பூமணியின் நினைவாக...
பூமணி! நீண்ட நாள் வாசகனின் இந்த வாழ்த்தை ஏற்றுக்கொள்ளுங்கள்!!
பூமணியின் அஞ்ஞாடி நாவல் 2014 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடெமி விருதைப் பெறுகின்றது என்ற அறிவிப்பு வந்தது. அறிவிப்பைக் கேட்டதும் அனுப்பப்பட்ட வாழ்த்துக்கடிதத்தின் தலைப்பு இது. கட்டுரை வடிவிலான அந்தக் கடிதத்தைப் புலனத்தின் வழியே அனுப்பியதும் அவரே அழைத்துப் பேசினார். இருவரும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டோம்.
பூமணிக்குச் சாகித்ய அகாடெமி விருது அளிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துக் கொண்டிருந்தவர்களுள் நானும் ஒருவன் என்பது அவருக்குத் தெரியும். சாகித்ய அகாடெமிக்காகக் குறும்பட்டியல் உருவாக்கும் வல்லுநர் குழுவில் இருந்த மூன்று ஆண்டுகளிலும் எனது பரிந்துரைப் பெயர்களில் ஒன்றாகப் பூமணியின் பெயர் இருந்தது. அந்தப் பரிந்துரைகளின்போது பூமணிக்கு விருது அளிக்கப்படவில்லை. எனது பரிந்துரையில் இருந்தவர்கள் ஒருவருக்கும் அந்த ஆண்டுகளில் விருதுகள் அளிக்கப்படவில்லை. ஒவ்வோராண்டும் விருதுகள் அறிவிக்கப்படும்போது இனிமேல் பரிந்துரைப்பட்டியல் அனுப்பக்கூடாது என்று முடிவுசெய்துகொள்வேன். ஆனால் அகாடெமியிலிருந்து கடிதம் வந்ததும் அதற்குத் தரவேண்டிய மரியாதை எனக் கருதி நான் விரும்பும் மூன்றுபேரைப் பரிந்துரையும் செய்ததுண்டு.
பூமணியின் கடும் உழைப்பால் உருவான அஞ்ஞாடிக்கு விருது அளிக்கப்பட்டது மகிழ்ச்சி அளித்த ஒன்று. அந்த நாவலை எழுதிக்கொண்டிருந்த போது இரண்டு சந்திப்புகளில் நாவலின் காலப்பின்னணியைக் குறித்துப் பேசியிருக்கின்றோம். சென்னையில் புத்தகக் கண்காட்சியில் சந்தித்துக்கொண்டபோது சிவகாசிக் கலவரத்தை உள்ளடக்கிய காலகட்டத்தில் நடந்த சமூக முரண்பாடுகளை விவாதிக்கும் வரலாற்றுத்தரவுகளை அடிப்படையாகக் கொண்ட நாவல் ஒன்றை எழுதிக்கொண்டிருக்கின்றேன். அதற்காகத் திருநெல்வேலி மாவட்ட ஆவணக்காப்பகத்திற்கும் நூலகங்களுக்கும் வரவேண்டும். அப்போது உங்களோடு விரிவாகப் பேசுவதற்காக நெல்லைக்கு வருவேன் என்று சொன்னார். சொன்னபடி பல்கலைக்கழகம் வந்தார். என்னுடைய ஆய்வேடு தொடர்பில் சேகரித்த தரவுகளில் நாவலின் காலகட்டம் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளதா என்பதைக் கேட்டுக்கொண்டதோடு, பின்னர் நிகழ்ந்த சமூக முரண்களுக்காக விதைகள் நாயக்கர்கள் காலத்திலேயே கிடைக்கின்றனவா என்றும் விவாதித்தார்.
பூமணியின் கடும் உழைப்பால் உருவான அஞ்ஞாடிக்கு விருது அளிக்கப்பட்டது மகிழ்ச்சி அளித்த ஒன்று. அந்த நாவலை எழுதிக்கொண்டிருந்த போது இரண்டு சந்திப்புகளில் நாவலின் காலப்பின்னணியைக் குறித்துப் பேசியிருக்கின்றோம். சென்னையில் புத்தகக் கண்காட்சியில் சந்தித்துக்கொண்டபோது சிவகாசிக் கலவரத்தை உள்ளடக்கிய காலகட்டத்தில் நடந்த சமூக முரண்பாடுகளை விவாதிக்கும் வரலாற்றுத்தரவுகளை அடிப்படையாகக் கொண்ட நாவல் ஒன்றை எழுதிக்கொண்டிருக்கின்றேன். அதற்காகத் திருநெல்வேலி மாவட்ட ஆவணக்காப்பகத்திற்கும் நூலகங்களுக்கும் வரவேண்டும். அப்போது உங்களோடு விரிவாகப் பேசுவதற்காக நெல்லைக்கு வருவேன் என்று சொன்னார். சொன்னபடி பல்கலைக்கழகம் வந்தார். என்னுடைய ஆய்வேடு தொடர்பில் சேகரித்த தரவுகளில் நாவலின் காலகட்டம் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளதா என்பதைக் கேட்டுக்கொண்டதோடு, பின்னர் நிகழ்ந்த சமூக முரண்களுக்காக விதைகள் நாயக்கர்கள் காலத்திலேயே கிடைக்கின்றனவா என்றும் விவாதித்தார்.
எனது முனைவர் பட்ட ஆய்வேடு நாயக்கர்காலத் தமிழ் இலக்கியங்களை வரலாற்றுச் சான்றுகளாகப் பயன்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வு. ஒருவிதத்தில் சமூகவியலும் இலக்கியமும் இணைந்து பயணிக்கும் இலக்கியக் கோட்பாட்டுப் பார்வையைக் கருதுகோளாகக் கொண்டு செய்யப்பட்டது என்பதால் என்னோடு பல கோணங்களிலும் உரையாடினார். என்னோடு மட்டுமல்லாமல் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை ஆசிரியர்கள் சிலரையும் சந்தித்தார். பல்கலைக்கழக நூலகத்தில் இருந்த 18,19 ஆம் நூற்றாண்டு வரலாறுகளைக் குறித்த ஆய்வேடுகள், நூல்கள் சிலவற்றைக் குறித்துக் கொண்டு போனார். அவற்றைப் பணம் கொடுத்து வாங்கிப் படித்துக் குறிப்புகள் எடுப்பதில் ஆர்வமாக இருந்தார். பிரிட்டானியர்கள் ஆட்சிக் காலத்தில் இருந்த ஜமீன்தார்களின் நிர்வாகமும் வட்டார ஆதிக்கமும் குறித்த அவரது தேடல்களையும் உடனிருந்து பார்த்தும் கேட்டும் ரசித்துக்கொண்டிருந்தேன். தொடர்ச்சியாக ஒன்பது ஆண்டுகள் அந்த நாவலுக்காக வேலை செய்தார் என்பதும், எழுதிய நாவல்களிலியே அஞ்ஞாடிக்காகத்தான் அதிகமான பயணங்களையும் வாசிப்பையும் சந்திப்புகளையும் செய்தார் என்பதும் அவரே சொல்லியிருக்கும் தகவல்கள். பல்கலைக்கழகம் வந்தபோது தோப்பில் முஹம்மது மீரானுக்குச் சாகித்ய அகாடெமி விருது (சாய்வு நாற்காலி,1997) கிடைத்தபோது பல்கலைக்கழகத்தில் நடத்திய கருத்தரங்கைச் சுட்டிக்காட்டிப் பாராட்டினார். ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அந்தந்த வட்டாரத்து எழுத்தாளர்கள் விருதுகள் வாங்கும்போது கொண்டாடவேண்டும்; மாணாக்கர்களுக்கு அவர்களின் எழுத்துகளையும், தமிழ் இலக்கியப்பரப்பில் அவர்களின் இடம் எத்தகையது என்பதையும் விமரிசனக்கண்ணோட்டத்தோடு முன்வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுப் பேசினார். மீரானுக்கு விருது அறிவிக்கப்பட்டபோது துறையில் நான் மட்டுமே இருந்தேன். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பேரா.வே.வசந்தி தேவி இருந்தார்; அவரிடம் நவீன இலக்கியங்கள், கருத்தோட்டங்கள், செயல்பாடுகளுக்கு அனுமதியும் நிதி ஒதுக்கீடும் பெறுவது எளிதாக இருந்தது. ஆனால் அதற்குப் பின்னர் எல்லாம் மாறிவிட்டது. நான் துறைத்தலைவராக இல்லாதபோது பல்கலைக்கழக எல்லைக்குட்பட்ட தென்மாவட்ட எழுத்தாளர்கள் – தி.க.சிவசங்கரன்-2000 (விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள்), மேலாண்மை பொன்னுசாமி- 2008 (மின்சாரப்பூ ), நாஞ்சில் நாடன்-2010 ( சூடிய பூ சூடற்க) போன்றவர்கள் விருதுபெற்றபோது துறையில் எதுவும் நடக்கவில்லை. ஆனால் அஞ்ஞாடிக்கு விருது அறிவிக்கப்பட்டபோது நான் திரும்பவும் துறைத்தலைவர் ஆகியிருந்தேன். அதனால் கொண்டாட்டமான கருத்தரங்கொன்றை நடத்த முடிந்தது.
பேராசிரியர் தர்மராஜ் அஞ்ஞாடி நாவல் எழுதப்பட்டுள்ள முறைமையையும் பாத்திரங்களை பூமணி வடிவமைக்கும் தனித்தன்மைகள் குறித்தும் விரிவான ஆய்வுரை ஒன்றை வழங்கினார். ஸ்டாலின் ராஜாங்கமும் நானும் அவரது எழுத்துப்பரப்பின் நுட்பங்களைக் குறித்துக் கட்டுரைகள் வழங்கினோம். அக்கருத்தரங்கின் தொடக்கவிழாவில் பல்கலைக்கழகத்தின் சார்பில் நினைவுப்பரிசை வழங்கியவர் தோப்பில் முஹம்மது மீரான் என்பதும், அந்த மேடையில் ஜெயமோகன், இமையம், கோணங்கி ஆகியோர் உடன்நின்று மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்கள் என்பதும் இந்த நினைவஞ்சலியை எழுதும்போது அலையலையாக நகர்கின்றது. சில மாதங்கள் கழித்து கோவில்பட்டியில் நடந்த விருதுக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்ள வேண்டும் என்று பூமணி அழைத்தார். அந்த விழாவில் பிறகு நாவலைப் பற்றிச் சொல்லும்போது அதன் எழுத்துமுறைமையான இயற்பண்பு வாத அழகியலைக்குறித்தும், வெக்கை நாவலில் வெளிப்பட்ட அரசியல் நிலைப்பாட்டையும் குறித்துப் பேசினேன்:
தான் எழுதும் எழுத்துக்குள் தனது இருப்பைக் கொஞ்சமும் காட்டிக் கொள்ளாமல், தான் உருவாக்கும் பாத்திரங்களின் இயல்பான மொழிக் கூறுகளை மட்டுமே தருவதே பூமணியின் எழுத்து முறை. அதனை வாசிப்பது கவனமாகத் தொகுக்கப் பட்ட ஆவணப் படத்தைப் பார்க்கும் அனுபவத்தை தரக்கூடியது. அவரது நாவல்களின் காட்சி அடுக்குகள் வெளியையும் காலத்தையும் மாற்றும் நாடக உத்தியின் வழியாகவே மாறுகின்றன. காலத்தை அதிகமும் குழப்பாமல் நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்திற்குள் போய் விட்டு நிகழ்காலத்திற்குத் திரும்பி விடும் ஒற்றை வளைவுகளே அவரது எழுத்தில் உள்ளன. அதனால் தான் அவரது நாவல்கள் எளிய கதை சொல்முறை கொண்டதாகத் தோன்றுகின்றன. அவரது விவரிப்பு முறையை வாசித்துக் கொண்டே போகும்போது கதை நிகழும் களனின் அனைத்துப் பரப்பும் கண் முன் விரிவதோடு, பாத்திரங்களின் இருப்பும் அசைவும் கூட அதனதன் அளவில் எழுதப்பட்டுள்ளன என்பதை முதல் வாசிப்பிலேயே புரிந்து கொள்ள முடியும். தீராநதியில் எழுதிய 'நாவல் என்னும் பெருங்களம்' என்ற தொடரில் எழுதுவதற்கு அவரது வெக்கையையே தேர்வு செய்தேன். அதற்கான காரணங்கள் இருந்தன. மார்க்சிய -லெனினிய இயக்கங்களின் சொல்லாடல்களில் இடம்பெற்ற அழித்தொழிப்பு என்ற கருத்தாக்கத்தை நினைவூட்டி விவாதப்படுத்திய நாவல் அது என்றும் குறிப்பிட்டேன்.
***************
நேர்ச்சந்திப்பாகப் பூமணியைப் பார்த்த முதல் சந்திப்பு எப்போது என்பது நினைவில் இல்லை. ஆனால் கடைசியாகப் பார்த்ததும், என்னைத் தலித் எழுத்தாளர் என்று சொன்ன ராமசாமியைக் கண்டிக்கிறேன் என்று ஆவேசமாகச் சொன்ன சந்திப்பும் நினைவில் இருக்கின்றது. கடைசிச்சந்திப்பு நடந்தது சென்னை புத்தகக் கண்காட்சியில் தான். அநேகமாக 2023 என்று நினைக்கின்றேன். அந்தச் சந்திப்புக்கு முன்னால் ஒரு தடவை தொலைபேசியில் பேசும்போது 'பிறகு' நாவலைப் படமாக்கப்போகிறேன்; திரைக்கதையை எழுதி முடித்துவிட்டேன்; நானே இயக்குவது என்று முடிவு செய்துள்ளேன்; அதில் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நீங்க நடிக்கணும் என்றார். எந்தப் பாத்திரம் என்று கேட்டேன். பாத்திரத்தின் பெயரைச் சொன்னார். சொல்லிவிட்டு, “சாதி வேறுபாடுகளைக் குறைத்து, ஊரில் இணக்கமான வாழ்க்கைக்காகப் பேசும் ஒருவரின் பாத்திரம். நேர்மறையான அணுகுமுறை வெளிப்படும் பாத்திரம் அது. அதை நீங்க நடிக்கிறது பொருத்தமா இருக்கும்” என்றார். நடிப்புதானே? எதிர்மறையான பாத்திரம்னாலும் நடிக்கலாம்; அந்தப் பண்ணையார் பாத்திரத்தைக் கூட எனக்குத் தரலாம் என்று கேட்டேன். சிரித்துக்கொண்டே ‘பார்ப்போம்’ என்று சொன்னார். அந்தத் திரைக்கதையும் படமாக்கும் முயற்சியும் நிறைவடையவில்லை. அதேபோல் ஆண்டாளை மையமாக வைத்து எழுதத்தொடங்கிய நாவலும் முற்றுப்பெறவில்லை.
ஆறாம் திணை- காலச்சுவடு இதழ்கள் இணைந்து நடத்திய ‘தமிழினி -2000’ மாநாட்டில் ‘தமிழில் தலித் இலக்கியம்’ என்றொரு அமர்வு இருந்தது. அதில் தமிழ்நாட்டுத் தலித் இலக்கியம், இலங்கையில் தலித் இலக்கியம் என இரண்டு கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. இலங்கையில் தலித் இலக்கியம் என்ற கட்டுரையை வாசிக்க இலங்கையின் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ந.ரவீந்திரன் வந்திருந்தார். தமிழ்நாட்டுத் தலித் இலக்கியம் குறித்து நான் வாசித்த கட்டுரையில், ‘ தமிழ்நாட்டுத் தலித் தலித் இலக்கியம் அம்பேத்கர் நூற்றாண்டுக் கொண்டாட்டத்திற்குப் பின்னால் எழுச்சியாக மாறியது என்றாலும் மார்க்சியத்தை உள்வாங்கிய எழுத்தாளர்களின் புனைகதைகளே முன்னோடியானவை என்று குறிப்பிட்டிருந்தேன். புனைகதைகளான சிறுகதை, நாவல் என்ற இரண்டு வகைப்பாட்டிலும் பூமணியையே முதலாமவர் என்று குறிப்பிட்டுவிட்டு அவரது பிறகும் வெக்கையும் தலித் நாவல்களின் முன்மாதிரிகள் என்பதாகக் குறிப்பிட்டிருந்தேன். இதனை அரங்கிலேயே கண்டித்தார் பூமணி. இலக்கியத்தைச் சாதி அடிப்படையில் பிரித்து அடையாளப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை என்ற வாதத்தை வெளியே நடந்த உரையாடலிலும் கோபத்துடன் முன்வைத்தார். ஆனாலும் தொடர்ந்து பேசலாம் என்பதையும் ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து பேசவும் செய்தோம்.
இலக்கியத்துறை மாணவனான எனக்குப் பட்டப்படிப்பின் முதலாம் ஆண்டிலேயே தமிழ்ப் புனைகதைப் பரப்பை அறிமுகப்படுத்தியது மதுரை அமெரிக்கன் கல்லூரி. இளம் ஆசியராக இருந்த சாமுவேல் சுதானந்தாவின் நெருக்கமான உரையாடல்கள் வழியாகவே தொடர்ந்து வாசிப்பவனாகவும் கணையாழி, தாமரை, போன்ற இதழ்களில் எழுதக்கூடியவனாகவும் மாறினேன். அந்தக் கல்லூரியே எனக்கே எனக்கான இலக்கியங்களை வாங்கிக் கொள்ளும் வாய்ப்பைத் தந்தது. அப்படி வாங்கிய முதல் சிறுகதைத் தொகுப்பு பூமணியின் ‘ரீதி’. கல்லூரியில் படிக்கும் காலத்தில் நூல்கள் வாங்கவெல்லாம் பணம் கிடைக்காது. கிடைக்கும் பணத்தில் இலக்கிய இதழ்கள் மட்டுமே வாங்குவேன். வார இதழ்களான ஆனந்தவிகடன், குழுதம் போன்றன விடுதி நூலகத்திற்கும் கல்லூரி நூலகத்திற்கும் வந்தன. ஆனால் கணையாழி, தீபம், தாமரை போன்றன அங்கு வாங்குவதில்லை. அதனால் பெரியார் பேருந்து நிலையத்துக்குள் நுழையும் இடத்தில் அவற்றை வாங்குவதற்காக மாதத்தின் முதல்வாரம் போய்வருவேன்.
மொத்தமாக மூன்று புத்தகங்கள் வாங்குவதற்கான தொகை பட்டப்பிடிப்பில் கடைசியாகக் கிடைத்தது. இளங்கலைத் தமிழில் ஐந்து பருவத்திலும் சேர்த்து முதல் மதிப்பெண் வாங்கிய மாணவருக்கு அந்த ஆண்டுக் கல்லூரி ஆண்டுவிழாவில் துறையின் சிறந்த மாணவர் என்பதற்காகப் பரிசொன்று தருவார்கள்.அப்பரிசுக்கான தொகை ரூ.25/- துறைத்தலைவர் அறைக்கு அழைத்த பேரா.கி.இளங்கோவன், “மீனாட்சி புத்தக நிலையத்திற்குச் சென்று 25 ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்கிப் பரிசுப்பொதியாகக் கட்டி எடுத்துக்கொண்டு வந்து என்னிடம் தந்துவிடு. ரசீதைக் கொண்டுபோய் நிதித்துறையில் கொடுத்து பணம் வாங்கிக் கொள் என்று சொல்லிவிட்டார். மீனாட்சி புத்தக நிலையத்தில் 25 ரூபாய்க்குள் வாங்கிய மூன்று புத்தகங்களும் அன்னம் - அகரம் வெளியீடுகள்.
1. பூமணியின் ரீதி
2. கி.ராஜநாராயணனின் வேட்டி
3. அப்துல் ரகுமானின் பால்வீதி
மூன்று புத்தகங்களிலும் முதல் பரிசு எனச் சான்றிதழ் ஒட்டி ஒரே கட்டாகக் கட்டி ஆண்டுவிழாவில் வழங்கினார்கள். வழங்கியவர் சிறப்பு விருந்தினராக வருகை தந்த நீதிபதி.
*********
புதுச்சேரி நிகழ்கலைப்பள்ளி மாணவர்களுக்காக நவீனக் கவிதைகள் மற்றும் புனைகதைகளிலிருந்து நாடகப்பிரதிகளை உருவாக்கிக் கொண்டிருந்த காலகட்டம். புதுச்சேரிக்குப் போவதற்கு முன்பே எழுதிப்பார்த்தது சுந்தர ராமசாமியின் பல்லக்குத் தூக்கிகள். போன பின்பு புதுமைப்பித்தன், பிரபஞ்சன், திலீப்குமார், கோணங்கி ஆகியோரின் சிறுகதைகளிலிருந்து ஆக்கிய நாடகப் பிரதிகள் சிலவற்றை மாணவர்கள் மேடையேற்றம் செய்தார்கள். நானும் செய்தேன்.
சிறுகதைகளைத் தாண்டி நீண்ட கதையொன்றை மூவங்க நாடகமாக ஆக்கலாம் என்று நினைத்தபோது முதலில் வந்தது ஜெயகாந்தனின் ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன. கதை நாடகமாக்கப்பட்டது. முடித்தவுடன் அவரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று நினைத்து மதுரையில் உள்ள அவரது பதிப்பாளர் செல்லப்பனிடம் சொன்னேன். எழுத்துப்பிரதியைத் தருகிறேன் என்றேன். அவர் கேட்டுச் சொல்வதாகச் சொன்னார். பல மாதங்கள் கழித்து நாடகமாக்கலாம்; மேடையேற்றலாம். அச்சிடக் கூடாது என்று சொல்லி விட்டார். அந்தப் பிரதி மேடை ஏறவும் இல்லை; அச்சாகவும் இல்லை. பழுப்புநிறக்காகிதங்களாக என்னிடம் உள்ளன. இப்போது வலைப்பக்கத்தில் ஏற்றி வைத்துள்ளேன்,.
அதன் தொடர்ச்சியாகவே பூமணியின் வெக்கையை நாடகமாக்கலாம் என்று நினைத்துத் திரும்பவும் வாசித்தேன். இரண்டுமூன்று முறை வாசித்தபின் நாடகமாக்குவதைவிடச் சினிமாவாக்குவதே நல்லது என்று தோன்றியது. ஒரு பயிற்சியாக நாவலை திரைக்கதையாக்கிப் பார்த்தேன். கொலையில் தொடங்கும் முதல் காட்சி தொடங்கி வேகம் வேகம் தான் நாவல். அதிர்ச்சிக் காட்சியில் தொடங்கி ஆர்வத்தைத் தக்க வைக்கும் உத்தியில் அமைந்த சினிமாத்தனம் நிரம்பிய சாதாரணக் கதை என்று கூடச் சொல்லலாம். ஆரம்பம், முரண், முரண் வளர்ச்சி, உச்சநிலை என வளரும் நாடகம் போல அல்லாமல், உச்சநிலையில் தொடங்கி அதன் விளைவுகள், பின் விளைவுகள், முன் காரணங்கள் என அமைக்கப்படும் ஆர்வமூட்டும் திரைக்கதை அமைப்பைப் போன்ற கட்டமைப்பையே வெக்கை நாவல் கொண்டிருக்கிறது.
பூமணிக்கிருக்கும் கரிசல் நிலப்பரப்பு அறிவும் ஒலிகள் குறித்த ஞானமும் மனவோட்டங்களை முன்வைக்கும் விவரணைகளும் சினிமாவில் வருமா? என்ற தயக்கம் இருந்தது. வேகத்தைத் தடுத்து நிறுத்துவதுபோல ஒரு காதல் காட்சியும் பாடலும் இருந்தால் வணிக வெற்றிக்கான வாய்ப்பு கூடும் என்று கருதினேன்.
பார்வையாளர்களைக் கொஞ்சம் விலக்கிவைத்து மென்மையும் ஆசுவாசமும் உண்டாக்கும்விதமாகச் சாகடிக்கப்பட்ட சிதம்பரத்தின் அண்ணனுக்கு ஒரு காதல் இருந்தது என்றொரு முன் நினைவுக்காட்சியை இணைக்கலாம் என்றும் தோன்றியது. இதையெல்லாம் ஒரு பத்துப்பக்கத்தில் எழுதிப் பார்த்துவிட்டுப் பூமணியைச் சந்தித்தபோது சொன்னேன். அவரது நாவலுக்குள் அதில் இல்லாத நிகழ்வொன்றைச் சொருகுவதில் அவருக்கு விருப்பம் இல்லை என்பதுபோல முகம் சுளித்தார்.
பின்னர் திருநெல்வேலிக்கு வந்து சந்தித்தபோது நீங்களே வெக்கையைப் படமாக எடுத்துவிடுங்கள் என்றேன். ஏனென்றால் கருவேலம்பூக்கள் என்றொரு படத்தை தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகத்தின் நிதியுதவியில் எடுத்திருந்தார். அதில் நடித்த அனுபவத்தை நாசர் ஒருமுறை சொல்லியிருந்தார்.கலைராணியும் நடித்திருப்பதாகச் சொன்னார். இன்னும் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. தமிழ்நாடு பார்க்காத படங்களில் அதுவும் ஒன்று.
ஒரு சந்திப்பில் வெக்கை நாவல் படமாகப் போகிறது என்று சொன்னார். யாரிடம் தந்திருக்கிறார் என்று சொல்லவில்லை. அதற்கிடையில் வெக்கை என்ற பெயரில் படமொன்றும் வந்துவிட்டது. நாவலை எடுத்தால் வேறு பெயர்தான் வைக்க வேண்டும். என்ன பெயர் வைத்தால் பொருந்தும் என நான் யோசித்ததுண்டு. இந்திரா பார்த்தசாரதியின் இரண்டு கதைகள் இப்படிச் சொந்தப் பெயரை இழந்தன. குருதிப்புனல் நாவலைப் படமாக்கிய ஸ்ரீதர் ராஜன் கண் சிவந்தால் மண் சிவக்கும் என்று பெயர் சூட்டினார். பின்னர் குருதிப்புனல் என்ற பெயர் கமல்ஹாசனின் சினிமா ஒன்றுக்குத் தலைப்பானது. இ.பா.வின் குறுநாவலான உச்சிவெயில் படமானபோது மறுபக்கம் என்ற பெயரைத் தாங்கியது.[காரணம் அதற்கு முன்பே ஜெயபாரதி உச்சிவெயில் என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி வெளியிட்டிருந்தார்.] மலையாளப் படங்களை இயக்கிய சேதுமாதவன் உச்சிவெயிலை மறுபக்கமாக்கித் தங்கத்தாமரை விருதுபெற்றார்.
பூமணியின் வெக்கை புனைகதையாக ஓர் உணர்வை உண்டாக்கி வாசகர்களுக்குக் கடத்தியிருக்கிறது. ஓர் இயக்குநர் தான் வாசித்த புனைகதைகளைப் படமாக்கும்போது அவை உண்டாக்க நினைத்த உணர்வுகளைப் பார்வையாளர்களுக்குக் கடத்த வேண்டுமென நினைக்கலாம். இல்லையென்றால் அதே வாசிப்பின் வழியாக வேறொரு உணர்வை உண்டாக்கிக் கடத்த வேண்டும் எனவும் நினைக்கலாம். இயக்குநர் வெற்றிமாறனின் அசுரனில் இரண்டும் செய்யப்பட்டிருந்தது.
*****
அவரைச் சந்தித்த நினைவுகள் போலவே அவரது நாவல்களைப் பாடமாக்கவும் படிப்பிக்கவும் எடுத்துக் கொண்ட நினைவுகளும் அலையலையாய் வந்து கொண்டிருக்கின்றன. இப்போதும் அவரது கதைகளை எடுத்து வாசித்துக் கொண்டிருப்பதில் இருக்கும் ஆர்வம் குறையவில்லை.

கருத்துகள்