படம் தரும் நினைவுகள்: 1


பாண்டிச்சேரி பல்கலைக்கழக நாடகப்பள்ளி மாணவர்களுக்குத் திரைப்படம் சார்ந்த நடிப்பையும் கற்றுத்தரவேண்டும் என்ற விவாதம் எங்களுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. துறையில் உடன் பணியாற்றிய வ. ஆறுமுகத்திற்கு அதில் உடன்பாடில்லை. கே ஏ குணசேகரன் என்னோடு ஒத்துப் போனார். அவரே நாசரை அழைக்கலாம் என்று முன்மொழிந்தார். அவரது தொலைபேசி எண்ணை வாங்கி தொடர்புகொண்டு பேசியும் விட்டார். அழைத்துவருவதற்கு வாகனம் அனுப்ப வேண்டுமா? என்று கேட்டபோது, தேவையில்லை நானே எனது காரில் வந்துவிடுவேன். உடன் நண்பர்களும் வருவார்கள் என்று சொல்லிவிட்டதாகக் குணசேகரன் சொன்னார். அவரும் அவரோடு வரும் நண்பர்களும் தங்கும் விதமாக அறைகள் ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் இரண்டு நாட்கள் தங்கி மாணவர்களோடு பயிற்சி செய்யலாம் என்றும் சொல்லியிருப்பதாக குணசேகரன் வழியாகத் தெரிந்துகொண்டேன்.
பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு முன்னால் இருக்கும் இந்திராநகர் அரசு விருந்தினர் இல்லத்தில் இரண்டு அறைகள் போட்டுவைத்திருந்தோம். சென்னையிலிருந்து திண்டிவனம் வழியாக வந்தால் புதுச்சேரிக்குள் நுழையும் இடமே இந்திரா நகர் தான். எனவே அங்கு வந்து உடைகள் மாற்றிக் கொண்டு பல்கலைக்கழகம் வர வசதியாக இருக்கும் என்பதோடு, அரசு விருந்தினர் இல்லத்தில் அதுதான் குளிரூட்டப்பட்ட அறைகள் கொண்ட இல்லை. அதைவிட்டா ராம் இண்டர்நேஷனல் போன்ற தனியார் விடுதிக்குப் போகவேண்டும். அதெல்லாம் வேண்டாம் பல்கலைக்கழகத்தில் இருக்கும் விருந்தினர் இல்லத்திலேயே தங்குவதாகச் சொல்லி விட்டார் நாசர் என்றார் குணசேகரன். பல்கலைக் கழகத்திற்கெனத் தனியாக விருந்தினர் இல்லம் அப்போது கிடையாது. இப்போது போலப் பெரிய நட்சத்திரவிடுதிகளும் பாண்டிச்சேரியில் இல்லை. இருப்பதில் பெரியது ராம் இண்டர்நேஷனல்தான்.




திண்டிவனம் வழியாக வராமல் மாமல்லபுரம் வழியாகக் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக நேரடியாகப் பல்கலைக்கழக வளாகத்திற்கு வந்துவிட்டார் நாசர். அவரது காரில் சின்னச்சின்ன வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த இன்னொருவரும் வந்து இறங்கினார். அவரோடு அருண்மொழியும் வந்திறங்கியதை நான் எதிர்பார்க்கவில்லை. அதற்குமேல் அடுத்த காரிலிருந்து இயக்குநரும் எழுத்தாளருமான தங்கர் பச்சானும் இறங்கினார். இவர்கள் இருவரையும் எனக்குத்தெரியும். அவர்களுக்கும் என்னைத்தெரியும். நடிகர் நாசருக்கு என்னைத்தெரியாது.

நாசருக்குக் குணசேகரனின் பெயரும் அவரது பாடல்களும் ஏற்கெனவே அறிமுகமாகியிருந்தது. அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது நான் எப்போதும் போல அருண்மொழியின் வயிற்றில் ஒரு குத்துக் குத்தித்தனியாக அழைத்துப் போய்ப் பேசிக் கொண்டிருந்தேன்.குணசேகரன் அறையிலிருந்து வெளியே வந்தபோது அருண்மொழி என்னை அறிமுகம் செய்தார். எழுத்தாளர்; சினிமா விமரிசகர் என்று சொன்னபோது ஏதோ பொறி தட்டியிருக்க வேண்டும். பெயர் கேள்விப்பட்டிருக்கிறேன்; சந்தித்ததில்லை என்றார். கைகுலுக்கிக் கொண்டோம்.

11.00 மணிவாக்கில் மாணவர்களோடு உரையாடத் தொடங்கி துறைக்கு முன்னால் இருந்த மரங்களின் நிழலை உணர்தல், நிழலிருந்து வெயிலை உணர்தல், பெண்ணின் கைபடும்போது உடல் அசைவில் ஏற்படும் மாற்றம், நெருங்கி நிற்று பார்க்கும்போது முகத்தின் பாகங்கள் செயல்பட வேண்டிய நுட்பங்கள் என நெருக்கமான பாவனைகளைச் சொல்லிக் கொடுத்துப் பயிற்சிகளை வளர்த்துக் கொண்டிருந்தார். பயிற்சிகள் சிலவற்றை அருண்மொழி வழக்கம்போலப் படம் எடுத்துக்கொண்டிருந்தார் தங்கர் பச்சான் அவரது ஊருக்கு - பண்ருட்டிக்குப் போவதற்காகக் கிளம்பிப்போய்விட்டார்.

மதிய உணவு எளிமையாக இருக்கட்டும் என்று சொன்னதால் பெரிய ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை. அங்கேயே சாப்பிட்டார். பிற்பகலில் சில பயிற்சிகள். ஒரு த்ரில்லர் நிகழ்வில் நடிகர்கள் அசையவேண்டிய - பார்க்கவேண்டிய முறைகள் என அப்பயிற்சிகள் தொடர்ந்தன. நான்கு மணிக்கெல்லாம் முடித்துக்கொண்டு தங்குமிடத்திற்குச் செல்லத் தயாரானார். அங்கிருந்த உள்ளூர் மாணவர் ஒருவரை அழைத்து ஒரு முகவரியைக் காட்டி எங்கே இருக்கிறது என்று கேட்டார். அந்த முகவரி அவர் தங்கப்போகும் இந்திராநகர் விருந்தினர் விடுதிக்குப் பின்னால் தான் இருக்கிறது என்றார்.

நீங்கள் என்னோடு இந்திரா நகர் விருந்தினர் இல்லத்திற்கு வரமுடியுமா? அங்கிருந்து இந்த முகவரி இருக்கும் இடத்திற்குப் போகவேண்டும் என்று என்னிடம் கேட்டார். அவர் என்னிடம் ஏன் கேட்டார் என்று தெரியவில்லை. கொஞ்சம் தயங்கினேன். என்னுடைய தயக்கத்திற்குக் காரணம் காலையில் என்னுடைய மிதிவண்டியை ஓரிடத்தில் நிறுத்திவிட்டுப் பல்கலைக்கழகப் பேருந்தில் ஏறி வந்திருக்கிறேன். திரும்பப் போய் அதை எடுத்துக்கொண்டு வீட்டில் போய் நிறுத்தவேண்டும். வீட்டிலும் இரவு வரமாட்டேன் என்று சொல்லவில்லை. அப்போது தொலைபேசி எல்லாம் கிடையாது. நேரடித்தகவல்கள் தான். நீங்கள் விடுதிக்குப் போய் இருங்கள். நான் வீட்டிற்குப் போய்விட்டு அங்கு வந்துவிடுகிறேன் என்று சொன்னேன். அப்படியே போனேன்.
அவர் கையில் வைத்திருக்கும் முகவரியைத் தேடுவது அவ்வளவு சுலபமாக இல்லை. தேடிக்கொண்டிருக்கும்போதுதான் சொன்னார். என்னுடைய அப்பா இங்கே இருக்கிறார்; அவரைப் பார்க்கப்போகிறோம் என்றார். அவரது சொந்த ஊர் செங்கல்பட்டு என்றும் அவரது குடும்பம் அங்குதான் இருக்கிறது என்றும் கேள்விப்பட்டிருந்தேன். என் முகக் குறிப்பைப் பார்த்துச் சிரித்துவிட்டுத் தேவர் மகனில் அப்பாவாக நடித்த காகா ராதாகிருஷ்ணன் இங்கே அவரது மகள் வீட்டில் இருக்கிறார். அவரைப் பார்க்கப் போகிறோம் என்று சொன்னவுடன் எனக்கும் காகா ராதாகிருஷ்ணனைப் பார்க்கும் உற்சாகம் தொற்றிக் கொண்டது.
இரவு அவரைப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்து விருந்தினர் விடுதியில் இரவு உணவு முடித்துவிட்டு அங்கேயே தங்கவில்லை. காலையில் பல்கலைக் கழகத்தில் சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். சாப்பிடும்போது ஸ்டானிஸ்லாவ்ஸ்கி, பெர்ட்டோல்ட் ப்ரெக்ட், மேயர்கோல்டு, தெருநாடகம், தெருக்கூத்து, ஸ்பெஷல் நாடகம் எனத்தாவித்தாவிப் போனதில் இருவரும் நெருங்கி விட்டோம். அடுத்த நாள் மதியம் வரை பயிற்சி. பிறகு ஸ்டுடியோ அரங்கில் நிகழ்த்திக் காட்டும் முறை. அதன் பிறகு பல தடவை நாசர் பாண்டிச்சேரி வந்துள்ளார். அவரது அவதாரம் படத்துக்கு நான் தந்த விமரிசனத்தைச் சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டார். கடையாகப் பாண்டிச்சேரியில் இருந்த வருடம் என்னிடம் தனது ஆய்வுத்திட்டத்திற்காக ஒரு தலைப்பை - செயல்திட்டத்தைத் தேடிக்கொண்டிருந்த அனிஸைத் தங்களின் உதவியாளராகச் சேர்த்துக்கொள்ள முடியுமா? எனக் கேட்டேன். தேவதை படத்தின் போது அவனை உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார். அந்தப் படத்தின் தயாரிப்பு முறையையும் இயக்குநர் பணிகளையும் திட்டக்கட்டுரையாக அளித்தான். அத்தோடு முடிந்துவிடும் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது அடுத்தடுத்த படங்களின் உதவி இயக்குநராகவே சேர்த்துக்கொண்டார்.

திருமணம் என்னும் நிக்காஹ் என்னும் சினிமாவை இயக்கிவிட்டுத் தொடர்ந்து சினிமாவுக்குள் வெவ்வேறு பணிகளைச் செய்துகொண்டு அவனால் இயங்கமுடிகிறது என்றால் பின்னணியில் நாசரின் ஆதரவு இருப்பது மட்டுமே. தேவதையின் முதல் அரைமணிநேரக் காட்சிகளைப் அமானுஷ்யப்புனைவாக எடுக்கத்திட்டமிட்டபோது புதுச்சேரிப் பல்கலைக்கழக நாடகத்துறை ஆசிரியர்கள், மாணவர்கள் என ஒரு பட்டாளமே செஞ்சியில் இருந்தோம். அண்டம் கிடுகிடுங்க எனக் கே ஏ ஜியின் குரலோடு அந்தப் பகுதி உருவாக்கும் உணர்வுகள் தமிழ்ச்சினிமாவின் தனித்த அடையாளம் கொண்ட பகுதிகள். தொடர்ச்சியாக நண்பர் இளையபாரதியின் இயக்கத்தில் கலைஞர் மு.கருணாநிதியின் தென்பாண்டிச்சிங்கத்தில் நடித்தோம் என்பதும் அந்த நாட்களில் சினிமா, நாடகம் இலக்கியம் எனப்பேசிபேசிக் களித்தோம் என்பதுதான் நினைவில் இருக்கிறது.
நான் பாண்டிச்சேரியை விட்டு -நாடகத்துறையை விட்டுவிட்டுத் திருநெல்வேலிக்குப் போகிறேன் என்று சொன்னபோது, ”எல்லாரும் வடக்கே - சென்னையை நோக்கிச் சினிமாவுக்காக வர்றாங்க; நீங்கே எதிர்த்திசையில் போறீங்க” என்று திட்டினார் நண்பர் நாசர்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்