இருத்தலையும் இருத்தல் நிமித்தங்களின் வண்ணங்களையும் வரைதல்..தேன்மொழி தாஸின் கவிதைகள்-


பத்து ஆண்டுகளுக்கு முன்பே அந்தப் பெயர்- தேன்மொழிதாஸ்- என்ற பெயர் ஒரு கவியின் பெயராகப் பதிந்திருந்தது என்றாலும், பலராலும் சொல்லப்பட்டு உருவான தமிழ்க்கவிதைப்போக்கு ஒன்றிற்குள் இருக்கும் அடையாள வெளிப்பாடாகவோ, நானே வாசித்து உருவாக்கிக்கொண்ட தனித்துவமான கவியின் அடையாளமாகவோ அந்தப் பெயர் பதிந்திருக்கவில்லை. என்றாலும் பதிந்திருந்தது. 

வாசகப்பரப்பில் ஒரு கவியின்/எழுத்தாளரின் பெயர் பதிந்துவிடப் பல காரணங்கள் இருக்கின்றன. போகிற போக்கில் விமரிசகன் குறிப்பிடும் ஒரு பெயரின் பின்னால் இருக்கும் எழுத்துகள், வாசிப்பவர்களிடம் தன்னை வாசிக்கும்படி முறையிடுகின்றன. ஆனால் அந்தப்பெயரும் அவரது எழுத்துகளும் தொடர்ச்சியாக நினைவுக்குள் ஆழமாய் நின்றுவிட, விமரிசகனின் அந்தக் குறிப்புமட்டும் போதாது. தீவிரமான வாசகராகத் தன்னைக் கருதிக்கொள்பவர் அந்தப் பெயரோடு வரும் எழுத்துகளைப் படிக்கும்போது விமரிசகன் சொன்ன காரணங்களோடு உரசிப்பார்க்கவே செய்வார்கள். முழுமையும் பொருந்துவதோடு, புதிய திறப்புகளையும், பரப்புகளையும் காட்டும் நிலையில் இருப்பதாக நினைத்தால், அந்தக் கவியை அல்லது எழுத்தாளரைத் தேடி வாசிக்கும் பட்டியலில் சேர்த்துக்கொள்வர். 
பெருந்தொகை நூல்களாகக் கிடைக்கும் தமிழ்க் கவிதை மரபில் தனது கவிதையின் பொருண்மைகளால் அறியப்பட்ட கவிகளே அதிகம். அள்ளூர் நன்முல்லையும் ஆண்டாளும் அப்படித்தான் நமக்குள் வந்து சேர்ந்திருக்கிறார்கள். பரணரும் காளமேகமும்கூட அவர்களது கவிப் பொருண்மைக்காகவும் வெளிப்பாட்டு முறைமைக்குமே நினைவில் நிற்கிறார்கள். கவிதைகளுக்கு அப்பால், சூழலுக்குள் தாக்கம் ஏற்படுத்தும் விதமாகச் செயல்படும் வினையாற்றல் – செயல்பாட்டாளர் என்ற காரணத்தால் முக்கியக் கவியாளுமைகளாக ஆனதுண்டு. திருஞானசம்பந்தனும் திருமங்கையாள்வானும் இதற்கு உதாரணங்கள். செயல்பாட்டு ஆளுமைத்தன்மையே கவியாளுமையாக மாறும்போது அவரது கவிதைபாணியும் அதனோடு இணைந்துகொள்ளும் விபத்தை அல்லது ஆபத்தை எதிர்கொள்ளும். ‘தனது தன்னிலை’ இதுதான் என உறுதியாக்கத் தவறும் ஒரு கவி அப்படியொரு செயலாளியாகக் காட்டிக் கொள்ளும் சாத்தியமும் குறைவு. தேன்மொழி தாஸுக்கு அப்படியான அடையாளங்களும் உருவாகவில்லை; அப்படியொரு முயற்சியை மேற்கொண்டவராகவும் தெரியவில்லை. தமிழின் நவீனக் கவியாளுமையான பாரதி இரண்டின் கலவை. இந்தப் பேச்சை இங்கே நிறுத்திக்கொள்ளலாம். 
************************* 
தேன்மொழி தாஸின் கவிதைகள் தொடக்கநிலையில் தொகுப்புகளாகத் தேடி வாசிக்கத் தூண்டும் நெருக்கடியை எனக்குள் ஏற்படுத்தவில்லை. பெரும்போக்கின் ஓட்டத்தில் இணைந்துகொண்ட பெண் வெளிப்பாட்டுக் கவி அடையாளங்களோடு அவரது கவிதைகள் இணைந்துகொண்டிருக்கவில்லை. கோபக்கொப்பளிப்பின் குமிழிகளாகவும் எதிலும் இணைந்துகொள்ள மறுக்கும் எதிர்த்திசைப் பயண விரும்பிகளாகவும் காட்டிக் கொள்ளும் கவிதைகளை எழுதிய பெண்களின் கவிதைச் சாயல் எவைகளையும் கொண்டிருக்கவில்லை. கவிதைக்குள் உருவாக்கப்பட்ட தன்னிலை தனது எதிர்நிற்கும் தன்னிலையாக ஆண்மையையோ, ஆண்களின் துரோகத்தையோ முன்வைத்துப் பேசாமல் விலகலைக் காட்டியது. அதனாலேயே திரட்டி வாசிக்கும் எனது வாசிப்பு மனத்திற்குள் மிதக்கும் வண்ணப் பலூன்களாக அந்தக் கவிதைகள் வந்துசேரவில்லை. ஒரு மொழியில் திரண்டுவரும் பெரும்போக்கிலிருந்து விலகும் தனிக்குரலின் அலைகள் தன்னுணர்வுடன் உலகப் பொதுப் போக்குக்குள் தன்னை அடையாளப்படுத்த முயற்சிசெய்யக் கூடும். அதற்கான எத்தணிப்பு கவியின் சொற்கூட்டங்களுக்கு வெளியில்கூட புலப்படலாம். அண்மைக் காலங்களில் – குறிப்பாக முகநூலில் பதியப்பெற்ற தேன்மொழிதாஸின் கவிதைகள் அத்தகைய எத்தணிப்போடு இருப்பதாகத் தோன்றியதின் பின்னணியில் அவரது கவிதைகளைத் திரட்டி வாசிக்க விரும்பியது மனம். 

தேன்மொழி தாஸின் கவிதைகளைத் திரும்பத்திரும்ப வாசிக்கும்படி தூண்டியதில் அவரது முகநூல் பக்கத்திற்கு முக்கியப் பங்குண்டு. அவரது முகநூல், அவரது வெளிப்பாடுகளை மூன்று விதங்களில் தொடர்ச்சியாகக் கவனிக்கும்படி தூண்டிக் கொண்டே இருந்தன. ஒன்று அவரது புகைப்படங்கள். எந்தக் குறிப்பும் இல்லாமல் அவரது படங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் திரும்பத்திரும்பக் காட்சிக்கு வந்துகொண்டே இருந்தன. அப்படி வந்துகொண்டிருந்த படங்களும் வெவ்வேறு படங்கள் அல்ல. எண்ணிக்கையில் குறைவான படங்களையே திரும்பத்திரும்ப மாற்றிமாற்றிக் காட்சிப்படுத்துவதாக இருந்தன. தன்னைக் காட்சிப் படுத்தும் ஒரு பெண் மனத்தின் அமைப்புக்கும் அவரது எழுத்துகளுக்குமான உறவுகள் என்னவாக இருக்கும் என்ற கோணத்தில் அவரது கவிதைகளை – முகநூலில் வந்த கவிதைகளைத் தனிக் கோப்பாகத் தொகுத்து வைத்துக்கூட வாசித்திருக்கிறேன். பல தடவை வாசித்தபின்பு, திரும்பத்திரும்ப ஒற்றைப் பரிமாணத்தில் தன்னை வெளிப்படுத்தும் மனப்பாங்கு அவரது கவிதைப்பரப்பில் சுத்தமாக இல்லை என்பது உறுதியானது. 

அதேபோல முகநூலில் கவிதைகளைப் பதிவேற்றம் செய்வதில் தனக்கேயான தனி அடையாளத்தையும் கொண்டிருந்தார்.தனது கவிதைகளின் முதன்மையான உரிப்பொருளான இருத்தலையும் இருத்தல் நிமித்தங்களையும் அதற்கான மரபான கருப்பொருள் பின்னணியில் சொல்லாமல் மலை, காடு, ஆறு, வறண்ட சமவெளிகள், வயலென எல்லாவகையான பின்னணிகளின் நுட்பமான வெளிகளில் சொல்லும் கவிதைகளை நடப்பியல் வெளிப்பாட்டு ஓவியங்களாக எழுதாமல் அதற்கு முந்தியக் கவிதைப்போக்கான புனைவியல் அடையாளங்களோடு சொல்லிச்சொல்லி முன்வைக்கிறார். அந்த முன்வைப்பின்போது நடப்பியலையும் இயற்பண்பியலையும் மறுதலித்த குறியீட்டியல், மனப்பதிவியல், மிகைநடப்பியல், குரூரவியல் ஓவியங்களோடு இணைத்தும் தந்துகொண்டிருந்தார். இவையும் அவரது கவிதைகளின் மீது கவனக்குவிப்பைச் செய்துகொண்டே இருந்த முதன்மையான கூறு. 

இந்த நேரத்தில் அவரது புதிய தொகுப்பு ஒன்று வரும் அறிவிப்பையும் முகநூலே சொன்னது. அத்தொகுப்பு வந்தபின், தேன்மொழிதாஸின் கவிதையாக்கத்திற்கான கச்சாப்பொருட்களையும், அவற்றை இணைத்துக் கவிதையாக்கும் மனவொழுங்கையும் அறிந்துகொள்ளலாம் என நினைத்துத் தள்ளிவைத்திருந்தேன். அவரது காயா தொகுப்பு கைக்குக் கிடைத்தபோது ஏமாற்றமும் சேர்ந்துகொண்டது. எழுத்தின் வழி ஒரு தளத்தையும், படங்கள், ஓவியங்கள் வழி இன்னொரு தளத்தையும் வாசகர்களைத் திருப்பிய வெளிப்பாட்டு முறைமையை அந்தத் தவிர்த்திருந்தது. முகநூலில் வெவ்வேறு விதமாக யோசிக்கவைத்த தேன்மொழி தாஸின் தொகுப்பு ஓவியங்களைத் தவிர்த்திருந்தது ஒருவிதத்தில் ஏமாற்றமாகவே இருந்தது. என்றாலும் அந்தத் தொகுப்பும் அதிலுள்ள கவிதைகளும் எனது பல பயணங்களில் உடன் வந்துகொண்டே இருந்தன. 

பல பயணங்களின் தனியறைத் தங்கலில் மௌனமாக வாசித்த கவிதைப்போக்கிற்கு மாறாக உரத்து வாசிக்கும்படி காயா தொகுப்பு நிர்ப்பந்தித்தது. இந்தக் கவிதைக்குள்ளிருக்கும் ஓசையொழுங்கும், துள்ளல் வெடிப்புகளும், உறுதித்தொனிப்பும் இதுவரையிலான நவீனக் கவிதை வாசிப்பு முறையிலிருந்து விலகலைக் கோரும் சொல்முறையாக இருக்கின்றன. தமிழ் நவீனக் கவிதை மௌனவாசிப்பின் கருவியென்ற நம்பிக்கைக்கு மாறாக உடல்மொழியோடும் உரத்த குரலோடும் வாசிக்கும்போது அதற்கான உணர்வைத் தரும் சொற்சேர்க்கைகளோடு இருப்பது புரிந்தது. இக்கவிதைகளைத் தனிநபர் வாசிப்பாக இல்லாமல், கவிதா நிகழ்வுகளாக ஆக்கும் நிலையில் அதற்குள் இருக்கும் உறுதித்தொனிப்பு புரியவரலாம். 

இந்தப்புரிதலின் அடிப்படையில் தான் தேன்மொழி தாஸின் கவிதையாக்க முறைமைகளும் அதற்குள் உருவாகும் கவிதை சொல்லியின் தன்னிலையும் தமிழ்க் கவிதைப்பரப்பில் உருவான பாதைகளைத் தன்னுணர்வுடன் நிராகரிப்பதாக உள்ளன என்று சொல்கிறேன். பாதையற்ற பாதையில் நகரும் சொற்கூட்டமாக நினைத்து அவைகளை முன்பு ஒதுக்கியிருக்கிறேன். அதற்கு எனது வாசிப்பு முறைமையின் முதன்மைக் காரணிகளும் பின்னணியாக இருந்திருக்கலாம். ஒரு பேராசிரியராகவும் சமகால எழுத்துகளைக் கவனித்துப் பேசும் திறனாய்வாளனாகவும் என்னை நினைத்துக் கொள்வதால் எனது வாசிப்புக்கு இரண்டு காரணிகளை உருவாக்கி வைத்திருக்கிறேன். அவ்விரண்டும் சந்திக்கும் புள்ளி இலக்கியவியலின் அடிப்படைகளிலிருந்து விலகியவையல்ல. ஒரு மொழிக்குள் செயல்படும் போக்குகளையும் போலச்செய்யும் தீவிரத் தன்மையையும் பற்றி விரிவாகப் பேச உதவும் அச்சொல்லாடல்களிலிருந்தே கலை இலக்கியத் திறனாய்வுச் சொல்லாடல்கள் உருவாகியிருக்கின்றன. அதனைப் பயன்படுத்தியே தனித்துவமான எழுத்துகளை அடையாளப்படுத்துவது எப்படி? என்றும் கண்டுணர முடியுமென இப்போதும் நம்புகிறேன். இதனைத் தூண்டியது தேன்மொழி தாஸின் புனைவியல் கூறுகள் கொண்ட கவிதைமொழி என நினைக்கிறேன். தங்கள் கவிதைகளைச் செவ்வியல் தன்மையோடும் நடப்பியல் பாங்கோடும் வெளிப்படுத்துவதாக நினைத்துக்கொண்ட கவிகள் கூட இலட்சியவாத முன்னெடுப்பின் வழியாகப் புனைவியலைக் கைவிடாதவர்கள் என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். புனைவியல் கவிதைகளின் ஆதாரமான சுருதி என்பதை மறுப்பது எளிதன்று. 

எல்லாவகைக் கவிதைகளும் ‘சொல்லும் தன்னிலை’யை உருவாக்குவதின் வழியாகவே அதன் வடிவத்தின் தொடக்கப்புள்ளியை வரைகின்றன. தொடங்கும் புள்ளிகளின் இணைவில் கோடுகளாக நகர்ந்துசெல்லும் வடிவம் எளிய வடிவம். கோடுகளைப் பின் தொடர்ந்து செல்லும் வாசகர்கள் அதன் திருப்பங்களையும் சுழற்சிகளையும் கண்டுதிரும்பி, சென்றுசேரும் இடத்தில் இருக்கும் இன்னொரு தன்னிலையைச் சந்திக்கின்றனர். கண்டறியப்பெற்ற இவ்விரு தன்னிலைகளுக்குமிடையே என்னென்ன பரிமாறிக்கொள்ளக் கூடும் என்ற யூகத்திலிருந்து கவிதைக்கான அர்த்த்ததையும், அதன் பின்னணியாக நிற்கும் உணர்ச்சிகளின் அடுக்குகளையும் புரிந்துகொள்ளத் தொடங்குகிறார்கள். அந்த முயற்சிக்கு. கவி வரையும் கோடுகளின் போக்கில் ஏற்படும் தடைகளென்னும் திரட்சிகளும் – கவிதைசார்ந்த தொழில் நுட்பங்களும் – நிதானத்தைத் தர முயல்கின்றன. 

தேன்மொழி தாஸின் கவிதைக்குள் உருவாக்கப்படும் ‘சொல்லி’யின் தன்னிலை எதிர்பார்ப்புகளற்ற தன்னிலையாகத் தன்னைப் பலகவிதைகளில் வெளிப்படுகின்றது. அதே நேரத்தில் பலவிதமான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கும் முன்னெடுப்புகளையும் ஒரே கவிதைக்குள் வைத்திருக்கின்ற நுட்பத்தையும் வைத்திருக்கிறார். ஒரே கவிதைக்குள் வெளிப்படும் பல குரல்கள் இதனை உறுதி செய்கின்றன.பலகுரல்களும் முதன்மையாகச் சொல்லும் பொருண்மை தனித்திருத்தலின் தளங்களாக இருக்கின்றன. வேறுபட்ட அந்தத் தளங்களை இப்படிச் சொல்லலாம்: தனக்குத் தனிமையையும் காதலின் வாசத்தையும் காமத்தின் புன்னகையையும் உருவாக்கித் தந்துவிட்டுப் பிரிந்துவிட்ட இன்னொரு தன்னிலை மீது எந்தவிதக் கோபமும் கொள்ளாமல், அந்தக் கணத்தை நினைவுபடுத்திச் சொல்லிக் கொண்டே இருக்கும் குரல்களின் அலைகளின் விரிவுகள். இந்த அலைவிரிவுகளை ஒவ்வொரு கவிதையிலும் வாசிக்க முடிகின்றது. கவிதைகளுக்குள் அலையும் இந்தக் குரல்கள் ஒரு தடவை சொல்லிவிட்டபின் முழுமையாகச் சொல்லிவிட்டேன் என்று திருப்தி அடையாமல் மேலும் சில முறைகள் சொல்லிப்பார்க்கின்றன. திரும்பத் திரும்பச் சொல்லிப்பார்க்கும் எத்தணிப்பைக் காட்சிரூப நினைப்பாகவும் படிமத்தின் அடுக்குகளாகவும் ஆக்குவதைத் தொடர்ச்சியாகச் செய்கிறது. 

மலையெல்லாம் நீலக்குறிஞ்சிகள் 
பூத்த வருடம் நான் பிறந்ததாக 
பாட்டி சொன்னாள். 
இளமை தளிர்கொண்ட காலத்தில் 
மலைவெளியில் அப்பூக்கள் 
மீண்டும் பூத்தபோது மழையின் நிறம் நீலம் 
எனக்கண்டுணர்ந்தேன் 
குறிஞ்சிப் பூக்களின் நீல வெளிச்சம் 
தொடுவானில் பிரதிபலிப்பதைத் தரிசிக்கையில் 
காத்திருப்பின் கனியும் அந்நிறத்தில் 
தான் இருந்தது. 
கித்தார் மரத்துப் பூக்களின் வாசனை 
கண்டடையாத காதலனின் உருவத்தை 
ஆழ் மனதில் வரையத் துவங்கியது 
வரையாடுகளின் சினைப்பருவ காலத்தை 
வனாந்தரம் மறைத்து வைப்பது போலவே 
தளிருடலை மறைத்து வைக்கத் துவங்கினேன் 
நீர்க்கடம்ப மரத்தின் தாகத்தை 
சிற்றோடைகள் அறியும் சமயம் 
வேர்கள் சர்ப்பநடனமிடும் 
காட்டுவாசியின் இசை 
வெறுமையின் துல்லிய உண்டியலில் 
சேர்க்கப்படுவதை அறிவேன் 
பூம்பாறைப் பூக்களின் ஆகிருதியை 
தாங்கவியலாது மனம் 
பனிப்பாறைகளில் சறுக்கும் 
காத்திருப்பு தனிமையில் இடறுவது 
பள்ளத்தாக்கிலிருந்து குறிஞ்சிப் பூஞ்சருகுகள் வீழ்வது 
நிலத்தின் நிவறுதல் நிலைமொழியாய் 
வானத்திற்கு ஏகியதும் இங்ஙனமே 
காட்டிதால் நீலக்குறிஞ்சி பூக்கும் 
காத்திருந்து காதலனோடு தரிசிக்கவும் 
நாம் இங்கிருந்து வாழ்ந்து போனபிறகு ( நீலக்குறிஞ்சி/ காயா, ப.44) 
இத்தகைய கவிதையாக்கம் தமிழ்க்கவிதை மரபில் புதியது. காதல் அல்லது காமத்தின் வெளிப்பாட்டுத் தருணங்களை எழுதுவதைக் குறைவாகவும் அவற்றால் உண்டான தனிமையின் நினைவுகளை வன்மையான சொற்கூட்டத்தாலும் அழுத்தமானப் படிமத் திரட்சியாகவும் சொல்ல நினைக்கிறார் தேன்மொழிதாஸ். அவரது கவிதைகள் இந்தப்போக்கின் மூலம் தமிழின் நெடும்பாடல் மரபை நினைவூட்டுகின்றன. குறுந்தொகையில் ஆறுவரி ஆசிரிய யாப்பில் சொன்ன கூடுதலின் புணர்ச்சியின்பத்தைச் சில நூறுவரி நெடும்பாடலாக ஆக்கிய குறிஞ்சிக்கபிலனைப் போலப் புணர்ச்சியின் அடுக்குகளை இந்தத் தொகுப்பில் குறைவாகவே தந்திருக்கிறார். அதன் மறுதலையாக இருத்தலையும் இருத்தல் நிமித்தங்களையும் விரித்துக்காட்டிய முல்லைப்பாட்டு நப்பூதனும் பிரிவையும் பிரிவின் அடுக்குகளையும் பேசிய நெடுநல்வாடையின் நக்கீரனும் அவருக்குள் ஆவியாகப் புகுந்து பல கவிதைகளை எழுதியிருக்கிறார்கள். 
மீண்டும் நாம் பூமிக்குத் திரும்பும்போது 
காற்று சிவப்பு நிறத்திலும் 
உயிர் தண்ணீரின் சுவையிலும் இருக்கும் 
மலை உச்சியில் எனது வீடும் 
பள்ளத்தாக்கின் அடியில் உனது ஊரும் 
இருக்கும். 
என்றொரு காட்சியைத் தரும் கவிதைக்குள் இருக்கும் “ உனது விரல்கள் கூழாங்கற்கள்” எனச்சொல். அது“பூர்வஞானத்தின் திறவுச்சொல்” என முடிக்கும்போது நிகழ்காலத்திற்கு வந்து நிற்கிறது. 
ஆழத்தின் முகம் பனிக்கல் 
காதலின் முகம் மாயக்கல் 
பிடறி மடலில் அது மறைந்தே இருக்கட்டும் 
என உறுதிப்பொருளாகச் சொல்கிறது- க(கா)ட(டு)வுள்- எனத் தலைப்பிட்டுள்ள கடைசிக்கவிதை. 
78 கவிதைகள் கொண்ட காயா தொகுப்பின் கவிதைக்குள் இடம்பெறும் கருப்பொருட்களான விலங்குகள், மரங்கள், செடிகள், புல், பூண்டுகள், பறவைகள், நீரோடும் பாதைகளான ஆறுகள், குளங்கள், ஏரிகள், சுனைகள் போன்றவைகளெல்லாம் தமிழ் நிலப்பரப்பின் கருப்பொருட்களாக இருக்கின்றன. நவீன வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்ட சமதள வாழ்வில் இருக்கின்றவர்களுக்கு வாசிப்புத் தடையைத் தரும் அவற்றைத் தனது கவிதை அடையாளங்களாக ஆக்கியிருக்கிறார். இவற்றை அடையாளப்படுத்தவும், அவற்றின் ஓசைகளையும் இசைமைத் தன்மைகளையும் பிரித்தறியத் தெரியாதவர்கள் அவற்றோடு இசைந்து நகரும் பெண்ணின் தன்னிலையையும் ஆணின் அருகில்லாமையும் உணர்தல் இயலாத ஒன்றே. தனித்திருத்தலைச் சொல்லும் உரிப்பொருளோடு நிலத்தையும் பொழுதையும் பிசைந்து வடிவமைத்துக் காட்சிப்படுத்தும் தேன்மொழிதாஸின் கவிதைகள் நிலக் காட்சிகளை அடுக்குவதன் மூலம், நவீனத்துவத்துவத்தைக் கடந்து செல்ல விரும்பாமல், அதற்கு முன்னும் பின்னுமாகப் பயணிக்கின்ற தன்னிலைகளை ஒவ்வொரு கவிதையிலும் உயிர்ப்பிக்கின்றன. இந்தப் புதுமையைச் செய்யும் தேன்மொழிதாஸின் கவிதைகளை வாசித்துப் பார்க்கும்படி பரிந்துரைக்கிறேன். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்