ஜோ.டி. குருஸ் : அங்கீகரிக்கப் பட வேண்டிய படைப்பாளி
எல்லாத்
துறைகளிலும் விருதுகள் அளிக்கப்படுகின்றன. ஓர் அமைப்பின் விருது என்பது அது வழங்கும்
பணமுடிப்பாக மட்டும் இருப்பதில்லை. அடையாளச் சின்னம் தாங்கிய பதாகையும் சேர்ந்தது.
விருது என்பது ஊக்கமும் அங்கீகாரமும் இணைந்த ஒன்று. அடையாளப்படுத்தும் இன்னொரு பணியும்
விருதுக்குப் பின்னால் இருக்கிறது.
இலக்கியப்
பரப்பின் கருத்தியல் மோதல்களின் களமாக இருக்கும் சிறுபத்திரிகை/ இடைநிலைபத்திரிகைகளின்
பின்புலம் எதுவும் இல்லாமல் நேரடியாகத் தனது நாவல்களின் வழி தன்னை நிலைநாட்டிக் கொண்டவர்
ஜோ.டி.குருஸ். அப்படியொரு நிலைநிறுத்தலுக்கு வாய்ப்பாக இருப்பது அவரது படைப்புலகம்
மட்டுமே என உறுதியாகச் சொல்லலாம். கொற்கை குருஸின்
இரண்டாவது நாவல். அவரது முதல் நாவல் ஆழிசூழ்
உலகு. தமிழக அரசின் விருதைப் பெற்ற நாவல்
அது. எழுதிய இரண்டு நாவல்களையும் மாநில, மத்திய அரசுகளின் விருதுகளைப் பெறும் படைப்புகளாகத்
தந்துள்ள ஜோ.டி.குருஸின் இடம் தமிழ் இலக்கியப் பரப்பிற்குள் தனித்த அடையாளம் கொண்ட
ஒன்று.
ஆதித்
தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியங்களின் தனித்துவமான அடையாளம் அதற்குள் செயல்படும்
ஐந்திணைப் பாகுபாடு. திணை என்பது ஒருவிதத்தில் கருத்தியல் குறியீடாக இருந்தாலும் பருண்மையான
வெளிப்பாடாக இருப்பவை அவற்றின் நிலவியல் பின்னணிகள். மலை, காடு, வயல், கடல், மணல் என
ஒவ்வொரு திணையும் அவற்றிற்குரிய நிலவியல் பின்னணியால் தான் எழுதிக் காட்டப்பட்டுள்ளன.
அந்தத் தொடர்ச்சி தமிழில் அவ்வப்போது விட்டுவிட்டுத் தலைகாட்டுவதுண்டு. தலைகாட்டும்
அந்த அடையாளம் எப்போதும் கொண்டாடப்படும் ஒன்றாகவும் கவனிக்கப்படும் ஒன்றாகவும் இருந்திருக்கிறது
என்பதைத் தமிழ் இலக்கிய வரலாற்றை நுட்பமாக வாசிப்பவர்கள் அறியக் கூடும். அந்தத் தொடர்ச்சியின்
காத்திறமான அண்மை வெளிப்பாடுகள் தமிழ் நாவல் பரப்பில் துளிர்விட்டுக் கொண்டிருக்கின்றன
ஐவகைத்
திணைசார் வாழ்க்கையில் அதிகம் எழுதப்படாத பரப்பாக இருப்பது நெய்தல். கடல் என்னும் நீர்ப்பரப்பும்
கடல்சார்ந்த மீன்பிடித் தொழிலும் தமிழ் எழுத்திற்குள் அதன் சரியான அர்த்தத்தில் எழுதப்படாமலேயே
இருந்தன. கடல் சார்ந்த வாழ்க்கையைக் களனாகக் கொண்டு அலைவாய்க்கரை, கடல்புரத்தில், ஒரு
கடலோரக் கிராமத்தின் கதை, உப்பு வயல் எனச்
சில நாவல்கள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. ஆனால் அவை உருவாக்க நினைத்த படைப்பனுவங்கள்
வேறானவை. முன் நிறுத்தப்பெற்ற முறைகளும் வேறானவை. அந்த நாவல்களின் ஆசிரியர்கள் கடல்
வாழ்க்கையை அந்நியர்களின் பார்வையில் - அந்த சமூகத்திற்கு வெளியே இருந்து பார்த்துச்
சொல்வதன் மூலம் வாசகர்களையும் கடல் வாழ்க்கையில் இருக்கும் துயாத்தையும் வலியையும்
சிக்கல்களையும் கவனிக்கும்படி தூண்டியவர்கள். அந்த வகையில் அவர்களின் நோக்கங்கள் கொஞ்சம்
விலகலானவை. ஜோ.டி.குருஸ் தனது நாவல்களில் அந்நியராக இல்லாமல் உள்ளிருப்பவராக இருக்கிறார்
என்பது முக்கியமான வேறுபாடு. தனது சமூகத்தின் உள்ளுக்குள் இருந்து பேசுபவனின் எழுத்து
அந்த சமூகத்தின் நம்பத் தக்க குரலாக இருக்க முடியும். அவன் பயன்படுத்தும் மொழி அதனை
உறுதியாக்கும் வேலையைச் செய்யும். அவன் சொல்லும் வரலாறும், வரலாற்றை இயக்கிய காரணிகளும்
சிந்திக்க வேண்டிய ஒன்று என்பதை வலியுறுத்தும். இவை அனுபவம் சார்ந்த இலக்கிய ஆக்கத்தின்
பொதுத் தன்மைகள் மட்டுமல்ல; சாதகமான கூறுகளும் கூட.
.jpg)
மீன்பிடித்
தொழிலில் ஈடுபட்டுள்ள பரதவர்களின் -குறிப்பாகத் திருநெல்வேலி மாவட்ட மீனவக் கிராமங்களின்-
தொலைந்து போன பொருளாதார, சமூக வாழ்க்கையின் பின்னணியில் எவையெல்லாம் இருந்தன என்பதைப்
பற்றிப் பேசுவதற்காக ஐரோப்பியக் காலனி ஆட்சியாளர்களின் வருகையைப் பற்றிய விவாதங்களைப்
பல தளங்களில் இரண்டு நாவல்களிலும் எழுப்பியுள்ளார் குருஸ். இந்த விவாதங்களை கிராமம்
சார்ந்த - நிறுவனத் தன்மை இல்லாத- உள்ளூர் மரபைச் சிதைத்த கத்தோலிக்க நிறுவனச் சமயத்தின்
செயல்பாடுகள் என்பதாக வாசிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்குப் பதிலாக நிகழ்காலத்தில்
இருக்கும் கிறித்தவசமயம் x இந்து சமயம் என்பதாக வாசித்தால் இரண்டு நாவல்களின் நோக்கத்தின்
மீது வேறுவிதமான கேள்விகள் எழுப்பபடும் வாய்ப்புகள் நிறைய உண்டு. இந்த இரண்டு நாவல்களையும்
வாசித்த விமரிசகர்கள் அப்படியொரு திசையை - அடையாளத்தை இந்த இரண்டு நாவல்களின் மீதும்
பூசியிருக்கிறார்கள் என்பதால் இந்தக் குறிப்பை இங்கே சொல்ல நேர்ந்தது.
.jpg)
அங்கீகரித்த
சாகித்ய அகாடெமிக்கும் அங்கீகாரம் பெற்ற ஜோ.டி.குருஸிற்கும் வாழ்த்துகள்.
கருத்துகள்