ஓரத்து இருக்கைப் பயணங்கள்

மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் நடுப்பகுதியில் இடதுபக்க ஓரத்தில் நான் அமர்ந்திருந்தேன். மதுரையில் ஏறிய பயணிகளில் பாதிப்பேர் ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலை இருக்கும் நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டனர். அதனால் சாத்தூரில் ஏறுபவர்களுக்குத் தேர்வு செய்து இருக்கைகளைப் பிடிக்க வாய்ப்பு இருந்தது. சாத்தூரில் ஏறிய பயணிகளில் அந்தக் குடும்பமும் ஒன்றாக இருந்தது. அரை டிக்கெட் வாங்க வேண்டிய சிறுமி, சிறுவன் உள்பட நான்கு பேர் கொண்ட குடும்பம் அது. வேகமாக ஏறிய சிறுமி ஓடி வந்து எனது இருக்கைக்கு முன்னால் இருந்த வலது பக்க ஓரத்தைப் பிடித்துக் கொண்டாள்.
அடுத்து ஏறியவர்கள் பெற்றோர்கள். அவர்களை அடுத்து ஏறியது அந்தச் சிறுவன். கடைசியில் ஏறினாலும் சிறுமி உட்கார்ந்திருந்த அந்த ஓரத்து இருக்கைதான் எனக்கு வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தான். ‘முதலில் ஏறி இடம் பிடித்தது நான் தான் ; எனக்குத் தான் அந்த இடம்’என்று சிறுமி அடம்பிடித்தாள். ஆனால் வென்றது என்னவோ சிறுவன் தான். பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றுவதில் பெற்றோர்களுக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது போலும். விட்டுக் கொடுத்து விட்டுக் கோபமாகவும் அழுகையை அடக்கியவளாகவும் எழுந்து வந்தவள் நேராக ஓட்டுநரின் இடது பக்கத்தில் இருக்கும் தனியிருக்கையில் போய் உட்கார்ந்து கொண்டாள்.
பேருந்து நகரத் தொடங்கியது. மழை பெய்து முடித்த நாட்கள் என்பதால் காற்று மென்மையாகவும் குளிரூட்டப் பட்டதாகவும் வீசியது. கூந்தல் விசிறியடித்துக் கன்னங்கள் வழியே இறங்கின. காற்றில் மிதக்கும் ஒரு தேவதையைப் போல அவள் தன்னைக் கருதிக் கொண்டு தூரத்தில் விலகிச் செல்லும் மேகத் திரள்களையும், வேப்பமரங்களில் அமர்ந்திருக்கும் கொக்குகளையும் பார்த்துக் கொண்டே வந்தாள். அவ்வப் போது சிறகு விரித்துப் பறந்த மயில்கள் அவளது மகிழ்ச்சியை அதிகப் படுத்தின. மயில்களைப் பார்க்கும் போதெல்லாம் திரும்பி அந்தச் சிறுவனை- தனது சகோகதரனைப் பார்த்தாள்; திரும்பிப் பார்த்தவள் வளிப்புக் காட்டினாள். அந்த வளிப்பில் உன்னைவிடச் சிறந்த - தனித்த -இருக்கையில் அமர்ந்துள்ளேன் என்ற பெருமிதம் வெளிப் பட்டது.
அடிக்கடி எழுந்து பார்க்காமல் உட்காரும்படி கூறினார்கள் பெற்றோர்கள்; கையை வெளியே நீட்டாதே என்று எச்சரித்தார்கள். ஆனால் பெற்றோர்களைப் பார்க்கும்போது கோபத்தை வெளிப்படுத்தினாள். என்னைவிட உங்களுக்கு அவன் தானே முக்கியம் என்று சொல்லாமல் சொல்வது போல இருந்தது அந்தக் கோபம். பெற்றோர்களிடமும் அவள் தனியாக உட்கார்ந்துள்ளது குறித்துக் கவலையும் அச்சமும் வெளிப்பட்டது. மென்மையான காற்றைத் தொடர்ந்து பெய்த மழை அவளுக்கோ இன்னும் சந்தோசத்தைக் கூடுத லாக்கியது; ஆனால் பெற்றோருக்கோ பயத்தை அதிகப்படுத்தியது. கண்ணைப் பறிக்கும் மின்னலுடன் இடித்த இடி அவளிடம் பெருஞ்சத்தத்தை உண்டாக்கியபோது அந்தத் தாய் பதறிப் போய் விட்டாள். ஓடிவந்து சிறுமியை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்; சிறுமியும் அன்னையின் கையைப் பிடித்துக் கொண்டு எழுந்து வந்து அன்னையின் மடியில் தலை வைத்துக் கவிழ்ந்து படுத்துக் கொண்டாள்.

ஓரத்து இருக்கைப் பயணம் பலருக்கும் பிடித்தமான ஒன்று தான்; எனக்கும் கூட அதுதான் பிடிக்கும். ஓரத்து இருக்கை கிடைக்காது என்பதற்காகப் பல நேரங்களில் முதலில் வந்த வண்டிகளை விட்டு அடுத்துப் போகும் பேருந்துகளில் காத்திருந்து போனதெல்லாம் உண்டு. போய் முடிக்க வேண்டிய வேலைகள் எல்லாம் இருந்த போதும் ஒரு சமாதானம் சொல்லிக் கொள்வேன். வேலை என்ன, வேலை? பயணம் தான் முக்கியம்; பயணம் தரும் அனுபவத்தை முதலில் பெற வேண்டும்; பிறகு வேலையை முடித்துக் கொள்ளலாம் என்பதாக அந்தச் சமாதானங்கள் இருக்கும். பேருந்துப் பயணத்தில் மட்டுமல்ல; ரயில் பயணங்களிலும் கூட ஓரத்து இருக்கைப் பயணம் மகிழ்ச்சி அளிக்கக் கூடியன தான்.
ஆனால் இப்பொழுதெல்லாம் அப்படிச் செய்வதில்லை. ஓரத்து இருக்கை என்றில்லை; இருக்கையே கிடைக்கவில்லை என்றாலும் நின்றபடியே பயணத்தைத் தொடங்கி விடுகிறேன். விரைந்து போனவுடன் செய்ய வேண்டிய வேலைகள் அல்லது ஓய்வு முக்கியமானதாக இருக்கிறது. நெருக்கடியும் தேவையும் என்னை மாற்றியது போல எல்லா மனிதர்களையும் மாற்றத் தான் செய்கின்றன. ஓரத்துப் இருக்கை பயணம் தரும் அனுபவம் வேண்டி வேலைகளைத் தள்ளி வைப்பது சரியல்ல என்பது முன்பே கூடத் தெரிந்த ஒன்று தான்.என்றாலும் மனம் அதை விரும்பியது என்பதும் முக்கியம். மனத்தின் விருப்பப்படி எடுக்கும் முடிவுகளின் படி கிடைக்கும் அந்த நேரத்து மகிழ்ச்சி மனிதனுக்கு மிக மிக முக்கியமானது. அதில் அவனது சுதந்திரம் இருக்கிறது; அவனது தனித்த அடையாளத்தைத் தக்க வைப்பதான எண்ணம் வெளிப்படுகிறது. 
சிலர் தங்களுக்குக் கிடைத்த வேலைகளை விட்டு விட்டு வந்து நின்றபோது சொல்லும் காரணங்கள் அவர்களது மனவிருப்பம் தொடர்பானதாக இருக்கிறது.’’ திருப்தியில்லாத வேலை’’ ‘அலுப்பூட்டும் ஒற்றைப் பரிமாணத்துடன் என்னால் எப்படி வேலை செய்ய இயலும் ‘என்று கேட்கும் அவர்களின் கேள்விகள் நியாயமானது தானா? என்று அந்த நேரத்தில் சொல்லத் தெரியாமல் திகைத்திருக்கிறோம். ஆனால் அவர்களே பின்னாளில் வேலைகள் எதுவும் இன்றித் தான் தோன்றித் தனமாக அலையும் போது அவர்கள் எடுத்த முடிவு தவறானது என்று சொல்கிறது நமது மனம்.
இளைய சமுதாயம் பல நேரங்களில் தங்களின் மன விருப்பப்படி முடிவு எடுக்க விரும்புகிறது. குறிப்பாக ஓர் இளைஞன் தனக்கான இணையாக ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்க எப்பொழுதும் இன்னொருத்தரின் உதவியை நாடுவதே இல்லை என்று சொல்லலாம். காதலிப்பதும் காதலிக்கப்படுவதும் தனிமனித விருப்பம் சார்ந்தது எனவும்; ஓரத்து இருக்கைப் பயணம் தரும் மகிழ்ச்சியைப் போல இன்பம் தருவது என இளையவர்கள் கருதுகிறார்கள். ஆனால் இந்திய சமுதாயத்தில் நிலவும் சாதி, மதம், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் போன்றவை தரும் நெருக்கடிகளும் சிக்கல்களும் வேறானவை. அவை அம்மாவின் மடியில் தலை கவிழ்த்துப் பயம் போக்கும் சிறுமியின் மனநிலைக்கு அவர்களைத் தள்ளி விடக்கூடியனவாக இருக்கின்றன.

காதலில் ஏற்படும் தோல்விகள், அவர்களே தீர்மானித்து ஏற்படுத்திக் கொண்ட திருமண ஒப்பந்தங்கள் போன்றவற்றில் ஏற்படும் சிக்கல்களைக் காரணமாக்கி மொத்தப் பொறுப்பையும் பெற்றோர்களிடம் விட்டு விட்டுப் பொம்மையாகத் திருமண மேடையில் வந்து அமர்கிறார்கள். இதுவும் கூட இன்னொரு வகை ஓரத்து இருக்கைப் பயணம் தான். இந்த ஓரத்து இருக்கைகள் உள்புறமாக ஓரத்தில் இருப்பவை. வெளிக் காற்றை நேரடியாகச் சுவாசிக்க இயலாத இருக்கைகள். வெளியிலிருந்து வரும் காற்று, மழை, மின்னல், இடிபோன்ற ஆபத்துக்கள் இல்லாதவை; ஆனால் இரண்டு பக்கங்களிலும் உட்புறமாக இருக்கும் ஓரத்தில் அமர்பவர்கள் படக்கூடிய இடியையும் மோதல்களையும் பட வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்று. பேருந்தை நடத்திச் செல்லும் கண்டக்டர் மட்டும் அல்ல; பல்வேறு பயணிகளும் கூட அவர்களின் தோளை இடித்துக் கொண்டும் தலையில் தட்டிக் கொண்டும் செல்லத் தான் செய்வார்கள். பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
மனித மனத்தின் விருப்பங்களும் நடப்பு வாழ்க்கை தரும் நெருக்கடிகளும் சந்திக்கும் போது மனிதர்கள் எடுக்க வேண்டிய முடிவுகள் பற்றிச் சிந்திக்க இந்த ஓரத்து இருக்கைப் பயணம் ஓர் எடுத்துக் காட்டு தான். தனி மனிதர்களின் வாழ்க்கை சார்ந்து ஓரத்து இருக்கைகள் ஒரு புறம் சுதந்திர அடையாளத்தைத் தருவனவாக இருக்கின்றன; இன்னொருபுறம் ஆபத்துக்களும் அடையாளமிழப்பையும் தருகின்றன. இதற்கிடையில் இரண்டையும் தக்க வைப்பது எப்படி ? என்ற கேள்வி நம்முன்னால் இருக்கிறது. இந்தக் கேள்விக்கு இதுதான் சரியான விடை என்று யாரும் சொல்லிவிட முடியாது. ஆனால் அனைவரும் ஏற்கத் தக்க அல்லது சிந்திக்கத் தக்க ஒரு விடையை முன் வைக்கலாம்.
தன்னெழுச்சியாகக் கிளர்ந்தெழும் உணர்வுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காமல், எல்லா விதமான காரணிகளையும் தேவை களையும் முன்னிறுத்தி முடிவு எடுக்கும் பயிற்சி உடையவனாக இருப்பதே அதற்குச் சரியான வழியாக அமையும். அப்படியானதொரு முடிவு எடுக்கும் திறனைப் பெற்றோர்களோ அல்லது நமது கல்வி முறையோ தர வேண்டும்; ஆனால் தருவதாக இப்பொழுது இல்லை என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

நமது கல்வி முறை அவனது சொந்த வாழ்க்கையில் முடிவு எடுக்கும் திறனைத் தரத் தவறிவிட்டது என்பது மட்டும் அல்ல. அவன் வாழும் சமூகத்தில் எத்தகைய மனிதனாக வாழ்வது என்கிற பொறுப்புணர்வைக் கூடக் கற்றுத் தரவில்லை. சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் ஆன பின்பும் தீண்டாமையும், சாதி சார்ந்த நாட்டாண்மைத் தனமும், தேர்தல் கால வன்முறையும், பெண்ணடிமைத் தனமும், நியாயமற்ற பண விருப்பங்களும் நிலவுகிறது என்பதும், முன்பிருந்ததை விடக் கூடுதலாக ஆகி வருகிறது என்பதும் எதனை வெளிப்படுத்துகின்றன. நமது கல்விமுறை சீர்தூக்கிப் பார்த்து முடிவு எடுத்துச் செயல்படும் வாழ்க்கை முறையைக் கற்றுத் தருவதில் தொடர்ந்து தோல்வியைத் தழுவிக் கொண்டிருக்கிறது என்பதைத் தானே?

அறிவு என்பது தகவல்கள் அல்ல. திட்டமிடுதலும் தேர்வு செய்தலும் முடிவெடுத்தலும் முன்னேறுதலும் என்பது புரிய வேண்டும் ; புரிய வைக்கப்பட வேண்டும்.அதுதான் வாழ்க்கைக் கல்வியாக இருக்க முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கூகை: முன்மாதிரிகளைத் தகர்க்கப் போகும் நாவல்

எழுத்துக்குத் தடை என்னும் பேதமை: மாதொருபாகனை முன்வைத்து

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்