முன்னுரை கல்வித்துறை சார்ந்த இலக்கிய ஆய்வுகளும்,கல்வித்துறை சாராத இலக்கியத் திறனாய்வும் பலவிதமாகக் கிளைபிரிந்து கொண்டு வருகின்றன. இந்த விரிவுகளின் பின்னணியில் எழுத்தாக்கம் என்னும் வினையில் இருக்கும் ஆசிரியன், படைப்பு, வாசகன் என்ற மூன்று மையப் புள்ளிகளில் எதற்கு அழுத்தம் கொடுப்பது என்ற வினாக் கள் காரணங்களாக இருக்கின்றன என்பதை நாமறிவோம். இலக்கிய ஆக்கம், அதனை ஆக்கியவன், ஆக்கியவன் உண்டாக்கிய இலக்கியத்தின் வடிவம், அதன் உள்ளீடாக இருக்கும் கருத்துநிலை, அவற்றை எல்லாம் வாசித்தபின் எதிர்நிலையிலோ நேர்நிலை யிலோ நின்று தனதாக ஆக்கிக் கொள்ள முயலும் வாசகன் எனச் சில புள்ளிகள் சார்ந்து இலக்கியத் திறனாய்வின் அல்லது ஆய்வின் விரிவுகள் கூடுகின்றன. இலக்கிய உருவாக்கம், இலக்கியத்தின் வடிவம், இலக்கியத்தின் வெளிப்பாடு, இலக்கியத்தின் பயன்பாடு என்பதான கலையியல் சார்ந்த கோட்பாடுகள் என்ற நிலையில் மட்டுமல்ல, இலக்கிய உருவாக்கத்தின் பொது மனநிலை, அதிலிருந்து மாற நினைக்கும் சிறப்பு மனநிலை,இலக்கியத்தை உருவாக்கிய சமூக மற்றும் கால நெருக்கடி, இலக்கியத்தை வாசிப்பதற்குக் கண்டு பிடிக்கப்பட்ட முறைகள், வாசிப்பின் விளைவுகள், ...