இற்றைப் படுத்தும் சொற்கள்: ரவிக்குமாரின் விமரிசனப்பார்வை



ரோம் நகரில் வாழும்போது ரோம் நகரத்தவனாக இருக்கவேண்டும் என்றொரு சொற்கோவையைப் பலரும் சொல்லக்கேட்டிருக்கலாம். இந்தச் சொற்கோவைக்குப் பின்னிருப்பது வாழிடத்தோடு பொருந்திப் போகிறவர்கள் தாக்குப் பிடிப்பார்கள்; வாழித்தைப் புரிந்துகொள்ளாதவர்கள் தூக்கியெறியப்படுவார்கள் என்பதுதான். நாம் வாழும் வெளியை உணர்தலை வலியுறுத்தும் இச்சொற்கோவை, பொதுவான வாழ்தலுக்குச் சொல்லப்பட்ட ஒரு மரபுத்தொடர். இம்மரபுத்தொடரை ஆய்வு அல்லது திறனாய்வு போன்ற சிறப்புத்துறைக்குள் இயங்குபவர்களுக்குப் பொருத்தும்பொழுது அப்படியே ஏற்கவேண்டியதில்லை. இங்கே வெளிக்குப் பதிலாகக் காலத்தை மையப்படுத்த வேண்டும். காலத்தை மையப்படுத்தும்போது நிகழ்ந்த காலமும் நிகழ்த்தப்படும் காலமும் முதன்மைப்படுத்தப்பட வேண்டும்

திறனாய்வாளன் கவனப்படுத்தும் பரப்புகள் எவையாகவும் இருக்கலாம். எழுதப்பெற்ற எழுத்துகளாக இருக்கலாம்; இசைக்கப்படும் இசைக்கோர்வைகளாக இருக்கலாம்; காட்சிப்படுத்தப்படும் நடிப்புக்கலையாகவோ, அசையும் பிம்பங்களின் வெளிப்பாடான சினிமாவாக இருக்கலாம். அவை திறனாய்வு அல்லது விமரிசனத்தை ஏற்கும் நிலையில்தான் சமகாலப் பொருத்தப்பாட்டை அடைகின்றன. சமகாலப் பொருத்தப்பாட்டை ஏற்காத- ஏற்றுப் பேசப்படாத ஆளுமைகளும் கலைகளும் சமூக நிகழ்வுகளும் வரலாற்றில் காணாமல் போய்விடும் பட்டியலில் இணைந்து கொள்கின்றன. அவ்வகையில் ஒரு திறனாய்வாளர் தன்னையொரு வரலாற்றை உருவாக்கும் நபராக உணரவேண்டும். எல்லாக் காலத்திலும் திறனாய்வாளர்களின் பங்களிப்பின் வழியாக வரலாறு உருவாக்கப்பட்டிருக்கிறது. திறனாய்வை மறுக்கிற -மறக்கிற சமூகம் வரலாற்றை விரும்பாத சமூகமாகவே முடிந்துபோய்விடும். பின்னொரு காலத்தில் அச்சமூகம் இருந்ததற்கான அடையாளங்கள் அற்றுப் போய்விடும்.

திறனாய்வு/ விமரிசனம் இலக்கியம் உள்ளிட்ட கலைகளுக்கும் மட்டுமே உரியதல்ல. எல்லா அறிவுத்துறைகளுக்கும் உரியது. அறிவியல் புலங்களும் சமூகவியல் புலங்களும் மொழிப்புலங்களும் என விரியும் ஒவ்வொரு அறிவுத்துறைகளும் திறனாய்வை ஏற்றுக் கொள்வதின் வழியாகவே வரலாற்றை உருவாக்கியிருக்கின்றன. இதைப் புரிந்திருந்த போதிலும் – புரிந்து கடந்துவந்த போதிலும் வரலாற்றை விரும்பாத – திறனாய்வை மறுதலிக்கிற காலகட்டத்தில் வாழ்கிறோம் என்ற உண்மையையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. கல்விப்புலம் சார்ந்த அறிவுலகமும் வெளியில் இயங்குவதாக நம்பும் எழுத்துலகமும் திறனாய்வை ஏற்காத மனநிலையிலேயே நகர்கின்றன. இவ்விரண்டின் இயக்கத்திலும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளும் இருக்கின்றன. அவ்வேறுபாட்டின் விளைவுகள் குறித்தும் கவலைப்பட வேண்டியுள்ளது. கல்விப்புல ஆய்வாளர்கள் திறனாய்வின் அடிப்படைகளையும் நோக்கங்களையும் தேவைகளையும் அறியாததால் – அறிய விரும்பாததால் அதிலிருந்து விலகிச்செல்கிறார்கள். ஆனால் எழுத்துலகம் அறிந்தே விலக விரும்புகிறது. அறியாமையால் நடக்கும் செயல்பாடுகளை விட அறிந்தே செய்யும் செயல்கள் ஆபத்தானவை. இந்தப் போக்கு பொதுவானது என்றாலும் இங்கே தமிழியலை மையப்படுத்தியே நான் சொல்கிறேன்.

இந்த ஆபத்தை உணர்ந்தவர்கள் தொடர்ச்சியாக இவ்விரு புலத்தவரையும் இணைக்க விரும்புகிறார்கள். கல்விப்புலத்தை அறிந்தவர்களின் கூடாரமாகவும் எழுத்துலகத்தை ஏற்பதை உணரும் கூடுகையாகவும் மாற்ற விரும்புகிறார்கள். இப்படிச் செய்வதில் பலர் பலவிதமாகப் பங்காற்றியுள்ளனர். தமிழ்த்திறனாய்வு வரலாற்றில் எழுத்துலகத்தையும் கல்விப்புல ஆய்வுலகத்தையும் இணைத்துப் பாலம் அமைக்க முயன்ற நபர்களின் எண்ணிக்கைப் பெருக்கம் கல்விப்புலத்திற்குள்ளேயே அதிகம். தமிழ்ப் பேரகராதியைத் தொகுத்த எஸ்.வையாபுரிப்பிள்ளை தொடங்கி தெ.பொ.மீனாட்சி சுந்தரன், முத்துச்சண்முகன், சி.கனகசபாபதி, க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, எம்.எ.நுஃமான், தி.சு.நடராசன், கோ.கேசவன், தமிழவன், க.பூரணச்சந்திரன் எனப் பலரைப் பட்டியலிடலாம். இதன் மறுதலையாகக் கல்விப் புலத்திற்கு வெளியில் இருந்துகொண்டு கல்விப்புலத்தோடு உரையாடுவதின் வழியாக எழுத்துலகத்திற்கு சமூகத்தின் பல்நிலையையும் அவற்றின் வேறுபாடுகளையும் ஏற்றுப் பேசும் ஏற்பு மனநிலையை உண்டாக்க முனைந்தவர்களும் உண்டு. அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அப்பட்டியலில் முதலாமவர் நா.வானமாமலை. தான் பொறுப்பேற்று நடத்திய ஆராய்ச்சி இதழின் வழியாக இருவகை ஆய்வுலகத்திற்கும் இணைப்புப் பாலமாக இருந்தார் அவர். அவரின் பின்னோடிகள் வெளியிலும் இருந்தார்கள்; கல்விப் புலத்திற்குள்ளும் இருந்தார்கள். அவரோடு முரண்பட்டவர்களாக இருந்தவர்கள் – கலை கலைக்காகவே என்ற கருத்தியலின் வழி செயல்பட்ட க.நா.சுப்பிரமணியம் வழியிலான எழுத்தாளர்களும் விமரிசகர்களும் – கல்விப் புலத்தின் ஏற்புகளையும் பாராட்டுகளையும் விரும்பினார்களேயொழிய அவர்களை ஒதுக்கிவைக்கும் மனநிலையோடு விலகியே இருந்தார்கள். 20 ஆம் நூற்றாண்டின் மத்தியிலிருந்த இவ்விருவகைப் போக்குகளின் நீட்சியை இப்போதும் சுட்டிக்காட்ட முடியும். திறனாய்வையும் எழுத்துகளையும் தொடர்பவர்கள் அறிவார்கள்.

திறனாய்வாளர் ரவிக்குமார் இருபோக்குகளில் நா.வானமாமலையும் நீட்சியின் திறமான வெளிப்பாட்டாளர். இலக்கியம் உள்ளிட்ட கலைகளைக் கோட்பாட்டுப் பின்னணியில் விளக்கவும் விமரிசிக்கவும் வேண்டும் என்ற புரிதலின் அடிப்படையில் வரலாறு, தொல்லியல், பொதுச்சமூகத்தின் உளவியல், எழுத்தாளரின் தனிமனித த்தன்னிலை முதலான எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து ஒரு பிரதியை முன்வைக்கும் திறனாய்வாளர். அத்தகைய திறனாய்வுப் பிரதிகள் பலவற்றைத் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கிறார். நுண்ணரசியல் செயல்பாடுகள் வழித் தேர்தல் அரசியல் என்னும் நடைமுறைகளில் தீவிரமாகச் செயல்படும் அதே வேகத்தில் திறனாய்விலும் இலக்கிய ஆக்கங்களிலும் ஈடுபட்டுவருபவர் என்பதைத் தனியாகச் சுட்டிக்காட்ட வேண்டியதில்லை.

ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற புகழ்பெற்ற சொற்கோவையைத் தலைகீழாக்கிக் காட்டும் விதமாக ஆயிரம் பூக்கள் கருகட்டும் சொற்கோவையைத் தலைப்பாக்கிக் கொண்டு வெளிவரும் இந்நூலின் 11 கட்டுரைகளின் போக்கில் சுட்டிக்காட்டவேண்டிய ஒன்று இருக்கிறது. அதை இற்றைப்படுத்துவது என்னும் கலைச் சொல்லால் குறிக்கலாம். ஆய்வு அல்லது திறனாய்வு என்பது எப்போதும் கடந்தகாலப் பிரதிகளையே கவனப்படுத்துகிறது. அப்படிக் கவனப்படுத்தும் ஒவ்வொன்றையும் தனது ஆய்வுக்கருவிகளான அடுக்குதல், விளக்குதல், முன்வைத்தல், முடிவுகூறுதல் போன்றவற்றின் வழியாக இற்றைப்படுத்துவதே திறனாய்வாளனின் அடையாளமாக மாறுகிறது. இந்நூலில் செவ்வியல் பிரதிகளும் கதைகூறும் பெருங்காப்பியப் பிரதியும் ஆய்வுக்குரியனவாக இருக்கின்றன. அதேபோல் அரசியல் விவாதங்களை முன்வைக்கும் அம்பேத்கரும் ஈழத்துக் கவிதைகளும் புனைகதைகளும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. இவைகளைத் தாண்டி வெகுமக்கள் பரப்பைநாடி அவர்களின் பொது உளவியலைக் கட்டமைக்கும் திரைப்படங்களும் ஆய்வுக்குரிய பரப்பாக இருந்துள்ளன. இவையெல்லாவற்றையும் ஒரு கல்விப்புல ஆய்வாளர்கள் காட்டும் ஆய்வுநெறி முறையின் நேர்த்தியுடன் அடுக்கி, விளக்கி, துணைமைச்சான்றுகளோடு பொருத்திக் காட்டி நகர்த்திக்கொண்டுவந்து தான் முன்வைக்க நினைத்த முடிவை முன்வைத்துள்ளார். இந்த நகர்வு அவரைக் கல்விப்புல ஆய்வுகளை வடிவமைக்க விரும்பும் வழிகாட்டி என்னும் அடையாளத்துக்குரியவராக ஆக்கிவிடுகிறது.

இதைத்தான் எண்பதுகளில் பேரா.நா.வானமாமலை செய்தார். அவரது ஆராய்ச்சி இதழில் அவர் எழுதிய கட்டுரைகளிலும் அவரது மாணாக்கர்கள் எழுதிய கட்டுரைகளிலும் துல்லியமாக விரியும் இந்தப் போக்கு தடைபட்டுள்ளது. அப்போக்கு வளர்த்தெடுக்கப்பட வேண்டிய போக்கு. திறனாய்வாளர் ரவிக்குமார் நா.வா.வின் ஆய்வுப்போக்கை மேலும் திறமான பங்களிப்புகளோடு முன்னகர்த்தியிருக்கிறார் என்பதை இந்தக் கட்டுரைகள் காட்டுகின்றன. காரணம் அவருக்கு மார்க்சிய இயங்கியலின் பகுப்பாய்வுப் பார்வையும் அதன் பிந்திய வளர்ச்சிகளான அமைப்பியம், பின் அமைப்பியம், காலனியக் காலத்தை ஆய்வு செய்யும் பின்னைக் காலனித்துவம், பின்னை நவீனத்துவம் போன்ற கோட்பாட்டுச் சிந்தனைகளில் புலமையுண்டு. புலமையும் சிந்தனைத் தெளிவும் கொண்ட இக்கட்டுரைகள் வழியாகத் தமிழ் ஆய்வுலகம் முன்னகரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்