சொல்லித்தீராத சுமைகள்



எல்லாவகையான வாசிப்பும், வாசிக்கப்படும் பனுவலைப் புரிந்து கொள்ள முதலில் தேடுவது பனுவலுக்குள் இருக்கும் ஆட்களைத்தான். நம்மிடம் சொல்லப் போகும் -காட்ட நினைக்கும் வெளி ஒன்றின் ஒரு பகுதியையும்
காலத்தின் வெட்டுப்பட்ட துண்டையுமே எழுத்தாளர்கள் நம்மிடம் எழுதிக்காட்டுகிறார்கள். எழுதிக் காட்டிப் புதிய திசைக்குள் அழைத்துச் செல்லும்போது சொல்பவரின் கைபிடித்துப் பயணிக்கிறோம். அவர் காட்டும் பகுதியின் முதல் பகுதியின் வண்ணம் வண்ணமில்லாத வெண்மையாகவோ, கண்களை உறுத்தாத மென் வண்ணங்களில் ஒன்றாகவோ இருக்கும் நிலையில் தயக்கமின்றி நுழைவது நடக்கும். மென்மையான புதுப்புது வண்ணங்கள் நம்மைத் தாண்டிச்செல்லும்போது அவற்றை உணராமலேயே கடந்துவிட்டு, ஓடரித்தில் அடர்த்தியான பச்சையோ சிவப்போ தட்டுப்படும்போது ஏற்படும் லயிப்பில் அல்லது அச்சத்தில் நின்று சிந்திப்பதும் தொடரலாமா? என்று யோசிப்பதும், தொடர்ந்து போனால் அடர்வண்ணங்களுக்குப் பிறகு மென்வண்ணங்களின் நிலப்பரப்பு வரக்கூடும் என நம்புவதும் வாசிப்பின் பயணமுறை. சில நேரங்கள் கண்ணைக்கட்டும் இருட்டு – கறுப்பு- வந்து மோதும்போது வாசிப்புப் பயணம் நின்றுபோவதும் உண்டு.


செல்வத்தின் எழுத்துமுறையின் பலம் முழுமையும் இருட்டான பக்கங்களைக் காட்டாமல், அதன் முந்திய அடுக்குகளின் வண்ணச்சேர்க்கையால் ஆனது என்பதாக இருக்கிறது. “எனது எழுத்தாக இருக்கும், சொற்கள் உண்மைகளை வாசகர்கள் முன்னால் விரிக்கின்றன; ஆனால் நேர்கோட்டில் அல்ல; சின்னச்சின்ன சுழற்சிகளின் மூலம்” என்பதுதான் அவரது முன்வைப்பு. தனது அறியாமையின் எளிமையால் அல்லது ‘வரும்போது பார்த்துக் கொள்ளலாம்’ என்ற அசட்டுத் தைரியம் தொனிக்கும் மொழியொன்றின் வழியாகத் தனது வாசிப்பாளரைக் கைப்பிடித்து இழுத்துக்கொள்ளும் செல்வம், உடனடியாக அவர்கள் முன்னால் முழுமையும் திருகலான அல்லது ரகசியமான மனிதர்களை நிறுத்திக் காட்டுகிறார். சொல்ல முடியாத ரகசியங்களைக் கொண்ட மனிதர்களை -அறியப்படாத மனிதர்களின் அறியவேண்டிய பக்கங்களை- நான் தேடிக்கண்டுபிடித்து உங்களுக்குச் சொல்கிறேன் – எனத் தனது எழுத்தின் வடிவத்தைக் கட்டமைக்கிறார்.
வாசிப்பவர்களைக் கைப்பிடித்து இழுத்துப் பக்கத்தில் இருத்திக் கொண்டு, உரையாடலைத் தொடங்கும் செல்வம், தான் எதுவுமே தெரியாத அப்பாவி என்ற பாத்திரத்தை உருவாக்கிக் கொண்டு, சந்தித்த நபர்கள் சொல்வதையே உங்களுக்குச் சொல்கிறேன் என்ற நிலைபாட்டில் நின்று ஒவ்வொருவரையும் வாசகர் முன் உரையாட விடுகிறார். அந்த உரையாடலில் செல்வமும் அவர் சந்தித்த மனிதர்களும் நம்முன்னே சுழலும் சொற்களின் வழியாகவே நகர்கிறார்கள். தனது அகதி அடையாளத்தை எப்போதும் மறைத்துக் கொள்ளாமல் முன்வைத்துவிட்டுச் சந்தித்த மனிதர்களின் கதையைக் கேட்டுச் சொல்லும் – எழுதும்- செல்வம் அங்கே தேர்ந்த எழுத்துமுறை உத்தியைக் கைக்கொண்டவராக வெளிப்படுகிறார். அவர் உருவாக்கும் இந்தப் பாவனை வழியாகத் தன்னை முழுமையான புனைவெழுத்தாளர் இல்லை என்பதை நிறுவிக்கொள்கிறார். அதன் வழியாக அவர் முன்வைக்கும் நிகழ்வுகளும் அந்நிகழ்வில் பங்கேற்கும் நபர்களும் அவர்களின் குணங்களும் முழுமையான உண்மைகள் மட்டுமே என்பதை நிறுவும் நிலையை உருவாக்குகின்றன. புனைவல்லாத உண்மைகளை எழுதிச் செல்லும் செல்வத்தோடு தடங்கலின்றிப் பயணிக்கும் வாசிப்பு மனம் உண்மைகளைத் தெரிந்துகொண்டதாக நம்பத்தொடங்கிவிடுகிறது. அதன் தொடர்ச்சியாகச் செல்வம் உருவாக்கும் மனிதர்களின் வாழ்க்கையோடு சேர்ந்துகொண்டு உண்மையைத் தேடுகின்றது. உண்மைகளைத் தேடுவதில் தானே மனித வாழ்வின் நாட்கள் கழிகின்றன.
திட்டமிட்டுக் கட்டமைக்கும் புனைவுமொழியின் உத்திகளைக் கைக்கொள்ளாமல், நேரடி உரையாடல்கள் என்னும் எளிய வடிவத்தின் வழியாகவே தீவிரமான வெளிக்குள் கொண்டுபோய் நிறுத்திவிடும் உத்தியைத் தனது பனுவலின் வடிவமாகக் கொண்டிருக்கும் செல்வத்தின் எழுத்துமுறை, கி.ராஜநாராயணன் தனது புனைகதைகளில் பின்பற்றிய உத்திதான். ஆனால் கி.ரா.வின் மாந்தர்களும் நிகழ்விடங்களும் வாசகப்பரப்புக்கு நேரடியாக அறிமுகம் இல்லாததால் புனைவாகவே புரிந்து கொள்ளப்பட்டன. ‘உண்மையை எழுதுகிறார்; நகலெடுக்கிறார்’ என்று ஒருவரும் சொல்லிவிடக் கூடாது என்பதில் கி.ரா. எப்போதும் கவனமாக இருந்தார். ஆனால் செல்வம், அதற்கு மாறாகப் ‘புனைவாக நான் எழுதவில்லை; உண்மையைத் தான் சொல்கிறேன்’ என்று நம்பச் சொல்கிறார். வாசிப்பவர்களுக்கு அந்த நம்பிக்கையைத் தருவதற்கு இலங்கையில் முப்பது ஆண்டுக்காலம் நடந்த ஈழப் போராட்டச் செய்திகளும், போர்க்கால நிகழ்வுகளும், எழுதப்பட்ட வரலாறுகளும், போருக்குப் பின்னான ஆவணப்பதிவுகளும் காரணங்களாக இருக்கின்றன. கலவரங்களின் தொடக்கத்திலேயே யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறிய தனது அகதி உடல் அந்நிய நிலங்களில் அலைந்து கொண்டிருந்தது என்றாலும் தனது மனமும் நினைப்பும் போர்க்களத்து மனிதர்களோடும் அவர்களது நிலைப்பாடுகளோடும்தான் துயரங்களோடும் இடிபாடிகளோடும்தான் இருந்தது எனக் காட்ட முயற்சிக்கிறது. அவ்வப்போது தாயகத்திற்கு- யாழ்ப்பாணத்திற்கு- சென்று திரும்பும் பயணங்களில் சந்தித்த மனிதர்களின் கதைகளைப் பதிவுசெய்வதன் மூலமும், புலம்பெயர் வாழ்க்கையில் நான் சந்திக்கும் மனிதர்களின் வாழ்க்கைக் கதைகள் சொல்லும் உண்மைகளை அவர்களின் சொற்களின் வழியாகவே பதிவுசெய்யும் திறமையின் வழியாக நானும் ஒருவகை ஆவணத்தையே உருவாக்குகிறேன் என நம்புகிறார். இது ஒருவிதக் குற்றமனத்தின் தேடல். ஆற்றவேண்டிய காலத்தில் செய்யமுடியாமல் போனதற்காகச் செய்யும் பரிகாரச் சடங்கு. எழுத்து அப்படியான பரிகாரங்களின் தொகுதியாகவும்- இயலாமையின் வெளிப்பாடுகளாகவும் பலநேரங்களில் இருக்கவே செய்கிறது.
சொற்களில் சுழலும் உலகம் என்னும் இந்தத்தொகுதியின் பொருளடக்கப் பகுதியில் 22 பகுதிகளாகப் பிரித்துத் தரப்பட்டுள்ளன என்றாலும் தொடர்ச்சி கொண்ட நான்கு தலைப்புகளில் – வாய்ப்பானம்(1,2) கானாள நிலமகளைக் கைவிட்டுப்போனானை (1,2,3,4) இம்மானுவேல் (1,2) மண் கடன் (1-8)- எழுதப்பெற்றுள்ள பகுதிகள் ஒருவிதத்தன்மையிலும் தனித்தனித் தலைப்புகளில் – நுப்பதும் முப்பத்தியேழு ட்றக்கும், ‘உன் சேலைதானே வண்ணப் பூஞ்சோலைதானே’, பொய்யும் பழங்கதையும் சடங்கு, பங்கிராஸ் அண்ணர், எள்ளிருக்கும் இடமின்றி உயிர் இருக்கும் இடம் நாடி – எழுதப் பெற்றுள்ள 6 பகுதிகளும் வேறுவிதமான தொனியிலும் இருக்கின்றன. இவ்வேறுபட்ட தொனிகள் வேறுபட்ட இலக்கிய வடிவங்களுக்குரியவை என்றுகூடச் சொல்லலாம். ‘உன் சேலைதானே வண்ணப்பூஞ் சோலைதானே’, ‘எள்ளிருக்கும் இடமின்றி உயிர் இருக்கும் இடம் நாடி’ என்ற இரண்டும் துயரங்களை எழுதும் அவலநகைப்பு வகைப்பாட்டு எழுத்துக்கு மாதிரியாக இருக்கத் தக்கன. இவ்விரண்டையும் தனிநிலைக்கவிதையாகவோ, நெடுங்கவிதையாகவோ எழுதிட முடியும்.
மொத்த எழுத்திலும் இரண்டு மூன்று தன்மைகள் – தொனிகள்- வெளிப்பட்டாலும் எல்லாப் பகுதிகளிலும் இருப்பவர் கதைசொல்லியாக இருக்கும் செல்வம்தான். அவரது அகதி அடையாளத்தை முன்வைத்துக் கொண்டே அவரது நினைவுகள் போர்க்கால யாழ்ப்பாண வாழ்க்கையையும் அதற்குள் உழன்ற மனிதர்களையும், உழல முடியாமல் தூக்கி எறியப்பட்டுப் பல நாடுகளுக்கு வந்து சேர்ந்த அகதிகளின் இருப்பையும் வாசிக்கத் தருக்கிறார். அகதி வாழ்க்கையிலும் தொடரும் யாழ்ப்பாண மனிதர்களின் பழைமை மாறாத மனத்தை விமரிசனமும் செய்கிறார். கடுமையாக விமரிசனம் செய்ய நினைத்தாலும், தனது நழுவும் மனப்பாங்கைத் தானே சொல்லிக் கொண்டு விலகி நிற்பவராகவும் இருக்கிறார். நுப்பதும் முப்பது ட்றக்ஸும், சடங்கு, பங்கிராஸ் அண்ணர் என்னும் தலைப்புகளில் உள்ள பனுவல்களில் நழுவும் இயல்புகொண்ட செல்வத்தை வாசிக்க முடிகிறது.
தனித்தலைப்புகளாக இல்லாமல், தொடர்ச்சி காட்டி எழுதப்பெற்றுள்ள நான்கும் வேறுவேறு வடிவங்களில் எழுதப்பெற்றிருந்தால் கூடுதல் கவனம் பெற்றிருக்கும் வாய்ப்புக்கொண்டவை. வாய்ப்பானத்தில் வரும் துரைசிங்கம் அண்ணரும் இம்மானுவேலில் இடம்பெற்றுள்ள அதே பேர் கொண்ட பாத்திரமும் இன்பியல் முடிவுகொண்ட ஓரங்க நாடகத்தின் மையப் பாத்திரங்கள். ஆனால் கானாள நிலமகளைக் கைவிட்டுப்போனானை ஒரு குறுநாவலாக எழுதப்பெற்றிருக்கத் தக்கது. மண் கடன் அதே தலைப்பில் விரிவாக எழுதப்பெற்றிருக்க வேண்டிய நெடுங்கதை. அதில் வரும் மண்கடனின் நாயகம் கணியன் பூங்குன்றனின் கவிதையில் அடித்துச் செல்லப்படும் மரத்துண்டு போன்றவன். யாழ்ப்பாணத்துக் கிராமமொன்றிலிருந்து தூக்கி அடிக்கப்பட்டு கொழும்புக்கும்,கொழும்பிலிருந்து பாரீஸுக்கும் போனவன். பாரிஸில் இன்னொரு நாட்டில் புதிய உறவுகளைப் பெற்றுச் சொகுசான வாழ்க்கையில் நுழைந்தவன். ஆனால் திரும்பவும் ஒரு அலை தூக்கி அடித்ததில் விளிம்பு வாழ்க்கைக்குள் நுழைந்து இயக்கக்காரனாகி லெபனான், இந்தியா என அலைந்து திரும்பவும் சொந்த ஊருக்கு வந்து சேருகின்றான். மண் கடன் ஆற்றப் போனவனைத் துகள் கடத்தியவனாகப் பதிவுசெய்கிறது நம்பிக்கை. நாயகத்தின் வாழ்க்கை உழல்வுக்குப் பின்னே ஈழப்போராட்டமே நகர்கிறது. பெரும் காவியத்தன்மை கொண்ட சம்பவங்களும், நாவலுக்கான திருப்பங்களும் வெளிகளும் கொண்ட நாயகத்தின் வாழ்க்கையைக் கள் குடித்துக்கொண்டே செல்வம் கேட்டுச் சொல்வது சுவாரசியமான நகைமுரண். அந்த வாழ்க்கைக்குப் பின்னே ஒவ்வொருவரும் மண்ணுக்கும் மண்ணின் விடுதலைக்கும் ஆற்றவேண்டிய கடமை இருந்தது என்பதையும் உணர்த்துகிற விதமாகத் தனது சொல் முறையைக் கட்டமைத்துள்ளார் என்பதில் செல்வத்தின் போராட்டங்கள் குறித்த நிலைபாடும் வெளிப்படுகிறது
சந்தித்த மனிதர்களின் அறியப்படாத பக்கங்களை எழுதும்போது ஈழத்து மனிதர்களுக்கு விடுதலையின் மீது இருந்த ஈடுபாட்டையும் அதன் மீது தனது எதிர்வினைகளையும் ஆதரவு நிலைகளையும் ஆங்காங்கே எழுதிக்காட்டவும் செல்வம் தயங்கவில்லை. அவ்விடங்களில் அவரின் எண்ண ஓட்டங்களும் இயக்கங்களின் செயல்பாடுகளின் மீதான விமரிசனப் பார்வையும் வெளிப்பட்டுள்ளது. நான்கு பகுதிகளாகப் பிரித்து எழுதப்பெற்றுள்ள, ‘கானாள நிலமகளைக் கைவிட்டுப்போனானை’ என்ற பகுதியில் இடம்பெற்றுள்ள இந்த உரையாடல்கள் அதற்கான சான்றுகள்:
‘இந்த இயக்கங்களாலை மக்களுக்குக் கிடைத்த ஒரு நன்மையை சொல்லுங்கோ,பாப்பம்’ என்டான்
‘படிப்பில்லா மடையன்கள் எண்டு அவன் ஏதோ சொல்ல வாயெடுக்க, எனக்குக் கோபம் வந்திட்டுது’
‘அப்படிச் சொல்லமுடியாது தம்பி, சண்டையை ஏதோ நாங்கள் விரும்பித் தெரிவு செய்த மாதிரிக் கதையாதை. காலங்காலமாய்த் தமிழர்கள் அடக்கப்பட்ட துக்கு எதிராகத்தான் பெடியங்கள் வெளிக்கிட்டாங்கள். அதை எப்பிடிப் பிழை எண்டு சொல்லேலும்? எண்டு கொஞ்சமா உணர்ச்சிவசப்பட்ட நான்… (பக்.66-67)
‘நீங்கள் கனடாவிலை அப்ப ப்ப எழுதிற ஆள்.. முடிஞ்சா இந்தக் கதையையும் ஒரு மாதிரி எழுதுங்கோ.. எழுத்துகள் கனக்க க்காலத்துக்கு நிக்குமாம்’
‘யுத்தம் எண்டா என்ன? விடுதலைப் போராட்டம் என்றால் என்ன? எண்டுறதை அடுத்த தலைமுறை அறியிற மாதிரி எழுதுங்கோ அண்ணை’ எண்டு சொல்லவும் என்ர கண்கள் மெல்லச் செருகிக்கொண்டு போகவும் சரியா இருந்தது (ப,68)
இவ்வுரையாடலில் வெளிப்படும் மனவுணர்வும் திடமான நிலைப்பாட்டையும் நாயகத்தின் கதையாகப் பதிவுசெய்யும் மண் கடனிலும் வாசிக்கத் தருகிறார். தன்னைப் போல அல்லாமல் தெளிவான பார்வையுடன் விடுதலைப் புலிகளின் படையணியில் சேர்ந்து பொறுப்பான இடத்திற்கு நகர்ந்த தனது தங்கச்சியை நாயகம் சந்திக்கும் இடமும், அவளது தீர்க்கமான பதில்களும் செல்வத்தின் நிலைப்பாடுகள் எனக் கொள்வதில் பெரும் பிழையொன்றும் நேர்ந்துவிடாது.
***********************
தன்னை வெளிப்படுத்துவதற்காகவே சிற்றிதழ்களைத் தொடங்கி நடத்தும் தமிழ் அறிவுச்சூழலில் செல்வம் தனித்துவமானவர். தான் பொறுப்பேற்று நடத்தும் இதழில் தன்னை நிறுவிக்கொள்ளும் பகுதிகளை அதிகம் வெளியிடாதவர். ஏறத்தாழ 30 ஆண்டுகளாக வந்துகொண்டிருக்கும் காலம் இதழில் அவரது எழுத்துகளாக இருப்பவை மிகவும் குறைவு. ஒரு பயணியின் மனநிலையை வெளிப்படுத்தும் அவரது எழுத்துகள் தமிழின் ஒரு புதுவகை எழுத்துமுறை;புனைவும் புனைவுமல்லாத வகைமாதிரி. அவ்வகை மாதிரி போர்க்கால வாழ்க்கையையும் புலம்பெயர் அலைவுகளையும் சம அளவில் பதிவுசெய்யத் தொடர்ந்து உதவிக்கொண்டே இருக்கிறது. அதனை வாசிக்கும்போது ஒவ்வொருவரும் உணரமுடியும்.
தனது முதல் தொகுதிக்கு எழுதித்தீராத பக்கங்கள் என்று தலைப்பிட்டிருந்தார் செல்வம். அதன் தொடர்ச்சியாக இந்தத் தொகுதிக்குச் சொல்லித் தீராத சுமைகள் என்று தலைப்பிட்டிருக்கலாம் என்று தோன்றியது.
செல்வம் அருளானந்தம்
சொற்களில் சுழலும் உலகம்
காலச்சுவடு, 2019, ரூ.160/ பக்.160



எழுதித்தீராத பக்கங்கள் குறித்து2016 இல் எழுதிய முகநூல் குறிப்பு


செல்வம் (காலம்) தனது எழுதித் தீராத பக்கங்களில் முயற்சி செய்திருக்கும் எழுத்துமுறையை 'பகடி'வகைமையின் மாதிரி எனச் சொல்லவேண்டும். பிறரைப் பகடி செய்யும்போது உண்டாவது குதூகலம். தன்னையே பகடிக்குள்ளாக்கும்போது வலியின் ரேகைகள் ஆகிவிடும். ஆயுதப்போராட்டம் உறுதியாவதற்கு முன்பே ஐரோப்பாவிற்குப் போன ஈழத்தமிழர்களின் வகைமாதிரியாகத் தன்னை வடிவமைத்துக் கொண்டு செல்வத்தின் அனுபவங்கள் விரிகின்றன. மொழிப்பிரச்சினையைத் தாண்டி அவர்கள் சந்தித்தப் பண்பாட்டு முரண்களை ஒவ்வொரு கட்டுரையிலும் முன் வைக்கிறார். மது பாவித்தல், பெண்ணுடல் பற்றிய பார்வை, உணவுமுறையென அடிப்படையான வேறுபாடுகளைச் சந்திக்கும்போது எப்படிக் கடந்து சென்றார் என்பதை வாசிப்பவர்கள் மனதிற்குள் சிரித்துக் கொண்டே வாசிக்கலாம். தூரத்தில் இருந்தபடி விடுதலைக்காக நடந்த போராட்டம்/போர்க்களங்கள் பற்றிய குழப்ப மனநிலைகளை அப்படி வாசிக்க முடியாது. ஒவ்வொரு கட்டுரையையும் வேறுவேறு மனநிலைகளுடன் வாசிக்கும்படி நெருக்கடி தரும் எழுத்தாக இருக்கிறது. இந்த வகையில் இன்னும் எழுதுவதற்குச் செல்வத்திடம் அனுபவங்கள் இருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

நாயக்கர் காலம். இயல்.2.பொருளாதார நிலைகளும் உறவுகளும்

மேல்நோக்கியும் கீழ்நோக்கியும்