அரங்கியல் அறிவோம் :மார்ச் 27. உலக அரங்காற்று தினம்


சர்வதேச அரங்காற்று நிறுவனம்(International Theatre Institute) ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27 - ஆம் தேதியை உலக அரங்காற்று தினமாக (world Theatre day ) கொண்டாடி வருகிறது.
1961 இல் சர்வதேச அரங்காற்று நிறுவனத்தின் தலைவராக இருந்த ஆர்வி கிவிமா, பின்லாந்தில் செயல்பட்ட அந்நிறுவனத்தின் சார்பில் அரங்காற்று நிகழ்வுகளுக்காக ஒரு தினத்தைக் கொண்டாட வேண்டும் என முன் மொழிந்தார். 1961 இல் கூடிய அரங்காற்றுக் கலைஞர்களின் மாநாட்டில் அந்த நாள் மார்ச் 27 என உறுதி செய்யப்பெற்றது. கிவிமாவின் முன்மொழிதலை ஏற்றுக் கொண்ட ஸ்காண்டிநேவிய மையம் ஒவ்வோராண்டும் பெருமையோடு நடத்திக் கொண்டு வருகிறது. அந்த நிறுவனத்தோடு உலகத்தின் பல்வேறு மூளை முடுக்குகளில் செயல்படும் நாடகக்காரர்களும் இணைந்து கொண்டு அந்த நாளைக் கொண்டாடத் தவறுவதில்லை. 
புதிய நாடகங்களை நிகழ்த்துதல், கருத்தரங்குகள், மாநாடுகளை நடத்துதல் என அரங்கியலாளர்கள் திட்டமிடுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டிற்கான அரங்கியல் செய்தியை அளிப்பதற்கு ஒரு அரங்கியலாளனைத் தேர்வு செய்வது தான் அந்த நாளின் முக்கியத்துவம். தேர்வு செய்யும் பொறுப்பைத் தன்வசம் வைத்திருக்கும் சர்வதேச அரங்காற்று நிறுவனம் யாரைத் தேர்வு செய்கிறது என ஒவ்வொரு அரங்கியலாளனும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பான். தேர்வு செய்யப்பட்டவர் உலக சமாதானப் பண்பாட்டிற்கு அரங்கியல் ஆற்றவேண்டிய செய்தியை வழங்குவார். 
இந்த நாளை ஒவ்வொரு நாட்டிலுமுள்ள அரங்க விரும்பிகளும் நாடக நிகழ்வுகளின் தொடக்கமாக நினைக்கின்றனர். அதன் முனைப்பு காட்டுபவர்கள் பாரிஸ் நகரத்தினர். இப்போது ஏறத்தாழ 100 கிளைகளைக் கொண்டிருக்கும் சர்வதேச அரங்காற்று நிறுவனங்கள் அந்நாளைக் கொண்டாடத் தவறுவதில்லை.முதல் ஆண்டிற்கான(1962) செய்தியை எழுதியவர் பிரெஞ்சு நாட்டின் ழான் காக்தோ. அந்த நிகழ்வு நடந்தது ஹெல்சிங்கியில். அவரைத் தொடர்ந்து அரங்காற்று தினச் செய்தியை வழங்கியோர் பட்டியல் வருமாறு: 
1962 - ழான் காக்டௌ 
1963 - ஆர்தர் மில்லர் 
1964 லாரன்ஸ் ஒலிவர் -ழான் லூயிஸ் பர்ரோல் 
1965 - யாரோ / யார் வேண்டுமானாலும் 
1966 _ ரெனெ மாஹெ ( யுனெஸ்கோவின் இயக்குநர்)
1967 - ஹெலன் வெய்கல் 
1968 - மிகுயெல் ஏஞ்சல் ஆஸ்ட்ரியஸ் 
1969 - பீட்டர் புரூக் 
1970 - டி. சாஸ்டகோவிச் 
1971- பாப்லோ நெருடா 
1972 - மவுரிஷ் பிஜார்ட் 
1973- லூசினோ விஸ்கோண்டி 
1974 - ரிச்சர்ட் பர்டன் 
1975 - எலைன் ஸ்டீவர்ட் 
1976- யூஜின் அயனெஸ்கோ 
1977 - ரடு பெலிகன் 
1978 - தேசியச் செய்தி 
1979 - தேசியச் செய்தி 
1980 - ஜனுச் வார்மின்ஸ்கி 
1981 - தேசியச் செய்தி 
1982- லார்ஸ் அப்மல்ம்போர்க் 
1983- அமடோவ் மக்தர் ம்பொவ் (யுனெஸ்கோ இயக்குநர்) 
1984 - மிகைல் ட்சரெவ் 
1985 - அந்த்ரெ லூயிஸ் பெரினெட்டி 
1986 - வொலெ ஷொயுங்க 
1987- அண்டொனியொ களா. Antonio GALA
1988- பீட்டர் புருக் 
1989 - மார்டின் எஸ்லின் 
1990 - கிரில் லவ்ரோவ் 
1991 - பெடரிக்கோ மேயர் (யுனெஸ்கோ இயக்குநர்) 
1992 - ஜார்ஜ் லவெல்லி - ஆர்த்ரோ உஸ்லர் பெய்ட்ரி 
1993 -எட்வர்ட் ஆல்பி 
1994- வல்லெவ் ஹவெல் 
1995 - ஹம்பெர்டோ ஒர்ஸ்னி 
1996 - ஷாடல்லா வான்னொஸ்
1997- ஜ்யெங் ஓக் கிம் 
1998 - சர்வதேச அவைக்காற்று நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டின் செய்தி 
1999 -விக்டிஸ் ஃபின்பகடடோட்டிர் 
2000 - மைக்கேல் ட்ரெம்ப்ளே 
2001 - லகோவோஸ் கம்பனெல்லிஸ் 
2002 - க்ரிஷ் கர்னாட் 
2003 - டன்க்ரெட் டோர்ஷ்ட் 
2004- ஃபாதியா எல் அஸ்ஸெல் 
2005- அரிய்னெ ம்னொச்கினெ 
2006 - விக்டர் ஹ்யுகோ ரஸ்கொன் பண்டா 
2007 - சுல்தான் பின் மொகம்மது அல் ஹாஸிமி 
2008 - ராபர் லெபச் 
2009 - அகஸ்டோ போவெல் 
2010 - ஜுடி டென்ச் 
2011 - ஜெசிகா எ. காஹ்வா 
2013 டெரியோ போ 
2014 -ப்ரெட் பெய்லி. 
ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் அரங்கியல் ஆளுமையால் எழுதப்படும் நாடகதினச் செய்தி 20க்க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி ஆக்கம் செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னால் வாசிக்கப்படும். வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் என அனைத்து ஊடகங்கள் மூலம் பரப்படும் அரங்கியல் செய்தியை அனைத்துக் கண்டத்து மக்களும் கேட்டுப் பரிமாறிக் கொள்ளும்போது அன்பையும் அமைதியையும் பரிமாற்றம் செய்யும் உணர்வு நிலையை உருவாக்குவார்கள். இந்த ஆண்டுச் செய்தியையார் வழங்கப்போகிறார்கள்.? 


உலக அரங்காற்று தினம்-2016 


ஒவ்வொரு ஆண்டும் ஹெய்சிங்கி நகரிலிருந்து மார்ச் 27 இல் உலக அரங்காற்று தினச்செய்தியை ஒருவர் வழங்குவார். அந்த வாய்ப்புக்கிடைக்கும் அரங்கியலாளர் அந்த ஆண்டில் நோபெல் விருதைப் பெற்ற இலக்கியக்காரர் மகிழ்ச்சி அடைவதைப் போலப் பெருமையடைவார். அரங்கியல் துறையின் மிக உயரிய அங்கீகாரம் அது. இந்த ஆண்டு அந்த வாய்ப்பு அனதோலி வாசிலியெவ்க்குக் கிடைத்திருக்கிறது.. ரஷ்யாவின் முக்கியமான நாடக இயக்குநராகவும், பேராசிரியராகவும் அறியப்படுகிறார். இப்போது ஸ்ரெடெங்கா சாலையில் இயங்கும் மாஸ்கோ நாடகப்பள்ளியின் நிறுவகர் அவரே. 
அது முன்பு மாஸ்கோவின் போவர்ஸ்கைய சாலையில் அவரால் தொடங்கப்பெற்றது. 2001 இல் அவரது நாடக்குழு இப்போதிருக்கும் இடத்திற்கு மாறியது. வாசிலிவ்யோடு இகொர் போபவ், போரிஸ் டிகோர், செர்கெய் கொய்ஸ்ஸரெவ் ஆகியோரால் திட்டமிடப்பட்ட அந்த அரங்கம் இரண்டு மாடிகளைக் கொண்டது. ஒன்று மெனகோ அரங்க வடிவத்தையும் இன்னொன்று குளோப் அரங்கையும் மாதிரிகளாகக் கொண்டவை. பெரிய சாளரங்களையும் கண்ணாடிகளையும் கொண்ட அந்த அரங்கு முழுவசதிகளும் கொண்ட ஒரு சோதனை அரங்கக் கூடம் 
அனதோலி வாசிலியெவ் பணியாற்றிய அரங்கக்கலை நிறுவனங்களைக் குறிப்பிட்டால் போதும் அவர், ரஷ்யாவில் மதிக்கப்பெற்ற பெரும் நாடக இயக்குநராக இருந்தார் என்பது புரிந்துவிடும். அரசு அரங்காற்றுக் கலை ஆவணக்காப்பகமும் கற்கைக்கூடமுமானலூனசார்ஸ்கி நிறுவனத்தில் பலமுறை ஆசிரியராக இருந்துள்ளார். அதல்லாமல் விளாதிமீர் கிராடின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக் கல்வி நிறுவனத்திலும், லியானிலிருக்கும் அரங்கியல் கலை நுட்ப உயர்நிறுவனத்திலும் கற்கையாளராக இருந்தவர் அவர். 
1968 இல் அனதோலி அரங்கியல் மாணவராகச் சேர்ந்தபோது அவருடன் பயின்றவர்கள் அந்த்ரே போபொவும் மரியா க்னெபெல்லும். 1973 இல் படிப்பை முடித்து மாஸ்கோ அரங்காற்றுக்குழுவில் இணைந்து வேலைசெய்தார். அப்போது அவர் உருவாக்கிய நாடகம் ஆஸ்வால்டின் சக்ரட்நிக்கின் தனியாள் நாடகம். 1977 முதல் ஆந்த்ரெ போபொவின் தலைமையில் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி அரங்காற்றுக் கலையகத்தின் பணியாற்றினார்.அப்போது மார்க்ஸிம் கார்க்கியின் கதை (The First Draught of Vassa Zheleznova)யொன்றையும் விக்டர் ஸ்லாவ்கினின் கதை (The Grown Daughter of a Young Man)யையும் நாடகமாக்கிப் பெயர் பெற்றார்.1980 முதலே நாடக எழுத்து மற்றும் இயக்கம் குறித்துக் கற்பித்துவந்தார்.1982 இல் யூரி லூபிமொவின் தகங்கா அரங்காற்றுக்கழகத்திற்கு அழைக்கப்பட்டார். அங்கே 1985 இல் அவர் தயாரித்த நாடகம் செர்செவ் (Cerceau) தழுவல் நாடகத்திற்கான சிறந்த பரிசைப் பெற்றது. 
அவரது சொந்த நாடகப்பள்ளியை 1987 இல் நிறுவினார். அதன் முதல் நிகழ்வாக லூயிபிரெண்டெல்லாவின் ஆறுகதாபாத்திரங்கள் எழுதிய ஆசிரியரைத் தேடுகிறார்கள் (Luigi Pirandello's Six Characters in Search of an Author ) அந்த நாடகத்துடன் தான் தழுவி எழுதிய விக்டர் ஸ்லாவ்கின் நாடகத்தையும் எடுத்துக்கொண்டு 1987 - 88 ஆண்டுகளில் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்தார். அவரது நாடகப்பள்ளி நடிகரின் குரல் மற்றும் உடலுக்கான சிறப்புப் பரிசோதனைச் சாலையாகக் கருதப்பட்டது. அவரே நாடகத் தன்மையற்ற பிரதிகளைத் தேர்ந்தெடுத்து அதிலிருக்கும் குரல் மற்றும் இலக்கிய மதிப்புகளைக் கற்பிப்பதற்குத் தன்னை ஒப்புக்கொடுத்தார். தன்முயற்சியால் இசையைக் கற்றுக்கொண்ட வாசிலெவ், தனது படைப்புகளில் இசையொழுங்கு வரும்படி உருவாக்கினார். நாடகப்பிரதிகளில் இருக்கும் சொற்களை அதன் உள்ளர்த்தம் மற்றும் வாழ்க்கையனுபவம் சார்ந்து உச்சரிக்கும் பயிற்சிக்கான முறையியலைக் கற்றுத்தந்தார். ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னும் இருக்கும் தொனி, ஒலியளவு, அதனை உச்சரிக்கும்போது செய்யவேண்டிய உடல் அசைவு மற்றும் நகர்வு பற்றிய ஆழமான புரிதல் பற்றிய கல்வியை வழங்கினார். தொன்னூறுகளில் மெதுவாக அவரது படைப்புகள் பன்னாட்டுக் கவனம் பெற்றன. 1992 இல் மேடையேற்றிய லெர்மாண்டோவின் நகைச்சுவை நாடகம் (Lermontov's Masquerade in the Comédie Française) ரோமில் அரங்கேற்றம் கண்டது. 1997 இல் தயாரித்த (Lamentations of Jeremiah) இத்தாலியிலும் பெர்லினிலும் அவிக்ஞான் நாடக விழாக்களில் பங்குபெற்றது. அவைகளுக்காக ரஷ்யா தேசத்தின் தங்க முகமூடி விருதைப் பெற்றார். 1998 இல் புஸ்கினின் பிரதியொன்றை (Pushkin’s Don Juan or the Stone Guest in the Cartoucherie) நாடகமாக்கினார். 
தாஸ்தியெவ்ஸ்கியின் அங்கிள் ட்ரீம் (Uncle's Dream ) என்னும் பிரதியை 1994 இல் புடாபெஸ்டிலும், சைக்கோவ்ஸ்கியின் டேமா பிக்காவை ( )1996 இல் வெய்மாரிலும் ஓஸ்ட்ரோவ்ஸ்கியின் கப்பிள்ஸ் இன்னொசண்டை ( ) 1998 இல் ஹங்கேரியிலும், புஸ்கினின் ( ) மொஸார்டும் சலியிரியும் என்னும் பிரதியை 2000 இல் , மெடியா மெட்டிரியலை 2001 இலும் மேடையேற்றினார். திரும்பவும் 2005 இல் மேடிய மெட்டிரியலை நாண்டெர்ராவில் மேடையேற்றினார். 2006 இல் திரும்பவும் அவிங்ஞான் நாடகவிழாவிற்கு அழைக்கப்பட்டார். 
2006 இல் மாஸ்கோ நாடகப்பள்ளி நிர்வாகத்தோடு ஏற்பட்ட முரண்பாட்டினால் பதவிவிலகி ஐரோப்பாவிற்குப் போய்விட்டார். அங்கு பாரிஸிலும் லியான், லண்டன் போன்ற இடங்களில் நாடகக்குழுக்களோடு இணைந்து வேலை செய்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பின் போல்ஸ்ஹாய் அரங்காற்றுக்களத்தின் இயக்குநரால் அழைக்கப்பட்டு டான் ஜியாவன்னியின் தழுவலை மேடையேற்றம் செய்தார். 
2010 நாடகம் கற்கிறவர்களுக்காக 3 ஆண்டுப் படிப்பொன்றைத் தொடங்கினார். வெனிஸில் இயங்கிய அக்கல்வி நிறுவனம் இத்தாலிய நாடகக்காரர்களை முதன்மை இலக்காகக் கொண்டிருந்தது. என்றாலும் உலகின் பலரது கவனத்தையும் ஈர்த்தது. 2011 இல் போலந்து நாட்டு வ்ரொக்லொவில் இருக்கும் க்ரோட்டோவ்ஸ்கி அரங்காற்று நிறுவனம் , வெனிஸில் இயங்கிய இந்நிறுவனத்தின் நடிப்புக் கோட்பாடு மற்றும் நுட்பங்களை உள்வாங்கி ஒரு கருத்தரங்கை நடத்தியது. அதில் இவரது மாணவர்களோடு ஐரோப்பாவில் பலநாட்டு மாணவர்களும் கலந்துகொண்டனர். 
2016 வாசிலெய்வ் மார்கெரெட் துரய்ஸின் நகைச்சுவை நாடகமொன்றை பாரிஸில் மேடையேற்றினார் (Marguerite Duras' La Musica Deuxième, in the Comédie Française in Paris ) அந்நாடகத்திற்கு நடிப்புப் பயிற்சி தருவதில் கைதேர்ந்த அவரது நீண்டகால இணைப்பணியாளர் நடாலியா - இஸ்ஸவா மொழிபெயர்ப்பாளராகவும் ஆய்வுப்பணியாளராகவும் வேலை செய்தார்.
இன்று அவர் வழங்கும் அரங்காற்றுதினச் செய்தியை வாசிக்க:
http://www.aitaiata.org/gil/2016/03/world-theatre-day-27-march-2016-message-from-anatoli-vassiliev/ 


இந்த வருடம் நண்பர் கருணாபிரசாத் ஏற்பாட்டில் நடந்த உலக அரங்காற்றுதின நிகழ்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அரங்கியல் பேராசிரியர்கள் சே.ராமானுஜனும் கே.ஏ.குணசேகரனும் மறைந்த ஆண்டு. அவர்களின் நினைத்துக்கொள்ளும் விதமாக நடத்தப்பெற்ற நிகழ்வில் நானும் கலந்துகொண்டு நண்பர் குணசேகரனை நினைத்துக்கொண்டதோடு உலக நாடகதினச்செய்தியையும் சொல்லிவிட்டு வந்தேன். 


2020 பாகிஸ்தானின் ஷாஹித் நதீம்: 
================================ 
ஒவ்வொரு ஆண்டும் உலக அரங்கநாளுக்குச் சிறப்புச் செய்தி வழங்கும் பெருமையைப் பெறப்போகும் நாடகக்காரர் யார் என்பது ஆவலோடு எதிர்பார்க்கப்படும் ஒன்று. நோபல் விருதுக்குரியவரைப்போல, அரங்கநாள் செய்தியை வழங்கப்போகும் ஆளுமை கண்டறிந்து சொல்லும் ஹெய்சிங்கியின் உலக அரங்கியல் நிறுவனம் அறிவிக்கும். இந்த ஆண்டுக்குரிய நாடக ஆளுமையாகப் பாகிஸ்தானின் முன்னோடி நாடக ஆசிரியரான ஷாஹித் நதீமை அழைத்துள்ளது. 


ஷாஹித் நதீமின் நாடகங்கள் சமூகப் பொறுப்பும் ஆவேசமும் கொண்டவை. மத தீவிரவாதம், பெண்களுக்கு எதிரான வன்முறை, சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு, கருத்துச் சுதந்திரம், காலநிலை, அமைதி சூஃபித்துவம் போன்றவற்றைப் பேசும் அவரது எழுத்துகளும் செயல்பாடுகளும் உலக அளவில் மதிக்கப்படுபவை. அவரது பல நாடகங்கள் தெற்காசியாவின் பிரிவினைவாதச் சிக்கல்களுக்கான தீர்வை முன்வைப்பவை. அத்தோடு இப்பகுதியின் பண்பாட்டு மரபையும் கவனப்படுத்துபவை. சமகாலச் சமூக மற்றும் அரசியல் பொருண்மைகளை பாரம்பரிய வடிவங்கள் மற்றும் நாட்டுப்புற வடிவங்களுடன் திறமையாக இணைத்து பொழுதுபோக்கு மற்றும் அறிவார்ந்த தூண்டுதலான நாடகத்தை முன்வைக்கும் ஆளுமை.மரபு இசை அவரது நாடக தயாரிப்புகளில் உள்ளார்ந்த பகுதியாக இருந்து வருகிறது. லாகூரின் அஜோகா இன்ஸ்டிடியூட் ஆப் பெர்ஃபோர்மிங் ஆர்ட்ஸ் மற்றும் கலை மற்றும் கலாச்சார நிறுவனத்தில் எழுத்து கலையை கற்பிக்கும் ஆசிரியராகப் பணியாற்றுகிறார் நதீம். 
ஷாஹித் நதீமின் நாடகங்கள் பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் மேடையேறியுள்ளன.அவரது நாடகங்களை மேடையேற்றிய குழுக்கள் உலகநாடுகள் பலவற்றில் உள்ளன.இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரத்து ஹம்மர்ஸ்மித், ஸ்காட்லாந்து நாட்டு கிளாஸ்கோ, டென்மார்க்கின் ஹெல்சிக்னர் மற்றும் டேவிஸ் சென்டர் ஃபார் பெர்பார்மிங் ஆர்ட்ஸில் உள்ள அமிரிகா சாலோ, , நார்வேயின் ஓஸ்லோ நகரத்து பிளாக் பாக்ஸ் அரங்கக் குழு, போன்றன மேடையேற்றியுள்ளன. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரத்து ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக அரங்கியல் துறை மட்டுமல்லாமல், அமெரிக்காவின் புர்கவகன்சா பிராவோ ஃபார் வுமன் தியேட்டரில் (சான் பிரான்சிஸ்கோ), நெடுஞ்சாலைகளில் (சாண்டா மோனிகா) மற்றும் தியேட்டர் ரோ (நியூயார்க்) மற்றும் தாரா லிட்டில்டன் தியேட்டரில் (இங்கிலாந்து) மற்றும் தாரா வட கரோலினா பல்கலைக்கழகம், போன்றவைகளும் மேடையேற்றியுள்ளன. 
பிரிக்கப்படாத காஷ்மீரின் சோபூரில் 1947 இல் பிறந்த ஷாஹித், தனது முதல் வயதில் பாகிஸ்தானில் அகதிக்குடும்பம் ஒன்றின் குழந்தையாக லாகூருக்குப் போனவர். பாகிஸ்தானின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் உளவியல் பட்டம் பெற்ற அவர் தனது முதல் நாடகத்தை எழுதியபோது மாணவராகவே இருந்தார். தனது அரசியல் செயல்பாடுகளுக்காக நாடு கடத்தப்பெற்ற ஷாஹித் இப்போது லண்டனில் தனது மனைவியோடு வசித்துவருகிறார். அவரது நாடகங்களை மேடையேற்றும் புகழ்பெற்ற அஜோகா குழுவினருக்காக 50 -க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியதோடு, அரசியல் நாடகக் கோட்பாட்டை உருவாக்கிய ஜெர்மன் நாடகாசிரியர் பெர்ட்டோல்ட் பிரெக்டின் நாடகங்களைத் தழுவல் நாடகங்களாக மாற்றியும் தந்துள்ளார். 

எல்லைகள் கடந்த அரங்கச் செயல்பாட்டாளர்கள் அமைப்பின் உறுப்பினராக இருக்கும் அவர் உலக அமைதிக்கான அமைப்பின் ஆசிய - பசிபிக் பிரிவின் தகவல் தொடர்பு அதிகாரியாகவும், பாகிஸ்தான் தொலைக்காட்சியின் நாடகத் தயாரிப்பாளராகவும் இருந்தவர். பாகிஸ்தானின் ராணுவ ஆட்சிகளை எதிர்த்ததற்காக மூன்றுமுறை சிறை சென்றவர் 
அவரது நாடகங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ்மூலம் வெளியிடப்பட்டுள்ளன. 2009 ஆம் ஆண்டில் செயல்திறன் பெருமைக்காக பாக்கிஸ்தானின் உயரிய பதக்கத்தைப் பெற்றவர். இந்தியா மற்றும் பாக்கிஸ்தானில் அமைதி விழாக்களுக்கான நாடகவிழாக்களை ஏற்பாடு செய்துள்ளார். லாகூர் அருங்காட்சியகம், பஞ்சாபி பழக்கவழக்கங்கள், கவிஞர் இக்பால் மற்றும் ஓவியர் சாடேகெய்ன் உள்ளிட்ட பண்பாட்டுப் பொருண்மைகளில் ஆவணப்படங்களையும் அவர் தயாரித்துள்ளார். 
===============================================
இக்கட்டுரைக்கான ஆதாரம் உலக அரங்க நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்புகள்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்