இலக்கிய இதழ்கள் :விடுதலைக்கு முன்னும்பின்னுமான சிற்றிதழ்ப் போக்குகள்
அம்ருதா, அரும்பு, உயிர்மை, பேசும் புதிய சக்தி, காக்கைச் சிறகினிலே, புதிய கோடாங்கி, உங்கள் நூலகம், புத்தகம் பேசுது முதலான மாத இதழ்கள் எனது முகவரிக்கு ஒவ்வொரு மாதத்தொடக்கத்திலும் வந்துவிடுகின்றன. இவற்றில் தொடர்ந்து எழுதுகிறேன் அல்லது எப்போதாவது எழுதுவேன் என்பதற்காக அதன் ஆசிரியர்கள் அனுப்பி வைக்கிறார்கள். காலச்சுவடு, தீராநதி இரண்டிலும் எழுதினால் அந்த மாதம் மட்டும் அனுப்புவார்கள். மற்ற மாதங்களில் கடைக்குப் போய் வாங்கிக்கொள்ள வேண்டும். நான் மாணவனாக இருந்த காலத்திலில் தொடர்ச்சியாக வாங்கி வாசித்த தாமரை, செம்மலர் போன்றனவற்றை நிறுத்தி கால் ஆண்டுக்கும் மேலாகி விட்டது. மாணவர்கள் சிலரிடம் வாங்கும்படி சொன்னால் வாங்க மறுக்கிறார்கள். வாங்க மறுக்கும் அவர்கள் சந்தா கட்டிக் காலச்சுவடு, விகடன் தடம், உயிர் எழுத்து, தீராநதி போன்றனவற்றை வாங்கிப் படிக்கிறார்கள். அவர்களிடமிருந்து பண்டமாற்றாக வாங்கிப் படித்துவிட்டுத் திருப்பிக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.