கதைசொல்லுதலின் சாகசம் - ஜெயமோகனின் பத்துலட்சம் காலடிகள் கதையை முன்வைத்து
ஜெயமோகன் சமகாலத்தமிழின் முதன்மையான கதைசொல்லி. அவரது பத்துலட்சம் காலடிகள் அண்மையில் வந்துள்ள சிறுகதைகளில் முக்கியமான கதை. சில நாட்களாக இந்தப் பொருள் தரும் சொற்றொடர்கள் இணையப் பக்கங்களில் ஆங்காங்கே தொடர்ச்சியாக வாசிக்கக் கிடைக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதிவரும் ஜெயமோகனை முதன்மையான கதைசொல்லி என்று மதிப்பீட்டுச் சொல்லால் பாராட்டிச் சொல்வதற்கு ஒருவர் காரணங்களை அடுக்கிக் காட்டத் தேவையில்லை. ஆனால் இந்த (கொரோனா) அடங்கல் காலத்தில் நாளொன்றுக்கு ஒரு கதை என்று தவறாமல் தனது இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும் வரிசையில் முப்பதாவது கதையாக வந்துள்ள ஒரு கதையை முக்கியமான கதை -ஆகச் சிறந்த கதை -உன்னதமான கதை – என்று சொல்வதற்குப் போதுமான காரணங்களை முன்வைக்க வேண்டும். காரணங்கள் சொல்லாமல் முன்வைக்கப்படும் சொற்றொடர் விமரிசனச் சொல்லாக இருக்காது. போகிற போக்கில் வாசிக்காமலேயே கூடச் சொல்லப்படும் மதிப்பிட்டுக் குறிப்பாகவே கருதப்படும்.