தெய்வீகனின் மூன்று கதைகள்

புலம்பெயர் எழுத்தாளர்களில் கவனிக்கத்தக்க கதைகளை எழுதிவரும் ப.தெய்வீகன் ஆஸ்திரேலியாவில் வசிப்பவர். அவரது கதைகள் குறித்த பதிவுகள் இங்கே
பகடியிலிருந்து எள்ளலுக்குள்-ப. தெய்வீகனின் தராசு

நாடு முழுவதும் ஒரு நாளில் சுமார் ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகும் ஆஸ்திரேலியாவின் “த ஏஜ்” பத்திரிகையின் முதல் பக்கத்தில் அன்று அந்தச் செய்தி வெளியாகியிருந்தது. இடமிருந்து வலமாக நீளமாக போடப்பட்ட பெரிய தலைப்பின் கீழ் கட்டம் கட்டப்பட்ட அந்தச் செய்தி தலைப்புச் செய்திக்கு இணையான முக்கியத்துவத்துடன் பிரசுரமாகியிருந்தது.

‘தும்பளை’ ஆறுமுகசாமி ஜட்டி போடாததற்கு எதிரான வழக்கு விசாரணை ஐந்து நாட்களாக மெல்பேர்ன் நீதிமன்றத்தில் நடைபெற்று முடிந்து அன்று தீர்ப்பு வெளியிடப்படவிருந்தது.
என்று தொடங்கி,

கிராம சேவகர் கார்த்திகைச் செல்வன் வீட்டுக்குள் சென்று ஆஸ்திரேலியாவுக்கு வழக்கு விஷயமாக போக வேண்டும் என்று ஆறுமுகசாமிக்கு விளங்கப்படுத்தினார். ஆறுமுகசாமிக்கு எதுவுமே விளங்கவில்லை. ஆனால், எங்கேயோ போக வேண்டும் என்று புரிந்தது. அனுராதபுரத்தில் அந்தக் காலத்தில் வாங்கிப் போட்ட அதிர்ஷ்ட சேர்ட் ஒன்று வைத்திருந்தார். வெளியில் நல்ல காரியங்களுக்கு போகும்போது அதைத் தான் தவறாமல் போடுவார். அதனை எடுத்துப் போட்டார். கை குலுங்க குலுங்க வேட்டியைச் சுற்றிக் கட்டிக்கொண்டு கார்த்திகைச் செல்வனின் கையைப் பிடித்தவாறு வீட்டுக்கு வெளியே வந்தார்.

எதையோ அனுங்கிய குரலில் சொன்னார். பொலீஸ் அதிகாரி ஒருவர் அருகில் சென்று அவரது வாயருகில் காதை வைத்து கேட்டார்.
“போகும்போது பனம்பாத்திய ஒருக்கா பாத்திட்டுப்போவமே” – என்றார்.

என்று கதையைத் தொடங்கிய இடத்தில் முடித்துவிட்டு நிமிரும் ப.தெய்வீகனின் கதையொழுங்கு ஒருசிறுகதையின் வடிவத்தை மீறவில்லை.
சொல்லத் தொடங்கும்போது வெளிப்படும் நீண்ட நீண்ட சொற்றொடர்கள் வழியாக இந்தக் கதையைப் பகடிவகை எழுத்தாக அமைக்கவேண்டும் என நினைத்து எழுதியிருக்கிறார். அபலைப் பெண்களை ஏமாற்றும் ஆணாதிக்க சமூகக் காலத்தில் ஏமாற்றப்பட்ட பூட்டிக்கு, நாலாம் தலைமுறைப் பெண் நீதிபெற விரும்பி - மீடு போன்ற நவீனப் பெண் ஆதரவுச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுத்தாள் என விரியும்போதும் கதை பகடியாகவே - நகைச்சுவையாகவே நகர்கிறது. அத்தோடு, மெல்பார்ன் நகரின் தினசரி ஒன்றின் தலைப்புச் செய்திக்கு இணையாக இடம்பிடித்த செய்தி என்ற முன்வைப்பும் நகைச்சுவைக்காகத் தூவப்படும் ஒன்றுதான். அங்கிருந்து, அந்தச் செய்திக்குப் பின்னால் இருக்கும் வரலாற்றைத் தேடி -மூலத்தைப் பார்க்க இலங்கையின் யாழ்ப்பாணப் பகுதி பருத்தித்துறைக் கிராமம் ஒன்றில் - தும்பளை- ஆரம்பித்துக் கொழும்பு, ஐரோப்பா, ஆஸ்திரேலியா எனக் கண்டம்விட்டுக் கண்டமும், தேசம் விட்டுத் தேசங்களும் தாண்டிச் செல்லும்போதும் வெளிப்படும் நகைச்சுவை முழுவதும் ஒருபக்கச் சார்பிலிருந்து விலகவில்லை.

பனம்பழம் பொறுக்கப்போன அப்பாவி பற்குணம் கோமேதகத்திற்குத் தும்பளை ஆறுமுகச்சாமியின் ஆணுடம்பைக் காட்டிய குற்றச்செயலின் திசைவிலகலால் ஒரு தலைமுறை அல்ல; நான்கு தலைமுறையாக விலகல்கள் தொடர்கின்றன.

கோமேதகத்தின் மகள் சத்தியராணி கல்யாணம் கட்டிக்கொள்ளாமலேயே ஜெர்மன்காரனுக்கும், ஹங்கேரியானுக்கும் உடம்பைக் காட்டுகிறாள். சத்தியராணியின் மகள் வேழினி லண்டனிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் போய் ஓர் இலங்கையனுக்குத் தனது பெண்ணுடம்பைக்காட்டுகிறாள். அவளும் முறைப்படியான திருமணம் செய்துகொள்ளவில்லை; செய்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என நினைக்கும் கூட்டத்தின் தலைவியாகிப் போகிறாள். அவள் மகள் மெரீட்டாவும் அதே வழியில் பயணம் செய்கிறாள் என நீள்கிறது. ஆனால் அவர்கள் ஒவ்வொருவரின் மனத்திற்குள்ளும் இப்படி ஆனதற்கான காரணத்தை - ஆரம்பப்புள்ளியை நினைத்துக் குறுகும் நிலையும் இருக்கிறது.
அந்தக்காட்சியை எழுதும்போது,
வேழினி காரை கரையாக நிறுத்தினாள். நெத்தியை இரண்டு விரல்களினால் அழுத்தியபடி குனிந்தாள்.
“உங்களுக்கு இதுநாள் வரைக்கும் இதுபற்றி ஒருநாள்கூட தோன்றினதில்லையாம்மா? யோசிச்சுப் பாருங்கோ, எங்கட குடும்பம் ஒவ்வொன்றாக சிதறிக் கொண்டு போகத் தொடங்கி, உங்கட அண்ணா போதைப் பொருளுக்கு அடிமையாகி அநாதையாக அடிபட்டு செத்து, அதுக்குப் பிறகு உங்கட அம்மா செத்து, குடும்பம் மொத்தமாக சீரழிஞ்சு போனதுக்கு ஆரம்பக் காரணம் அந்த விபத்து தான்”
அதற்குப் பிறகும் மெரீட்டா பேசிக்கொண்டே போனாள். அவளுக்கு முன்னால் பெரிய கூட்டமொன்று இருப்பதற்கு பதிலாக வேழினி இருந்து கொண்டிருந்தாள். அந்தப் பல நூற்றுக்கணக்கானவர்கள் கேட்க வேண்டிய பேச்சை தனியொருத்தியாக வேழினி கேட்டாள். மெரீட்டாவுக்கு சொல்வதற்கு அவளிடம் பல இடங்களில் பதிலில்லை, என்றாலும் ஆங்காங்கே சில இடங்களில் குறுக்கிட முயன்றாள். ஆனால், அதனைச் சொல்வதற்கு எங்குமே மெரீட்டா இடைவெளி கொடுக்கவில்லை. தான் சொல்லப்போகும் பதில்கள் அவளுக்கு வேறு பக்கத்தைக் காண்பிக்கும் என்று வேழினியும் நம்பவில்லை.
மெரீட்டா பேசி முடித்த பிறகு அமைதியாக காரை ஸ்டார்ட் செய்துகொண்டு வீட்டை நோக்கிப் போனாள் வேழினி.
என நகைச்சுவை உணர்வைத்தவிர்த்துவிட்டே எழுதுகிறார் தெய்வீகன்.

குற்றமுள்ள மனத்தின் குறுகுறுப்பைப் போக்கத்தான் நாலாம் தலைமுறைப் பெண் மெரீட்டா, தன் பூட்டிக்காக அந்த வழக்கைத் தொடுக்கிறாள் என நீட்டித்துக் கொண்டுபோகும்போது முழுமையும் பெண்களின் பக்கம் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டே செல்கிறது. ஒவ்வொரு ஆண்களின் செயல்களையும் தவறவிட்டுள்ளது.

வாய்ப்புக்கிடைக்கும் நேரத்தில் பெண்களுக்குத் தனது ஆணுடம்பைக் காட்டும் ஆண்களைப் பற்றிய கதையாக எழுதுவதற்குப் பதிலாக, பேசிப்பழகும் வாய்ப்புக்கிடைத்த ஆண் உடம்பைப் பார்க்க ஆசைப்பட்டு மோசம்போன நான்கு தலைமுறைப் பெண்களின் கதையாக விரித்திருக்கிறது ப.தெய்வீகனின் தராசு கதை. குடும்ப அமைப்பின் இறுக்கத்தையும் அதற்குள் ஆண்களின் தலைமை மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது என்று பேசிய பெண்ணிய வாதங்களையெல்லாம் கணக்கில் எடுக்காமல், பாலியல் சுதந்திரம் பேசும் பெண்ணியத்தின் மீதும், மனித உரிமை பேசும் குழுக்களின் மீதும் தனக்கிருக்கும் ஒவ்வாமையைக் காட்டியிருக்கும் கதை சொல்லியின் சார்புநிலை வழியாக இந்தக் கதை பகடிவகை எழுத்திலிருந்து எள்ளல்வகைக்குள் நகர்ந்திருக்கிறது.
 
கோமேதகத்தின் நடவடிக்கைகளைப் பற்றிய சித்திரிப்பு இப்படி இருக்கிறது:
லண்டன் போய்ச்சேர்ந்த மாத்திரத்திலேயே சுடச்சுட வேலை. சத்தியராணிக்கு தாயோடு தனி வாழ்க்கை பெரிதாக பிரச்சினையிருக்கவில்லை. நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. ஒருநாள் வழக்கம் போல வேலைக்குப் போய் வரும் போது ரயிலில் கண்ட உயரமான ஜேர்மன்காரன் ஒருத்தனோடு பழக்கம் வந்தது. கூடவே பரஸ்பரம் குடும்பக் கதைகளும் பரிமாறப்பட்டன. மிச்சக்கதையை கேட்பதற்கு அடுத்த நாளும் வரச் சொல்லியிருக்கிறான் அந்த தடித்த மீசைக்காரன். கதை கேட்கப் போன இடத்தில் பற்குணத்தின் பேரன் வயிற்றில் தங்கி விட்டான். தகவலைச் சொன்னவுடன் ஜேர்மன்காரன் “நோ ராணி” என்று தலையை ஆட்டிக் கொண்டு லண்டனை விட்டே ஓடிவிட்டான்.
கோமேதகத்தையும் பிள்ளையையும் ஒருமாதிரி வளர்த்து வந்த சத்தியராணி அடுத்து ஹங்கேரி நாட்டுக்காரன் ஒருவனோடு காதலோ கருமமோ ஏதோ ஏற்பட்டு இன்னொரு பிள்ளையையும் வயிற்றில் வாங்கி விட்டாள். அவனுக்கும் நல்ல பெரிய மீசை
 
இதற்கும் ஒருபடி கூடுதலாக இருக்கிறது வேழினியின் நடவடிக்கைகள் பற்றிய சித்திரிப்பு. ஒருபடி கூடுதலில் மனித உரிமைகள் பேசுபவர்களையும் சேர்த்து எள்ளி நகையாடுகிறார் கதாசிரியர்:

தாய்க்காரி போலவே நாடுவிட்டு நாடுபோய்த் தான் படிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியாவுக்கு வந்தாள் வேழினி. வந்து மூன்று மாதங்களில் ஒரு வெளிநாட்டுக்காரனோடு நெருக்கம் கூடியது. அவனொரு இலங்கைக்காரன். வேலையெதுவும் இல்லை. பகலில் மீன் பிடிப்பான். இரவிலே மீன் பொரிப்பான். வேழினி பொரியல் சாப்பிடப் போன ஒருநாளிரவு மீன் கருகிவிட்டது. கட்டிலிலிருந்து இரண்டு பேரும் இறங்கி ஓடிப்போய் தாச்சியை இறக்குவதற்கிடையில் பக்கத்து வீடு வரைக்கும் புகை போய்விட்டது. இலங்கைக்காரன் திரும்பவும் தாச்சியை கழுவி மீனைப் பொரித்துக் கொடுத்தான். வேழினி சுவைப்பதைப் பார்த்து மகிழ்ந்தான். அவள் சிரிக்கும் போது குலுங்கும் கண்கள், தான் பிடித்த மீன்களைப் போலவே துள்ளுவதாக சொல்லி கன்னத்தைக் கிள்ளினான். அதன் பிறகு இருவரும் சிரித்தார்கள்.
அந்த இலங்கைக்காரன் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உரிமைப் போராட்டங்களில் கலந்து கொள்பவன் என்ற செய்தியை அடுத்தடுத்த நாட்கள் மீன் பொரியல் சாப்பிடப் போன போது தான் வேழினி அறிந்துகொண்டாள். கொஞ்சம் கொஞ்சமாக அவனோடு போய்வந்த இடங்களும் பழகிய தோழர்களும் கூட ‘கண் சிவந்தால் தான் மண் சிவக்கும்’ என்று பாடமெடுப்பவர்களாக தெரிந்தார்கள். அவனது தோழர்கள் குழுவிலிருந்த இரண்டு பெண்கள் தாங்கள் ஆண்களுக்கு சமமானவர்கள் என்பதற்காக மார்பு கச்சையே அணிய மாட்டார்கள். ஒருவரை ஒருவர் காணும் போது தோள்களினால் இடித்து வணக்கம் சொல்வார்கள். ஆங்கிலத்தில் பேசினாலும் வேழினியை ‘தோழர்’ என்றே தமிழில் அழைத்தார்கள். அந்தச் சொல்லுக்காகவே ஏதாவது செய்து தன்னை தோழராக நிரூபிக்க வேண்டும் என்று கலவரப்பட்டுக் கொண்டிருந்தாள் வேழினி. இலங்கைக்காரனுக்கும் அவனது புரட்சிக் குழுவுக்கும் ஒரேயடியாக தன்மீது மதிப்பு வர வைக்கும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கரிசனைப்பட்டாள்.

பொதுவாக நகைச்சுவை அல்லது பகடிவகை எழுத்துகள் மொத்தப்பனுவலையும் அதே உணர்வுகளை நிரம்பி நகர்த்திச் செல்லக்கூடியன. அது ஒருபக்கச் சார்பாக மாறும்போது நையாண்டி அல்லது எள்ளல் வகையில் சேர்ந்துவிடும் ஆபத்துக் கொண்டது. எள்ளல் இருபக்கமும் பார்க்காது; ஒருவழிப்பாதையாகவே பயணம் செய்யும். பிரெஞ்சு நாடகாசிரியர் மோலியரின் புகழ்பெற்ற எள்ளல் நாடகங்கள் பெரும்பாலும் மையப்பாத்திரத்தைக் கேலிக்குரியதாக முன்னிறுத்தும் தன்மை கொண்டவை என்பதை நினைவுபடுத்திக் கொள்ளலாம். தமிழிலும் கூடவகை அவ்வகை நாடகங்களைத் திராவிட இயக்க எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். குறிப்பாக நிலச்சுவான்தார்களையும் பூசாரிகளையும் சனாதனம் பேணும் பிராமணர்களையும் எள்ளல் வழியாகவே எழுதிக் கடந்தார்கள்.
அதே தன்மையிலேயே தெய்வீகனின் தராசு நடுநிலையைப் பேணாமல் , ஆண்நோக்குப் பார்வையில் பெண்களின் மீதான - பெண் உரிமை உள்ளிட்ட உரிமைப்போராட்டங்களை முன்னெடுக்கும் குழுக்களின் மீதான ஒவ்வாமையைக் காட்டியதின் வழி எள்ளலைக் காட்டியிருக்கிறது.
===========================================
கதை வெளியாகியுள்ள இணைய இதழ்: தமிழினி


http://tamizhini.co.in/…/%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%be%e0%a…/…

ப. தெய்வீகனின் கறைநதி: பதறும் கீழ்த்திசை மனம்

வல்லினத்தின் வந்துள்ள ப.தெய்வீகனின் கறைநதி தலைப்பில் உருவாக்கும் படிமம் கதைநிகழ்வுகளில் வெளிப்படவில்லை. கதைக்குள்ளிருந்து தனது கதையைச் சொல்பவன், இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குச்சென்று வேலைபார்த்துக் கொண்டே படிக்க நினைக்கும் இளைஞன். அதற்காக ஒரு வாடகை இடம் தேடியபோது தங்கள் வீட்டின் ஓரத்து அறையொன்றை ஒதுக்கித்தந்த முதிய தம்பதிகளின் பூர்வீகம் இத்தாலி. பக்கத்து வீட்டுக்காரர் மாரியோவும் இத்தாலியிலிருந்து 30 ஆண்டுகளுக்கு முன்பு வந்தவர் தான். நான்கு கொலைகள் செய்துவிட்டு இன்னொரு கொலை செய்துவிடக் கூடாது என்று வாழ்ந்து கொண்டிருப்பவர். மாரியோவின் சிபாரிசின் மூலம் இவனுக்குக் கிடைத்த வேலை மதுக்கூடத்தில் குடுவைகள் சுத்தம் செய்யும் வேலை. மதுக்கூடத்தின் உரிமையாளர் கலியோ தொங்கோ தீவுக்காரன்.


மதுக்கூடத்தில் நடந்த பிறந்தநாள் விழா நிகழ்வொன்றில் அவன் பார்த்த காட்சி - பிறந்தநாள் கொண்டாடிய பெண்ணோடு மதுக்கூட உரிமையாளர் மாரியோ உறவுகொண்டிருக்கும் காட்சியில் பதற்றமானவன் வேலை இடத்தைவிட்டு வெளியேறிவிடுகிறான். காலையில் காலியாவின் மரணத்தை முன்வைத்து ஆஸ்திரேலியக் காவல் துறை விசாரணைக்கு வருகிறது.


கதைநிகழ்வுகள் இவ்வளவுதான்

கதைசொல்லியிடம் வெளிப்படுவது பதற்றம் உணர்ச்சி வசப்படுதலும். ஆனால் கதையில் இருக்கும் மற்ற பாத்திரங்களிடம் வெளிப்படுவது நிதானமும் அன்றாடத்தை அன்றாட நிகழ்வாகக் கண்டு விலகிநிற்கும் மனோபாவமும். இவ்விரு மனநிலையை கீழைத்தேய மனநிலை X மேற்கத்திய மனநிலை எனப்புரிந்துகொள்ளவேண்டும். கதை நடக்கும் வெளி ஆஸ்திரேலியா. அவ்வெளி புவியின் கீழ்த்திசையில் இருந்தாலும் மேற்கத்திய மனம் கொண்ட மனிதர்கள் நிரம்பிய வெளி.

புலம்பெயர் எழுத்தாளர்களிடம் மட்டுமல்லாமல், இந்தியா போன்ற கீழ்த்திசை நாடுகளிலிருந்து அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளுக்கு வேலைக்காகச் சென்றவர்களிடமும் வெளிப்படும் பண்பாட்டுச் சிக்கலும் பதற்றமும். தனிநபராக கீழ்த்திசை மனிதர்கள் மேற்கத்திய மனநிலைக்குள் நுழையமுடியாமல் தவிப்பது நீண்ட காலச் சிக்கல். அச்சிக்கலை ப.தெய்வீகன் சரியாகக் கதையாக்கியிருக்கிறார்.

பின்குறிப்பு:
------------------
இக்கதையின் விவாதம் - சொல்லாடல் தேர்ந்தெடுத்த ஒன்றாக இருந்தபோதும், திரும்பவும் ஒருமுறை சரிசெய்ய வேண்டிய - எடிட் செய்ய வேண்டிய கதை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். தேவையற்ற அடைமொழிகள், குழப்பமான வாக்கிய அமைப்புகள், எழுத்துப் பிழைகள் எனப் பல பிழைகள் அக்கதையில் வெளிப்பட்டுள்ளன என்பதையும் சொல்லவேண்டும். அச்சாக்கும்போது தெய்வீகன் கவனத்தில் கொள்வார் என நினைக்கிறேன்.

http://vallinam.com.my/version2/?p=6704


எதிர்மறை விமரிசனத்தின் பின்விளைவு

அனோஜன் பாலகிருஷ்ணன் எழுதிய விமரிசனக்குறிப்பு ப.தெய்வீகனின்”உச்சம்” கதையை உடனடியாக வாசிக்க வைத்து விட்டது.நீண்ட காலப் போரின் -புலம்பெயர் வாழ்வின் - உளவியல் நிலைப்பாடுகளை எழுதிப்பார்க்கும் தெய்வீகனின் இன்னொரு கதை என்ற அளவில் வாசிக்கத்தக்க கதை. புலம்பெயர் தேசங்களின் வாழ்முறை தரும் சுதந்திரத்தை - வாய்ப்புகளை - மரபான தமிழ்க்குடும்ப அமைப்புகளிலிருந்து விலகியவர்கள் சோதித்துப் பார்க்கும்போது இப்படியெல்லாம் நடந்துவிட வாய்ப்புகளுண்டு. இக்கதையின் எண்ணவோட்டங்களும் நிகழ்வுகளும் இந்தியச் சூழலில் - இலங்கையின் சூழலிலும்கூட அரியன. வெளியில் சொல்லப்படக்கூடாதன.

நெருக்கடியால் அல்லது உணர்ச்சி மேலீட்டால் போராளியாக மாறிய மோகனா என்னும் நிலா போன்றவர்கள் போருக்குப் பின் நெருக்கடிகள் இல்லாதபோது - உணர்ச்சிக்கொந்தளிப்புகள் நீங்கிவிடும்போது பழைய அடிமை மனோபாவத்திற்குத் திரும்பிவிடும் உளவியல் தமிழ்ப் பெண்ணின் தனிமனித உளவியலா? தமிழ்ப் பெண்களின் சமூக உளவியலா? என்று விவாதிக்கத் தூண்டுகிறது கதை.

திருமணத்திற்கு முன்பு காதல், பெண் விடுதலை, சம உரிமை என்றெல்லாம் கதைத்துவிட்டுத் திருமணத்திற்குப் பின்பு நல்ல அடிமையாக ஆகிவிடும் பொதுவான பெண்கள்போலவேதான் போராளிப்பெண்களும் மாறிப் போவார்களா? சமூகம் தரும் "குடும்பப்பெண்" பட்டமும் அடையாளமும் போதும் என்று அடங்கிவிடச் செய்வன எவை?

பெண் நிலைப்பாடு சார்ந்து இத்தகைய கேள்விகளை எழுப்பத்தூண்டும் ப. தெய்வீகனின் கதையில் வரும் ஜெயந்தன் போராளிப் பெண்ணுக்கு வாழ்வுதர வேண்டும் என்ற புரிதலுடனும் அவசரமான இலட்சிய வேட்கையுடனும் இருக்கிறான். அதையும் தாண்டி தன்னால் உடலுறவில் அவளுக்கு உச்சநிலையைத் தரமுடியவில்லை என்ற புரிதலையும் கொண்டவனாக இருக்கிறான்? அதற்காக இன்னொரு ஆணை ஏற்பாடு செய்து ஒருநாளாவது அவளின் உடலைத் திறந்து மூடிக்காட்டி உச்சநிலையனுபவத்தைத் தந்துவிடத் துடிக்கும் பக்குவத்தைக் கொண்டவனாக இருக்கிறான்? அந்த ஒருநாள் திறப்பைவிடத் தொடர்ச்சியான திறப்பாக இன்னொரு பெண்ணுடன் கொள்ளும் தன்பால் புணர்ச்சித்தேர்வை அவள் தெரிவுசெய்யும்போது கலங்கிப்போகிறான்.

குடும்ப எல்லைக்குள் கட்டிப்போட்ட குற்றமனம் ஒருநாள் விடுதலையை -வேட்கைத் தீர்ப்பை வழங்கிய ஆண்மனம் நிரந்தரமான இன்னொரு வேட்கைத்தீர்வை ஏன் மறுக்கிறது? அவனுள் இருக்கும் மரபான ஆதிக்க ஆண் மனம்தானே?

அப்படியானால் தெய்வீகனின் உச்சம் கதையை ஆணின் பார்வையில் எழுதப்பெற்ற ஆண்மையக்கதை என்று சொல்லிவிடலாம் தானே? பெண்களின் உடலியல் விருப்பம்சார்ந்த உளவியலை ஆண்களால் எழுதிவிட முடியாது என்ற பெண்ணிய வாதம் சரியான பார்வைதானோ என்றெல்லாம் கேட்கமுடிகிறது.

நேர்மறை விமரிசனத்தைவிட எதிர்மறை விமரிசனத்தின் வீச்சு அதிகம்தான். உச்சத்தை எழுதிய தெய்வீகனுக்கும் அதனை அச்சத்துடன் வாசித்த அனோஜன் பாலகிருஷ்ணனுக்கும் நன்றி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்