ஷிபு எஸ். கொட்டாரம்- எனது மாணவர்; எனது ஆசிரியர்

வாழும்போது புகழ்பட வாழ்தல்:
------------------------------------------
ஷிபு எஸ். கொட்டாரம் என்னும் அரங்கியலாளன்
---------------------------------

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளியில் நான் ஓராண்டுக்கு முன்னால் இணைந்தேன்; அவன் ஓராண்டுக்குப் பின்னால் சேர்ந்தான். ஓராண்டு இடைவெளி மட்டுமல்ல. அவன் சேர்ந்தது மாணவனாக; நான் இணைந்தது விரிவுரையாளராக. ஆனால் அவன் வந்தது தொடங்கி எங்களை ஆசிரிய -மாணவ உறவில் வைத்துக்கொள்ளவில்லை. இருவரும் கற்பிப்பவர்களாகவும் கற்பவர்களாகவுமே சேர்ந்து பயணித்தோம்.
அண்மையில் (07-080-2026) இந்த உலகத்தில் அவனது காலம் முடிந்துவிட்டது. திருச்சூர் நாடகப்பள்ளியின் துறைத்தலைவராக இருந்தபோது அந்த மரணம் நிகழ்ந்துவிட்டது. தோன்றிற்புகழொடு தோன்றுக என்பதைவிடவும் வாழும்போது புகழ்பட வாழவேண்டும் என்பதற்கு அவன் உதாரணம். அவனது நாடகவியல் பங்களிப்பைக் கொண்டாடும் விதமாகக் கேரள அரசாங்கம் மரியாதை செய்து அனுப்பியிருக்கின்றது. புதுச்சேரி நாடகப்பள்ளியும் தனது முன்னோடி மாணவனுக்கு நல்லதொரு அஞ்சலியைச் செலுத்தியிருக்கின்றது. அத்துறையில் கற்றுத் தொடர்ந்து அரங்கவியல் செயல்பாட்டில் உள்ள கோபியும் விரிவான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கின்றார். அந்த நேரத்தில் நான் இந்தியாவுக்குள் இல்லை; இருந்திருந்தால் திருச்சூர் சென்று அந்தக் கூட்டத்தில் இருந்திருப்பேன். அந்த மனக்குறையைப் போக்கிக் கொள்ள இந்த நினைவுக்கட்டுரையை எழுதி ஆறுதல்பட்டுக்கொள்கின்றேன்.

 ஆகஸ்டு 7- ஆம் தேதி பிற்பகலில் இலங்கையின் பண்டாரநாயக விமான நிலையத்தில் இறங்கிய போது, அலைபேசிக்கான இணையத்தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது என்பதைக் காட்டியது. இரவுகளில் தங்கும் அறைகளில் கிடைக்கும் இணையத்தொடர்பை மட்டும் பயன்படுத்தினால் போதும்; வெளியே சுற்றிப் பார்க்கும்போது இணையத்தொடர்பு வேண்டாம் என்று முடிவு செய்து கிளம்பியிருந்தேன். அதனால் ஷிபு இறந்துவிட்டான் என்ற தகவல் இரவு 8 மணிக்குப் பின்னர் தான் தெரியவந்தது.புதுவை சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப் பள்ளியின் முன்னால் மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்துள்ள வாட்ஸ் அப் குழுமத்தில் சிபுவிற்கு அஞ்சலி செலுத்தும் பதிவுகள் பலவும் நிரம்பியிருந்தன.அதில் ஒரு பதிவு ஆகஸ்டு 10 ஆம் தேதி அவரது இறுதிப் பயணம் நடக்கும் என்று தெரிவித்தது. நானும் ஒரு குறிப்பொன்றை எழுதிப் பதிவு செய்துவிட்டு ஒதுங்கினேன். எனது நட்பிலிருக்கும் இருக்கும் மலையாளிகளின் அஞ்சலிக்குறிப்புகளை முகநூல் காட்டியது. மலையாளத்தில் எழுதப்பட்ட அஞ்சலிக்குறிப்புகள் நீண்ட குறிப்புகளாக இருந்தன. திருச்சூர் நாடகப்பள்ளியோடு அவனுக்குள்ள தொடர்பையும், மலையாள நாடகத்திற்குச் செய்துள்ள பங்களிப்புகளையும் குறிப்பிட்டு எழுதியிருந்தார்கள். தமிழ்நாடகக்காரர்கள் சிலரும் எழுதியிருந்தார்கள். அலைபேசியில் நீண்ட பதிவுகள் எழுதுவதில்லை என்பதால் அமைதியாக நினைவுக்குள் அலைந்துகொண்டிருந்தேன்.


‘ஐயா(Sir..)’ .. என்ற விளியுடன் உள்பெட்டியில் கவிராசு சுதர்சன் தொடர்பில் வந்தார். அவரோடு எப்போதும் எழுத்து மூலமே உரையாடுவேன். பயணத்தில் அதிலும் அவரது சொந்த ஊரில் இருப்பதால் அழைத்துப் பேசிவிட நினைத்து அழைத்தேன். தழுதழுத்த குரலில் ‘ஷிபு மாஸ்டர் இறந்துவிட்டார்’ என்று சொன்னார். சுதர்சன் இலங்கையின் மலையகத்தைச் சேர்ந்தவர்; மட்டக்களப்பு விபுலானந்தர் அழகியல் கற்கை நிறுவகத்தில் இளங்கலை நாடகம் பயின்றவர். அவரது அழைப்பின் பேரில் மலையகப் பள்ளி மாணவர்களுக்காக 2019 இல் நாடகப்பட்டறையும் நாடகம் குறித்த விவாத அரங்கும் செய்துள்ளேன். இளங்கலைக்குப் பின்னர் பள்ளி ஆசிரியராகச் சேர்ந்து சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டு முதுகலை நாடகம் பயிலவேண்டும் என்ற ஆர்வத்தில் திருச்சூர் நாடகப்பள்ளியில் முதுகலை நாடகம் படிக்க வந்துள்ளார். படிப்புக்கும் விண்ணப்பித்த காலத்திற்கும் இடையேயுள்ள இடைவெளி காரணமாக இந்திய- இலங்கை அரசின் ஒப்பந்தப்படி கிடைக்கும் இந்திய அரசின் உதவித்தொகை கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் திருச்சூரில் சேர்ந்திருக்க முடியாது. ஒன்றிய அரசின் பட்டியலில் அந்த நிறுவனம் இல்லை

சுதர்சனின் ஆர்வத்தைச் சொன்னதும், ‘வரச்சொல்லுங்கள் நான் பார்த்துக்கொள்கின்றேன்’ என்று சொல்லிப் பொறுப்பேற்றுக் கொண்டது ஷிபு. இருவரையும் சந்திக்கத் திருச்சூர் வருவேன்; திருச்சூர் நாடக விழாவையொட்டி எனது வருகை இருக்கும் என்று சொல்லி இருந்தேன். இனி இருவரையும் ஒன்றாகத் திருச்சூரில் பார்க்க முடியாது. தமிழ்நாட்டில் இருந்திருந்தால் ஷிபுவின் இறுதி அஞ்சலிக் கூட்டத்தில் கலந்துகொள்ளும்பொருட்டுத் திருச்சூர் போயிருக்கலாம். இலங்கைக்குள் இருப்பதால் உடனே போகவும் முடியாது. இதைச் சுதர்சனிடம் சொல்லிவிட்டுத் திரும்பவும் நினைவுக்குள் மூழ்கிவிட்டேன். அந்த நினைவுகளை விவரித்து நீண்டதொரு கட்டுரையை எழுதவேண்டும் என்று சொன்னது மனசு. ஆனால் மடிக்கணினியையும் இந்தப் பயணத்தில் எடுத்துப் போகவில்லை. அதனால் அந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கவில்லை.

ஒரு நினைவஞ்சலிக்கட்டுரையை உடனடியாக எழுதுவதில் என்ன பயன் ஏற்படப்போகின்றது. கட்டுரையில் எழுதப்படுபவர் வாசிக்கப்போவதில்லை. பத்துநாள் கழித்து எழுதும் இந்தக் கட்டுரையை ஷிபு. எஸ்.கொட்டாரம் வந்து வாசித்துக் காட்டச் சொல்லப்போவதில்லை. ஆம்; ஷிபு வாசித்துத்தான் காட்டச்சொல்வார். ஷிபுவுக்கு, தமிழை எழுத்துக்கூட்டி வாசிக்க முடியும்; ஆனால் வேகமாக வாசிக்க முடியாது. அதனால் தனக்குத் தேவையான செய்திகள், கட்டுரைகள் தமிழில் இருந்தால் என்னிடம் கொடுத்து வாசித்துத்தான் காட்டச் சொல்வார். வாசித்ததைக் கேட்டு அப்படியே மலையாளத்தில் எழுதிக்கொள்வதுண்டு. நானும் அப்படித்தான் ஷிபுவின் மலையாள வாசிப்பைக் கேட்டுத் தமிழில் எழுதிவிடுவேன். இருவரும் மாறிமாறி வாசித்துக் காட்டியும் நாடகங்கள் செய்தும் கழித்த ஆண்டுகள் ஏழு (1990-97). பாண்டிச்சேரியில் இருந்த அந்த ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவ்வப்போது சந்திப்பதும், அலைபேசியில் பேசிக்கொள்வதும் தொடர்ந்தது .
 
ஷிபு எஸ்.கொட்டாரம் முதுகலை நாடகம் படிக்க வந்த ஆண்டு 1990. நான் விரிவுரையாளராகப் போனது 1989 ஜூலை முதல் தேதி. நானும் மறைந்த பேராசிரியர்- கலைஞர் கே.ஏ.குணசேகரனும் ஒரே நாளில் புதுவைப் பல்கலைக்கழகப் பணியில் சேர்ந்தோம். அவர் இணைப்பேராசிரியராகச் சேர்ந்தார். இருவரும் பொறுப்பேற்றுக் கொண்ட பின்பே நாடகம் முதுகலை தொடங்கப்பட்டது. அதில் சேர்ந்து படிக்க வந்த முதல் அணி மாணவர்களில் ஒருத்தர் ஷிபு எஸ். கொட்டாரம். அவரோடு திருச்சூரிலிருந்து வந்த இன்னொரு மாணவர் மனுஜோஸ். (இப்போது ஆலா என்றொரு நாடகப் பயிற்சிக்களத்தை நடத்தி வருகின்றார்.) மனுவும் ஷிபுவும் வந்து சேர்ந்த ஒருமாதத்திற்குள் என்னிடம் பிரியமானவர்களாக மாறிவிட்டார்கள். அதற்குக் காரணம் மலையாள கலை, இலக்கியம், அரசியல் என விவாதிக்கின்றவனாக இருந்தேன் என்பதுதான். எங்களுக்குள் பொதுவாக இருந்த இரண்டு பெயர்கள் ஜி.சங்கரப் பிள்ளையும் சே.ராமானுஜமும் திருச்சூரில் நாடகப்பள்ளியைத் தொடங்கியவர் ஜி.சங்கரப்பிள்ளை; அவருக்குத் துணையாக இருந்து மாணாக்கர்களை உருவாக்கியவர் சே.ராமானுஜம். டெல்லியின் தேசிய நாடகப்பள்ளியில் படிப்பை முடித்த தமிழ்நாட்டுக்காரர். இருவருமே மதுரை நிஜநாடக இயக்கத்தோடு நெருக்கமாக இருந்தவர்கள். அதனால் இவ்விருவரையும் அவர்கள் அறிவதற்கு முன்பே நான் அறிந்திருந்தேன்; ஜி. சங்கரப்பிள்ளையின் நாடகங்களை இயக்கிய சே.ராமானுஜத்தின் நாடகங்கள் சிலவற்றில் நடிகனாகப் பங்கேற்ற அனுபவம் எனக்கிருந்தது. அத்தோடு அவர்கள் பேசும் மலையாளத்தைப் புரிந்து கொள்பவனாகவும் இருந்தேன்; நான் பேசும் தமிழை அவர்களும் புரிந்துகொள்வார்கள். தமிழும் மலையாளமும் வேறுவேறு மொழி என்ற பேதம் எங்களிடையே இருந்ததில்லை.

*****

புதுச்சேரி நாடகப்பள்ளியில் எனது இயக்கத்தில் மேடையேறிய முதல் நாடகம் பிரபஞ்சனின் அகல்யா. அந்த நாடகத்தின் மையவிவாதமே இந்திரன் -அகல்யா காதலும் அதற்கு விதிக்கப்பட்ட தடையும் என்பதுதான். அகல்யாவின் காதல் கௌதமனோடு நடந்த திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்தது என்ற நிலைபாட்டுடன் தனது பனுவலை எழுதியிருந்தார் பிரபஞ்சன். ராமனின் கால்பட்டு ‘சாபவிமோசனம்’ பெறும் அகல்யாவை வாழ்த்தும் விஷ்வாமித்திரர் ‘தீர்க்க சுமங்கலி பவ’ எனச் சொல்லி வாழ்த்துவார். அப்போது அகல்யா “யாரோடு? இந்திரனோடா? கௌதமனோடா?” என்று கேட்பாள்.

புதுச்சேரி கம்பன் விழா மேடையில் ராமாயணம் தொடர்பில் ஒரு நாடகம் வேண்டும் என அதன் செயலர் அருணகிரி, நாடகப்பள்ளியின் தலைவர் இந்திரா பார்த்தசாரதியிடம் கேட்டபோது அங்கிருந்த ஆசிரியர்களிடம் யாராவது ஒருவர் பொறுப்பெடுத்துக் கொள்ளுங்கள் என்றார். கே.ஏ.குணசேகரன்,வ.ஆறுமுகம் ஆகியோர் எந்தவிதப் பொறுப்பும் எடுத்துக்கொள்ளத் தயாரில்லாத நிலையில் நான் ‘பிரபஞ்சனின் அகல்யாவை மேடையேற்றலாம்’ என்றேன். சொல்லிவிட்டு அதன் உள்ளடக்கத்தில் இருக்கும் புதுவிளக்கம் (Interpretation) மரபான ராமாயண விரும்பிகளுக்கு உவப்பானதில்லை என்பதையும் சொல்லிவிட்டேன். ‘மேடையேற்றிய பிறகு வரப்போகும் விமரிசனங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்’ என்று சொல்லி அனுமதித்தார் இ.பா.

அப்போது எழுத்தாளர் பிரபஞ்சன் நாடகத்துறையில் பகுதிநேர விரிவுரையாளராக இருந்தார். அவரிடம் இப்போதுள்ள பனுவல் குறுநாடகமாக ஒற்றை அங்கத்துடன் இருக்கின்றது. அதனை மேடையேற்றினால் அரைமணி நேரமே வரும். அதனால் இன்னொரு அங்கமாகத் தாடகை வதத்தை முன்னால் சேர்க்கலாம் என்று அதையும் நீங்களே எழுதவேண்டும் என்றேன். எழுதித்தந்தார் பிரபஞ்சன். அதையே கம்பன் விழாவில் அரங்கேற்றுவதற்காகத் தயாரித்தோம். இந்திரனாக மனுஜோஸைத் தேர்வு செய்திருந்தேன். அகல்யாவாக நடிக்க முனைவர் பட்ட ஆய்வாளர் உஷாவைத் தேர்வு செய்தேன். இருவருக்கும் நாட்டியத்தின் அடைப்படைகள் தெரியும் என்பதால் அந்தப் பகுதியை முழுவதும் நடனக்கோர்வையாக்கிச் செய்தேன். அதனால் அந்தப் பகுதி நாடகத்தின் ஆகச்சிறந்த பகுதியாக அமைந்தது. அப்படி அமைவதற்குக் காரணமாக வீணை வாசித்தவர் சேர்த்த இசைக்கோலங்கள் இருந்தன. மொத்த நாடகத்தையும் ஒரு படி உயர்த்திக்காட்டியது ஷிபுவின் பின்னரங்கக் கலையாக்கமும் ஒளியமைப்பும் . மேடையில் எந்தப் பொருளும் இல்லாமல் வானத்து வண்ணமான நீலத்தின் முன்னால் வெண்திரையை முழுமையாக நிரப்பிக் குறுக்கு வாட்டில் சிவப்புக் கயிறொன்றில் தகிக்கும் சூரியக்கதிரின் படிமம் ஒன்றை உருவாக்கித் தந்தான் ஷிபு. காதலும் காமமும் தகிக்கும் வெக்கையாக உருவகப்படுத்தப்பட்ட காட்சிப்படிமம் அது. வேலுசரவணன் தாடகையாகவும் குமரவேலுவும் ஏகாம்பரமும் லக்குவனனாகவும் ராமனாகவும் பாத்திரமேற்றனர். பாலசரவணன் ஏற்ற வேடம் விஷ்வாமித்திரர் பாத்திரம். பிரபஞ்சனின் நாடகப் பனுவல் எழுப்பிய விவாதத்தின் மீது கம்பன் கழகத்தினருக்கு உடன்பாடில்லை என்ற போதிலும் நிகழ்வின் கச்சிதத்தையும் நடிப்பையும் பாராட்டினார் அதன் செயலர் அருணகிரியார். சென்னையிலிருந்து நாடகம் பார்க்க 20 பேர் வந்தார்கள். மங்கை -அரசு தலைமையில் செயல்பட்ட பல்கலை அரங்கத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இருந்தனர். தொடர்ந்து மூன்று இடங்களில் மேடையேற்றப்பட்ட அகல்யா மூலம் எனது இயக்கம் பாராட்டப்பட்டது. அதற்குக் காரணமாக இருந்தவர்கள் ஷிபுவும் மனுவும் தான்.

*****

அகல்யாவுக்குப் பிறகு ஷிபுவும் நானும் சேர்ந்து வேலை செய்யத் தொடங்கினோம். அதில் இன்றளவும் மறக்க முடியாத ஒன்றாக இருப்பது எனது இடது மணிக்கட்டு. ஒரு நடிப்பு வகுப்பில் மனித உடலை மரமாகக் கருதி ஏறும் பயிற்சி ஒன்றைச் செய்முறையாகச் செய்து கொண்டிருந்தோம். மரபாக நின்றது ஷிபு. வியர்வை வழிந்த முதுகிலிருந்து வழுக்கி கையை தரையில் ஊன்றியவன் நான். ஊன்றிய கையின் மணிக்கட்டில் மயிர்க்கோடன்ன வெடிப்பு ஏற்பட்டது. அப்போது தொடங்கி அதிகப்பளுவான பொருட்களைத் தூக்கக்கூடாது என்பதோடு, கியர் வாகனங்களைத் தூக்கி இயக்கக்கூடாது என்று மருத்துவர்கள் தடை போட்டுவிட்டார்கள். இப்போதும் அந்த மணிக்கட்டு ஷிபுவை நினைவூட்டுக்கொண்டே இருக்கின்றது.

 


1990 களில் மரபுக்கலைகளிலிருந்து இந்திய நாடகத்தை உருவாக்குதல் என்னும் மோகினிப் பேய் இந்திய நாடகத் துறையைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது. தொண்ணூறுகளின் மத்தியில் - அநேகமாக 1993 ஆக இருக்கக் கூடும்- நானும் சிபு எஸ் . கொட்டாரமும் ஹெரால்ட் பிண்டரைப் (Harold Pinter) பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். தமிழ் நவீன நாடக்காரர்கள் பலருக்கும் கூட அந்த மோகினியிடம் காதல் இருந்த நேரம் தான். நானோ அந்தக் காதல், பெருந்திணைக் காதல் என்று நம்பியவன். சிபு எஸ் கொட்டாரத்திற்கும் அதே எண்ணம் உண்டு. இருவரும் பிண்டரைப் பற்றிப் பேசக் காரணமாக இருந்த நாடகம் பிறந்த நாள் கொண்டாட்டம் (Birthday Party) தான். அது அவரது முக்கியமான நாடகம். அந்நாடகம் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருப்பதாகவும் தமிழில் மொழி பெயர்த்து மேடையேற்றலாம் என்றும் அவர் சொன்னார். அதனைத் தனது தேர்வுக்கான தயாரிப்பாக மேடையேற்றும் எண்ணம் அவருக்கிருந்தது.

புதுவைப் பல்கலைக்கழக சங்கரதாஸ் சுவாமிகள் நாடகப்பள்ளி மாணவர்கள் தங்களின் தேர்வுக்குரிய நாடகமாகப் பலவற்றை மொழிபெயர்த்தும், தழுவியும் மேடையேற்றம் செய்வார்கள். குறிப்பாக மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட கேரள மாணவர்கள் மேற்கத்திய நடப்பியல் பாணி மற்றும் நவீனத்துவ நாடகங்களை மேடையேற்றுவதில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். அவர்களுக்கு தமிழாக்கம் செய்வதில் உதவுவது என்னுடைய வேலை. எனக்கு மலையாளம் வாசிக்கத் தெரியும் என்றாலும் வேகமாக வாசிக்கவோ, அதே வேகத்தில் மொழி பெயர்க்கவோ முடியாது. அவர்கள் நிதானமாக வாசித்துக் கொண்டே போனால் கூடவே நான் தமிழில் எழுதிக் கொண்டே போவேன். அப்படித்தான் சி.ஜே.தாமஸ் (கிரைம் எண். 27/1128), ஜி.சங்கரப்பிள்ளையின் விடுதலை, சி.கோபன்(ஷேகுவோரா) போன்றவர்களின் மலையாள நாடகங்களை மொழி பெயர்த்தேன். அந்த வேகத்தில் ஹெரால்ட் பிண்டரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தையும் மலையாளத்திலிருந்து மொழி பெயர்த்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்யலாம் என்று நினைத்ததால் அது நடக்காமலேயே போய்விட்டது.

அவரது தேர்வுக்காக உருவானதுதான் ஒரு நூற்றாண்டுக்கிழவனின் நினைவுக்குறிப்புகள். ஹெரால்ட் பிண்டரைக் கைவிட்ட நிலையில் சாமுவேல் பெக்கட்டின் புகழ்பெற்ற நாடகமான கோதாவுக்காத்திருத்தல் -வெயிட்டிங் ஃபார் கோடார்ட்- நாடகத்தைத் தமிழாக்கித் தரமுடியுமா எனக்கேட்டார். ஆங்கிலத்தில் வாசித்துப் பார்த்தபோது அவ்வளவு எளிதான வேலையாகத் தெரியவில்லை. அத்தோடு அந்த நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து ஒருவர் வைத்திருப்பதாகவும் தகவல் வந்தது. வெளி நாடக இதழ் வந்துகொண்டிருந்த நேரம் அது. அதன் ஆசிரியர் ரெங்கராஜனிடம் கேட்டபோது ஆமாம் சச்சிதானந்தனிடம் இருக்கிறது என்றார். உடனடியாக அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அதனால் பெக்கெட்டின் வேறு ஏதாவதொரு நாடகத்தை முயற்சி செய்யலாம் என்று அவரது நாடகங்களைப் பற்றிய அறிமுகக்கட்டுரையைப் படித்தேன். அதன்பிறகு சிபுவும் நானும் விவாதித்து “க்ராப்பின் கடைசி ஒலிநாடா - (Krapp's last tape)” என்ற ஒற்றையாள் நாடகத்தை மொழியாக்கம் செய்யலாம் என்று முயற்சி செய்தோம். மொழியாக்க முயற்சியின் போதே, இன்னொரு விவாதம் நடந்தது. இரண்டு உலகப்போர்களின் பின்னணியில் விரியும் அந்த நாடகத்தை அப்படியே மேடையேற்றுவதைவிட, இந்தியப்பின்னணிக்கேற்பத் தழுவி மேடையேற்றலாம் என்று அந்த விவாதத்தில் முடிவாகியது. நாடகக் கட்டமைப்பின் வழி, பெக்கெட் உருவாக்கும் தொனியை உள்வாங்கிக்கொண்டு புதிதாக எழுதப்பெற்ற நாடகமாக மாறியது. சாமுவேல் பெக்கெட் (Samuel beckett) டின் கிராப்பின் கடைசி ஒலிநாடா நாடகம், ஒற்றைக் கதாபாத்திரத்தின் குரலாக விரியும் ஒரு பனுவல்.தனது வாழ்க்கையையும் இந்த உலகத்தின் இருப்பையும் கறுப்பு வெள்ளையாகப் பார்த்துப் பயங்கொள்ளும் சொற்களால் நகரும் நாடகம் அது. கறுப்பு - வெள்ளை என்பது அவனது தன்னிலைக்குள்ளும் இருக்கிறது; அவனது புறநிலை வாழ்க்கையைக் கட்டமைக்கும் சமூகமாகவும் இருக்கிறது.

ஓரிரவு நாடகத்தை ஒரே இரவில் அண்ணாதுரை எழுதினார் என வாசித்திருந்தேன். நான் இந்த நாடகத்தை ஒரே இரவில் எழுதி முடித்தேன். பாண்டிச்சேரியின் கடல் பார்க்க இருந்த வீட்டின் கிழக்குக் கதவைத் திறந்துவைத்து, இரவு 10 மணிக்கு எழுதத்தொடங்கி, காலை 5 மணிக்கு முடித்தேன். அன்று மதியமே ஷிபு எஸ். கொட்டாரம் ஒத்திகையைத் தொடங்கி . 10 நாட்கள் ஒத்திகைக்குப் பின் மேடையேறியது. ஒளியமைப்பின் சாத்தியங்கள்வழிக் கவனத்திற்குரிய நிகழ்வாக மாறியது நாடக மேடையேற்றம்.

இன்னும் இருக்கிறேன்
நேற்று இருக்கிறேன்
இன்று இருக்கிறேன்
இன்னும் இருக்கிறேன்

என்று தொடங்கி அதே நான்கு வரியோடு முடியும் அந்த நாடகத்தை இயக்கிய சிபு எஸ். கொட்டாரம் 50 நிமிடங்கள் நிகழும் மேடைநிகழ்வாக்கினார். நூற்றாண்டுக்கிழவன் என்ற படிமம் மகாத்மா காந்தியையும் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட தனது கதைகளைச் சொன்ன எனது தாய்மாமாவின் வரலாற்றையும் இணைத்துக் கொண்டு எழுதப்பட்ட நாடகப்பனுவல். 1992 இல் பாண்டிச்சேரியில் மேடையேறிய அந்த நாடகத்தைத் தமிழில் வேறு யாரும் மேடையேற்றவில்லை. ஆனால் மலையாளத்தில் சில தடவை மேடையேற்றம் கண்டது. சிபு எஸ்.கொட்டாரம் ஒற்றை மனிதனின் குரலைக் காட்சிப்படுத்துவதற்காகப் பெயரிலியாக 6 நடிகர்களைப் பயன்படுத்தினார். ****

******

நாடகப்பள்ளியில் தனது முதுகலைப் படிப்பை(1990-1992) முடித்துவிட்டு உடனே கேரளாவிற்குத் திரும்பவில்லை ஷிபு. சில காலம் சென்னையில் இருந்தான். சென்னையின் புகழ்பெற்ற பத்மா சேஷாத்ரி பள்ளியில் பகுதி நேர நாடக ஆசிரியராகச் சேர்ந்தார். அப்பள்ளி சபாநாடகக் குடும்பமான ஒய்.ஜி.பார்த்தசாரதியின் மேலாண்மையில் இயங்கிய பள்ளி. அந்தப் பள்ளியில் ஷிபுவைச் சேர்த்துவிட்டது இளங்கோ குமரவேல். இருவரும் அந்தப் பள்ளியில் பகுதி நேர ஆசிரியர்களாக இருந்துகொண்டு சென்னையில் பெரிய அளவு நாடகங்களை மேடையேற்றும் வேலைகளைத் தொடங்கினார்கள். அப்படித் தொடங்கப்பட்ட ஒரு முயற்சி தான் பின்னர் பொன்னியின் செல்வன் சினிமாவாக மாறியது. இளங்கோ குமரவேலின் விருப்பப்பாடம் நடிப்பு. அவனுக்குப் பொன்னியின் செல்வனில் வரும் ஆதித்திய கரிகாலன் பாத்திரத்தில் நடிக்கும் ஆசை இருந்தது. மாணவனாக இருக்கும்போதே பொன்னியின் செல்வனை ஒன்றரை மணி நேரமாக வடிவமைக்க முடியுமா? என்று கேட்டதுண்டு.

குமரவேல் கேட்டபோது “நான் கல்கியின் ரசிகன் இல்லை; அதனால் பொன்னியின் செல்வனை விரும்பி வாசிக்கவும் இல்லை என்று சொல்லிவிட்டேன். அதனால் குமரவேலுவே அதனை நாடகப்பனுவலாக்கி மேடையேற்றும் முயற்சியில் இறங்கினான். அதற்கான ஒத்திகைகள் நடந்து கொண்டிருக்கும்போதே முதலில் ஒரு குறுநாடகத்தை குமரவேலுவின் வீட்டையே அரங்க வெளியாக மாற்றி ஒரு நாடகதை நிகழ்த்த நினைத்தார்கள். இந்தயோசனையைச் சொன்னவன் ஷிபு தான். கூத்துப்பட்டறையில் நாடகம்பார்க்கச் சென்ற ஒரு பயணத்தில் குமரவேலு தன் வீட்டிற்கு வரச்சொல்லி அழைத்துப் போய் அந்த வளாகத்தைச் சுற்றிக் காட்டிவிட்டு, இங்கு மகாபாரதத்தின் சில காட்சிகளை நிகழ்த்த வேண்டும்; அந்தக் காட்சிகள் நிகழ்கால அரசியலைப் படிமங்களாகவும் குறியீடுகளாகவும் கொண்டதாக இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு ஒரு பனுவலை எழுதச் சொன்னார்கள் ஷிபுவும் குமரவேலுவும். அந்த வேண்டுகோளை ஏற்று எழுதித்தந்த பனுவல் தான் ‘சதிபர்வம்’. மகாபாரத யுத்தமே மொத்தமும் கிருஷ்ணனின் சதிகளால் பின்னப்பட்ட ஒன்று என்பதாக அந்த நாடகத்தின் காட்சிகளை எழுதினேன். கிருஷ்ணனைக் கட்டியக்காரனாக்கி ‘அவனே உருவாக்குகின்றான்; அவனே நிகழ்த்துகின்றான்; அவனே அழிக்கவும் செய்கின்றான்’ என்ற கீதையின் சாரத்தை வெளிப்படுத்தும் பனுவலாக எழுதித்தந்தேன். அந்தப் பனுவல் மிகக்குறைவான உரையாடலோடு, அதிகமும் காட்சிகளின் விவரிப்பாகவே எழுதப்பட்டது. வீட்டை நாடக வெளியாக்கி உருவான நாடகத்தைப் பின்னர் மதுரையில் நிஜநாடக இயக்கத்தின் மூன்றுநாள் நாடகவிழாவில் கே.கே.நகர் மகாத்மா காந்தி பள்ளியின் வளாகத்தில் பெருங்கட்டிடங்களின் பின்னணியில் நிகழ்த்திக்காட்டினார்கள்.

பத்மா சேஷாத்ரி பள்ளிப் பணிக்காலத்திலேயே பல்கலைக்கழக மானியக்குழு நடத்தும் முனைவர் பட்டத்துக்கான தேர்வில் வெற்றி பெற்று முனைவர் பட்டத்திற்குச் சேரவேண்டும் என்ற விருப்பத்தோடு திரும்பவும் புதுச்சேரி வந்தான். அவனது முதுகலை ஆய்வுத்திட்டத்தின் நெறியாளர் நான் தான். தொல்காப்பிய மெய்ப்பாட்டியலையும் நாட்யசாஸ்திரத்தின் ரஸங்களையும் ஒப்பிட்ட ஆய்வு அது. அந்த ஆய்வின் தொடர்ச்சியில் “உடல்மொழி: வாழ்விலிருந்து நிகழ்த்துதலுக்கு” என்ற தலைப்பில் ஆய்வைத் தொடங்கினான். அந்தத் தலைப்பை வரையறை செய்து நெறியாளராக இருக்க ஒத்துக்கொண்டேன். 1993 இல் பதிவு செய்து ஆய்வைத் தொடங்கினாலும், என்னுடைய நெறியாள்கையில் அவரது முனைவர் பட்டத்தை நிறைவு செய்யவில்ல்லை. ஆய்வேட்டில் கையொப்பமிட்டு வாய்மொழித்தேர்வை நடத்தி முடித்தவர் பேரா. கே.ஏ.ஜி. தான். அதன் பின்னணியில் சில கருத்துவேறுபாடுகளும் எனது மனநிலை மாற்றங்களும் இருந்தன.

அவரது ஆய்வைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது இணையரான ஜீவாவுக்கும் எனக்கும் தலித்திய நாடகங்கள் செய்வதில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. “தலித் நாடகங்களைத் தலித்துகள்தான் செய்யவேண்டும்; தலித் அல்லாதவர்கள் செய்வதின் மூலம் தலித்துகளின் வாய்ப்பைத்தட்டிப் பறிக்கின்றார்கள்” என்றொரு குற்றச்சாட்டைப் பொதுவாக வைத்த அவர், அவருக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை நான் எடுத்துக் கொள்கின்றேன் என்று நினைத்தார். அந்த நினைப்பில் நிறப்பிரிகை ஆசிரியர் ரவிக்குமாரைத் துறைக்கு அழைத்துப் பேச வைத்ததைக் குறித்துப் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கொரு கடிதம் எழுதினார்கள். அந்தக் கடிதத்தைப் புகாராக எடுத்துக்கொண்டு என்னிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அம்முரண்பாட்டின் போது ஷிபு, தனது இணையர் ஜீவாவை ஆதரித்து விவாதித்த நிலையில், “எனது நெறியாள்கையிலிருந்து விலகிக் கொள்ளலாம்; உனக்கு விருப்பமான நெறியாளரைத் தேர்வு செய்து கொள்ளலாம் எனச் சட்டென்று சொல்லிவிட்டேன். அத்தோடு அந்த விவாதம் நின்றுபோனது. அந்த அளவுக்குப் போயிருக்கவேண்டியதில்லை என்று பின்னர் தோன்றியது.

எனது வழிகாட்டலிலிருந்து தயக்கத்தோடு விலகிப் பேரா. கே.ஏ. குணசேகரனிடம் ஆய்வாளராகத் தொடர்ந்தார். அது நடக்காமல் போயிருந்தாலும் நெறியாளர் மாற்றம் நடக்கவே செய்திருக்கும். அந்தக் காலகட்டத்தில் எனது மனம் நாடகத்துறையிலிருந்து விலகி இலக்கியத் துறைக்குச் சென்றுவிட வேண்டும் என்று நினைத்தது. அதற்காக விண்ணப்பிக்கத் தொடங்கியிருந்தேன். விண்ணப்பித்ததில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வாய்ப்பு வந்தது.நெறியாளர் மாற்றம் நடந்து ஓராண்டுக்குப் பின்னால் நான் புதுச்சேரியிலிருந்து கிளம்பி விட்டேன்.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எனது பணி நாடகத்துறையில் இல்லை; தமிழியல் துறையில். அதனால் புதுச்சேரியில் நாடகப்பள்ளி சார்ந்து ஏற்பட்ட கசப்புகளையும் முரண்பாடுகளையும் மறந்துவிடவே விரும்பினேன். நிகழ்கலைப்பள்ளி ஆசிரியர்களோடும் மாணாக்கர்களோடும் ஏற்பட்ட முரண்பாடுகளையும் கருத்து மாறுபாடுகளையும் தொடரக்கூடாது என்று நினைத்ததோடு அவர்களின் உதவி தேவைப்பட்டால் பெற்றுக்கொள்வதும், நாடகப்பள்ளிக்கு எனது உதவிகள் தேவைப்பட்டால் தரத்தயாராக இருப்பதும் குறித்துச் சொல்லிவிட்டே கிளம்பினேன். ஏழாண்டுக் காலத்து முரண்பாடுகளைப் பெரிதாக எடுத்துக்கொண்டு பேச்சு வார்த்தையை முறித்துக் கொண்டதில்லை. நெல்லையில் மாணவர்களுக்கு நடத்திய பயிற்சிப்பட்டறையில் வல்லுநர்களாக ஷிபுவும் ஜீவாவும் கலந்துகொண்டார்கள். தேர்வுக்கான புறநிலைத் தேர்வாளராகவும் சிறப்பு வகுப்புகளுக்காகவும் அழைத்தபோது போய்வந்த நாட்கள் இப்போதும் நினைவில் இப்போதும் பசுமையாக இருக்கின்றன.

புதுச்சேரி நாடகப்பள்ளியில் தனது முனைவர் பட்டத்தை முடித்த ஜீவா, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தமிழ்த்துறையில் விரிவுரையாளர் ஆனார். அந்தக் காலத்தில் ஷிபு திருச்சூருக்கு இடம்பெயர்ந்தார். இருவரும் இணைந்து தமிழில் நாடகம் தொடர்பான நூல்களை எழுதினார்கள். அதன் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசியதுண்டு. கடைசியாக இரண்டு ஆண்டுகளுக்கு (2024, ஜனவரி) முன்னால் திருச்சூர் நாடகப்பள்ளியில் நடந்த மூன்று நாள் பன்னாட்டுக்கருத்தரங்கிற்காகவும் நாடகவிழாவிற்காகவும் அழைத்தார் ஷிபு. மூன்று நாட்களும் அங்கேயே தங்கி நாடகங்கள் பார்த்து, பேசிக்களித்து, அவரது மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி மகிழ்ந்தார். அந்த மகிழ்ச்சியான நேரத்தில் தனது நாட்கள் எண்ணப்படுகின்றன என்பதையும் சொன்னார். “ஏற்கெனவே இதயம் ஒரு தடவை நின்றுவிட்டது; உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்ததால் காப்பாற்றிவிட்டார்கள். இன்னொரு முறை நின்றால் காப்பாற்ற முடியாது என்று சொல்லியிருக்கின்றார்கள்” கொஞ்சம் போதையில் சொன்ன சொற்கள் என்று நினைத்தேன். ஆனால் அந்தச் சொற்கள் மரணம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்துகொண்ட சொற்கள் என்பது இப்போது புரிகின்றது. ஷிபுவும் நானும் பேசிக்கொள்வதையும் சண்டையிடுவதையும் பார்த்தவர்கள் இருவரையும் ஆசிரியர் – மாணவர் என்று கருதியதில்லை. இரண்டு நண்பர்கள் அல்லது பகையாளிகள் மோதிக்கொள்கின்றார்கள் என்றே நினைப்பார்கள்.

****




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

சிட்டுக்குருவியின் அழகும் வல்லூறின் வலிமையும்: தேசியவாதமும் தேசிய இனங்களின் தன்னுரிமையும்