நானும் எனது இயக்கங்களும் :ஜீவநதி – மாத சஞ்சிகையில் நேர்காணல்


தை /13 வது ஆண்டுமலர்/ 136-137
நேர்காணல்:அ.ராமசாமி
சந்திப்பு:இ.சு.முரளிதரன்


இலக்கியம், நாடகம், சினிமா, வரலாறு எனப் பன்முக அடையாளங்களுக்கு உரித்தானவர்அ.ராமசாமி. மதுரை மாவட்டத்திலுள்ள தச்சபட்டியில் 1959இல் பிறந்தவர். ஒளிநிழல் உலகம், மாறும் காட்சிகள், சங்கரதாஸ் சுவாமிகள், வட்டங்களும் சிலுவைகளும், ஒத்திகை, நாடகங்கள் விவாதங்கள், அலையும் விழித்திரை, நாவல் என்னும் பெருங்களம் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழியல் துறையில் பேராசிரியராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
இ.சு.முரளிதரன் :
முகிழ் நிலைக்காலத்தில் புனைவுத் தளத்தில் இயங்கிய நீங்கள், விமர்சனத் தளத்திற்கு நகர்ந்த மடைமாற்றங்குறித்துப்பகிர்ந்து கொள்ளுங்கள்…


அ.ராமசாமி :
என்னுடைய மாணவப் பருவத்தில் எழுத்தாளனாக மாற வேண்டும் என்பதே ஆசையாக இருந்தது. தொடக்க காலத்தில் கணையாழி, தாமரை, ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் கதை, கவிதைகள் எழுதியிருக்கிறேன்.
முதுகலைப்படிப்பிற்குப் பிறகு முனைவர் பட்டம் செய்வதற்காகப் பல்கலைக்கழகத்தில் நுழைந்த பிறகு, முனைவர் பட்டத்திற்கான முறையியல் என்னை ஒரு திறனாய்வாளனாக மாற்றிவிட்டது. பொதுவாகவே ஆய்வு, திறனாய்வு என்பன எல்லாவற்றையும் தர்க்க ரீதியில் பார்ப்பதை முன்னிறுத்தக் கூடிய முறைமையாகும். ஆனால் புனைவு அப்படியல்ல. புனைவுக்கு தேவை உணர்ச்சியும் அதன் வெளிப்பாடுமேயாகும். ஆரம்ப காலத்தில் இப்போக்கு என்னிடம் இருந்தது. நான் ஒரு ஆய்வாளனாக நாயக்கர் கால இலக்கியங்களை ஆய்வு செய்வதற்காக நுழைந்து பல்வேறு தரவுகளைச் சேகரித்து அவற்றை ஒழுங்குபடுத்துவது, முறைப்படுத்துவது அவற்றின் ஊடாக தர்க்கங்களைப் பேணுவது அதற்காகத் திறனாய்வுக் கோட்பாடுகளை வாசிப்பது என்று நகர்ந்தேன். அந்த நகர்வு என்னைப் புனைவுத் தளத்திலிருந்து திறனாய்வுத் தளத்திற்கு நகர்த்தியது. ஆனாலும் பாண்டிச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறை ஆசிரியனாக மாறிய போது நாடக எழுத்தாளனானேன். சிறு நாடகங்கள் தொடங்கி பெரிய நாடகங்கள் வரை ஏறத்தாழ இருபது நாடகங்கள் வந்துள்ளன. பெரும்பான்மையானவை வேறு மொழியில் எழுதப்பட்ட நாடகங்களைத் தழுவி எழுதப்பட்டவை. ஏனையவை சிறுகதைகளிலிருந்து எல்லாம் எப்படி நாடகங்களை உருவாக்கலாம் என்பதை மாணவர்களுக்குக் கற்பிக்கும் விதமாக எழுதப்பட்டவை.
அதன்பிறகு நாடகத்தையும், ஊடகங்களையும் கற்பிக்கும் ஆசிரியனாக மாறியபோது சினிமா - நாடகம் - திரள் மக்கள் பண்பாடு என்ற மூன்றையும் இணைத்துப் பேசக்கூடிய ஊடக ஆய்வாளன், இலக்கியத் திறனாய்வாளன் என்று நகர்ந்து விட்டேன். அதன் பின்னணியில் என்னுடைய வாசிப்பேயிருந்தது.


இ.சு.முரளிதரன் :
அரிஸ்டோட்டிலின் கோட்பாடுகளுக்கும் தொல்காப்பியரின் கோட்பாடுகளுக்கும் இடையே எவ்வகையான ஒப்புமைகளை இனங்காண்கிறீர்கள்?
 
அ.ராமசாமி :
உலகமொழிகளில் இலக்கியம் பற்றி, கலைகள் பற்றி மனிதர்களுக்கும் கலைகளுக்கும் இலக்கியங்களுக்கும் இடையேயான உறவினைப் பற்றிச் சிந்தித்த மனிதர்களாக மூன்று பேரை நினைக்கின்றேன். அதில் மிகவும் மூத்தவர் கிரேக்க மொழியில் எழுதிய அரிஸ்டோட்டில். அவருடைய கவிதையியல் (Poetics) எல்லாக்கலைகளைப் பற்றியும் அறிமுகம் செய்கிறது. கூடுதலாக நாடகக்கலை குறித்துப் பேசுகிறது. நாடகத்திற்குத் தேவையான மூன்று கூறுகளான இடம் - காலம் - பாத்திரங்கள் குறித்துப் பேசி, இவற்றை ஒன்றாக இணைப்பது தான் நாடகக்கலை எனத் தெளிவுபடுத்து . பாத்திரங்களின் தன்மைகளையும் இன்பியல் - துன்பியல் உணர்வுகளையும் குறித்து விரிவாகப் பேசுகின்றது. அரிஸ்டோட்டிலின் கவிதையியல் என்று சொல்லப்பட்டாலும், நாடகவியல் குறித்தே அதிகம் விளக்குகிறது.
இதே வகையான இன்னொரு கோட்பாட்டாளர் பரத முனிவர். அவருடைய நாட்டியசாஸ்திரமும் அடிப்படையில் நாடகங்களைக் குறித்து விரிவாக வெளிப்படுத்துகிறது. நடிகனின் உருவாக்கம், பாவங்கள், உடலசைவுகள் குறித்தும், பேச்சு மொழி கவிதை மொழியாக இருந்தால் எவ்வாறு இருக்கும் எனவும் விளக்குகிறது. அரங்கக் கோட்பாடுகளையும் வெளிப் படுத்துகிறது. அவரும் நாடகத்தை மையப்படுத்தியே பேசுகிறார். நாடகத்தின் உட்கட்டமைப்புகளை ஆரம்பம், வளர்ச்சி, சிக்கல், உச்சம், வீழ்ச்சி, முடிவு என அரிஸ்டோட்டில் பேசுவது போலவே பரத முனிவரும் பேசுகிறார்.
தொல்காப்பியம் நாடகக் கலையை முதன்மையான கலையாகக் கருதவில்லை. கவிதையினையே முதன்மையான வெளிப்பாடாகக் கருதுகிறது. கவிதையினது உட்கட்டுமானங்கள் பற்றிப் பேசும்போது அதனைப் “பொருள்” என்னும் சொல்லால் குறிப்பிடுகிறது. கவிதைக்குள் முதற்பொருள், கருப்பொருள் - உரிப் பொருள் என்ற மூன்றும் இருக்கும் என்கிறார். இடமும் காலமும் முதற்பொருள். இடத்தில் இருக்கக்கூடிய விலங்குகள், தாவரங்கள், பறவைகள், இசைக் கருவிகள், தெய்வம் என்பனவெல்லாம் கருப்பொருள்கள். இந்த இரண்டினுள்ளும் பேச வேண்டிய செய்தியை உரிப்பொருள் என்கிறார். முதல்பொருளாகச் சொல்லப்பட்ட நிலத்தையும் பொழுதையும் அரிஸ்டோட்டில் காலமும் வெளியும் எனக் குறிப்பிடுகிறார். எனினும், தொல்காப்பியர் மற்றவர்கள் சொல்லாத ஒன்றைக் கருப்பொருளாகச் சொல்கிறார். ஒரு நிலக் காட்சியின் பின்னணியில் விலங்குகளும் இயற்கையும் மனிதர்களும் எவ்வாறு இணைந்திருக்கிறார்கள் என்பதைக் கூடுதலாகச் சொல்கிறார். அரிஸ்டோட்டில் நாடகங்களை இன்பியல் - துன்பியல் என பொருள் அடிப்படையில் வகைப்படுத்துவது போல, தொல்காப்பியர் அன்பின் ஐந்திணை; அன்பல்லாத இருதிணைகள் என ஏழு திணைகளாகப் பிரிக்கிறார். அதற்கு உரிப்பொருளாக புணர்தல் - இருத்தல் - இரங்கல் - ஊடல் - பிரிதல் - ஒருதலைக் காமம் - பொருந்தாக்காமம் என்பவற்றைக் குறிப்பிடுகிறார் அரிஸ்டோட்டில் இலக்கிய உருவாக்கத்தை நாடகத்தை முன் வைத்துக் கொண்டு பேசுவதைப்போல தொல்காப்பியர் கவிதையை முன் வைத்துக் கொண்டு பேசுகிறார். அவர் பேசிய வடிவங்கள் வேறாக இருந்தாலும் உட்கட்டுமானங்கள் ஒன்றாகவே இருக்கின்றன.
ஆகவே உலக இலக்கியத்தைப் படிக்க விரும்பும் ஒருவர் அடிப்படையாகக் கற்க வெண்டிய நூல்களாக அரிஸ்டோட்டலின் கவிதையியலையும் தொல்காப்பியரது பொருளதிகாரத்தையும் பரதரது நாட்டியசாஸ்திரத்தையும் எப்பொழுதுமே பரிந்துரை செய்வேன். அவ்வாறு அவற்றை ஒன்றாகப் பார்க்க வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வருகிறேன்.


இ.சு.முரளிதரன் :
'சஹிருதயா” என்ற கோட்பாட்டிலிருந்து ஜேர்மன் நாடக ஆசிரியரான பெர்ட்ரோல்ட் பிரெற்றின்(Bertolt brecht) அந்நியமாதல் சாrந்த கருத்தியல் எவ்வகையிலே விலகிச் செல்கிறது.
 
அ.ராமசாமி :
'சஹிருதய” என்ற கலைச் சொல்லினை பரதர் எடுத்துரைக்கின்றார். அவருடைய நாடகத்தில் நடக்கக் கூடிய நிகழ்வுகள் உணர்ச்சியை; திரட்டிப் பார்வையாளருக்கு அப்படியே கடத்தி விட வேண்டும். அப்படிக் கடத்தப்படுகின்ற உணர்ச்சியை உள்வாங்ககூடிய மனிதர்களாக சக இருதயர்களாக பார்வையாளர்கள் மாற வேண்டும். அதுவே மிகச்சிறந்த பார்வையாளன் - பங்கேற்பாளன் உறவு என்று பரதரின் நாட்டியசாஸ்திரம் சொல்கிறது. இந்தக் கோட்பாட்டில் மேடையில் நடக்கின்ற அனைத்தையும் அப்படியே நம்பி ஏற்றுக் கொண்டு செயல்படக் கூடிய பெரும் ஆபத்து இருக்கிறது. இந்த ஆபத்து பின்னால் பலராலும் உணரப்பட்டது. ஜேர்மனியில் ஹிட்லர்(Hitler) அவரது அமைச்சரான கோயபெல்ஸ்((Paul Joseph Goebbels ) என்போரின் செயற்பாடுகளின் அனுபவத்தில் இத்தகைய மேடை நிகழ்வு ஒரு தனிமனித ஆதிக்கத்தை நிலைநாட்டிவிடும் என்பதை விளங்கிக் கொண்டு, அதிலிருந்து விலகிய அந்நியமாதல் கோட்பாட்டினை பிரெற் முன் வைக்கிறார். மேடையில் நடக்கின்ற நிகழ்வு சிலவற்றை நினைவுபடுத்த வேண்டும். சிந்தித்துச் செயற்பட வைக்க வேண்டும் அடிப்படையில் அந்நியமாக்கல் கோட்பாட்டினை முதன் முதலில் எடுத்துரைத்தார் அது பின்னால் பலராலும் பலவிதமாக வளர்த்தெடுக்கப்பட்டது.


இ.சு.முரளிதரன் :
வங்கத்தின் முக்கிய நாடக ஆளுமையான பாதல் சர்க்கார் முன்வைத்த மூன்றாம் அரங்கு என்பது ஏனைய இரு அரங்குகளிலிருந்தும் எவ்வகையில் வேறுபடுகின்றது?
 
அ.ராமசாமி:
பெர்ரோல்ட் பிரெற்றைப்போல இந்தியாவில் நாடகச் செயற்பாட்டினை ஒரு கோட்பாடாக விளக்கியவர் வங்க நாடக ஆசிரியர் பாதல் சர்க்கார் அவர். மூன்றாம் அரங்கு என்ற ஒரு கோட்பாட்டினை முன் வைக்கிறார். ஏற்கெனவே எளிய அரங்கு என்ற கருத்தியல் இருந்தது. “மக்களை நோக்கி நாடகங்கள் செல்ல வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசியல் பேச வேண்டும்” என்கிற கருத்தியல் ஐரோப்பிய நாடுகளில் வெவ்வேறு கோட் பாட்டாளர்களால் முன் வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அதனை உள்வாங்கிக் கொண்டு, இந்தியாவிற்கான நாடக அரங்கியலை பேசும் பாதல் சர்க்கார், ஏற்கெனவே இருந்த இரண்டு அரங்குகளை முதலாம் அரங்கு, இரண்டாம் அரங்கு என்று சொல்லிவிட்டு தான் முன்மொழிந்த அரங்கினை மூன்றாம் அரங்கு என்று சுட்டினார்.
 
முதலாம் அரங்கு என்பது இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்களில் இருந்த சமய நிகழ்ச்சிகளோடு, திருவிழாக்களோடு, சடங்குகளோடு தொடர்புடைய மரபான அரங்காகும். பெரும்பாலும் மூன்று பக்கம் பார்வையாளரும் ஒரு பக்கம் நிகழ்ச்சியை நடத்துபவர்களும் இருப்பார்கள். பார்வையாளர்களுக்கும் நிகழ்த்துநர்களுக்கும் இடையே அதிக தூரம் இருக்காது. இது இந்தியப் பாரம்பரிய அரங்காகும். ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறாக இருக்கிறது. தமிழ்நாட்டில் தெருக்கூத்தாக, கணியன் கூத்தாக, பாகவதமேளாவாக, பொன்னர்சங்கர் கதை நிகழ்த்துகையாக அமைகின்றது. மலையாளத்தில் கதகளியாக, கர்நாடகத்தில் யட்சகானமாக இருக்கிறது. பொதுத்தன்மையாக ஒரு கதைசொல்லி வந்து கதையை நிகழ்த்துவதைக் காணலாம். பார்வையாளருக்கும் நிகழ்த்துநருக்குமான இடைவெளி வெகு அருகிலே இருப்பதை வரவேற்றாலும், அதிற் பேசப்படுகின்ற விடயம் புராணமாகவும் தொன்மமாகவும் இருப்பதை நிராகரிக்கிறார்
 
புறசீனிய நாடக அரங்கினை இரண்டாம் அரங்கு எனக் குறிப்பிடுகிறார். படச்சட்டக மேடையில் நிகழ்த்துபவர்கள் வெளிச்சத்திலும், பார்வையாளர்கள் இருட்டிலும் இருக்கும் வடிவத்தினைக் குறித்து விரிவாகப் பேசுகின்றார். புறசீனிய நாடக அரங்கியல் வடிவம் நமது காலகட்டத்திற்கு ஏற்புடைய வடிவமல்ல என்று நிராகரிக்கிறார். ஆனால் அந்த அரங்கில் நவீன சிந்தனைகள் பேசப்பட்டன. எனவே உள்ளடக்கம் புதிதானது. வடிவம் ஏற்கத்தக்க வகையில் இல்லை என்று சொல்லி விட்டு இந்திய மரபு நாடகங்களில் இருக்கக்கூடிய வடிவத்தினையும் ஐரோப்பிய புறசினிய நாடக அரங்கின் உள்ளடக்கத்தினையும் இணைத்து மூன்றாவது அரங்கு என்ற ஒன்றினை பாதல் சர்க்கார் முன் மொழிந்தார். ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று மூன்றாம் அரங்கினை அறிமுகப்படுத்தி, பயிற்சிப் பட்டறைகளை உருவாக்கிய போக்கு இந்தியாவில் பெருந் தாக்கத்தினை உருவாக்கியது என்று சொல்லலாம்.

இ.சு.முரளிதரன்:
மேடை நாடகங்களின் பண்பிலிருந்து முற்று முழுதாக நீங்கி வரவில்லை என சினிமா மீது பரவலான குற்றச்சாட்டு உண்டு. நாடகம், சினிமா என்ற இருதுறை சார்ந்தும் ஆய்வுகளை நிகழ்த்தி வருபவர் என்ற வகையில், உங்களது கருத்துக்களை கூறுங்கள்.
 
அ.ராமசாமி:
ஆரம்பகால சினிமாவில் அதற்கு முந்திய காலகட்ட நாடகங்களையே சினிமாவாக எடுத்தார்கள். இரண்டு வகையான நாடகங்கள் உண்டு. ஒன்று, சங்கரதாஸ் சுவாமிகள் பாணி. அவை இசைப்பாடல்கள், வசனம் என்பனவற்றை உள்வாங்கிய புராண நாடகங்கள், வரலாற்று நாடகங்கள். இந்த வரலாற்று நாடகங்களையும், புராண நாடகங்களையும் தான் ஆரம்ப கால சினிமா அப்படியே மேடையிலிருந்து திரைக்குக் கொண்டு வந்தது. அதே நேரத்திலே இன்னொரு வகையான நாடகமும் உண்டு. புறசீனிய தியேட்டரில் நடத்தும் ஐரோப்பிய நாடக வடிவம். பம்பல் சம்பந்த முதலியார் தொடங்கி திராவிட இயக்க அரசியல் நாடகங்கள் எல்லாமே புறசீனிய தியேட்டருக்காக எழுதப் பட்ட நாடகங்கள் தான். அதையும் பின்னர் சினிமாவாக மாற்றினார்கள். குறிப்பாக அண்ணாத்துரை, கருணாநிதி என்போரின் நாடகங்கள் சினிமாவாக மாறின. திராவிட இயக்கத்தினர் எல்லோரும் நாடகங்களை மேடை ஏற்றிவிட்டு சினிமாவாக மாற்றினார்கள் அதன் தொடர்ச்சியை கே.பாலச்சந்தர் வரைக்கும் பார்க்கலாம். ஆனால் ஸ்ரீதர் போன்ற இயக்குநர்கள் சினிமாவுக்காகவே எழுதினார்கள். பின்னாடி வந்தவர்கள் சினிமாவுக்காகத் தனியாக எழுதினார; கள். காட்சி நகர்வு போன்ற அம்சங்களை உள்வாங்கி எழுதும் பண்பு ஸ்ரீதர் காலத்திலே தொடங்குகிறது. அது இன்று வரைக்கும் இருக்கிறது. ஆரம்பம் - சிக்கல் - உச்சம் - வீழ்ச்சி எனக் காணப்படுவதும் நாடக வடிவந்தான். அந்த நாடக வடிவத்தை சினிமா கையில் எடுத்தவுடன் ஒரு தொடக்கம், அடுத்து இன்னொரு பக்கத் தொடக்கம் எனக் கொண்டு போய், உச்சத்திலே முடித்தல். குறிப்பாக கதாநாயகனை மைப்படுத்திய தமிழ் சினிமாவில் பார்க்கலாம். நாடகத்தின் உட்கட்டமைப்பினை திரைக்கதை வடிவமாக மாற்றும் பண்பு இன்றும் இருக்கிறது. ரஜனிகாந் படம், விஜய் படம் போன்றவற்றிலே காணலாம்”.
தமிழ் சினிமாவில் கதையை மட்டுமே பார்க்க முடியாது. சண்டைக்காட்சி இருக்கும். பாடற் காட்சி இருக்கும், நகைச்சுவைக்காட்சி இருக்கும். இவையெல்லாம் சினிமாவோடு தொடர்புடையதாகத் தான் இருக்கும் என்றில்லை. அந்த இடத்தில ஒரு சண்டைக் காட்சி வேண்டியதில்லை என்ற போதும் சண்டைக் காட்சி வைக்கப்பட்டிருக்கும். அதேபோல கதையோடு ஒட்டிய நகைச்சுவை ஒரு காலகட்டத்தில் இருந்தது. பின்பு தனியே -ட்ராக்காக- எழுதுவது வந்தது. ஆரம்பத்திலே ஒரு கால் நூற்றாண்டு தமிழ் சினிமா என்பது அப்படியே தமிழ்நாடகமாக இருந்தது. பின்னாடி உள்ளமைப்பை எடுத்துக் கொண்டு சினிமாவாக மாறியது.


இ.சு.முரளிதரன்:
தமிழ், ஹிந்தித் திரைப்படங்களோடு ஒப்பிடும் போது மிகக் குறைந்த வணிக ஆதாயத்தை பெற்றுக் கொண்டாலும் மலையாளத் திரையுலகில் பன்முகத்தன்மை மிக்க நல்ல முயற்சிகள் நிகழ்கின்றன. இவற்றுக்கான காரணங்களாக எவற்றை சொல்வீர்கள்?
 
அ.ராமசாமி:
மலையாளத்தில் நீங்கள் குறிப்பிடும் பன்முகத்தன்மை தற்போது மிகக் குறைவாகவே உள்ளது. எண்பதுகளில் -Popular Indian Cinema- இந்தியன் சினிமா என்பது பாட்டு, நடனம், சண்டை, குடும்ப பாசம் என்னும் வகையான கதைகளை முதன்மைப்படுத்தியது. தமிழும், ஹிந்தியும் அவ்வாறு நகர, மலையாள சினிமாவில் மாற்று முயற்சிகள் நடந்தன. மலையாளத்தில் இடதுசாரி அரசியல் எல்லாவிடயத்திலும் தாக்கம் செலுத்தியது. அந்தத் தாக்கத்தின் விளைவுதான் வெவ்வேறு விடயங்களைப் படமாக்கும் பண்பினை உருவாக்கியது. இடதுசாரிகளை ஆதரித்த படங்களும், இடதுசாரிகளை எதிர்த்த படங்களும் தோன்றின. சினிமா என்ற ஊடகத்தை என்னென்ன கோணத்தில் பயன் படுத்தலாமோ… அவ்வாறெல்லாம் பயன் படுத்தினார்கள். அதற்கு முன்னோடியாக வங்காள மொழிப் படங்கள் அமைந்திருந்தன. அவற்றின் தாக்கம் ஹிந்தியில் இருந்தாலும் பெரும் போக்குப் படங்களால் காணாமற் போய்விட்டன. தமிழிலும் எம்.ஜி.ஆர்- சிவாஜி என்ற பெரிய நடிகர்களின் ஆதிக்கத்துக்குள்ளே பாரிய மாற்றங்களை நிகழ்த்த முடியவில்லை. ருத்ரைய்யாவின் அவள் அப்படித்தான், ஜெயபாரதியின் குடிசை, ஸ்ரீதர்ராஜனின் கண்சிவந்தால் மண் சிவக்கும், அருண்மொழியின் 'ஏர்முனை”, 'காணிநிலம்” போன்ற சில படங்களில் மாற்றங்களைப் பார்க்க முடியும். ஆனால் பன்முகத்தன்மை என்பது இல்லை. பாரதிராஜா மாற்று சினிமாவையும் பெரும்போக்கு சினிமாவையும் கொஞ்சம் நெருக்கிக் கொண்டு வந்தார் படம் பிடிப்பதற்காகவும், கதை அம்சத்திற்காகவும் கிராமத்தைநோக்கி நகர்ந்தார். பாலு மகேந்திரா, மகேந்திரன் போன்றோரும் கேரளாவில் எண்பதுகளில் நிகழ்ந்த போக்குக்கு நிகராக இங்கேயும் செயற்பட்டனர். ஆனாலும் இவற்றைக் கோட் பாட்டு ரீதியாக விளக்கக் கூடிய படங்கள் என்று சொல்ல முடியாது. பொதுமக்களைச் சென்று சேரக் கூடிய கதையம்சத்தைக் கொண்ட படங்கள். நாடகத் தன்மை கொண்ட படங்களை உருவாக்கிய கே.பாலச்சந்தர் கூட இந்தப் பக்கத்திற்கு நகர வேண்டியிருந்தது. பின்னர் மணி ரத்னம், ஷங்கர் போன்றோர் தொழில் நுட்ப ரீதியாக வெவ்வேறு அம்சங்களை உள்வாங்கி உலக சந்தையை நோக்கி நகர்த்தினார்கள்.

இ.சுளிதரன்:
ஈழ விடுதலைப் போராட்டம் எதிர் கொண்ட பேரரசியல் குறித்தோ எம் சமூகத்தின் நுண்ணரசியல் குறித்தோ எதுவித புரிதலும் இல்லாமல் தென்னிந்திய சூழலில் எம்மைப்பற்றிய ஏராளமான திரைப்படங்கள் வணிக நோக்கோடு வெளிவந்துள்ளன. அத்திரைப்படங்கள் குறித்த தங்களது பார்வையினை அறியலாமா?
 
அ.ராமசாமி:.முர
புரிதல் இல்லையென்று முழுமையாகச் சொல்ல முடியாது. அவர்களுக்கே உரிய புரிதலில் இந்தியப் பார்வையில் அணுகினார்கள். குறிப்பாக மணி ரத்தினத்தின் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தில் யுத்தம் வேண்டாம் என்பதை நேரடியாகச்சொல்லாமல் - பெரிய அழிவுகளை தருகுகிறது - யுத்தத்தை இவர்களே தேர்ந்தெடுத்தார்கள் என இந்தியப்பார்வையில் வேறுவிதமான புரிதலில் வெளிப்படுத்தினார். சீமான் போன்றோர் அரசியல் ரீதியாக, ஈழப்பேராட்டம் பற்றி பொதுப் புத்தியில் “தமிழர்கள் போராடுகிறார்கள். தனி நாடு உருவாக்கி விடுவார்கள். அவர்களுக்குத் தார்மீக ரீதியான ஆதரவு தெரிவிக்க வேண்டும்” என உணர்ச்சி பூர்வமான புரிதலில் சினிமா எடுக்கிறார்கள். இத்தகைய சினிமா தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டதுமில்லை. போராட்டத்தை சரியாக உள்வாங்கிய படங்களாகவும் இல்லை. ஈழத்தமிழர் மீது இரக்கம் காட்ட வேண்டும் என்ற எண்ணம் இன்று வரைக்கும் இருக்கிறது. அந்த இரக்கத்தை வணிகமாக்கும் சூழலும் இருக்கிறது. புலம் பெயர்ந்த தமிழர்கள் உலகம் முழுவதும் இருப்பதால் அந்த சந்தையை மையப்படுத்தியே படமும் எடுக்கிறார்கள். ஆனால் இங்குள்ள நிகழ்வுகளுக்கு எதிராக எப்போதும் வணிக சினிமா இருந்ததில்லை. மிகவும் நுட்பமாக நோக்கினால் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தில் சில விடயங்கள் இருக்கும். பெரும்பாலான படங்கள் இரக்கத்தை பரிதாபத்தை உள்ளடக்கி பொதுப்புத்தியில் உருவானவைதான்!


இ.சு.முரளிதரன்:
சமூக அரசியல், பொருளாதார பிரச்சினைகள் அனைத்திற்கும் ரஜனிகாந்திடம் தீர்வினை அவாவுகின்ற ஊடக மனோபாவம் குறித்து…
 
அ.ராமசாமி:
இது குறித்து நான் நிறையவே எழுதியிருக்கிறேன். பெரும்பாலும் ரஜனிகாந்தின் எல்லாப்படங்களையும் பார்த்திருக்கிறேன். அவரிடம் அரசியல் ரீதியாக எந்தக் கருத்தும் கிடையாது. அவரது சினிமாவிலும் அரசியல் நிலைப்பாட்டுடன் எந்த சினிமாவும் வந்ததில்லை. 'அவர் ஒரு இயக்குநரின் நடிகன். ஒரு இயக்குநர் என்ன செய்யச் சொல்கிறாரோ அதைச் செய்வார். அதைத் தாண்டி அவருக்கென அரசியல் ரீதியாக எந்தக் கருத்தும் கிடையாது. அவரது படங்கள் வெளிவருவதற்கு முந்தைய தருணத்தில் படத்திற்குத் தொடர்பில்லாத வகையிலே ஏதாவது அரசியற் கருத்தினை தொலைக்காட்சிக் 'கமராக்களுக்கு” முன்னே நின்று சொல்கிறார். குறித்த படத்தினை பார்வையாளர் நாடிச் செல்ல வைப்பதற்கான வாய் மொழி விளம்பரமாக அதை செய்கிறார். ஆனால் 1996 இல் ஜெயலலிதாவிற்கு எதிராகக் குரல் கொடுத்தார். அந்த நேரத்தில் தமிழக மக்கள் ஜெயலலிதா மீது கோபத்தோடு இருந்தார்கள். அதைத் தூண்டுவது போல ரஜனிகாந் கருத்து தெரிவிக்க தேர்தலில் ஜெயலலிதா தோல்வியடைந்தார். அதற்குப் பின்னரான தேர்தல்களில் ரஜனிகாந்த் சொன்ன விடயங்கள் எதுவுமே எடுபடவில்லை.
இன்று வரை அரசின் ஆதரவாளராகவே இருக்கிறார். எப்போதும் மக்களின் பக்கம் இருந்ததில்லை. முன்னர் எதிர்த்துப்பேசியது கூட அரசினைத் தட்டிக்கேட்பது. இல்லை. ஜெயலலிதாவை தட்டிக் கேட்பதுதான் அவருக்கென அரசியல் நிலைப்பாடோ பொருளாதாரக் கொள்கை சார்ந்த கருத்து நிலையோ எதுவுமே கிடையாது. தமிழக திராவிட இயக்க அரசியலுக்கு மாற்றாக ஒன்றினை உருவாக்க மத்திய அரசு முயற்சிக்கின்றது. அதற்குப் பயன்படக்கூடிய ஆளாக ரஜனிகாந்த் இருப்பார் என பாரதிய ஜனதா கட்சியினர் நம்புகின்றனர். இதற்கு அமைவாக எந்த நேரத்தில் என்ன பேசவேண்டுமென யாரோ எழுதிக் கொடுக்கிறார்கள். தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் அரசிற்கு ஆதரவாகவே பேசியுள்ளார். கட்சி அரசியலில் அவருக்கும் பெரிய விருப்பம் எதுவும் இல்லை. அரசு சொல்வதை கேட்கவேண்டுமென்ற மனோபாவம் உள்ளது. புதிய படங்களில் ஒப்பந்தமாகிறார். சினிமாவில் நடிப்பதைத் தள்ளிப்போடவில்லை. அரசியலுக்கு வருவதைத் தள்ளிப்போடுகிறார். ஒருவேளை அரசியலுக்கு வந்தால் பெரிய தோல்வியைச் சந்திப்பார்


இ.சு.முரளிதரன்:
குறும்படங்களின் வருகை, நாளைய இயக்குநர் போன்ற நிகழ்ச்சிகள், சமூகவலைத்தளங்களின் திறந்த உரையாடல் போன்றன நல்ல சினிமா உருவாக்கத்திற்கு பின்புலமாக அமைகின்றனவா?
 
அ.ராமசாமி:
நல்ல சினிமா- கெட்டசினிமா என்ற இருமை நிலை அவ்வளவு சரியா என்று தெரியவில்லை. ஆனால் பெரும் போக்கு சினிமா என ஒன்று உள்ளது. அந்த வணிக சினிமாவில் ஜெயிப்பதற்காகவே நிறையப்பேர் குறும்படங்கள் எடுக்கிறார்கள். முன்பெல்லாம் 10,15 வருடங்கள் உதவி இயக்குநராக இருக்க வேண்டிய நிலை காணப்பட்டது. இன்று அதற்குப் பதிலாக குறும்படங்களை எடுத்து தமது திறமையை தயாரிப்பாளரிடம் வெளிப்படுத்திப் பட வாய்ப்பிளைப்பெற்றுக் கொள்கின்றனர். குறும்படங்கள் சினிமாவில் நுழைவதற்கு இலகுவான வழியைத் தருகின்றன. குறும்படங்களை எடுக்கும் போது 15 நிமிடப்படத்திலே கதை அம்சத்திலே வித்தியாசம் காட்டுகின்றார்கள். ஆனால் இன்றைய தமிழ் சினிமாவுக்கான மாற்று சினிமா குறும்படத்திலிருந்து வந்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. குறும்படத்திலிருந்தும், நாளைய இயக்குநர் நிகழ்ச்சியிலிருந்தும் வந்தவர்கள் படவாய்ப்புகள் கிடைத்தவுடன் முன்னைய தீவிரத் தன்மையிலிருந்து விலகி வணிக சினிமா தான் எடுக்கிறார்கள். கார்த்திக் சுப்புராஜ் எல்லாம் ரஜனிகாந்தை வைத்துப்படம் எடுத்தாரே. ஓரிரண்டு பேர் வித்தியாசமாக எடுத்திருக்கிறார்கள். ஓரளவுக்கு தமிழ் சினிமாவில் வித்தியாசமாக எடுப்பவர்கள் என்றால் பாலுமகேந்திராவின் சீடர்களைக் குறிப்பிடலாம். உதவி இயக்குநர்களுக்கு அவர் 'சினிமா” சார்ந்து தெளிவான பாடத்தை நடத்தியிருக்கிறார். பாலா, அமீர், வெற்றிமாறன் போன்றோர் நம்பிக்கை தருகிறார்கள். ஆனால் நாளைய இயக்குநர் நிகழ்விலிருந்து வெளிவந்தோர் புதுசினிமாவை நல்ல சினிமாவைத் தருவார்கள் என்று எனக்கு நம்பிக்கை இல்லை.
இ.சு.முரளிதரன்:
“சுப்பர் டீலக்ஸ்” திரைப்படம் அ-நேர்கோட்டுக் கதை சொல்லல் முறையினையும் இயற்பியல் கோட்பாடுகளையும் முன்னிறுத்தியிருந்த போதும் வயது வந்தோருக்கான பிரதியாகவே அமைந்திருந்தது. இவ்வகைத்திரைப்படங்கள் தமிழ்ச் சூழலுக்குப் பொருத்தமுடையனவா?
அ.ராமசாமி:
எந்தத் திரைபடத்தையும் தமிழ்ச்சூழலுக்குப் பொருத்தமா… பொருத்தமில்லையா என்று நான் சொல்லமாட்டேன். தமிழ்ச் சூழல் என்று ஒன்றே ஒன்று கிடையாது. தமிழ்ப்பார்வையாளனும் ஒரே மாதிரியானவன் கிடையாது. அந்த மாதிரியான படம் பார்க்கின்றவர்களும் குறித்த சதவீதம் பேர் இருப்பார்கள். அ- நேர்கோட்டுக் கதை சொல்லல் முறை முன்பிருந்தே இருக்கிறது. ஆனாலும் மிகப்பெரிய பரிசோதனையாக இருக்காது. பாரதிராஜாவின் “ஒரு கைதியின் டயரி” வெவ்வேறு விதமான கதை சொல்லல் முறையில் அமைந்தது “முதல் மரியாதை” முடிவில் ஆரம்பித்து பின்னோக்கிப் போகும். “பின்னோக்கு உத்தி, நினைவோட்ட உத்தி என்பவற்றைப் பயன்படுத்திக் கதை சொல்லியிருக்கிறார்கள். இன்று எல்லாவற்றையும் கலைத்துப்போட்டு அதற்குள்ளான கதையினை பார்வையாளனே உருவாக்கிக் கொள்கிறான். இவ்வகையான படங்கள் பரிசோதனை முயற்சிகளே! இவற்றில் வன்முறையும் பாலுணர்வும் தலை தூக்கி நிற்கின்றன. ஆரண்ய காண்டம், பீட்ஷா போன்றன மேலைத்தேயத்தின் அருட்டுணர்வால் உருவானவை. இவற்றுக்குள்ளே தனிமனிதனின் நுபழ, வன்முறை, பாலுணர்வு என்பன பேசப்படும் போது கதையினைப் பற்றிக் கவலை கொள்ளாமல் பார்வையாளர்கள் பார்க்கின்றனர். இதற்கெனத் தனித்த பார்வையாளர் குழுமம் உள்ளது. இவ்வகைப்படங்கள் வரத்தான் செய்யும்


இ.சு.முரளிதரன்:
"தமிழ் இலக்கியப் போக்கையும் வரலாற்றையும் எழுதும் பொறுப்பு என்னிடம் வழங்கப்பெற்றால் கடந்த கால் நூற்றாண்டு வரலாற்றில் செம்பாதியை ஈழத்தமிழ் இலக்கியத்திற்கே வழங்குவேன்" என்று கூறியுள்ளீர்கள். இத்தகைய முடிவிற்கான காரணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் .

அ.ராமசாமி.
எனது மாணவப்பருவத்திலிருந்தே - பட்டப்படிப்பில் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவனாக அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்த காலத்திலிருந்தே இலங்கைத் தமிழ் எழுத்துகளை வாசித்து வருகிறேன். தமிழ் இலக்கியத்தை கருத்தியல் ரீதியான வரலாற்றுப் பார்வையில் பார்க்கும் விதமான பார்வையை எனக்குள் உருவாக்கியவர்கள் இலங்கையின் பல்கலைக்கழகப்பேராசிரியர்களே. யாழ்ப்பாணத்தைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளர்கள் க.கைலாசபதியின் அடியும் முடியும், பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும், தமிழ்நாவல் இலக்கியம், இலக்கியமும் திறனாய்வும், நவீன இலக்கியத்தின் அடிப்படைகள் முதலான நூல்கள் கா.சிவத்தம்பியின் இலக்கியமும் கருத்துநிலையும், தமிழ்ச் சிறுகதை: தோற்றமும் வளர்ச்சியும், ஈழத்தமிழ் இலக்கியம், நாவலும் இலக்கியமும், தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும் முதலான நூல்களோடு ஆ.வேலுப்பிள்ளையின் தமிழ் இலக்கியத்தில் காலம் கருத்தும், சாசனமும் தமிழும் போன்ற நூல்களின் பங்களிப்பு முக்கியமானவை. இவர்களைத் தொடர்ந்து எம்.எ. நுஃமானின் திறனாய்வுக் கட்டுரைகள், மார்க்சியம் இலக்கியத்திறனாய்வும், இருபதாம் நூற்றாண்டு ஈழத்தமிழ் இலக்கியம் போன்றனவற்றையும் வாசித்தவன். இவை உருவாக்கிய பார்வைக்கோணங்கள், ஈழத்தமிழ் இலக்கியங்களைப் பற்றிய பார்வையை மட்டும் உருவாக்கவில்லை. ஒட்டுமொத்தத் தமிழ் இலக்கியத்தையும் சரியான வரலாற்றுப் பார்வையில் – கருத்தியல் ரீதியாகப் புரிந்துகொள்ளும் முறைமையை எனக்குள் உருவாக்கித் தந்தன. இதேபோல மரபுத்தமிழ் இலக்கியங்களில் வேலை செய்த ஆறுமுகநாவலரின் பிடிவாதமான கருத்தியல் சார்புகள், அவரின் சீடரான சி.வை. தாமோதரம்பிள்ளையின் பதிப்பு முயற்சிகள், விபுலானந்தரின் அரங்கியல் ஈடுபாடுகள் என்பனவும் என்னை உருவாக்கியதின் பின்னணியில் இருக்கின்றன. இவர்களின் அறிவுசார் பணிகளின் வழியாக இலங்கைத் தமிழர்களை ஒருவிதமாக அறிவுத்தளத்தில் இயங்கும் கூட்டமாக அறிந்துகொள்ள வைத்தது.
 
திறனாய்வு நூல்களைத் தொடர்ந்து, எனக்கு அறிமுகமான ஒரு இதழ் மல்லிகை. டொமினிக் ஜீவாவின் ஆசிரியத்துவத்தில் வந்த மல்லிகையில் எனக்கு வாசிக்கக் கிடைத்த கதைகள் பலவிதமானவை. மலையகம், மட்டக்களப்பு, ஈழப்பகுதி எனப் பல பரப்புகளையும் எழுதும் வெளிகளாகக் கொண்ட கதைகள் அவற்றில் வாசிக்கக் கிடைத்தன. அவரே மதுரைக்கு வந்திருக்கிறார். என்னுடைய ஆசிரியர்கள் தி.சு.நடராசன், சி.கனகசபாபதி ஆகியோருடன் சேர்ந்து அவரைச் சந்தித்திருக்கிறேன். மலையகப் பின்னணியில் எழுதிய ந ந்தியின் மலைக்கொழுந்து நாவல் தான் முதன் முதலில் வாசித்த நாவல். மல்லிகையின் வந்த கதைகள் வர்க்க முரண்களையும் சாதியச் சிக்கல்களையும் அதிகம் பேசிய கதைகள். மல்லிகையிலேயே கே.டேனியலில் பற்றிய அறிமுகம் ஏற்பட்ட து. அவரது பஞ்சமர் தொடங்கிப் பின்னர் தமிழ்நாட்டிற்கு வந்து அவர் வெளியிட்ட கானல், அடிமைகள், தண்ணீர் போன்ற நாவல்களையும் வாசித்து ஒருவிதமான ஈழக் கிராமங்கள் இந்தியக் கிராமங்கள் போன்ற சாதியச் சிக்கல்களையும் தீண்டாமையையும் பின்பற்றும் நிலப்பரப்பே என்ற புரிதல் இருந்த து. இந்த புரிதல்களுக்கிடையே தான் வெகுமக்கள் இதழ்களில் ஈழத்தமிழர்களின் மூர்க்கமான போராட்டங்கள் செய்திக் கட்டுரைகளாகவும் நேர்காணல்களாகவும் வெளிவரத் தொடங்கின.
 
மொழிசார்ந்த பெரும்பான்மை x சிறுபான்மை என்ற அரசியல் கருத்துரு உருவாக்கிய போராட்டம், போரை நோக்கி நகர்த்திய பின்னணியில் சில தொகைக் கவிதை நூல்கள் உருவாக்கிய பார்வைகளும், சில கவிஞர்களின் தனித் தொகுப்புகளின் தொகுப்புகளும் தமிழ்நாட்டில் ஒருவிதமான உணர்வுநிலைகளை உருவாக்கின. அறிவுத்தளத்தில் உணர்வுநிலையைக் கலந்த அந்தத் தொகுதிகளாவன பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், வேற்றாகி நின்ற வெளி, சொல்லாத சேதிகள் எனத் தலைப்பிட்டு தொகைநூல்களாக வந்த கவிதைகள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை. வ.ஐ.ச. ஜெயபாலன், சேரன், சு.வில்வரத்தினம் போன்றவர்களின் கவிதைத் தொகுதிகள் தமிழ்நாட்டில் வெளியிடப்பெற்றன. அதே நேரத்தில் ஈழப் போராட்ட ஆதரவு உணர்வுநிலை வெகுமக்கள் பரப்பிலும் பரவியது. பெரும்பாலான வாரப் பத்திரிகைகளும் நாளிதழ்களும் கட்டுரைகளையும் தொடர்களையும் கவிதைகளையும் வெளியிட்டன. இந்தியாவிற்கு ஈழ மக்கள் அகதிகளாக வரத் தொடங்கினார்கள். வேறுபல நாடுகளுக்கும் புலம்பெயர்ந்தார்கள். இந்தியா உதவுகிறதாகவும், ஏமாற்றுகிறதாகவும் கருத்துகள் நிலவின. இயக்கங்களுக்கிடையே நடக்கும் மோதல்களின் பின்னணியில் சிங்களப் பேரினவாத அரசும், இந்திய அரசும், அதனால் அனுப்பப்பட்ட இந்திய அமைதி காப்புப் படையின் ஈடுபாடுகளும் அயலகத்துறையின் தந்திரோபயங்களும் இருப்பதும் உணரப்பட்டன. திராவிட இயக்க அரசுகளின் தேர்தல் அரசியலில்- ஈழப்போராட்ட ஆதரவு முக்கிய பேசுபொருளாக ஆனது. இவையெல்லாமே எழுத்துகளாகப் பதிவுசெய்யப்பட்டு வாசிக்கக் கிடைத்தன.
 
போர்க் காலத்தில் கவிதைகள் தொகைநூல்களாக வந்தது போலப் புலம்பெயர்ந்த தமிழர்கள் லண்டன், கனடா, பாரிஸ் போன்ற நகரங்களிலிருந்து பெருந்தொகை நூல்களை வெளியிட்டார்கள். புனைவு எழுத்துகளும் புனைவல்லாத எழுத்துகளும் படங்களும் ஓவியங்களும் சந்திப்புகள் பற்றிய செய்தித்தொகுப்புகளுமாக வந்துகொண்டே இருந்தன. பத்மநாப அய்யர், சுகன்& சோபாசக்தி போன்றோரின் பெயர்களோடும், பதிப்பாசிரியர்களின் பெயரில்லாமல் வந்த கனடா, பாரிஸ் நகரத்துத் தமிழியல் தொகைகளும் படிக்க்க கிடைத்தன. இத்தொகைநூல்கள் அல்லாமல் போர்க் காலக் கதைகள், புலம்பெயர்கதைகள், மலையகக் கவிதைகள், இலக்கியச் சந்திப்புகள், ஊடறு- பெண்ணியச் சந்திப்புகள் வழியான தொகைகள் எனப்பலப்பலவாய்க் கிடைத்தன. புலம்பெயர்ந்தவர்களின் முயற்சியால் வந்த சிற்றிதழ்கள், இணையப் பதிவுகள் போன்றனவுமாகத் தமிழ் இலக்கியம் பெரும் பரப்பை தமிழில் பதிவுசெய்தன. இவையனைத்துமே கடந்த கால்நூற்றாண்டுக்கான தமிழ் இலக்கிய வரலாற்றுக்கான தரவுகளே
2009 முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர் அதிகமும் புனைகதைகள் சிறுகதைகளாகவும் நாவல்களாகவும் அச்சேறிக்கொண்டிருக்கின்றன. காலம், காக்கைச் சிறகினிலே போன்ற இதழ்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கின்றன. கடந்த பத்தாண்டுகளில் நான் வாசிக்கும் இடைநிலை இதழ்களான அம்ருதா, காலச்சுவடு, உயிரெழுத்து, தீராநதி, காலச்சுவடு போன்றவற்றின் பக்கங்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமான பக்கங்களை ஈழத்தமிழ் எழுத்துகளே பிடித்துக்கொண்டன.

 பெரும்பத்திரிகைகளான ஆனந்த விகடன், இந்துதமிழ், அவற்றின் இலக்கிய இதழ்கள் போன்றவற்றிலும் பலரும் எழுதுகின்றனர். தமிழ்நாட்டில் நூல்களை வெளியிடும் பதிப்பகங்களில் பலவும் ஈழத்தமிழ் எழுத்துகளை வெளியிடுகின்றன. ஈழத்தமிழ் எழுத்துகளை வெளியிடுவதற்காக மட்டுமே பூவரசி, காந்தளகம், குமரன் போன்ற பதிப்பகங்கள் உருவாகியிருக்கின்றன. தமிழ்நாட்டுப் பதிப்பகங்களோடு கூட்டுப் பதிப்பு முயற்சிகளையும் செய்கின்றனர். ஆண்டுதோறும் வழங்கப்படும் கலை, இலக்கிய விருதுகள் பலவற்றில் ஈழத்தமிழ்/ புலம்பெயர் எழுத்தாளர்கள் கவனம் பெற்றிருக்கிறார்கள். விருதுபெற்றிருக்கிறார்கள். பலவற்றை வாசித்தவனாகவும் விமரிசனக் குறிப்புகள் எழுதியிருக்கிறேன். உலகம் தழுவிய நிலையில் நட த்தப்பட்ட பல இலக்கியப் போட்டிகளின் நடுவர்களில் ஒருவனாக இருந்திருக்கிறேன். சில நூல்களுக்கு முன்னுரைகள் எழுதியிருக்கிறேன். இந்தப் பின்னணியில் தான் அப்படியொரு குறிப்பை - தமிழ் இலக்கியப் போக்கையும் வரலாற்றையும் எழுதும் பொறுப்பு என்னிடம் வழங்கப்பெற்றால் கடந்த கால் நூற்றாண்டு வரலாற்றில் செம்பாதியை ஈழத்தமிழ் இலக்கியத்திற்கே வழங்குவேன் – சொன்னேன்.


இ.சு.முரளிதரன்:

ஈழத்துப் படைப்புகள் பெரும்பாலானவற்றில்.. போராளிகளுக்கு சார்பானவர்கள் சில மெய்ம்மைகளை தவிர்த்தும்..போராளிகளுக்கு எதிரானவர்கள் சில மொய்ம்மைகளை இணைத்தும் எழுதியுள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இத்தகைய தன்மைகளை உங்களாலும் உணர முடிகிறதா?
 
அ.ராமசாமி
இந்தக் குற்றச்சாட்டுகளில் பெருமளவு உண்மை உண்டு. இயக்கங்களுக்குள் முரண் தோன்றி மற்றெல்லா இயக்கங்களின் செயல்பாடுகளும் முடக்கப்பட்ட நிலையில் இப்படியொரு நிலை உருவான பின்னணியை விளங்கிக் கொள்ள முடிகிறது. விடுதலைப்புலிகள் மட்டுமே தமிழ்த்தேசிய அரசை வென்றெடுப்பார்கள் என்ற நிலை உருவான பிறகு அவர்களுக்கு ஆதரவாக எழுதுவதும், அவர்களின் செயல்களை முழுமையாக நியாயப்படுத்துவதும், நியாயமில்லாதவை நடந்திருந்தாலும் அவற்றைப் பேசாமல் தவிர்த்ததும் நடந்திருக்கிறது. போருக்குத் தயார்ப்படுத்துதல் என்ற ஒற்றை நோக்கத்திற்காக அப்படி எழுத நேர்தல் இலக்கியத்திற்குப் பின்னடைவுதான். குறிப்பாகப் போருக்குத் தயார்படுத்தும் ஒற்றை நோக்கத்தோடு எழுதும் கருவியாக க்கவிதை வடிவம் மாறிப்போனதின் பின்னணியில் இத்தகைய விமரிசனச் சொற்கள் எழவே செய்யும் என்பதைப்புரிந்துகொள்ளத்தான் வேண்டும். அதேபோல் முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னர் தோல்வியுற்ற இயக்கத்தை -விடுதலைப் புலிகளையும் அதன் தலைமையையும் முழுவதும் குற்றச்சாட்டுகள் வழி ஓரப்படுத்துவதும் புறம் தள்ளப்பார்ப்பதும் தவறானதே. இலக்கியம் எப்போதும் உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் விமரிசனம் செய்யும் வேலையைக் கைவிடக் கூடாது. ஒரு எழுத்தை – எல்லா வடிவத்திலும் பேசும் கதாபாத்திரம் எந்தக் கோணத்திலிருந்து முன்வைக்கிறது எனக் கண்டறிந்து வாசித்தால் இந்த ஆதரவு நிலைபாட்டையும் எதிர்நிலைபாட்டையும் புரிந்துகொள்ள முடியும். மெய்ம்மைகளின் பக்கம் நிற்பது எழுத்தின் அறம். மெய்ம்மைகள் சூழலுக்குக் கட்டுப்பட்டது என்ற போதிலும் மனம் சரியானதின் பக்கம் நிற்கச் சொல்லும். அதைச் செய்யாமல் தவறிய இலக்கியப் பிரதிகள் போர்க்காலத்தில் நிறைய வந்தன; போருக்குப் பின் எதிர்நிலையில் நிறைய வருகின்றன.
 
இ.சு.முரளிதரன்:
3.புலம்பெயர் இலக்கியம் சர்வதேச பரப்பில் காத்திரமான மாற்றங்களை நிகழ்த்தி வருவதாகக் கருதுகிறீர்களா?
அ.ராமசாமி
புலம்பெயர் இலக்கியம் எனக் குறிப்பிடுவதை நான் ‘புலம்பெயர் தமிழ் இலக்கியம்’ எனச் சொல்வதாக எடுத்துக்கொள்கிறேன். கடந்த 20 ஆண்டுகளில் தமிழில் எழுதப்பெற்ற புலம்பெயர் இலக்கியம் சில கட்டங்களைக் கடந்து வந்துள்ளது. பொதுவாகவே பிரிவைப் பேசும் இலக்கியங்கள் எப்போதும் துன்பியலின் வழியாக மனிதத் துயரங்களை உச்சத்தை நோக்கி நகர்த்தக் கூடியன. காதலியைப் பிரிந்த காதலன் அல்லது காதலனைப் பிரிந்து தவிக்கும் காதலி என்னும் பிரிதல் கவிதை தொடங்கி வைத்த அந்த துயர உணர்வுதான் புனைகதைகளின் காலமான இருபதாம் நூற்றாண்டிலும் இருபத்தியோராம் நூற்றாண்டிலும் வடிவமாற்றத்தை அடைந்துள்ளன. உள்நாட்டுக்குள்ளேயே நடக்கும் இடப்பெயர்ச்சிகளின் பின்னணியில் தொழில் மயமாதலும் நகர்மயமாதலும் இருக்கின்றன. 

முதலாளியப்பொருளாதார உறவில் தனிமனிதர்களும் கூட்டங்களும் வேலைகளுக்காகவும் வாழ்தலுக்காகவும் இடம்பெயர்ந்துகொண்டே இருக்கிறார்கள். அதனை எழுதுவதே நம் காலத்துப் புனைகதைகளின் முதன்மைப் பேசுபொருள். இடப்பெயர்வில் திரும்ப வரமுடியும் என்ற ஆறுதலும், நமக்கென்றொரு புல்வெளியும் நிலவெளியும் இருக்கிறது என்ற நினைப்பும் இருக்கும். ஆனால் போர்களாலும் கலவரங்களாலும் பெயர்த்தப்போடப்படும் திரும்பவும் வருவோம் என்ற நம்பிக்கை இல்லாமலேயே சொந்த பூமியை விட்டு – தேசங்கடந்து அகதிகளாகவும், திரும்ப முடியாத நிலையில் குடியுரிமைகோரி இன்னொரு நாட்டின் இரண்டாம் நிலைக் குடிகளாகப் போய்ச் சேர்கிறார்கள்.
 
இடம்பெயர நேர்தலில் சந்திக்கும் இழப்புகள் பலவிதமானவை. பொருள் இழப்பை, மண் இழப்பு என்பதைத் தாண்டி உறவுகளை இழந்து, திரும்பவும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதற்கான உத்தரவாதம் இல்லாமல் போய்ப் புதுப்புலங்களில் ஒரு கூட்டைக் கண்டுபிடித்து அடைத்துக் கொள்ளும் வாழ்க்கை பலவித நெருக்கடிகள் கொண்டது. அவ்வாழ்க்கையைத் தமிழ் விரிவாகப் பதிவு செய்து புலம்பெயர் இலக்கியம் என்ற வகைப்பாட்டைத் தமிழில் தனதாக்கியிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் ஈழப்போராட்டம் தான். 

மொழிக்கு ஒரு கொடுப்பினையைக் கொண்டு வந்து சேர்த்த வகையில் போருக்கு ஒரு நேர்மறை கூறு உண்டு. கவிஞர் சேரன், புனைகதையாளர் சோபா சக்தி போன்றோரின் படைப்புகள் உலகமொழிகளுக்குச் சென்று கொண்டிருக்கின்றன. கவிதைகளும் புனைகதைகளும் தொகைநூல்களாக ஆங்கில மொழிபெயர்ப்பு வழியாக உலகப்பரப்பிற்குள் நகர்ந்துள்ளன. செல்வா கனகநாயகத்தின் மொழிபெயர்ப்புகளும் (Uprooting the Pumpkin – Selection from Tamil Literature in Sri Lanka edited Chelva Kanaganayagam, Oxford university press) லட்சுமி ஹோம்ஸ்ட்ராமின் மொழிபெயர்ப்புகளும் (Lost Evenings Lost Lives by Lakshmi Hosmstorm& Sacha Ebeling,ARC Publications Ltd,UK,2016) இந்த வகையில் குறிப்பிடத்தக்கவை. ஒவ்வோராண்டும் கனடாவின் டொராண்டோ நகரில் நடக்கும் தமிழியல் கருத்தரங்கும் கவனம் ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கிறது. அக்கருத்தரங்கில் வாசிக்கப்படும் கட்டுரைகளும் முன்மொழிவுகளும் உலகப்பரப்பிற்குள் கவனப்படுத்தப்படுகின்றன. கீதா சுகுமாரன், நீட்ரா போன்றோர் மொழிபெயர்ப்புகளில் செயல்படுகின்றனர்.
 
2009 வரை போர்க்காலத்தை மையப்படுத்திப் புலம்பெயர்வைப் பேசியபுலம்பெயர் இலக்கியங்கள், போர்க்காலம் முடிந்து 10 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில் வாழ்விட தேசங்களை எழுதும் பிரதிகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. பழைய தமிழ்நில வாழ்வை மறந்து, புதிய வெளிகளில் ஏற்படும் பண்பாட்டு உரசல்கள், குடும்ப அமைப்பில் உருவாகும் மாற்றங்கள், ஆண் – பெண் உறவில் இருந்த நிலையில் புதியன ஏற்படுத்தும் அச்சம் போன்றன இப்போது எழுதப்படுகின்றன. போர் முடிந்து 10 ஆண்டுகள் ஆன பின்பும் திரும்பத் தாய்நாட்டிற்குப் போக வேண்டும் என்ற நினைப்பு எழாமல் இருப்பதை ஒரு குற்றவுணர்வாக நினைத்துக்கொண்டு, அக்குற்றவுணர்வு மனத்தைச் சந்திக்க முடியாமல், உளவியல் சிக்கல்களை எதிர்கொள்ளும் மனித மனங்களை அனோஜன் பாலகிருஷ்ணன், ப.தெய்வீகன், இளங்கோ, கருணாகரமூர்த்தி, சோபா சக்தி போன்றோர் எழுதுகின்றனர். புலம்பெயர் தேசங்களில் வாழும் சில பெண் எழுத்தாளர்களின் – கறுப்பு சுமதி, மாலினி போன்றவர்களின் எழுத்துகளிலும் அந்தக் கருத்தியல் கொண்ட பாத்திரங்கள் தலைகாட்டுவதை வாசிக்க முடிகிறது. ஒரு மொழியின் இலக்கியம் பலதளங்களில் விரிகின்றது என்பது அம்மொழிக்கான நல்வரவாக நினைக்கப்படவேண்டிய சங்கதி என்ற நிலையில் அதனை நேர்மறையாகவே நான் நினைக்கிறேன். அதன் மூலம் உலகத் தமிழ் இலக்கிய வரைபடம் ஒன்றை உருவாக்கும்போது புலம்பெயர் இலக்கியங்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.
 
இ.சு.முரளிதரன்:
தமிழக இலக்கியப் போக்கிலிருந்து ஈழத்து இலக்கியப் போக்கில் எவ்வகையான மாற்றங்களை இனங்காண்கிறீர்கள்.
அ.ராமசாமி
தமிழ்நாட்டுத் தமிழ் இலக்கியப் போக்கு நவீனத்துவத்தை இருவகையாக எதிர்கொண்டது. தனிமனிதர்களின் அகவுலகம் சார்ந்த தவிப்புகள், அமைப்புகளோடு அவர்களுக்கு ஏற்படும் உரசல்கள், மரபான வாழ்முறை தரும் நெருக்கடிகள்,குறிப்பாக க்குடும்ப அமைப்புக்குள் ஆண் -பெண் உறவுகளில் ஏற்பட வேண்டிய நெகிழ்ச்சிகள் அல்லது அதற்குத் தயாரில்லாத அமைப்பின் வழியாக உருவாக்கப்பட்ட குற்றமனம் என்பதை எழுதும் போக்கு ஒருவகை. இன்னொரு வகையான நவீனத்துவ எழுத்து பொருளியல் தேவைகளையும் சமூக விடுதலையையும் முன்வைத்துத் தமிழ்ச்சமூகம் நகர்ந்த பாதைகளையும் எழுதிக்காட்டியது. அதன் அடையாளங்கள் நகர்மயமாதல் மற்றும் தொழில்மயமாதலின் பின்னணியில் நகரம் xகிராமம் என்ற முரண்பாடுகளை முன்வைத்துச் சாதிய இறுக்கம், வர்க்க முரண் போன்றவற்றைப் பேசின. அவ்வுள்ளடக்கங்களே வட்டார இலக்கியப் போக்கை உருவாக்கம் செய்தன. தமிழ் இலக்கியம் என்னும் பொது அடையாளத்திற்குள் கொங்கு, கரிசல், தஞ்சை, குமரி, மதுரை, சென்னை நகரியம் என வெளிசார்ந்த அடையாளங்கள் எழுதிக்காட்டப்பட்டன. இதன் பின்னர் தலித் மற்றும் விளிம்புநிலை எழுத்துகளும் பெண்ணிய விவாதங்களை முன்வைக்கும் எழுத்துகளும் பரவலாக எழுந்தன.
 
இதன் தாக்கமும் கூறுகளும் இலங்கை/ஈழத்தமிழ் இலக்கியப்பரப்பிலும் உள்ளன என்றாலும் தமிழ்த்தேசியம், அதற்கான விடுதலைப்போர் என்ற ஒற்றை நோக்கம் முன்னின்றதால் ஒரே பரப்பாக முகிழ்த்தன. அத்தகைய எழுத்துகள் மட்டுமே கவனித்துப் பேசப்பட்டன. இலங்கைக்குள்ளிருந்து எழுதியவர்கள் – மட்டக்களப்பு, மலையகப் பகுதிகளிலிருந்து போர்க்காட்சி அல்லாத வெளிகளில் நடக்கும் கதைகள் எழுதப்பட்டாலும் வாசிப்பு மற்றும் திறனாய்வுப்பரப்புகளில் கவனம் பெறாமல் போய்விட்டன. அதேபோல் தலித் மற்றும் பெண்ணிய எழுத்துப் பிரதிகள் எழுதப்பெற்ற போதும் தமிழ்த்தேசிய விடுதலைக்கெதிரான முகிழ்ப்பாகக் கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டன. பன்மைத்துவ வெளிப்பாடுகள் தடைசெய்யப்பட்ட சூழல் தமிழ்நாட்டுத் தமிழில் இல்லை.


இ.சு.முரளிதரன்:
5.ஈழத்துப் போரியல் இலக்கியம் எவ்வகையான மாற்றங்களை கண்டிருக்க வேண்டுமென விரும்புகிறீர்கள்
அ.ராமசாமி
இதை நான் சொல்வது சரியாக இருக்காது. தொடர்ச்சியாகப் போர்க்கால எழுத்துகளையும் போருக்குப்பிந்திய எழுத்துகளையும் வாசித்தவன்; விமரிசனம் செய்தவன் என்ற போதிலும் நான் அப்படிச் சொல்லக்கூடாது என்றே நினைக்கிறேன். ஒரு நாட்டின் விடுதலைக்கு – தேசிய இனத்தின் தன்னுரிமைக்கான போராட்டம் அல்லது ஆயுதம் தாங்கிய போர் எப்படி நடந்திருக்க வேண்டும் என இன்னொரு நாட்டில் இருக்கும் தனிநபரோ, அமைப்போ சொல்வதும் வழிநடத்த முயல்வதும் சரியாக இருக்காது. சரியோ தவறோ களத்தில் இருப்பவர்களே அதைத் தீர்மானிக்க வேண்டும் என்று கருதுபவன் நான்.
 
இதையே தான் நான் இலக்கியப்பரப்பிற்குப் பொருத்துவேன். ஈழத்தில் தனிநாடு கோரிக்கை எழுப்பப் பெற்றுப் பெரும் ஆதரவு இருப்பதாக நம்பப்பட்டு வளர்ச்சி அடைந்து, புவிசார் அமைப்பு காரணமாகப் பல நாடுகளின் தலையீட்டால் போரும் முடிந்துவிட்ட து. முடிந்துபோன போரைத் தோல்வியுற்ற போர் என்றுதான் வரலாறு பதிவுசெய்யும். ஆயுதம் தாங்கிய போராளிகளின் வீரம், அவர்களின் குடும்பத்தவரின் தியாகம், குறைந்த தொழில்நுட்பங்களைக் கொண்டு பெரும் தாக்குதலை நடத்திய திறமை, குறிப்பிட்ட காலகட்டம் வரைக் குறிப்பிட்ட நிலப்பரப்பில் நிர்வாகத்தை நடத்தியதுவரை நடந்த உண்மைகள். நடந்த உண்மைகளைப் போரியல் இலக்கியம் நிதானமாகவும் உணர்ச்சிகரமாகவும் பதிவுசெய்துள்ளது. அதேபோல் தோற்கடிக்கப் பெற்ற பின்னணிகளையும் சந்தித்த துயரங்களையும் கூடப் பதிவுசெய்ததில் குறையொன்றும் இல்லை. நடந்ததையும் பார்த்ததையும் பதிவுசெய்வது எழுத்தின் ஒரு பணி என்ற வகையில் இப்போது கிடைக்கும் போரியல் இலக்கியத்தை முற்றிலும் நிராகரிக்க முடியாது.
 
அந்தப் போரியல் இலக்கியங்களின் தொடர்ச்சியாகப் போரினால் பாதிக்கப்பட்டவர்களின் கடந்த கால வாழ்க்கையைப் பதிவுசெய்வதில் தொடங்கி எதிர்காலத்திற்கு நகர்த்தும் எழுத்துகளைத் தரவேண்டியது போரியல் இலக்கியங்களில் அடுத்த கட்ட நகர்வாக இருக்க வேண்டும். கடந்த காலத்தை விமரிசனப் பூர்வமாகப் பதிவுசெய்வதின் வழி அதைச் செய்யலாம். அதன் வழியாக க்கிடைக்கும் பாடங்களின் மேல் எதிர்காலத்திற்குள் நுழையலாம். போர்க்கால முடிவு என்பது இலங்கைக்குள் உலகமயத்தின் நுழைவோடு சேர்ந்துகொண்டுள்ளது. இரண்டுதடவை இலங்கைத் தமிழ்ப் பகுதிக்குள் சுற்றித்திரிந்தவன் என்ற வகையில் உலகமயம் தரும் திளைப்பையும் சொகுசையும் நுகர்வதற்குத் தமிழர்கள் தயாராகிவிட்டதைப்பார்த்திருக்கிறேன்.
 
நடந்த போரையும் அழிவுகளையும் மறந்து புதிய வாழ்க்கைக்குள் -நுகர்வுப்பண்பாடு உருவாக்கித் தந்துள்ள புதிய வாழ்க்கைக்குள் ஈழத்தமிழர்கள் நுழைந்துவிட்டார்கள். தங்களின் கடுமையான உழைப்பால் அதனைப்பிடித்துவிடலாம் என நினைக்கிறார்கள்.

 மிகச்சிறுபான்மையினருக்கு அந்தக் களிப்பும் திளைப்பும் சாத்தியமாகியிருக்கிறது. பெரும்பான்மையோர் அன்றாட வாழ்விற்கான தேவைகளுக்காக அல்லாடிக்கொண்டிருப்பதும் உண்மை. இந்த நிலையில் போரியல் இலக்கியம் அதன் நினைவுகளோடு புதிய கனவுகளை முன்வைக்க வேண்டும். புதிய விமரிசனப் பார்வையை உருவாக்கவேண்டும். கடந்தகாலத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் நிகழ்காலத்தின் முன்னெடுப்பாக அது மாறவேண்டும். இந்தக் காலகட்டம் கலை, இலக்கியச் செயல்பாடுகளின் வீச்சு உணர்ச்சிகரமான அணுகலைக் கைவிட்டு அறிவுத்தளத்தோடும் விமரிசனப்பார்வையோடும் கூட்டிணைவான செயல்பாடுகளை முன்வைப்பதாக வெளிப்படவேண்டும். நடக்கும் என நம்புகிறேன்.
 
Muraleetharansubramaniam741@gmail.com




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

நாயக்கர் காலம். இயல்.2.பொருளாதார நிலைகளும் உறவுகளும்

மேல்நோக்கியும் கீழ்நோக்கியும்