தேர்தல் -2019 -III
தமிழ் அடையாளங்களென நமது உறுப்பினர்கள் மக்களாட்சி என்னும் அரசமைப்பு அடிப்படையில் புறநிலை யதார்த்தத்திற்கேற்பத் தன்னிலையை மாற்றிக்கொண்டு ஒவ்வொரு மனிதனும் பொது மனிதனாக ஆவது என்ற உயரிய சிந்தனையை முன்வைக்கும் ஒரு கோட்பாடு. நான், எனது, என்ற அகம் சார்ந்த தன்னிலை உருவாக்கக் கூறுகளை ஒரு மனிதனிடமிருந்தால் அதைக் குறைத்துப் பொதுநிலைப்பட்ட மனிதனாக ஆக்கும் நோக்கம் கொண்டது. அதன் மூலம் அம்மனித ஆன்மாவை விடுதலை அடையச் செய்யும் பாதையே மக்களாட்சியின் பாதை. ஒருவனது சுயத்தை அழிக்க இறைவன் மீது கொண்ட பக்தி உதவும் எனப் பக்தர்கள் நம்புவது போல நான், எனது என்ற தன்னலம் சார்ந்த இருப்பை அழிக்க தேர்ந்த அரசியல் கட்சியின் – மக்கள் நலனை முன்னிறுத்தும் கட்சியின் – கொள்கை உதவும் என்பது மக்களாட்சி அரசியலின் சித்தாந்தம். அந்த அடிப்படையில் தான் தேர்தல் அரசியலுக்கு வருபவர்கள் பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் எனக் குறிக்கப்படுகிறார்கள். ஆனால் நடைமுறையில் இந்திய அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் அத்தகைய தரத்தில் இல்லை என்பது அண்மைக்கால வெளிப்பாடு. கொள்கை சார்ந்த கட்சி அரசியலிலிருந்து விடுபட்டு அதிகாரத்தைப் பங்கு போடும் கூட்டணி...