சென்னை நாளில்...

2026, ஆகஸ்டு, 22

இந்தச் சென்னை நாளில் இந்த விடுதியைப் பற்றிச் சொல்வது தவறில்லை. அண்மைக்காலங்களில் சென்னைக்கு வரும்போது இங்குதான் தங்கிக் கொள்கின்றேன். ஊரிலிருந்து கிளம்பும்போது ஒரு தகவல் சொல்லிவிட்டால் நமக்கென ஓர் அறையை ஏற்பாடு செய்துதரும் அளவுக்குப் பழக்கமாகி விட்டது. முன்பணம் செலுத்தினால் அறை என்பதெல்லாம் இல்லை. அலைபேசியில் சொன்னால் போதும். அதன் மேலாளர் ஒத்துக்கொள்வார். குபேர் இன். என்ற பெயருடைய அந்த விடுதி நந்தனம் பகுதியிலேயே இரண்டு இடங்களில் இருக்கின்றன . சில இடங்களில் காலை உணவு இலவசம் என்ற வசதியுடன் கிடைக்கும். மற்ற நேரங்களில் சொல்லிவைத்து சாப்பிட்டுக் கொள்ளலாம். 

புத்தகக் கண்காட்சி நந்தனம் விளையாட்டு அரங்கிற்கு மாறியபின் இந்த இடம் அறிமுகமானது. புத்தகக் கண்காட்சிக்காக வரும் நாட்களில் தங்குவதற்கென இந்த விடுதியை அறிமுகம் செய்தது தளவாய் சுந்தரம் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான அவர் ஒருவிதத்தில் எனது மாணவர். திருநெல்வேலி மனோன்மணியத்தில் தொடர்பியல் துறை மாணவராக இருந்தபோது படைப்பிலக்கியம் என்ற விருப்பப்பாடத்தாளுக்காகத் தமிழியல் துறைக்கு வந்தவர்களில் அவரும் ஒருவர். அதுமுதல் நண்பர்களாகத் தொடர்கின்றோம். அவருக்குப் புலம்பெயர்ந்த/ யாழ்ப்பாண எழுத்தாளர்கள் பலரும் நல்ல பழக்கம் என்பதால் அவர்களுக்கான பரிந்துரையாகவே இந்த விடுதியைக் கருதியிருக்கின்றார். எனக்கும் பரிந்துரை செய்தார். மற்ற விடுதிகளோடு ஒப்பிட அதிக வாடகை இல்லை. அடிப்படையான வசதிகளோடு இந்த வாடகைக்கு, அண்ணாசாலையில் அறை கிடைப்பது இப்போதும் ஆச்சரியம்தான். அதனால் புத்தகக் கண்காட்சிக்கு என்றில்லாம் எப்போதெல்லாம் சென்னைக்கு வரும்போதெல்லாம் அங்கேயே தங்கிக்கொள்கின்றேன்.எல்லாவிதத்திலும் வசதியானது.

சென்னை நாளான இன்று அதே விடுதியில் தங்கியிருக்கின்றேன். நேற்றிரவு வந்து நந்தனம் மெட்ரோ அருகில் உள்ள அந்த விடுதியில் தங்கிவிட்டுக் காலையில் எழுந்து காலை ஆறுமணிக்கு முன்னதாக ஒரு காபி குடிக்கலாம் என்று தேடிப்போனபோது அதற்கான கடைகளே இல்லை. விடுதியின் முன் உள்ள சாலை மொத்தமாக அடைத்துக் கிடக்கின்றது. அண்ணாசாலையிலும் அதிலிருந்து கிளைபிரியும் குறுக்குச் சாலைகளிலும் தேடியும் ஒரு கடையும் இல்லை. தாமரைக் காலனிச் சாலையில் தேடிப்பிடித்து ஒரு காபி குடிக்க ஒருமைல் தூரம் நடக்க வேண்டியதாயிற்று. காலையில் நடப்பது வழக்கம் என்பதால் அது சிக்கல் இல்லை.
 
எனது 26 வயதில் சென்னைக்குத் தனியாக வந்த முதல் பயணம் குறித்த நினைவுகளோடு இந்தக் கட்டுரையை எழுதுகின்றேன்.  40 ஆண்டுகளாகச் சென்னைக்கு வந்துபோய்க்கொண்டே இருக்கின்றேன். ஒவ்வொரு முறையும் மாறும் சென்னையைப் பார்த்துவிட்டுத் திகைப்புடன் திரும்பிவிடுவேன். அந்தத் திகைப்புகளே என்னைச் சென்னைவாசியாக ஆகவிடாமல் தடுத்தது என்று நினைக்கின்றேன். சென்னைவாசியாக ஆகியிருந்தால் இன்னும் பல அனுபவங்கள் கிடைத்திருக்கக்கூடும். ஆனால் இந்த மாற்றங்களை எப்படி எதிர்கொண்டிருப்பேன் என்பதும் ஒரு கேள்விக்குறிதான். 

ஒருநாள் நகரம்
---------------------
மூடிக் கிடக்கின்றன
பக்கச்சாலைகள் ஒவ்வொன்றும்
வேகம் பிடிக்கின்றன
முதன்மைச்சாலை வாகனங்கள்
முட்டுச் சந்தில்
இருக்கின்றன இலக்குகள்
குறுக்குச் சாலைகளில்
குடியிருப்பு; கூடிக்களிப்பு
அறிந்தவர்கள் ஓடியடையலாம்
புதியவர்களுக்கு நிலைதடுமாற்றம்
நகரும் என அறிந்தவர்கள்
நகர்ந்துகொண்டிருக்கின்றார்கள்
கிடக்கின்றன கிராமங்கள்
கடக்கின்றன வெயிலும் மழையும்



 மாறிக்கொண்டே இருக்கின்றது என்பதால் சென்னையில் வாழ்பவர்கள் எப்படிச் சமாளிக்கின்றார்கள் என்பதுதான் ஆச்சரியமாக இருக்கின்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

சிட்டுக்குருவியின் அழகும் வல்லூறின் வலிமையும்: தேசியவாதமும் தேசிய இனங்களின் தன்னுரிமையும்