நிலவெளிப்பயணம்


சென்னை-78,கே.கே.நகர், முனிசாமி சாலை, மஹாவீர் காம்பளக்ஸ், எண்.6, டிஸ்கவரி புக் பேலஸ் முகவரியிலிருந்து அதன் புதிய வெளியீடான நிலவெளி -மாத இதழ், ஆளஞ்சல் மூலம் வந்து சேர்ந்த நேரம் நேற்று(16-05-2019) மாலை 6 மணி. 24 மணி நேரத்தில் படித்து முடித்துவிட நினைக்கவில்லை. என்றாலும் முதல் இதழ் என்பதால் 68 பக்கங்களையும் வாசித்து விடுவது என்று கங்கணம் கட்டி வாசிக்கத் தொடங்கினேன். மொத்தமாக நான்கு அமர்வுகள்.

முதல் வாசிப்பில் 9 பக்கங்களில் விரிக்கப்பட்டிருந்த ஐந்து கவிகளின் 18 கவிதைகளையும் ஒரே மூச்சில் வாசித்து முடித்தபின் சச்சின், வே.நி.சூர்யா, இளங்கோ கிருஷ்ணன் ஆகியோரின் கவிதைகள் ஒதுங்கிக்கொள்ள, பெருந்தேவியின் கவிதைகளும் வியாகுலனின் கவிதைகளும் திரும்ப ஒருமுறை வாசிக்கும்படி கேட்டுக்கொண்டன. மூன்றாவது தடவை வாசித்துச் சிரித்துக்கொள்ளத் தூண்டிய நிலையில் வியாகுலன் சொல்முறையாலும் தேர்வுசெய்த மனிதர்களின் வழியாகவும் நினைவில் இருக்கிறார்.

இரண்டாவது அமர்வில் வாசித்தவை நேர்காணலும் மூன்று -அதீதன். .சா.தேவதாஸ், தொ.பத்தினாதன்- கட்டுரைகளும் .தொல்லியல் ஆய்வாளர் சொ.சாந்தலிங்கத்தின் நேர்காணல் அவரது துறைசார்ந்த பணியின் பொறுப்புகளைச் சரியாகச் செய்தவர் என்பதைக் காட்டுகிறது. ஆனால் தமிழக வரலாறு பற்றிய அவரது புரிதலிலும் அவர் சொல்லும் கால அடுக்குகளிலும் பல கேள்விகள் எனக்கு உண்டு. இதுவரை நடந்துள்ள ஆய்வுகள், வரலாற்றுக்கு இலக்கியத்தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ள விதம், வரலாற்றெழுதியலில் இருக்கும் பல்வேறு போக்குகள் பற்றி அவரது கூற்றுகள் விவாதத்திற்குரியன. கேள்விகளும் ஒருமுகப்படுத்திய நோக்கம் இன்றித் தாவித் தாவிச் சென்றுள்ளன.

வழக்கமான நூல் மதிப்புரையிலிருந்து அதீதனின் மதிப்புரை மாறுபடவில்லை. லைலா எக்ஸின் பிரதியின் நிர்வாணம் என்னும் சிறுகதைத் தொகுதியைப் பற்றிய அறிமுகம். இன்னொரு அறிமுகக் கட்டுரையாகத் துருக்கி எழுத்தாளர் எலீப் ஷஃபக்கின் எழுத்துகள் குறித்து மொழி பெயர்ப்பாளார் சா.தேவதாஸ். பிறமொழி எழுத்தாளர் ஒருவரை வாசிக்கத்தூண்டும் அறிமுகம். முன்றாவதாக தொ. பத்திநாதனின் கட்டுரை. தடம் விகடனில் எழுதிய கட்டுரையின் நீட்சியாகக் கூடுதல் விவரங்களைச் சேர்த்து ஒரு நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார் .அகதிகளுக்கு குடியுரிமை கிடைக்கும் வாய்ப்புகள் கூடிவரும் என்ற அவரது நம்பிக்கை நிறைவேற நாடாளுமன்றத் தேர்தல் முடிவிற்குப் பின் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். இம்மூன்றோடு ஓர் இடைவெளி.

மூன்றாவது அமர்வில் 2 கட்டுரைகள் சரவணன் சந்திரனும் குமாரசெல்வாவும். தனது வெவ்வேறு ஈடுபாடுகளில் முழுமையாக ஐக்கியமாகி விடுபவராகக் காட்டும் சரவணன் சந்திரன், எழுத்தாளராகத் தன்னை முன்வைப்பதிலும் அதே தீவிரத்தைக் காட்டிவருகிறார். இதுவரையிலான அவரது எழுத்துகளை வாசித்ததிலிருந்து புனைவெழுத்து, புனைவு நீக்கிய எழுத்து என்ற வகைமை வேறுபாட்டைத் தெரிந்தே அழிக்கிறாரா? தெரியாமல் செய்கிறாரா? எனச் சொல்ல முடியவில்லை. வாசிப்புச் சுவையைக் கூட்டும் நோக்கம் வெளிப்படும் அவரது எழுத்துகளில் எப்போதும் மனிதர்களின் இருப்பின் மீது அக்கறையான விமரிசனம் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அவ்வெளிப்பாட்டிற்கெனக் குறிப்பான மனிதர்களை - அதற்கான அனுபவங்களைக் கொண்ட மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்புகளைத் தேடிச் செல்பவர் என்பதை அவரது எழுத்துகள் சொல்கின்றன. அம்மனிதர்களின் அருகிருந்து பார்த்துச் சொல்கிறேன் என்ற கவனப்படுத்தும் எழுத்தாக இருக்கிறது அவரது எழுத்துமுறைமை. நிலவெளியில் தொடங்கியுள்ள பத்திக் கட்டுரையான ” பொங்கிமுத்துவின் எக்ஸ்.எல். சூப்பர்!” என்பதிலும் அக்கவன ஈர்ப்பு இருக்கிறது. பத்தி எழுத்து என்னும் புனைவு நீக்கிய எழுத்தில், புனைவின் தொனியைக் கொண்டுவந்திருக்கிறார். கிராமத்து மனிதர்களின் அந்நியமாதல் நிலையைச் சொல்லும் அரசியல் பொருளாதார விமரிசனத்தை- அழுகை மெய்ப்பாட்டை எள்ளலோடு சொல்கிறது.

திறனாய்வாளர் ந.முருகேசபாண்டியனை ஆசிரியராகக் கொண்டு வரும் நிலவெளியின் கண்டுபிடிப்பாகச் சொல்ல வேண்டிய ஒன்று குமாரசெல்வாவின் கட்டுரை. தங்கள் எழுத்தை எந்தப் பின்னணியில் எத்தகைய புரிதலோடு வாசிக்க வேண்டும் என்பதைச் சொல்லும் - வாசிப்பவர்களுக்கு உதவும் நோக்கத்தில் எழுதப்பட்டுள்ள- கட்டுரையை ஒவ்வொரு இதழிலும் இடம்பெறச் செய்தால், நிலவெளி இதழின் புதுப்பங்களிப்பாக இருக்கும். குமாரசெல்வா எழுத்திற்குப் பின்னால் வட்டாரமொழியின் அர்த்த அடுக்குகள் இருப்பதுபோல ஒவ்வொரு எழுத்தாளருக்கும் வெவ்வேறு பனுவலாக்கப் புதிர்கள் இருக்கக் கூடும். அதைக் கொண்டுவரும் நோக்கத்தோடு ஒரு கட்டுரையை எழுதச்செய்யலாம்.


கடைசியாக வாசித்தது என்.ஸ்ரீராமின் ’துருத்தி நடனம்’ என்னும் நெடுங்கதை. அரிச்சந்திர மயான காண்ட நிகழ்வுகளை - பொம்மைக் கூத்தாட்டத்தின் பாடல் பிரதிகளை இணைப்பிரதியாக்கிக் கொண்டு தர்க்கமற்ற சமகாலக் கிராமத்துப் பாத்திரமொன்றின் அவலத்தை முன்வைக்கிறது. மாடு என்னும் செல்வத்தைக் கையாள்வதில் வல்லவனான விசுவின் நாயகத்தனம், அடுத்தவரின் நலனில் அக்கறை கொண்டு விட்டுத்தரும் தற்செயல் முடிவுகளால் அடையும் அவலம் அது. சொத்து, பாசம், மனைவி, காமம் என எல்லாவற்றையும் இன்னொன்றால் பதிலீடு செய்துவிடும் அவனது முடிவுகளுக்குத் தர்க்கரீதியான காரணங்கள் எதுவுமில்லை. துருத்திக் கன்றைக் கொண்டு பால் கறந்துவிடும் சாகசம் அல்ல மனித வாழ்க்கை. ரத்தமும் சதையுமான மனிதர்களோடு போட்டியிடும் தருணங்கள் கொண்டது என்பதை இயல்புவாத மொழிநடையில் எழுதியுள்ளார் என்.ஸ்ரீராம். இந்தக் கதை விவரிக்கும் பரப்பும் கதை மாந்தர்களும் தமிழ் வட்டார எழுத்தில் மட்டும் கிடைக்கக் கூடியன.
****************** 
வீட்டுமுகவரிக்கு வந்து கொண்டிருக்கும் அம்ருதா, உயிர்மை, காக்கைச் சிறகினிலே, புத்தகம் பேசுது, புதிய கோடாங்கி, உங்கள் நூலகம், காலச்சுவடு என ஒவ்வொன்றையும் வந்தவுடன் முதல் பார்வையாக ஒரு புரட்டுப் புரட்டிவிட்டுப் பின்னர் தேர்வு செய்து படிப்பதுண்டு. பல நேரங்களில் அவற்றின் எல்லாப் பக்கங்களையும் வாசித்து முடிப்பதில்லை. அப்படி நினைத்தால் வேறு எதனையும் வாசிக்கவே முடியாது. முதல் இதழ் என்பதால் நிலவெளியின் பக்கங்களை 

24 மணி நேரத்தில் படித்து முடித்துவிட வேண்டுமென்ற கங்கணம் கட்டி முடித்து விட்டேன். அண்மைக்காலத்தில் இது ஒரு சாதனை என்று எனக்கு நானே சொல்லிக் கொள்ளலாம்.

கவனிக்கத்தக்க கட்டுரைகள் உள்ளன

கட்டுரைகள் ஒருபொருள் குறித்த தகவல்களைத் தொகுத்து முன்வைப்பன. முன்வைக்கும்போது மறுக்கக்கூடிய வாய்ப்பு உண்டா ? என முன்யோசித்து அதற்கான விளக்கங்களை - பதில்களையும் சொல்வது மூலம் தனது நம்பகத்தன்மையை உறுதிசெய்வது நல்ல கட்டுரையின் சிறப்பு. இந்த மாத நிலவெளி இதழில் சிறப்பான மூன்று கட்டுரைகள் அச்சிடப் பெற்றுள்ளன, அவை ஒவ்வொன்றும் அதனதன் வரலாற்றில் சில விளக்கங்களைத் தரும் கட்டுரைகளாக இருக்கின்றன.

பழ. அதியமானின் வைக்கமும் ஜெயமோகனின் குதர்க்கமும் என்னும் அரசியல் கட்டுரை, சமகால வரலாற்றில் பெரியாரின் இடத்தை மறுக்கும் -மறுதலிக்கும் போக்கைச் சுட்டிக்காட்டி, அதனைச் சரியாக முன்வைத்த அதியமானின் ஆய்வுநூலையும் நிராகரிக்கும் ஜெயமோகனின் நோக்கம் உண்மை சார்ந்ததல்ல; உள்நோக்கம் கொண்டது என்பதை முன்வைத்துள்ளார் ப.திருமாவேலன்.

ஜமாலன் எழுதியுள்ள அரசியல் நீக்கப்பட்ட மார்க்வெஸ் - அழகியல் நீக்கப்பட்ட போர்கெஸ் கட்டுரை தமிழில் நடக்கும் மொழிபெயர்ப்பு அரசியலை விரிவாக விவாதித்துள்ளது.

இதழின் முதல் கட்டுரையாக அச்சிடப்பெற்றுள்ள தி.சு.நடராசனின் ‘எழுத்து எனும் இலக்கிய இதழ்’ சமகால இலக்கியவரலாற்றின் முக்கியமான பகுதியொன்றின் போக்கைச் சரியாகக் கணித்துச் சொல்கிறது. தமிழில் இலக்கிய இதழ்களின் தோற்றக்காரணிகளை முன்வைப்பதோடு, இலக்கிய இதழ்கள் அரசியல் நீக்கமும் கோட்பாட்டுப் புரிதலற்ற மேம்போக்கான பார்வைகளும் கொண்டிருந்தன - குறிப்பாகச் சி.சு.செல்லப்பாவின் எழுத்துவில் இந்தத்தன்மையே மேலோங்கியிருந்தது என்பதைச் சொல்கிறது. அதே நேரத்தில் தனிமனிதராகச் செல்லப்பாவின் ஈடுபாடு, அர்ப்பணிப்பு, நம்பியதைச் செய்வதில் காட்டிய ஆர்வம் போன்றவற்றையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. ஒவ்வொரு மாதமும் தவறாமல் 11 ஆண்டுக்காலம் எழுத்து இதழை வெளியிட்ட செல்லப்பாவின் செயல்பாடுகளைக் கணித்துச் சொல்லும் போக்கில் புதுக்கவிதை, திறனாய்வு போன்றவற்றில் அக்காலகட்டத்தில் இருந்த சொல்லாடல்களையும் விவாதித்துள்ளது இக்கட்டுரை.

பின்குறிப்பாக
------------------------
நிலவெளியின் பதிப்பாளர் வேடியப்பனுக்கும், ஆசிரியர் ந.முருகேச பாண்டியனுக்கும் சொல்ல வேண்டியன இரண்டு:
1] 24 பக்கங்கள் கொண்ட 112 எழுத்து இதழ்களையும் நவீனத்தொழில் நுட்பத்தின் உதவியோடு மறு அச்சுச் செய்து இரண்டு அல்லது மூன்று தொகுதிகளாகத் தரலாம். அப்படித்தரும்போது வாசிப்பவர்கள் பயன்படுத்தும் விதமாக முழுமையான சுட்டிகள் - ஆசிரியர், இலக்கியவகைப்பாடுகள், கலைச்சொற்கள்- போன்றவற்றையும் தரவேண்டும். அப்படிச் செய்யும் பணி, சமகாலத்தமிழ் இலக்கியத்திற்கொரு முக்கியமான பங்களிப்பாக இருக்கும்.

2] கட்டுரையாளர்கள் ஜமாலனும், ப.திருமாவேலனும் கணினித் தட்டச்சு காலத்தவர்கள். அவர்களே தட்டச்சு செய்து அனுப்பியிருப்பார்கள். அதனால் பிழைகள் குறைவு.ஆனால் தி.சு.நடராசன் கையால் எழுதும் தலைமுறையைச் சேர்ந்தவர். அவரது கட்டுரையைத் தட்டச்சுச் செய்தவர் ஏராளமான பிழைகளைச் செய்துள்ளார். எழுத்துப் பிழைகளோடு, சில சொற்களையே காணாமல் ஆக்கியிருக்கிறாரோ என்ற சந்தேகமும் வாசிக்கும்போது தோன்றுகிறது. கவனமாகத் திருத்தியிருக்க வேண்டும். அலை - ’கலை’யாகியிருக்கிறது. உடனிகழ் - ’உடனிதழ்’ ஆகியிருக்கிறது. தேவையற்ற இடங்களில் எல்லாம் நிறுத்தற்புள்ளிகள் இருக்கின்றன. பிழைத் திருத்தங்கள் பல செய்யவேண்டிய கட்டுரையாக அச்சாகியிருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

நாயக்கர் காலம். இயல்.2.பொருளாதார நிலைகளும் உறவுகளும்

மேல்நோக்கியும் கீழ்நோக்கியும்