ஆவணப்படங்கள்-நோக்கங்கள், அழகியல், திசைவிலகல்கள்
ஆவணப்படங்கள் என்பன பிரச்சினையை முன்வைத்து தீர்வை வேண்டி நிற்பன. பிரச்சினைகளின் தன்மைகளைப் போலவே தீர்வுகளும் விதம்விதமானவை. பிரச்சினைகள் ஒவ்வொருவர் முன்னாலும் நிகழ்வனதான். நீண்ட காலமாக நடந்துகொண்டே இருப்பனவற்றைப் பார்க்கும் கண்கள் இல்லாலமல் வெகுமக்கள் தங்கள் பாடுகளுக்குள் தங்களைக் கரைத்துக்கொண்டு நகர்ந்து கொண்டிருக்கும்போது அதன் வரலாற்றையும் இருப்பையும் ஆவணப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் ஒரு ஆவணப்பட இயக்குநர் அதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு, தரவுகளைத் திரட்டித் தரும் வேலையைச் செய்கிறார். அத்தகைய ஆவணப்படங்களில் இயக்குநரின் பார்வைக்கோணம் தொடங்கி, அழுத்தம் கொடுப்பது, விவரிப்பது எனப் பலவற்றில் தீவிரத்தைக் கொண்டுவரமுடியும். அதற்கு மாறானவை தற்காலிகப் பிரச்சினைகள். திடீரென்று தோன்றும் விபத்து, பேரிடர், போன்றவற்றை ஆவணப்படுத்தும்போது காட்சிப்படுத்துவதில் குறைகள் இருக்கலாம். விவரிப்பதில் போதாமைகள் இருக்கும். தீர்வு கோருவதில் கூட முடிவான ஒன்றைச் சொல்லமுடியாமல் போகலாம். இந்த வேறுபாட்டைப் புரிந்துகொண்ட மனநிலையோடுதான் ஆவணப்படங்களைப் பார்க்கவேண்டும். இங்கே நான் பார்த்த சில தமிழ் ஆவணப்படங்களைப் பற்றிய அறிமுகங்களைக் காணலாம். ஆவணப்படங்களைப் பார்த்த சூழலோடு சொல்கிறேன்
1] அருள் எழிலனின் பெருங்கடல் வேட்டத்து
2] அமுதனின் "டாலர்சிட்டி"
3] சக்ரவர்த்தியின் பிளவுண்ட நகரம்
4]சோமிதரன் முள்ளிவாய்க்கால்,
5]திவ்யபாரதியின் கக்கூஸ்
6] லீனாவின் மாத்தம்மா, பறை, பலிபீடம், அலைகளைக் கடந்து
7.]காஞ்சனை சீனிவாசனின் - நதியின் மரணம்
ஆவணப்படக்காரராக எப்போதும் உணரும் தன்னிலை உடையவர் அமுதன். அவரது படங்களையும் செயல்பாடுகளையும் நீண்ட காலமாக அறிவேன். இப்போது பார்த்த படம் "டாலர்சிட்டி" .திருப்பூர் என்னும் தொழில் நகரம் பற்றிய 70 நிமிடப் படம். குறைவான எண்ணிக்கையில் பார்வையாளர்கள். முடிந்தபின் படத்தோடு தொடர்பற்ற பல கேள்விகளுக்கும் தொடரபுடைய சில கேள்விகளுக்கும் பதில்கள் சொன்னார்.
தொடர்ந்து பத்திரிகையாளர் அருள் எழிலனின் பெருங்கடல் வேட்டத்து. ஓகிப் புயல் பாதித்த குமரி மாவட்ட மேற்குக் கடலோரக் கிராமங்களின் கொந்தளிப்பான பேச்சுகளைப் பதிவு செய்துள்ள 60 நிமிடப்படம். அவரது பத்திரிகையாள நண்பர்கள் திரளாக வந்தனர். படம் முடிந்தபின் இரண்டு ஊடகக்காரர்கள் உரையாற்றினார்கள்.
இரண்டுபடங்களையும் பார்த்தபின் எனக்குள் ”இன்னும் ஏன் இந்த விளையாட்டு?" என்ற வினா? தான் எழுந்தது. தனியார் உற்பத்தி வழியாகவே எல்லாம் நடக்கும் எனற நம்பிக்கை கொண்ட அரசு, எல்லாச் சட்டங்களையும் நடைமுறைகளையும் தாராளமாகத் திறந்துவிட்டுக் கொண்டிருக்கும் அரசு அதனை வெளிப்படையாகச் சொல்லிவிட ஏன் தயங்க வேண்டும்? உலக அளவில் போட்டிபோடும் இந்திய முதலாளிகளை உருவாக்குவதை இலக்காகக் கொண்ட அரசுகள் இன்னும் ஏன் சமூகநல அரசுகள் என்று பாவனை செய்கின்றன?
நலத்திட்ட அரசு,உள்வாங்கும் அரசியல், மனிதநேய முகம் போன்றன உலக மயத்தோடு இணைந்து ஓடும் ஓர் அரசின் அடையாளமாக இருக்க முடியாது. அதன் போக்கிலான வேகமான வளர்ச்சித்திட்டங்களே அதன் அடையாளமும் இருப்பும். அவற்றை உருவாக்க எட்டுக்கால் வேகத்தில் வேலைகள் நடக்கின்றன. இதனை வெளிப்படையாகச் சொல்லி மக்களை ஏற்கும்படி செய்ய வேண்டும். அரசின் நிகழ்ச்சி நிரல்களில் அதை வைத்துக்கொண்டு வெளியில் மக்கள் நல அரசாகப் பாவனை செய்வது ஏமாற்றுகளும் வேஷங்களுமாக அல்லாமல் வேறென்னவாக இருக்க முடியும்?.
அரசின் இந்தப் பாவனைகளைப் புரியாமல் செயல்பாட்டாளர்களும் கலைஞர்களும்கூடக் குழம்பி நிற்கிறார்கள். தங்களின் மௌனக் குரல்களின் வெக்கையும் ஆவேசப் பதிவுகளின் எதிர்பார்ப்புகளும் பெருந்திரளை நோக்கித் திருப்பப்படாமல் அரசமைப்புகளை நோக்கியே நீள்கின்றன. அந்த நோக்கில் இவ்விரண்டு படங்களும் நடந்து போன பெருவெளி நிகழ்வுகளின் சில துணுக்குகளை ஆவணப்படுத்தியுள்ளன.
அமுதனின் படம் யாரிடம் இதனை முறையிடுவது என்ற கேள்வியை எழுப்பாமல் இப்படியாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்லி விட்டு விலகி விடுகிறது. அருள் எழிலனின் தெரிந்தே சிலுவைகளையும் ஆணிகளையும் தயாரித்து மக்களுக்கு வழங்கும் அரசுகளோடு பேச முயல்கிறது. இதற்கு மாறாக திரள்மக்களின் மனச்சாட்சிகளோடு உரையாடல் நடத்தும் ஆவணப்படமொழியை- சொல்முறையைக் கண்டு பிடிக்கும் தேவையை உணர்ந்தாகவேண்டும். இல்லை என்றால் இவைகளும் இன்னொரு பாவனை வெளிப்பாடுகளாகக் கருதிக் கடக்கப்படும்.
======================================
பொதுவும் சிறப்புமாக நகரும் பிம்பங்கள் : சில தமிழ் ஆவணப்படங்களை முன்வைத்து.
வாரத்திற்கு இரண்டுக்கும் மேற்பட்ட புனைவுப் படங்களைப் பள்ளிப்படிப்புக்காலம் தொடங்கிப் பார்த்துவருகிறேன். பார்த்து முடித்தபின் குப்பையானதொரு சினிமாவைப் பொறுமையாகப் பார்த்துமுடித்துவிட்டோமே என்று பாராட்டிக்கொள்ளும் மனம், இப்போதும் ஆவணப் படங்களைப் பார்க்கும்போது அப்படியொரு பாராட்டைத் தனக்குத்தானே வழங்கிக் கொள்வதில்லை. அதற்கான காரணங்கள் இவைதான் என்றும் சொல்லமுடியவில்லை. பள்ளிக்காலப் பழக்கம் அல்லது கொண்டாட்டம் புனைவுப்படங்கள் என்றால் ஆய்வுப் பட்டக்காலத் தேடலே ஆவணப்படங்கள். ஆவணப்படங்களைப் பார்க்கச் செல்லும்போது ஒரு தளர்வான மனநிலை உருவாவது அண்மைக்கால மனநிலை என்று சொல்லமுடியாது. தொடக்கக் காலங்களில் அப்படியொரு தளர்வு மனநிலை இருந்ததில்லை. பாண்டிச்சேரியில் இருந்த காலங்களில் நடந்த ஆவணப்பட விழாக்கள், திரையிடல்கள் வழியாக உருவான தளர்வு மனநிலை, ஆவணப்படங்களைப் பார்க்கவேண்டும் என்ற விருப்பத்தைக்கூட விலக்கிவிட்டன. புனைவுப் படங்களைப் பார்க்கத் தொடங்கிப் பல ஆண்டுகளுக்குப் பின்பே ஆவணப்படங்கள் பார்க்கும் வாய்ப்புகள் உருவானது. இப்படித்தான் இருக்கும் என்ற முன் அனுமானமின்றைப் புனைவுப்படங்களைப் பார்க்கப்போவதுபோல ஆவணப்படங்களைப் பார்க்கப் போகமுடியாது என்பது ஒருபெருந்தடையாகவே இருக்கிறது.
எப்போதும்போல இந்தத் திரையிடல்கள் நிகழ்வையும் முன்னரே எனக்குத் தெரிவிக்கவே செய்தார். எனக்குக் கடைசிநாள்தான் போக முடிந்த்து. இந்தத் திரையிடல்களில் காண்பிக்கப்பட்ட 19 படங்களில் பாதிக்கும் மேல் முன்பே பார்த்தவைகளே. என்றாலும் ஒரே நேரத்தில் பார்த்தால் அவற்றை முன்வைத்து ஆவணப்படங்கள் உருவாக்கும் தளர்வுமனநிலை குறித்து விரிவாகப் பேசியிருக்க முடியும். நெல்லை மாதிரியான கிராமந்தர நகரத்தில் வசிக்கும் என்னைப் போன்ற மனிதர்களுக்கு அந்த வாய்ப்புகள் குறைவுதான். சென்னைவாசிகளுக்கும்கூட அது சாத்தியம் என்று சொல்லமுடியாது. ஆனால் அமுதன் சென்னைவாசிகளுக்குத் தொடர்ந்து அத்தகைய வாய்ப்புகளை உருவாக்கத்தந்துகொண்டே இருக்கிறார். அதுவும் இலவசமாகவே உருவாக்குகிறார் என்பதுதான் ஆச்சரியம்.
தமிழ்வெளியைக் களமாகக் கொண்ட இந்த ஆவணப்படங்களில் சோமிதரன், வெங்கடேஷ் சக்ரவர்த்தி, திவ்யா பாரதி ஆகியோரின் மூன்று படங்களை முக்கியமான படங்களாகச் சொல்லவேண்டும். அவை கவனப்படுத்தியுள்ள நிகழ்வுகளுக்காக அல்லாமல் அவை சொல்லப்பட்ட முறை அல்லது கிளத்துதல் காரணமாகவும் அடுக்கப்பட்டு முன்வைக்கப்பட்டுள்ளதற்காகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. சினிமாக்கள் அவை புனைவாக இருந்தாலும் ஆவணப்படமாக இருந்தாலும் அடிப்படைகள் ஒன்றுதான். பிம்பங்களாலும்(Images), நகர்வுகளின்வழி காட்சிப்படுத்தப்படும் உத்தியாலும்(Movements of Camera) , அவற்றை வெட்டியடுக்கப்படும்(Editing and Montage) நிலைபாட்டாலும் முன்வைக்கும் சொல்முறையாலும்(Narratology) கவனிக்கப்பட வேண்டிய கலைவடிவம். இதனை உணர்ந்தவர்களாக இம்மூன்று இயக்குநரும் வெளிப்பட்டுள்ளனர் என்பதாலேயே கவனிக்கத்தக்க படங்கள் எனச்சொல்லத் தோன்றுகிறது.
தமிழ்நாடு என்னும் மொத்த நிலப்பரப்பிலும் குறிப்பிட்ட ஒரு தொழிலில் ஈடுபடும் மனிதக்கூட்டத்தின் மீது நடத்தப்படும் பலதள வன்முறைகளைச் சொற்களாகவும் காட்சிகளாகவும் நிகழ்வுகளாகவும் அடுக்கிக் காட்டியுள்ளது. மதுரை, விழுப்புரம், விருதுநகர், திருநெல்வேலி எனப் பலநகரங்களிலும் மலம் அள்ளும் தொழிலில் ஈடுபடும் மனிதர்களுக்குச் சட்டப்படி கிடைக்கவேண்டிய சலுகைகள், உரிமைகள் போன்றவற்றை மறுக்கும் நிலைக்குப் பின்னே இருக்கும் ஒதுக்கல்களை முன்வைக்கிறது திவ்யாபாரதி படம். இந்திய சமூகத்தின் கட்டமைப்பை உருவாக்கியுள்ள சாதியக் கருத்தியலே, நிகழ்கால அரசியலையும், அரசுகளையும் அதனை இயக்கும் மனிதர்களிடமும் ஆழமாகப் படிந்து கிடக்கிறது என்பதைச் சொல்லும் குரல்கள் நேரடியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஆனால் கேள்விகள் முழுவதும் அமைப்புகளை நோக்கியே நீள்கின்றன. இதற்குப் பதிலாகப் பார்வையாளர்களை நோக்கியும் ஆழமான கேள்விகள் நீண்டிருக்க வேண்டியன. ஏனென்றால் மலங்கழித்தல் அதனைச் சுத்திகரித்தல் என்பது இந்திய சமூகத்தில் நிகழும் ஒன்று மட்டுமல்ல. உலகம் முழுவது நடக்கும் ஒன்று. பெரும்பாலான நாடுகளில் இது ஒரு தொழிலாகவும் பாதுகாப்பான கருவிகள் மூலமும் நடக்கும்போது இந்தியாவில் / தமிழ்நாட்டில் அப்படி நடக்காமல் தடுக்கப்படுவதில் செய்வதில் அமைப்புகள் மட்டுமே பொறுப்பேற்கவேண்டியன என்பதை விடவும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பொறுப்பு இருக்கிறது. இந்திய சமூகத்தை விழிப்படைந்த சமூகமாக - நாகரிகமடைந்த சமூகமாக - மனித உரிமைகளைப் பேணும் சமூகமாக ஆக்குவதற்கான கல்வியைத் தராமல் திசைதிருப்பும் கல்வி நிறுவனங்களுக்கு இதில் முக்கியமான பங்கு உண்டு. இதுபோன்றவற்றை அடிப்படைக்கல்வியாகக் கற்பிக்கத் தவறும் நமது கற்பித்தல் முறை கோளாற கற்கைமுறை. அதன்மீதும் இப்படம் கவனம் செலுத்தியிருக்கவேண்டும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்க இந்தப் படத்தின் சொல்முறையில் சிறிய மாற்றம் ஒன்றைச் செய்திருந்தாலே போதும்.
கக்கூஸ் பொதுவிலிருந்து சிறப்புக்குள் நகர்வதின் மூலம் மற்ற படங்களிலிருந்து வேறுபடுகிறது. அதன் மூலம் ஆவணப்படம் என்ற வகைப்பாட்டிலிருந்து புனைவுப்படம் என்ற வகைக்குள் நகரும் சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது என்றுகூடச் சொல்ல்லாம். மதுரை ஆரப்ப்ப்பாளையத்தில் தான் நேரடியாகச் சந்தித்த அனுபவத்திலிருந்து உந்துதல் பெற்றுதான் இந்தப் பெரும்படத்தைத் தமிழ்நாடென்னும் பரப்பில் எடுத்துள்ளார். இந்தக்கூறு - தூண்டுதல் தரும் அந்த நிகழ்வு சிறப்புப் புள்ளி. அதுவே மொத்தப்படத்தையும் பொதுத்தள விவாதமாக மாற்றும் முயற்சியாக விரித்துள்ளது. முள்ளிவாய்க்கால் சாஹா, சென்னை: பிளவுபட்ட நகரம் மற்ற இரண்டு படங்களிலும்கூட இந்தப் பொது மற்றும் சிறப்பு என்ற தளங்கள் செயல்படவே செய்துள்ளன. சென்னையை மதம் சார்ந்த நிகழ்வுகளைச் சிறப்புக்கூறுகளாகக் கவனப்படுத்தி அவற்றைத் தக்கவைக்க முயலும் பாரம்பரியச் சென்னை வெளியால் விரிந்துகொண்டிருப்பதின் மூலம் பின் நவீனத்துவ வெளியோடு மோதிப்பார்ப்பதை - பிளவுண்ட நகரமாகக் காட்டுகிறது. முள்ளிவாய்க்கால் சாஹாவிலும் போரின் குரூரமாக நகரும் தகவல் பிம்பங்களின் மீது குரல் பதிவாக நகரும் (Voice Over) கேள்விகளும் விவரணைகளும் பொது- சிறப்புத் தளங்களை உருவாக்குகின்றன. இப்படியான அடுக்குதல் மூலம் ஆவணப்படங்கள் உருவாக்கும் தளர்வுநிலையை இல்லாமல் ஆக்கும் வலிமையைக் கொண்டனவாக ஆகியிருக்கின்றன இந்த மூன்று படங்களும். இப்படங்கள் தமிழர்கள் பார்க்கவும் விவாதிக்கவும் வேண்டிய படங்கள்
லீனா மணிமேகலையின் படங்கள்
தமிழ் சினிமா தொழில் நுட்ப அளவிலும் வணிக நிலையிலும் உலக அளவில் போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்துள்ளன எனத் தமிழ் சினிமாவின் சூத்திரதாரிகள் தங்களைத் தாங்களே மார்தட்டிக் கொள்வதைப் பத்திரிகைகளில் படித்திருக்கக் கூடும். ஆனால் அந்த வளர்ச்சி நியாயமான வளர்ச்சியா? தேவையான வளர்ச்சியா? என்ற கேள்விகளைத் திரைப்படத்துறையினரும் கேட்டுக் கொள்வதில்லை; நமது பத்திரிகைகளும் எழுப்புவதில்லை. ஆனால் பெருமிதங்கள் மட்டுமே எப்போதும் கொப்பளித்துக் கொண்டு தானிருக்கின்றன. அதே நேரத்தில் தமிழ்த் திரைப்பட உலகம் திரைப்படக் கலை சார்ந்த பெருமிதங்களை உருவாக்கவே இல்லை என்றும் சொல்லி விட முடியாது.
இரண்டு வருடத்திற்கு முன்னால் வந்த வெயில் திரைப்படமும் பருத்தி வீரன் திரைப்படமும் முக்கியமான திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டன என்பதும், உலக சினிமாக்களின் பட்டியலில் இடம் பிடித்தன என்பதும் பெருமை பட்டுக் கொள்ளும் செய்திகள் தான். அதிலும் குறிப்பாக அமீர் இயக்கிய பருத்தி வீரன் ஜெர்மன் தேசத்தில் நடந்த திரைப்பட விழாவில் கவனிக்கப்பட்ட படமாக இருந்தது என்பது தமிழர்கள் பெருமை கொள்ள வேண்டிய ஒன்று. தமிழ் நிலப் பரப்பில் , தமிழ் மாந்தர்களின் அச்சில் உருவாக்கப்பட்ட பாத்திரங்களின் கோபமும் அன்பும் கலந்த மன உணர்வைப் பேசிய இவ்விரு சினிமாக்களின் கலையாக்கம், வாழ்க்கை நோக்கு, நிகழ்காலத் தேவை குறித்து ஆயிரம் விமரிசனங்கள் இருந்தாலும் இத்தகைய படங்கள் தமிழ் மொழியில் எடுக்கப் பட்டுள்ளன என்பதற்காகத் தமிழர்கள் பெருமை அடைவது தவறாகாது.
புனைவுச் சினிமா சார்ந்த இத்தகைய பெருமிதங்களைப் போல ஆவணப் படம் சார்ந்த பெருமை ஒன்றும் தமிழுக்குக் கிடைத்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் மும்பையில் நடந்த 10 ஆவது ஆவணப் படவிழாவில் இந்திய அளவில் சிறந்த ஆவணப் படமாகத் தமிழ்ப் படம் ஒன்று தேர்வு செய்யப்பட்டு தங்கச் சிப்பி விருதினைப் பெற்றுள்ளது. தேவதைகள் என்ற அந்த ஆவணப் படத்தை இயக்கியவர் லீனா மணிமேகலை . கவியாக அறிமுகமான லீனா , தொடர்ந்து குறும் படங்கள், ஆவணப் படங்கள் எனத் தனது வேலைகளைத் திட்டமிட்டுச் செய்து வருபவர் லீனா மணிமேகலை பொறுப்பேற்றுச் செயல் படுத்தும் கனவுப் பட்டறையின் ஆவணப் படங்கள் தனியார்மயம்,உலகமயம் போன்ற பேரரசியல் நிலைபாடுகளுக்கு எதிரான மனநிலையைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றன.
மைய நீரோட்டத்தின் கவனத்தைப் பெறாத மனிதர்களையும் நிகழ்வு களையும் தனது ஆவணப் படங்களுக்கான தளமாகக் கருதும் லீனா, தொடர்ந்து அத்தகைய விளிம்புகளை நோக்கியே தனது காமிராவுடன் பயணத்தை மேற்கொண்டு வருபவர். அவரது மாத்தம்மா, பறை, பலிபீடம், அலைகளைக் கடந்து போன்ற படங்கள் தமிழ்ப் பரப்பின் நுண் அலகுகளுக்குள் கவனத்தைத் திருப்பிய படங்கள். எடுக்கப் பட்டுள்ள வடிவத்தில் முதன்மை நோக்கத்திலிருந்து விலகிய தன்மைகள் இப்படங்களில் உண்டு என்று விமரிசனத்தைச் சந்தித்த இந்த ஆவணப் படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட படமாக அவரது சமீபத்திய படம் தேவதைகள் அமைந்துள்ளது. அந்த வேறுபாட்டிற்கும் தொடர்ந்து அவர் காட்டி வரும் சமூக அக்கறைக்கும் கிடைத்த அங்கீகாரமாகவே தங்கச் சிப்பி விருதைக் குறிப்பிட வேண்டும் .
படம் தொடங்கும் போது காலில் மணிக்கொச்சம் என்று சொல்லப்படும் சலங்கையைக் கட்டிக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் உச்சநிலைக் குரலில் வார்த்தைகள் தௌ¤வற்ற பேச்சுக்கள் கேட்கின்றன. ஒரு சிறு குடிசையின் வாசல் படியில் அமர்ந்து பேசும் அந்தப் பெண் லட்சுமி. அவளது வாழ்தலுக்கான தொழில் ஒப்பாரி வைப்பது. ஒப்பாரி வைத்து அழும் தொழிலைத் தொழில் முறையில் செய்து வரும் லட்சுமி அதற்காக எந்தக் குழுவிலும் இணைந்து வேலை செய்பவள் அல்ல. தன்னந்தனியாக அந்த வட்டாரத்தின் இழவு வீடுகளுக்குச் சென்று செத்துப் போனவரின் தகவல்களைப் பெற்றுக் கொண்டு அவற்றை உள்ளடக்கிய பாடல்களைக் கட்டி அவள் எழுப்பும் ஒப்பாரிப் பாடல் இழவு வீட்டின் கவனத்தை ஈர்க்கிறதைச் சரியாகவே படம் பிடித்துள்ளார். லட்சுமியின் ஒப்பாரிப் பாடல் நிகழும் நிலையில் சாவு என்ற நிகழ்வைத் துயரத்தின் ஆழத்தில் செலுத்துவதையும். அதிலிருந்து விலகி களிப்பு மனநிலைக்குள் சூழலைக் கட்டமைப்பதையும் படமாக்கியதின் மூலம் இந்திய/ தமிழ் வாழ்வில் மனித இறப்பு பெற்றுள்ள இடத்தின் தத்துவ விசாரணையையும் முன் நிறுத்தியுள்ளது.
லட்சுமியின் வேலைகளைக் காட்டிக் கொண்டிருக்கும் போதே இன்னொரு தேவதையான சீதராக்கை அவளது படகில் காட்டுகிறது படம். அவளது அவளோடு சேர்ந்து இன்னும் இரண்டு பெண்களும் கட்டுமரத்தில் ஏறிக் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்கின்றனர். அலைகளின் வலிமையால் அலைக்கழிக்கும் கடலுக்குள் படகைச் செலுத்திச் செல்லும் இவர்களது பணி சாதனைகளுக்காகச் செய்யும் அடையாளப் பணி அல்ல. அதுதான் வாழ்க்கை. நாட்டுப் படகைக் கடலின் அலைப்பரப்பில் செலுத்தி வலையை வீசிப் பிடித்துக் கொண்டு வரும் மீன் தொழிலில் ஏற்பட்டுள்ள போட்டியையும் இயந்திரப் படகுகளால் ஏற்பட்ட நிலையையும் சேதராக்கும் அவரது சகப் பணியாளர்களும் விவரிக்கின்ற வாழ்க்கை மெல்ல மெல்ல அவர்களது கைகளில் இருந்து நழுவிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. படகு, கடல் எனப் பயணம் செய்யும் காமிரா திடீரென்று பிணவண்டியை இழுத்துச் செல்லும் கிருஷ்ணவேணியை அவளது பணி இடத்தில் காட்டுகிறது படம்.
கிருஷ்ணவேணியின் பணி சடலங்களைப் புதைப்பது. அவளது பணி சாதாரணப் பிணங்களைப் புதைப்பதல்ல. காவல்துறையின் கவனத்துக் கொண்டு வரப்பட்ட தற்கொலை, கொலை, விபத்து போன்ற நிகழ்வுகளால் உயிரிழந்தவர்களின் பிணங்களைப் புதைப்பது தான் அவளது வேலை. இத்தகைய சாவுகளைத் தழுவியவர்கள் சொர்க்கத்திற்கும் போகாமல் நரகத்திற்கும் போகாமல் ஆவிகளாக அலைவார்கள் என்ற நம்பிக்கை இந்திய சமூகத்தில் மேலோங்கி இருக்கிறது என்பதை நினைத்துக் கொள்ளும் நாம் கிருஷ்ணவேணியின் பணிகளையும் அதோடு சேர்த்துப் புரிந்து கொள்ள வேண்டும். திருவண்ணாமலைக்குப் பக்கத்தில் உள்ள கிராமத்தில் ஒப்பாரியைத் தொழிலாகக் கொண்ட லட்சுமி, ராமேஸ்வரத்தில் மீன் பிடித்து வாழும் சீதராக்கு, புதுச்சேரியில் பிணங்களைப் புதைக்கும் கிருஷ்ணவேணி ஆகியோரின் ஒருநாள் நிகழ்வுகளை மட்டும் வெட்டி எடுத்துக் கொண்டு வந்து பார்க்கும் படி தூண்டியுள்ள லீனா இந்தப் படத்திற்குத் தேவதைகள் எனப் பெயர் சூட்டியதன் மூலம்¢ பெண்ணிய அரசியல் சார்ந்த விவாதத்திற்குள் தனது படத்தை நகர்த்தி விடுகிறார்.
தாங்கள் செய்ய நேர்ந்துள்ள வேலை சார்ந்து எந்த விதக் கேள்விகளுமின்றி வாழ்ந்து கொண்டிருக்கும் மூன்று பெண்களின் வாழ்க்கையில் பெண்களுக்கு நமது அறநூல்களும் இலக்கணிகளும் உரிமையாக்கிய அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்பன தூரப் படுத்தப் பட்டுள்ளன என்பதை மறைமுகமாக உணர்த்துகிறது இந்த ஆவணப்படம்.
ஒரு ஆவணப் படம் அந்த நிகழ்வின் போது எடுக்கப்படும் உண்மைக் காட்சி என்பதை நாம் நினைத்துக் கொண்டால் இத்தகைய காட்சிகளைப் படமாக்குவதில் இருக்கும் சிரமங்கள் புரியக் கூடும். எடுக்கப்பட்ட உண்மைக் காட்சிகளை அடுக்கிக் காட்டுவதின் மூலம் ஒரு இயக்குநர் தனது பார்வைக் கோணத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பை ஆவணப் படம் வழங்கவே செய்கிறது என்ற நிலையில் லீனாவின் பார்வையில் தான் இந்த மூன்று பெண்களின் வாழ்க்கையையும் பார்வையாளர்கள் பார்க்கிறார்கள். அப்படிப் பார்க்கும் பார்வையாளர்களின் மனத்தில் இன்னும் கூடுதலான விசாரணைகளைத் தோற்றுவிக்கும் விதமாகக் காட்சிகள் அடுக்கப் பட்டிருக்கலாம். அப்படி அடுக்கும் போது அவற்றிற்கான பின்னணி இசைச் சேர்ப்பின் வழியாகவும் கூடுதல் விவாதங்களை எழுப்ப முடியும். லட்சுமி வெறியேறி வீழும் படிமக் காட்சியில் முடியும் படம் தொடங்கும் போது இதனோடு தொடர்புடைய இன்னொரு படிமத்தை உருவாக்கியிருந்தாலே மொத்தப் படத்தின் கலைத்தளமும் விவாதத்தளமும் விரிந்திருக்கக் கூடும். இவையெல்லாம் கலைசார்ந்த பிரச்சினைகள். அவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டு இந்த மூன்று பெண்களின் வாழ்க்கையைக் காட்டிய தேவதைகள் படத்தைப் பார்த்த எனக்கு பாரதியின் கவிதை வரி ஒன்று நினைவுக்கு வந்தது. அந்த வரி :யாதானும் தொழில் புரிவோம்; யாதுமவள் அவள் தொழிலாம். மார்ச்- 9
விவரமற்ற விவரணப்படங்கள்
நண்பா் ரவிக்குமாருக்கு,
இந்தக் கடிதத்தை வாசிக்கும்போது நான்கு வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய கடிதம் நினைவுக்கு வரலாம். 28.03.2000 –ல் எழுதப்பட்ட அந்தக் கடிதம் கண்ணில் தட்டுப்பட்டது. அதை வாசித்த போதுதான் இந்தக் கடிதத்தை எழுதவேண்டும் என்று தோன்றிய விவரணப்படங்கள் என்ற பெயரில் துண்டு துண்டாக மூன்று படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. லீனா மணிமேகலையின் இயக்கத்தில் வந்துள்ள மாத்தம்மா, பறை என்ற இரண்டுடன் அமுதன் இயக்கிய பீ என்ற படத்தையும் பார்த்தவுடன் தமிழில் விவரணப்படங்கள் எடுக்க முனையும் ஆா்வலா்கள் வெற்று ஆா்வக் கோளாற்றுடன் அதில் இறங்கிவிடுகிறார்களோ என்று சந்தேகம் தோன்றியது.
மிகச்சிறந்த விவரணப்படங்களை நாம் பாண்டிச்சேரியில் பார்த்து விட்டு புனைவு சார்ந்த கதைப்படங்களை எடுப்பதைவிட ஆவணப்படங்கள் அல்லது விவரணப் படங்கள் எடுப்பதுதான் சிரமமானது; கூடுதல் பொறுப்பையும் புரிதலையும் வேண்டி நிற்பது என்று பேசியதெல்லாம் நினைவில் இருக்கிறது. இதன் காரணமாகவே அந்த நேரத்தில் சில விவரணப்படங்கள் எடுக்கலாம் என்று திட்டமிட்டு விட்டுப் பின்வாங்கினோம்.
அண்ணாமலை நகர் பத்மினியின் வாக்குமூலத்தினை ஒலிநாடாவில் பதிவு செய்துவிட்டு வந்தவுடன் அதை ஒளிநாடாவில் பதிவு செய்திருந்தால் அது என்ன வகையான சினிமாவாக இருந்திருக்கும் என்று நாம்பேசியதன் பின்விளைவாகத் தான். அதை நாடகமாக்கினோம். வார்த்தை மிருகம் என்ற அந்த நாடகத்தின் திரைவடிவப் பிரதிகூட என்னிடம் இருக்கிறது. அவ்வளவு திட்டங்களையெல்லாம் செய்தபின்னும் நாம் திரைப்படமாக்கத் தயங்கினோம் என்பதுதான் நான் சொல்லவருவது.
தாமிரபரணிப் படுகொலையை வைத்து காஞ்சனை சீனிவாசன் எடுத்த நதியின் மரணம் என்ற படமே நமது தயக்கம் அா்ததமற்றது எனச சுட்டிக்காட்டியது. இப்பொழுது நான் பார்த்த இந்த மூன்று படங்களும் நமது தயக்கம் அா்த்தமற்றது மட்டுமல்ல; முட்டாள்தனமானது என்று சொல்கிறது. மிகச்சரியாச் செய்வது மட்டுமே அா்த்தமுடையது என்று நம்பிக்கொண்டிருந்தால் எதையும் செய்யாமல் விட்டுவடுவதுதான் நடக்கும் என்பதற்கு நாம் உதாரணமாக இருக்கிறோம். ஒலிநாடாவில் பதியப்பட்ட அண்ணாமலை நகர் பத்மினியின் வாக்குமூலம் ஒளிநாடாவில் பதிவு செய்யப்பட்டு மனித உரிமை ஆா்வலா்களின் கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டுவிட்டால் அது ஒரு விவரணப்படம் ஆகாது என்பது நமது வாதமாகவும் தயக்கத்திற்குக் காரணமாகவும் இருந்தது. இன்றும் நமது நிலைப்பாடும் அதுதான். ஆனால் இன்று தமிழ்நாட்டில் விவரணப்பட இயக்குநா்களாகக் காட்டிக் கொள்கிறவா்கள் அதைமட்டுமே தான் செய்கிறார்கள்.
கதைப்படங்கள் பண்ணிக் காசு பார்க்கும் ஆசையில் இருக்கும் தமிழ்ப் பட இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் எந்தவிதக் கருத்தியலும், பார்வைக்கோணமும் இல்லை என்று வருத்தப்படுவதும் வேதனைப்படுவதும் விமரிசனங்கள் செய்வது நடந்துகொண்டிருக்கும் இதே நேரத்தில் தங்களுக்கு மிகுந்த அக்கறைகள் – திரைப்படக்கலை சாரந்தும் சமூகம் சார்ந்தும் – இருப்பதாக காட்டிக் கொள்ளும் டாகுமெண்டரி படக்காரா்கள் செய்யும் வேலைகள் ரொம்பவும் பயமுறுத்துவதாக இருக்கிறது. தாங்கள் தோ்வு செய்து படம் பிடிக்கும் ஒன்றின் மீது எந்தவிதக் கருத்து நிலையையும் நிலைபாட்டிடையும் கொண்டிராத இவா்கள் அந்த விஷயத்தின் பிரத்யேகத்தன்மைக்காக மட்டுமே அதைத் தேர்வு செய்கிறார்கள் என்று தோன்றுகிறது. இல்லையென்றால் இப்படி இருக்கலாம்; மோடிவித்தைக்காரணும் குரங்குட்டியும் நகரவாசிகளுக்கு வித்தைகாட்டுவதும் முடிந்தால் ஏமாற்றுவதும் போல இந்தப் படங்களின் உள்ளடக்கம் சார்ந்து எதையுமே அறிந்திராதவா்களிடம் அதனைக் காட்டி தனது தேடலுக்கு (வியாபாரத்திற்கும்தான்) அங்கீகாரம் பெறுவதுடன் நோக்கமாக இருக்கலாம்.
லீலா மணிமேகலையின் இயக்கத்தில் வந்துள்ள மாத்தம்மா படத்தைப் பார்த்தவுடன் நான் அதிர்ந்தே போனேன். அதில் வருகின்ற பெண்களின் குரல் சொல்லும் வார்த்தைகளுக்கும் ஆங்கில வார்த்தைகள் தரும் அா்த்தத்திற்கும் தொடா்பே இல்லை. தேவதாசி மரபு போல பொட்டுக்கட்டி நோ்ந்துவிடும் பெண்ணாக மாத்தம்மாக்களைக் காட்டிவிடுவது என்பது படம் எடுத்தவா்களின் நோக்கமாகவும் படம் எடுக்கத் தூண்டிய தன்னார்வக் குழுவினரின் நோக்கமாகவும் இருக்கிறது. ஆனால் மாத்தம்மாக்களின் குரல் வேறாக இருக்கிறது. கோயிலுக்கு நோ்ந்து விடப்பட்ட எங்களை ஆண்கள் திருமணம் செய்கிறார்கள்; ஆனால் விட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள்; அதனை அடுத்த வரும் காலங்களில் கஷ்டப்படுகிறோம் என்பதாகவே மாத்தம்மாக்கள் கூறுகிறார்கள். ஆனால் ஆங்கில வரிகளோ அவா்கள் மீது ஒருவித பாலியல் ஒடுக்கு முறை இருக்கிறது என்பதைச் சொல்லிவிடவும், மாத்தம்மாக்களைப் பொதுப்பெண்டிராகக் கருதும் சமூக அவலம் இருக்கிறது எனக்காட்டிவிடவும் விரும்புகிறது. அப்படிக் காட்டினால்தான் படம் சமூக அவலத்தைப் படம் பிடித்ததாகக் கருதப்படும் என்ற இவா்களின் நம்பிக்கைக்கு அவா்கள் படச்சுருளே எதிராக இருக்கிறது. அந்தப் படத்தைப்பார்த்தவுடன் எனக்குத் தோன்றிய இன்னொன்றையும் சொல்ல வேண்டும். பெண்களை மாத்தம்மாக்களாகக் கடவுளிடம் நோ்ந்து விடும்போது வித்தியாசமான செடல் திருவிழா நடக்கிறது. மாத்தம்மாவைச் செடல்வழிபாட்டு மூலம் மகிழ்விக்கும் இந்தக்காட்சி நகரவாசிகளுக்கு வித்தியாசமான அனுபவம்தான். ஏதாவது வித்தியாசமாக இருந்தால் நமது ஆவணப் படக்காரா்க்ள படம் எடுக்காமல் விடுவார்களா…..? எடுத்துவிட்டார்கள். அவ்வளவுதான். வித்தியாசமாக இருப்பதாகக் காட்டிக்கொள்ள விரும்புவா்கள் வித்தியாசமாக வாழ்பவா்களைப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்கள். அவ்வளவுதான்.
இதைவிடவும் அபத்தமானது அவரின் இன்னொரு படமான பறை. பறை என்னும் சொல் கடந்த இருபது ஆண்டுகளுக்குள் என்னென்ன அா்த்தத்தளங்களுக்குள் பயணம் செய்திருக்கிறது என்பது படத்தில் வெளிப்பட்டிருக்க வேண்டம். அப்படியானதொரு கோணமோ நோக்கமோ இல்லாமல் வெறும் தகவல்களை அடுக்குவதும், ஆய்வாளா்கள் பொருத்தமற்ற மேற்கோள்களைத் தங்கள் ஆய்வேடுகளில் இணைப்பது போல உதிரி உதிரியாகச் சிலரைப் பேசவைப்பதும்தான் ஆவணப்பட இலக்கணம் என்றாகி இருக்கிறது.
அமுதனின் பீ இவ்விரண்டையும்விடக் கொஞ்கம் ஆறுதல் தரும் படம் பீயை அள்ளிச்சுமக்கும் பெண்ணை அந்த வெளிக்குள் மட்டுமே நிறுத்திக் காட்டியும் அவரது குரலைப் பதிவு செய்ததும பார்வையாளர்களிடம் மௌனத்தை உறைய வைத்து விடுகிறது. அந்தப்படம் நாகரீகமான கழிப்பறைகளில் கழிக்கப்படுவதாகவும் வாழிடத்தின் அருகிலேயே பேழப்படுவதாகவும் இருக்கிறது பீ. அதனை அள்ளிச் சுமந்து ஜீவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. அள்ளிச் சுமந்து வீசிவிட்ட பீ அங்கேயே தங்கி விடுவதில்லை. அவளோடு தொடா்ந்து வருகிறது; என்ற நிலையில், இன்னும் திட்டமிடப்பட்டதான சொல்முறையைத் தோ்வு செய்திருந்தால் பலமான அதிர்வுகளை உருவாக்கியிருக்கக்கூடும்.
தினசரி நீங்கள் பார்க்கிறீா்கள்; ஆனால் உணா்ந்ததில்லை எனக் குற்றம்சாட்டும் அந்தப்படம் பார்வையாளனை அமைதிப்படுத்துவதில் வெற்றி அடைந்திருக்கிறது. இந்த அமைதி சாந்தம் அல்ல; வாயடைப்பு.
28.08.2004 /அ. ராமசாமி
நதிக்கேது மரணம் மரித்தது மனிதா்கள்…….
நண்பா் ரவிக்குமாருக்கு,
வணக்கம், நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தக் கடிதம். “நதியின் மரணம்“ பார்த்து விட்டாச்சா? என்று நீங்கள் தொலைபேசியில் கேட்ட போது நான் பார்த்திருக்கவில்லை. நிகழ்வையம், அதற்குப் பிந்திய சலனங்களையும், அமைதி தவழ்ந்த தெருக்களையும், எதனையும் கண்டு கொள்ளாத மணிதா்களையும், நேரில் அருகிருந்து பார்த்தால் படத்தைப் பார்த்தே தீர வேண்டும் என்ற ஆசை அப்பொழுது இல்லை. ஆனால் அந்தப் படத்தின் இயக்குநா் சீனிவாசன் (காஞ்சனை) சொன்னதாக வந்திருந்த குறிப்பு படத்தைப் பாரத்து விடத் தூண்டியது.
“படத்திலிருக்கும் அரசியலுக்கும், எனக்கும் எந்தவிதச் சம்பந்தமுமில்லை“ என்றது அந்தக் குறிப்பு (குமுதம்; இருட்டு என்பது குறைந்த ஒளி என்னும் புகைப்படக் கண்காட்சியையொட்டிய பேட்டியில்). சீனிவாசன் இப்பொழுது நரிக்குறவா்களைப் பற்றி படம் எடுக்கிறார். சம்பந்தமில்லாமலேயேதான் அவா் படம் எடுத்துக் கொண்டிருப்பார். தான் ஈடுபடும் ஒன்றில் சம்பந்தமில்லாமலேயே ஒரு கலைஞன் ஈடுபட முடிகிறது என்பது நிகழ்கால யதார்த்தமாக உள்ளது. நதியின் மரணம் வீடியோ கேசட் ரகசியமாக உலவுகிறது. அங்கும்கூட உலவக்கூடும். ரகசியமாகத்தான் ஒரு நண்பா் அழைத்துப் போனார். படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. முடிந்தபோது கொஞ்சம் நகைப்பு தோன்றினாலும் இடையில் சில இடங்களில் உலுக்கிவிடத் தான் செய்கிறது.
நதியின் மரணம் மூன்று பாகங்களில் விவரணப்படமாகவும் அதன் முன்னொட்டும், பின்னொட்டும் சோந்து ஒரு புனைவுப்படமாகவும் இருக்கிறது. படத்தின் இயக்குநர் குமுதத்தில் சொன்னதற்குச் சான்று அந்த முன்னொட்டும், பின்னொட்டும்தான் அவைகளைப் பற்றி பின்னா் சொல்கிறேன்.
முன்னொட்டு கலைந்து அழியும்பொழுது திரண்டு வரும் ஊா்வலத்தின் குரல். மனித உடல்கள்…… வரிசை ஒழுங்கைக் குலைத்து நெருக்கியடிக்கும் கூட்டம். அதற்குள் ஒரு வேன். அதில் தலைவா்களின் உருவம். இதனை எதிர்கொள்ள காவல்துறையின் தலைகள்; கவசம் தாங்கிய தலைகள்; தன் உயரக் கம்புகளைப் பிடித்த கரங்கள்; முதுகில் பாதுகாப்புக் கவசங்கள். சிலரிடம் நவீன ரகத் துப்பாக்கிகள்; பலரிடம் பழைய பாணித் துப்பாக்கிகள். ஊா்வலத்தின் நெருக்கத்தை விடப் போலீஸ்காரா்கள் நெருக்கியடித்து நிற்கிறார்கள். உத்தரவுகள் தரப்பட்டனவா….? தாங்களாகவே இயங்கினரா…..? நிற்க வேண்டிய இடத்தில் ஊர்வலத்தினரைத் தடுத்து நிறுத்தாமல் ஆற்றங்கரைக்குச் செல்ல அனுமதித்தது எப்படி? என ஊகிக்க முடியாத கலவரம். தடியடிக்குப் பதிலாகக் கல்லெறி. இருபுறமிருந்தும் சிதறிக்கிடக்கும் செருப்புகள்…. நதியின் பரப்பெங்கும் மனிதத் தலைகள்…… விரட்டிச் செல்லும் போலீஸ்……… அடித்து உதைப்பவா்கள்; ஆடையை இழுந்தவா்கள்; மிதிப்பவா்கள்; நீரில் குதித்தவா்கள்; தள்ளுபவா்கள் எனக் கலவரம் தொடா்ச்சியின்றிப் பதிவாகியுள்ளது. ஒரிடத்திலிருந்து துப்பாக்கி, குண்டுகளை அனுப்புகிறது. அனுப்பிய குண்டுக்குப் பதில். கல்லெறிகள் தன் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாத காவலா்களை அதட்டும் அதிகாரி….. தலைவா்களைச் சுற்றிப் பாதுகாப்பு என அசையும் படங்களுக்கிடையே மனித உடல்கள் கிடப்பதாக, ஆற்றில் அமுக்குவதாகச் சில நிலைப்படங்கள் (Stills) அன்றையக் கலவரம் ஒரு வித வேகத்தில் பதிவாகியுள்ளது. பிறகு அதிகாரிகள் பார்வையிடுகிறார்கள். பிணங்காளக உடல்கள் தேடி எடுக்கப்படுகின்றன. அன்றும் அடுத்தடுத்த நாட்களும் தேடி எடுக்கப்பட்ட மனித உடல்கள். சிதைக்கப்பட்டு நீரில் கிடந்தவை எடுத்துச் செல்லப்படுகின்றன. தலையில் சில காயம் பட்டிருந்தன. கால்களில்….. நெஞ்சில்….. முதுகில்….. இடுப்பில்…….. தொண்டையில்………. குண்டுக்காயங்களும்……… பிரேதப் பரிசோதனைக் கூடத்தில் காமிரா நுழையும் பொழுது பார்ப்பவா்கள் உலுக்கப்படுகிறார்கள். சிதைக்கப்பட்ட உடல்களாகக் குழந்தைகள்….. பெண்கள்….. ஆண்கள்….
அதனைத் தொடா்ந்து வரும் குரல்கள் காத்திரமான சாட்சியங்கள். நதிக்கரையில் மனிதர்கள் உயிர் வதைப்பட்டு உயிரிழந்தார்கள் என்பதை வதைப்பட்டு உயிர்தப்பிய மனிதா்கள் சாட்சியங்கள் சொல்கின்றன. ஒதுக்க முடியாத சாட்சியங்கள் அவை.
புனித நதி மரணமடைந்திருக்கலாம்
நாங்கள் சிந்திய குருதி
அதில் கரைந்தும் போயிருக்கலாம்
கைவிட்டிருக்கலாம்
ஆனால்
எங்கள் நினைவுகள் சாகவில்லை
பதிந்துள்ள முகங்கள் மறந்துவிடவில்லை
உண்மையும் கோபமும்
எங்களிடம் உண்டு
நதியின் புனிதம் வேறு
அா்த்தம் கொள்ளப் போகிறதென.
அவா்கள் சாட்சியமளிக்கிறார்கள்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள்…..
மானம்….. வெட்கம்…. உடல்…. உடை பற்றிய
புனைவுகளையெல்லாம் தூக்கிக் கடாசிவிட்டு
அந்தச் சாட்சியங்கள் நிற்கின்றன.
ஏன் நாங்கள் அடிக்கப்பட்டோம்
அவா்களைக் கொன்றதின் பின்னணியில்
இருப்பது என்ன?
போலீஸின் வெறியாட்டமா…..?
கைக் கூலிகளின் ஆணவமா……?
முதலாளிகளின் பணத்திமிரா……?
இல்லை…….. இல்லை…….
சாதி…… சாதி….. சாதி…….
என்று ஓங்கிச் சொல்கிறார்கள். பிணங்களைப் புதைக்கும் போலீஸை மறிக்கும் போது. சடங்குகள் செய்யும் காவலா்களை விரட்டும்போது. சாட்சியம் சரியாகவே பதிவாகியுள்ளது. உயிருள்ள சாட்சிகளுக்கூடாகச் சில அரசியல்வாதிகள், அரசியல் எண்ணிக்கையை அடுக்கு மொழியில் கூறவும் செய்கின்றனா்.
படம் எழுப்பும் உணா்வுகள் என்ன என்பதாகச் சிலரின் கருத்துரைகள் அடுத்து இடம் பெற்றுள்ளன. பத்திரிகையாளா் ஞாநி, அரசியல் செயலாளி டி. எஸ். எஸ். மணி, ஓவியா் சந்ரு, டாக்டா் எஸ். கிருஷ்ணசாமி ஆகியோரின் கருத்துரைகள் இப்படத்தின் தேவை பற்றிக் கூறுகின்றனா். படத்தைப் பல இடங்களிலும் போட்டு காட்டி விழிப்புணா்வு உண்டாக்க வேண்டும் எனக் கூறுகின்றனா். படத்தைப் பார்வையாளா்கள் இவா்களின் கோணத்தில் வைத்துப் பார்க்கச் செய்து விடும் விபத்து இதில் உள்ளது. பலதளப் பார்வையைத் தவிர்த்து அரசைக் குற்றம் சாட்டும் ஒற்றைத் தொனி ஓங்கி ஒலிக்கும் அந்தக் குரல்களும், காட்சிகளும் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
இப்பொழுது முதல் மற்றும் கடைசிக் காட்சிக்கு வருகிறேன். படம் தொடங்கும்பொழுது ஒரு இளைஞன் இடுப்பளவு நீரில் நிற்கிறான். நதி சுழிப்புகளின்றி அமைதியாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இளைஞனின் சிவந்த உடலில் ஆங்காங்கே திருநீற்றுப் பட்டைகள் பூணூல் இல்லாத சிவப்புடல் இளைஞன். நதியின் போக்கை – ரகசியத்தை – புதிர்களை – புனிதத்தை – அறிந்து கொண்டவனாக நிற்கின்றான். பின்னணிக் குரல் தாமிரபரணியின் பழைமையையும், அது தமிழ்ச்சமூகத்தில் – திருநெல்வேலியின் வாழ்க்கையில் எழுப்பியிருக்கும் கற்பனைகளையும் சொல்லிச் சென்று தேய்கிறது. காட்சி ரூபங்களும் அலைவுற்று மாறிவிடுகின்றன.
கடைசியாகப் படம் முடியும்பொழுது திரும்பவும் நதி சுழிப்பின்றி ஓட அதே இளைஞன் அசையாது நிற்கிறான். கைகளை மார்பில் சோ்த்துக் கட்டியபடி…. பெருமூச்சு விடும்போது உடல் ஏறி இறங்குகிறது. பின்னணிக்குரல், அந்நதியோடு கலந்திருந்த கற்பனைப் புனைவுகளும் குதூகலக் கதைகளும் காணாமல் போய் பிணங்களின் ரத்தம் நதிக்கரையில் படிந்துவிட்டது என ஆதங்கப்படுகிறது. குரலில் கழிவிரக்கம்….
23, ஜுலை, 1999 அன்று நடந்த நிகழ்வுகளை நதியில் கைகட்டி நிற்கும் இளைஞனின் நினைவாகக் கட்டமைக்கும் – வடிவம் கொண்டிருக்கும் படம் விடும் பெருமூச்சு, 17 உடல்களின் மரணத்திற்காக எழுப்பிய ஆவேசமாக இல்லாமல் நதியின் புனைவுகள் மரித்துப் போனதற்கான அமைதிப் பார்வையாக வெளியேறுகிறது எழுத்தில்.
மக்கள் இத்தகைய அதிகார வெறிகளுக்குப் பாடம் நடத்தியதில் பங்கெடுக்காத – லயித்துவிடத் தயாரில்லாத எனக்கு அந்தப் படம் எழுப்பிய உணா்வுகள் இவ்வாறிருக்க.
இந்த வெளியிலிருந்து வெகுதூரம் விலகியிருக்கும் பாண்டிச்சேரி வாசிகளுக்கு – உங்களுக்கு – வேறுவிதமாகத் தோன்றக்கூடும். தூரத்தில் நடந்த ஒன்றை அனுதாபத்தோடு பார்க்கும் நிலைக்குப் பார்வையாளன் தள்ளப்படக்கூடும். யோசித்துப் பாரத்தால் வீடியோ, அழித்துவிட முடியாத சாட்சியங்களோடு அதிகார மையத்தைக் குற்றம்சுமத்த சரியான ஊடகம்தான் என்று தோன்றுகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்….. மக்கள் பாடம் கற்பிப்பார்கள் என்ற நம்பிக்கைகள் இல்லாதபோதும்……
தங்களின்
28.03.2000 அ. ராமசாமி

சென்னைக்கு நான் வந்த வேலை மதியத்துடன் முடிந்தது. நெல்லையிலிருந்து கிளம்பும்போதே அயல் சினிமா நடத்தும் 4 நாட்கள் நிகழ்வுகளில் அரை நாள் இருக்க முடிவு செய்திருந்தேன். நண்பர் அமுதனும் அழைத்திருந்தார். படக்காட்சிகள் நிகழ இருந்த இடம் சென்னை, ரஷ்யன் பண்பாட்டு மையம். இரண்டுமே நீளமான படங்கள் தான். ஒன்று நீண்டுகொண்ட இருக்கும் பிரச்சினையைப் பேசிய படம். இன்னொன்று திடீரென்று உருவான நிகழ்வைப் பற்றிய படம்.
ஆவணப்படக்காரராக எப்போதும் உணரும் தன்னிலை உடையவர் அமுதன். அவரது படங்களையும் செயல்பாடுகளையும் நீண்ட காலமாக அறிவேன். இப்போது பார்த்த படம் "டாலர்சிட்டி" .திருப்பூர் என்னும் தொழில் நகரம் பற்றிய 70 நிமிடப் படம். குறைவான எண்ணிக்கையில் பார்வையாளர்கள். முடிந்தபின் படத்தோடு தொடர்பற்ற பல கேள்விகளுக்கும் தொடரபுடைய சில கேள்விகளுக்கும் பதில்கள் சொன்னார்.
தொடர்ந்து பத்திரிகையாளர் அருள் எழிலனின் பெருங்கடல் வேட்டத்து. ஓகிப் புயல் பாதித்த குமரி மாவட்ட மேற்குக் கடலோரக் கிராமங்களின் கொந்தளிப்பான பேச்சுகளைப் பதிவு செய்துள்ள 60 நிமிடப்படம். அவரது பத்திரிகையாள நண்பர்கள் திரளாக வந்தனர். படம் முடிந்தபின் இரண்டு ஊடகக்காரர்கள் உரையாற்றினார்கள்.
இரண்டுபடங்களையும் பார்த்தபின் எனக்குள் ”இன்னும் ஏன் இந்த விளையாட்டு?" என்ற வினா? தான் எழுந்தது. தனியார் உற்பத்தி வழியாகவே எல்லாம் நடக்கும் எனற நம்பிக்கை கொண்ட அரசு, எல்லாச் சட்டங்களையும் நடைமுறைகளையும் தாராளமாகத் திறந்துவிட்டுக் கொண்டிருக்கும் அரசு அதனை வெளிப்படையாகச் சொல்லிவிட ஏன் தயங்க வேண்டும்? உலக அளவில் போட்டிபோடும் இந்திய முதலாளிகளை உருவாக்குவதை இலக்காகக் கொண்ட அரசுகள் இன்னும் ஏன் சமூகநல அரசுகள் என்று பாவனை செய்கின்றன?
நலத்திட்ட அரசு,உள்வாங்கும் அரசியல், மனிதநேய முகம் போன்றன உலக மயத்தோடு இணைந்து ஓடும் ஓர் அரசின் அடையாளமாக இருக்க முடியாது. அதன் போக்கிலான வேகமான வளர்ச்சித்திட்டங்களே அதன் அடையாளமும் இருப்பும். அவற்றை உருவாக்க எட்டுக்கால் வேகத்தில் வேலைகள் நடக்கின்றன. இதனை வெளிப்படையாகச் சொல்லி மக்களை ஏற்கும்படி செய்ய வேண்டும். அரசின் நிகழ்ச்சி நிரல்களில் அதை வைத்துக்கொண்டு வெளியில் மக்கள் நல அரசாகப் பாவனை செய்வது ஏமாற்றுகளும் வேஷங்களுமாக அல்லாமல் வேறென்னவாக இருக்க முடியும்?.
அரசின் இந்தப் பாவனைகளைப் புரியாமல் செயல்பாட்டாளர்களும் கலைஞர்களும்கூடக் குழம்பி நிற்கிறார்கள். தங்களின் மௌனக் குரல்களின் வெக்கையும் ஆவேசப் பதிவுகளின் எதிர்பார்ப்புகளும் பெருந்திரளை நோக்கித் திருப்பப்படாமல் அரசமைப்புகளை நோக்கியே நீள்கின்றன. அந்த நோக்கில் இவ்விரண்டு படங்களும் நடந்து போன பெருவெளி நிகழ்வுகளின் சில துணுக்குகளை ஆவணப்படுத்தியுள்ளன.
அமுதனின் படம் யாரிடம் இதனை முறையிடுவது என்ற கேள்வியை எழுப்பாமல் இப்படியாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்லி விட்டு விலகி விடுகிறது. அருள் எழிலனின் தெரிந்தே சிலுவைகளையும் ஆணிகளையும் தயாரித்து மக்களுக்கு வழங்கும் அரசுகளோடு பேச முயல்கிறது. இதற்கு மாறாக திரள்மக்களின் மனச்சாட்சிகளோடு உரையாடல் நடத்தும் ஆவணப்படமொழியை- சொல்முறையைக் கண்டு பிடிக்கும் தேவையை உணர்ந்தாகவேண்டும். இல்லை என்றால் இவைகளும் இன்னொரு பாவனை வெளிப்பாடுகளாகக் கருதிக் கடக்கப்படும்.
======================================
பொதுவும் சிறப்புமாக நகரும் பிம்பங்கள் : சில தமிழ் ஆவணப்படங்களை முன்வைத்து.
தமிழ் வெளியைப் பின்னணியாகக் கொண்ட ஆவணப்படங்களைச் சென்னையில் மூன்று இடங்களில், ஒருவாரத்திற்குத் (மார்ச் 13-19)திரையிட்டார் அமுதன். அமுதனின் அழைப்பை ஏற்றுக் கடைசி நாள் பெரியார் திடலிற்குத் தான் போக முடிந்தது.
கடைசிநாளில் கடைசியாகத் திரையிடப்படும் படம் கக்கூஸ் என்று அறிவுப்பும் இருந்தது. படம் ஓடக்கூடிய நேரம் 105 நிமிடங்கள். நான் பயணிக்கவேண்டிய நெல்லைவிரைவுரயில் கிளம்பும் நேரம். 20.10. அந்தப் படத்தைப் பார்க்கமுடியாமல் கிளம்ப வேண்டிய சூழல். சொர்ணவேலின் ‘தங்கம்’, டாடா குழுமத்திற்காகத் தயாரிக்கப்பட்ட பெண்கவிகளைப் பற்றிய ‘அவள் எழுதுகிறாள்’ சோமிதரனின் ‘முள்ளிவாய்க்கால் சாஹா’, வெங்கடேஷ் சக்ரவர்த்தியின் ‘பிளவுண்ட நகரம்: சென்னை’ ஆகியன முடியும்போது நேரம் 19.30.
திவ்யா பாரதியின் கக்கூஸ்,19.30 -க்கு ஆரம்பித்தாலும் முடியும்போது 21.15 ஆகிவிடும். பயணத்தைத் தள்ளிப்போட முடியாது. அன்று கிளம்பிவிட்டேன். ஆனால் எண்ணிப் பத்தே நாளில் அந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது இடதுசாரிக் கம்யூனிஸ்ட் கட்சி. அக்கட்சியின் திருநெல்வேலி அலுவலகத்தில் 29.03.2017 அன்று கக்கூஸ் படத்தைப் பார்த்தேன். இந்தப் படங்கள் உருவாக்கியுள்ள மனநிலை எனது பழைய நிலைபாட்டில் மாற்றத்தைக் கோருகின்றன.
கடைசிநாளில் கடைசியாகத் திரையிடப்படும் படம் கக்கூஸ் என்று அறிவுப்பும் இருந்தது. படம் ஓடக்கூடிய நேரம் 105 நிமிடங்கள். நான் பயணிக்கவேண்டிய நெல்லைவிரைவுரயில் கிளம்பும் நேரம். 20.10. அந்தப் படத்தைப் பார்க்கமுடியாமல் கிளம்ப வேண்டிய சூழல். சொர்ணவேலின் ‘தங்கம்’, டாடா குழுமத்திற்காகத் தயாரிக்கப்பட்ட பெண்கவிகளைப் பற்றிய ‘அவள் எழுதுகிறாள்’ சோமிதரனின் ‘முள்ளிவாய்க்கால் சாஹா’, வெங்கடேஷ் சக்ரவர்த்தியின் ‘பிளவுண்ட நகரம்: சென்னை’ ஆகியன முடியும்போது நேரம் 19.30.
திவ்யா பாரதியின் கக்கூஸ்,19.30 -க்கு ஆரம்பித்தாலும் முடியும்போது 21.15 ஆகிவிடும். பயணத்தைத் தள்ளிப்போட முடியாது. அன்று கிளம்பிவிட்டேன். ஆனால் எண்ணிப் பத்தே நாளில் அந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது இடதுசாரிக் கம்யூனிஸ்ட் கட்சி. அக்கட்சியின் திருநெல்வேலி அலுவலகத்தில் 29.03.2017 அன்று கக்கூஸ் படத்தைப் பார்த்தேன். இந்தப் படங்கள் உருவாக்கியுள்ள மனநிலை எனது பழைய நிலைபாட்டில் மாற்றத்தைக் கோருகின்றன.
வாரத்திற்கு இரண்டுக்கும் மேற்பட்ட புனைவுப் படங்களைப் பள்ளிப்படிப்புக்காலம் தொடங்கிப் பார்த்துவருகிறேன். பார்த்து முடித்தபின் குப்பையானதொரு சினிமாவைப் பொறுமையாகப் பார்த்துமுடித்துவிட்டோமே என்று பாராட்டிக்கொள்ளும் மனம், இப்போதும் ஆவணப் படங்களைப் பார்க்கும்போது அப்படியொரு பாராட்டைத் தனக்குத்தானே வழங்கிக் கொள்வதில்லை. அதற்கான காரணங்கள் இவைதான் என்றும் சொல்லமுடியவில்லை. பள்ளிக்காலப் பழக்கம் அல்லது கொண்டாட்டம் புனைவுப்படங்கள் என்றால் ஆய்வுப் பட்டக்காலத் தேடலே ஆவணப்படங்கள். ஆவணப்படங்களைப் பார்க்கச் செல்லும்போது ஒரு தளர்வான மனநிலை உருவாவது அண்மைக்கால மனநிலை என்று சொல்லமுடியாது. தொடக்கக் காலங்களில் அப்படியொரு தளர்வு மனநிலை இருந்ததில்லை. பாண்டிச்சேரியில் இருந்த காலங்களில் நடந்த ஆவணப்பட விழாக்கள், திரையிடல்கள் வழியாக உருவான தளர்வு மனநிலை, ஆவணப்படங்களைப் பார்க்கவேண்டும் என்ற விருப்பத்தைக்கூட விலக்கிவிட்டன. புனைவுப் படங்களைப் பார்க்கத் தொடங்கிப் பல ஆண்டுகளுக்குப் பின்பே ஆவணப்படங்கள் பார்க்கும் வாய்ப்புகள் உருவானது. இப்படித்தான் இருக்கும் என்ற முன் அனுமானமின்றைப் புனைவுப்படங்களைப் பார்க்கப்போவதுபோல ஆவணப்படங்களைப் பார்க்கப் போகமுடியாது என்பது ஒருபெருந்தடையாகவே இருக்கிறது.
எப்போதும்போல இந்தத் திரையிடல்கள் நிகழ்வையும் முன்னரே எனக்குத் தெரிவிக்கவே செய்தார். எனக்குக் கடைசிநாள்தான் போக முடிந்த்து. இந்தத் திரையிடல்களில் காண்பிக்கப்பட்ட 19 படங்களில் பாதிக்கும் மேல் முன்பே பார்த்தவைகளே. என்றாலும் ஒரே நேரத்தில் பார்த்தால் அவற்றை முன்வைத்து ஆவணப்படங்கள் உருவாக்கும் தளர்வுமனநிலை குறித்து விரிவாகப் பேசியிருக்க முடியும். நெல்லை மாதிரியான கிராமந்தர நகரத்தில் வசிக்கும் என்னைப் போன்ற மனிதர்களுக்கு அந்த வாய்ப்புகள் குறைவுதான். சென்னைவாசிகளுக்கும்கூட அது சாத்தியம் என்று சொல்லமுடியாது. ஆனால் அமுதன் சென்னைவாசிகளுக்குத் தொடர்ந்து அத்தகைய வாய்ப்புகளை உருவாக்கத்தந்துகொண்டே இருக்கிறார். அதுவும் இலவசமாகவே உருவாக்குகிறார் என்பதுதான் ஆச்சரியம்.
தமிழ்வெளியைக் களமாகக் கொண்ட இந்த ஆவணப்படங்களில் சோமிதரன், வெங்கடேஷ் சக்ரவர்த்தி, திவ்யா பாரதி ஆகியோரின் மூன்று படங்களை முக்கியமான படங்களாகச் சொல்லவேண்டும். அவை கவனப்படுத்தியுள்ள நிகழ்வுகளுக்காக அல்லாமல் அவை சொல்லப்பட்ட முறை அல்லது கிளத்துதல் காரணமாகவும் அடுக்கப்பட்டு முன்வைக்கப்பட்டுள்ளதற்காகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. சினிமாக்கள் அவை புனைவாக இருந்தாலும் ஆவணப்படமாக இருந்தாலும் அடிப்படைகள் ஒன்றுதான். பிம்பங்களாலும்(Images), நகர்வுகளின்வழி காட்சிப்படுத்தப்படும் உத்தியாலும்(Movements of Camera) , அவற்றை வெட்டியடுக்கப்படும்(Editing and Montage) நிலைபாட்டாலும் முன்வைக்கும் சொல்முறையாலும்(Narratology) கவனிக்கப்பட வேண்டிய கலைவடிவம். இதனை உணர்ந்தவர்களாக இம்மூன்று இயக்குநரும் வெளிப்பட்டுள்ளனர் என்பதாலேயே கவனிக்கத்தக்க படங்கள் எனச்சொல்லத் தோன்றுகிறது.
சக்ரவர்த்தியின் சென்னை
வளர்ச்சியடையும் சென்னை மாநகரம் ஒவ்வொரு திசையிலும் சம அளவில் விரியாமல் தெற்கிலும் மேற்கிலும் தொழில் கூடங்களால் வீங்கிப் பெருத்துக்கொண்டிருக்கிறது எனக் காட்டுகிறது. தென்சென்னையில் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களாக விரிகின்றன. அம்பத்தூர், ஆவடி போன்ற பகுதிகளில் பழைய தொழிற்பேட்டைகளோடு, செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர்ச் சாலைகளில் தொடங்கப்படும் கனரகத் தொழிற்சாலைகளின் வளர்ச்சியால் பலனடையப்போகும் மனிதர்கள் சென்னையின் மனிதர்கள்தானா? என்ற கேள்வியையும் எழுப்புகிறது. அத்தோடு மாநகரத்தின் குப்பைகளைக் கொட்டுமிடமாக ஆக்கப்பட்ட வடசென்னை, விரிவாக்கத்தை/வளர்ச்சியை அடையாமல் தடுக்கப்பட்ட அரசியலையும் பேசுகிறது. மொத்தத்தில் பிளவு என்பதைப் பொருளாதார அடிப்படையில் பார்த்துள்ள இந்த ஆவணப்படம் சென்னை நகர மக்கள் மதம் சார்ந்த அடையாளங்களை வெளிப்படுத்தும் கொண்டாட்டங்களையும் அவற்றிற்கான நாட்களையும் விடாப்பிடியாகத் தக்கவைக்கப் போராடுவதையும் காட்டுகின்றது. இது ஒருவிதத்தில் வெங்கடேஷ் சக்ரவர்த்தியின் சென்னை. அரைநூற்றாண்டுக்காலச் சென்னை வாழ்க்கையால் அந்நகரின் சாலைகளிலும், பலவகையான நிகழ்வுகள் நடக்கும் வெளிகளிலும், ஓய்வெடுக்கும் பிரதேசங்களிலும் அலைந்து திரிந்த ஒருவரின் பார்வையாக அந்தப் படத்தின் காட்சித் தொகுப்புகள் இருந்தன.
நான் அவரைப்போலச் சென்னைவாசி அல்ல. சென்னைக்கு எப்போதும் விருந்தாளிதான்.

எனது முதல் சென்னைப்பயணம் 1982. அரசுப்பணி ஒன்றிற்கான நேர்காணலுக்காக வந்தது. அப்போது தொடங்கி ஆண்டுதோறும் வந்துபோய்க் கொண்டே இருக்கிறேன். அதிக அளவில் ஒருவாரம்வரை இரவிலும் பகலிலும் இங்கே தங்கிச் சுற்றியிருக்கிறேன். அப்போதெல்லாம் சென்னை நகரம், தென் தமிழ்நாட்டுக் கிராமத்து மனிதர்கள் எங்களுக்கும் இந்த மாநகரில் பங்கிருக்கிறது எனச் சொல்லிக் கொண்டே இருக்கும் அடையாளங்களைப் பார்க்கிறேன். பண்பாட்டு அடையாளங்களை நிலையான காட்சிகளாகவும் அசையும் பிம்பங்களாகவும் விழாக்களாகவும் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள் . அந்தவகையிலும் சென்னை: பிளவுபட்ட நகரமாகவே இருக்கிறது. இதனைப் பிம்பங்களாக அடுக்கிப் பார்ப்பதைப் போல புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜெயந்தன், சா.கந்தசாமி, அசோகமித்திரன், திலகவதி, சுஜாதா, திலீப்குமார், தொடங்கி அண்மையில் எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், அரவிந்தன், விநாயகமுருகன், கரன் கார்க்கி, லக்ஷ்மிசரவணக்குமார், சரவணன் சந்திரன் என நீளும் புனைகதைப்பரப்பிலும் தேடிப்பார்க்கலாம். அப்படியான ஆய்வு சென்னையின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டும்.
சோமிதரனின் முள்ளிவாய்க்கால்
சோமிதரனின் முள்ளிவாய்க்கால்
முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளை எழுத்தாகவும் காட்சிகளாகவும் உலகம் கவனித்துக் கடந்த ஒன்று. வெற்றியும் தோல்வியுமாக 30 ஆண்டுகள் நடந்த விடுதலைப்போராட்டத்தை முடிவுக்கொண்டுவந்த வெளியின் குறியீடு, விடுதலையை விரும்பிய ஒரு கூட்டம் / இனம் குரூரமாக அந்த நாட்டு அரசாங்கத்தால் கொத்துக்கொத்தாகக் குண்டுவீசிக் கொல்லப்பட்ட போர்க்களம். இந்தப் போர்க்களக் காட்சிகளைத் தமிழ்க்கவி, தமிழ்நதி, தேவகாந்தன், சயந்தன், குணா கவியழகன் போன்றவர்களின் நாவல்களிலும், ராகவன், தமிழினி போன்றவர்களின் சிறுகதைகளிலும் வாசித்திருக்கிறேன். துயரங்களையும் வலிகளையும் நேரடியாகப் பதிவுசெய்யும் காட்சிச் சித்திரங்கள் அவை. ஆனால் சோமிதரனின் ஆவணப்படம் நேரடிக் காட்சிகளை ஆவணப்படுத்துதலை முதன்மை நோக்கமாகக் கொள்ளாமல், குற்றவுணர்வு கொண்ட உலகின் மனச்சாட்சியை நோக்கிக் கச்சிதமாக வாதங்களைக் காட்சிகளாக அடுக்கிக் காட்டும் படமாக எடுக்கப்பட்டுள்ளது. கிடைத்த ஆவணங்களை அடுக்குவதினூடே ஆதாரமான சாட்சியங்களாக இரண்டு குரல்களைத்தேடிப் பயன்படுத்தியுள்ளார். ஒன்று பெண்குரல்; லண்டனில் இருந்து. . இன்னான்று ஆண்குரல்; ஆஸ்திரேலியா.இருவரும் முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்குப்பின்- கோரத்தை அனுபவித்துவிட்டு அரசின் வழியாகவே வெளியே வந்தவர்கள். ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்புகள், பக்கத்து நாடான இந்தியா, அரச வன்முறைக்கு உதவிய ஆயுத வியாபார நாடுகள் என அனைவரும் பதில் சொல்லவேண்டிய கேள்விகளாகக் காட்சிகள் நகர்கின்றன. பதில்களை மறைக்கும் இருள்மேகங்களிடம் என்ன பதில்கள் கிடைக்கும்?
திவ்யா பாரதியின் கக்கூஸ்

கருத்துகள்