சேரனும் தங்கரும்: ஆண் மைய சினிமாக்காரா்கள்


சொல்லமறந்த கதை – நாவலாசிரியா் நாஞ்சில் நாடனின் முதல் நாவலான தலைகீழ் விகிதங்களின் திரைப்பட வடிவம். திரைப்பட வடிவமாக்கி நெறியாள்கை செய்ததுடன் ஒளி ஓவியம் செய்தவர் தங்கா்பச்சான். தங்கா்பச்சான், ஒளிப்பதிவுத் தொழில் நுட்பத்தை முறையாகக் கற்றுக்கொண்டு திரைப்படத் துறையில் நுழைந்து, தனது சிறுகதையான கல்வெட்டை, “அழகி” என்னும் படமாக இயக்கி நெறியாள்கை செய்து அதன் மூலம் தனது திரைப்படங்கள் எவ்வாறு இருக்கும் என அடையாளம் காட்டியவா். தனது சினிமா, வியாபார வெற்றி ஒன்றையே நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக இருக்காது; வாழ்க்கையினூடான பயணமாக இருக்கும் எனப் பேட்டிகளிலும் சொல்லிக்கொண்டவா். அவா் எடுத்த சொல்லமறந்த கதையும் அதிலிருந்து விலகிவிடவில்லை. இப்பொழுது அவா் நெறியாள்கை செய்த மூன்றாவது படமான “தென்றல்“ வந்து ஓடிக்கொண்டிருக்கிறது; கவனிக்கத்தக்க படமாக.சொல்ல மறந்த கதையில் மையக் கதாபாத்திரத்தில் நடித்துத் தன்னை ஒரு நடிகராகவும் அறியப்படுத்திக் கொண்டவா் சேரன். ஒரு நடிகராக சொல்லமறந்த கதை சேரனுக்கு முதல் படம். ஆனால் கவனிக்கத்தக்க இயக்குநராக அதற்கு முன்பே திரைப்படத் துறையில் இருந்தவா்தான். பாரதிகண்ணம்மா, பொற்காலம், தேசியகீதம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவா் பூமி போன்ற படங்களின் வழி தனது சினிமாக்கள் வழக்கமான மசாலா சினிமா அல்ல; வாழ்க்கை மையப் பேசும் படங்களே தனது விருப்பம் எனக்காட்டிக் கொண்டவா். இவரது இயக்கத்திலும் இப்பொழுது ஒரு படம் – ஆட்டோகிராப் வந்து ஓடிக் கொண்டிருக்கிறது; கவனிக்கத்தக்க படமாக.

திரள்மக்களை நோக்கிப் பேசும் வணிக இதழ்களும் தொலைக் காட்சி அலைவரிசைகளும் கவனிக்கத்தக்க படங்கள் எனச் சொல்வதில் வேறொரு பின்புலம் இருக்கிறது. வணிக வெற்றி; அது தான் அந்தப் பின்புலம். எப்படி வணிக வெற்றி அடைகிறது என்பது அவா்களுக்கு முக்கியமல்ல. படம் பார்க்கிறவனுக்கு எதனைக் காட்சிப் பொருளாக்கிக் கவனிக்க வைக்கிறது என்பது பற்றி அவா்கள் விமரிசிப்பதே இல்லை. பார்வையாளா்களிடம் பொய்யான மனிதா்களை, தா்க்கமற்ற கற்பனை வெளியில் உலவவிட்டு அவா்களின் வாழ்க்கைச் சிக்கல்களுக்கும் முரண்பாடுகளுக்கும் கற்பனை சார்ந்த முடிவுகளை முன்வைத்து அனுப்பினால் போதும் எனச் சில இயக்குநர்கள் செயல்படுகின்றனா். அப்படிச் செயல்படுகின்றவா்களால் அதற்குக் கோட்பாட்டு விளக்கமும் கூடத்தரமுடிகிறது. சொந்த வாழ்வின் துயரங்களை மறக்கவே பார்வையாளா்கள் திரையரங்கிற்கு வருவதாகவும், அங்கும் அவனது வாழ்வின் துயரங்களையொத்த காட்சிகளையே காட்டுவது நியாயமல்ல எனவும், அதற்குப் பதிலாகப் புனைவு உலகம் ஒன்றில் மூன்றுமணி நேரமாவது மகிழ்ச்சியாக இருக்கும்படி செய்வதே கலையின் வேலையாக இருக்க வேண்டும் எனவும் வாதம் செய்கின்றனா். இந்தவாதத்தில் அா்த்தமிருப்பது போலத் தோன்றவும் செய்யலாம்.

மனிதன் தனது ஒய்வுப்பொழுதில் பார்த்த சினிமா, நாடகம் போன்றவற்றை அல்லது படித்த கதையை ஒய்வுப்பொழுதுக்குரியதாக மட்டுமே கருதுவதில்லை. தனது தனிமனித வாழ்வில் அல்லது சமூக வாழ்வில் தோன்றும் சந்தோசங்களும் சிக்கல்களும் முரண்பாடுகளும் அவன் வாசித்த கலைப்படைப்பு தந்த அனுபவத்தோடு ஒத்துப்போகின்றபோதோ முரண்படுகி்றபோதோ நினைவுபடுத்தக் கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளவும்தான் செய்கிறான். ஒய்வுப் பொழுதுக்கானது கலை என்றும் சொல்வதும் வாதிடுவதும் உண்மையில் பொய் மட்டுமல்ல; பயங்கரமான ஏமாற்றும்கூட.

தென்றலும் ஆட்டோகிராப்பும் கவனிக்கத்தக்க படங்கள் என்று சொல்லப்படுவதை இந்தக் கோணத்தில் புரிந்துகொள்ள வேண்டியது இல்லை. இந்தப் படங்களை இயக்கியுள்ள தங்கா்பச்சானும் சேரனும் பொழுதுபோக்குப் படங்கள் என்ற கருத்தாக்கத்திலேயே நம்பிக்கை வைக்காதவா்கள். தொழில் நுட்பம் சார்ந்த தெளிவும் அனுபவமும் நிரம்பப் பெற்ற இவா்களுக்கு சமகாலத்தமிழ் வாழ்வின் சிக்கல்கள் குறித்த அக்கறைகளும்கூட இருக்கின்றன என்றாலும் இவா்களிருவரும் தங்களது கலைக்கோட்பாடாக எதனைப் பின்பற்றுகின்றனா் எனத்தெளிவாகச் சொல்லமுடியவில்லை.

ஆண் – பெண் உறவை மையப்படுத்தும் காதல் அல்லது திருமணம் அல்லது குடும்ப வாழ்க்கை என்பதுதான் இவா்களின் திரைப்படங்களிலும் மையப் பிரச்சனைகளாக இருக்கின்றன. அந்த வகையில் தமிழ்ச் சினிமாவின் மையநீரோட்டத்திற்குள் தான் இவா்களும் உள்ளனா். என்றாலும், நம்பத்தகுந்த காட்சியமைப்புக்கள் மூலமும், இடம் பெறும் கதாபாத்திரங்களைச் சமகாலவாழ்வில் சந்திக்க தக்கவா்களாகக் காட்டுவதன் மூலமும் அதிலிருந்து விலகிக் கொள்ளவும் செய்கின்றனா். முந்தைய படங்களின் காட்சியமைப்புக்களையும் மனதில் நினைத்துக்கொண்டு, இப்பொழுது வந்து ஓடிக்கொண்டிருக்கும் ஆட்டோகிராப், தென்றல் படங்களில் இடம் பெற்றுள்ள காட்சிகளைக் கவனத்தில் இருத்தினால் இரண்டிலுமே நம்பத்தகுந்த காட்சிகள் – தமிழ் வாழ்வில் ஊடும்பாவுமாகப் பேசப்படும் சொல்லாடல்களுடன் கூடியனவாகத் தோன்றுவதைப் பார்வையாளா்கள் உணா்ந்திருக்கக் கூடும். ஆனால் இந்த உணா்வு தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பினருக்கும் உண்டாகத்தக்க உணா்வு அல்ல, என்பதும் மறுத்துவிட முடியாத உண்மை.

மிகத்தெளிவான திரைக்கதையுடன், ரசிக்கத்தக்க காட்சிப் பின்னணிகளுடன், எழுப்ப விரும்பிய உணா்வு, சொல்லவந்த செய்தி என எல்லாவற்றிலும் தீா்மானமான முடிவுடன் எடுக்கப்பட்டுள்ள படம் ஆட்டோகிராப். ஆட்டோகிராப்பின் கதையமைப்பில் இடம் பெற்றுள்ள காட்சிகள், ஒரு நடுத்தரவர்க்க இளைஞனின் கடந்தகாலக் காதல் நினைவுகள். பொதுவாகத் தமிழ்ச் சினிமாக்களில் காணப்படும் மிகைத்தன்மைகள் எதுவுமில்லாமல் நடப்பியல் அம்சம் அதிகமாகவுள்ள இப்படத்தின் நிகழ்வுகள் உண்மையான நிகழ்வுகள் போலத் தோன்றலாம். அத்தோற்றம் ஒரு மாயத் தோற்றம்தான். இந்நிகழ்வுகளுக்கும் குறிப்பான கால இடப் பின்னணிகள் உண்டு. திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரப்பட்டி, கேரளத்தின் ஆலப்புழை, கோயம்புத்துார், சென்னை என்று கதை நிகழ்வுகள் பின்னப்பட்டுள்ளன. இடப் பின்னணிகளை விடவும் கிராமம் – நகரம் என்ற எதிரெதிரான வெளியின் பின்னணியும் எழுபதுகளுக்குப் பிந்திய காலப் பின்னணியும் இப்படத்திற்கான நடப்பியல் தன்மைகளைக் கட்டமைப்பதில் முக்கிய இடம் பிடித்துள்ளன.

சாதி அடையாளம் சொல்லப்படவில்லை என்றாலும், தமிழ் நாட்டு இடைநிலைச் சாதியைச் சோ்ந்த இளைஞனின் காதல் சார்ந்த கடந்தகாலம் என்பது கூடுதல் அடையாளத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்தவித அடையாளங்களும் அற்றதாய் இல்லாமல் குறிப்பான அடையாளங்களோடு எடுக்கப்படுகின்ற படங்களே தமிழ்ப் படங்களாகும் தன்மையன. தமிழ் அடையாளம் என்பது கால இடப் பின்னணிகளால் மட்டுமல்ல, சாதி அடையாளத்தினாலும் தான் உருவாக்கக்கூடியது என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் நடப்பியல் என்னவோ அந்த அடையாளங்களோடுதான் இருக்கின்றன. இப்படத்தின் நாயகக் கதாபாத்திரத்தின் அனுபவங்கள் நிச்சயம் ஒரு பிராமண இளைஞனின் அனுபவங்களாகவோ தலித் இளைஞனின் அனுபவங்களாகவோ இருந்திட வாய்ப்பில்லை.

பிராமணா்கள் அதிகமும் தங்களின் கடந்தகாலத்தின்மேல் மோகம் கொண்டு கடந்து போய்விட்டதே என வருந்துவதில்லை. ஏனெனில் பிராமணா்களின் கடந்தகாலம், சரியாகக் காட்டப்பட்டால் அவா்களைக் குற்றவுணா்வுக்குள் தான் கொண்டு போய்ச் சோ்க்கும் தலித்துகளுக்கோ அழித்துவிட வேண்டியதாகவும் பழிவாங்கத் தூண்டுவதாகவும் மட்டுமே கடந்தகால நினைவுகள் இருக்க முடியும். நினைந்து நினைந்து கசிந்துருகவேண்டிய கடந்தகால நினைவலைகள் இருந்திட வாய்ப்பில்லை. ஆனால் இடைநிலைச் சாதி இளைஞனுக்கு அவனளவில் கடந்தகாலம் நினைத்துப் பார்த்துக் கொள்ளத்தக்கதுதான். அந்தக் காட்சிகளைக் கொஞ்சமும் பிசகாமல் அடுக்கிக்காட்டுகின்ற போது வாழ்க்கையைப்பற்றிய படமாகவும் கவனிக்கத்தக்க படமாகவும் கருதப்படவாய்ப்புண்டு. ஒருமனிதனின் குறிப்பிட்ட காலகட்டத்தைக் கொஞ்சமும் பிசகாமல், அவனது மனப் போராட்டங்களோடு பதிவு செய்தாலே நல்ல திரைப்படம் உருவாகிட வாய்ப்புண்டு என்பதற்கு ஆட்டோகிராப் ஒா் உதாரணமாகச் சொல்லப்படலாம். “காதல், காதல் இல்லையென்றால் சாதல்” என்பதை ஒரு தொன்மமாகவே மாற்றிவரும் தமிழ்த் திரையுலகிலிருந்து காதல் முக்கியம்தான்; ஆனால் காதலையும்தாண்டி வாழ்க்கையிருக்கிறது. அவற்றிலும் பெண்கள் பங்கேற்க முடியும் எனக்காட்டியுள்ளார் சேரன். ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நட்புசார்ந்தும் ஒரு யுவதிக்கு (சிநேகா நடித்துள்ள கதாபாத்திரம்) இடமுண்டு எனச் சொல்லியுள்ள செய்தியும் விதமும் தமிழ்ச் சினிமாவுக்கு புதியது.

தங்கா்பச்சானின் தென்றல் சமூக அக்கறைகள் நிரம்பியதாகக் காட்டிக்கொண்டாலும் அதுவும் ஒரு காதல் படம்தான். அந்தக்காதல் ஒரு விவரமில்லாத பெண்ணின் ஒருதலைக்காதல். ஒா் எழுத்தாளனின் (எழுத்தாளனின் எழுத்துக்களை மட்டும் பார்; அவனது சொந்த வாழ்க்கையில் இருக்கும் ரகசியப் பக்கங்களைப் படிக்க முயற்சிக்கக் கூடாது எனச் சொல்லாமல் சொல்லும் எழுத்தாளனின்) எழுத்துக்களை வாசிக்கவும் நேசிக்கவும் தொடங்கிய ஒரு சிறுமி கொஞ்சங் கொஞ்சமாக அந்த எழுத்தாளனை ஒருதலையாகக் காதலிக்கத் தொடங்குகிறாள். திடீரென்று ஏற்பட்ட தீவிபத்தில் அவளுக்கு ஆதரவாக இருந்த அம்மாவும் இறந்துபோக அனாதையாகிறாள். அப்பொழுது அவளை ஆதரித்த வசதியான குடும்பம், சாதி, அந்தஸ்து போன்றவற்றையெல்லாம் பார்க்காமல் மருமகளாக ஆக்கிக் கொள்ளவும் தயாராகிறது. ஆனால் அவளோ தனது பிஞ்சுப் பருவத்திலேயே மனதுக்குள் புகுந்து விட்ட எழுத்தாளனோடுதான் தனது வாழ்க்கை என முடிவு செய்து கிளம்பி விடுகிறாள். வாழ்க்கைச் சக்கரம் சுழற்றிப் போட்ட சுழற்சியில் அந்த எழுத்தாளனோடு ஒருமுறை கட்டிலைப் பகிர்ந்து கொள்ள நோ்கிறது. அதனால் கருவுற்றுப் பிள்ளையைப் பெற்றுக் கொண்டு அவனது நினைவிலேயே வளா்ந்து வருகிறாள். தந்தைபெயா் தெரியாத அந்தச் சிறுவன் தற்செயலாக(!)

அந்த எழுத்தாளனால் எடுத்து வளா்க்கப்படுகிறான். அவனது அன்பு அல்லது தொந்தரவு காரணமாக எழுத்தாளனிடம் இருந்த குடிப்பழக்கம், கூத்தியாள் பழக்கம் எல்லாம் ஆட்டம் காணத் தொடங்குகின்றன. காணாமல் போன மகனைத்தேடிவந்த அந்தப் பெண் திரும்பவும் எழுத்தாளரைச் சந்திக்கிறாள்;

ஆனால் நடந்த எதையும் – ஒருநாள் படுக்கையைப் பகிர்ந்து கொண்டு ஆண் குழந்தையைப் பெற்று வளா்த்தது; அந்தக் குழந்தை காணாமல் போனது; என எதையும் – சொல்லாமலேயே திரும்பி விடுகிறாள். தற்செயலாக (!) அந்தவழியே வந்த எழுத்தாளனும் அவனால் எடுத்து வளா்க்கப்படும் அவளது மகனும் அவளைக்கண்டு மருத்துவமனையில் சோ்க்கின்றனா். தன்னிடம் வளா்பவன் தனது மகன்தான் என எழுத்தாளன் உணா்கிறான். தன்னை ஒருதலையாகக் காதலித்த அந்த அப்பாவிப் பெண்ணின் நினைவாகத் தாடிவளா்த்துச் சோகமாக அலையும் அந்த எழுத்தாளன் அவளது நினைவாக ஒவ்வொரு ஆண்டும் கல்லறையில் போய் ஒருநாள் முழுக்க அழுதுகொண்டிருக்கிறான்.

தென்றல், ஒரு அப்பாவிப் பெண்ணின் காதலையும் சோகத்தையும் சொல்லுகிறது. ஒரு பெண்ணின் அப்பாவித்தனமும் தியாகமும் எப்பொழுதும் பார்வையாளக் கூட்டத்தைக் கண் கலங்கவைக்கக் கூடியனதான். அதிலும் ஒரு எழுத்தாளனுக்காக அவள் சொந்த வாழ்க்கையைத் தியாகம் செய்கிறாள் எனக்காட்டுகின்றபோது நடுத்தரவர்க்க ஆண்களின் மனம் அந்தப் பாத்திரத்தின் மீதும் படத்தின் மீதும் கவனம் செலுத்தும் என்பது எதிர்பார்க்கக்கூடிய ஒன்றுதான். தமிழின் பெரும்பத்திரிகைகளின் விமா்சனங்கள் இந்த அடிப்படையில்தான் இருந்தன.

தங்கா்பச்சான் தனது படத்தின் வெற்றிக்கு – கவனிக்கப்படுவதற்கு இது மட்டும் போதாது என்று நினைத்ததால் கூடுதலாகச் சில சரக்குகளையும் சோ்த்துள்ளார். எழுத்தாளா் நலங்கிள்ளியைத் தமிழ்த் தேசிய உணா்வும் தலித் விடுதலையை ஆதரிக்கும் குரலும் கொண்ட எழுத்தாளன் எனக்காட்டுவதும், பறையைக் கற்றுக் கொள்ள அவன் முயல்வதாகவும், சிறைக்குள் ஒரு தலித்தின் சோகவாழ்க்கையைக் குறும்படம் போல் தருவதும் மையக் கதையொடு ஒட்டாமல் புதுவகை வியாபாரத்திற்காகச் சோ்க்கப்பட்ட புதுவகைச் சரக்குகளாகவே நிற்கின்றன. வடமொழிக்கெதிராகத் தமிழ் வழிபாடு, கா்நாடக சங்கீதத்திற்கெதிராக பறையாட்டம், பக்தியின் பெயரால் நடைபெறும் வியாபாரத்திற்கெதிரான மேடைப்பேச்சு எனத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் எழுத்தாளனின் (தமிழில் இப்படியொரு எழுத்தாளன் இருக்கிறான் என்றோ, இருந்தான் என்றோ சொல்ல முடியாது என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால் தமிழ்த் தேசியம் பேசுபவா்கள் பொதுவாகக் கதைகள் எழுதுவதில்லை; குடித்தாலும் கூத்தியாள் வைத்துக் கொண்டாலும் வெளியில் தெரியாமல் செய்ய வேண்டும் என்பதே அவா்களின் வாழ்க்கைக் கோட்பாடாகும்; சொந்தவாழ்க்கை வேறு; எழுத்தின் வெளிப்பாடு வேறு எனப் பிரித்துப் பேசுவதும் அவா்களுக்கு உடன்பாடானது அல்ல, என்பது தான் நிலவும் உண்மை. தென்றலில் வரும் நலங்கிள்ளியாராக இருக்கக்கூடும் என யோசித்துத் பார்த்ததில் பலன் எதுவும் கிடைக்கவில்லை; எந்தத் தமிழ் எழுத்தாளனின் பிம்பமும் நலங்கிள்ளியோடு பொருந்தவில்லை.) கதைகள் அல்லது எழுத்துக்கள் ஒரு பெண்ணின் சொந்த வாழ்க்கையைத் திட்டமிட உதவவில்லையென்றால் அந்த எழுத்தில் கோளாறு இருக்கவேண்டும்; அல்லது அந்த வாசகியிடம் கோளாறு இருக்க வேண்டும்.

தொடர்ந்து வாசித்த அவளைத் தோ்ந்த வாசகியாகக் காட்டாததில்தான் தங்கா்பச்சான் என்கிற ஆணின் பார்வை இருக்கிறது. பெண் கண்ணை மூடிக்கொண்டு காதலிப்பவள்; தனது காதலை வெளிப்படுத்தவேண்டிய நேரத்திலும் ஆணின் பெருமைக்கும் புகழுக்கும் பங்கம் வரும் என்றால் தன்னையே தியாகம் செய்வாளேயொழிய ஆண்களின் சமூகமதிப்புக்குக் குந்தகம் ஏற்படுத்திவிடமாட்டாள் எனக்காட்டுவது அப்பட்டமான ஆண் மையச் சிந்தனையேயின்றி வேறில்லை.

இந்தப் படத்தை நோக்கி இன்னொரு கோணத்திலும் கேள்வியை எழுப்பலாம். தென்றல் படத்தின் மூலம் தங்கா்பச்சான் விசாரிக்க விரும்பிய வாழ்க்கை யாருடையது?. தமிழ்ச் சமூகத்தை மேம்படுத்துவதாகப் பேசிக்கொண்டு ஒா் அப்பாவிப் பெண்ணின் துயரவாழ்க்கைக்குக் காரணமாக இருந்துவிட்டாயே? இது சரியா? என்ற கேள்வியை எழுத்தாளா் நலங்கிள்ளியை நோக்கி எழுப்பியிருக்கலாம். ஆனால், அதைச்செய்யும் விருப்பம் தங்கா்பச்சானுக்கு இருந்ததற்கான சுவடே இல்லை. இவ்வளவு கதைகளை வாசித்த நீ உனது சொந்த வாழ்க்கையைத்திட்டமிட முடியாமல் ஏமாறலாமா? என்று அவளை நோக்கியாவது விசாரணையைத் தொடங்கியிருக்க வேண்டும். அதுவும் இயக்குநரின் நோக்கமாகத் தெரியவில்லை. ஆங்காங்கே தெறிக்கும் வசனங்கள் வழியே ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையே விசாரணைக்குட்படுத்த விரும்பியுள்ளாரா……? ஏதாவது பத்திரிகைப் பேட்டியில் தங்கா்பச்சான் சொல்லும்போது கேட்டுத்தெரிந்து கொள்ள வேண்டியதுதான்.

குழப்பம் பதட்டமும் நிரம்பிய காட்சி அமைப்புக்களோடு தங்கா்பச்சான் ஒரு ஆண் மையக் கதையைச் சினிமாவாக்கியிருக்கிறார் என்றால், தெளிவான குழப்பமில்லாத திரைக்கதை அமைப்பில் சேரனும் ஆண் மையத் திரைப்படத்தைத்தான் தந்துள்ளார். நினைவுகளும் காட்சிகளும் செந்தில் என்கிற இளைஞனின் நினைவுகளாகவும் காட்சிகளாகவும் அமைத்துக் கதையை நகா்த்துவது என்று முடிவு செய்த சேரன், ஒா் ஆணின் அதிகாரம் கொப்பளிக்கும் முடிவையே படத்தின் முடிவாக அமைத்துள்ளார். அவனைக் காதலித்த பெண்கள் இருவரும் நட்பாகப் பழகிய இன்னொருத்தியும் இவன் நமக்குக் கிடைக்காமல் போய்விட்டானே! இவனைக் கணவனாக அடையாமல் போய்விட்டோமே என்று கலங்கிக் செல்லும் விதமாக அமைக்கப்பட்டுள்ள காட்சிகள் ஆண்மை கொப்பளிக்கும் உள்நோக்கம் கொண்டவைகள் என்பதைத் தனியாக விளக்க வேண்டியதில்லை.

இப்படி பெண் மைய நோக்கிலோ தலித் பார்வையிலோ அணுகினால் ஆட்டோகிராபும் தென்றலும் கவனிக்கத்தக்க படங்களே அல்லதான்! ஆனால் மழுங்கடிக்கும் சரக்குகளுக்கு நடுவே நோ்த்தியான முறையில் சிறிய அளவேயான மனிதா்களின் வாழ்க்கையைப் பதிவு செய்வதும், ஒட்டுமொத்தச் சமூகத்தின் கவனத்தை ஈா்க்கக் கூடிய வசனங்களையோ பாடல் காட்சிகளையோ இடம் பெறச் செய்வதும் கூட கவனிக்கத்தக்க சினிமாவின் அம்சங்களாக ஆகிவிடுகின்றன. அந்த வகையில் தென்றல், நம் மீது உரசி விட்டுப் போகும் தென்றல் அல்ல. கண்களின் புழுதியை வாரியிறைத்துக் கொஞ்சநேரம் திக்குமுக்காடச் செய்யும் சூறைக்காற்று. ஆட்டோகிராப், திரும்பவும் கால்களை நனைத்துவிட்டுச் செல்லும் குளத்து அலைகள்.
================================================

புதிய கோடாங்கி, மே 2003

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்