அலைதலும் தனிதலும் -1
அலைந்து திரிதலின் பல நிலைகளைக் கடந்திருப்பதுபோலவே தனித்திருத்தலின் அனுபவங்களும் இருக்கவே செய்கின்றன. முதல் தனித்திருத்தல் பத்து வயதில். நான்காம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு விடுமுறை.கமலை வடத்தில் தாவி ஏறிச்சாடித் தடுமாறாமல் இருக்க இரண்டு பக்கத்திலும் கைகளை நீட்டி மாடுகளின் பின்முதுகில் கை வைத்தபோது விழுந்தது ஒரு அடி. இடது பக்க மயிலைக்காளை அடித்தால் முதுகில் விழும். வலதுபக்கச் செவலையின் அடி கன்னத்தில் விழுந்தது.கன்னம் வீங்கியது. கண்ணுக்கு வந்தது கன்னத்தோடு போனது என்று நினைத்திருந்த நேரத்தில் மாட்டு வாலில் கட்டியாக இருந்த சாணித்துகளொன்று கண்ணுக்குள் இறங்கி ஒருவாரத்திற்குப் பின் ரத்தச் சிவப்பில் கொப்பளம் காட்டியது. முலைக்கட்டியிருக்குன்னு பெரியம்மா அத்திபட்டி மாரியம்மனுக்கு விளக்குப் போடுவதாக நேர்ந்தார். வெங்கலத்தாம்பாளத்தில் வெண்சங்குரசி ஒத்தடம் கொடுத்துப் பார்த்தார்கள். வெளிமருத்துவம் தாண்டி அமுதப்பால், நந்தியாவட்டைச் சாறு என்ற கைமருத்துவத்தில் இறங்கி உள்மருத்துவத்திற்கு நகர்ந்தது. ஒருமாதம் பள்ளிக்கூடம் போகவில்லை. சுத்திப்பட்டிக்கெல்லாம் தாய்க்கிராமம் எழுமலை. அங்கிருந்தவர் அரை வைத்திய...