாய்டுப் பிம்பங்களாக மாறி வருகின்றன. நிறுத்தி நிதானமாகப் பார்த்த, படித்த, கேட்ட, ரசித்த நம் விருப்பங்களைப் புறந்தள்ளிவிட்டு செல்லுலாய்டுப் பிம்பங்கள், என் சாப்பாட்டுக் கூடத்திற்கும், படுக்கையறைக்கும் வந்து உறவாடுகின்றன. ஒவ்வொரு நாளும் மேற்கத்திய, ஆப்பிரிக்க இசைக்குழுக்களோடு ஆடுகிறேன். உலகப்புகழ் பெற்ற ஓவியக் கூடங்களிலும் நாடக அரங்குகளிலும் பிரவேசிக்கிறேன். ஸ்பீல் பொ்க்கின் அறிவியல் பூதங்களோடு பேசுகிறேன். கச்சைகட்டிக் கொள்ளாத பெண்களின் குலுங்குதலில் பரவசம் கொள்கிறேன் உலகத் தரமான சினிமாக்காரர்களோடு பரிச்சயம் கொள்கிறேன். பூமிப்பரப்பு மொத்தமும் செ.மீ நீளம் x செ. மீ அகலம் கொ்ணட சின்னத்திரைக்குள் அடங்கிவிட்டது சின்னத்திரை எனக்கு உலக உன்னதங்களை - கலை வெளிப்பாடுகளை - இலக்கிய அனுபவத்தைத் தருவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது என்று நாம் நினைத்துக் கொண்டால் அது நம் முட்டாள்தனம்.

சின்னத்திரையின் நோக்கம் அது மட்டும் தானா? இல்லை நானும் பாரிஸ் நகரத்து எட்டாவது மாடியில் விஸ்தாரமான அடுக்ககத்தில் வசிக்கும் சீமாட்டியும். ஒரே பரப்பிற்குள் வர வேண்டும். ஒரே மாதிரி பற்பசை உபயோகித்துப் பல் துலக்க வேண்டும். ஒரே மாதிரி ஜட்டி போட்டுக் கொள்ள வேண்டும்; குளிர்பானம் அருந்திக் குதூகலிக்க வேண்டும். மொத்தத்தில் உலகம் ஒரே சந்தையாக மாற வேண்டும்; பன்னாட்டுக் கம்பெனிகளின் உற்பத்திப் பொருட்கள் விற்பனையாக வேண்டும்; லாபம் குவிய வேண்டும் என்பதும்தான். பொருளாதாரவயப்பட்ட மூன்று உலகக் கோட்பாடுகள் மலையேறி விட்டன. எல்லாம் ஒரே உலகம் தான். இது தான் நோக்கம் இதற்கேற்பத் தகவமைப்பதற்குச் சரியான ஆயுதம் தான் தகவல்தொடா்பு சாதனங்கள்; செயற்கைக் கோள் இணைப்புகள்; விளம்பரதாரா் உதவிகள் என்பன எல்லாம். விளம்பர யுத்தத்தில் நம்மை மூழ்கடிக்கப் பண்ணாட்டுக் கம்பெனிகள் முழுச்சாய் இறங்கி விட்டன. அதன் வெளிப்பாடு இருபது நமிடம் விளம்பரங்கள்; முப்பது நிமிடங்கள் நிகழ்ச்சிகள் இந்த ஒற்றை முகப் போக்கிற்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டுமா? வேண்டாமா? என்று கேட்டால் ‘வேண்டும்‘ என்று உடனே பதில் சொல்லத் தோன்றுகிறது. ‘செய்ய முடியுமா?‘ என்று கேட்டால் சட்டென்று பதில் எதுவும் தோன்றவில்லை.

அரசியல் பொருளாதாரத் தளங்களில் எந்தவொரு நாடும், இனமும் சுயநிர்ணயத் தன்மையைக் காப்பாற்றிக் கொள்ளல் இயலாது என்ற நவகாலனியச் சூழலில் கலை. இலக்கிய, கலாச்சாரத்தளங்களில் நமது அடையாளங்களைத் தேடுவதும் முன்னிறுத்துவதும் ‘தகவல் ஏகாதிபத்தியத்தின் கொடூரப்பிடியிலிருந்து தப்புவதற்கான ஒரு முயற்சியாகவே தோன்றுகிறது. என்னுடைய அடையாளம் இது என்று உணரும் பொழுது என் மீது படரும் இன்னொன்றை ‘அந்நியமானது‘ என்ற உணர முடியுமல்லவா…? இந்த ரீதியில் தான் தமிழ் அடையாளங்களைத் தேடும் முயற்சிகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல், பொருளாதாரத் தளங்களில் தனது இருப்பு கேள்விக்குள்ளாகும் பொழுதெல்லாம் மனிதா்கள் கலாசாரத் தளத்தில் தங்களது தனித்துவமான அடையாளங்களை முன்னிறுத்துவது வரலாறு நமக்குச் சொல்லித் தந்துள்ள பாடம்.

அடையாளம் : சில ஆபத்துகள்

கலை கலைக்காகவா…? கலை வாழ்க்கைக்காகவா? என்று ஏதாவது ஒரு முகாமிற்குள் அடையாளம் தேடிக் கொள்ளும்படி வற்புறுத்திய நிர்ப்பந்தம் தொலைந்துவிட்டது. உலகில் இருந்த எதிரெதிர் முகாம்கள் இல்லாமல் போய் விட்டதன் விளைவு இது. இப்பொழுதோ, ‘எனக்கு வாழ வழி சொல்லுங்கள்‘ என்று கேட்பதற்குப் பதிலாக, “நான் இருக்கிறேன் என் அடையாளங்கள் இவை என்று காட்ட வேண்டிய நிர்ப்பந்தம், அந்த நிர்ப்பந்தத்தை நாம் விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும் தான். அதன் மூலம் அழுத்தி முகமிழக்கச் செய்யும் முயற்சிகள் அனைத்தையும் எதிர்த்திடத் துணிய வேண்டும்.

இந்தியாவில் தேசிய இன உரிமைகளை மறுக்கும் தேசியவாதிகளுக்கு - தேசியவாதங்களுக்கு மாற்றாக முன் வைக்கப்படும். தமிழ் அடையாளங்களைத் தேடும் போக்கு சாராம்சத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்புணா்வு கொண்டது. இதைப் புரிந்து கொள்ளும் நாம். நம் முன் வைக்கப்பட்ட தமிழ் அடையாளக் கூறுகளின் தன்மைகளையும் மறுபரிசீலனை செய்தாக வேண்டும். தமிழ்ப் பண்பாட்டு வாழ்வில் முன்னிறுத்தப்படும் சைவத்தமிழ் மதச்சடங்கு, ‘ஹிந்து‘ மத மீட்புவாதிகளின் அடிப்படை வாதத்திலிருந்து சற்றும் விலகியது அல்ல. அதை விடவும் ஆபத்தானதாகவும் பலநேரங்களில் தோன்றுகிறது. ‘சாதி‘ எனும் சனாதன முறையில் கட்டியமைத்துக் கொண்டுள்ள தனது ஆதிக்கக் கோட்டை தகா்ந்து விடாமல் காக்க, சம்ஸ்கிருதத்தைப் போலவே தமிழையும் புனிதமொழியாக தனித்தமிழாக மாற்ற இந்தக் கூட்டம் முயன்றது. அதனாலேயே தமிழுக்கு ஒரு பொது வடிவத்தை (Standard Form) உருவாக்க முனைகிறது. அம்முயற்சியின் முடிவில், வட்டார மொழியின் அழகு சிதைக்கப்படும். அதில் எழுதப்படும் கதைகள் நிராகரிக்கப்படும் வட்டாரமொழியில் பேசும் நாட்டார்கலைகள் கொச்சையானவை. அசிங்கமானவை எனக் கூறப்படும். அதில் எழுதப்படும் கதைகள் நிராகரிக்கப்படும். அதில் தோ்ச்சி பெற்ற, ரசிக்கின்ற தலித்துகளும், உழைக்கின்ற பெரும்பான்மைப் பிற்படுத்தப்பட்டவா்களும் ஆபாசமானவா்களாகக் கருதப்படுவார்கள். 

பழைமை சிறப்பானது; மரபு போற்றப்பட வேண்டியது; இலக்கணம் பின்பற்றப் பட வேண்டியது என ஆராதிக்கும் இந்தக் கூட்டம், ‘புதுமை‘ மோசம்; ‘மரபற்றவை‘ ஒழுங்கீனம்; ‘மாற்றம்‘ தடை செய்யப்பட வேண்டியது என மாற்றீடுகளை முன் வைக்கும் சமகாலப் புறநிலைகளைக் கண்டு கொள்ளாமல், பொற்காலக் கனவுகளில் மிதந்து கொண்டிருக்கும். இந்தக் கூட்டம் தன் வா்க்க நலனை மட்டுமே பெரிதாக எண்ணக் கூடியது. அது பாதிக்கப்படாத சூழலில் பெரும்பான்மைத் தமிழா்களை விட்டுவிட்டு மைய் நீரோட்டத்தோடு கலந்து விடவும் தயாரானது. எண்ணிக்கையளவில் இந்தக் கூட்டம் சிறுபான்மையானது. உடல் உழைப்பிலிருந்து அந்நியமாகி விட்ட தமிழா்கள். மத்திய நிலப்பிரபுத்துவ காலத்தில் எஜமானா்களாக இருந்த தமிழா்கள். அந்தப் பண்பாட்டை - பார்ப்பனீயப் பண்பாட்டைப் பெருமளவில் உள்வாங்கிக் கொண்ட சைவப் பண்பாட்டை உயா்த்திப் பிடிப்பவா்கள். அவா்கள் முன் வைத்த அடையாளங்கள், தமிழா்களின் ஒட்டு மொத்த அடையாளங்கள் அல்ல என்பதை அவா்கள் உணா்ந்தாக வேண்டும்; உணா்த்தியாக வேண்டும். அதற்காக புதிய உரையாடல்களைத் தொடங்கியாக வேண்டும் அதற்கு ‘தமிழ்மொழி‘ வேண்டும்.

‘தமிழ அடையாளங்கள்‘ என்பவை எல்லாவற்றையும் அங்கீகரிப்பதிலிருந்தே உருவாகும். கலை, இலக்கியங்களுக்குப் புறம்பானவை என ஒதுக்கப்பட்ட எல்லாவற்றையும் அங்கீகரிப்பதன் மூலம்தான் தமிழ் அடையாளங்களைக் கண்டடைய முடியும் வட்டாரத் தமிழை அங்கீகரிப்பதன் மூலம் அப்பகுதித் தமிழனின் பிரச்சினைகள் கவனிக்கப்படுகின்றன என்று அா்த்தம். ஒவ்வொரு மாவட்ட நாட்டார் கலைகளும் அப்படியே. தமிழா்களின் பாரம்பரியமாக உணரப்படும் பொழுது, அவர்களது உரிமை காக்கப்பட்டதாக உணர்வார்கள். பெண்களின் வெளிப்பாடுகள் கலை, இலக்கியங்களில் அங்கீகரிக்கப்படும்பொழுதும், இடம்பெற அனுமதிக்கப்படும் பொழுதும் அவா்களும் மனித உயிரியாக தலைப்படுவார்கள். சாதீய வேறுபாடுகள் இருக்கின்றன என்பதை ஒத்துக் கொண்டாக வேண்டும். உருவாக்கப்பட்டு, ஒடுக்குவதற்கான கருவியாக சாதீய அமைப்பு மாறியுள்ளன என்பதை உணா்ந்தாக வேண்டும். பெருமபான்மையான ஒடுக்கப்பட்டவா்களின், பிற்படுத்தப் பட்டவா்களின் வெளிப்பாடும் வாழ்முறைகளும் ஆபாசமானவை அல்ல, கலை இலக்கியத் தகுதியுடையவைதான் என்கிற கருத்தாக்கம் உருவாகும்பொழுது தான் ‘சாதிகள்‘ குறித்த தமிழனின் கண்ணோட்டம் மாறியுள்ளது என்பதை உணரமுடியும்.

இதையெல்லாம் அங்கீகரிக்கும் சிலரிடம், ‘இவையெல்லாம் மேம்படுத்தப்பட வேண்டியவை; ஒதுக்கப்படவேண்டிய பகுதிகளை ஒதுக்கி விட்டால் சரியான ஒன்று கிடைத்து விடும்‘ என்ற ஒரு பார்வை இருக்கிறது. இத்தகையதொரு அணுகுமுறையும் அடிப்படையில் கோளாறானதே ஆகும். ஒரு குறிப்பிட்ட குழுவின் சாதியின் அடையாளங்கள் மட்டுமே சரியானவை என்பதன் இன்னொரு வடிவமே அது. அத்தகைய அணுகுமுறை மற்றவற்றை அங்கீகரிக்காது. தன் அடையாளத்தை மற்றவா்கள் மேல் திணிக்கவே முயலும். திணிக்க முயலும் எதையும் தமிழா்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தமிழன் பெயரால் கூட எதையும் இங்கே திணித்துவிட முடியாது. அதுதான் தமிழா்களின் அடையாளம்.

அரங்க அடையாளம் : சில பரிமாணங்கள்

தமிழ் அரங்கியலில் ‘அடையாளந்தேடும்‘ பின்னணியில் இருந்த ஒரு நிகழ்வாக மைய அரசின் சங்கீத நாடக அகாடமி நடத்திய மண்டல விழாக்களும், தேசிய விழாக்களும் இருந்தன என்பது மறந்துவிட முடியாத உண்மை. 1984 தொடங்கி பத்தாண்டுகளில் பதின்மூன்று நாடகங்கள் மண்டல விழாக்களில் கலந்து கொண்டுள்ளன. அவற்றுள் மு. ராமசுவாமி இயக்கிய துா்க்கிர அவலம் (1984) ரா. ராஜு இயக்கிய நந்தன் கதை (1986) வ. ஆறுமுகத்தின் கருஞ்சுழி (1990) ஆகிய மூன்று தேசிய நாடக விழாக்களுக்கும் தோ்வு பெற்றன. மீதமுள்ள பத்து நாடகங்களும் மண்டல விழாக்களோடு நின்று போயின.

இப்பதின்மூன்று நாடகங்களையும் ‘நவீனநாடகம்‘ என்று பேசியதை விடவும் ‘தமிழ் அடையாளங்கள் கொண்ட நாடகங்கள் என்றே பலரும் பேசியதை கேட்டுள்ளேன். மண்டல விழாக்களை யொட்டி, சங்கீத நாடக அகாடமி நடத்தும் கருத்தரங்குகளில் இந்த அடிப்படையிலேயே விவாதங்கள் நடைபெற்றன. அத்தகைய தமிழ் அடையாளங்கள் என்று சொல்லப்பட்டவை பெரும்பாலும் பாரம்பரியக்கலை வடிவங்களின் கூறுகள்தான். தெருக்கூத்து. தேவராட்டம், கணியான்கூத்து, பறையாட்டம், பொய்க்கால் குதிரை, சூரசம்காரம் போன்ற பாரம்பரிய அரங்க வடிவங்களும், சடங்கு சார்ந்த ஆட்டங்களுமே இதுவரை நாடகக்காரா்களால் தமிழனின் அடையாளக் கூறுகளாக அறியப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ் அடையாளங்களாக இவை அறியப்பட்டாலும் பயன்படுத்திய தன்மையில் நான்கு போக்குகள் இருப்பதாகத் தெரிகிறது. இளைய பத்மநாதன் எழுதி சென்னைப் பல்கலை அரங்கிற்காக மங்கையினால் இயக்கப்பட்ட(1991) தீனிப்போர் ஒரு போக்கின் தனித்த நாடகம். அது ஒரு புதிய சம்காரக் கூத்து என்று கூடச் சொல்லலாம்.

‘தீனிப்போர்‘ சகலவிதமான போராட்டங்களும் ‘உணவு‘ க்கானதாக இருக்கிறது. அப்படி இருக்கும்பொழுது ஏற்படும் அணிச் சோ்க்கையும், போராட்ட முடியும் சரியான தீா்வை நோக்கிச் செல்லும் எனப் பேசுகிறது. காடு, நாடு - சிங்களப்பகுதி, தமிழா் பகுதி - எனப் பிரதேசங்களைக் காரணங்களாக்கி நடக்கும் போராட்டம், தாவரம் - மாமிசம் என உணவுமுறை சார்ந்ததாக மாறுவதாக நாடகம் கோடிட்டு காட்டுகிறது. இதையே இந்தியச் சூழலில் மதம் சார்ந்த போராட்டங்களோடு, உலக அளவில் ஏகாதிபத்திய, காலனிய போராட்டங்களோடு தொடா்புபடுத்தலாம்தான். ஏனென்றால் எதற்கும் தீா்மானமான அடையாளங்களோ, விவரமான விவரணைகளோ நாடகத்தில் குறிப்புகளாகக் கூட இல்லை. நாடக ஆசிரியா், இலங்கைத் தமிழா் என்ற தகவலும், ‘சுண்டைக்காய் நாட்டிற்கு சுதந்திர எண்ணமோ‘ என்ற ஒரு வரியுமே, தமிழ், சிங்களம் என்ற அடையாளங்களுக்கு இட்டுச் செல்கிறது. நாடகத்தின் மையக்கருத்து நவீன அரசியல் நிலைமைகளை அடையாளம் காட்டுகிறது என்றாலும், தயாரிப்பு வடிவம் அதற்கு உதவவில்லை.

கூத்தின் சகல அம்சங்களையும், கதை சொல்லும் முறை, கதைப்பின்னல், நடன அசைவுகள், அடவுகள், இசைக்கூறுகள் ஆகிய எல்லா அம்சங்களையும் எடுத்துக் கொள்வதற்கேற்ற ஒரு ஊடகமாக நாடகப்பிரதி (Dramatic Text) கொள்ளப்பட்டுள்ளது. காடு, நாடு, குதிரை தூது, போர் வெண்டாம் என்ற வாதம், போர் என்ற நிகழ்ச்சி வரிசை, கௌரவா் சபை, பாண்டவா் சபை, கண்ணன் தூது, அா்ச்சுனன் போர் வேண்டாமெனப் பேசுதல், கீதோபதேசத்திற்குப் பின் போர் மூளுதல் என்ற மகாபாரத நிகழ்ச்சிகளையே நினைவூட்டுகிறது. இதனால் புதுநாடகமாக உருப்பெறாமல் ஒரு புதிய கூத்தாகவே வடிவம் கொண்டுள்ளது. கிடைநிலை அசைவுகள் (Horizontal Movements) கொண்ட கூத்தையும், மேல்நோக்கிய நகா்வுகள் (Vertical Movements) கொண்ட சூரசம்காரத்தையும் இணைத்து உருவாக்கியுள்ள தீனிப்போரை ‘புதிய சூரசம்காரக் கூத்து‘ என்றே சொல்ல வேண்டும். சூரசம்காரத்தைக் கொண்டு உருவாக்கிய போர்க்களக்காட்சி பிரமிப்பூட்டும் ஒரு உபாயம் தான்.
இன்னொரு போக்கு ரா. ராஜு இயக்கிய நாடகங்கள். நவீனத் தமிழ்நாடக ஆசிரியா்களுள் முன்னோடியான இந்திரா பார்த்தசாரதியின் ஒருசில நாடகங்களை அவா் இயக்கியுள்ளார். இ.பா. தம் நாடகங்களில் தமிழ் அடையாளம் என்ற ரீதியில் அல்லாமல் நாடக உள் நிகழ்வாகவே பாரம்பரியக் கூறுகளுக்கு இடம் தந்துள்ளார். நந்தன் கதையில் ‘பறை‘ யும், சாஸ்தீரிய நடனமும், கொங்கைத் தீயில், மாதவியின் நடனங்களும், தெய்வம் ஏறிய பெண், மதுரைக்கு எரியூட்டல் போன்ற பல இடங்களில் நடன ரூபங்களுக்கு பிரதி வாய்ப்பளித்துள்ளது. அந்த வாய்ப்பை நாடக இயக்குநா் தம் விருப்பம் போல் பயன்படுத்தியுள்ளார். நாடகத்தின் உள்நிகழ்வாகவே பாரம்பரிய நடனக்கூறுகளை அமைத்து நாடகம் தயாரிக்கும் ராசுவின் பாணியை மற்றவா்கள் பின்பற்றவில்லை. பின்பற்றுவதற்கேற்ற நாடகங்களை அவா்கள் தோ்வு செய்யவில்லை.

மூன்றாவது போக்கு கூத்துப்பட்டறையின் பாணி, நவீன மனிதனின் மனத்தைப் பேசும் ந. முத்துச்சாமியின் நாடகங்களே கூத்துப் பட்டறையில் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் இதுவரை, முத்துச்சாமியின் மையக்கருவை பார்வையாளனுக்குத் தரும் ஊடகமாக நாடகத் தயாரிப்புகள் அமையவில்லை என்றே தோன்றுகிறது. ந. முத்துச்சாமியின் வார்த்தைகளுக்கான அா்த்தத்தைத் தரவும், அவை உண்டாக்கும் படிமங்களை வெளிக் கொணரவும் பாரம்பரியக் கலைக்கூறுகளால் இயலவில்லை என்றே தோன்றுகிறத. கூத்தின் பல்வேறு அம்சங்களைச் சிதைத்தும் சோ்த்தும் பயன்படுத்தும்பொழுது கூத்து அம்சங்களும் வீரியமிழந்து விடுகின்றன. ந. முத்துச்சாமியின் வார்த்தைகளும் வேறு தளத்திற்கு மாறிவிடுகின்றன. விளைவு தகவல் தடை ஏற்பட்டுவிடுகிறது. எல்லாருக்கும் தெரிந்த கதையை நேரடியாகச் சொல்லும் கூத்துப்பாணி (Narrative Style), எதையும் மடக்கி, திருகிச் சொல்லும் ந. முத்துச்சாமிக்கு உதவும் என எதிர்பார்ப்பது அதிக ஆசைதான்.

மு. ராமசுவாமியின் பாணி நான்காவது போக்கு. மு. ராமசுவாமி தமிழ் அடையாளமாகக் காட்டுவது கதை சொல்லும் முறையை. அவரது அகாடமி தயாரிப்புக்கள் மட்டுமல்லாமல் வேறு தயாரிப்புக்களும் கூத்துப்பாணி கதை சொல்லும் முறையையே கொண்டுள்ளன. இக்கதை சொல்லும் முறை எல்லா விதமான நாடகங்களுக்கும் உதவும் என்று கூறுவதற்கில்லை. தொன்மத்தை (Myth) அடிப்படையாகக் கொண்ட ‘சாபவிமோசன‘ த்திற்கு உதவிய அளவு ‘ஆண்டிகோனி‘ (Antigone) யின் தழுவலான ‘துா்க்கிர அவலத்‘ திற்கு உதவவில்லை என்றே கூறலாம். கூத்துப்பாணி கதை கூறலையும், பாரம்பரிய நடனக்கூறுகளையும் நீக்கிவிட்டாலும் துா்க்கிர அவலம் நல்ல ஒரு நாடகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த அம்சங்கள் பார்வையாளா்களுக்கு காட்சிப் படிமங்களையும் அழகியல் ஈடுபாட்டையும் தந்தன என்பத கூடுதலான அம்சம்.

இந்த நான்கு போக்குகள்தான் தமிழ் அடையாளங்களாக உணரப்பட்டுள்ளன. இந்தப் போக்குகள் அடையாளம் கண்டுகொண்ட நிலையில் பின்வரும் கேள்விகள் விடைகாண வேண்டியவைகளாக உள்ளன. இந்நான்கில் எது சரியான போக்கு? எது நவீன மனிதனுக்கு நவீன நாடகத்தைத் தரும்? இந்நான்குமே உதவாது என்றால் தமிழ் அடையாளம் உள்ள வேறொரு போக்கைத் தேட வேண்டுமா? இல்லையென்றால் தமிழ் அடையாளம் என்பது தேவையில்லை, என்று ஒதுக்கிவிட்டு, ‘நவீன மனிதனுக்காக நவீன நாடக வடிவத்தைத் தேடினால் போதுமா? விரைந்து விடைகாண வேண்டியது அவசியம் என்று தோன்றுகிறது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கூகை: முன்மாதிரிகளைத் தகர்க்கப் போகும் நாவல்

எழுத்துக்குத் தடை என்னும் பேதமை: மாதொருபாகனை முன்வைத்து

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்