தலைமுறைகளின் யுத்தம் சா.கந்தசாமியின் தக்கையின் மீது நான்கு கண்கள்

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மேலாய்வு செய்வதற்கான நிதியினை வழங்குவது மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக்குழு. அதன் நிதியைப் பெறுவதற்கு முயற்சி செய்யும் பேராசிரியர்களின் திட்டவரைவுகளின் பட்டியலைச் சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. அப்பட்டியலில் இடம் பெற்றிருந்த பல தலைப்புகள் எனக்கு மன வேதனை அளித்ததை இங்கே பதிவு செய்ய வேண்டும்.
இந்தியாவில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மக்களின் புழக்கத்தில் இருந்த புழங்குபொருட்களைத் தொகுத்து ஆவணப்படுத்தும் ஆய்வினை ஒருவர் செய்வதற்காக நிதியினைக் கோரியிருந்தார். இன்னொருவர் வேளாண்மைக்கருவிகளை ஆவணப்படுத்தப் போவதாகக் காட்டியிருந்தார். ஏற்கெனவே செய்யப்பட்ட ஆய்வுகளில் பாரம்பரிய இசைக்கருவிகள், ஆட்டக் கருவிகள், அரங்கியல் கருவிகள் போன்றன ஆவணப் படுத்தப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து இந்தியாவின் பாரம்பரியத் தொழில்களான வேளாண்மை,கால்நடை வளர்த்தல், மீன்பிடித்தல், கைவினைப் பொருட்களான பாய் முடைதல், கூடை முடைதல்,மட்பாண்டங்கள் செய்தல், கயிறு திரித்தல், துணி நெய்தல், ஆபரணங்கள் செய்தல், கூரை வேய்தல் என அனைத்தும் ஆவணப் படுத்தப் பட வேண்டும் என முன் மொழியவும் செய்திருந்தார்.
இத்தகைய ஆய்வாளர்களின் அக்கறைகள் நியாயமானவை. இவையெல்லாம் தொகுக்கப் பட வேண்டியவை தான். தொகுக்கப் பட வேண்டும் என முன் மொழியும் ஆய்வாளர்கள் நிச்சயம் அதைச் செய்வார்கள் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. ஆனால் அத்தகைய ஆய்வுகளுக்கு நிதி வழங்கும் அரசின் நிறுவனங்களின் பணியாற்றும் அறிஞர்கள், வல்லுநர்கள் இந்த இடத்தில் கொஞ்சம் சிந்திக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.
நமது பாரம்பரிய நடனங்களும், இசைக்கருவிகளும், தொகுத்து ஆவணப் படுத்தப் பட வேண்டியவை மட்டும் தானா? அவற்றைப் பயன்படுத்தித் தங்கள் வாழ்க்கையை நடத்திய கலைஞர்களை எப்படிக் காப்பாற்றுவது என்பது பற்றிய சிந்தனைகள் நம்மிடம் இல்லை. கலைப் பொருட்கள், பண்பாட்டுக் கருவிகள் கூட கால ஓட்டத்தின் வேகத்தை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் போது அவற்றைக் காப்பாற்ற முடியாது என விட்டு விடலாம். நமது பாரம்பரிய அடையாளங்கள் இவை எனக் காட்டுவதற்காகச் சில இடங்களில் ஆவணப்படுத்தி வைத்துக் கொள்ளலாம்.
பாரம்பரியமான தொழில்களான வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் மீன் பிடிப்பும் அப்படி ஆவணக் காப்பகத்திற்குப் போக வேண்டியவை தானா? அவை ஆவணக்காப்பகத்திற்குப் போய்விட்டால் அவற்றைக் கைக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் நிலை என்ன? இன்று இவையெல்லாம் எந்திரமயமாகிக் கொண்டிருக்கின்றன. எந்திரமயமாகும் போது அதிலேயே உழன்று கொண்டிருப்பவர்களுக்குப் பதிலாக அந்நியர்கள் அதில் இறங்கிக் கைப் பற்றிக் கொள்கிறார்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. ஆட்டுத்தோலையும் மாட்டுத் தோலையும் கண்டு தூர விலகிப் போன உயர்சாதியினர் பாட்டா நிறுவனம் செருப்புத் தொழிலில் இறங்கிய போது அதில் தங்களைக் கறைத்துக் கொண்டார்கள் என்பதுதான் வரலாறு.
திருநெல்வேலி மாவட்டத்தில் கோரைப் பாய்முடையும் தொழில் செய்யும் பத்தமடைகளும் மண்பாண்டங்கள் செய்யும் காருகுறிச்சிகளும் இன்று ஆவணக் காப்பகங்கள் என்ற அளவில் தான் இருக்கின்றன. மக்களின் தேவைகளுக்கான தயாரிப்புகள் எனத் திட்டமிடப்படாமல் பணக்காரர்களின் வரவேற்பறைகளுக்காகவும் நட்சத்திர விடுதிகளின் அழகுக்காகவும் பாய்களும் மண்சுதைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த நிலை நீண்ட நாள் தொடராது. மோஸ்தர் மாறும் போது இந்தத் தேவை இல்லாமல் போய்விடும். எதும் தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய ஒன்று இது.
இந்தியப் பாரம்பரியக் கலைகளும்,தொழில்களும் எந்திரமயமாவதால் மட்டும் தான் அழிகின்றனவா? அல்லது நமது கற்றுத் தரும் மனோபாவம் காரணமாகவும் இந்த நிலை ஏற்பட்டதா? என நினைத்துப் பார்த்தால் இரண்டுமே முக்கியக் காரணங்கள் எனக் கூறத் தோன்றுகிறது. குறிப்பாகப் பாரம்பரிய மருத்துவம், பாரம்பரியக் கைத்தொழில்கள், பாரம்பரியக் கலைகள் போன்றவற்றை நமது முன்னோர்கள் உடனடியாகத் தங்கள் வாரிசுகளுக்குக் கற்றுத் தருவதில்லை என்பது முதன்மையான உண்மை. இவற்றில் ஒரு ரகசியம் இருப்பதாக நினைத்து அதைச் சுலபமாக வெளிப்படுத்தி விடக் கூடாது என்றே நினைத்தனர்.
ஒரு மனதனின் கற்கும் பருவமான பதின் வயதுப் பருவத்தில் தங்களிடம் உள்ள தொழில் சார்ந்த ரகசியம் எதையும் நமது முன்னோர்கள் கற்றுத் தருவதில்லை. ஒரு எலும்பு முறிவு மருத்துவர் தனது அந்திமக் காலத்தில் தான் தனது ரகசியத்தைத் தனது நம்பிக்கையான வாரிசுக்குச் சொல்லிக் கொடுப்பார். ஆடு வளர்ப்பவர்கள் கூட அப்படித்தான் நினைத்தார்கள். நானறிந்த வரை ஒரு விவசாயி தனக்கு விவசாயத்தில் தெரிந்த பயிர் வகைகள், விதை வகைகள், அவற்றைப் பயிரிடும் காலம், போட வேண்டிய உரங்கள், தாக்கக் கூடிய நோய்கள், சமாளிக்கும் முறைகள் என எதையுமே தனது வாரிசுகளுக்குக் கற்றுத் தருவதில்லை. அதனாலேயே நமது வேளாண்மை முறைகள் பல அழிந்து கொண்டிருக்கின்றன.
தனக்குத் தெரிந்த உத்திகள் தனது அடுத்த தலைமுறைக்குத் தெரிந்து விட்டது என்பதில் மகிழ்ச்சி அடைவதை விட ஏளனத்தையே நமது முன்னோர்கள் வெளிப்படுத்தினார்கள். தன் வீட்டிலேயே தன் திறமைக்கெதிராகப் போட்டியாளன் வந்துவிட்டதாக நினைத்தார்கள். பொறாமையோடு அவனை மட்டம் தட்டுவதும் கூட நடப்பதுண்டு. வேளாண்மையில் மட்டும் அல்ல; பாரம்பரியமான இந்திய மனைதர்கள் இந்த மனநிலையில் பெரிய அளவு மாற்றம் இல்லாமல் தான் இருக்கிறார்கள். இந்த யுத்தத்தைப் பரம்பரைகளிடையே நடந்த யுத்தம் என்று தான் சொல்ல வேண்டும் இதன் காரணமாக இந்திய இன்று எல்லாவற்றிற்கும் அந்நிய நுட்பங்களைத் தேடும் தேசமாக ஆகிக் கொண்டிருக்கிறது. நான் படித்த கதைகளில் இதனைப் பூடகமாகச் சொன்ன கதை ஒன்று உண்டு. எழுபதுகளில் தீவிரமாக இயங்கத் தொடங்கிய கசடதபற இதழில் வெளி வந்த அந்தக் கதையின் தலைப்பு தக்கையின் மீது நான்கு கண்கள். கதையை எழுதியவர் சா. கந்தசாமி.
சாயாவனம், தொலைந்து போனவர்கள், சூர்யவம்சம், விசாரணைக் கமிசன் எனக் காத்திரமான நாவல்களை எழுதியதன் மூலம் அதிகமும் நாவலாசிரியராகவே அறியப்பட்டவர். ஆவணப் படங்கள் எடுப்பதில் இப்போது கவனம் செலுத்தும் சா. கந்தசாமி தனது விசாரணைக் கமிசன் நாவலுக்காக சாகித்ய அகாடெமி விருது பெற்றவர்.
சா.கந்தசாமியின் தக்கையின் மீது நான்கு கண்கள் சிறுகதை மீன்பிடிப்பதில் ஒரு தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையே இருக்கும் மறைமுக யுத்தத்தை நுட்பமாகச் சொன்ன கதை. கதையின் சில பகுதிகளை அப்படியே தருகிறேன். அந்தப் பகுதிகளே அந்தக் கதையின் போக்கையும் மாணிக்கம் என்னும் தாத்தாவுக்கும் ராமு என்ற பேரனுக்கும் இடையே நடக்கும் மௌனப் போராட்டத்தையும் காட்டிவிடக்கூடியது. மீன் பிடிப்பவர்கள் என்ற அடையாளம் இல்லாமல் இருவருக்கும் இடையே ஒரு தலைமுறை இடைவெளிக்கான மோதல் இருக்கிறது என்பதைச் சொல்ல வெற்றிலை இடிப்பதை மையமிட்டுக் கதையைத் தொடங்குகிறார்.
“தெரியுமா,நாப்பத்திரெண்டாம் வயசிலேயிருந்து வெத்தலெ இடிக்கிறேன். இன்னம் ஒரு கொப்பளம் வர்லே. ஆனா உனக்கு ரெண்டு நாளிலே நாலு கொப்பளம். இதுக்குத் தான் சொல்றதைக் கேக்கனும் என்கறது...” என்றபடி வெற்றிலை இடிப்பதில் உள்ள சூட்சுமங்களை தாழ்ந்த தொனியில் விவரித்தார். அவன் கவனமாக ஒவ்வொரு வார்த்தையையும் காதில் வாங்கிக் கொண்டான். ஒரு முறையும் அவர் சொன்னதை அவன் பின்பற்றுவதில்லை. அவனுக்கொரு தனிக்குணம்; முறித்துக் கொண்டு போவது.
இப்படித் தொடங்கியவர் தாத்தாவின் மீன்பிடிக்கும் முறையோடும் அவனுக்கு உடன்பாடு இல்லை என்பதை நாசுக்காகக் காட்டும் வரிகளையும் எழுதிக் காட்டுகிறார்.
ஒரு முறை தாத்தா தூண்டிலைத் தலைக்கு நேராக இழுக்கும் போது, “ கொஞ்சம் வெட்டி சொடுக்கி இழுங்க தாத்தா” என்று கத்தினான். அவர் மெல்லத் திரும்பிப் பார்த்தார். உதட்டில் சிரிப்பு தெரிந்தது. அவன் பின்னுக்கு நகர்ந்து மறைந்தான். அப்புறம் மாணிக்கம் தூண்டிலைத் தன் விருப்பப்படியே இழுத்தார். மேலே வந்த கெண்டை ஓர் உலுப்பு உலுப்பி துள்ளித் தண்ணீரில் போய் விழுந்தது.
தன்னந்தனியாக ஒரு மயிலையைப் பிடித்து விட்டான். தாத்தா தூண்டிலில் கூட எப்பொழுதாவது ரொம்ப அபூர்வமாகத்தான் மயிலை அகப்படும். நெளிந்தோடும் மயிலையின் பின்னே போய்க் கழுத்தைப் பிடித்து மேலே தூக்கினான். அதைப்பற்றி தாத்தா நிறையச் சொல்லியிருக்கிறார். மீனிலே அது ஒரு தினுசு. வீச்சு வீச்சாக முள்ளும் மீசையும் உண்டு. முள் குத்தினால் கடுக்கும்; இரண்டு மூன்று நாட்களுக்குக் கூட சேர்ந்தாற் போலக் கடுக்கும். கோடையில் குளத்தில் இறங்கி மீன் பிடிக்கும் போது முதன் முறையாக மயிலை அவனைக் கொட்டியது வலி தாளாமல் துடித்துப் போனான். அதிலிருந்து மயிலை மீது அவனுக்குத் தனியான கவனம். அதே கவனத்தோடு மயிலையைப் பிடித்து தூண்டில் முள்ளைப் பிடுங்கினான்.
“ நீதான் பிடிச்சியா?” என்று கேட்டுக் கொண்டு தாத்தா அங்கே வந்தார். தாத்தாவின் கேள்விக்குப் பதில் எதுவும் அளிக்கவில்லை. குனிந்தபடியே தன் வேலையைச் செய்து கொண்டிருந்தான். “ பெரிய தூண்டிக்காரனாயிட்டே நீ..” மாணிக்கம் அவன் மீது கை போட்டார்.
ராமு சற்றே பின்னுக்கு நகர்ந்தான். தாத்தா மீது திடீரென்று அவனுக்கு கோபம் வந்தது. தன்னை அழிக்கப் பார்க்கிறார் என்ற பயமும் கூடவே தோன்றியது. அவர் பிடியில் சிக்காமல் பின்னுக்குச் சென்றான்.
இடித்த வெற்றிலையை வாங்கி வாயில் திணித்துக் கொண்டு, “ செத்த முன்னே எங்கே போயிருந்தே ?” என்று கேட்டார் மாணிக்கம் .
“ அந்தப் பெரிய மீனு..” “ கெக்கெக்கெவென்று பெரும் சிரிப்பு வெளிப்பட்டது. அவன் ஆச்சரியத்தோடு தாத்தாவைப் பார்த்தான்.
“ அதைப் பிடிக்கப் புறப்பட்டுட்டியோ ? ” அவர் குரல் திடீரென்று உயர்ந்தது. “ அதை உன்னாலும் பிடிக்க முடியாது; ஒங்கப்பானலையும் பிடிக்க முடியாது.”
ராமு ஓரக்கண்ணால் தற்பெருமை அடிக்கும் தாத்தாவைப் பார்த்தான் .
”என் ரெண்டு தூண்டிலை அறுத்துக்கிட்டு போயிடிச்சு...” அந்தப் பெரிய மீன் ஒரு தூண்டிலை அறுத்துக் கொண்டு போனது அவனுக்குத் தெரியும். மூன்று நாட்களுக்கு முன்னால் ஒரு காலைப் பொழுதில் அது நடந்தது. மாணிக்கம் பெரிய கயிற்றுத்தூண்டி வீசியிருந்தார். அதனை ஒரு மீனும் அறுத்ததில்லை. அநேகமாக மீனினால் அறுக்க முடியாத தூண்டில் அது.
மாணிக்கம் தூண்டில் கயிற்றைச் சற்றே இழுத்துப் பிடித்தார். தக்கை மெல்ல அசைந்தாடிக் கொண்டிருந்தது. விராலோ கெண்டையோ வராமல இருந்தால் பெரிய மீனைப் பிடித்து விடலாம்.


கோழிகள் கூவுகின்றன: காகம் கரைகின்றது.
“ வாங்க, அந்த வாண்டு என்ன கொண்டாந்திருக்குன்னு வந்து பாருங்க” என்று அவரின் இரண்டு கைகளையும் பிடித்து கொல்லைக்கு அழைத்துக் கொண்டு ஓடினாள் அவள்.
கிணற்றடியில் சேறும் நீரும் சொட்டச் சொட்ட ராமு நின்று கொண்டிருந்தான். அவன் காலடியில் பெரிய வாளை தாடையை அசைத்துக் கொண்டிருந்தது.
“நம் வாண்டு எம்மாஞ்சமத்து பாத்தீங்களா?”
மாணிக்கத்தின் கைகள் அவன் தோள்மீது விழுந்தது. அப்புறம் கழுத்தில் உராய்ந்து காதிற்குச் சென்றது.
“ ஆத்தா” என்று அலறிக் கொண்டு ஓடிப் பாட்டியின் பின்னே மறைந்தான்.
தன் மனைவியை நோக்கி மெல்லச் சிரித்தார்.
தொடர்ந்து அவனோடு முரண்பட்ட தாத்தா கடைசியில் அவனது திறமையை ஒத்துக் கொள்ளும் விதமாகப் புன்சிரித்தார் என்பதாகக் கதை முடிகிறது. ஆனால் யதார்த்தத்தில் நமது முன்னோர்கள் வாரிசுகளின் திறமைகளையும் நுட்பங்களையும் அறிந்து கொள்ளாமலேயே தான் தங்கள் காலத்தைக் கழித்துள்ளனர் என்பதுதான் உண்மை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்