பாவைக்கூத்துகள் -விஜய் அரசியல் குறித்த குறிப்புகள்
வித்தியாசங்களற்ற பாதைகள் தனக்கென - தனது நடிப்புக்கென ஒரு பாணியை - திரைக்கதை வடிவத்தை உருவாக்கிக் கொண்டு அதே வழியில் தொடர்ந்து படங்களைத் தரும் நாயக நடிகர்களின் சினிமாக்கள் வணிக வெற்றியை உறுதி செய்துள்ளன. அதே நேரம் தங்கள் பாணியிலிருந்து விலகிய சினிமா ஒன்றில் நடிக்கும் ஆசையுடன் முயற்சி செய்யும் நடிகரின் விருப்பத்தை அவரது ரசிகர்களே ஒத்துக்கொள்வதில்லை. தோல்விப்படமாக ஆக்கிவிடுவார்கள். அத்தகைய சூத்திரம் ஒன்றை அரசியலுக்காகக் கண்டுபிடித்து கட்சி நடத்தும்போது அரசியலிலும் நிலைத்து நிற்கின்றார்கள். ஏழைப்பங்காளன்; பெண்களின் காவலன்; தாய்மார்களின் அன்புக்குரியவன்; சினிமாவில் சம்பாதித்த பணம் என்னிடம் இருக்கிறது. எனவே ஊழல் செய்யவேண்டிய அவசியமில்லை; உங்களின் ரத்தத்தின் ரத்தமாக இருப்பேன் எனக்காட்டிக் கொண்ட அரசியல் சூத்திரம் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களுடையது. அவர் உருவாக்கிய அதிமுகவிற்கு வேறுவிதமான அரசியல் பொருளாதாரக்கொள்கை எதுவும் கிடையாது. அதே சூத்திரத்தில் மாற்றமில்லாத ஒன்று விஜய்காந்தின் தேமுதிகவின் சூத்திரமாகவும் இருந்தது. தன்னைக் கருப்பு எம்ஜிஆர் என்று சொல்லி அவரது வாரிசாகக் காட்டினார். இப்போது த...