பாண்டிச்சேரி பல்கலைக்கழக நாடகப்பள்ளி மாணவர்களுக்குத் திரைப்படம் சார்ந்த நடிப்பையும் கற்றுத்தரவேண்டும் என்ற விவாதம் எங்களுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. துறையில் உடன் பணியாற்றிய வ. ஆறுமுகத்திற்கு அதில் உடன்பாடில்லை. கே ஏ குணசேகரன் என்னோடு ஒத்துப் போனார். அவரே நாசரை அழைக்கலாம் என்று முன்மொழிந்தார். அவரது தொலைபேசி எண்ணை வாங்கி தொடர்புகொண்டு பேசியும் விட்டார். அழைத்துவருவதற்கு வாகனம் அனுப்ப வேண்டுமா? என்று கேட்டபோது, தேவையில்லை நானே எனது காரில் வந்துவிடுவேன். உடன் நண்பர்களும் வருவார்கள் என்று சொல்லிவிட்டதாகக் குணசேகரன் சொன்னார். அவரும் அவரோடு வரும் நண்பர்களும் தங்கும் விதமாக அறைகள் ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் இரண்டு நாட்கள் தங்கி மாணவர்களோடு பயிற்சி செய்யலாம் என்றும் சொல்லியிருப்பதாக குணசேகரன் வழியாகத் தெரிந்துகொண்டேன். பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு முன்னால் இருக்கும் இந்திராநகர் அரசு விருந்தினர் இல்லத்தில் இரண்டு அறைகள் போட்டுவைத்திருந்தோம். சென்னையிலிருந்து திண்டிவனம் வழியாக வந்தால் புதுச்சேரிக்குள் நுழையும் இடமே இந்திரா நகர் தான். எனவே அங்கு வந்து உடைகள் மாற்றிக் கொண்டு பல்கலைக்கழக...