சிட்டுக்குருவியின் அழகும் வல்லூறின் வலிமையும்: தேசியவாதமும் தேசிய இனங்களின் தன்னுரிமையும்
தேசியவாதம் என்பதையும் தேசிய இனவாதம் என்பதைக் கருத்தியல் அடிப்படையில் சொல்லாடல்களாகப் பேசிக்கொண்டிருக்கின்றோம். அதனையே அனைவருக்கும் எளிதாகப் புரியும் விதமாகப் பேசுவதென்றால் ‘ நாம் வாழும் நாடு பரப்பளவில் பெரியதொரு நாடாக இருக்க வேண்டுமா? அல்லது சின்னதான நாடாக இருக்க வேண்டுமா? எனக் கேட்டு விடை காணுவதாகச் சொல்லலாம். இவ்விரு எதிர்நிலையில் எது நல்லது?
இந்தக் கேள்விக்கான விடையைத் தேடும் ஒருவருக்கு இப்போதுள்ள உலகத்தில் உள்ள நாடுகளை உதாரணங்கள் காட்டிப் பாடம் படித்துக்கொள்ள எடுத்துக்காட்டுகள் நிறைய இருக்கின்றன. பரப்பில் பெரிய நாடாக இருக்கும் ஒன்றின் குடிமக்களாக இருப்பதின் நன்மைகள் பற்றிக் கனடியர்கள் அறிவார்கள். அமெரிக்கர்களுக்கும் பெரிய அளவு வருத்தங்கள் இருந்ததில்லை. சீனர்களுக்கு இன்னும்கூடச் சொல்லும் நினைப்பு இல்லை. இந்தியர்களும் அதே நிலையில் தான் தொடர்கிறார்கள். ஆனால் சோவியத் யூனியனாக உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே அந்தப் பெரும்பரப்பு நாடு வருத்தங்களோடு இருந்தது. வாய்ப்பு கிடைத்தபோது சின்னச் சின்ன நாடுகளாக மாறிப்போனது. சின்னச்சின்ன நாடுகளாகப் பிரிந்துபோனது என்று சொல்வது ஒரு சொல்லாட்சி; சிதைந்துவிட்டது சோவியத் யூனியன் எனச் சொல்வது அதன் எதிர்ச்சொல்லாடல்.
இதற்கு மாறாகச் சின்னச்சின்ன நாடுகளாக இருப்பதின் மகிழ்ச்சியை ஐரோப்பாவின் பால்டிக் நாடுகளும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் கொண்டாடிக்கொண்டிருக்கின்றன. இத்தாலி, ஸ்பெயின், துருக்கி போன்றன வருத்தப்பட்டியலில் இருப்பவை. வளைகுடா நாடுகள் பரப்பளவு சிறியதாக இருப்பதின் நன்மைகளை அனுபவிக்கின்றன. ஆனால் ஆப்பிரிக்காவின் தேசங்கள் இரண்டுங்கெட்டான்களாக அல்லாடுகின்றன. தென்கிழக்காசிய நாடுகள் கூட சிறியதின் பலனில் சிரிக்கின்றன. ஆனால் இந்திய சிறியது கேட்கின் பெரியது நாடும்; பெரியது பார்க்கின் சிறியன தேறும் எனத் திரிசங்கு நிலையில் திண்டாடுகிறது. இந்தியாவைப் பெரும் பரப்பு நாடாக வைத்திருக்க விரும்பும் பெரும்பான்மை வாதம், இப்போது நாடாளுமன்றத்தின் பரப்பையும் எண்ணிக்கையையும் அதிகமாக்கி நாட்டின் அனைத்துப் பகுதிக்கும் பிரதிநிதித்துவத்தைச் சீராக்கி ஒற்றை நாடாக இருப்பதின் பெருமையை உலகுச் சொல்ல நினைக்கின்றது.
இந்தியத் துணைக்கண்டத்துப் பெரும் மாநிலங்கள் தனித்தனி நாடுகளானால் அடையும் துயரங்களுக்காக வளமான மாநிலங்கள் கட்டுக்குள் வைத்திருக்க
நினைக்கின்றன. பெருந்தேச ஆதரவுத்தலைமைகளை ஆதரிக்கின்றன. தொழில் வளர்ச்சி, கல்வியில் முன்னேற்றம், மனித வளத்தைப் பயன்படுத்துதல் போன்றவற்றில் வெகுமாக முன்னேறிய மாநிலங்கள் இந்தப்பரப்பளவுப் பெருமையில் சங்கடத்தில் நெளிகின்றன. அத்தோடு இயற்கையாகவே கிடைக்கும் நதிநீர், தாதுப் படிமங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதில் இணக்கம் இல்லாத நிலையில் தேசியவாதம், ஒற்றை நாடாக இந்தியாவை வைத்திருப்பதில் திணறுகின்றது. அந்தத்திணறலைச் சுட்டிக்காட்டி மாநில உரிமைகளைப் பேசும் மாநிலக்கட்சிகள் அடிப்படையான ஜனநாயக உரிமைகளை முன்வைத்துக் களப்போராட்டங்களையும் நீதிமன்றப் போராட்டங்களையும் முன்னெடுக்கின்றன. நிகழ்கால இந்திய தேசியவாதத்தின் வன்முறையான பெரும்பான்மைவாதத்தைக் கண்டு அச்சத்தில் இருக்கின்றது. அந்த அச்சத்தைத் தன்னந்தனியே முன்வைக்கும் மாநிலமாகத் தமிழ்நாடும் மக்களும் தமிழக அரசியல் இயக்கங்களும் இருக்கின்றன. இங்குதான் திரும்பத்திரும்பத் தமிழ்த்தேசியம் என்ற கருத்து விவாதப்பொருளாக ஆகிக் கொண்டே இருக்கின்றது.
நினைக்கின்றன. பெருந்தேச ஆதரவுத்தலைமைகளை ஆதரிக்கின்றன. தொழில் வளர்ச்சி, கல்வியில் முன்னேற்றம், மனித வளத்தைப் பயன்படுத்துதல் போன்றவற்றில் வெகுமாக முன்னேறிய மாநிலங்கள் இந்தப்பரப்பளவுப் பெருமையில் சங்கடத்தில் நெளிகின்றன. அத்தோடு இயற்கையாகவே கிடைக்கும் நதிநீர், தாதுப் படிமங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதில் இணக்கம் இல்லாத நிலையில் தேசியவாதம், ஒற்றை நாடாக இந்தியாவை வைத்திருப்பதில் திணறுகின்றது. அந்தத்திணறலைச் சுட்டிக்காட்டி மாநில உரிமைகளைப் பேசும் மாநிலக்கட்சிகள் அடிப்படையான ஜனநாயக உரிமைகளை முன்வைத்துக் களப்போராட்டங்களையும் நீதிமன்றப் போராட்டங்களையும் முன்னெடுக்கின்றன. நிகழ்கால இந்திய தேசியவாதத்தின் வன்முறையான பெரும்பான்மைவாதத்தைக் கண்டு அச்சத்தில் இருக்கின்றது. அந்த அச்சத்தைத் தன்னந்தனியே முன்வைக்கும் மாநிலமாகத் தமிழ்நாடும் மக்களும் தமிழக அரசியல் இயக்கங்களும் இருக்கின்றன. இங்குதான் திரும்பத்திரும்பத் தமிழ்த்தேசியம் என்ற கருத்து விவாதப்பொருளாக ஆகிக் கொண்டே இருக்கின்றது.

இரட்டை எதிர்வு
எல்லாவற்றையும் இரட்டையாகப் பார்ப்பது சிக்கலானது என்றாலும் அப்படிப் பார்க்கும்படி உண்டாகும் நெருக்கடியிலிருந்து தமிழகம் விலகி விடாமல் தவிக்கிறது. அந்தத் தவிப்பு சரியா? தவறா? என்பதை நிகழ்வுகளின் முடிவுகள் தான் சொல்கின்றன. முன்கூட்டிய கணிப்புகள் எப்போதும் தவறாகி விடுகின்றன. இதனைத் தமிழ்நாட்டின் தனித்துவம் என்று தான் சொல்ல வேண்டும். இங்கே இரட்டை எதிர்வு உருவாக்கப்படுகிறது என வாதம் செய்பவர்கள் தங்களின் கண்களுக்குப் பக்கப்பட்டை போட்டுக்கொண்டு பயணிப்பவர்களாக இருக்கலாம். இரட்டை எதிர்வு உருவாக்கப்படுகிறது என்பதைவிட இரட்டை எதிர்வாகவே தமிழ்மனம் இயங்குகிறது. அதன் வெளிப்பாடுகளை நீண்டகாலப் பிரச்சினைகளிலும் பார்க்கின்றோம்; அண்மைக்கால நிகழ்வுகளிலும் உணர்கின்றோம்.
தேசியவாதத்தைத் தொடர்ந்து கேள்வி கேட்கும் மாநிலமாகத் தமிழ்நாடு இருப்பதற்குக் காரணமாக இருப்பது தாய்மொழிப்பற்றும் அதன் வழியாக நிறுவப்பட்டுள்ள கலை, இலக்கியச்செயல்பாடுகளும், பண்பாட்டு நடவடிக்கைகளும் ஆகும். அத்தோடு தமிழ்நாட்டின் பொருளாதார வாழ்வியலுக்கு அடிப்படையாக இருக்கும் நதிநீர்ப் பங்கீடுகள் நிலவும் முரண்பாடுகளையும் சுட்டலாம். இவற்றுக்கிணையாகவே அண்மைய நிகழ்வுகளிலும் தமிழ்நாடு தனது மொழிசார்ந்த தேசியவாதத்தை – அடையாளத்தை முன்வைத்துக்கொண்டே இருக்கின்றது. அவற்றுள் முக்கியமான ஒன்றாக சல்லிக் கட்டுப் போராட்டத்தைச் சொல்லலாம்.
சல்லிக்கட்டுப் போராட்டம் தன்னெழுச்சியாக எழுந்த ஒன்று. அதனைப் போலவே ஆண்டாள் பாடல், ராஜராஜசோழன் எனப் பண்பாட்டுக் குறியீடுகள் மட்டுமல்லாமல் காவிரியில் தண்ணீர், முல்லைப் பெரியாரில் அணை, மருத்துவக் கல்விக்கான மையப்படுத்தப் பெற்ற பொதுத்தேர்வு, நாடு தழுவிய வரிவிதிப்புக் கொள்கை, சென்னையில் தொழிற்பெருக்கம், மதுரையில் ஆய்வுக் கூட மருத்துவமனை, திருப்பூரில் சாக்கடைப் பெருக்கம், வரப்போகும் கல்விக் கொள்கை, வேளாண்மையைக் கைவிட்டுவிட்டுத் தொழிற்சாலைகளைச் சார்ந்த வாழ்க்கை எனப் பொருளியல், கல்வி, உடல்நலம், சூழல் நடவடிக்கைகள் பற்றிய பேச்சு என்றாலும் இந்த இரட்டை எதிர்வு தவிர்க்க முடியாமல் உருவாகி விடுகிறது.
உருவாக்கப்படும் இரட்டை எதிர்வில் எப்போதும் ஒரு தரப்பாகப் பிராமணர்கள் இருக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதான். ஆனால் அவர்கள் பலம் வாய்ந்த தரப்பாக - கருத்தியல் பலம் வாய்ந்த தரப்பாக இருக்கிறார்கள். அந்தத் தரப்பின் முன்மொழிவுகளை விவாதிக்கும் தரப்புகளாகவே மற்றவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எடுக்க வேண்டிய சார்பைத் தீர்மானித்த இடத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமியும் அவரைப் பின்பற்றி இயக்கங்களை உருவாக்கிய அரசியல் கட்சிகளும் இருக்கின்றன.
****
வெளியே x உள்ளே
நிகழ்காலத் தமிழகத்தில்/இந்தியாவில் சிந்தித்துச் செயல்படுகிறவர்களாகக் காட்டிக்கொள்ளும் மனிதர்களின் மூளையை அலைக்கழிக்கும் கருத்துரைகள் பலப்பல. தேசியம், தேசப் பாதுகாப்பு, தேசியப் பெருமிதம், தேசியப்பண்பாடு, சமய நல்லிணக்கம் அல்லது சமயச் சார்பின்மை, பிராமண எதிர்ப்பு, சமூக நீதி, தீண்டாமை ஒழிப்பு, பெரும்பான்மை வாதம், சிறுபான்மையினர் பாதுகாப்பு, பெண்களின் விடுதலை என்பன அவற்றுள் சில. இந்த வார்த்தைகளை முன்வைத்து, இவற்றின் எதிர்வுகளாக சிலவற்றைக் காட்டிப் பயமுறுத்தி அவற்றில் எதை ஆதரிக்கிற மனிதனாக நீ இருக்கப் போகிறாய்? எனக் கேட்பது நிகழ்கால மனத்தின் புறநிலை. இந்தப் புறநிலை உண்மையிலிருந்து ஒருவரும் தப்பிவிட முடியாது.
அரசியல் தளத்தில் மட்டுமல்ல; எல்லாத்தளங்களிலும் இது செயல்பாட்டில் இருக்கவே செய்கிறது. அரசியலில் வெளிப்படையாக எழுப்பப்படும் இந்தக் குரல்கள் மற்றதுறைகளில் பதுங்கிக் கிடக்கும். தேவைப்பட்டால் கிளர்ந்தெழுந்துவிடும். இப்போதெல்லாம் இந்தியக் கிரிக்கெட் அணிக்குப் பயிற்சியாளர்களாக இந்தியர்களே நியமிக்கப்படுகின்றார்கள். துணைப் பயிற்சியாளர்கள் பிறநாட்டைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டாலும் தலைமைப்பயிற்சியாளர் இந்தியராக இருக்கும்படி முடிவுசெய்யப்படுகின்றது. ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட், கௌதம் கம்பீர் என இந்த வரிசை அண்மைக்கால வரிசை. இந்த வரிசைக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் விளையாட்டுக்காரர் கிரேக் சாப்பல் பயிற்சியாளராக இருந்தார் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அப்போது இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவராகச் சௌரவ் கங்குலி இருந்தார். அப்போது இருவருக்கும் தொடக்கநிலையில் நல்ல இணக்கம் இருந்தது. ஒரு கட்டத்தில் அணித்தேர்வில் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஏற்பட்ட கருத்து வேறுபாடு தகவல் ஊடகங்களில் ஊதிப் பெருக்கப்பட்டது. நீண்ட நாட்களாகத் தான் செய்ய வேண்டிய வேலையைச் சரிவரச் செய்யாத அணியின் தலைவர் சௌரவ் கங்குலி டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் அணிகளிலேயே திறமை குறைந்த அணியாகக் கருதப்படும் ஜிம்பாவேக்கு எதிராக ஒரு சதத்தை அடித்துவிட்டு தனக்கு எதிராக நடக்கும் சதியைப் பற்றியும் அதில் அணியின் பயிற்சியாளராக வந்துள்ள கிரேக் சேப்பல் பற்றியும் ஊடகங்களில் வாய் திறந்தார்.
அந்தத் திறப்பில் கிரேக் சாப்பில் வெளியிலிருந்து வந்துள்ளவர். அவருக்கு இந்திய அணியின் மனநிலையை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றார். அதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பயிற்சியாளர் x இந்தியாவைச் சேர்ந்த அணியின் தலைவர் என்பதாகச் சொல்லாடல்கள் உருவாக்கப் பட்டன. சௌரவ் கங்கலியின் மாநிலமான வங்காளத்திலும் (சர்வதேச மனிதனைப்பற்றிப் பேசிய கம்யூனிஸ்டுகள் ஆண்ட மாநிலம்) அதன் தலைநகரான கல்கத்தாவிலும் சேப்பலுக்கு எதிராகக் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. கங்குலிக்கு ஆதரவாகப் பேரணிகள் நடத்தப்பட்டன.
இந்தியப் பணக்காரர்களின் -உயர்சாதிக் குழுக்களின் விளையாட்டான கிரிக்கெட் இன்று வரை அவர்களின் கைகளில் தான் இருக்கிறது. அதில் ஏற்படும் சிக்கல்கள் இந்தியாவிற்கே ஏற்பட்ட சிக்கல்கள் போல ஊடகங்களில் விவாதிக்கப்படும். அந்த விவாதங்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்து விட்டுப் போகட்டும்; நமக்கென்ன வந்தது; நாம் வெறும் பார்வையாளர்கள்; அதிலும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் உட்கார்ந்து பார்த்து ரசிக்கும் பார்வையாளர்கள் என்று இருக்கலாம்தான். ஆனால் அப்படி இருக்க முடியாது என்பதுதான் இங்கே சொல்ல நினைப்பது.
வெளியே X உள்ளே வகை விவாதங்களில் உண்டாக்கப்படும் எதிர்வுகள் மிக முக்கியம். சேப்பல் அந்நியர்-கங்குலி இந்தியர் என்று எதிர்வு உருவாக்கப் பட்டது கவனிக்க வேண்டிய ஒன்று. வெளியிலிருந்து வந்த சேப்பலால் பிரச்சினை உருவாக்கப்படுகிறது என்பதாக நம்ப வைக்கப்பட்டது. தேச அளவில் நடந்த இந்தச் சொல்லாடலின் சாரம் எல்லா மட்ட விவாதங்களிலும் வெளிப்பட்டது. 1968 இல் ராஜீவ்காந்தியைத் திருமணம் செய்துகொண்டு இந்திராவின் – இந்தியாவின் மருமகளான சோனியாகாந்தி இப்போதும்கூட வெளியாள் என்றே சொல்லப்படுகிறார். அவரது மகன் ராகுல் காந்தியும் கூட முழுமையான இந்தியராக ஏற்கப்பட வேண்டியவரல்ல என்று பொதுப்புத்தியில் திணிக்கப்படுகிறது. தேசபக்தி என்ற சொல்லாடலை முன்வைத்துப் பேசும்போது சோனியாவும் ராகுலும் தேசபக்தி இல்லாதவர்கள் என்று காட்ட, அவர்களின் நாட்டடையாளம் இந்தியா அல்ல என்பதாகக் கட்டமைக்கப்படுகிறது.
இந்தியாவின் அறிவுத்திரட்சி மனிதர்களாகவும் மறைமுக ஆதிக்கத்தைச் செய்பவர்களாகவும் கருதப்படும் பிராமணர்கள் இந்தியாவின் பூர்வகுடிகள் அல்ல; வந்தேறிகள் என்றொரு கருத்து நீண்ட காலமாக இருக்கிறது. கைபர்- போலன் கணவாய் வழியாக ஐரோப்பாவின் கிழக்குப் பகுதியிலிருந்தும் மத்திய ஆசியாவிலிருந்தும் கால்நடைகளோடு வந்தவர்கள் ஆரிய இனத்தவர்கள். இங்கு வந்தபின் வடக்கிலிருந்த பூர்வ இனத்தவர்களைத் தெற்கு நோக்கி விரட்டிவிட்டு வட இந்தியாவில் பரவினார்கள் என்று கருத்தோட்டம் அழிந்துபோகாத வந்தேறிக் கருத்தோட்டமாக இருக்கிறது. ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்தக் கருத்தோட்டத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாகச் சிலர் ஆய்வு முடிவுகளைத் தந்தபோது – ஐரோப்பியத் தொடர்புக்காக மகிழ்ச்சி அடைந்த ஆரியர்கள் – பிராமணர்கள் – தங்களைத் தொடர்ச்சியாக வந்தேறிகள் என்ற குற்றவுணர்வுக்குள் தள்ளும் பின் விளைவை அப்போது சிந்திக்கவில்லை. ஐரோப்பாவை ஆட்டுவித்த நாஜிகளோடும் ஜெர்மானியர்களோடும் தங்களை இணைவைத்துப் பேசுவதில் ஆர்வம் கொண்டிருந்தார்கள் என்பதும் வரலாறுதான். வெளியிலிருந்து வந்தவர்கள் ஆட்சியதிகாரம் செய்யக்கூடாது என்று கருத்துரு எழுந்து பேயாட்டம் ஆடும் என்பதை அவர்கள் அறிந்தே இருந்தார்கள்.
சென்னை ராஜதானியாக இருந்தபோது பிராமணர்X பிராமணரல்லாதார் என்ற எதிர்வுகளின் வழித் திராவிட அடையாளம் உருவாக்கப்பட்டது. அவ்வடையாளத்தில் பிராமணர்கள் வட இந்தியாவிலிருந்து வந்தவர்கள்; திராவிடர்கள் தென்னிந்தியாவின் பூர்வகுடிகள் என்று முன்னிறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியே மொழி வாரி மாநிலங்கள் உருவான பின்பு அந்தந்த மாநிலத்தை அந்தந்த மொழி பேசும் ஆளுமைகளே ஆள வேண்டும் என்ற கருத்தோட்டம். அதன் உச்சநிலை வெளிப்பாடு நாம் தமிழர் என்ற அரசியல் கட்சி; சீமானின் ஆவேசப்பேச்சு.
பெரியார் ஈ.வே.ரா. பயன்படுத்திய கருவியைத் திருப்பிப்போட்டுப் பயன்படுத்துகிறார் என்பது மட்டுமே வேறுபாடு. பிராமணர்களைத் தமிழர்கள் என ஏற்றுக்கொண்டு, ஈ வே ரா வைத் தெலுங்கராகச் சித்திரித்து அவர் வழி வந்த திராவிட இயக்கமும் அதன் கருத்தியலும் தமிழர்களுக்கு எதிரான கருத்தியல் – வெளியார் ஆதிக்கத்தை ஏற்கும் கருத்தியல் என்று வாதிடுகிறார். அவரது நோக்கங்கள் மறைமுக நோக்கங்கள் கொண்டவை என்றும் உள் நோக்கங்கள் கொண்டனவாக இருக்கின்றன எனவும் விமரிசனத்தைச் சந்திக்கின்றன.
நாம் தமிழர் கட்சியும் அதன் தலைவர் சீமானும் தமிழ்நாட்டுத் தமிழர்களை விடவும் முதன்மையாகக் கருதுவது ஈழத்தமிழர் விடுதலையைத் தான். 30 ஆண்டுகாலப் போராட்டத்தாலும் ஆயுதப் போராட்டத்தாலும் ஈழத்தமிழர்கள் கிழக்கே ஆஸ்திரேலியா தொடங்கி மேற்கே கனடாவரை புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். முதலில் அகதிகளாக ஏற்றுக்கொண்ட பல நாடுகள் இப்போது குடியுரிமை வழங்கவும் தொடங்கி விட்டன. அவர்கள் எல்லாம் திரும்பவும் தாய்மண்ணான ஈழத்திற்குத் திரும்புவார்களா? என்பதே கேள்விக்குறி. அதே நேரத்தில் வந்தேறிகளால் நாடு சிக்கல்களை சந்திக்கின்றன என்று குரல் எழுப்பும் புதிய நாஜிக்குரல்களை ஐரோப்பிய நாடுகளில் கேட்கவும் முடிகிறது. உலகம் முழுவதும் காலனியாதிக்கத்தை ஏற்படுத்திய ஐக்கிய ராஜ்ஜியத்தின் வெள்ளையர்களைப் போல வந்தார்கள்; வென்றார்கள்; சென்றார்கள் என்று உலகத்தின் கதை முடிந்துவிடுவதில்லை.
இனங்களின் தோற்றமும் மொழிகளின் தோற்றமும் பற்றிய உலக அளவிலான ஆய்வுகள் எந்தவொரு இனமும் மொழியும் தோன்றிய நிலப் பரப்பிற்குள்ளேயே நின்றுவிட்டவை அல்ல. வெவ்வேறு காரணங்களால் பரவியுள்ளன என்கின்றன. தாவரங்களின் விதைகள் தானாகப் பரவி வெவ்வேறு நிலப்பரப்பில் விழுந்தாலும் அந்த நிலம், விழும் விதைகள் எல்லாவற்றையும் முளைக்கச் செய்வதில்லை. முளைத்த பயிர்களும் செடிகளும் வளர்ச்சி அடைந்து பலன் தருவதுமில்லை. அதனைத் தீர்மானிக்கும் சக்திகளாக மண்ணின் இயல்பும், மழை, வெயில், பனி, காற்று போன்ற குளிர்மையும் வெப்பமுமான சூழலும் காரணங்களாக இருக்கின்றன. மனிதப்பரவலுக்குக் காரணமாக உணவு தேடும் உந்துதலில் வேட்டைச் சமுதாய மனிதர்கள் நகர்ந்துகொண்டே இருந்தார்கள். நிலவுடைமை ஆட்சிக்காலத்தில் நாடு பிடித்துப் பேரரசுக் கனவுகளை நிறைவேற்றும் பெரும்போர்கள் காரணங்களாக இருந்தன. வணிக வல்லாதிக்கக் காலமான முதலாளித்துவ காலத்தில் தேவைக்கதிமாக உற்பத்தி செய்யும் பொருட்களுக்காகவும் உற்பத்திப் பொருட்களின் சந்தைக்காகவும் இடப்பெயர்வுகளும் புலப்பெயர்வுகளும் இருக்கின்றன.
பேரடையாளங்களான இனம், நிறம், மொழி ஆகியவற்றால் மட்டுமே உள்ளே x வெளியே சொல்லாடல்கள் உருவாகும் என்று நினைக்கவேண்டியதில்லை. ஜனநாயக முறையின் அடித்தளம் என்று கிராமப் பஞ்சாயத்து முறையைக் கருதும் இந்திய அரசு தமிழ் நாட்டில் நான்கு பஞ்சாயத்துக்களில்- பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம், கொட்டாக் கச்சியேந்தல்- தேர்தலை நடத்த முடியாமல் இருந்தது . தமிழ் நாட்டில் நடக்கும் அரசாங்கம் தன் அரசியல் அமைப்புக் கடமையை நிறைவேற்ற விரும்பாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தது. அப்போது அதைப் பற்றிப் பேசிய பலரும் பெரும்பான்மைக்கெதிராக சிறுபான்மையை நிறுத்துவது சரியல்ல என்பது போலப் பேசினார்கள். அந்தக் கிராமத்தவர்கள் தந்த பேட்டிகளில் வெளிப்பட்டது ஜனநாயக நடைமுறைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளாத அப்பாவித்தனம் மட்டுமல்ல; பிரச்சினைகளை உருவாக்குபவர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் தான் என்பதாகவும் இருந்தன.
பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் போன்ற பஞ்சாயத்துக்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், தலித்துக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தும் போராட்டக்காரர்களும், ஜனநாயகவாதிகளும், ஊடகங்களும் வெளியில் இருந்து வந்தவர்கள் என்றே கணிக்கப்பட்டனர். வெளியில் இருந்து வருபவர்கள் பிரச்சினைகள் உருவாக்குபவர்கள் என்று நம்புவதும், உள்ளே இருப்பவர்கள் சமரசமும் சகிப்பும் மனிதாபிமானமும் கொண்டவர்கள் என்று நம்பச் செய்யவும் முயற்சிகள் எப்போதும் தொடர்ந்து நடக்கின்றன.
ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பிருந்த குருகுலக் கல்வி உயர்வானது என்றும் ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த கல்வி முறை- மெக்காலே கல்வி முறை குமாஸ்தாக்களை உருவாக்கும் கல்வி முறை என்று பேசுவது கூட ஒர் அப்பாவித்தனம்தான். ஆனால் அதற்குள் அனைவருக்கும் கல்வி அளிக்கும் திட்டம் இருந்தது என்பதை மறைக்கின்றனர் என்பதை உணர்ந்தாக வேண்டும். அப்பாவித்தனம் ஏற்கத்தக்கதல்ல; அப்பாவித்தனத்தின் பின்னால் தான் தோன்றித்தனமும் பொதுச்சிவில் சட்டத்திற்கு ஒத்துப் போகாத சாதி ஆதிக்க மனோபாவமும் இருந்தன என்பதற்கு அந்த நான்கு கிராமங்களின் பஞ்சாயத்துத் தேர்தல்கள் தள்ளிப்போனது உதாரணங்களாக இருந்தன. சாதிச் சுவர் எழுப்பிய உத்தப்புரத்தில் கூட வெளியில் இருந்து வந்தவர்களே சிக்கல்களை வளர்க்கிறார்கள் என்று அந்தக் காலகட்டத்தில் பேசப்பட்டன. கட்சிகள், இயக்கங்கள், தலைமைகள் போன்றவற்றை முன்வைத்து மட்டும்தான் உள்ளே x வெளியே என்ற சொல்லாடல்கள் உருவாக்கப்படும் என்பதில்லை.
இலக்கியத்திறனாய்வுத் தளத்தில் கோட்பாடுகளை முன்வைத்துப் பிரதிகளைத் திறனாய்வு செய்யும்போது இவையெதுவும் இந்திய மண்ணில் வேர்கொண்டு உருவானவை அல்ல என்று புறங்கையால் ஒதுக்குவிட்டு, எழுத்தாளரின் உள்ளுணர்வை மட்டுமே பார்க்க வேண்டும் என்று வாதிப்பவர்களிடம் செயல்படுவதும் அதே சொல்லாடல்கள் தான். உள்ளுணர்வு என்பது மனிதர்களைப் புறநிலையாகப் பார்க்கக் கூடாது; அகநிலையாக மட்டுமே கணித்துப் பேசவேண்டும் எனக் கோருவதாகும். இந்து சமயத்தத்துவங்கள் மனிதர்களை ஜீவாத்மாவாக கணித்துக் கொண்டு, பரமாத்மாவை அடையச் செய்யும் முயற்சிகளே வாழ்க்கை எனப் பேசும் சொல்லாடல்களின் விரிவுகளே. கோட்பாட்டுத் திறனாய்வுகளை உருவாக்கிய மேற்கத்தியத் தத்துவங்களான மார்க்சியம், ப்ராய்டியம், அமைப்பியம், பெண்ணியம், பின் நவீனத்துவம் என எல்லாவற்றையும் வெளியிலிருந்து வந்தவை என்று ஒதுக்கிவிட்டு ‘இந்திய’ சொல்லாடல்களை ஏற்கும் மனோபாவம் கடைசியில் தேர்தல் முறையையும் அதன் வழியாக உருவாகும் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் மக்களாட்சி முறையையும்கூட வெளியிலிருந்து வந்த கருத்தியல் என்றே வாதிடத் தொடங்கிவிடும். பொதுப்புத்தி வழியாக எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்ட மனம் அதை மட்டுமா தள்ளிவிடப்போகிறது.
************
சாதியமும் தேசியமும்
டாக்டர் அம்பேத்கரின் தீவிரமான உழைப்பில் உருவான இந்திய அரசியல் சட்டம் காலப்போக்கில் இந்தியாவில் நிலவும் சாதிய வேறுபாடுகளை இல்லாமல் ஆக்கும் நோக்கம் கொண்டதாக முன்மொழிவுகளை வைத்திருந்தது. நிலவும் வேறுபாடுகளைக் களைவதற்காக இட ஒதுக்கீடு அடிப்படையிலான கல்வி, வேலைவாய்ப்பு, சட்டமியற்றும் அவைகளில் பிரதிநிதித்துவம் ஆகியவற்றை உறுதி செய்து தந்தது. ஆனால் இந்த வாய்ப்புகளை வைத்துக் கொண்டே சாதியவாதமும் பிளவுகளும் வன்முறைகளும் வளர்ந்துகொண்டே இருக்கின்றன என்பதுதான் இந்தியாவின் நிகழ்கால நடப்பியல். இதனை மறைமுகமாக வளர்க்கும் இடத்தில் இந்தியாவின் பெருந்தேசியவாதம் இருக்கின்றது; அத்தோடு இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் தேர்தல் அரசியலும் காரணங்களாக இருக்கின்றன.
இந்திய அறிவு என்பது சாதி்யை விவாதிப்பதில் தங்கியிருக்கிறது. எல்லாவகைச் சிந்தனைகளும் வெளிப்பாடுகளும் ‘சாதி’யைச் சொல்லாடல்களாக மாற்றுவதை அகத்திலும் புறத்திலும் மேற்கொள்கின்றன. கொண்டாட்டமாயினும் பெருந்துயரமாயினும் அதன் உள்ளோட்டத்திற்குள் சாதியும் அதன் இயங்குநிலைகளும் இருக்கின்றன. இல்லையென்று நினைப்பது பாவனைகள் மட்டுமே.சகமனிதனைச் சகித்துக் கொண்டு வேலைகள் செய்வதில் பாரதூரமான வேறுபாடுகள் இருப்பதாக இந்திய மனிதர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். ஜனநாயக அரசின் உறுப்பினர்களாக மாறி எண்பது ஆண்டுகள் ஆகப்போகின்றது. இப்போதும் இதுதான் நிலைமை. மக்களை அதிகாரம் கொண்டவர்கள் என்ற நம்பிக்கையைத் தரும் மக்களாட்சி / ஜனநாயகம் அதன் சாராம்ச குணமான சகிப்பு என்பதை ஏற்றுக் கொண்டவர்களாக ஆக்கவில்லை. அதனை நோக்கிய பயணத்தைக் கூடத் தொடங்கவில்லை. மக்களாட்சி அரசின் கல்வி நிறுவனங்கள், கலை இலக்கியம் உள்ளிட்டவைகளை வடிவமைக்கிற பண்பாட்டு நிறுவனங்கள், சட்டம் ஒழுங்கைப் பேணும் காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள், சட்டமன்றங்கள், இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கும் ஊடகங்கள் என அனைத்தும் சகிப்பின்மையைக் குற்றமாகக் கருதாமல் அடக்கத்தைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றன. சகிப்பின்மையின் வெளிப்பாடாக இருக்கும் இந்தியர்களிடம் அடக்கம் பற்றிப் பேசுவதில் நுண் அரசியல் செயல்படுகிறது என்பதை ஜனநாயகத்தின் மீது பற்றுக் கொண்டவர்கள் புரிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
பெரும்பான்மை இந்தியர்கள் சகிப்புக்குப் பதிலாக அடங்கிப் போகிறார்கள்; வாழ்தலுக்குத் தேவையான பொருளாதாரத் தேவை ஒரு மனிதனிடம் அடக்கத்தை உருவாக்குவதில்லை. அதற்குப் பதிலாக இயலாமையை உருவாக்கும். இயலாமை அமைதியின்மையை உருவாக்கும். அமைதியின்மை கலகத்தை அல்லது புரட்சியை உருவாக்கும். ஆனால் இந்தியர்களிடம் அப்படி நடக்கவில்லை. அவர்களிடம் தங்கியிருப்பது இயலாமை அல்ல; அடக்கம். இந்த அடக்கம் தானாக உருவாவதில்லை. உடன்பாட்டு நிலைக்குணமாக சித்திரிக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது.
அடக்கத்தை உருவாக்குவதில் எல்லா மதங்களும் விருப்பம் உடையன என்றாலும் இந்து சமயத்தின் விருப்பம் அலாதியானது. சமய நடவடிக்கைகளைத் தனிமனித வெளிகளில் மட்டுமே நிகழ்த்திக் கொண்டிருக்காமல் பொது வெளிக்குள் நிகழ்த்திப் பார்க்கும் வடிவங்களைக் கொண்டது. நம்பிக்கைகள், சடங்குகள், பலியிடல், நிவர்த்திக்கடன், விழாக்கள், களியாட்டங்கள், என எல்லாவற்றையும் தனிமனிதனின் அந்தரங்கமாக வைக்காமல் குடும்பம், தெரு, கிராமம், பங்காளிகள், சுற்றம் சூழ எனக் கூட்டத்தினருடன் நிகழ்த்துவதையே வலிறுத்துவது அதன் குணம்.சமய நம்பிக்கை தனி மனிதனின் ஆன்மீகத் தேடல் எனச் சொல்லிக்கொண்டே பொதுநிகழ்வை வலியுறுத்துவதும், பங்கேற்கச் செய்வதும் அதன் வடிவமாக இருக்கிறது.
பக்தி இலக்கியங்களிலும் அறநூல்களிலும் தனிமனிதன் - மனுஷியின் அடக்கங்கள் விதந்து ஓதப்பட்டுள்ளன. ‘அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்பது போன்ற புகழ் பெற்ற வாசகங்கள் தனிமனிதர்களின் அடக்கம் நோக்கிச் சொல்லப்பட்ட வாசகங்கள் என்று நம்புகிறோம். உண்மையில் இத்தகைய வாசகங்களும் அடக்கம் குறித்து மதநூல்கள் தரும் விளக்கவுரைகளும் தனிமனிதனை நோக்கி மட்டும் கூறியன அல்ல. குழுக்களின் அடக்கத்திற்காகவும் சொல்லப்பட்டவை. குழுக்களாக அடங்கிப் போகும் நிலையில் அடிமைகள் அல்லது தாசர்கள் பட்டம் கிடைக்கின்றன. தாசர்கள் பலவிதமாகப் பாராட்டப்படுகிறார்கள் . பாராட்டப்படும் குணமாக அடக்கம் எல்லா நிலையிலும் இருக்கிறது . அடங்கிப் போவதற்கும் சகிப்புக்கும் வேறுபாடு இருக்கிறது. அடங்கிப்போவதைக் கொண்டாடும் பனுவல்கள் விதந்துரைக்கப்படுகின்றன; வி்ற்பனைச் சரக்காகின்றன; உள்வாங்கப்பட்டு விலையாகின்றன. அதன் மறுதலையில் அடங்காமை ஒதுக்கப்படுதலை எதிர்கொள்கின்றன.
பெரும்பான்மை வாதம் என்னும் சொல்லாடல்கள்
இந்தியப் பெரும்பான்மைவாதம் என்பது அறியப்பட்ட சமய, மொழி, இன, பெரும்பான்மைவாதமாக மட்டும் இல்லை. மெல்லமெல்ல நகர்ந்து நடுத்தர வர்க்கம் என்னும் பெரும்பான்மை வாதமாக மாறிக்கொண்டிருக்கிறது. சரியாகச் சொல்வதானால் இந்தியாவில் நடுத்தரவர்க்கம் பெரும்பான்மை வர்க்கம் கூட இல்லை. இன்னும் கிராமங்களில் வாழும் இந்தியர்களே அதிகமானவர்கள். ஆனால் அவர்களையும் நடுத்தரவர்க்க மனப்பான்மைக்குள் கொண்டு வரும் வேலையை ஊடகங்கள் செய்து கொண்டிருக்கின்றன. அம்மனப்பான்மை கல்வி நிறுவனங்கள், மருத்துவ நிலையங்கள், போக்குவரத்துக்கழகங்கள், வங்கிகள் போன்றனவற்றை அரசு நடத்தும்போது சேவை நிறுவனங்களாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. சமநிலைத் திறன் வளர்ச்சிகள் முன்வைக்கப் படுகின்றன. சமநிலைப் பார்வைகள் தேவை என்பதும் வலியுறுத்தப்படுகின்றன.
இந்த எதிர்பார்ப்புகளும் வலியுறுத்தல்களும் தனியார் நிறுவனங்கள் பற்றிய பார்வைகளாக இல்லை. தனியாரும் தனியார் அறக்கட்டளைகளும் நடத்தும்போது சேவைக்குப் பதிலாக லாபம் அடைவதற்கான உரிமை இருப்பதாக ஏற்றுக்கொள்கிறது பொதுமனம். வேலை வாய்ப்புகள், அனுமதிகள், ஒப்பந்தங்கள் வழங்கும்போதும் தனியார் நிறுவனங்கள் பற்றிக் கண்டுகொள்ளாத பொதுமனம் அரசு நிறுவனங்கள் மீது கவனம் செலுத்திப் புகார்ப் பட்டியலை வாசிக்கின்றது. இருவேறுபட்ட பொதுமனப் பார்வையின் சிக்கல்களின் பின்னணிகள் அறியாமையின் வெளிப்பாடுகளே.
இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் முழுமையும் தனியார் நிறுவனங்கள் அல்ல. அவை நிலமாக, மானியமாக, சம்பள உதவியாக, இலவசக் கருவிகள் வழங்கலாக என அரசிடமிருந்து பெறும் உதவிகள் பலவிதமானவை. இவைகளை வழங்கும் பொறுப்பில் உள்ள அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் அமைச்சர்களை நேரடியாகக் கவனித்துக் கொடுக்க வேண்டியனவற்றைக் கொடுத்துப் பெற வேண்டியனவற்றைப் பெற்றுக்கொள்கின்றன. பார்க்க வேண்டியவர்களைப் பார்ப்பதற்கும் கவனிக்க வேண்டியவர்களைக் கவனிப்பதற்கும் கணக்கில் வராத -கணக்கில் காட்டாத செல்வத்தைப் பயன்படுத்துகின்றன. அதன் வழியாக உருவாகும் மதிப்பு மற்றும் செல்வாக்கு அவர்களின் கீழ் பணியாற்றுபவர்களிடம் ஒருவிதத்தில் மரியாதையையும் இன்னொரு விதத்தில் அச்சத்தையும் உருவாக்குகிறது. மரியாதைக்காக நிர்வாகியிடம் பணிவுகாட்டி வேலை செய்கிறார்கள். அச்சம் கொண்டு வேலை செய்பவர்களும் பணிந்து போகிறார்கள். விதிகளுக்குப் புறம்பான நடவடிக்கைகள் தனியார் நிர்வாகத்தின் திறமையாகப் பார்க்கப்படுகிறது. அவர்கள் நேரடியாகத் தலைமைப் பதவிகளில் அமர்த்தப்படும் வாய்ப்புகள் உண்டு. அவர்கள் தங்கள் விருப்பம்போல விருதுகள் வழங்கமுடியும்; பணமுடிப்புகள் தரலாம்; சிலரைக் கண்டறிந்து அவர்களுக்குக் கூடுதல் சம்பளமும் வழங்க முடியும்.
அரசுத்துறையின் உயர்பதவிக்கு வருபவர்கள் இவற்றிலிருந்து முற்றிலும் வேறானவர்கள். அவர்கள் பெரும்பாலும் பணி மூப்பு காரணமாக உயர்நிலைக்கு வரும் வாய்ப்புடையவர்கள். அவர்களுக்குப் பலவிதமான அதிகாரங்கள் இல்லை. குறிப்பாகச் சரியாக வேலை செய்யாத ஒருவரைத் தண்டிக்கும் அதிகாரம் கூட்டுத்தன்மை கொண்டது. தனியொருவராக நடவடிக்கைகளை எடுத்து விடமுடியாது. தனியார் நிறுவனங்களைப் போல கணக்கில் வராத செல்வம் - பணத் திரட்சியை உருவாக்குவது சாத்தியமில்லை. அதனால் கவனிக்க வேண்டியவர்களைக் கவனிக்கும் விதம் அறிந்திருந்தாலும் செய்ய இயலாதவராக இருப்பார். அதையும் தாண்டி ஒருவர் செய்தால் அது அவரது திறமையாகப் பார்க்கப்படாமல் அவரது ஊழலாகவும் விதிமீறலாகவும் கணிக்கப்படும். அப்படிப் பட்ட நிலையில் தனக்குக் கீழுள்ளவர்களைச் சிறந்த பணிகளைப் பாராட்டிப் பரிசுகள் வழங்கவும் முடியாது. தவறாக வேலை செய்பவர்களைத் தண்டிக்கவும் முடியாது.
இந்தச் சிக்கல்களைச் சரிசெய்வது பற்றிச் சிந்திக்காமல் அரசுத் துறைகளுக்குப் பதிலாகத் தனியார் துறை இங்கே பரிந்துரைக்கப்படுகிறது. இந்தப் பரிந்துரைகளுக்குப் பின்னே சமுக நலன் சார்ந்த அடிப்படைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற அக்கறைகள் இல்லை.மிகச் சிறுபான்மையினரால் அமைப்புகள் நிர்வாகம் செய்யப்படவேண்டும்; அவர்களின் கீழ் அனைவரும் பணிசெய்ய வேண்டும் என்ற சிந்தனைப் போக்கு ஓடிக்கொண்டே இருக்கிறது. கடைசியாக அது வல்லரசுக்கனவு; பிராமணிய அறிவு போன்றவற்றைக் கேள்வி கேட்கக் கூடாது என்பதை வலியுறுத்துகிறது. இட ஒதுக்கீட்டை ஒழிப்பது, உரிமைகள் கேட்பது - குறிப்பாகப் பெண்கள் சமநிலைக்காகக் குரல் கொடுப்பது தவறு போன்ற நிலைபாடுகள் கொண்டதாகவும் மாறுகின்றது. வேறுபாடுகள் இல்லாத சமூக அமைப்பே கிடையாது என்று வாதம் செய்வதின் வழியாக இந்தியச் சாதிய அமைப்பான வர்ணாச்சிரம நிலைப்பாடுகளை ஏற்கத்தூண்டுகின்றது. அவை அடிப்படைவாத நிலைப்பாடுகள் என்று சொன்னால் தேச வளர்ச்சியும் நாட்டுப்பற்றும் அளவுகோல்களாக ஆக்கப்படும். இதுதான் இந்தியப்பொதுமனம்.கடந்த கால் நூற்றாண்டாக உருவாக்கப்பட்டுள்ள இந்தியப் பொதுமனம், அடிப்படைவாதத்தின் அடையாளமான பெரும்பான்மைவாதத்தை முன்வைக்கும் கூட்டத்திரட்சியாகப் கட்டமைந்து விட்டது. இங்கே இந்தப் பொதுமனத்தைக் கேள்விக்குட்படுத்தும் வகையறியாது தவிக்கின்றன மாற்று அமைப்புகள்.
அடிப்படைவாதத்தை உள்வாங்கிய பெரும்பான்மைவாதம், மொழிவழித் தேசிய இனங்கள், மாநில உரிமைகள் வழியான சிறுநாடுகள், பண்பாட்டு அடையாளம் சார்ந்த நிலப்பரப்பின் விடுதலை போன்றனவற்றை ஏற்காது. அவற்றைப் பேசும் குரல்களை அடக்கவே நினைக்கும்; போராட்டங்களைச் சட்டவாதங்களால் மட்டுமல்லாது வன்முறை அமைப்புகளான காவல்துறை, ராணுவம் போன்றனவற்றைக் கொண்டும் அடக்க நினைக்கும். நமது கால இந்தியா அப்படித்தான் நகர்ந்துகொண்டிருக்கின்றது. இங்கே தேசிய இனக்குரல்களை எழுப்புதல் என்பது தற்கொலையை விரும்பி ஏற்றுக் கொள்வதற்குச் சமமானது.
-------------------------------------------- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 17/08/2026 இல் உளுந்தூர் பேட்டையில் நடத்திய தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டு மலரில் அச்சிடப்பெற்ற கட்டுரை
.jpeg)

கருத்துகள்