ஞாநியென்னும் அக்கினிக்குஞ்சு

புதியதொரு இடத்தில் – நெருக்கடியான இடத்தில் படுத்திருப்பதுபோலக் கனவு. திரும்பிப்படுக்கும்போது, இடது கைபட்டு ஜன்னலில் இருந்த சின்னஞ்சிறு முகம் பார்க்கும் கண்ணாடி கீழே விழுந்து கலீரென்று உடைகிற சத்தம். தட்டியெழுப்பியபோல விழிப்பு. கழிப்பறைக்குப் போய்வந்து படுத்தால் தூக்கம் வரவில்லை. அரைமணி நேரமாகியும் கண்சொருகவில்லை. கணினியின் திரையைத் திறந்து முகநூலுக்குள் நுழைந்தபோது கல்கி ஆசிரியர் வெங்கடேஷ் ஞாநியின் மரணச்செய்தியை அறிவுப்புச் செய்திருந்தார். சரியாக 38 நிமிடங்கள் ஆகியிருந்தன. இவ்வளவு துல்லியமாகச் சொல்லக்காரணம் உள்ளுணர்வின் முன்னறிவிப்புதான்.

உள்ளுணர்வு பற்றி இப்போது கேட்டாலும் தர்க்க அறிவு நம்பிக்கை இல்லை என்றுதான் சொல்கிறது. ஆனால் அந்த உள்ளுணர்வு தனது முன்னறிவிப்பைச் செய்துகொண்டேதான் இருக்கிறது. வழக்கமாக 5 மணிநேர இடைவெளியில்தான் விழிப்பு வரும். இரவு 11 மணிக்குப் படுத்தால் காலையில் 4 மணி. 12 என்றால் காலை 5. எப்போது படுத்தாலும் ஐந்தரை மணிக்கு எழுந்து விடவேண்டுமென பழக்கமாக்கப்பட்ட உடல். அன்று தடம்புரண்டு மூன்றரை மணிநேரத்தில் விழித்துக்கொண்டது. படுத்திருந்த அறை புதிய இடம்தான். ஆனால் குறுகலான அறையல்ல. குற்றாலமலையின் உள்புறமெல்லாம் சுற்றிவிட்டுத் தென்காசியில் வசதியான அறையில் தான் தங்கியிருந்தேன். 10 மணிக்குப் படுத்து மூன்றரை மணிநேரத்தில் விழிப்பு வந்த காரணம் ஞாநியின் மரணம் நிகழ்ந்தபோதே அறியவேண்டும் என்பதாகத் தான் நினைத்துக் கொண்டேன்.

ஞாநியை நேர்ச்சந்திப்பாக அறிந்தபோது எனக்கு வயது 22. கணையாழி அறிமுகமான பட்டப்படிப்புக் காலத்திலேயே ஞாநியின் பெயர் நன்கு அறிமுகம். கணையாழியின் வாசகனாக இருந்த அதே நேரத்தில் தீபம், தாமரை போன்ற இதழ்களின் வாசகனாகவும் இருந்தேன். மாதந்தவறாமல் வரும் இம்மூன்றையும் வாங்குவதற்காக மதுரை செண்ட்ரல் பஸ் ஸ்டாண்டுக்குப் பேருந்தில் போய்விட்டு மீனாட்சியம்மன் கோயிலுக்குப் போகும்பாதையில் பரப்பிக்கிடக்கும் பழைய புத்தகங்களை மேய்ந்துவிட்டு அமெரிக்கன் கல்லூரி விடுதிக்குத் திரும்பிய காலமது.

அசோகமித்திரனின் ஆசிரியப்பொறுப்பில் பெல்ஸ் சாலையிலிருந்து வந்து கொண்டிருந்த கணையாழியில் சுஜாதாவின் கடைசி பக்கங்களை வாசிப்பதுபோலவே ஞாநியின் குறிப்புகள், கட்டுரைகள் எல்லாம் வாசித்தபின்பே அதில் வரும் கவிதைகள், கதைகள் பக்கம் போவேன். ஞாநியின் தடித்த ‘கண்ணாடிப்ரேம்’ போலவே அவரது கையெழுத்து தடியாக அச்சிடப்பெற்ற கணையாழியின் தலைப்புகளை ரசித்துப் பார்ப்பேன். தீர்க்கவாசகன் என்ற பெயரில் இரண்டு மூன்று கவிதைகள் கணையாழியில் அச்சிடப்பெற்றதால், என்னைக் கணையாழியின் வாசகனாகக் கருதாமல் அதன் எழுத்தாளனாகவே கருதிக்கொண்டிருந்தேன்.

கருணாநிதி எதிர்ப்பு என்பதை வெளித்தெரியாமலும், இந்திரா காந்தி எதிர்ப்பு என்பதை வெளிப்படையாகவும் எழுதும் கணையாழியின் அரசியல் எழுத்துகள் அந்த நேரத்தில் உவப்பானவையாக இருந்தது. அத்தகைய கட்டுரைகள் சிலவற்றை ஞாநி கணையாழியில் எழுதினார். அதே நிலைபாட்டோடு கிண்டலும் அங்கதமும்கொண்ட சோவின் துக்ளக்கும் எனது வாசிப்புக்குள் இருந்த காலம். இந்த நிலைப்பாட்டுக்குரியவர்களாக எங்களையெல்லாம் மாற்றியதின் பின்னணியின் இந்திராவின் அவசரநிலைக்காலம் இருந்தது. மனித உரிமைப் போராளிகளாக அறியப்பெற்ற அருண்சோரி, ஜார்ஜ் பெர்ணாண்டஸ்,. தார்குண்டே, குல்தீப் நய்யார் போன்றவர்களையெல்லாம் தேடிப்படித்துக்கொண்டிருந்த நேரம்.

நவீன ஓவியர்களின் ஓவியங்களை அட்டைப் படங்களாகத் தாங்கிவந்த கணையாழியின் வழியாகவே எனக்கு நவீனத்தமிழ் நாடகம் அறிமுகமானது. பாதல் சர்க்காரின் தமிழக வருகை, ந.முத்துசாமி, இந்திரா பார்த்தசாரதி ஆகியோரின் நாடகங்கள், அவை நிகழ்த்தப்பட்ட விதங்கள், பங்கெடுத்தவர்கள் பற்றியெல்லாம் ஞாநியின் குறிப்புகளில் இடம்பெற்றிருந்தன. பரிக்‌ஷா, கூத்துப்பட்டறை, வீதிநாடக இயக்கம் போன்றனவற்றைப் பற்றிய குறிப்புகளைத் தந்தது போலவே மதுரையில் இயங்கிய மு.ராம்சாமியின் நிஜநாடக இயக்கம் பற்றிய அறிமுகத்தையும் தந்தது கணையாழியே. அமெரிக்கன் கல்லூரியிலிருந்து மதுரைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றபோது நிஜநாடக இயக்கத்தோடு இணைந்து செயல்பட்டேன். அப்போது ஞானி என்னும் நாடக ஆளுமை எனக்குள் நுழைந்துகொண்டார்.

முதுகலைப்படிப்பில் இதழியல் ஒரு விருப்பப்பாடம். எனது வகுப்பளிப்புக்காக எழுதிய கட்டுரையை மு.ராம்சாமியிடம் காட்ட, அதன் முக்கியத்துவம் – அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.கருணாநிதியின் திருச்செந்தூர் நோக்கிய நடைப்பயணத் தொடக்கம் - கருதித் தான் தொடங்கிய தீம்தரிகிட இதழின் முதல் அட்டைப்படக்கட்டுரையாக வெளியிட்டார். முதல் இதழில் தான் எழுதிய கட்டுரையை முதன்மையாக கருதி அச்சிட நினைக்காமல் அறிமுகமே இல்லாத ஒருவரின் எழுத்தை வெளியிட்ட அவரின் இதழியல் நோக்கம் இப்போதும் ஆச்சரியம் அளிப்பது. ஞாநியை அதுவரை நேரில் சந்தித்ததேயில்லை. தான் வேலைபார்த்த இண்டியன் எக்ஸ்பிரஸின் முதலாளியுடன் வழக்காடி வெற்றிபெற்றுக் கிடைத்த பணத்தில் தான் தீம்தரிகிட இதழைத் தொடங்கியிருக்கிறார் ஞாநி என்னும் இளைஞன் என்ற தகவல் எனக்கு உற்சாகமூட்டின. தீம்தரிகிட இதழின் விளம்பரச் சுவரொட்டியை ஒட்டுவதற்காகச் சில இரவுகள் மதுரைத் தெருக்களில் நள்ளிரவு தாண்டி பசைவாளியோடு திரிந்தோம். ரயில் சந்திப்பில் படுத்து உறங்கியதெல்லாம் உண்டு. அவரைப்போன்றதொரு பத்திரிகையாளனாக வரவேண்டுமென்ற விருப்பம் இருந்தது. அவரைச் சந்திக்கவேண்டும் என்ற ஆசையெல்லாம் இருந்தது. அந்த ஆசையை நிறைவேற்றியது அவரது பலூன் நாடகம் தான். அந்த நாடகம் அவரது பத்திரிகை அடையாளத்தைத் தகர்த்து நாடக ஆளுமையாக மாற்றிக்காட்டியது.

மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் ஹென்றி தீபாங்கே அப்போது தார்குண்டே மீது நடத்திய போலீஸ் தாக்குதல் வழக்கை எதிர்கொள்ள நிதி திரட்டிக் கொண்டிருந்தார். பாளை சண்முகம் வழக்குரைஞராக இருந்தார். அந்த வழக்கிற்கான நிதி திரட்டலுக்காக ஒரு நாடகமொன்றைத் தயாரித்து மேடையேற்றி நிதியைத் தருவது என்ற முடிவில் தயாரிக்கப்பட்ட நாடகமே ஞாநியின் பலூன். நீதிமன்றங்களை அம்பலப்படுத்தும் பலூன் நாடகத்தில் சத்யன் என்னும் கவிஞன் பாத்திரத்தை ஏற்று நடிப்பதற்காக மனப்பாடம் செய்த ஞாநியின் வரிகள் அந்த நேரத்தில் இலக்கியத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த இருத்தலியல்வாதத் தொனிகொண்ட வரிகள். அமெரிக்க அரசிடம் மனித உரிமையைக் கோரிப்பெறும் விதமாக நடத்தப்பெற்ற போராட்ட முறையை உள்வாங்கி எழுதிய ஞாநி, பலூன்விடும் போராட்டத்தை நடத்திக் கைதான இளைஞர்களின் கனவுலகத்தை முன்வைத்திருந்தார்.

வெற்று அரட்டை அரங்கத் தொகுப்பான சபா நாடகங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த சென்னையின் நடுத்தரவர்க்கத்தினரை – குறிப்பாகப் பிராமண நடுத்தர வர்க்கப் பார்வையாளர்களைத் தன்வசப்படுத்தும் நோக்கம் கொண்ட நாடகங்களை ஞானி, தனது பரிக்‌ஷா நாடகக்குழு மூலம் மேடையேற்றினர். அதில் அவருக்கு ஆதர்சமாக இருந்தவர்கள் நேரடியாக அரசியல் கருத்துநிலையை வெளிப்படுத்திய நாடகாசிரியர்கள். பெர்ட்டோல்ட் ப்ரெக்ட், விஜய் டெண்டுல்கர் போன்றவர்களோடு பாதல் சர்க்காரையும் அவர் அதிகம் மேடையேற்றினார். இந்திய அளவில் மூன்றாம் அரங்கம் என்பதைக் கருத்தியல் மற்றும் வடிவவியல் ரீதியாக விளக்கம் தந்ததோடு பயிற்சிப்பட்டறைகளையும் நடத்திய பாதல் சர்க்காரைத் தமிழ்நாட்டுக்குப் பரவலாக அறிமுகப்படுத்தியதில் ஞாநிக்கும் அவரது பரிக்‌ஷா நாடகக் குழுவிற்கும் முக்கியப்பங்குண்டு. வீதிநாடக்குழு பொறுப்பேற்று நடத்திய 10 நாள் நாடகப்பயிற்சி முகாமில் ஞாநியின் பங்கு பலவிதமானது என வாசித்திருக்கிறேன்.

சர்க்காரின் புகழ்பெற்ற நாடகங்களான ஊர்வலம், பிறகொரு இந்திரஜித், போன்றவற்றைச் சிறப்பாகப் பலதடவை மேடையேற்றியிருக்கிறார். இடைவெளிகள் இருந்தபோதிலும் பரிக்‌ஷா தனது நாடகப்பயணத்தைப் பலவிதமாகத் தொடர்ந்தது. ஆகச் சிறந்த மேடையேற்றம் என்பதைவிட நாடகத்தின் கருத்தைச் சொல்லிவிட்டால் போதும் என்பதில் திருப்தி அடையும் எண்ணம் ஞாநிக்கு உண்டு. அதனால் அவரது மேடையேற்றங்களில் தேர்ந்த நடிப்பையோ, தொழில் நுட்ப வெளிப்பாடுகளையோ, பின்னரங்கச் செயல்பாடுகளையோ எதிர்பார்க்க முடியாது. அன்றாட வாழ்க்கையில் பலவிதமான தடைகளுடன் நாடக ஈடுபாட்டைக்காட்டும் இளைஞர்களோடு நாடகச்செயல்பாட்டை முன்னெடுத்த ஞாநி, குறைவான செலவில் கருத்துகளைச் சொல்லும் எளிய அரங்கின் ஆதரவாளராகத் தன்னைக் கடைசி வரைக்கும் காட்டிக்கொண்டார். அதன் காரணமாகவே தமிழ் நவீன நாடகக்குழுக்களில் அதிகமான நாடகாசிரியர்களையும் நாடகங்களையும் மேடையேற்றிய நாடகக்குழுவாகவும் பரிக்‌ஷாவை வளர்த்தெடுத்தார். அவரே எழுதிய நாடகங்களைத் தாண்டி ஜெயந்தன், இந்திரா பார்த்தசாரதி, ந.முத்துசாமி,சி.என். அண்ணாதுரை, அறந்தை நாராயணன் ஆகியோரது நாடகங்களை இயக்கியவர் அவர்.

நாடகத்தயாரிப்பில் அவருக்கொரு கொள்கை இருந்தது. எந்தவொரு கலையும் அதன் நுகர்வோரின் ஆதரவில் நிற்கவேண்டுமேயொழியப் புரவலர்களால் பாதுகாக்கப்படுவதாக இருக்கக்கூடாது என்ற கருத்தியலில் அவருக்குப் பிடிமானம் உண்டு. தனது நாடகங்களைத் தயாரிக்கப் புரவலர்களின் – நிதிநல்கைக் குழுக்களின் பண உதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பதில்லை என்பதிலும் உறுதியாக இருந்தார். புரவலர்களால் பேணப்படும் கலை நிலப்பிரபுத்துவக் கலையாக இருக்கமுடியுமேயொழிய மறுமலர்ச்சிக்காலக் கலையாக இருக்க முடியாது என்று விளக்கம் கொடுத்துள்ளார். 1980 களின் மத்தியில் தொடங்கி பத்தாண்டுகாலம் மைய அரசின் சங்கீத் நாடக அகாடெமியின் இளம் இயக்குநர்கள் திட்டத்தில் நிதிபெற்று நாடகம் தயாரிக்கும் வாய்ப்பைக் கோரி ஒருதடவைகூட அவர் விண்ணப்பிக்கவில்லை என்பது அவரது நிலைபாட்டின் வெளிப்பாடு.

மேடை நாடகங்களுக்குப் புரவலரை நாடவில்லை என்பது உண்மையென்றாலும் உள்நாட்டு, வெளிநாட்டு நிதியுதவியோடு செயல்பட்ட தன்னார்வக்குழுக்களின் தேவைக்காகவும் அரசு நிறுவனங்களின் வேண்டுகோள்களை ஏற்றும் நாடகப்பயிற்சிப்பட்டறைகள் நடத்துதல், பிரச்சார நாடகங்கள், ஆவணப்படங்கள் தயாரித்தல் போன்றவற்றை அவர் நிராகரித்ததில்லை. அத்தகைய செயல்பாடுகள் எப்போதும் அவரது துணைவியார் பத்மாவதியினை மையமிட்டு நடந்தது. பெரும் செலவு செய்து ஓரிரண்டு மேடையேற்றத்தோடு நின்றுபோகும் வாய்ப்புக்கொண்ட நாடகங்களைத் தவிர்க்கும் மனநிலையும் இதன் பின்னணியில் இருந்தது என்பது எனது கணிப்பு. முழுநேர ஒத்திகை, பின்னரங்க முக்கியத்துவம் கொண்ட நாடகத் தயாரிப்பு போன்றவற்றை அவர் தவிர்த்தார் என்பதற்கு அவரது பலவித ஈடுபாடுகள் ஒரு காரணமாக இருந்தன. நாடகக்காரர் என்ற அடையாளத்துடன் அவர் சினிமா முயற்சிகளும் தொலைக்காட்சித் தயாரிப்புகளிலும் அவ்வப்போது ஈடுபட்டார். பெரியாரைப் பற்றிய ஆவணப்படம், விண்ணிலிருந்து மண்ணுக்கு (அறந்தை நாராயணனின் நாவலை அடிப்படையாகக்கொண்து) போன்றன குறிப்பிடத்தக்க முயற்சிகள். அண்மைய ஆண்டுகளில் திருச்சி எஸ்.ஆர்.வி. பள்ளிக்குழுமங்களின் கலை இலக்கியச் செயல்பாடுகளின் ஆலோசகர்களில் ஒருவராக- வளவராக இருந்தார் .

நாடகக்காரர் என்ற அடையாளத்தைவிடவும் பத்திரிகையாளர் என்ற அடையாளமே அவருக்கு முழுமையானது. தனது வாழ்க்கைத் தேவைக்கான வருமானத்தை இதழியலாளன் என்பதின் வழியாகவே பெற்றார். தினமணி குழுமம், முரசொலி குழுமம், விகடன் குழுமம். கடைசியாகத் தினமலர் குழுமம் வரை ஒப்பந்த நிலையில் விருப்பநிலை இதழியலாளராக எழுதிக்கொண்டே இருந்தார். அவரது எழுத்து எல்லா நேரமும் உரையாடல் தன்மை கொண்டதாகவே இருந்தது. கேள்விகளுக்குப் பதில் சொல்வதில் ஆர்வம் அவருக்கு உண்டு. மனிதன் பதில்கள், ஓ பக்கங்கள் போன்றன அவரது பத்திரிகை எழுத்தின் அடையாளங்கள். தனது தீம்தரிகிட இதழை அவ்வப்போது அவர் தொடங்கியபோதெல்லாம் என்னை எழுதும்படி கேட்டுக்கொள்வார். பலவிதமான கட்டுரைகளை அதில் எழுதியிருக்கிறேன். திசைகளின் வாசல் என்றொரு பத்தி எழுதும்படி கேட்டுக்கொண்டார். தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தேன்.

மேடைப் பேச்சில் விருப்பங்கொண்ட ஞாநியைப் பல தடவை நான் பணியாற்றிய கல்வி நிறுவனங்களுக்கு அழைத்திருக்கிறேன். பேசியபின் மாணாக்கர்களோடு உரையாட வேண்டுமெனச் சொல்லிக் கேட்டு உரையாடுவார். தன்னை அழைத்தவர்களுக்குச் சிக்கல் வரும் என்ற போதிலும் தனது கருத்தைச் சொல்லிவிட்டுப் போய்விடுவார். அவர் பேசிவிட்டுப் போனபின்பு அதன் பின் விளைவுகள் சிலவற்றை எதிர்கொள்ள முடியாமல் தவித்த அனுபவமும் எனக்கு உண்டு.

பெரியாரின் எழுத்துகள், வாழ்க்கை முறை, பெண்ணியக் கருத்துகளில் அவருக்கு ஈடுபாடும் பிடிமானமும் உண்டு.அதன் காரணமாகத் தன்னைச் சாதியற்றவராக நினைத்துக் கொண்டார். குறிப்பாகத் தன்னைப் பிறப்பு அடிப்படையில் பிராமணர் என்று சுட்டிக்காட்டுவதை ஏற்றுக் கொள்வதில்லை. சிலநேரங்களில் எனது எழுத்துகளில்கூட அப்படியான சாயல் வந்தபோது நட்போடு சுட்டிக்காட்டி மறுத்துள்ளார். அதற்காக நட்பை முறித்துக் கொண்டவரில்லை. இந்தியக் கம்யூனிஸ்டுகளோடு (மார்க்சிஸ்ட்) நெருக்கமான உறவுகொண்டவராகத் தன்னை நினைத்துக்கொண்டதும் வெளிப்பட்டதுமுண்டு. இவ்விரு அரசியல் நிலைபாட்டின் வழியாகவே தலித் அரசியல் எழுச்சியாகத் திரண்ட 1990 -களில் அதன் ஆதரவுக் கருத்தியலாளராகத் தன்னை முன்னிறுத்தினார்.

அச்செழுத்துகளின் தீவிரத்தாக்கம் குறைந்து 24 மணிநேரச் செய்தி அலை வரிசைகளின் விவாதங்கள் முதன்மையான கருத்தியல் உருவாக்கமாக மாறிய கடந்த ஆறேழு ஆண்டுகளில் ஞாநியின் கருத்துகள் படிக்காதவர்களிடமும் சென்று சேர்ந்தன. தனது நிலைபாட்டிலிருந்து பெரிதும் மாறுபடாத விவாதம் அவருடையது. தேசிய இனங்களின் தன்னுரிமையை மதிக்கும் மைய அரசைத் தீவிரமாக ஆதரிக்கும் நிலைபாட்டோடு, மாநிலமொழிகள் வழியாகக்கல்வி, மதவேறுபாடு, சாதிவேறுபாடுகளைக் களைந்த சமூக வாழ்வு என்பது அவரது அடிப்படையான அணுகுமுறை. பெண்களுக்கான சமத்துவத்தைப் பேசியதோடு நடைமுறையில் பின்பற்றிய வாழ்க்கைக்குரியவர். தமிழ் நாட்டு அரசியலில் மலிந்து கிடக்கும் ஊழலை மையப்படுத்தி தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. ஆகிய இரண்டையும் ஒரே இடத்தில் நிறுத்தி விமரிசனம் செய்த ஞாநியின் நிலைபாடுகள், அதன் மேல் அவர் ஊடகங்களில் வைத்த விவாதங்கள், அவர் எழுதிய எழுத்துகள் அண்மைக்காலத்தில் கடும் விமரிசனத்தைச் சந்தித்தன.

திருவான்மியூர் பத்திரிகையாளர் குடியிருப்பில் அவர் இருந்த காலம் தொட்டு அவரது வீட்டிற்குச் சென்றிருக்கிறேன். பெரும்பாலும் பூட்டப்படாத கதவுகள் கொண்டவை அவரது இல்லங்கள். ஞாநியின் நண்பர்களாகவும், அவரது நண்பர்களின் நண்பர்களாகவும் இருக்கும் இளைஞர்களும் யுவதிகளும் இருப்பார்கள்; அவர்களே சமைப்பார்கள்; சாப்பிடுவார்கள்.. சிலர் வேலை தேடுவதற்காகத் தங்கி இருப்பார்கள். சிலர் வீடோ, அறையோ தேடிக்கொள்ளும்வரை அங்கே தங்கியிருப்பார்கள். பறவைகள் வந்துபோகும் சரணாலயம் போல, மனிதர்கள் வந்துபோகும் இல்லம் அது.

எனது மகளுக்கும் மகனுக்கும் திருமணம் ஆகிச் சென்னைக்கு வந்தபிறகு ஒருமுறை நண்பர் ஞாநி சொன்னார். “ராமசாமி! பிள்ளைங்கெல்லாம் செட்டிலாயாச்சு..அரசாங்க வேலை பார்த்தது போதுமே. சென்னைக்கு வந்துடுங்க. சுதந்திரமா.. விருப்பம்போல மக்களுக்காக ஏதாவது வேலை செஞ்சுக்கிட்டு இருக்கலாம்; அரசாங்க ஊழியர் என்ற பயமில்லாமெ எழுதலாம்” என்றார். மாதச் சம்பளத்தை விட்டுவிடத் தயாரில்லாத மனசு, “நடுத்தரவர்க்க மனசு- அதற்குத் தயாராகவில்லை ஞாநி” என்று சொல்லியிருந்தேன்.

வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின் ஞாநியோடு சேர்ந்து வேலைசெய்யும் வாய்ப்பு இருக்கிறது என்று நம்பியிருந்தேன். அவரது அரசியல் பற்றிய நிலைபாட்டில் முக்கால்வாசி எனக்கு உடன்பாடு. நாடகம், சினிமா பற்றிய கருத்துகளும்கூட ஏற்புடையனதான். அதனால் ஒருவருடம் கழித்து அவரோடு சேர்ந்து வேலைசெய்யும் நாட்களுக்காக ஆவலுடன் இருந்தேன். ஆனால் அவர் எனது நம்பிக்கையைப் பொய்யாக்கிவிட்டுப் போய்விட்டார். அவரது மரணத்தை அறிவிக்க வந்த கண்ணாடி- கனவில் உடைந்த கண்ணாடியில் என்னைப் பார்த்துக்கொண்டேன். அவரது இடத்தை நிரப்ப இன்னொருவர் வரவாய்ப்பில்லை.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்