ஊழல் ஒழிப்பு என்னும் சொல்லாடல்

த.வெ.க. அரசு, ஊழல் ஒழிப்பு என்பது தொடர்ந்து விவாதமாக்க முனைகின்றது. அதற்காகவே தனது அரசு இயங்கப்போகின்றது என்பதாகவும் முதல்வர் விஜய் பேசுகின்றார். புதிய அரசை ஆதரிக்கும் ஊடகவியலாளர்களும், ஊடக விவாதங்களில் பேசும் நடுநிலையாளர்களும் அதனை ஏற்றுப் பேசுகின்றனர். இப்படிப் பேசுவது பொதுமக்களிடமும் பரவியிருக்கின்றது. இந்தப் பரவலின் பின்னணியில் இருக்கும் சிலவற்றைச் சுட்டிக்காட்ட நினைக்கின்றேன்.

நான் இருக்கும் திருமங்கலம் வட்டாட்சித் தலைநகர். அரசோடு மக்களுக்குப் பெருமளவு உறவுகளை ஏற்படுத்தும் வட்டாட்சியர் அலுவலகம் தொடங்கி, நகராட்சிநிர்வாகம், வருவாய்த்துறை, பத்திரப்பதிவுத் துறை, மின்சாரத்துறை, வட்டாரப்போக்குவரத்துத்துறை போன்றன இங்கு இயங்குகின்றன. இந்தத்துறைகளை நாடிவரும் பொதுமக்களிடமிருந்து சிறியதும் பெரியதுமான தொகைகள் லஞ்சமாகப் பெறப்படும் வாய்ப்புகள் உண்டு. இந்தத் துறையிலிருந்து பெறவேண்டிய சான்றிதழ்கள், உரிமங்கள், பதிவுகள் போன்றவற்றை முடித்துக் கொடுக்க லஞ்சம் பெறுவதை முறைப்படுத்தி வைத்திருந்தார்கள். இதற்கான முகவர்களும் கடைநிலை ஊழியர்களும் ஒவ்வொரு அலுவலகத்திலும் இருந்தார்கள். இந்த ஆட்சி வந்தபின் அவர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளன. லஞ்சம் வாங்கிப்பிடிபட்டால் தண்டிக்கப்படும் வாய்ப்பு உண்டு என்ற அச்சம் உண்டாக்கப்பட்டிருக்கின்றது. அதனால் நல்லாட்சி என்ற சொல்லாடல் உருவாகி வருகின்றது.

இவற்றில் பணியாற்றும் உறவினர்களும் நண்பர்களும் இருக்கின்றார்கள். நானும் சொந்த வேலை காரணமாகச் சில அலுவலகங்களுக்குச் சென்று வந்துள்ளேன். அந்தப் பேச்சு பரவலாகி வருகின்றது. அதே நேரம் இந்த மாற்றம் ஆறுமாதம் வரை இருக்கும்; பின்னர் வழக்கம்போல லஞ்சம் பெறப்பட்ட பின்னரே வேலை நடக்கும் என்றும் சொல்கின்றார்கள். இது ஒவ்வொரு தடவையும் ஆட்சிகள் மாறும்போது ஏற்படுத்தப்படும் நடைமுறை என்றும் சொல்கின்றார்கள். இப்படிச் சொல்வது ஏற்கத்தக்க ஒன்றுதான்.

உயர்கல்வித் துறையில் பணியாற்றியவன் என்ற வகையில் இதனை நேரடியாகவே உணர்ந்துள்ளேன். பல்கலைக்கழகத்திற்குப் புதிய துணைவேந்தர் வந்தவுடன் ஏற்படுத்தப்படும் நல்மாற்றங்கள் சில மாதங்களுக்குப் பின்னர் காணாமல் போய்விடும். மாற்றங்களைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தும் நிர்வாக நடைமுறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படாத நிலையில் அதுதான் நடக்கும். இப்போது புதிய அரசு ஏற்படுத்தியுள்ள அச்சவுணர்வும் அத்தகையனவே.

*****
அரசு அலுவலகங்களில் தரப்பட்ட இந்த லஞ்சத் தொகைகள் தான் ஊழலா? இந்தத்துறைகளின் பணியாளர்களுக்குத் தரப்படும் லஞ்சத்தொகை பெரும்பாலும் நூறுகளிலும் ஆயிரங்களிலும் தரப்படக்கூடிய தொகை மட்டுமே. காலதாமதம் ஏற்பட வேண்டாமென்று நினைக்கும் பொதுமக்கள் அவற்றைத் தந்து பெற்றுக்கொள்வார்கள். அவற்றைத் தடுத்து விட்டால் ஊழலற்ற ஆட்சி நடக்கின்றது என்று மக்கள் நம்புவார்கள் என்று நினைக்கின்றார்கள் புதிய ஆட்சியாளர்கள்.

இதற்கு மாறாக இந்த லஞ்சப்பணம் ஊழலாக மாறும் ஒரு நிலையொன்று உண்டு. சாதாரணமாகத் தரப்படும் 100,1000 என்ற தொகை பலமடங்கு அதிகரிக்கும்போது அங்கு ஊழல் நிர்வாகம் உருவாகிவிடுகின்றது. தவறான பத்திரப்பதிவுகள் செய்பவர்களும், போலியான சான்றிதழ்கள் பெற்றுவிட நினைப்பவர்களும், பல மடங்கு லாபம் தரக்கூடிய உரிமங்கள் பெறுகின்றவர்களுமே லஞ்சத் தொகையைப் பலமடங்கு அதிகரித்துத் தருகின்றார்கள். அதனை முடித்துக் கொடுக்கச் சொல்லி ஆளுங்கட்சியினரும் அமைச்சர்களும் நெருக்கடி கொடுப்பார்கள். முடித்துக் கொடுத்துப் பணம் பெற்றுத் தங்களுக்கும் பங்குதரும்படி வலியுறுத்துவார்கள்.

இந்த நடைமுறை அரசுத்துறைகள் ஒவ்வொன்றிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்று. இவற்றைத் தடுப்பதற்கான ஆட்சிநிர்வாகம் உருவாக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக லஞ்சம் தராமல் வேலைகள் நடக்கும் என்பதற்கான உத்தரவாதமும் மீறப்பட்டால் தண்டனைகள் கிடைக்கும் என்பதை உறுதி செய்யும் நிர்வாகச் சட்டகங்களும் தடுப்புமுறைகளும் உருவாக்கப்பட வேண்டும். அதைப் பற்றிய அக்கறைகள் கொண்டவர்களாகப் புதிய அரசின் அமைச்சர்களின் செயல்பாடுகள் இல்லை. அவர்களின் கவனம் எல்லாம் முதல்வரின் கவனத்தைப் பெறுவதிலும், அவரால் எதிரியாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ள எதிர்க்கட்சியின் மீது தாக்குதல் தொடுப்பதிலுமே இருக்கின்றன.

****

பொதுமக்களோடு நேரடியாகத் தொடர்புகொள்ளும் அரசுத்துறை அலுவலங்களில் தரப்படும் லஞ்சம் மட்டுமே ஊழல் என்ற எண்ணம் தவறானது. ஊழலின் ஒரு கண்ணிதான் லஞ்சம். அதனைத் தாண்டி ஊழலின் பரிமாணங்கள் பலப்பலவாக இருக்கின்றன. இந்த ஆட்சியை உருவாக்க எதிர்க்கட்சிக் கூட்டணியிலிருந்து ஆதரவு பெற்ற நிலையிலிருந்தே ஊழல் தொடங்கி விட்டது. சட்டத்தில் வாய்ப்பு உள்ளது என்றாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியை இழக்கச் செய்து இடைத்தேர்தல் நடத்தித் தன் கட்சியின் சின்னத்தில் போட்டியிடச் செய்யலாம் என நினைத்ததும் ஊழல்தான். நடிகராக இருந்து முதல்வரானவர் என்பதால் திரைப்படத்துறையோடு தொடர்புடையவர்களுக்கு எந்தவிதத் தகுதியையும் பார்க்காமல் அரசுப்பதவிகளை வழங்குவதும் ஊழல் தான்.

தனது குற்றவுணர்வைத் தீர்த்துக் கொள்வதற்காகக் கரூரில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தவர்களுக்கு அரசு வேலையைத் தரவேண்டும் என முடிவு எடுத்ததும் ஊழல் தான். தன்னை விளம்பரத் தூதுவராகக் கொண்டிருந்த நகைக்கடை ஒன்றிற்கு அரசின் திட்டத்தை வழங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்து முடித்திருப்பதும், அரசின் நடைமுறைகளுக்கு மாறாகச் சுதந்திர தினநிகழ்ச்சியில் உட்காரும் வரிசையில் வேண்டியவர்களுக்கு வரிசையை வழங்கச் செய்ததும் கூட ஊழலின் ஆரம்பங்கள் தான்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

கெட்டுப்போகும் பெண்கள்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்