இயல்பானதும் இயைபற்றதுமான இரண்டு திரைப்படங்கள்:
வகைப்படுத்திப் புரிந்துகொள்ளுதல், விளக்குதல், விமரிசனம் செய்தல், மதிப்பீட்டுக் கருத்தை முன்வைத்தல் என்பன கலை இலக்கிய விவாதத்தை முன்னெடுப்பவர்கள், கடைப்பிடிக்கும் எளிய உத்தி. முன்னெடுப்பு அல்லது சோதனை முயற்சிப் படங்களில் வளர்நிலைப் பாத்திரங்களுக்குப் (Round Characters) பதிலாகத் தட்டையான பாத்திரங்களின் (Flat Characters) அகநிலை விவாதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
அந்த விவாதத்தின் முரண்களும் முடிவுகளுமே அவற்றின் விளைவுகளாகவும் எதிர்பார்ப்புகளாகவும் இருக்கும். அவ்வகையான முரண்களையும் விவாதங்களையும் அறியாத - விரும்பாத பார்வையாளத்திரள்கள் விலகிப் போய் விடுவார்கள். இதற்கு மாறாகக் கதைப்படங்கள் குறைந்தது ஒன்றிரண்டு பாத்திரங்களையாவது வளர்நிலை கொண்ட பாத்திரங்களாக உருவாக்கிக் காட்டுவதால் தான் அவை கதைப் படங்கள் என்ற வகைப்பாட்டுக்குள் வருகின்றன. இவ்விரண்டும்- வானம் கொட்டட்டும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் - கதைப்படங்கள் தான். ஒன்று கதையைச் சொல்லத்தெரியாதபடம்; இன்னொன்று கதையே இல்லாமல் கதைசொன்ன படம்
வானம் கொட்டட்டும்
மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் வந்துள்ள வானம் கொட்டட்டும் படத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு பாத்திரமும் வளர்நிலைப் பாத்திரங்களாக முயன்று ஓரடி எடுத்து வைத்து விட்டுப் பின் தங்கித் தட்டையாகவே நீண்டுள்ளன. கிராமம் சார்ந்த தலைமுறையின் (சரத்குமார், ராதிகா, பாலாஜி சக்திவேல், பங்காளிகள்) பாசம், கோபம், பழிவாங்கல், மனமாற்றம் என்பதைச் சொல்ல வேண்டுமென்றால் அதற்கான கதைப் பின்னணி தேனியாக மட்டுமே அமைந்திருக்கலாம். சென்னை, ஆந்திரா, கோயம்பேடு, பெரும் பணக்காரரின் வீழ்ச்சியடைந்த வியாபாரம் என்பது தேவையில்லாதவை. தங்கள் முன்னேற்றம் மட்டுமே முதன்மையானது என நினைக்கும் நிகழ்காலத் தலைமுறையை( விக்ரம் பிரபு - மடோனா செபாஸ்டியன்- ஐஸ்வர்யா ராஜேஸ் ப்பற்றிய படம் என்றால் சிறையிலிருந்து திரும்பிய சரத்குமாரின் செயல்பாடுகளை நியாயப்படுத்த வேண்டிய காட்சிகள் தேவையில்லாதவை.
உச்சக்காட்சிகள் தொடர்ந்து மழைபெய்யும் நேரங்களில் நடக்கின்றன என்பதைத் தாண்டி ‘வானம் கொட்டட்டும்’ என்ற தலைப்புக்கும் படத்துக்கும் இடையே எந்தவிதத் தொடர்பும் பொருத்தமும் இல்லை. அரைமணி நேரத்திற்கொரு மோதல் மற்றும் முரண்பாடுகளை உருவாக்கி ஒன்றையும் வளர்ச்சி அடையச் செய்து முடிவை நோக்கி நகர்த்தாமல் ஒவ்வொன்றையும் அப்படி அப்படியே விட்டுவிட்டுப் போகும் திரைக்கதை அமைப்பு இதுவரை மணிரத்னத்தின் எந்தப் படத்திலும் இருந்ததில்லை. இயக்குநர் தனசேகரனின் பார்வைக்கோணம் எதுவென்று புலப்படவே இல்லை.
குறிப்பான வெளிகளாக - பின்னணிகளை அமைப்பதற்குக் குறிப்பான காரணங்கள் இருக்க வேண்டும். காமிராவில் படம் பிடிப்பதற்கும் காட்சிப் படுத்துவதற்கும் ஏற்றவை என்பதற்காகவே தேனி, சென்னை பார்முனையின் குறுக்குத்தெரு, கோயம்பேடு, காய்கறிச் சந்தை மற்றும் ஆம்னிபஸ் ஆந்திராவின் நெல்லூருக்குப் போகும் சாலை போன்றன இப்படத்தில் அமைந்துள்ளன. அதற்கான காரணங்களும் இயைபுகளும் எதுவுமில்லை
விசால் நடித்த அயோக்கியா படத்தைப் பார்த்தபோது உண்டான அலுப்பும் சலிப்பும் வானத்தைக் கொட்டட்டும் பார்த்தபோது பரவாயில்லை என்றாகிவிட்டது.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்..
கண்டுகொள்ளாமல் விட்டுவிடு...
தேசிங் பெரியசாமி இயக்கத்தில் வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள- கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் - என்ற சினிமாவை என்னவகையான படம் என்று சொல்வது? தொடர்ச்சியாக மதிப்பீட்டை முன்வைக்கலாம்
காதல் படம் என்று சொல்லலாமா? சொல்லலாம்.
காதலில் விழுந்து கல்யாணத்தில் திருப்தி அடைவதற்காகக் கண்ணுக்குத் தெரியாத கொள்ளைகளைக் கவனமாகச் செய்யலாம் என்பதே படத்தின் செய்தி. சொல்லும் செய்தியை வைத்தே வகைப்பாடு செய்யப்படுகிறது என்பதால் இது காதல் படம் என்றே வகைப்படுத்தத்தக்க படம். ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பது நீதியை வலியுறுத்துவதற்காகவே என்பதால் பழமொழி நானூறு என்ற நூலை நீதிநூல் அல்லது அறநூல் என்றுதானே வகைப்படுத்தியிருக்கிறோம். இரண்டு இளம் பெண்களைச் சுற்றிச் சுற்றிவரும் இரண்டு ஆண்களின் காமங்கொப்பளிக்கும் பார்வைகள், நெருங்குதல், பேச்சுகள், திட்டமிடல்கள் என நிரம்பி வழியும் காட்சிப்படுத்துதல் வழியாக மொத்தப்படமும் காதல் படம் என்றே உணர்த்துகின்றது.
இந்நால்வர் மட்டுமே காட்சிகளில் இடம் பெறுகிறார்கள் என்றால் காதல் படம் என்று விட்டுவிடலாம். இவர்களைக் காவல் துறை துரத்திக்கொண்டே இருக்கிறதே? அப்படியானால் காதல் படம் மட்டுமல்ல; கள்ளன் -போலீஸ் த்ரில்லர் படம் என்றும் சொல்லலாம்
பெரிய சம்பளம் கிடைக்கும் வேலை கிடைக்காத கணினிப் பொறியாளர்கள் இருவர். அவர்களின் வசமாகும் இரண்டு இளம்பெண்களின் காதலும், கல்யாணத்தில் இணைவதும் காட்சிகளாகியிருக்கின்றன. இந்நால்வர் மட்டுமே காட்சிகளில் இடம்பெறுகிறார்கள் என்றால் காதல் படம் என்று விட்டுவிடலாம். இவர்களைக் காவல் துறை துரத்திக்கொண்டே இருக்கிறதே? அப்படியானால் காதல் படம் மட்டுமல்ல; கள்ளன் -போலீஸ் த்ரில்லர் படம் என்றும் சொல்லலாம்
அன்றாடச் செலவுகளுக்காகத் தங்களுக்குத் தெரிந்த கணினித் தொழில் நுட்ப அறிவைப்பயன்படுத்தி ஒரு சொகுசுக்கார், சிறியஅடுக்கக வாழ்க்கை என நகர்ந்துகொண்டிருந்த இளைஞனின் அன்றாட நகர்வில் ஒரு திருப்பம். அத்திருப்பத்திற்குக் காரணம் தன்னிடம் இல்லாத குணங்களைக் கொண்ட பெண்ணின் மீதான கவன ஈர்ப்பு. கடைசிநேரத்தில் எதையும் செய்யும் - திறமையாகச் செய்து முடித்து விடும் தனது திறமையான அறிவைப் பொறுப்புள்ள ஒரு பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டால் வாழ்க்கை இனிதாகி விடும் என நினைக்கும் இளைஞனின் காதல் தான் தொடக்கம். திரும்பத் திரும்பப் பார்க்கவைக்கும் ஒரு பெண்ணின் வனப்பு.அவள் தனது வேலைகளில் காட்டும் நேரத் துல்லியம். அழகூட்டும் தொழிலில் முதியவளுக்கும் பணி செய்யும் சேவை மனப்பான்மை. உழைத்துச் சம்பாத்தித்த ஒரு ரூபாயைப் பற்றிய அவளது பெருமிதச் சொல்லாடல்.
இவையே அவன் எதிர்பார்த்த - தன்னிடம் இல்லாத குணங்களாக அவளை அவன் முன் நிறுத்துகிறது. அவளது புன்சிரிப்பும், ஏற்பும், உடன் பயணமும் உடனடியாகக் காதலைச் சொல்லச் சொல்கிறது. எல்லா வேலைகளிலும் உதவியாக இருக்கும் நண்பனின் உதவியோடு காதலை நிறைவேற்றிவிடலாம். காதலிக்கப்படுபவளுக்கு ஒரு தோழியும் இருக்கிறாள். அவளை நண்பனுக்குக் காதலியாக்கிக் கொள்ளலாம். நிறைவேறிய காதலை முழுமையான வாழ்க்கையாக மாற்ற ஒரு பெரிய பணம் தேவை.கோடிக்கும் கீழே; பல லட்சங்கள். இணையவழி வணிகத்தில் இருக்கும் விதிகளைப் பயன்படுத்தி விரைவாக மோசடிகள் செய்து, தொகையைத் திரட்டிக்கொண்டு கோவா போய் ஹோட்டல் ஆரம்பித்து வாழ்க்கையைத் தொடரலாம் என்பது திட்டம். திட்டங்கள் கச்சிதமாக நிறைவேறுகின்றன.
தெரிந்தே தவறு செய்யும் இரண்டு இளைஞர்கள், அப்பாவிகளான இரண்டு பெண்கள், திருட்டுத் தனமாகச் சேர்த்த பணம். கோவாவில் ஒரு விடுதியில் முதல் நாள். இவர்களின் திருட்டுத்தனத்தால் தனது மகளின் உயிரைப் பறிகொடுக்க இருந்த காவல் அதிகாரியின் மோப்பம்; விரட்டல், அவரும் கோவா வருகை. விடுதிக் கதவை உடைத்து நுழைந்து தேடுதல். இளைஞர்கள் இருவரும் சிக்குதல். பெண்களிருவரும் தப்பியிருத்தல். காவல் அதிகாரி தேடிவந்தது இவர்களிருவரின் திருட்டுத்தனத்தைக் கண்டுபிடிக்க அல்ல; அந்தப் பெண்களின் ஏமாற்றுத்திட்டங்களை அம்பலப்படுத்த என்பதோடு இடைவேளை.
இடைவேளைக்குப் பின் திருடிகளும் திருடன்களும் போடும் திட்டங்களால் நகர்கிறது. . ஏமாற்றுக் காரர்களின் செயல்திட்டங்கள். கச்சிதமாக நடத்தும் துல்லியத் தாக்குதல்கள், ஒருகோடி பணத்தைத் திருடும் நகர்வுகள். அனைத்திலும் செயல்படுவது நவீனத் தொழில் நுட்பம் -டிஜிட்டல் மூளைகள்- பெரிய அதிர்ஷ்டம் ஒருகோடிப் பணம் என்பது இந்தியப் பணம் அல்ல; டாலர். அப்படியானால் 71 கோடி இந்தியப்பணம். அதை வைத்திருப்பவனும் குற்றத் தொழில் - மருந்து மாபியா-செய்பவன். அவனிடமிருந்து திருடுவது தப்பில்லை. திட்டமிடல் சரியாக முடிந்துவிட்டால் திருடா - திருடிகள் சேர்ந்து வாழ்க்கையை அனுபவிக்கலாம். நிலையாக ஓரிடத்தில் அல்ல. குற்றச்செயல்களைக் கண்டுகொள்ளாத நாடுகளான தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில். அவர்களைத் துரத்தும் காவல்துறையின் அதிகாரியான சக்ரவர்த்தி பொறுப்பான அதிகாரியாகப் பின் தொடரவில்லை. தன்னைக் காதலிப்பதாகச் சொல்லி ஏமாற்றிய அந்தப் பெண்ணைப் பழிவாங்கவே பின் தொடர்கிறார். இத்தோடு படம் முடிந்துவிடுகிறது.
குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டார்கள் எனப் படத்தில் காட்சிகள் இல்லை. விசாரித்துத் தண்டனை வழங்கப்பட்ட நீதிமன்றக்காட்சிகள் இல்லை. சில ஆண்டுகளுக்குப் பின் ஒரு ஆசிரமத்தில் சேவை செய்யும் வயதானவர்களாக அந்த நால்வரும் இருந்தார்கள் எனப் படம் காட்டவில்லை. இப்படிக் காட்டுவதும், காட்சிகள் வைப்பதும் பழைய படங்கள். சட்டம் தாமதாகவேனும் கடைமையைச் செய்துவிடும் எனச் சொல்லிப் பொய்யான நம்பிக்கையைத் தருவது தேவையில்லை என நினைப்பது நமது காலத்தின் உண்மை.
நமது காலத்தின் உண்மையை - யதார்த்தைக் கண்களுக்கான இன்பத்தைத் தரும் காட்சிகளால் நிரப்பித்தருவது புதுவகைப்படம். சென்னையைப் போன்ற இந்தியப் பெருநகரங்கள் பலவகையான வெளிகளை - உண்மைகளை- மனிதர்களைக் கொண்டிருக்கின்றன. வீடற்றவர்களாகப் பாலத்து ஓரங்களிலும் நள்ளிரவுக்குப் பின் தெருவோர நடை பாதையிலும் வாழிடத்தைக் கொண்டிருப்பவர்கள். அவர்களுக்குள் உழைப்பவர்கள் இருக்கிறார்கள் . வழிப்பறிக்காரர்களாகவும் உடலைக் கொடுத்துப் பணம் பெற்றுக்கொள்ளும் பெண்கள் விபச்சாரத் தொழில் செய்யும் குற்றவாளும் இருக்கிறார்கள். அழுக்கும் கிழிசலுமான ஆடைகளோடு குடிசைகளிலும் குடிசை மாற்றுவாரிய வீடுகளிலும் வாழ்பவர்களிலும் உழைக்கும் கூட்டமும் இருக்கிறது. குற்றம் செய்து கும்பி நிரப்பும் கூட்டமும் இருக்கிறது. .அவர்களின் வாகனங்கள் கூட்டம் நிரம்பிவழியும் நகரப்பேருந்துகளும் மின்சார ரயில் பெட்டிகளுமாய் இருக்கின்றன. வாரச்சம்பளம், மாதச்சம்பளம் வாங்கிக்கொண்டு நடுத்தரவர்க்க ஆசைகளோடு இருசக்கரவாகனம், சேர் ஆட்டோ பயணம் முடிந்தால் வாடகைக் கார் என அலைபவர்களிலும் உடல் உழைப்பில் ஈடுபடுபவர்களும் ஏமாற்றுக்காரர்களும் இருக்கிறார்கள். அதற்கும் மேலே உயர் நடுத்தரவர்க்கம். சொந்தவீடு, அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு பகுதி. அப்புறம் புறநகரில் ஒரு தனிவீடு ஆசை. இதற்கும் உழைத்தால் மட்டும் போதாது. சிலவகையான குற்றங்களைச் செய்துதான் ஆகவேண்டும்.
இவற்றையெல்லாம் தாண்டி பெரும் பங்களாக்கள், சொகுசுக்கார்கள், திறன்பேசி வழிப் பணப்பரிவத்தனைகள், பெரும்பயணங்கள்; இணைகளை மாற்றிக்கொள்ளுதல், குடித்தல், கொண்டாடுதல், குற்றமனத்தைத் தொலைத்துவிட நினைத்துக் கடவுளைக்கொல்லுதல் என ஒருகூட்டமும் இருக்கிறது. இந்த உலகத்திற்குத் தண்டனைகள் இல்லை. கொண்டாட்டங்களே உண்டு. அந்த உலகத்தின் நுழைவாசலைக் காட்டுகிறது கண்ணுங்கண்ணும் கொள்ளையடித்தால். திகட்டத் திகட்டக் காட்சி இன்பத்தைத் தருகிறது. திடுக்கிடும் வசனங்களால் கேலியும் அங்கதமும் தெறிக்கின்றன. நினைத்துப் பார்க்காத - கற்பனை செய்ய முடியாத வசதிகளும் வளங்களும் இருப்பதைக் காணமுடிகிறது.
பார்க்கலாம்; பார்த்துவிட்டுத் திளைப்பொடு திரும்பலாம் என்று நினைத்து விடக்கூடாது. திளைத்துவிட்டுத் திரும்பமுடியாது. ஏனென்றால்
எல்லாம் உண்மைகள்; எல்லாம் நடப்புகள்; எல்லாம் இருப்புகள்.
கருத்துகள்