27 யாழ்தேவி- குறிப்புகள் வழி அலைவுநிலை பேசும் கதைகள்
முன் – பின் என்ற எதிரும் புதிருமான சொற்கள் கலை இலக்கியச் சொல்லாடலில் விளக்கங்களைச் சொல்வதற்கும், விளங்கிக்கொள்வதற்கும் பயன்படும் சொற்கள். தமிழ் இலக்கியப்பரப்பில் பாரதிக்குமுன் – பாரதிக்குப் பின் எனப்பேசுவதை நாம் கேட்டிருக்கிறோம். உலக இலக்கியத்தில் காலனியம் அப்படியொரு எல்லையாக இருக்கிறது. காலனித்துவத்தின் பிடியிலிருந்த நாடுகளும் காலனியாதிக்க நாடுகளும் தங்கள் தேசத்துப் பொருளாதார, அரசியல், கருத்தியல் சிந்தனைகளை அந்தச் சொல்லை மையமாக்கி விளங்கிக் கொள்கின்றன.
இலங்கைத்தமிழர் வரலாற்றை, கலை இலக்கியப் போக்குகளைப் பேசவிரும்பும் சொல்லாடல்களுக்குக் காலனியம் என்ற பொதுச்சொல்லைத் தாண்டி அவர்கள் மீது திணிக்கப்பட்டவைகளாக இருக்கும் நிகழ்வு ஒன்றல்ல; இரண்டு நிகழ்வுகள். அண்மைய நிகழ்வு முள்ளிவாய்க்கால் பேரழிவு. முந்திய நிகழ்வு வெலிக்கடைச் சிறைக் கலவரம். 1983, வெலிக்கடைச் சிறைக்கலவரம், ஈழத்தமிழர்கள் மக்கள் திரள் போராட்டங்களை ஆயுதப்போராட்டமாக மாற்றியதின் நியாயங்களின் குறியீடு. கோரிக்கைகளை முன்வைத்துக் கூட்டு மனச்சாட்சியைத் தட்டியெழுப்பி அரசதிகாரத்தின் செவிப்பறையைக் கிழித்துவிட முடியும் என்ற நம்பிக்கையைக் கைவிட்டுவிட்டு ஆயுதங்களால் பேசுவோம்; ஆயுதங்களால் வென்றெடுப்போம்; ஆயுதவழி அரசமைப்போம் என்ற நகர்வுகளை நோக்கித் தமிழர்களைத் திரட்டுவதற்கான முயற்சியின் வெளிப்பாடு. அவ்வெளிப்பாடுகளைப் பேசிய கலை இலக்கியங்கள் உலக இலக்கியப்போக்கிலிருந்து விலகி, ஆயுதங்களை நேர்மறையாகப் பேசின.
ஆயுதங்களின் மீதான மாய இச்சையைக் கேள்விக்குள்ளாக்கிய நிகழ்வாக 2009, முள்ளிவாய்க்கால் பேரழிவு மாற்றிவிட்டது. லட்சக்கணக்கான மனிதர்களைக் கொன்றொழித்த அரசதிகாரத்திடம் இனியும் மனிதநேயத்தைக் கோரமுடியாது என்ற புரிதலைத் தோற்றுவித்த அந்நிகழ்வுக்குப் பிந்திய கலை இலக்கியப் பனுவல்கள் பேசும் தொனியை மாற்றிக்கொண்டுள்ளன.என்ன எழுதப்படுகிறது? என்று தேடும் வாசிப்பைக் கடந்து எப்படி எழுதப் பெற்றிருக்கிறது? என்ற வாசிப்பைக் கோரும் நகர்வை ஈழத்துப் புனைகதைகள் அடைந்துவிட்டதை எனது தொடர்ச்சியான வாசிப்பின் வழியாகப் பார்க்கிறேன்; படிக்கிறேன்.
2009 முள்ளிவாய்க்காலுக்கு முன்பும், அதனைத் தொடர்ந்த சில ஆண்டுகள் வரை வந்த எழுத்துகளும் மறைக்கப்பட்ட பிரதேசத்து ரகசியங்களைக் கடத்தித்தரும் தகவல் திரட்டுகளாகவே இருந்தன. பத்திரிகையாளர்களின் நேரடி விவரிப்புக்கான மொழியில் எழுதப்பெறாமல், புனைவு மொழியில் எழுதப்பெற்ற சாட்சியப் பதிவுகள் என்ற தொனியை உருவாக்க முயன்றன. வாசித்தவர்களும் அத்தகைய நம்பிக்கையோடு வாசித்தார்கள்; விவாதித்தார்கள். அச்சாட்சியங்கள் எந்தத் தரப்பை ஆதரித்துள்ளன என்பதைக் கொண்டு பாதிப்புக்குள்ளான தரப்பை ஆதரித்த எழுத்துகள் எனவும், நேர்மையான பதிவுகள் எனவும் பாராட்டப்பெற்றன. அதனைச் செய்யாத எழுத்துகள் விரோத எழுத்து என்ற முத்திரைகளைத் தாங்கிக்கொண்டன.
சாட்சியத்தன்மை கொண்ட பதிவுகளில் பிசையப்பட்ட அவலங்களும் துயரங்களும் இழப்புகளுமான சித்திரிப்புகளில் போரினால் உண்டான மனிதத் துயரத்தின் ஓலங்கள் மெல்லோசைகளாகவும் வல்லோசைகளும் கேட்டன. கவிதைகளில் தூக்கலாகவும் புனைகதைகளில் நடப்பியலின் சித்திரங்களாகவும் எழுதித் தரப்பட்ட அந்தக் கட்டத்தைத் தாண்டிவிட்டது ஈழத்துத் தமிழ் இலக்கியம் என்பதைச் சொல்லும் சாட்சியமாக ஈழவாணியின் இந்தச் சிறுகதைத் தொகுப்பு வந்துள்ளது.
10 தலைப்புகளில் எழுதப்பெற்றுள்ள ஒவ்வொரு கதையிலும் தனி ஈழத்துக்கான ஆயுதப் போராட்டத்தினை நினைவுபடுத்தும் குறிப்புகள் இருக்கின்றன. நினைவுபடுத்தும் அக்குறிப்புகள் போராட்ட காலத்தின் – களத்தின் உள்ளே இருந்து கண்டுசொல்லும் குறிப்புகளாக இல்லை. அதில் கலந்துகொண்டவர்களின், பாதிக்கப்பட்டவர்களின் அவலங்களைச் சொல்லிக் கழிவிரக்கத்தூண்டும் தொனியில் எழுதப்படவில்லை. அதற்குமாறாக அவர்களின் மனநிலைகளைப் பேசுகின்றன.
ஆர்வத்தைத்தூண்டும் தொடக்கங்களோடு கதைகளை ஆரம்பிக்கும் ஈழவாணிக்குச் சிறுகதை என்னும் நவீன கதைவடிவத்தைச் சரியாகக் கையாளத் தெரிந்துள்ளது. ஒவ்வொரு கதையின் ஆரம்பமும் வாசிப்பவர்களை ஒரே சீரான வேகத்தில் அழைத்துச் செல்லாமல் கதைகளின் நிகழ்வுகள் வழி உருவாக்கப்படும் உணர்வுகளின் வேகத்தோடு இணைந்துகொள்ளும்படி தூண்டுகின்றன. வாசகர்களைக் கதைக்குள் கொண்டுவந்து நிறுத்திக் கொண்டு ஆர்வத்தைத் தூண்டும் ஒரு திருப்பத்தோடு வேறு ஒன்றுக்குள் நுழைந்துவிடுகிறார். இதற்கு நல்ல உதாரணமாகப் பெரிய கதையாக எழுதப்பெற்றுள்ள 16 மாடிக்கட்டடம் என்ற கதை இருக்கிறது. இப்படித்தான் கதை முடியும் என்ற கணிப்பைப் பொய்யாக்கிக் காட்டியிருப்பதின் வழி, தனது தனித்தன்மையை உறுதிசெய்துள்ளார் ஈழவாணி.
புனைவின் அடிப்படைக்கூறுகளால் -இடத்தை, காலத்தை, பாத்திரங்களை- புனைவாகக்காட்ட உதவும் வர்ணனைகள், உரையாடல்கள் உருவாக்கப்பட்டு நகரும்போதே உண்மை நிகழ்வைச் சொல்வதின் வழியாக அழுத்தம் தரமுடியும் என நம்புவது ஈழவாணியின் இலக்கியக்கொள்கையாக இருக்கிறது. இந்தக் கூறுகள் எல்லாக்கதைகளிலும் ஒன்றுபோல் இல்லை. ஒவ்வொன்றிலும் வெவ்வேறு பெயராக இருக்கிறது. ஒன்றில் ஆஸ்திறேலியக் கடலில் மூழ்கும் படகாக இருந்தால் இன்னொன்றில் இசைப்பிரியாவின் ஓலமிடும் குரலாக இருக்கிறது. மற்றொன்றில் புலம்பெயர்ந்த தமிழர்களின் போலிப்பெருமைபேசும் உரையாடலாக இருக்கிறது.
புனைவின் அடிப்படைக்கூறுகளாகப் பேசும் இலக்கியவியல் நூல்களான அரிஸ்டாடிலின் கவிதையியலும் தொல்காப்பியரின் பொருளதிகாரமும் இடம், காலம், பாத்திரங்களை எழுதும் முறைகளை விளக்கியுள்ளன. ஈழவாணியின் கதைகளுக்குள் உருவாக்கப்படும் வெளிகளும் காலமும் அவரது கதைகளுக்குக் குறிப்பான அடையாளங்களை உருவாக்கித் தருகின்றன. அவரது பெரும்பாலான கதைகளின் வெளி புலம்பெயர் தேசங்களாக இருக்கின்றன. குறிப்பாகத் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையாக இருக்கின்றன. ஆனால் நினைக்கப்படும் வெளிகள் இலங்கையின் பகுதிகளாக இருக்கின்றன. ஈழதேசத்தின் கிராமம், கொழும்பு நகரத்தின் ஒரு தெரு அல்லது குடியிருப்பு எனக் காட்டுவதன் மூலம் ஈழத்தமிழர்களின் அலைவு வாழ்க்கையின் தொடர்ச்சியை எழுதிவிடுகின்றார். புலம்பெயர் வாழ்க்கையில் இருப்பவர்கள் சந்திக்கும் அன்றாடச் சிக்கல்களைத் தீவிரத்தன்மையில் விவரித்துப் பெருந்துயரத்தில் இருப்பதாகப் பதிவுசெய்யாமல், அவர்களின் பேச்சு மற்றும் நடத்தைகளின் மீது விமரிசனத்தைச் செய்வதைத் தவிர்த்துவிடவில்லை. அதோடு தமிழ்நாட்டுத் தமிழர்களின் பொதுப்புத்திக்குள் ஈழத்தமிழர்களின் போராட்டம் குறித்த அக்கறைகள் எப்படியானவை என்பதையும் கோடிட்டுக்காட்டுகிறார். அரசியல்வாதிகளும் இயக்கங்களும் எழுப்பும் அதீத உணர்வுக்கு மாறாக விலகல் மனநிலையே தமிழ்நாட்டு மக்களிடம் இருப்பதை அவர் உணர்ந்துள்ளதைக் கதைகள் நேரடியாகப் பேசவில்லை. போகிறபோக்கில் சுட்டிச் செல்கின்றன. இந்த எதார்த்தமான அறிதல் முக்கியமானது.
ஈழவாணியின் இந்தத் தொகுப்பிலிருக்கும் 10 கதைகளும் பத்துவிதமானவை. ஒரு கதைக்குள்ளேயேகூடத் தொடக்கத்தில் உண்டாக்கும் உணர்வும் தொனியும் சட்டென்று மாறி இன்னொன்றுக்குள் நகர்த்திவிடுகின்றன. இந்த நகர்வுகள் இலக்கிய வாசிப்பில் முக்கியமானவை. வாசிப்பவர்களை ஒரே போக்கில் கொண்டுபோய் எழுதுபவர்களின் நோக்கத்தோடு உடன்படச் செய்யாமல் அவர்களையே முன்வைக்கப்படும் நிகழ்வுகள் மீது விசாரணையைத் தூண்டுபவை. நிர்வாண முக்தி, கோபிநாத், டாக்தெரு.. போன்ற கதைகளை வாசிக்கும் ஒருவர் வாசிப்பின்போது உள்ளெழும் நகையுணர்வைத் தள்ளிவிட முடியாது. வெண்ணிறத்துணி கதையின் சொல்முறை அங்கதத்தின் சாயலில் தொடங்கி, கூட்டுப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டவனின் உளவியல் சிக்கலின் வெளிப்பாடாக முடிகிறது.
இந்தக்கூறுகள் இலக்கியப்பிரதிக்குத் தற்காலிகத் தன்மையைத் தரும் கூறுகள் என விமரிசனம் செய்யலாம். ஆனால் அவைதான் ஈழவாணியின் கதைகளைப் போர்க்காலக் கதைகளாகவும் புலம்பெயர்வுச் சிக்கல்களைப் பேசும் கதைகளாகவும் அடையாளப் படுத்துகின்றன. அந்த அடையாளங்கள் ஈழவாணிக்கு முக்கியமான ஒன்று. அதனை அவர் இன்னும் முன்னெடுப்பார் என நம்புகிறேன்.
கருத்துகள்