நினைவுகளை எழுதுதலும் அழித்தலும் - தலித் இதழின் மூன்று சிறுகதைகள்

 ஆகஸ்டு,2026 தலித் இதழில் மூன்று சிறுகதைகள் அச்சாகியுள்ளன.

              1. கரடிகுளம் ஜெயப்பாரதிப்ரியாவின் 'பால்ய சோகம்',

        2. பிரதிபா ஜெயச்சந்திரனின் 'தாத்தா குறிப்புச்சிட்டைகளின் குழல் டப்பா',

3. க.மூர்த்தியின் 'பாறையில் முளைத்துவரும் அப்பாவின் தெத்துப்பல்' .

நினைவுகளை எழுதுதல்

கடந்த காலத்தின் நினைவுகளுக்குள் பயணிப்பது பெரும்பாலான புனைகதைகளின் பொதுக்கூறு என்றாலும் தொடக்கக்காலத் தலித் புனை கதைகள் கடந்த காலத்தை எழுதுவதையே தலித் இலக்கியத்தின் அழகியலாக முன்வைத்தன. தமிழில் மட்டுமல்லாமல் இந்திய மொழிகள் பலவற்றில் எழுதப்பெற்ற தலித் தன்வரலாறுகளின் பெருக்கத்தை நினைவுபடுத்திக் கொண்டால் இந்தக் கூற்றின் உண்மை புரியவரலாம். 

 இம்மாதத் தலித் இதழில் வந்துள்ள மூன்று கதைகளும் கடந்த காலத்திற்குள் பயணிக்கும் சொல்முறைமையையே கொண்டுள்ளன. மூன்று கதைகளில் பால்யசோகம் கதை தலித் இதழில் அச்சாகத்தக்க சிறுகதையாக இல்லை. " விருப்பமான முறையில் தனது தலைமுடியை வெட்டிக்கொள்ள நினைக்கும் சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்றாத தந்தையின் கோபமும் மகனைத் தண்டிக்கும் நடப்பிலும் செயல்படும் 'சாதிய ஒதுக்கல்' குறித்து எழுத நினைத்தாலும் அதனை மையப்படுத்தாமல் விலகிவிலகிச் செல்கின்றது. அதன் வழியாகக் கதாசிரியர் கரடிகுளம் ஜெயப்பாரதிப்ரியா வாசிப்பவர்களிடத்தில் உருவாக்க நினைத்த முதன்மை உணர்வு நகைச்சுவை என்பதாகத் தோன்றுகின்றது.

தாத்தா குறிப்புச்சிட்டைகளின் குழல் டப்பா என்ற தலைப்பில் பிரதிபா ஜெயச்சந்திரன் எழுதியுள்ள கதையில் இரண்டு பகுதிகள் உள்ளன. தாத்தாவின் குழல் டப்பாவிலிருந்து எடுத்து வாசிக்கப்படும் குறிப்புச்சிட்டைகள் ஒவ்வொன்றும் அவரது பிள்ளைகள் எதிர்கொண்ட ஒதுக்கல்களையும் மீண்டெழுந்த மனவோட்டத்தையும் தனித்தனியாகச் சொல்வதற்கான உத்தியைக் கொண்டிருக்கின்றது. அந்த உத்தி பொதுவான கதைசொல்லல் உத்திக்குப் பதிலாகத் தொடர்ச்சியற்ற நிகழ்வுகளைத் தனித்தனியாக விவரிக்கும் உத்தி. இத்தகைய உத்தியிலேயே மொத்தக்கதையையும் எழுதியிருந்தால் நிகழ்காலத்தை இணைத்துப் பேசியதாக மாறியிருக்கும். முன்பகுதியில் எழுதப்பட்டுள்ள தேவைக்கு அதிகமான விவரிப்புகள் வாசிப்பவர்களை விலகிவிடச் செய்வதாக அமைந்துள்ளது.

'பாறையில் முளைத்துவரும் அப்பாவின் தெத்துப்பல்'
என்ற தலைப்பிட்ட கதையின் சொல்முறை அண்மைக்கால நிகழ்வொன்றைத் தொன்மமாக்கும் மொழிநடையையும் விவரிப்புகளையும் கொண்டுள்ளது. உறைகிணறு தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்ட தந்தையின் மரணத்திற்குப் பின்னிருந்த துயரத்தை விவரிக்கும் போது என்ன நடந்திருக்கும் என்பதை நேரடியாகச் சொல்லிவிடாமல், பலவிதமான ஐயங்களை எழுப்பிக் கொண்டே செல்கின்றது. அந்த மரணத்திற்குப் பழிவாங்கும் நோக்கம் மனதின் ஆழத்தில் வளர்ந்துகொண்டே வருவதைக் குறியீடாக – பாறையில் முளைத்துவரும் தெத்துப்பல்லாக உருவகித்துக் காட்டி எழுதியுள்ள சொல்முறை குறிப்பிடத்தக்க ஒன்று. அந்தச் சொல்முறை மூலம் கதையை நடப்பியல் தன்மையிலிருந்து விலக்கி ஒருவித மாயநடப்பியலுக்குள் நகர்த்துகின்றார் கதாசிரியர் மூர்த்தி. இதன் வழியாக மூன்று கதைகளில் மூர்த்தியின் கதை வாசித்தாக வேண்டிய கதையாக மாறியிருக்கின்றது.

நினைவுகளை அழித்தல்

தலித் புனைகதைகளின் அழகியலாக முன்வைக்கப்பட்ட நினைவுகளை எழுதுதல் என்பதைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டுமா? என்பதை விவாதிக்க வேண்டும் என நினைக்கின்றேன்.கடந்த காலத்தைப் பின்னோக்கி நினைத்துப் பார்க்கும் நினைவுகள் வழியாகத் தமிழ்நாட்டுக் கிராமங்களில் சாதியமும் தீண்டாமையும் செயல்பட்ட விதத்தையும், ஒடுக்கப்பட்ட மனிதர்கள் மீது செலுத்தப்பட்ட குரூரங்களையும் வெளிப்படையாக எழுத முடியும் என்பது உண்மை என்றாலும் அங்கிருந்து நகர்ந்து நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்குமான சொல்முறைமைகள் உருவாக்க வேண்டியது தேவையான ஒன்று.

தலித் இலக்கியத்தை இற்றைப்படுத்த நினைக்கும் எழுத்தாளர்கள் இந்தப் போக்கிலிருந்து நகர்ந்தாக வேண்டும். இந்திய சாதிய சமூகத்தின் கடந்த கால ஒடுக்குமுறையின் வெளிகளாகக் கிராமங்கள் இருந்தன என்பதைத் திரும்பத்திரும்பச் சொல்லவேண்டிய தேவை இருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதன் தொடர்ச்சியாக நிகழ்காலத்து வாழிடங்களிலும் பணியிடங்களிலும் நேரடியான ஒதுக்கல்களும் மறைமுகமான சீண்டல்களும் நிலவுகின்றன என்பதை எழுத வேண்டும். அத்தோடு அவற்றிற்கெதிராக உரிமைக்குரல்கள் எழுப்பப்படுகின்றன என்பதுவும், எதிர்ப்புணர்வும் அத்துமீறலும் நடக்கின்றன என்பதும் பேசப்பட வேண்டும். அவற்றை எழுதுவதற்குக் கடந்தகாலத்தை விவரிக்கும் சொல்முறையிலிருந்து விடுபட வேண்டும். அதற்குத் தலித் எழுத்தாளர்கள் கடந்த காலத்தை -உறைந்து கிடக்கும் நினைவுகளை அழிக்கும் உத்திகளைக் கண்டறிய வேண்டும். அங்கிருந்து புதிய புனைகதைகள் உருவாக்கப்பட வேண்டும். இந்தக் கூற்று விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருக்குறளில் கடமைகளும் உரிமைகளும்

நல்ல சினிமாவாக ஆகத்தவறிய இரண்டு படங்கள்

சாகசக்காரர்கள் எப்போதும் விமரிசனங்களுக்குச் செவிசாய்க்க மாட்டார்கள்