ராஜுமுருகனின் ஜிப்ஸி: கருத்துரைகள் தொகுதி


பெரும்பாலான மனிதர்கள், அளிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து விடும்போது மிகக் குறைவானவர்கள் அளிக்கப்பட்ட வாழ்க்கையை நிராகரித்துவிட்டு, தனக்கான வாழ்க்கையைத் தேர்வுசெய்கிறார்கள். அவர்கள் தேர்வுசெய்த வாழ்க்கைக்குள் இருக்கும்போது ஏற்படும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து, எதிர்த்துநின்று வெல்கிறார்கள். உதாரணமனிதர்களாக - வரலாற்று ஆளுமைகளாக அறியப்படுகிறார்கள்.

மிகக் குறைவான மனிதர்களுக்குப் பதிலாகப் பெரும்பாலான மனிதர்கள் கிடைக்கும் வாழ்க்கையையே வாழ்கிறார்கள். திருப்தி அடைகிறார்கள். அளிக்கப்பட்ட வாழ்க்கைக்குள் கரைந்து காணாமல் போவதைப் பற்றியெல்லாம் நினைத்துக் கொள்வதில்லை. அதற்குள்ளும் சிலர் தன்னடையாளத்தை -தனித்துவங்களை உருவாக்கி வரலாறாகிறார்கள். வரலாறாக மாறுவதில் மனிதர்களுக்கு எப்போது தீராத மோகம் இருக்கிறது. வரலாறு என்பது ஒற்றைப்பரிமாணம் கொண்டதல்ல என்பதைப் புரிந்து கொண்டால் மனிதர்கள் எவ்வாறெல்லாம் வரலாறாகும் முயற்சியில் இருக்கிறார்கள் என்பதும் புரியும்.

வரலாறாகும் ஆசையில் இறங்காதவர்கள் இருப்பார்களா? என்று சொல்லத் தெரியவில்லை. முயற்சியின் அளவுகள் வேறுபடலாம். அமைப்புக்குள் அதன் விதிகளையும் நம்பிக்கைகளையும் ஏற்று வாழ்வதைப் பாதுகாப்பான வாழ்வாக நம்புவது பெரும்பான்மைப் போக்கு. பெரும்பான்மைக்குள் அடையாளமிழந்து வாழ்வதைக் கொண்டாடுபவர்களால் , அந்த நம்பிக்கையின் தொடர்ச்சியாகவே குடும்பம், வீடு, உறவுகள் போன்ற பற்றுகள் உருவாக்கப்படுன்றன. அப்பற்றுகளோடு அமையும் வாழ்க்கை முறைமையை நிலையான வாழ்க்கை முறையாக ஆக்குவதற்குச் சட்டங்களும் விதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன. அவற்றை ஏற்றுப் பேரமைப்புகளுக்குள் வாழ்வதை மனிதர்கள் உறுதிசெய்கிறார்கள். குடும்ப அமைப்பை விரும்பும் மனிதர்களே தேசத்திற்கான அரசமைப்பையும் விரும்புகிறார்கள்.

எல்லாவகையான பற்றுகளை ஏற்றுக்கொள்ளும் மனமே இவற்றையெல்லாம் சுமையாகவும் விடுதலைக்கெதிரான கட்டுப்பாடாகவும் நினைக்கவும் செய்கிறது. கூட்டமாக யோசிக்கும்போது வரமாக நினைப்பது, தனியாகச் சிந்திக்கும்போது சாபமாகத் தோன்றுகிறது. ஒவ்வொன்றையும் எதிர்வான இரட்டைக்குள் நிறுத்திப்பார்த்து ஒன்றை வரமாகவும் இன்னொன்றைச் சாபமாகவும் கருதிக்கொள்வதே வாழ்வின் இயங்கியலாக நீள்கிறது.

குடும்பத்தைச் சாபமாக நினைக்கும் மனநிலைக்கெதிராக நாடோடியாக வாழ்வதை -தேசாந்திரியாகத் திரிவதைப் பரிந்துரைக்கிறது கலை. இந்தச் சொல்லாடலின் பின்னணியில் ஜிப்ஸி என்ற சொல் கலையின் பாற்பட்ட சொல். நிலையான அமைப்புகளை நிராகரிக்கும் - விவரிக்கும் ஒரு கலைச்செயல். அத்தகைய கலைச்செயல் எப்போதும் தனிமனிதர்களுக்குக் கவனிக்கத்தக்கதாகவே இருக்கும். அமைப்புகளுக்கெதிரான விடுதலை மனத்தின் வெளிப்பாடு என்ற நிலையில் எப்போதும் கொண்டாடப்படும் ஒன்றாகவே இருக்கிறது.
இல்லறைத்தை முறைப்படுத்துவதில் முதன்மைப் பங்காற்றும் சமய வாழ்க்கையே அதன் எதிர்நிலையில் புனிதமான ஒரு கலைச்சொல்லாக துறவையும் பரிந்துரைக்கிறது என்பது சுவாரசியமான முரண். நவீன காலத் துறவிகள், துறவு வாழ்க்கைக்குள் இருந்துகொண்டு இல்லறமேன்மையைப் பரிந்துரைக்கிறார்கள் என்பதும், அதன் இறுக்கமான கட்டமைப்புகளின் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள் என்பதும் அந்த முரணின் நீட்சிதான். அமைப்பை விட்டுவிட்டுத் தனித்தலைதலைத் தாண்டி மொழி, இனம், சமயம், தேசம் போன்ற பற்றுகளோடு வாழ வேண்டும் எனப் பேசுகிறார்கள் சமயவாதிகளும் அரசியல்வாதிகளும். இவை பின் நவீனத்துவ காலத்து முரண்களின் தொகுதி.

தனிமனிதனின் பெயராக ஆக்கப்பட்டுள்ள ஜிப்ஸி என்பது   வாழ்க்கை முறை. ஜிப்ஸி முறையின் தொடக்கம் எப்போது நிகழ்ந்திருக்கும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது. வேட்டைச் சமூகமாக மனிதக் கூட்டம் வாழ்ந்த காலகட்டம் ஒன்றிருந்ததாக மானுடவியல் விளக்குகிறது. அக்காலகட்டத்தில் மனிதர்களுக்கெனச் சொந்தவீடு, சொந்த நிலம், சொந்தநாடு என்ற நினைப்பும் கருத்தும் இல்லை. நேற்றென்றொரு நாளிருந்தது; இன்றொருநாள் இருக்கிறது; நாளையென்றொரு நாளும் இருக்கும். இப்படியொரு காலகட்டம் இருந்திருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். ஆனால் அப்படியொன்றிருந்தால் கொண்டாடலாம் என்று நம்பும் கூட்டம் எப்போதும் இருக்கிறது. இப்போதும் இருக்கிறது.

ஜிப்ஸி நிலை கொண்டாடப்படவேண்டிய மனநிலையா? ஏற்கத்தக்க மனநிலையா? போன்ற விவாதங்களை ராஜுமுருகனின் சினிமா - ஜிப்ஸி - எழுப்பவில்லை. ஆனால் ஜிப்ஸியாக வாழ நேர்ந்த ஒருவனை அமைப்புகள் சிதறடிக்கின்றன என்ற ஆதங்கத்தை முன்வைக்கிறது. அந்த வகையில் இந்தப் படம் கவனிக்கப்படவேண்டிய -விவாதிக்கப்படவேண்டிய படம். எல்லா அமைப்புகளும் அந்த வகையில் -ஜிப்ஸி நிலைக்கெதிராக ஒன்றிணைகின்றன என்று பேசியிருக்க வேண்டிய படம், அதிலிருந்து விலகி விடுகிறது. 

ஜிப்ஸி வாழ்க்கையை விவாதிக்கும் படத்தை, நிகழ்கால இந்திய அரசியலை விவாதிக்கும் படமாக மாற்ற நினைத்துத் திசை மாறியுள்ளது. அந்தத் திசை மாற்றத்தின் தொடக்கம் தனது சாவின்போது நினைவில் நிற்கும் ஒரு முகத்தை- மனைவியைத் தேடும்போது ஆரம்பிக்கிறது. தேடிக்கண்டடைந்த அந்த முகம் அமைப்புகளின் விதிகளை அணுசரித்து நிற்காத ஒன்றுதான். வெளியுலகத்தைப் பார்க்கவும் பழகவும் அனுமதிக்காத இறுக்கமான இசுலாமியக் குடும்பத்து பெண்ணைக் கண்டுபிடித்துத் தூரம் தூரமாய்ச் சென்று நாடோடித்தனமாய் - சுதந்திரமாய் திரிகிறார்கள். ஆனால் அந்தச் சுதந்திர வாழ்வை ‘நீ யார்? என்ன சாதி? எந்த மதம்? அந்த அமைப்புக்குள் இருப்பவனா? என்ற கேள்விகள் தடுக்கின்றன. தேடிக்கண்டடைந்து உருவாக்கிய ஜிப்ஸிகளுக்கான குடும்ப வாழ்க்கையைச் சிதைக்கின்றன நாட்டில் உருவாகியுள்ள புதிய கேள்விகள்.

கலவரத்தின் பின்னணிகளைப் பேச நினைத்த போது ராஜுமுருகன் சமகால அரசியல் நிகழ்வுகளுக்குள் நுழைகிறார். அதனால் , சரி/ தவறு என்ற சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். இந்தியாவில் நிலவும் வலதுசாரி அரசியல் பிழையானது; இடதுசாரி அரசியல் சரியானது என்ற நம்பிக்கையின் மேல் படத்தின் பின்பாதியை உருவாக்கியுள்ளார் ராஜுமுருகன் சாதிவாதத்தையும் மதவாதத்தையும் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றும் அரசியல்வாதிகள், பிளவுகளைத் தக்க வைப்பதையும் தங்களின் மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்வதையுமே நோக்கமாகக் கொண்டவர்கள். இதனைச் சாதாரண மனிதர்கள் புரிந்துகொள்ளும் நிலையில் மேலாதிக்கவாதிகளுக்கெதிராக - ஆதிக்கக் கருத்தியலுக்கெதிராக ஒன்றிணைவார்கள். அந்த ஒன்றிணைவுக்கு ஆதரவாக இந்திய இடதுசாரி அமைப்புகள் இருக்கும் என்ற நம்பிக்கையையும் முன்வைக்கிறார் இயக்குநர். நடக்கும் அரசியலைப் பார்த்தால் இந்த நம்பிக்கை ஒன்றும் வெளிச்சக்கீற்றாக இல்லை.

மதவாத அரசியல் மீது விமரிசனம் வைக்கும்போது இந்துத்துவ அரசியலைக் குறிவைத்துக் காட்சிகளை அமைத்துள்ள இயக்குநர், இசுலாமியர்கள் அடிப்படைவாதத்தின் பிடியில் சிக்கியிருக்கிறார்கள் என்ற விமரிசனத்தையும் விவாதிக்க வேண்டும் என நினைத்துள்ளார். படத்தின் காட்சிகளின் அளவும் வசனங்களும் இசுலாமிய அடிப்படை வாதத்தையே அதிகமும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. ஆனால் இந்தியச் சூழலில் இசுலாமியச் சமய வாழ்க்கை என்பது முழுமையும் அடிப்படைவாதத்தின் பிடியில் சிக்கியுள்ளது என்று சொல்ல முடியாது. தேசத்தை - அதன்பரப்பை அடிப்படை அலகாகக் கொண்டால், பெரும்பான்மை x சிறுபான்மை என்ற விவாதத்திற்குள் இசுலாமியர்கள் தங்கள் அடையாளத்தையும் சமயப் பண்பாட்டையும் காத்துக் கொள்வதற்காகவே இறுக்கமான வாழ்க்கைக்குள் இருக்கிறார்கள் என்பது புரிய வரலாம். இறுக்கமான வாழ்முறையில் பெண்கள் மீதான கட்டுப்பாடுகளும் ஒடுக்குதலும் கூடுதலாக நடக்கிறது என்பது விவாதப் பொருளாக்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் படம் அப்படியான காட்சிகளைக் கொண்டிருக்கவில்லை.


*****
நிலையான வாழ்க்கை முறைக்கு மாற்றாக ஜிப்ஸி வாழ்க்கை முறையைப் பரிந்துரைக்கும் படம், ஜிப்ஸி வாழ்க்கை நாயகனின் தேர்வல்ல; அதுவாக வந்து சேர்ந்த வாழ்க்கை எனக் காட்டுவதிலேயே முதல் பிழையைக் கொண்டிருக்கிறது. பரிந்துரைக்கப்போகும் ஜிப்ஸி வாழ்க்கையை விவரிக்கும் சொல்லாடல்களுக்குள் நுழையாமல், அவனுக்கான துணையை ”குடும்பத்தை உருவாக்குவதில் முனைப்பாக இருந்தான்; வெற்றிபெற்றான்” என்பதாக விரிந்துள்ளது. தனது சினிமாவின் சொல்லாடலில் - ஒருவரிக்கதையில் - தெளிவில்லாத நிலையில் நிகழ்நிலைத் தர்க்கங்களிலிருந்து விலகிச் செல்வது தவிர்க்க முடியாதது. அவரது முந்திய படமான ஜோக்கரிலும் இதுபோன்ற குழப்பங்கள் இருந்தன. முன்வைக்க விரும்பும் கருத்தியலுக்கேற்ற கதை சொல்லலை - திரைப்படமாக்கலைத் தேர்வுசெய்யாமல், ஒற்றைப் பாத்திரங்கள் வழி மொத்த நிகழ்வுகளையும் அமைக்கும் பாணியையே இந்தப்படத்திலும் பின்பற்றியுள்ளார்.

நிலக்காட்சிகள், பின்னணி இசை, காமிராவின் நகர்வுகள் போன்றன படத்திற்கான அர்த்தங்களை உருவாக்குவதில் அதனதன் பங்கினைச் செய்துள்ளன. ஆனால் இயற்கையான வெளிச்சம் - இருட்டு என்பதைக் காட்ட நினைத்து, படம் பார்க்கிறவர்களுக்குக் காட்டப்படவேண்டியனவற்றைக் காட்டாமலும் விலகியிருக்கிறது. ஒரு தெருப்பாடகனாக வரும் மையப் பாத்திரத்தை வலுப்படுத்தும் விதமாகப் பாடல்கள் எழுதப்பட்டிருக்கலாம். இசைக்கோர்வைகளில் அக்கறைகள் காட்டியிருக்கலாம்.

ராஜுமுருகனின் முந்திய படமான ஜோக்கரில் வெளிப்பட்ட குறைபாடுகள் இதிலும் வெளிப்பட்டுள்ளன. பொதுப்புத்தியில் நிலவும் எதிர்ப்பு xஆதரவு என்ற நிலைபாடுகளில் சமூகப் பொறுப்புடைய கருத்தியலோடு தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள நினைக்கிறார் இயக்குநர். அதற்காக, அக்கருத்தியலோடு உடன்பாடு கொண்ட வசனங்களையும் காட்சிகளையும் அமைக்கிறார். ஆனால் அப்படியான வசனங்களும் காட்சிகளும் மொத்தப் படத்தின் பகுதியாக இருக்கத் தக்கனவா? என்பதை உறுதிப்படுத்துவதில்லை. ஒரேயொரு எடுத்துக்காட்டை மட்டும் இங்கே குறிப்பிடலாம்:

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்கும் காட்சி.” உங்க ஆட்கள் ஜெயிப்பார்கள்” எனப் பேசுவது. அதற்குப் பதில் சொல்லும் நாயகி, “இந்தியா தான் எங்கள் நாடு; நாங்கள் இந்தியர்கள்” இந்த வசனங்களை அந்தப் பாத்திரங்கள் பேசுவார்களா? இயக்குநரின் அரசியல் சார்பை வெளிப்படுத்தும் இந்த வசனங்களை, இந்த விதமாகப் பேசுவார்களா? என்ற கேள்விகள் எல்லாம் அவருக்கு இல்லை.
*******

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

நாயக்கர் காலம். இயல்.2.பொருளாதார நிலைகளும் உறவுகளும்

மேல்நோக்கியும் கீழ்நோக்கியும்