புலம் பெயர்ந்தோர் இலக்கியம்

இலங்கைத் தமிழர்களின் இருபத்தைந்தாண்டுக் காலப் போராட்டத்தை, வரலாற்றின் பக்கங்களில் எவ்வாறு எழுதுவீர்கள்? என ஒரு வரலாற்று ஆசிரியரிடம் கேட்டுப் பாருங்கள். உடனடியாக எந்தப் பதிலையும் அவர் சொல்லி விட மாட்டார். காரணம் ஈழத்தமிழர்களின் கனவான ஈழத்தனிநாடு கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்ற முடிவு தெரியாமல் வரலாற்றை எப்படி எழுதுவது என்ற குழப்பம் தான். எந்த ஒரு நிகழ்வையும் வெற்றி- தோல்வியைக் கொண்டே முடிவு செய்யும் அடிப்படைப் பார்வை கொண்டது வரலாறு. அதனால் அது நிகழ்காலத்தைப் பற்றிய கருத்துரைப்பை எப்போதும் தள்ளிப் போடவே செய்கிறது.
ஆனால் இந்தக் கேள்விக்கு இலக்கிய ஆசிரியர் கூடத் தேவை இல்லை. இலக்கிய மாணவனே உடனடியாகப் பதில் சொல்லத் தொடங்கி விடுவான். ஏனென்றால் இலக்கியம் முடிவுகளுக்காகக் காத்திருப்பதில்லை. எல்லா நிகழ்வுகளையும் நடந்து கொண்டிருக்கும் போதே பதிவு செய்வதும், அவை பற்றிக் கருத்துரைப்பதும், விமரிசிப்பதும் தன்னுடைய வேலை என்று கருதுகிறது இலக்கியம்.
ஒவ்வொரு நிகழ்வையும் நேர்மறை யாகவும் எதிர்மறையாகவும் சொல்லி வைத்துக் கட்டியங்கூறும் வேலையை இலக்கியம் தன்னுடைய குணமாகக் கொண்டிருக்கிறது. கூறும் கட்டியம் நடக்காமல் போய்விடுமோ என்ற தயக்கம் எல்லாம் இலக்கியத்திற்குக் கிடையாது. ஒரு நிகழ்வின் தொடக்க அசைவையே கண்டறிந்து கருக்கொள்ளும் நிலையில் முன்னறிவித்து விடுவது இலக்கியவாதிகளின் வேலை. காத்திரமான நிகழ்வுகள் பலவற்றிற்கு முன்னறிவிப்பாக இலக்கியம் விளங்கியதற்கு உலக இலக்கியங்களில் பல உதாரணங்கள் உண்டு என்றாலும் பாரதியின் வரிகளை ஆகச் சிறந்த உதாரணம் எனச் சொல்லலாம். இந்தியா விடுதலை அடைந்த ஆண்டு 1947. ஆனால் பாரதி ’’ஆடுவோமே.. பள்ளுப் பாடுவோமே.. ஆனந்த சுதந்திரம் அடைத்து விட்டோமென்று ‘ என்று எழுதிய காலம் 1920-க்கும் முன் என்பதை நாம் அறிவோம்.
விடுதலை வேட்கை கொண்டு போராட்டங்கள் தொடங்கும் ஒரு கூட்டத்திற்குப் பல்வேறு விதமான வாழ்க்கை முறைகளின் அறிமுகம் தானாகவே வந்து சேரும். சொந்த ஊரை விட்டு வெளியேறி வேற்றிடத்திற்குப் பெயர வேண்டிய கட்டாயங்கள் தவிர்க்க முடியாதவை. போராட்டம், கலவரமாக மாறிப் பின்னர் போராக வடிவம் கொள்ளுதல் தேச விடுதலையின் பரிமாணங்கள். சிறைவாழ்க்கை என்ற நிலையிலிருந்து உடல் சிதைத்தல், வன்புணர்ச்சி எனத் தொடங்கிய துயரம் உயிரிழப்புகள்,ஊரழிப்புகள் என மாறிய போதும் ஈழத்தமிழர்களின் குரல்கள் ஓயாது ஒழித்தன.
போரின் தாக்குதலை அதன் வலியோடும் வாதனையோடும் பதிவு செய்யும் விதமாக இருபத் திரண்டு ஆண்டுகளுக்கு (1985) முன்பு ஒரு கவிதைத் தொகுப்பு வெளி வந்தது. மரணத்துள் வாழ்வோம் என்ற படிமத்தின் வழியே போரின் காட்சிகளை அந்த தொகுப்பில் 31 கவிஞர்கள் பதிவு செய்திருந்தனர். பதினாறாண்டுகளுக்குப் பின்பு 1986 - இல் கோவை, விடியல் பதிப்பக வெளியீடாக அந்தத் தொகுப்பு தமிழ்நாட்டில் மறுபதிப்புச் செய்யப்பட்ட போது பெரும் வாசகத்தளத்திற்குள் ஈழப்போர்க்காட்சிகளைக் கொண்டு வந்து சேர்த்தது. தமிழ் நாட்டில் மரணத்துள் வாழ்வோம் தொகுப்பு வெளி வந்த அந்தக் காலகட்டத்தில் ஈழப் போரின் முகமே மாறி இருந்தது.
சொந்த ஊரை விட்டு வெளியேறும் படி நிர்ப்பந்திக்கப் பட்ட தமிழர்களில் ஏராளமானோர் சொந்த நாட்டை விட்டே இடம் பெயர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள். அந்தக் கட்டாயத்தை ஏற்படுத்தியவர்கள் சிங்கள அரசும் சிங்களப் படைகளும் மட்டும் அல்ல என்பதை எழுத வேண்டியது வரலாற்றின் பக்கங்கள்.வரலாறு பதிவு செய்யாமல் போய்விடும் என்பதால் இலக்கியங்கள் தொடர்ந்து பதிவு செய்து கொண்டே இருந்தன. மரணத்துள் வாழ்வோம் என்ற வைராக்கிய மனம் தளர்ச்சியடைந்து அகதிகளின் முகங்களாக மாறி விட்டன .
எங்கள் மண்ணும் வீதிகளும் அந்நியப் பதிவுகளாகி விட்டன. யுத்தத்தின் ரத்த சாட்சியங்களை எழுதித் தீர்ந்து விட்டன எங்கள் பேனாக்கள். உயிர்த்தெழும் காலத்திற்காகக் காத்திருக்கிறோம். எங்கள் தெருக்களைக் கனவிலும் காண முடியாத இந்தத் தலைமுறைக்கு எந்த வெளியை எங்கள் பூமியாகச் சொல்லுவோம். எங்கள் வெளி வேறாகி நின்றதின் காரணங்களை யார் சொல்லுவார் என்று பேசிய ஈழத்து இலக்கியம் இப்போது யுத்தத்தைத் தின்போம் என்ற நிலைக்கு வந்திருக்கிறது. ஈழத்தின் 25 ஆண்டு இலக்கியப்பதிவுகளையும் ஒருசேரத் தொகுத்துப் பேசும் சொல்லாகப் புலம் பெயர் இலக்கியம் என்னும் வகைப்பாடு அமைகிறது.
ஆங்கிலத்தில் டையோஸ்போரா இலக்கியம் (Diaspora literature) என்னும் வகைப்பாடு ஏற்கெனவே இருக்கும் ஒன்று. இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலக நாடுகள் பலவற்றில் சிதறிக் கிடந்த யூதர்கள் தங்களின் அடையாளத்தை மீட்கவும் தங்களுக்கென ஒரு தேசம் இல்லையென்றும் பேசிய அந்தப் பின்னணியைக் குறிக்கும் சொல்லாக டையோஸ்போரா என்னும் சொல் இலக்கிய விவாதங்களில் இடம் பெற்றுள்ளது. சிதறடித்தல், தேச அடையாளம் வேண்டல் என்ற அந்த மனநிலை ஈழத்தமிழர்களின் இன்றைய நிலைக்கு ஏறத்தாழப் பொருந்திப் போகும் என்ற அளவில் புலம்பெயர் இலக்கியம் என்ற சொல்லை ஆங்கில டையோஸ்போராவின் மொழிபெயர்ப்பாகக் கொள்ளலாம்.
புலம்பெயர் இலக்கியம் என்பதைப் புலம் பெயர்ந்தோரின் இலக்கியம் எனக் குறுக்கிப் பார்த்து, புலம்பெயர் வினால் ஏற்பட்டுள்ள பொருளாதார, பண்பாட்டு மாற்றங்களையும், அடையாள மிழப்பையும் பேசும் நிலைக்குப் பல விவாதங்கள் சென்றுள்ளன.அதற்குப் பதிலாகப் புலம் பெயர்வதற்கான காரணம் என்ற மூலத்திலிருந்து தொடங்கினால், ஒட்டு மொத்தப் போராட்ட வரலாற்றையும் பேச வேண்டிய தேவை அதில் உள்ளது என்பது புரியலாம். அவ்வாறு பேச வில்லையென்றால் சொந்த ஊரையும் நாட்டையும் நினைத்து ஏங்கும் இழப்பின் துயரப் பதிவுகளாக( Nostalgia) மட்டும் புலம்பெயர் இலக்கியம் நின்று போகும் வாய்ப்புண்டு.புலம் பெயர்ந்த தமிழர்கள் அதிகம் வாழ்கின்ற நாடுகளுள் ஒன்று கனடா. அந்நாட்டின் டொரண்டோ நகரில் மட்டும் ஒரு லட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர் என்றும், தமிழ்ப் பள்ளிகளும், கலை இலக்கிய அமைப்புக் களும் செயல்படுகின்றன என்று அங்கிருந்து வரும் தகவல்களும் நண்பர்களின் கடிதங்களும் சொல்கின்றன.
கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு புலம் பெயர்ந்தோர் இலக்கியம் பற்றி ஒரு கருத்தரங்கம் கூட நடைபெற்றது. அதே போல் தமிழ் நாட்டில் காந்தி கிராமப் பல்கலைக்கழகம் கடந்த மாதம் தமிழ் இலக்கியத்தில் புலம் பெயர்ந்தோர் இலக்கியப் பதிவுகள் என்ற பொருளில் ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது.அந்தக் கருத்தரங்கில் கலந்து கொள் வதற்காக நான் நமது வெகுமக்கள் ஊடகங்களான பத்திரிகைகளையும் திரைப்பட ஊடகங் களையும் மறுவாசிப்பாகத் திரும்பிப் பார்த்தேன். ஈழத்து வாழ்க்கை நமக்கு மூன்று சொற்களின் மூலம் தான் ஊடகங்களின் வழி தரப்பட்டுள்ளது என்பது புரிந்தது.
இந்திய அமைதி காக்கும் படை எனப் பெயரிட்டுக் கொண்டு இந்திய ராணுவம் இலங்கைக்குச் செல்லுவதற்கு முன்பு நமது பத்திரிகைகள் பயன் படுத்திய சொல் போராளிகள். இந்திய ராணுவம் அங்கு போய்த் திரும்பிய பின் பயன்படுத்திய சொல் அகதிகள். அமைதிப் படையை அனுப்புவதற்குக் காரணமான இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பின் பயன்படுத்திய சொல் புலிகள். விடுதலைக்காகப் போராடிய போராளிகள் இன்று அச்சமூட்டும் புலிகள் என்ற விலங்கின் குறியீடாக ஆக்கப்பட்டதின் பின்னணியில் ஊடகங்களின் பங்கு உண்டு என்பதும், அவ்வாறு கட்டமைக்கப்படும்படி ஊடகங்கள் நமது அரசு இயந்திரத்தின் கண்ணிகளால் பயிற்றுவிக்கப்பட்டன என்பதை விரிவான ஆய்வு களால் சொல்ல முடியும். பத்திரிகைகள் மட்டும் அல்ல திரைப்படங்களும் கூட அப்படியான சித்திரங்களைத் தான் தந்துள்ளன.
சந்தோஷ் சிவன் இயக்கிய மல்லி, கமல்ஹாசன் நடித்த தெனாலி, பாலா இயக்கிச் சூர்யா நடித்த நந்தா, மணிரத்தினத்தின் கன்னத்தை முத்தமிட்டால், சமீபத்தில் வந்த ராமேஸ்வரம் போன்ற படங்களைப் போட்டுப் பாருங்கள். பார்க்கும் போது முடிந்தவரை நான் இந்தியன் என்ற அடையாளத்தைக் கொஞ்சம் கழற்றி வைத்து விட்டு பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். அப்படிப் பார்த்தால் நமது ஊடகங்களின் நோக்கம் புரியக்கூடும். மார்ச்- 16

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்