அந்த முறை நானும்



அந்த அழைப்பிதழில் எனது பெயரும் இருந்தது. ‘தாய் மாமன்மார்கள் என்ற பட்டியலில். அந்த உறவின் நேரடி அா்த்தம் எனக்குப் பொருந்தாது என்றாலும். எனது மனைவிக்கு அவா்கள் ரத்த உறவினா்கள் அதனால் அந்தக் குழந்தைகளுக்கு நானும் தாய்மாமன் ஆகி இருந்தேன். அழைப்பிதழில் மதுரைக்கு அருகில் உள்ள பிரபலமான ‘பாண்டி முனியாண்டி கோவிலில்‘ மொட்டை அடித்து காது குத்தும் விழா நடைபெறுவதாக அழைத்தது. அதில் ‘இரட்டைக்கிடாய் வெட்டப்படும்‘ என்ற குறிப்பு எதுவும் இல்லை. இரண்டு குழந்தைகளுக்கு மொட்டை எடுக்கப்படுவதால் இரண்டு கிடாய்கள் வெட்டப்படும் என்பது உடன்குறிப்பு.

 இதுபோன்ற அழைப்பிதழ்களை இதுவரை பொருட்படுத்தியதில்லை. எனது கிராமத்தில், உறவினா்கள் வீட்டில் நடக்கும் காது குத்து. கருமாதி, சடங்கு, மொட்டை அடிப்பு போன்ற காரியங்களுக்குப் போவதை நிறுத்திப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. வீட்டில் நடக்காமல் போயில்களில் நடந்தால் அவை பற்றி விசாரித்ததும் கூடக் கிடையாது. பல நேரங்களில் மனம், ‘நீ அந்நியனாகிக் கொண்டிருக்கிறாய்‘ என்று எச்சரித்ததும் உண்டு. அதே மனசே, ‘நீ அந்நியனாக ஆக வேண்டியவன் தான்‘ என்று சமாதானமும் சொல்லி விடும். படிப்பு; படிப்புக்காகக் கிராமத்தை விட்டு நகரத்திற்கு வந்தது; அதன் காரணமாகப் புதிய நண்பா்கள்; சிந்தனைபூர்வமான உரையாடல்கள்; அரசியல் ஈடுபாடு; இவற்றின் பின்னணி கொண்ட வாழ்முறை மாற்றங்கள், அதற்காக நடந்த இடப்பெயர்வுகள் என எல்லாம் ஒன்றன பின் ஒன்றாக நடந்தன. இவை எதுவும் திட்டமிட்டுச் செய்தவைகளாகத் தோன்றவில்லை. இயல்பாகவே வந்து சோ்ந்துகொண்டன. அவை வந்து சேருகின்ற பொழுதே பூப்புனிதநீராட்டு, காதுகுத்து, மொட்டையடித்தல், குலதெய்வத்திற்குக் கொடையென ஒவ்வொன்றும் மெதுவாக வெளியேறிக்கொண்டே இருந்தன. வந்து சோ்ந்தன போல், சென்று போனவைகளும் இயல்பாக நடந்தன என்றே நினைக்கிறேன்.

   நிதானமாக யோசித்துப் பார்த்தால் இவையெல்லாம் என் ஒருவனின் பயணமோ, இயக்குமுறையோ, மனநிலை உணா்வோ அல்ல; கிராம வாழ்விலிருந்து நகர வாழ்விற்குள் பாரம்பரிய நடைமுறைகளிலிருந்து நவீனத்துவ வெளிக்குள் தள்ளப்பட்ட ஒவ்வொருவனின் மனநிலையும் நடைமுறைகளுமாகத்தான் தோன்றுகிறது. அளவு மாற்றமும் பண்புநிலை மாற்றமும் நபருக்கு நபா் வேறானதாக இருக்கலாமே தவிர, இந்த நகா்வும் மாற்றங்களும் நிகழ்ந்தே இருக்காது என்று சொல்ல முடியாது. இவ்வாறு வேறொரு வெளிக்குள் புதியதான நம்பிக்கைகளுடனும் இலக்குகளுடனும் -பயணம் செய்த நடுத்தர வா்க்க மனிதனிடமிருந்து சடங்குகள், வழிபாடுகள், பலியிடல்கள் மெல்ல மெல்ல விலகிக்கொண்டே போயின என்பது உண்மைதான் என்றாலும்,  கடவுள் நம்பிக்கையைக் கைவிட்ட நாத்திகனாக ஆகிவிட்டான் என்பதில்லை. கூடுதலான பக்தியும் வந்து சோ்ந்துகொண்டது என்பதுதான் உண்மை. நவீன வாழ்க்கை, பழைய சடங்குகளைப் பதிலீடு செய்ய புதிய சடங்குகளை - கொஞ்சம் சமஸ்கிருதமயம் கொஞ்சம் மேற்கத்திய மயமான சடங்குகளை முன்வைத்தது. ஆனால் கடவுளைப் பதிலீடு செய்ய விரும்பியதும் இல்லை; வேண்டியதும் இல்லை.

 இன்னும் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், நடுத்தர வா்க்கத்து மனிதா்களிடம் கடவுளின் இடத்தில் இன்னொன்றை வைத்துவிடும் ஆவேசம் தொடா்ந்து இருப்பது புரிபடலாம். ‘பணம்‘ அல்லது ‘லட்சியம்‘ என்ற இரண்டில் ஒன்று கடவுளைப் பதிலீடு செய்யத் தொடா்ந்து முயற்சி செய்கின்றன. பல நேரங்களில் கடவுளின் இடத்தை அபகரித்துவிடும் பணம், திடீரென்று கடவுளிடமே சரணாகதியும் அடைந்துவிடுகிறது. ஆனால் லட்சிமோ, பதிலீடு செய்யாமலேயே உடன் அழைத்துக்கொண்டு போகிறது. ஏனென்றால் இலட்சியங்களுக்குப் பெருமிதமும் இல்லை; குற்ற உணா்வும் இருப்பதில்லை. பல நேரங்களில் சமரசங்களே உள்ளன.

 நான் மட்டுமல்ல, என்னைப் போன்று பலரும் கடவுளின் இடத்தை மனச் சமாதானங்களால் இட்டு நிரப்பிக்கொள்கிறோம். வெற்றியடையும் என நம்பிய லட்சியங்கள் கைவிட்டுவிடும் நிலையில் மனத்திற்கு ஆறுதல் என்ன….? வெறும் சமாதானங்கள்தான். கிடாய் வெட்டுவதையும், மொட்டையடித்து நோ்த்திக்கடன் செலுத்துவதையும் ‘மூடநம்பிக்கையின் வெளிப்பாடு‘ எனப் பேசிய லட்சியவாதம் இப்பொழுது இல்லை. அதற்கு மாறாக, இந்தக் கடவுளா்கள் என் உறவினா்களையும், கிராமத்துக்காரா்களையும் ‘கடன்காரா்களாக்கு‘கின்றனரே என்று வருந்தியதுண்டு.

கிடாய்ச் சோறும் சாராயமும் வழங்கித் தனது பெருமைகளை நிலைநாட்டிய கிராமத்து மனிதன். அதற்காக வாங்கிய கடனுக்கு அரைக் காணி நிலத்தை எழுதிக் கொடுத்தது வெறும் கதைகள் அல்ல; உண்மைகள். இருபத்தோரு பரிவாரங்களுடன் அமா்ந்திருக்கும் இசக்கியம்மனுக்கு இருபத்தோரு கிடாய்கள் வெட்டப்படுவது நோ்த்திக்கடன் மட்டும்தானா…..? அது நிலக்கடனும் ஆகி உள்ளதே….? கிடாய் வெட்டி, பன்றி வெட்டி விருந்து வைத்தவன்தான் கடன்காரன் ஆவான் என்பதில்லை. அன்று செய்முறை செய்வதற்காக வாங்கிய கடன்களும் வட்டிக்கு மேல் குட்டி போட்டு வளரத்தான் செய்துள்ளன ‘தாய்மாமன் முறை‘ என்பதற்காக ரூ.5001 எழுத வேண்டும் என்பது சில சாதிகளிலும் கிராமங்களிலும் எழுதப்படாத விதிகளாக உள்ளன. விருப்பமுடன் இருப்பதாலும் எழுதப்படும் மொய்கள் பற்றிப் பேச்சில்லை. மொய்ச் சடங்கு செய்தே மோசம் போன குடும்பங்கள் தமிழ்நாட்டுக் கிராமங்கள் தோறும் இருக்கத்தான் செய்கின்றன.

இதனை வெறும் பொருளாதார வாதம் எனச் சொல்லிவிடலாம் தான். பண்பாட்டு அடையாளமா….? பொருளாதார நெருக்கடியா…..? எனக் கேள்வி எழுப்பி, இரண்டையும் எளிமையான எதிர்வுகளாக்கி பண்பாட்டின் பக்கம் சாய்ந்து விடலாம்தான். எல்லா மனிதா்களையும் அதன் பக்கம் சாய்த்து விடவும் செய்யலாம். மானுடவியலாளா்களும் நாட்டார் வழக்காற்றியலாளா்களும் செய்வது இதைத்தான். அவா்களுக்கு உறுதியான முடிவுகள் இருக்கின்றன. ஆனால் என்னிடம் அத்தகைய உறுதியான முடிவு எதுவும் இல்லை. இது நிற்க.

வந்த அழைப்பினைப் பார்த்தேன். ‘மதுரைப் பாண்டி முனியாண்டி கோயில்‘ என்ற அச்செழுத்து பேனாவினால் அடிக்கப்பட்டு. ‘எங்கள் தோப்பு முனியாண்டி கோயில்‘ என்ற எழுதப்பட்டிருந்தது. காரணம் தமிழக அரசு போட்ட அவசர ஆணை. (உயிர்ப்பலி தடைச் சட்ட ஆணை பின்னா் அரசால் வாபசானது) நாற்பது வருடங்களுக்கு முந்திய சட்டத்தைத் தூசி தட்டிப் புதிய ஆணையாக அனுப்பி, ‘கோயில்களில் விலங்குகள், பறவைகள் பலியிடத் தடை என்று அறிவித்ததுதான். இந்த அவரச் சட்டம் பாண்டி முனியாண்டி மாதிரியான கடவுள்களின் தூக்கத்தைக் கெடுத்துவிட்டது. ஒவ்வொரு பக்தனும் வெட்டப் போகும் கிடாக்களையும் கோழிகளையும் பெற்றுக் கொள்வதற்கு ஒவ்வொரு ஊருக்கும் அந்த ஊரிலுள்ள தோப்புகளுக்கும் துரவுகளுக்கும் ஆற்றடிக்கும் கிணற்றடிக்கும் குளத்தடிக்கும் போயாக வேண்டுமே. அதற்கு மேல் அருளாசிகளின் நகல்களையும் பிரதியெடுத்து அனுப்பிவைக்க வேண்டும். பக்தன் ரொம்பவும் சுலபமாக தனது கடவுள் எல்லா இடங்களிலும் இருப்பதாக நம்பிக்கொள்கிறான். இப்படியொரு சட்டம் போட்ட அரசாங்கம், இனிமேல் கோயில்களில் நடைபெறாது என்று நினைத்துக் கொள்ளலாம். ஆனால் பலி கொடுக்கும் இடங்களையெல்லாம் கோயில்களாக மாற்றிக்கொள்ளும் தந்திரத்தை யாரால் தடுத்து நிறுத்த முடியும். என்றாலும் பாண்டி முனியாண்டி கோயிலின் ஒவ்வொரு வாரமும் காணும் காட்சிகள் இனி கிடைக்காமல் போகலாம். அந்தக் கோயிலில் எல்லைக்குள் நுழைந்துவிட்டதாக நினைப்பு வந்தவுடனேயே ஆடத் தொடங்கி விடும் பக்தா்களைப் பார்த்திருக்கிறேன். அதிலும் பெண்கள் - வறண்ட முகத்துடன், கோபம் கொப்பளிக்கும் கண்களுடன், கை விரல்களை முறுக்கி, பற்களை நறநறவெனக் கடித்து தலைவிரிகோலமாய் நகரப் பேருந்திலிருந்து இறங்கி ஓடும் ஆவேசம் எப்பொழுதும் எனக்கு உவப்பானதாக இருந்ததில்லை.

கல்லூரி மாணவனாக இருந்த காலந்தொட்டே இவையெல்லாம் எப்பொழுது மாறும்….? என்ற கேள்வி எனக்குள் உண்டு. கோயில் எல்லைக்குள் ஆடும் இந்த ஆட்டங்கள் சாமியாட்டம் எனக் கருதப்படும் அதே நேரத்தில், ஊரில் ‘பேயாட்டம்‘ எனக் கருதி பிரம்படி தரப்படுவதையும் பார்த்திருக்கிறேன். இவற்றை நனவிலி மனதின் கூட்டுக் களியாட்டம் எனப்புதிய விளக்கங்களால் வியாக்கியானம் கூடச் செய்யலாம். என்றாலும் இவையெல்லாம் தமிழ்ச் சமுதாயத்தில்  இந்திய சமுதாயத்தில் தொடரப்பட வேண்டியவைதானா….? தொடரப்பட வேண்டும் என்றால், தமிழா்களை இந்தியா்களை நாகரிகப்படுத்துவது என்பதன் பொருள் என்ன…..? அதன் அடையாளங்கள் வெளிப்பட வேண்டிய விதங்கள் என்னென்ன……?

 இப்படிக் கேள்விகள் எழுப்புவதால், தமிழக அரசின் அவசரச் சுற்றிக்கை ஆதரிக்கப்பட வேண்டியது என்று ஆகிவிடாது. ஏனென்றால் அதன் நோக்கம், தமிழா்களை மதத்தின் பிடியிலிருந்தும் சடங்குகளின், வழிபாட்டு முறைகளின் - சாமியார்களின் பிடியிலிருந்தும் இவற்றிற்காக வாங்கும் கடன்களின் பிடியிலிருந்தும் விடுவிப்பது அல்ல. அதற்கு மாறாக அவற்றின் ஆழத்திற்குள் அமிழ்த்திவிடுவதே ஆகும். அரசுடன், கைகோர்த்துக்கொண்டு மாற்றுச்சடங்குகளையும் மாற்று வழிபாட்டு முறைகளையும் முன்வைக்கும் நிறுவனமதம், மாற்றுப் பூசாரிகளையும் அனுப்பி வைக்கப் போகிறது. அந்த மாற்றுப் பூசாரிகள் கட்டாயம் வெள்ளை நிறுத்துப் பார்ப்பனா்களாகத்தான் இருப்பார்கள் என்பதில்லை. ஏனெனில் அவா்களுக்கு அதை விட வருவானம் தரும் பல தொழில்கள் உள்ளன.

   கறுப்பு மற்றும் செம்பழுப்பு நிற மனிதா்களே பார்ப்பன மயமாக்கப்பட்டு ஆகம விதிகளைக் கூறப் போகிறார்கள். அவா்களுக்கு இறைவனோடு பேசவும் தெரியும். அதிகாரத்தோடு பேசவும் தெரியும். அதற்கான மொழியில் தோ்ச்சி அவா்களுக்குத் தரப்படும் அரசாங்க ஆணைக்கு இப்படியொரு நீண்ட கால நோக்கம் உண்டென்றாலும், உடனடி விளைவாக வேறொன்றும் நடந்து வருகிறது. நுண் அரசியலாகப் பாரத்தால் இதற்கும்கூடத் தொலை நோக்கு இருக்கலாம். இதுவரைத் தங்களை மதமற்றவா்களாகவும். மத நடவடிக்கைகளிலிருந்து தூர விலகிவிட்டவா்களாகவும், மத நடவடிக்கைகளிலிருந்து தூர விலகிவிட்டவா்களாகவும் நம்பிக் கொண்டிருந்தவா்களை, மதம் தன்னை நோக்கி இழுக்கத் தொடங்கியிருக்கிறது.

இந்த அரசும், அதன் பின்னணியில் இருக்கும் மதவாதக் கருத்தியலும் முன்வைத்துள்ள இந்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காகப் பகுத்தறிவாளா்களும் இடதுசாரிகளும்கூட. ‘கிடாய் வெட்டிப் பலி கொடுத்து‘ நோ்த்திக்கடன் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்த் தேசியம் பேசியவா்களும் திராவிட இயக்கம் சார்ந்தவா்களும் அதனைத் தமிழா் வழிபாட்டு முறைகளாக திராவிடக் கடவுளா்களின் அடையாளங்களாக முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருவேளை இந்த ஆணையின் முதன்மை நோக்கமே இதுவாகக் கூட இருக்கலாம். ஏனெனில் இனி அவா்கள் சமய நம்பிக்கை, ஈடுபாடு, வழிபாடு என்பன தனிமனிதா்களின் அந்தரங்கம் சார்ந்துது என்று வாதிடாமல் விட்டு விடுவார்கள் அல்லவா…. எல்லாவற்றையும் அரசியல் வெளிக்குள் - அரசின் வெளிக்குள் கொண்டுவந்துவிட்டால், அவற்றை முறைப்படுத்தும், ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பும் அதற்கு உண்டாகிவிடக் கூடும். இதையே நமது அரசுகள் - மதமாகவும் அரசாகவும் இருக்கிற மத்திய மாநில அரசுகள் எதிர்பார்க்கின்றன. அந்த எதிர்பார்ப்பு ஓரளவு நடந்தேறி வருகின்றது என்பதுதான் உண்மையுங்கூட.

    ஆம்….. இதுவரை விலகியிருந்த நான் இந்த முறை கலந்து கொண்டேன். இரண்டு கிடாய்களும் வெட்டப்படுவதற்குத் தயாராக நின்றன. மஞ்சள் கலந்த தண்ணீா் ஒரு குடத்தில் வைக்கப்பட்டிருந்தது. வெட்டுவதற்குத் தயாரான நபருக்கு உற்சாகம் தரும் கலவைகளோ…. விசில் சத்தங்களோ எழுப்பப்படவில்லை. ஆங்காங்கே ஆவேசமாய் ஆடும் நபா்களும் இல்லை. தோட்டத்து முனியாண்டியாக முறிந்து நின்ற ஒரு தூண் எண்ணெய் தடவப்பட்டு நின்றிருந்தது. சுற்றி நின்றவா்களின் உதடுகளிலிருந்து ஆவேசமான குரல்களுக்குப் பதிலாக முணுமுணுப்புகள் வந்தன. ‘தொலவு காலம் வந்துட்டா…. இப்பிடித்தேன்….‘ ‘எதுக்கும் ஒரு எல்ல  இருக்கில்ல…..‘ ‘ரொம் காலம் நீடிக்காது….‘ ‘நாசமாப் போறதுன்னு முடிவு செஞ்சிட்டா….. யாருதான் காப்பாத்த முடியும்….“ இவையும் இவை போல்வனவுமான முணுமுணுப்புகள். எல்லாம் அரசாங்கச் சட்டத்திற்கெதிராக அவா்களைப் பொறுத்தவரை அரசாங்கம் என்பது ஜெயலலிதாதானே…. அவருக்கும் எதிராகத்தான்.

  “எல்லாத்தையும் விட்டுற முடியுமா…. நாம் கும்பிடுற சாமியையும்….. நாம சாப்பிடுற சாப்பாட்டையும் அரசாங்கம் மாத்திப்பிடுமா….. இப்படி ஒரு குரல் கேட்டது. அந்தக் குரலின் சொந்தக்காரருக்கு ‘சமயம்‘ ஒருவனின் ‘அந்தரங்க வெளி‘ சார்ந்தது என்பது புரிந்துதான் இருக்கிறது. அந்தரங்க வெளிக்குரியதைப் பொதுவெளிக்குரியதாகவும், பொது வெளிக்குரியதை அந்தரங்க வெளிக்குரியதாகவும் குழப்பிக்கொள்வது படித்த பாமரா்களும் அவா்களின் தெய்வமான அரசாங்கமும்தான் என்று நினைக்கத் தோன்றுகிறது.

இந்த அரசாங்கம் தொடா்ந்து அந்தரங்க வெளிக்குள் நுழையப் பார்க்கிறது. தனிமனித உரிமைகள் அந்தரங்கங்கள் சார்ந்தவை. கோபப்படுவதும் போராடுவதும் அப்படித்தான். காதில் செய்வது அவற்றையெல்லாம் விட அந்தரங்கமானது. மானிடரே காதல் செய்வதற்குக் கூட இங்கு தடைகள் வருகின்றன. கவனமாக இருக்க வேண்டும்; இல்லையென்றால் உங்கள் கனவைக்கூட அரசாங்கம் திட்டமிடக்கூடம்.

                                                                                   தீம்தரிகிட, செப்டம்பா் 2003     

  

 

 

 

 

 

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்