நெல்லையோடு சில ஆளுமைகள்

 
சுந்தரராமசாமி

நிகழ்வதற்கு முன்பாகவே அந்த மரணம் தகவலாகத் தெரிவிக்கப்பட்டது. காலச்சுவடு அலுவலகத்திலிருந்து இணையம் வழியாக அதனைச் சொன்னவர் அதன் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த அரவிந்தன். அரவிந்தனின் தகவல் எடுத்த எடுப்பிலேயே சு.ரா. இறந்துவிட்டார் எனச் சொல்ல வில்லை. அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் தொடர்ந்து கவனிக்க வேண்டிய நோயாளிகளுக்கான பகுதியில் அனுமதிக்கப் பட்டுள்ளார் என்று தான் சொல்லியது. ஆனால் நான் என்னவோ அதனை மரண அறிவிப்பாகவே எடுத்துக் கொண்டு உரையாடல்களைத் தொடங்கி யிருந்தேன்.எனது குடும்ப உறுப்பினர்களில் மகள் சினேக லதாவுக்கு மட்டும் அவரது இலக்கிய ஆளுமையின் சில அடுக்குகள் தெரியும்.மற்றவர்களுக்கு அந்தப் பகுதிகள் தெரியாது. என்றாலும் அவரது வீட்டிற்கு ஒரு முறை போயிருக்கிறோம். அனைவருக்கும் அந்த வீடு அறிமுகம். அந்த வீட்டைப் பற்றிய நினைவுகளும் உண்டு. அத்துடன் என்னுடைய பெயரும் அவருடைய பெயரும் ஒன்றாக இருப்பது நினைவில் நிற்கக் கூடுதல் காரணம். அந்தத் தகவல் வந்த அன்று எங்கள் வீட்டு காலைச் சாப்பாட்டு நேரத்தில் நிலவிய சோகத்திற்கு வேறு காரணம் எதுவும் இல்லை.ஆனால் ஒரு வாரத்திற்குப் பின் உயிர்மையின் இணைய முகவரியில் எனது கட்டுரையை இணைத்துக் கொண்டிருந்த அதிகாலை நேரம் கவிஞர் மனுஷ்ய புத்திரனிடமிருந்து அந்தத் தகவல், குறுஞ்செய்திக் குறிப்பாக (SMS) வந்தது. அதைப் படித்த போது வருத்தம் அதிகமாகவில்லை. உடனே போக வேண்டும் என்ற பரபரப்பும் ஏற்படவில்லை. அவரது உடல் சொந்த ஊருக்குக் கொண்டுவரப்படுமா என்ற சந்தேகம் இருந்தது. நண்பர்கள் சிலருக்கு அந்தக் குறுந்தகவலை அப்படியே திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தேன். சு.ராவின் புதல்வர் கண்ணனிடம் தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று கூடத் தோன்றவில்லை.

சுந்தரராமசாமியைக் கடைசியாகப் பார்த்தது ஒன்பது மாதங்களுக்கு முன் ஒரு ஞாயிற்றுக்கிழமையின் முற்பகலில் (ஜனவரி 2005). ஆழிப்பேரலைக்கு முதல் நாள் (2004 டிசம்பர் 25) அவருடைய வீட்டில் நடந்த ஐம்பதாவது திருமண நாளன்று புதுச்சேரியிலிருந்து நண்பர் ரவிக்குமார் வரவில்லை. அதனால் அடுத்த மாதம் விடுதலைச் சிறுத்தைகளின் சிந்தனையாளர்கள் அரங்கில் கலந்து கொள்ள வந்த போது சு.ரா.வைப் பார்க்கப்போகலாம் என்று சொன்னார். போனோம். எங்களுடன் தலித் இதழின் ஆசிரியர் குழுவில் உள்ள நண்பர் ஜவஹரும் வந்தார். போகும் போதே அந்த மாதம் காலச்சுவடில் வந்திருந்த பிள்ளை கெடுத்தாள் விளை எழுதப் பட்டிருந்த முறையைப் பற்றிப் பேசிக் கொண்டே போனோம். அந்தப் பேச்சை முதலில் ஆரம்பித்தவர் ஜவஹர். எழுதி யெழுதிப் பழகிய கைக்குத்தான் இத்தகைய லாவகம் வரும் போலும் என்று அவர் சொல்ல, நாங்கள் மேலும் சிலாகித்துக் கொண்டே போனோம். சுந்தரராமசாமியைச் சந்¢தித்து உரையாடிய போதும் பேருந்தில் பேசியவற்றை திரும்பவும் சொன்னோம். சமீபத்தில் வாசித்த நல்ல கதைகளில் ஒன்று எனச் சொன்னபோது அவர் வழக்கம் போலச் சந்தோசப் படவில்லை. இந்தக் கதையையும் எதிர்நிலையாக வாசிக்கப்படக் கூடும் எனச் சொன்னார். அவர் சொன்னபடி நடந்தது. தலித் முரசு இதழ் முன்னின்று அந்தக் கதைக்கு எதிராகக் கிளப்பிய அமளியும் எதிர்வினைகளும் தமிழ் இலக்கியச் சூழலில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட அரசியலின் வெளிப்பாடுகள் என்றுதான் சொல்ல வேண்டும். ஐம்பத்தைந்து ஆண்டுக்கால இலக்கிய வாழ்வில் இத்தகைய எதிர்ப்பையும் பாராட்டையும் வேறு எந்தக் கதைக்காகவும் பெற்றிருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.

1980-களின் முன்பாதியில் மதுரைக்குப் பல எழுத்தாளர்களைக் கொண்டு வந்த இலக்கிய அமைப்பு சந்திப்பு. சுரேஷ் குமார் இந்திரஜித் பொறுப்பில் நடந்த அவ்வமைப்பின் ஒரு கூட்டத்தில் தான் சுந்தரராமசாமியை நேரில் பார்த்தேன். அவரைப் பார்ப்பதற்கு முன்பே கதைகளில் பெரும்பாலானவற்றை வாசித்திருந்தேன். மதுரை அமெரிக்கன் கல்லூரித் தமிழ்த்துறையில் பட்டப்படிப்பு படித்ததால் இந்த வாய்ப்பு ஏற்பட்டிருந்தது. தமிழ் இலக்கியம் படிக்கிற மாணவன் ஒருவன் பட்டப்படிப்பை முடிக்கும்போது படித்து முடிக்க வேண்டிய நூல்கள் என்றும், ஆசிரியர்கள் என்றும் ஒரு பட்டியலைச் சொல்வார் பேரா.சாமுவேல் சுதானந்தா. இப்பொழுது அக்கல்லூரியின் முதல்வராக இருக்கிறார். சிறுகதையில் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி என்று ஆரம்பித்து நீளும் அந்த வரிசை.அப்போதைய பாடத்திட்டத்திற்கு அப்பால் உள்ள பலரின் அறிமுகத்தைச் செய்வதுதான் அவரது வேலை.

அந்தக் கல்லூரி ஆச்சரியம் ஊட்டும் ஒரு கல்லூரி.இன்று திரைப்படத் துறையிலும் நாடகத்திலும் இலக்கியத்திலும் இயங்கிக் கொண்டிருக்கும் பலரை உருவாக்கிய கல்லூரி. ஒருவாரம் முழுக்க ஜெயகாந்தனுக்கு ஒதுக்கி அவரது கதைகள், நாவல்கள், கட்டுரைகள், பிறவகை எழுத்துக்கள் என்று பேசியதோடு ஒவ்வொரு நாள் மாலையிலும் அவரது சினிமாக்களையும் திரையிட்டு விவாதித்தது. இது நடந்தது இருபது வருடங்களுக்கு முன்னாலேயே. பத்தாண்டு களுக்கு முன்னாள் சுந்தரராமசாமியின் படைப்புகளையும் அப்படிக் கொண்டாடியது. சாமுவேல் சுதானந்தா ஊட்டி விட்ட பழக்கத் தால் சில பேருடைய எழுத்துகளை அச்சில் பார்த்த உடனேயே படித்து விடும் நோய் தொற்றியிருந்தது. கடைசி வரை விடாமல் தொடரும் நோயாக இருந்தவர் சு.ரா. அவரது பல கதைகளைத் திரும்பத் திரும்ப வாசித்திருக்கிறேன். நாவல்களையும் தான். திரும்ப வாசித்ததற்குப் பல காரணங்கள் இருந்ததுண்டு.

அவரது கதைகளுள் பல்லக்குத்தூக்கிகள் நாடகமாக ஆக்கப்பட்டது என்றாலும் அதற்கு முன்பு அவரது பல கதைகள் வாசிக்கப்பட்டன. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் என்னுடைய பெயரை இலக்கியப் பத்திரிகைகளும் அதில் உழலும் இலக்கியவாதிகளும் நினைவில் வைத்துக் கொண்டது கூட அவரது பல்லக்குத் தூக்கிகள் கதையை நாடகமாக ஆக்கி மேடையேற்றிய பின்புதான். நீளமானதும் பலதள ஆளுமைகள் கொண்டதுமான அவரது பெயர் தந்த நிழல் எனக்கும் அடையாளம் தந்தது. கதையை நாடகமாக ஆக்கி ஒத்திகைகள் நடத்திக் கொண்டிருந்த சுதேசிகள் குழு நாடகத்தைப் பார்க்க அவரை அழைக்கலாம் என்று முடிவு செய்தது. சும்மா நாடகம் பார்க்க வாருங்கள் என்றால் வருவாரா என்ற சந்தேகம் இருந்தது. நாடகம் சரியாகப் பிரதியாக்கப் பட்டிருக்கிறது என்று தெரிந்தால் ஒருவேளை வரக்கூடும் என்று கருதி ஒத்திகைப் பிரதியைத் திரும்பவும் சரி செய்து டைப் அடித்து அழைப்புக் கடிதத்துடன் அனுப்பி வைத்தோம். அவர் வரவில்லை. ஆனால் கடிதம் மட்டும் வந்தது. பல்வலி காரணமாக வர இயலவில்லை. பிரதியாக்கியதற்கும் மேடையேற்றத்திற்கும் பாராட்டுக்கள் என்று எழுதியிருந்தார். 31-12-1988 இல் முதல் மேடையேற்றம் பெற்ற அந்த நாடகம் கடைசியாக சென்னையில் அவரைப் பல கோணங்களில் புகைப்படம் எடுத்த புதுவை இளவேனிலின் புகைப்படக் கண்காட்சியின் நிறைவு நாளில் (ஜுன், 2004) மேடையேற்றம் கண்டது.
நானே அந்த நாடகத்தை நான்கைந்து குழுக்களை வைத்து இருபது தடவைக்கு மேல் மேடையேற்றி விட்டேன். அவற்றில் ஒன்றைக் கூட அவர் நேரில் பார்க்க வில்லை என்பது வருத்தமாகத் தான் இருக்கிறது. ஆனால் அவரது நண்பர்கள் பலர் பார்த்துச் சொன்னதிலிருந்து திருப்தியுடன் இருந்தார் என்பது தெரியும். அந்த நாடகம் எனது நாடகங்கள் விவாதங்கள் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. நூல் அச்சானவுடன் அவருக்கு அனுப்பி வைத்தேன். அப்பொழுது அவர் சிங்கப்பூருக்குப் போக இருந்தார். பத்து பிரதிகளை வாங்கிக் கொண்டு போய் அங்கு நண்பர்களுக்குக் கொடுத்து விட்டு வந்து, ‘ நீங்கள் ஒருவேளை சிங்கப்பூருக்குச் சென்று அங்குள்ள நடிகர்களைக் கொண்டு அந்த நாடகத்தைத் தயாரிக்க வேண்டியிருக்கும்’ என்று தொலைபேசியில் சொன்னார். இது நடந்தது 1993 - இல். நாடகத்திற்குப் புறம்பான சில காரணங்களால் அது நடக்க வில்லை.

பல்லக்குத் தூக்கிகள் நாடகம் தான் தமிழ்நாட்டில் பல்வேறு நாடகக் குழுக்கள் மேடையேற்றிப் பார்த்த நாடகம் என்று நினைக்கிறேன். இடதுசாரிகளின் புரட்சிகர அரங்கு, தன்னார்வக் குழுக்களின் வீதி நாடகம், மனநோயாளிகளுக்கான அரங்கு, உளவியல் நோய் நீக்கப் பயிற்சி அரங்கு எனப் பலவிதமான அரங்கியல் செயல்பாடுகளுக்கான பிரதியாக அந்தப் பல்லக்குத் தூக்கிகள் இருந்தது என்பது உண்மை. நண்பர் ஞாநி மேடையேற்றியதுடன் அல்லாமல் தான் இயக்கிய தொடரின் உச்சகட்ட நிகழ்வாக அந்த நாடகத்தைத் தான் வைத்தார். இத்தகைய கவனிப்பையும் ஏற்பையும் அந்தப் பிரதி பெற்றதற்கு என்னுடைய பிரதியாக்கத்தோடு அவரது பெயரும் கதையின் கட்டுமானமும் கூடக் காரணம் தான்.

மிகச் சமீபத்தில், சுந்தரராமசாமி அமெரிக்கா போனபிறகு ஒருநாள் கண்ணன் தொலைபேசியில் கூப்பிட்டு அப்பாவோட ஜெ.ஜெ.சில குறிப்புகள் நாவலை நாடகமாக ஆக்க முடியுமா..? மேடையேற்ற முடியுமா..? என்று கேட்டார். உடனடியாகச் செய்துவிடலாம் என்று சொல்லவில்லை. யோசித்துப் பார்க்கலாம் என்று மட்டும் சொன்னேன். சு.ரா. இவ்வளவு சீக்கிரம் மரணத்தைச் சந்திப்பார் என்று தெரிந்திருந்தால் அதை நாடகமாக ஆக்கி அவரிடம் காட்டியிருக்கலாம். அவரது சிறுகதைகளில் பத்துக் கதைகளையாவது நாடகம் ஆக்க முடியும். முயற்சி செய்தால் இருபது கதைகளைக் குறும்படங்களாக ஆக்க முடியும் என்றுதான் தோன்றுகிறது. தேர்ந்த நடிகரகளுக்கு முதலில் கதைகளை வாசிக்கக் கொடுத்துவிட்டு அவர் உருவாக்க நினைத்த வெளிப்பாட்டு நிலைகளையும் உணர்வுகளையும் அதிலிருந்தே உள்வாங்கச் செய்ய வேண்டும். அவர்களோடு அந்தக் கதைகளைக் குறித்து கதைகளாகவே விவாதிக்க வேண்டும். பிறகு நாடகப பிரதிக்குள் அல்லது திரைப்படப் பிரதிக்குள் அழைத்துச் செல்ல வேண்டும். இத்தகைய படைப்பாக்க முறையைத்தான் பல்லக்குத் தூக்கிகள் கதையில் செய்தோம். உடனடிப் புகழ், வங்கிக் கணக்கில் மாதத்திற்குச் சிலபல லட்சங்களைச் சேர்ப்பது, தனியார் தொழில் நிறுவனங்கள் தரும் விருதுகளைப் பெறுவது, அதன் தொடர்ச்சியாக அரசியலில் ஈடுபாடு காட்டுவது என நகரும் நமது சூழலில் இத்தகைய படைப்பாக்க முறைகள் நடக்குமா என்பது சந்தேகம் தான்.

சுந்தரராமசாமியின் இறுதிநாள் நிகழ்வில் கலந்து கொண்ட கூட்டம் எனக்குத் தமிழகத்தை உலுக்கிய சில இறுதிச் சடங்குகளை நினைவூட்டியது. தமிழ் நாட்டின் பெருந்தலைவர்களான அண்ணாதுரையும் எம்.ஜி.ராமச்சந்திரனும் தான் அவர்கள். மரணத்திற்குப் பிந்திய அவர்களின் உடல்கள் அமெரிக்காவிலிருந்து வந்து இறங்கின என்பதற்காக நான் நினைவுக்கு கொண்டு வரவில்லை. அப்படி வரும் வரை உண்டாக்கப் படும் மனநிலைக்காகத் தான் நினைத்துக் கொண்டேன். நிகழ்ந்த விட்ட மரணத்தின் உடனடிப் பதற்றத்தொடு அந்த உடலை அடக்கம் செய்வது என்பதாக இல்லாமல், நினைத்துக் கொள்ளவும் அந்த மரணத்தைக் கொண்டாடவும் கால இடைவெளிகளைத் தந்த இறுதிச் சடங்குகள் இவை. சனிக்கிழமை அறிவிக்கப் பட்ட சு.ரா.வின் மரணம் அடுத்த வௌ¢ளிக்கிழமை வரை அவரை அறிந்தவர்களுக்குத் துக்கதினங்களாக ஆகியிருந்தன. ஒருவார கால நினைவுகளில் அவரது உடல் பறந்து வந்து கொண்டிருந்தது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் அண்ணாதுரையின் மரணம் பற்றி அதிகம் நினைவில் இல்லை என்றாலும் பலரும் பேசக் கேட்டிருக்கிறேன். எங்கள் கிராமத்திலிருந்து சென்னை செல்ல விரும்பி, மதுரை வரை வந்து மொட்டை போட்டுக் கொண்டு திரும்பியவர்கள் சிலருண்டு. முதல்வராகி ஓராண்டிற்குள் நிகழ்ந்த அண்ணாவின் மரணம் உண்டாக்கியது பெரும் பதற்றம் என்றுதான் பலரும் சொல்கின்றார்கள். அந்த பதற்றம் தான் ரயிலின் கூரையேறித் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியிருக்க வேண்டும். ஆனால் எம்ஜிஆரின் மரணமோ கொண்டாட்டங்கள் தான். கிராமங்கள் தோறும் அவரது படங்களை வைத்து ஒலிபெருக்கிகள் கட்டி, தனித்தனியாகவும் கூட்டங் கூட்டமாகவும் ஒப்பாரி வைத்து அழுது கொண்டாடினார்கள். அவற்றைப் பார்ப்பதற்காக மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சைக்கிளில் சென்றுவந்த நினைவுகள் ஆழமானவை.

திருநெல்வேலியிருந்து நாகர்கோவில் ஒன்றரை மணிநேரப் பயணம். அதனால் வெள்ளிக்கிழமை காலையில் கிளம்பிக் கொள்ளலாம் என்றிருந்தேன். ஆனால் சிலர் புதன்கிழமையே வந்து விட்டனராம். பலர் வியாழக்கிழமை வந்திருக் கிறார்கள். நாகர்கோவிலின் தங்கும் விடுதிகளில் வாடகைக்கு அறைகள் எடுத்துக் கொண்டு அவரைப் பற்றிய பேச்சுக்களும் கொண்டாட்டங்களுமாக கழிந்திருக்கின்றன. 669, கே.பி. ரோட்டில் உள்ள சு.ரா.வின் வீட்டின் முன்னால் சென்ற வாகனங்களை மறித்து ஆர்ப்பாட்டம் செய்த கவிஞனும் எழுத்தாளனும் தமிழ் நாட்டின் உணர்ச்சி பூர்வமான மனிதர்களின் பிரதிநிதிகள் தான். அவரது எழுத்துக்களை வாசித்துவிட்டு அவரைப் போலவே எழுதிப் பழகிய படைப்பாளிகள் தேம்பித் தேம்பி அழுதார்கள். அவர்களின் அழுகையின் வெளிப்பாடு சொன்னது தனது தந்தையை இழந்து விட்ட கண்ணனின் சோகத்தை ஒத்ததுதான்.

தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் படைப்பாளிகள் கிளம்பி வந்திருந்தார்கள். அவரால் அங்கீகரிக்கப் பட்டவர்கள் என்பதாக மட்டும் அல்லாமல் அவரால் வாசிக்கப்படாத எழுத்தை எழுதியவர்கள் கூட வந்திருந்தார்கள். அவரது படைப்புகளைப் பொருட்படுத்திப் பேசியவர்களும் நிராகரித்துப் பேசியவர்களும் எனக் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவரது சமகால எழுத்தாளர்கள், அதற்கடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் என்பதாக இல்லாமல் இப்பொழுது தான் இரண்டு கதை அல்லது கவிதை எழுதி அச்சில் பார்த்த படைப்பாளியும் வந்திருந்தது தான் சு.ரா.வின் ஆளுமை. இவர்கள் அனைவருமே சு.ரா.வோடு நேர்ச் சந்திப்பில் பேசியிருப்பார்கள் என்று கூடச் சொல்ல முடியாது. ஆனால் அவரது படைப்புகளோடு உரையாடி இருக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது. தமிழ் நாட்டில் ஒரு எழுத்தாளனுக்கு அவனது இறுதி ஊர்வலத்தில் இவ்வளவு எழுத்தாளர்கள் கலந்து கொள்வது இதுவே முதலும் கடைசியுமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

இன்று (22-10-05) மதியம் ஊர் திரும்பும் வழியில் கவிஞர் அப்பாஸும், திறனாய்வாளர் முருகேச பாண்டியனும் வீட்டிற்கு வந்தார்கள். நேற்று நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் பலரும் சு.ரா.வின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று பேசியதாகச் சொன்னார்கள். வழக்கமாக இந்த மாதிரிக் கூட்டங்களில் விரும்பிப் பேசும் முருகேசபாண்டியன் நேற்றுப் பேசவில்லை என்றார். பேசியிருந்தால், சுந்தரராமசாமியின் இடம் இன்னொருவரால் ஈடு செய்ய முடியாத இடம் என்றாலும் ஈடுசெய்யப்பட வேண்டிய இடம் என்று சொல்லியிருப்பேன் என்றார். அந்த இடத்தை யார் இட்டு நிரப்புவார்கள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை


கவிஞர் பாலா

பாலச்சந்திரன் என்னும் நீண்ட பெயரைச் சுருக்கி நண்பர்கள் பாலா என அழைத்த போது அதைத் தனது கவிப்பெயராக ஆக்கி விடும் ஆசை அவருக்கு இருந்திருக்குமா எனத் தெரியவில்லை. இதை அவரிடமே கேட்டு உறுதி செய்து கொள்ளலாம் என நினைத்தாலும் இனி இயலாது. அந்தப் பெயருக்கும், அந்தப் பெயர் விட்டுவிட்டுப் போயிருக்கும் பதிவுகளுக்கும் சொந்தக்காரரான பாலச்சந்திரன் இப்போது நம்மோடு இல்லை. மூன்று வருடங்களுக்கு முன்னால் நான் பணியாற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் ஆங்கிலத்துறையிலிருந்து பணி ஓய்வு பெற்ற போது இனி அவர் செய்ய வேண்டிய பணிகளை நினைவுபடுத்தி அனுப்பி வைத்தோம். அதில் ஒன்றிரண்டைக் கூட முடிக்க விடாமல் காலம் தனது கணக்கை முடித்துக் கொண்டு விட்டது.

நான் மதுரைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் படித்துக் கொண்டிருந்த போது பாலாவை அவரது புத்தகங்களின் வழியாகச் சந்தித்தேன். புதுக்கவிதை ஒரு புதுப் பார்வை என்ற நூல் அப்போது தான் அன்னம் வெளியீடாக வந்திருந்தது. புதுக்கவிதை என்னும் வஸ்துவை விளங்கிக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அது குறித்துப் பேசுவதற்கான தளமொன்றை உருவாக்கித் தந்த புத்தகம் என்ற அளவில் அந்த நூல் கல்வித்துறை வட்டாரத்தில் அங்கீகாரம் பெற்றது. புதுக்கவிதைக்கான அங்கீகாரத்தை உருவாக்கித்தந்த புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை, பாலா என்ற பெயரையும் அங்கீகரிக்கப் பட்ட எழுத்தாளர் என்ற நிலைக்கு உயர்த்தியது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அங்கீகாரத்தின் தொடர்ச்சியை அவரது இன்னொரு நூலான சர்ரியலிசம் உறுதிப்படுத்தியது. வானம்பாடிகளின் பொதுக் குணமான ’ பெருங்கூட்டத்தை நோக்கிப் பேசும்’ புறநிலைக் கவிதைகளையே பாலாவும் எழுதியுள்ளார். அவர் எழுதிய கவிதைகள் தரும் வாசிப்பனுபவத்தை விட அவர் மொழி பெயர்த்த கவிதைகள் தரும் வாசிப்பனுபவம் ஒரு படி உயர்ந்தது என்றே சொல்ல வேண்டும். வித்யாபதியின் காதல் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். தனது இலக்கியத் தேர்வை மையமாகக் கொள்ளாமல் நண்பர்களின் வேண்டுகோளை நிறைவேற்றுதல் என்ற நெருக்கடி காரணமாக அவர் ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தவை பலவும் காத்திரமான இலக்கியப் பகுதிகளாக இல்லாமல் இருந்தன. என்றாலும் அவரது மொழி பெயர்ப்புகள் மூலமும், ஆங்கிலக் கட்டுரைகள் மூலமும் தமிழின் பிரபலக் கவிஞர்களான சிற்பி, மு.மேத்தா, மீரா, வைரமுத்து, தமிழ் நாடன் போன்றவர்கள் பிறமொழியாளர்களின் கவனத்துக்குச் சென்றுள்ளனர். அவரது ஆங்கிலப் புலமையை முழுவதும் பயன்படுத்தித் தமிழின் வளமான கவிதைகளையும் புனைகதைகளையும் ஆங்கிலம் வழியாக சர்வதேசக் கவனத்திற்குக் கொண்டு போயிருக்க முடியும். அதை ஒரு கோரிக்கையாக வைத்துத் தான் நான் பல்கலைக்கழகப் பணி ஓய்வின் போது வழி அனுப்பினேன். அது நடக்காமலேயே போய்விட்டது

அரசுக் கல்லூரியொன்றில் ஓர் அறிவியல் ஆசிரியராகப் பணியைத் தொடங்கித் தனது இலக்கிய வாசிப்பு, எழுத்தார்வம், ஆசிரியர்கள்,இலக்கிய நண்பர்கள் போன்றோரின் தூண்டுதல் போன்ற காரணங்களால் இலக்கியத்திற்குள் வந்தவர் பாலா. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிப்பதிலும், பேசுவதிலும் பெருவிருப்பம் கொண்டு இலக்கிய மாணவராக மாறி, ஆங்கிலம் கற்று கல்லூரி ஆசிரியராகி, நிறைவாகப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வரை உயர்ந்தவர். அவர் பணியாற்றும் இடங்களில் எப்போதும் ஒலிபெருக்கியின் முன்னால் ஒரு சங்கீதத்தின் தாளலயத்துடன் ஒலித்துக் கொண்டே இருக்கும் . தாங்கள் வாங்கும் சம்பளத்திற்கான கடமையைக் கூடச் செய்யத் தயங்கும் நிலை வளர்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் அவர் பணியாற்றும் நிறுவனங்களில் பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வேலைகளைச் செய்வதில் அவர் ஒருவித லயிப்பைக் கொண்டிருந்தார். அத்தகைய வேலைகளைச் செய்பவர்களுக்குச் சில நேரங்களில் அந்த நிறுவனம் பொறுப்பான பதவிகளை வழங்குவதுண்டு. அப்படியான பல வாய்ப்புகள் வந்தபோதெல்லாம் அதை ஏற்றுக் கொள்ளாமல் விலகி நின்றவர். அத்தகைய பதவிகள் தனது இலக்கியம் சார்ந்த, தனிமனித சுதந்திரம் சார்ந்த வேலைகளில் ஈடுபட முடியாமல் கட்டிப் போட்டுவிடும் என்ற உண்மையைப் புரிந்து வைத்திருந்தது தான் காரணம்.

அதே நேரத்தில் பல்கலைக்கழகப் பேராசிரியர் என்ற தகுதி வழியாகக் கிடைத்த சாகித்ய அகாடெமியின் ஆலோசனைக்குழு உறுப்பினர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பை மட்டும் தட்டிக் கழிக்கவில்லை. சாகித்ய அகாடெமியில் பாலா பதவி வகித்த காலத்திலும் அதன் சர்ச்சைக்குரிய செயல்பாடுகளும் விருது அறிவிப்புகளும் விமரிசனத்துக் குரியனவாகவே இருந்தன. அவர் பொறுப்பில் இருந்த போது சாகித்ய அகாடெமி ஏராளமான கருத்தரங்குகளை நடத்தியது என்றாலும், அதன் பொதுவான போக்கில் பெரிய மாற்றம் எதுவும் நடந்து விடவில்லை.தமிழ் நாட்டில் அங்கீகரிக்கும் இடத்தில் இருப்பவர்களுக்கு எது சரியான இலக்கியம் என்ற புரிதல் இருந்த போதிலும் அதனை அங்கீகரித்து வளர்த்தெடுக்க வேண்டும் என்ற ஆசையை அவர்கள் வெளிப் படுத்துவதில்லை. அப்படியான ஆசையை வெளிப்படுத்தாமல் போவதற்குப் பல்வேறு புறச்சூழல்களும் காரணமாக இருக்கின்றன. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் கருத்துகள், நம்பிக்கைகள், தான் சார்ந்த குழுக்களையும் குழுவின் உறுப்பினர்களையும் மேலே தூக்கி விடும் நோக்கம் ஆகியனவும் காரணங்களாகி விடுகின்றன. இவைகளையெல்லாம் இன்று முழுவதும் பலவீனம் என்று சொல்லி விட முடியாது. பல நேரங்களில் அவை ஆளுமையையும் அதிகாரத்தையும் தருவனவாக இருக்கின்றன.

பல்கலைக்கழகத்திற்குள் நட்போடும், இலக்கிய வெளியில் முரண்பாடுகளும் வேறுபாடுகளும் பழகும் நண்பராக இருந்த பாலா இப்போது இல்லை என நினைக்கும் போது இனி வேறுபாடு கொண்டு விவாதிக்க ஒருவர் இல்லை என்ற வருத்தம் துரத்திக் கொண்டிருக்கிறது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

நாயக்கர் காலம். இயல்.2.பொருளாதார நிலைகளும் உறவுகளும்

மேல்நோக்கியும் கீழ்நோக்கியும்