அறிந்த உண்மையிலிருந்து விடுதலை-சுனில் கிருஷ்ணனின் இயல்வாகை:


ஜெயமோகனை ஆசானாகக் கருதும் சிஷ்யர்களின் கதைகளால் நிரம்பியிருக்கிறது ம.நவீனின் வல்லினம். மார்ச்,1,2020 இதழில் சுனில் கிருஷ்ணன் எழுதியுள்ள கதைத் தலைப்பு : இயல் வாகை. 

சுனில் கிருஷ்ணனின் கதையைப் பற்றிப் பேசுவதற்கு முன் சில குறிப்புகள்: 
இயல்வாகை ஒரு மரத்தின் பெயர். அதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் மின்னலாக தோற்றம் தரும். மஞ்சள் அடிப்படை வண்ணங்களில் ஒன்று. மற்ற இரண்டு அடிப்படை வண்ணங்கள் பச்சை, நீலம். 

இயல்வாகை ஒரு மரத்தின் பெயர். அதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் மின்னலாக தோற்றம் தரும். மஞ்சள் அடிப்படை வண்ணங்களில் ஒன்றல்ல. அடிப்படை வண்ணங்கள் சிவப்பு, பச்சை, நீலம். ஆகியனவே. இம்மூன்று வண்ணங்களிலிருந்து சேர்த்தும் பிரித்தும் ஏழு வண்ணங்களை உருவாக்கலாம். மஞ்சளை அடிப்படை வண்ணமாகக் கொண்டு சொல்லாடல் செய்யும் கலைத்துறையும் உண்டு. ஏழு வண்ணங்களின் சேர்க்கைக்கு நிறமாலை என்று பெயர். இயற்கை உருவாக்கிக் காட்டும் நிறமாலையின் பெயர் வானவில் 
நிறமாலையின் /வானவில்லின் எழு வண்ணங்களில் கறுப்பும் வெள்ளையும் இல்லை. அடிப்படையில் அவ்விரண்டும் வண்ணங்களே அல்ல. ஏழு வண்ணங்களையும் ஒன்றாகக் கலக்கினால் கிடைப்பது கறுப்பு. அனைத்தும் கலந்த கலவையே வெண்மை. எல்லா வண்ணங்களையும் தனித்தனியாகப் பிரித்து விட்டால் மிஞ்சுவது ஒன்றுமில்லை. அதுதான் கறுப்பு. சுனில் கிருஷ்ணன் இந்தக் கதைக்கு இயல்வாகை என்னும் தலைப்பு வைத்ததின் மூலம் தமிழ் இலக்கியவியல் சொல்லும் குறிப்புப்பொருள் என்னும் கலைச்சொல் வழியாகக் கதையை வாசிக்கத் தூண்டியுள்ளார். 

உலகம் என்பது இயற்கைப் பொருட்களால் ஆனது மட்டுமல்ல; செயற்கைப் பொருட்களாலும் ஆனது. இயற்கைப்பொருட்கள் – கருப்பொருட்கள் வாழ்க்கையை வண்ணமாக்குபவை என்று தமிழ் அழகியல் சொல்கிறது. எவையெல்லாம் இலக்கியப் பிரதியின் பின்னணியாக – கருப்பொருட்களாக அமையக்கூடியன எனப் பேசும்போது தெய்வம், உணவு, விலங்கு, தாவரங்கள், பறவைகள், பேச்சுமொழி, தொழில், இசைக்கருவிகள், முதலான எட்டையும் பட்டியலிட்டுள்ளது தொல்காப்பியம் 
‘தெய்வம் உணாவே மாமரம் புட்பறை 
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ 
அவ்வகை பிறவும் கருவென மொழிப’ 
(-தொல். அகத்திணையியல் : 30). 
******************************************************** 
மனிதச் சிந்தனை இரண்டு வகைப்பட்டது. நிகழ்வுகளையும் அதனை நிகழ்த்துபவர்களையும் எதிரெதிராக நிறுத்திப் பார்ப்பது ஒருவகையான சிந்தனை முறை. நல்லது – கெட்டது எனப் பொருள்களையும் வினைகளையும் பார்ப்பதற்குக் காரணம் மனிதர்களை நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் கணிப்பதே. இன்னொரு வகைச் சிந்தனை முறை இந்த இந்த உலகத்தை – உலகத்தின் இருப்பை – அதில் உலவும் மனிதர்களை வண்ணங்களின் அடுக்குகளாகப் பார்ப்பது. உலகத்துப் பொருட்கள் எவையுமே கறுப்பு – வெள்ளையாக இல்லை. அவற்றின் கூடுதல் குறைவுகளான நிறமாலை வண்ணங்களில் ஒன்றாகவே இருக்கின்றன. அதே போல மனிதர்களும் முழுவதும் நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் இருப்பதில்லை. நல்லதின் அல்லது கெட்டதின் அளவு நிலையில் கூடுதல் குறைவுகளோடுதான் இருக்கிறார்கள். அப்படி மனிதர்கள் இருப்பதற்கு அவர்கள் காரணமல்ல; அவர்களை இயக்கும் கர்த்தாவின் தூண்டுதலால் மேற்கொள்ளப்படும் வினைகளே காரணங்கள் எனப் பார்ப்பது இன்னொரு பார்வை 
இவ்விருவகைப் பார்வையில் முதலாவது பார்வை அல்லது சிந்தன முறை மேற்கத்தியச் சிந்தனையாக அறியப்படுகிறது. இரண்டாவது பார்வை கீழ்த்திசைப் பார்வையாக- குறிப்பாக இந்தியச்சிந்தனை முறையாக நம்பப்படுகிறது. இலக்கியப்பனுவல்கள் ஆக்கத்தைப் பேசும் மேற்கத்திய இலக்கியவியல் கூட நாயகத்தனம் – வில்லத்தனம் என்ற இரண்டின் அசைவுகளாகவே உருவாவதாக முன்வைக்கிறது. ஆனால் கீழ்த்திசைக் கலையியல் – குறிப்பாக இந்திய இலக்கியவியல் அவ்வாறு முன்வைக்காமல் வெவ்வேறு அடுக்குகளைக் கொண்ட பாத்திரங்களால் ஆனதே இலக்கியங்கள் எனப் பேசுகின்றன. எனவே கீழைத்தேயக் கலையியல், மேற்கத்தியக் கலையியலைக் காட்டிலும் மேலானது என்பது இந்திய ஞானத்தை முன்மொழிபவர்களின் வாதம். 
இந்தியத் தத்துவ ஞான மரபின் மேன்மையை முன்மொழிபவர்கள், இந்திய தத்துவம், இந்திய வாழ்வியல், இந்திய அறிவு, இந்தியக் கல்வி, இந்திய சிந்தனை முறை, அதன் வழியாக உருவாகும் இந்தியர்களை - மேற்கத்தியர்களின் சிந்தனைமுறைகளோடு நேர்நிறுத்தி விவாதித்து, இந்திய வாழ்வியலும், இந்தியம் மனமுமே நமக்கானது; மேற்கத்திய வாழ்வியலும் மனமும் நமக்கானதல்ல என்பதை முன்வைக்கிறார்கள். இதனை உள்ளடக்கமாகக் கொண்டு எழுதுபவராக நம் காலத்தில் முன் நிற்பவர் ஜெயமோகன். ஜெயமோகனுக்குப் பல முன்னோடிகள் உண்டு. க.நா.சுப்பிரமண்யம் முக்கியமான முன்னோடி. 
ஜெயமோகனை முன்னோடியாக -ஆசானாக நினைக்கும் பல இளையதலைமுறை எழுத்தாளர்களை இப்போது அடையாளம் காட்ட முடியும். அவர்களுள் ஒருவராக இருப்பவர் சுனில் கிருஷ்ணன். வல்லினத்தில் வந்துள்ள ஜெயமோகனின் சர்வ ஃபூதேஷுவும், அதன் முன் காட்சியாகிய/கதையாகிய யாதேவியும் இந்த விவாதத்தை முன்வைத்துள்ள கதைகளே. அதே வல்லினத்தில் வந்துள்ள சுனில் கிருஷ்ணனின் இயல்வாகைக் கதை அந்த விவாதத்தை வேறுவிதமாக முன்வைத்துள்ளது. 
சுனில் கிருஷ்ணனின் கதையில் மேற்கு – கிழக்கு என்ற இரட்டை எதிர்வுச் சொல்லாடலில் வைக்கப்படும் துறையாக இருப்பது மருத்துவத்துறை. அக்கதைக்குள் இரண்டு மருத்துவர்கள் இடம்பெறுகிறார்கள் ஒருவர் கதையின் மையப்பாத்திரமாக இருக்கும் சத்தியன். இன்னொருவர் சாமிக்கண்ணு. இவ்விருவரில் சாமிக்கண்ணு வயதில் மூத்தவர்; சத்தியன் இளையவர். இருவரின் மருத்துவ முறைகளில் – நோயாளிகளை அணுகும் முறையில் இருக்கும் வேறுபாடுகளைப் பேசும் சுனில் கிருஷ்ணனின் கதைப்பகுதியை அப்படியே தருகிறேன்: 

தினமும் மைதானத்தில் நடை பயிலும் டாக்டர். சாமிக்கண்ணு கல்லூரி சாலையில் சத்தியன் நடப்பதை பார்த்ததும், “சத்தியா வாய்யா கிரவுண்டுல நடக்கலாம்” என பிடித்து இழுத்து வந்தார். வயது எழுபதுக்கு மேலிருக்கும். “நம்ம பயலுவ எவனும் வரல, அதான் உன்ன பாத்ததும் சரி சேந்து நடக்கலாமேன்னு உள்ள கூப்புட்டேன்” என கைகுலுக்கினார். சாமிக்கண்ணுவின் மருத்துவமனைக்குச் சிலமுறை ஐ.எம்.எ கூட்டங்களுக்கு சென்றிருக்கிறார். எப்போதும் கூட்டம் அலைமோதும். பழைய பாணியிலான மருத்துவர் என சத்தியனுக்கு அவரைப்பற்றி ஓர் எண்ணம் உண்டு. பரிசோதனைகளை விடவும் நோயை நோயாளியிடமிருந்து அறிந்துகொள்ளவேண்டும் எனும் வினோத நம்பிக்கை உடையவர். மைதானத்து விளிம்புகளில் வான் நோக்கி நிமிர்ந்திருந்த இயல்வாகை மரங்களைச் சுற்றி விரவிக் கிடந்த அதன் மஞ்சள் பூக்கள் திடலின் செம்மண் பரப்பில் தனித்தீவுகளை போல் காட்சியளித்தன. சாமிக்கண்ணு அவற்றை நிதானமாக பார்த்தார். பிறகு இருவரும் நடக்கத் தொடங்கினர். பொதுவான மருத்துவ சங்கதிகள்தான் பேச்சு. ஐ.எம்.எ தேர்தல், ஆசுபத்திரி சூறையாடப்படுவது, மருத்துவமனை மரணங்கள அதன் பொருட்டு நிகழும் பேரங்கள் என சாமிக்கண்ணு பேசுவதை வெறுமே உம் கொட்டி கேட்டுக்கொண்டிருந்தார் சத்தியன். “ஜூன்ல ரிட்டையர் ஆனதும் நம்ம ஹாஸ்பிட்டல் வந்துருய்யா” என்றார். “உங்களுக்குத்தான் ஸ்கேன் எழுதவே பிடிக்காதே சார்” என்றார் சத்தியன் சிரித்துக்கொண்டே. “எனக்கு பிடிக்கலைன்ன என்ன? இப்ப மகன் தானே முழுசா பாக்குறான், அவன் பாணியே வேற, யாரும் நாளைக்கு கேஸ் கொடுத்துற கூடாது. நாம பத்திரமா இருக்கணும்னு சொல்றான்.” என சொன்னபோது அவருக்கு மூச்சு வாங்கியது. “ஆமா நீ ஏன் ரேடியாலஜி எடுத்த? நல்ல கூருள்ள பயலாத்தான இருக்க.” என்று அவரை சீண்டினார் சாமிக்கண்ணு. நமுட்டுச் சிரிப்புடன் “பொய் சொல்ல வேணாம், முகதாட்சண்யம் பாக்க வேணாம், அனாவசியமா பேச வேணாம், நடிப்புகளை சகிச்சுக்க வேணாம், உங்களுக்குள்ள என்ன இருக்குன்னு உங்களுக்கே சொல்வேன். எல்லாத்துக்கும் மேல என் உலகத்தில் ரெண்டே ரெண்டு நிறம் மட்டும்தான். கறுப்பு இல்லைனா வெள்ளை. மத்தது எல்லாமே இந்த ரெண்டுக்கும் நடக்குற வெளையாட்டுதான். இந்த அறிவு எவ்வளவு ஆசுவாசத்த கொடுக்குது.” என்றார். “சர்தான்யா, நீங்க என்னத்தையாவது கண்டுபிடிச்சு வாரவன பயமுறுத்தி விடுறீகளே” எனச் சொல்லி சிரித்தார். 

மருத்துவரின் மனப்பாங்கைப் பேசும் கதையின் இந்தப் பகுதி. மனப்பாங்கை உருவாக்குவதில் மேற்கத்தியக் கல்விக்குப் பங்கிருக்கிறது எனச் சொல்கிறது. அதிலும் குறிப்பாக எல்லாவற்றையும் சரியாகக் கணக்கெடுத்துக் குறித்துக்காட்டிப் பொறுப்பை அறிவியலின் மீது சுமத்திவிட்டுத் தப்பிக்கும் நோக்கம் கொண்டது ரேடியாலஜி போன்ற நவீன மருத்துவ முறைகளும் கருவிகளும் என்பதைக் குற்றம் சுமத்தும் கோணத்திலேயே சாமிக்கண்ணுவின் வழியாக முன் வைக்கிறது. 

சாமிக்கண்ணுவும் சத்தியனும் அடிக்கடி சந்திக்கும் நேரம் காலை நடை – வாக்கிங் நேரம். சாமிக்கண்ணு நடக்கும் மைதானப்பகுதியில் இயல்வாகை மரங்கள் உண்டு. சத்தியன் மைதானத்தின் விளிம்பில் நடப்பவர். அவர் வழக்கமாக நடக்கும் பாதையில் இயல்வாகை மரங்கள் இருந்ததில்லை. நோயாளிகளின் நோயை அவர்களிடமிருந்தே அறிந்துகொண்டு மருத்துவம் பார்க்கும் முறையை விரும்பும் சாமிக்கண்ணுவும் சத்தியனும் சந்திக்கும் இந்தக் காட்சி சுனில் கிருஷ்ணன் கதையில் ஒரு உள்ளுறையாக மட்டுமே – கருப்பொருளை ஒட்டிவரும் உள்ளுறையாக மட்டுமே அமைந்துள்ளது. உண்மையில் கதையின் முதன்மையான நிகழ்வுகள் இதிலிருந்து விலகியிருக்கின்றன. 

திருமணமாகாமல் தனியாக வாழும் மருத்துவர் சத்தியனின் உறவுக்காரப் பையன் ராஜசேகருக்குப் பெண் பார்ப்பதும், நிச்சயம் செய்யப் போவதும் அப்போது அந்தப் பெண் தொடர்பாகத் தனக்குத் தெரிந்த உண்மை ஒன்றைச் சொல்வதா? மறைப்பதா? என்பதில் ஏற்படும் குழப்பங்களே கதை நிகழ்வுகள். தொடர்ந்து தனது உறவுக்காரப் பையனுக்கு நிச்சயம் செய்ய இருக்கும் அல்லி – ஏற்கெனவே கருவுற்றவள் என்பதும் அக்கருவைக் கலைப்பதற்காகச் சத்தியனின் மருத்துவமனைக்கு வந்தவள் என்பது தெரிந்தபோதும் அதைச் சொல்லாமல் தவிர்த்துவிடுகிறார். அப்படித் தவிர்த்துவிடக் காரணமாக இருப்பதன் பின்னணியில் தனது உறவுப் பையனுக்குப் பெண் கிடைக்காமல் போன காரணம் இருக்கிறது. 
தான் தாய் மாமன் போல இருந்து பொறுப்போடு பெண் பார்த்துத் திருமணம் செய்துவைக்க நினைத்துப் பார்த்த பெண்கள் எல்லாம் அவனைப் பிடிக்கவில்லை என்று சொல்லி விலகிப்போய் இருக்கிறார்கள். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இவரால் வேலை வாங்கித் தரப்பட்டு சிங்கப்பூரில் இருக்கும் அவனோடு போக விரும்பாமலும் சிலர் தவிர்த்திருக்கின்றனர். பெண்ணைப் பார்த்து நிச்சயம் செய்வதற்கு முன் ராஜசேகரோடு பேசிப் பழகிப் பார்த்த பெண்களும் அவனை நிராகரித்திருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் இவள் தான் – ஏற்கெனவே கருவுற்று, அதனைக் கலைக்க வந்த அல்லிதான் அவனை மணக்கச் சம்மதிக்கிறாள். மாப்பிள்ளைக்கு அல்லியின் குடும்பப்பபின்னணியையும் அவளையும் பிடித்திருக்கிறது. ஆனால் மருத்துவர் சத்தியன் மனதில் மட்டும் அவள் கருவுற்று அதனைக் கலைத்தவள் என்ற உண்மை போட்டு வதைக்கிறது. அதைச் சொல்லித் திருமணத்தை நிறுத்திவிடலாம். ஆனால் அவர் சொல்லப்போகும் உண்மைக்கு தக்க ஆதாரம் எதுவும் இல்லை. ஆதாரமாக இருப்பன அவரது நினைவாற்றலும், வேலைத்தளத்தில் அவர் பின்பற்றும் நடைமுறைகளும் மட்டுமே. 

ஒவ்வொரு நாளும் வேலை முடிந்து போகும்போது அன்றாட வேலைகளைத் தினசரி நாட்குறிப்பு எழுதுவதுபோல, மனதிற்குள் நினைத்துக் கொள்வது அவரது வழக்கம். அதன் மூலம் எல்லாவற்றையும் அவரது மனதில் பதிய வைத்துக்கொள்பவர். அந்த நோயாளி பின்னர் வரும்போது – மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் தள்ளி வந்தாலும் நினைவிலிருந்தே எல்லாவற்றையும் சொல்லிவிடக்கூடிய ஆற்றல் அவருக்கு உண்டு. அந்த ஆற்றலைத் தருவது ஒவ்வொன்றையும் தன் மனத்தில் பதிவுசெய்து வைத்திருப்பதுதான் என நம்புகிறார். அது ஒருவிதத்தில் மேற்கத்தியப் பகுப்பாய்வு முறை. தனது கற்றல் உத்தி மூலம் உருவான திறன் எனவும் நம்புகிறார் சத்தியன். அந்தத் திறன்தான் – ஞாபகப் பதிவுதான் அல்லி, ஏற்கெனவே கருவுற்றவள்; அந்தக் கருவை ஒருமுறை கலைத்துக் கொண்டவள் என்கிறது. அந்தக் கருவுக்குக் காரணம் யார்? ஏற்கெனவே திருமணம் ஆனவளா? அல்லது திருமணம் செய்யாமலேயே கருவுற்றவளா? என அவளைப் பற்றிய முடிவுகள் ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்த ஓட்டம் அல்லியைப் பற்றிய கறுப்புநிறப் பதிவுகள். ஆனால் அல்லி ஏற்கெனவே கருவுற்றுக் கலைத்துக் கொண்டவளாகவோ, அதற்காக அவர் வேலை பார்க்கும் மருத்துவமனைக்குச் சென்றவளாகவோ காட்டிக்கொள்ளவில்லை. தன்னைச் சந்தித்ததை மறைக்கிறாளா? இப்படிப்பட்ட பெண்ணைத் தனது பொறுப்பிலிருக்கும் – தன்னைத் தாய் மாமனாக நினைக்கும் ராஜசேகருக்குத் திருமணம் செய்யலாமா? என்ற தவிப்பும் இருக்கிறது. ஆனால் அந்தத் தவிப்பால் திருமணத்தை நிறுத்திவிட்டால் இன்னொரு பெண் கிடைக்காமல் அவனது திருமணம் மேலும் தள்ளிப்போகக் காரணமாகிவிடக் கூடாது என்ற குழப்பமும் இருக்கிறது. அவரது குழப்பநிலையை சுனில் கிருஷ்ணன் இப்படி எழுதுகிறார்: 


தனக்கு தெரிந்ததை மகனுடைய இடத்தில் இருப்பவனுக்கு, அதுவும் அவனுடைய வாழ்க்கை தொடர்பானதை சொல்லவேண்டுமா இல்லையா? மருத்துவனாக அறிந்து கொண்ட ரகசியத்தை தனிப்பட்ட வகையில் பயன்படுத்துவது சரியா? சேகர் தன் சொந்த மகனாக இருந்திருந்தால் இந்தத் திருமணத்தை நடத்த அனுமதித்திருப்பேனா? சொன்னாலும் சேகருக்கு இதை ஏற்கும் பக்குவம் இருக்குமா? எல்லாவற்றுக்கும் மேலாக இந்தத் தேவையற்ற சுமையை தான் சுமக்கத்தான் வேண்டுமா? இரண்டாக கிழிபட்டு மாறி மாறி தனக்குள் தர்க்கித்து ஓய்ந்து போனார். கவனப்பிழைகள் நினைவுப்பிழைகள் அவரிடமும் மலிந்தன. 
குழப்பப் பின்னணியில் மேலும் சிக்கலுக்குள் நுழையாமல் – பெரிதும் ஆர்வமும் ஈடுபாடு காட்டாமல் திருமணத்திற்குச் சம்மதித்துவிட்டு விலகி நிற்கிறார் சத்தியன். நிச்சயதார்த்தத்திற்குப் பின் அல்லியின் வீட்டார் வந்து அழைப்பிதழ் வைக்கும்போது அவரது தெளிவான முடிவு வெளிப்படுகிறது: 
தேங்காய் பூ பழத்தை தட்டில் வைத்து அழைப்பிதழை அவருக்கு அளித்தார்கள். “தகப்பன் இல்லாத புள்ள, செய்முறையில கொத்தம் கொற இருந்தா பொறுத்துக்கிடணும். நீங்கதான் நல்லபடியா நடத்திக் கொடுக்கணும்” என அல்லியின் அம்மா கைக்கூப்பி தழுதழுத்தார். “சித்தப்பா மொற உனக்கு, விழுந்து கும்புடுக்கம்மா” என்றதும் அல்லியும் வணங்கி நிமிர்ந்தாள். கிளம்புவதற்கு முன் “எங்கிட்டு பாத்தாலும் வெத்து வெள்ளச்சுவரா இருக்கே உங்களுக்கு போர் அடிக்காதா” எனக் குறும்பு மின்னும் கண்களுடன் சத்தியனிடம் கேட்டாள். அவளுடைய குரலை அதுவரை கேட்டிராத சத்தியன் சில நொடிகள் திகைத்து நின்றார். அவரையும் மீறி புன்னகை அரும்பியது அவளும் புன்னகைத்தாள். அவர்கள் புறப்பட்டுச் சென்ற பிறகும் கூட தன்னிச்சையாக முகத்தில் புன்னகை உறைந்திருந்தது அவருக்கே விநோதமாக இருந்தது. 
என்று எழுதிவிட்டுக் கதைத் தலைப்பாக இருக்கும் இயல்வாகையைப் பொருத்திக் காட்டும் விதமாகச் சில வாக்கியங்களை எழுதிக்கதையை முடித்துள்ளார் சுனில் கிருஷ்ணன். 
நெஞ்சை கவ்வியிருந்த இறுக்கம் முழுக்க கரைந்திருந்தது. நாற்காலியில் தன்னைப் புதைத்துக்கொண்டபோது எடையற்று மிதப்பதாக தோன்றியது. புன்னகை சூடிய முகத்துடன் நாற்காலியில் சாய்ந்து கண் மூடியபோது இயல்வாகையின் பொன் மஞ்சள் பூக்கள் நினைவில் எழுந்தன. நாளை முதல் மைதானத்தில் அவருடன் சேர்ந்து நடக்கலாம் என முடிவு செய்திருப்பதை சாமிக்கண்ணுவிடம் சொல்லவேண்டும் என எண்ணிக்கொண்டார். 
எனச் சுனில் கிருஷ்ணன் முடிக்கும் வரிகளில் – இயல் வாகை என்னும் கதைத் தலைப்புப் பொருத்தத்தோடு அவரது நிலைப்பாட்டின் சார்பும் வெளிப்படுகிறது. 
மருத்துவத்தில் சோதனைகளின் அடிப்படையில் கிடைக்கும் அறிகுறிகளைக் கொண்டு மருந்துகளைப் பரிந்துரை செய்யும் தனது முறைக்குப் பதிலாக நோயாளியின் அனுபவ நிலையிலிருந்து நோயின் தன்மையை அறிந்து மருத்துவம் பார்க்கும் சாமிக்கண்ணுவின் முறைமையே ஏற்கத்தக்கது என அவர் மாறிவிட்டார் என்பதைச் சொல்லவே, இயல்வாகை மரத்தடியில் மஞ்சள் பூக்களின் தகதகப்போடு நடக்கலாம் என முடிவெடுத்தாக முடிக்கிறார். இயல்வாகையும் மஞ்சள் நிறமும் சாமிக்கண்ணுவின் தேர்வுகள். அதனை நோக்கி நகர்வதின் மூலம் தன்னிடமிருந்த கறுப்பு – வெள்ளைப் பார்வையைக் கைவிடப்போகிறார் சத்தியன் என்பது சுனில் கிருஷ்ணன் தரும் குறிப்பு. 
தலைப்பாக இருக்கும் கருப்பொருளைக் குறிப்புப்பொருளாக – உள்ளுறையாக மாற்றிய நிலையில் சுனில் கிருஷ்ணனின் இயல்வாகைக் கதைத் தமிழ் இலக்கியவியல் பிரதியாக நிற்கிறது என்பதைச் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். அதே நேரத்தில் இந்திய ஞானம், இந்திய வாழ்வியல், இந்திய மனித மனம் என்பதை மேன்மையானதாக முன்வைக்கும் எழுத்துகள், மேற்கத்திய வாழ்வியல் முன்வைக்கும் சமுதாய நடைமுறைகளைக் கணக்கில் கொள்வதில்லை என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டியதுள்ளது. மேற்கத்திய வாழ்வியலின் பின்னணியாக இருக்கும் சமூகக் கட்டமைப்பில் இருக்கும் இரட்டையில் இருப்பவன்- இல்லாதவன் அல்லது ஆதிக்கவாதி – அடக்கப்படுபவன் என்ற இரட்டை நிலையில் இடம் மாறும் வாய்ப்புகள் உண்டு. பொருளியல் அடையாளம் வழியாக உருவாகும் இவ்விரட்டை, இன்னொரு பொருளியல் நிலையில் – மாற்றத்தில் இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் மாறிவிடும் வாய்ப்புகளைக் கொண்டது. ஆனால் அவர்கள் கொண்டாடும் கீழ்த்திசைச் சமூகங்களின் அமைப்பில் இருக்கும் வேறுபாடுகள் இன்னொருவகை வாழ்வியலுக்குள் மனிதர்களை நகரவிடாமல் தடுக்கும் கட்டுதிட்டான கோடுகளை-சாதியப் படிநிலைகளைக் கொண்டது. இதனை உள்ளடக்கமாக்கி இவர்கள் இலக்கியப் பிரதிகளை உருவாக்குவதில்லை. அப்படி நிலைகளை இலக்கியப்பிரதிகளுக்கான -கச்சாப் பொருளாக - உரிப்பொருளாகக் கூட நினைப்பதே இல்லை என்பதும் தொடர்ச்சியாகச் சுட்டிக் காட்டப்பட வேண்டியதாக உள்ளது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்