மொழித்துறைகள் காப்பாற்றப்படும்.

அரசுக் கல்லூரிகளில் முறைப்படியான நடைமுறைகளப் பின்பற்றி ஆசிரியர் களை நியமனம் செய்யும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வி வாரியம், தனியார் கல்லூரிகளில் அந்த முறைகளைப் பின்பற்றும்படி வலியுறுத்துவதில்லை என்ற குறைபாடு அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதை மாற்றம் செய்வதைப் பற்றி சிந்திக்கவில்லை என்ற போதிலும் வேறொன்றைப் பற்றிச் சிந்தித்துப் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஆசிரியர்களாகத் தேர்வு செய்யப் படுவரின் பட்டமேற்படிப்புக் கல்வியை மட்டும் இனிப் பார்த்தால் போதாது; அவரின் பட்டப் படிப்பையும் பார்க்க வேண்டும் என்று இந்த அறிவிப்பு கூறியுள்ளது.பட்டப் படிப்பில் எந்தப் பாடத்தைப் படித்தாரோ அதே பாடத்தையே பட்டமேற்படிப்பு நிலையிலும் தொடர்ந்து கற்றுத் தேறி இருக்க வேண்டும் எனப் புதிய அறிவிப்பு கூறுகிறது. இந்த அறிவிப்பு வரவேற்கத் தக்கத் தக்க ஒன்றாகும்.
மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலைப்பட்ட ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் போது பின்பற்றப் பட்டு வந்த இந்த நடைமுறை ஏறத்தாழப் பத்து ஆண்டு களுக்குப் பின் கல்லூரி ஆசிரியர்களுக்கும் உரியதாக ஆக்கப்பட்டிருக்கிறது. இதுநாள் வரை அந்த அறிவிப்பைத் தடுத்து வந்த சக்திகளின் தடைகளை மீறி உரிய அறிவிப்பைச் செய்துள்ள உயர்கல்வித்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் பொன்முடி பாராட்டப் பட வேண்டியவர் என்றே சொல்ல வேண்டும்.
இந்த அறிவிப்பால் எல்லாத் துறை மாணவர்களும் பயன் அடைவார்கள் என்றாலும் அதிகம் பயன் அடையப்போவது மொழித் துறை தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.ஏனென்றால் இத்தகைய நடைமுறை இல்லாததால் சீர்கேடு அடைந்த துறைகள் மொழித்துறைகள் தான்.இன்று கல்லூரிகளில் தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் கற்பிக்கும் ஆசிரியர்களில் பாதிப் பேர்,பட்டப் படிப்பில் வேறு ஒரு பாடத்தை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்தவர்கள் என்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
அறிவியல் அல்லது சமூக அறிவியல் பாடங்களை முதன்மைப் பாடங்களாக எடுத்துப் படித்தவர்கள் , இலக்கிய ஆர்வம் காரணமாகவும், மொழி மீது கொண்ட பற்றின் காரணமாகவும் முதுநிலைப் பட்டத்தில் தமிழை விரும்பி எடுத்துப் படித்துத் தேர்ச்சி பெற்றார்கள் என்று சொல்வதற்கில்லை. அவர்கள் பட்ட வகுப்பில் எடுத்த பாடத்தில் தொடர்ச்சியாகப் படித்திட இடம் கிடைக்காத போது இலக்கியத்தின் பக்கம் வந்தவர்களே அதிகம். தமிழ் மொழி மற்றும் இலக்கியக் கல்விக்கு வந்தவர்கள் தான் இப்படிப் பட்டவர்கள் என்று கருத வேண்டியதில்லை; ஆங்கிலத்துறைக்கு வந்தவர்களும் இப்படி வந்தவர்கள் தான்.
இப்படி வந்தவர்களில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வந்தவர்களாவது முழு நேரப் படிப்பில் முதுகலைத் துறைகளில் சேர்ந்து, தேர்ந்த மொழி மற்றும் இலக்கிய ஆசிரியர்களிடம் பாடங்கற்று தங்களை வளப்படுத்திக் கொண்ட வர்களாக இருந்தார்கள். ஆனால் தமிழகப் பல்கலைக்கழகங்களில் அஞ்சல் வழிக் கல்வி என்னும் வியாபாரம் தொடங்கப் பட்ட நிலையில் அதில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அஞ்சல் வழியில் அதிகம் பேர் சேர்ந்து படிக்கும் முதுகலைத் துறைகளாக தமிழ் மற்றும் ஆங்கிலத் துறைகளே முதன்மை இடத்தைப் பிடித்தன. அஞ்சல் வழிக் கல்வி மூலம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளை முதுகலைப் படிப்பிற்கு முதன்மைப் பாடமாகத் தேர்வு செய்து படித்து விட்டு வரும் ஒருவர் அம்மொழிகளின் அடிப்படைப்பாடங்களை நடத்த முடியாமல் திணறுவதை ஒவ்வொரு கல்லூரியிலும் காண முடியும்.
குறிப்பாகத் தமிழ் முதன்மைப் பாடத்தில் அடிப்படைப் பாடங்களான நன்னூல், யாப்பருங்கலம் போன்றன பட்டப் படிப்பில் தான் முறையாகக் கற்றுத் தரப்படும் வாய்ப்பு உள்ளது.பட்டப்படிப்பில் அதைக் கற்காத ஒருவர் முது நிலைப் படிப்பில் அதன் தொடர்ச்சியான தொல்காப்பிய இலக்கணத்தையோ பண்டைய இலக்கியங்களான செவ்வியல் இலக்கியங்களையோ கற்றுக் கொண்டவராக இருப்பதில்லை. அதனால் அத்தகைய பாடங்களை நடத்தும் வாய்ப்பை விரும்பி ஏற்காமல் ஒதுங்கிக் கொள்ளவே முயலுகின்றார். வேறு வழியில்லாம் அப்பாடங்களை நடத்த நேர்ந்தாலும் பாடத்திற்குத் தொடர்பற்ற செய்திகளையும், சிரிப்பு மூட்டும் வேடிக்கைகளையும் நாட்டு நடப்புகளையும் பேசி வகுப்பைச் சுவாரசியப் படுத்தி விட்டு வந்து விடுகின்றனர்.
தான் கற்பிக்கும் பாடத்தின் மீது புலமையும் மரியாதையும் இல்லாத ஓர் ஆசிரியர் மாணவனைக் கட்டுக்குள் வைக்க வேறு வழிகளை நாடுவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.மொழிக்கல்வியும் மொழிக் கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்களும் கல்லூரிகளில் மரியாதைக்குரிய ஒன்றாகவும், மதிக்கப்படும் நபர்களாகவும் இல்லாமல் போனதின் பின்னணியில் இத்தகைய நெருடலான உண்மைகள் இருக்கத்தான் செய்கின்றன.ஆனால் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் இருந்த தமிழ் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் மாணவர்களின் முன் மாதிரிகளாகவும் வாழ்க்கை வழிகாட்டிகளாகவும் இருந்தார்கள் என்பதும் மறந்து போகக் கூடிய வரலாறு அல்ல.இந்த நிலை திரும்பவும் வருவதற்கு இந்த அறிவிப்பு உதவும் என்று சொல்ல முடியாவிட்டாலும், சீரழிவின் வேகம் தடை செய்யப்படும் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கம் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
இந்த அறிவிப்பு ஒருவர் இலக்கியக் கல்வியைத் தனது தாகம் தணிக்கும் ஒன்றாகக் கற்கும் வாய்ப்பைத் தடுத்துவிடும் ஆபத்து இதில் இருக்கிறது எனச் சிலர் வாதிடக்கூடும். அந்த ஆபத்து நிச்சயமாக இல்லை. படிப்பில் சேர்வதற்கான அடிப்படைத்தகுதியில் எந்த மாற்றமும் இல்லை. தடைகளும் கிடையாது. கணிதத்தையோ விலங்கியலையோ இளநிலைப்பட்டமாகப் படித்த ஒருவர் தான் முதுநிலையிலும் அப்பாடங்களைப் படிக்கும் தகுதி உடையவர் என்ற வரையறைகள் அடிப்படைத் தகுதிகளாக இன்றளவிலும் பல்கலைக் கழகங்களில் இருந்து வருகின்றன. அறிவியல் துறைகளில் உள்ள இத்தகைய தடைகள் ,சமுதாய அறிவியல் துறைகளான வரலாறு, பொருளாதாரம், சமூகவியல், நிலவியல், அரசியல் அறிவியல்,மானிடவியல், தத்துவம், போன்ற துறைகளில் இல்லை. பட்டப் படிப்பில் ஏதாவதொரு பட்டம் பெற்றிருந்தால் போதும். அவர்களை பட்டமேற்படிப்புக் கல்வியில் சேர்த்துக் கொள்ளத் தயாராகவே உள்ளன கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும்.
மொழித்துறைகளான இந்திய மொழிகள் மற்றும் அயல் தேசத்து மொழிகள் துறைகளிலோ சிறிய அளவிலான மாற்றங்களோடு அதே நடைமுறை தான் பின் பற்றப்படுகின்றன. பட்டப் படிப்பில் பகுதி ஒன்று பாடமாக ஒரு மொழியைக் கற்றிருந்தால் போதும். அவர்களுக்கு முதுகலை படிக்கும் வாய்ப்பு வழங்கப் படத் தடையில்லை. இந்த அறிவிப்பால், கல்லூரி ஆசிரியராகவோ, பள்ளியின் முதுநிலை ஆசிரியராகவோ ஆகும் வாய்ப்பு மட்டும் தான் தடுக்கப்பட்டுள்ளது. வேறு பணிகளுக்காக, அவற்றில் பணி உயர்வு பெறுவதற்காக ஒருவர் முதன்மைப் பாடத்தை மாற்றிப் படிக்கும் வாய்ப்பை இந்த அறிவிப்பு தடை செய்யவில்லை.கல்லூரிகளில் ஆசிரியர் களாகத் தேர்வு செய்பவர்களுக்கான அடிப்படைத் தகுதிகளில் முக்கியமான மாற்றத்தைச் செய்துள்ளதற்காக மட்டுமின்றி, தமிழகப் பல்கலைக்கழகங்களின் அஞ்சல் வழி மற்றும் தொலைநெறிக் கல்வி இயக்ககங்கள் இனிமேல் எம்.பில். மற்றும் பி.எச்டி. பட்டங்களை வழங்கக் கூடாது என்று அறிவித்த தற்காகவும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பாராட்டப் பட வேண்டியவர்.
வியாபாரமாக்கப் பட்ட கல்விப் பட்டத்தின் மூலம் பிற துறைகளுக்கு ஏற்படும் பாதிப்பை விடக் கல்வித் துறைக்கு ஏற்படும் பாதிப்பு எதிர்காலச் சந்ததியையே அழித்து விடும் என்பதை உணர்ந்து அவர் வெளியிட்ட இந்த அறிவிப்புக்கள் வரவேற்கத்தக்கவை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்