படம் தரும் நினைவுகள் -3

இந்தப்படம் எடுத்த ஆண்டு 2000 அல்லது 2001 ஆக இருக்க வாய்ப்புண்டு. திருநெல்வேலி பாளையங் கோட்டையில் அண்ணா விளையாட்டு அரங்கத்திற்கு எதிரில் இருக்கும் எம். எல்.பிள்ளை நகரில் குடியிருந்த காலம். தமிழ் இலக்கிய வரலாற்றறிஞர்களில் ஒருவரான கா.சு.பிள்ளையைத் திருநெல்வேலிக்காரர்கள் எம்.எல். பிள்ளையாக நினைவில் வைத்திருக்கிறார்கள். நீண்ட ஆஸ்திரேலிய வாழ்க்கையின் இடையில் தமிழகம் வந்தபோது என்னைப் பார்ப்பதற்காகவே நெல்லைக்கு வந்தார்  பத்தண்ணா என்றழைக்கப்பட்ட இளைய பத்மநாதன். அவரது முதல் அறிமுகம் 1987.

திரும்பவும் 2018 இல் ஆஸ்திரேலியாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தார். இந்த முறை கோ.பழனி அவர்களின் ஒருங்கிணைப்பில் அரங்கியலாளர் இளையபத்மநாதன் அவர்களின் பங்களிப்புகள் குறித்துச் சென்னைப் பல்கலைக்கழகத்தில்  ஒருநாள் கருத்தரங்கும்அவரோடு கலந்துரையாடலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டுவிட்டுத் திரும்பவும் நெல்லைக்கு வந்தார். இந்தமுறை என்னைப் பார்ப்பதோடு, நெல்லை மாவட்டக் கோயில்களில் சிலப்பதிகாரக் காட்சிகள் செதுக்கப்பட்ட/ வரையப்பட்ட ஆவணங்கள் எதுவும் இருக்குமா என்பதைப் பார்த்துத் தனது புதிய நூலைச் சீராக்கும் நோக்கமும் அவருக்கு இருந்தது. இந்தப் பயணத்தில் அவருக்குத் துணையாக இருந்தவர் ஓவியர் புருசோத்தமன்.   

 1983 கறுப்பு ஜூலைக்குப் பிறகு முதல் புலம்பெயர்வுகளில் இந்தியாவுக்கு வந்தவர், வந்தது  தொடங்கிப் பத்தாண்டுக் காலம் சென்னையில் இருந்தார். அந்தக் காலகட்டம் தமிழின் நவீன நாடகங்களின் காலம். மதுரை, புரிசை, தஞ்சை, பாண்டிச்சேரி எனப் பல நகரங்களிலும் நாடக அரங்கேற்றங்களும் நாடக விழாக்களும் நடந்து கொண்டிருந்தன. இலங்கைத் தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றாகக் கூத்தை மாற்றும் செயல்பாடுகள் செயல்பட்ட நாடகக்காரராக இருந்தவர் என்பதால் தமிழ்நாட்டு நிகழ்வுகளைப் பார்க்கவும் சில முன்முயற்சிகளை அறிமுகம் செய்யவும் முயன்றவர். 1987 இல் மதுரையில் நிஜநாடக இயக்கம் நடத்திய மூன்று நாள் நாடக விழாவொன்றின் பார்வையாளராக அவர் வந்தார்.  அதன் அமைப்பாளர்களில் ஒருவனாக நான் இருந்தேன். அவரொரு நாடகக்காரர்; அவரைக் கவனித்து ஆவன செய்யவேண்டும் என்று மு.ராமசுவாமி எனக்குச் சொல்லியிருந்தார்.அவரை விருந்தினர் என்ற அளவில் வரவேற்று தங்குமிடம், சாப்பாடு போன்றவற்றைத் தரும் பொறுப்பு என்னுடையது. யாழ்ப்பாணத் தமிழின் முழுமையான வழக்கு மொழியை உள்வாங்க முடியாமல் அவரோடு உரையாட முடியாமல் முதல் சந்திப்பில் தவித்தேன். 

 அந்தமொழியையும் அவரது நாடகப்பார்வையையும் அழகியல் உணர்வையும் கூத்தின் அடவுகள், பாடல்கள் என அனைத்தையும் அவரோடு  உடனிருந்து கற்கும் வாய்ப்பைத் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் தந்தது.  பேரா. சே.ராமானுஜன் தஞ்சைப் பல்கலைக்கழக நாடகத்துறைத் தலைவராக இருந்தபோது பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதியுதவியுடன் கல்லூரி ஆசிரியர்களுக்கான கோடைகால நாடகப்பயிற்சிப்பட்டறைகளை நடத்தி வந்தார். அந்தப் பட்டறையின் விதிகளின்படி நானோ, இளையபத்மநாதனோ பங்கேற்பாளராகக் கலந்துகொள்ளமுடியாது. 1988 என்று நினைவு. அந்த நேரத்தில் நான் பல்கலைக்கழக மானியக்குழு வழங்கும் சம்பள விகிதம் பெறாத ஆசிரியராக - தற்காலிக ஆசிரியராகவே அமெரிக்கன் கல்லூரியில் பணியாற்றினேன். என்றாலும் என்னை பேரா. ராமானுஜன் அனுமதித்தார். அதைப்போலவே கல்விநிறுவனங்கள் எதிலும் தொடர்பில்லாத -இலங்கையரான பத்மநாதனின் விருப்பத்தையும் ஏற்று அனுமதித்தார். ஒருமாதகாலப் பட்டறையில் சாப்பாடு, அறைவாடகையெல்லாம் தந்து விடுகிறேன் என்று சொல்லியே அவர் கலந்துகொண்டார். நானும் அவரும் ஒரே அறை. ஒரு ஆள் தங்கும் அறையில் பகிர்ந்துகொள்ளலாம் என்று சொல்லிக் கட்டிலைத் தூக்கிக் கடாசிவிட்டுத் தரையில் படுத்துப்பேசிக்கொண்டே இருப்போம்.

பரதம், அதன் அடவுகள், தமிழகத் தெருக்கூத்து, இலங்கையின் வடமோடி, தென்மோடிக்கூத்துகள், இசைப்பாடல்கள், தமிழ்நாட்டின் கூத்தல்லாத ஆட்டங்கள், அவற்றின் சமூக இருப்பு, சடங்குநிலை, ஆசிய நாடகங்களின் பொதுக்கூறு என ஒருமாதத்தில் பேசிப்பேசிக் கற்றுக்கொண்டன அதிகம். அந்த ஒருமாத காலமும் நாடகம், அரங்கு, கூத்து என்ற மனநிலையைத் தாண்டி வேறொன்றையும் நினைத்ததில்லை. தஞ்சாவூரில் ஒரு சினிமா பார்க்க நினைக்கவில்லை. மாலையில் கோயில்களுக்குப் போவோம். அங்கு பார்க்கும் சிற்பங்களையும் நாடகத்தோடு சேர்த்தே பேசிக்கொண்டிருந்தோம். வித்தியானந்தன், சிவத்தம்பி, சி.மௌனகுரு, பாலேந்திரா ஆகியோரின் செயல்பாடுகளையெல்லாம் வாய்வார்த்தையாகவே சொல்லிப் பாடம் நடத்தினார். அவர்களையெல்லாம் சந்திக்கும் ஆர்வத்தை உண்டாக்கிக் கொண்டே இருந்தார் ஒவ்வொருநாளும்.

பட்டறைப் பயிற்சியின் பகுதியாகவே மெலட்டூர் பாகவதமேளா பார்க்க அழைத்துப்போனார் பேரா. ராமானுஜம். அந்தப் பயிற்சிக்கு நடனக்கலைஞர் பத்மா சுப்பிரமணியம், ஓவியர் கிருஷ்ணமூர்த்தி, டெல்லியின் தேசியப் பள்ளியின் ஆசிரியர்கள், கேரளத்திலிருந்து ஜி.சங்கரப்பிள்ளை, வயலார் வாசுதேவப்பிள்ளை, பெங்களூரிலிருந்து ஒளியமைப்பாளர் ராமமூர்த்தி என அரங்கியல் சார்ந்த வல்லுநர்கள் வந்து வகுப்பெடுத்தார்கள். அந்த வகுப்பின் நீட்சியாக நள்ளிரவு வரை இளையபத்மநாதனும் நானும் பேசிக்கொண்டே இருப்போம். அப்போது அவர் சொன்னார்: ” விரைவில் நாட்டுப்பிரச்சினை தீர்ந்துவிடும்; யாழ்ப்பாணத்தில் போய் ஒவ்வொரு கிராமமாக உங்களைக் கூத்தும் ஆட்டமும் பார்க்க அழைத்துப் போவேன்” என்றார். அவர் நினைத்ததுபோலப் பிரச்சினை முடியவில்லை. 20 ஆண்டுகளுக்குப் பிறகு நான் யாழ்ப்பாணம் போனபோது கூத்தொன்றையும் பார்க்கவில்லை.

நான் பாண்டிச்சேரியிலிருந்துபோது மங்கையின் இயக்கத்தில் இளையபத்மநாதன் எழுதிய தீனிப்போர் நாடகம் சங்கீத நாடக அகாடெமி விழாவில் - மைசூரில் கலந்துகொண்டது. பெயரளவில் எப்போதும் ப்ரோசீனியம் அரங்கைத் தவிர்க்க விரும்புபவர் பத்மநாதன். அந்த நாடகத்தைக் கபடிப்போட்டி நடக்கும் மைதானம் போன்றதொரு அமைப்பில் நிகழ்த்தினார். முழுமையும் இசைப்பாடல்களும் நடனக்கோர்வைகளுமாக அசையும் காட்சி அமைப்புகள் இப்போதும் கண்ணில் நிற்கின்றன. அதேபோல அவரது இயக்கத்தில் பெர்டோல்ட் ப்ரக்டின் விதியும் விதிவிலக்கும் - EXCEPTION AND RULE - ஒரு பயணத்தின் கதை என்று ஜெர்மன் மேக்ஸ்முல்லர் பவன் புல்தரையில் நிகழ்த்தப்பெற்ற போதும் பலரது கவனத்தைப் பெற்றது. இரண்டுக்கும் நான் கவனமான பார்வையாளராக இருந்தேன்.

சென்னையிலிருந்து ஆஸ்திரேலியாவிற்குப் பெயர்ந்து சென்றவர் அங்கும் நாடகக்குழுக்களோடு இணைந்து நாடகங்கள் செய்தார் என்பதை நண்பர்கள் வழியாக அறிந்துகொண்டே இருந்தேன். நான் நாடகத்துறையைவிட்டுத் திருநெல்வேலிக்கு வந்துபிறகு இரண்டுமுறை தமிழ்நாட்டிற்கு வந்தார். இரண்டு முறையும் திருநெல்வேலிக்கும் வந்தார் என்பதோடு புதுச்சேரியில் லாஸ்பேட்டை ராஜாஜி நகர் முதல் குளினி சாலை வீட்டிற்கும் வந்திருக்கிறார். அப்போது. எனது மகனும் மகளும் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நேரம்.இந்தப் படம் எடுத்தபோது அவரைப் பாண்டிச்சேரியில் பார்த்ததை நினைவுபடுத்தி அவரோடு விளையாண்டார்கள்.  

16-03 2018

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்