மாறும் அர்த்தங்களும் மாற்றப்படும் தகவல்கள்


 சமூக ஊடகங்களின் வரவால் ஒவ்வொரு துறையும் அவற்றின் முந்திய அடையாளத்தை இழந்துவிட்டன. அந்தந்தத் துறைகளுக்கான நுட்பங்கள், திறன்கள், வெளிப்பாட்டு உத்திகள் எல்லாம் சிதைக்கப்பட்டு விட்டன. சராசரித் தன்மையே மேன்மையானதாகக் காட்டிக்கொள்கின்றன. அவற்றைக் கொண்டாடும் மனநிலைகள் மேலோங்கி நிற்கின்றன.

இந்தப் போக்கின் முழுமையான வெளிப்பாட்டை நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்திய தமிழக அரசியல் தளம் வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டிருக்கின்றது. தமிழகச் சட்டமன்ற நிகழ்வுகளின் நேரலைக் காட்சிகள் கூடச் சமூக ஊடகங்களின் தேவைக்கான பண்டமாகவும் சரக்குகளாகவும் ஆகிவிட்டன. தனித்திறன்கள் தேவையில்லை என்பதைத் தாண்டி, உண்மை, பொய், சரி, தவறு என்றெல்லாம் பிரித்துப் பேசுவது அபத்தம் என்றாகிவிட்டன.

அரசியல் தளத்தில் வெளிப்படும் இத்தகைய போக்கு கலை,இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளில் 10 ஆண்டுகளாகவே நிகழ்ந்து வருகின்றன. கருத்தரங்குகள், புத்தகவெளியீடுகள், பயிற்சிப்பட்டறைகள் என ஒவ்வொன்றிலும் வெளிப்பட்ட திறனாய்வுப்பார்வைகளும் மதிப்பீட்டு முறைகளும் முற்றாக மறைந்துவிட்டன. குடும்ப விழாக்களில் பங்கேற்று விருந்துண்டு திரும்பும் மனநிலையில் எழுத்தாளர்கள் பங்கேற்கின்றார்கள். இந்தப் பங்கேற்பில் வெளிப்படுவது ஒருவித நிலமானியப் பண்பாட்டு மனநிலை. அப்படியில்லையென்றால், வெவ்வேறு இடங்களிலிருந்து நண்பர்களாக - குழுவாகச் சேர்ந்து புதிய ஊருக்குச் சென்று கூடிப்பிரியும் சுற்றுலா மனோபாவங்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் வெளிப்படுவது வணிக மனநிலை.

நவீன இலக்கியமும் திறனாய்வும் நிலமானிய மனநிலைக்கும் வணிகப் பண்பாட்டுக்கும் எதிரானவை என்ற சொல்லாடல்கள் எல்லாம் தொலைந்து போய்விட்டன. நமது காலமும் நமது கருத்துகளும் திருடுபோய்க்கொண்டிருக்கின்றன.

இன்று வாசித்த ஒரு கவிதை
------------------------------------
மேடை நாடகம் ஒன்றில்
சாமியார் வேடம் போட்ட ஒருவர்
இடைவேளையின் போது
வெளியே வந்து
புகைபிடித்தார்
" இமயமலையிலிருந்து இன்று
காலை
இறங்கிவந்த சாமியார் இவர்தான்"
யாரோ புரளியைக் கிளப்பிவிட
அடுத்த ஐந்து நிமிடத்தில்
மூன்றுபேர் காலில் விழுந்தார்கள்
இரண்டுபேர்
ஜாதகத்தைக் காட்டினார்கள்
தாடியுடன் வந்த ஒருத்தன்
"சாமி என் ஷாலினி
எனக்கு மீண்டும் கிடைப்பாளா?"
கண்ணீருடன் கேட்டான்.
"மனுசனைக் கொஞ்ச நேரம்
நிம்மதியா
தம் அடிக்க விடுங்கப்பா"
புலம்பிக்கொண்டே
மீண்டும்
மேடைக்கு சென்றார் சாமியார்.
=========================
கஜன்/ அம்ருதா/ செப்டம்பர், 2026

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாயக்கர் காலத்தில் தமிழுணர்வு

இக்கால இலக்கியம் குறித்த பல்கலைக்கழக ஆய்வுகள்

திருக்குறளில் கடமைகளும் உரிமைகளும்