இரண்டு நினைவுக்குறிப்புகள்:

 தச்சபட்டி என்ற சின்னஞ்சிறிய கிராமத்திற்கு வந்த தலைவர்கள் இந்த இருவரும். வாக்குக் கேட்பதற்காக அல்லாமல் எங்கள் வீட்டு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டவர்கள் என்ற வகையில் இந்த நினைவுக்குறிப்புகளை அவர்களின் மரணத்தின் போது எழுதினேன்.

 

ஆர். எம். வீரப்பன் -ஒரு நினைவுக்குறிப்பு

ஏப்ரல் 09, 2024

தமிழ்நாட்டின் வெகுமக்கள் மனப்போக்கைத் தீர்மானிக்கும் சினிமாவையும் தேர்தல் அரசியலையும் தனது இணை நேர்கோடுகளாகக் கொண்டு வாழ்ந்த ஆளுமைகளில் ஒருவர் ஆர். எம் .வீரப்பன். இவ்விரு கோடுகளில் தனித்தனிப்பாதையில் பயணித்தாலும், இரண்டுக்குள்ளும் ஒட்டியும் வெட்டியும் பயணம் செய்ததாகவும் அவரது வாழ்க்கையின் முடிச்சுகள் இருந்தன. எம்ஜிஆரின் சத்யா மூவிஸ் நிறுவன நிர்வாகி. அதன் மூலம் எம்ஜிஆரின் முக்கியமான படங்களைத் தயாரித்தார். பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்களைக் கொண்டு வெற்றிகரமான சினிமாக்களைத் தயாரித்துப் பெரும்பணம் சம்பாதித்தவர். குறிப்பாக ரஜினிகாந்தின் பாட்ஷா படம் அவரது சினிமா, அரசியல் வாழ்க்கையில் திருப்புமுனைகளை உருவாக்கிய படம். ஒருகட்டத்தில் இனியும் அப்படியான முடிச்சுகளில் சிக்கியோ, முடிச்சுகளை அவிழ்த்தோ வாழ்க்கைப் பயணத்தைத் தொடரவேண்டிய தேவை இல்லை என உணர்ந்த நிலையில் அரசியலையும் சினிமாவையும் விட்டுவிலகிக் கொண்ட ஆர். எம்.வீரப்பன் தனது 97 வயதில் மரணம் அடைந்துள்ளார். ஆனால் அவரோடு ஜானகி அணியில் சேர்ந்தவர்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்திடம் ஒப்படைத்துவிட்டுத்தான் அரசியலிலிருந்து ஒதுங்கினார் என்பதும் உண்மை. மிதக்கும் குமிழிகளின் மீது படரும் சூரியனின் கதிர்கள் உருவாக்கும் வண்ணக்கோலங்கள் மட்டுமே கண்கள் பார்க்கின்றன; பரவசம் அடைகின்றன. ஆனால் அடியாழத்தில் சுழித்து ஓடும் ஆற்றின் நீரோட்டமும் பாறைகளை மோதித்தள்ளும் வேகமும் காட்சிக்கு வருவதில்லை; ஆனால் வரலாற்றை உருவாக்குகின்றன. ஆர்.எம்.வீரப்பன் அடியாழத்தில் இருந்த அசைவற்றுக் கிடந்த ஒரு பாறை
எனது மாணவப்பருவத்தில் நெருங்கிப் பழகிய-உரையாடிய ஒன்றிரண்டு அரசியல்வாதிகள் வழியாகக் கேட்ட செவிவழிச்செய்திகள் வழியாகவே ஆர்.எம்.வீரப்பனின் பிம்பம் எனக்குள் புகுந்தது. அதன் தொடர்ச்சியாகவே அவரது ஆளுமையைப் பற்றி அறிந்து கொண்டேன். அவரைக் குறித்து முதலில் சொன்னவர் கம்யூனிஸ்டாக இருந்து, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வந்து பின்னர் அ இ அதிமுகவிலும் இணைந்து தோல்வியுற்ற அரசியல்வாதியாக மறைந்த கே.சுப்பு. அ அதிகம் எனக்குச் சொன்னவர் சேடபட்டி இரா. முத்தையா. இன்னொருவர் கே.சுப்பு.

கே.சுப்புவோடு ஒரே காரில் மதுரையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கம் இருந்த அவரது சொந்தக்கிராமத்திற்குப் போகும் வாய்ப்பு கிடைத்தது. வாடகைக் காரோட்டி எனக்குத் தெரிந்தவர். சில ஊர்களுக்குப் போய்விட்டுத் திரும்பும்போது அவரது பேச்சுத்துணைக்காக என்னை அழைத்துப் போவார். காரில் நான் வருவதில் கே.சுப்புவுக்கு ஆட்சேபனை இல்லை என்பதை உறுதி செய்துகொண்டபின் அழைத்துப் போனார். நான் ஓட்டுநர் இருக்கைக்குப் பக்கத்தில் உட்கார்ந்து எனது பைக்குள் இருந்த பத்திரிகைகளில் ஒன்றான கணையாழியை வாசிக்கத்தொடங்கினேன். அதை வாங்கிப் பார்த்துவிட்டுக் கையில் வைத்துக்கொண்டே என்னோடு பேச ஆரம்பித்தார். அவருக்கு இலக்கிய, அரசியல் பத்திரிகைகள் அறிமுகம் உண்டு என்பது எனக்குத் தெரியும். பத்திரிகைகளில் பெயர் சொன்னதே அறிமுகமாகிவிட, அரசியல் பேசத்தொடங்கினார். இந்திராவின் அவசரநிலைக்காலம், கருணாநிதியின் தந்திரங்கள், எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தது எனப் பேச்சு சென்று முடிந்தது. அந்தப் பேச்சிலும், பின்னர் சேடபட்டி முத்தையா சொன்ன அரசியல் நிகழ்வுகளிலும் அதிகமும் வந்து போன பெயர்களாக இருந்த மூன்று பெயர்களில் ஆர். எம்.வீரப்பன் பெயரும் ஒன்று. மற்ற இரண்டு பெயர்கள் கலைஞர் மு.கருணாநிதி, எஸ்.டி.சோமசுந்தரம்.

இரா.முத்தையாவோடு எனக்குப் பழக்கம் ஏற்படக்காரணம் சேடபட்டி எங்கள் தொகுதி. எனது அண்ணன் எங்கள் ஊர் அ இ அதிமுகவின் கிளைச்செயலாளர் என்பதோடு முத்தையாவின் வலதுகரமாக இருந்தார். தனது மாணவப் பருவத்தில் திராவிட இயக்க மாணவ அரசியலில் ஈடுபட்டு, சட்டமன்ற உறுப்பினராக ஆனவர்.அதனால், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராக நியமனம் பெற்றார்.அப்போது நான் அங்கே மாணவன்; பின்னர் ஆய்வாளர். அவர் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் தங்கியிருப்பார். தனியாக இருக்கும்போது என்னை வரச்சொல்லிப் பேசிக்கொண்டிருப்பார். தமிழக அரசியலையும் இந்திய அரசியலையும் குறித்துப் பேசிக்கொண்டே நடப்போம். அவரது தந்தையின் பெயர் ராமசாமி என்பதால் என்னிடம் பெரிய மரியாதை காட்டுவார்.நான் கட்சி அரசியல் தாண்டிப் பேசும் மாணவனாக இருந்ததால், வயது வித்தியாசம் இல்லாமல் என்னோடு உரையாடுவார். அந்த உரைகளில் தேசிய அரசியலும், மாநில அரசியலும் திராவிட இயக்கங்களின் அரசியலும், அதற்குள் இயங்கும் சாதிக்கணக்குகளும் இருக்கும். அவர் தான் எனக்கு எம்ஜிஆருக்கும் ஆர். எம். வீ.க்குமிடையே இருந்த உறவைச் சொல்லியிருக்கிறார்,பின்னர் ஜானகி அணி, ஜெ. அணி எனப் பிரிந்தபோது ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் இரா.முத்தையா. ஜானகி அணியின் முதுகெலும்பு ஆர்.எம்.வீரப்பன்.

கலைஞர் மு.கருணாநிதி X எஸ்.டி.சோமசுந்தரம்; எஸ்.டி.சோமசுந்தரம் X எம்ஜிராமச்சந்திரன்; எஸ்டி சோமசுந்தரம்X ஆர்.எம்.வீரப்பன்; ஆர்.எம். வீ X ஜெயலலிதா; ஜெயலலிதா X ஜானகி எனப் பல எதிர்வுகள் வழியாக நகர்ந்த திராவிட இயக்க அரசியல் நிகழ்வுகள் பலவும் வெளிப்படையாகத் தெரியாத முடிச்சுகள். அந்த முடிச்சுகள் ஒவ்வொன்றிலும் எம்.ஜி.ஆரின் பின்னணியில் இருந்து அவரது சொத்துகளுக்கும் பெயருக்கும் பங்கம் வராமல் காத்தவர் ஆர்.எம்.வீரப்பன். எனக்குப் பெரிய ஆச்சரியம் அளித்த ஒன்று சேடபட்டி முத்தையாவின் வலதுகரமாக இருந்த எனது அண்ணன், அவரைப் பிரிந்து ஜானகி அணியின் சார்பில் சேடபட்டி ஒன்றிய செயலாளர் ஆனார் என்பதுதான். சேடபட்டி முத்தையாவோடு இருந்தால் கிளைச்செயலாளராக மட்டுமே இருக்கமுடியும், அணி மாறினால் பதவி உயர்வுக்கு வாய்ப்பிருக்கிறது என்பதால் அவர் இடம் மாறினார். அதே நேரம் அண்ணன் தீவிர எம்ஜிஆர் ரசிகர். அதனால், ஆர்.எம்.வீரப்பன் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளராக மாறியபோது அதனை ஏற்றுக்கொள்ளாமல் அரசியலிலிருந்து ஒதுங்கும் மனநிலையில் இருந்து மறைந்தார்.அண்ணன் வீட்டிற்கு நிகழ்வொன்றில் கலந்துகொள்ள வருகை தந்த அரசியல்வாதிகளில் அமைச்சர் அளவில் இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் என்பதே இந்த நினைவுக்குறிப்பை எழுதத் தூண்டியது.

அண்ணன் மறைந்த சில ஆண்டுகள் கழித்துச் சேடபட்டி முத்தையாவே திராவிட முன்னேற்றக்கழகத்தில் இணைந்தார் என்றாலும் ஆர்.எம்.வீரப்பனைச் சந்தித்துப் பேசினார்; ஆசிபெற்றார் போன்ற செய்திகள் வரவே இல்லை. திராவிட இயக்க அரசியலில் கொள்கை கோட்பாடுகளைத் தாண்டித் தனிநபர் ஆளுமைகளும் இருப்பும் முக்கியமான முடிச்சுகளாக இருந்தன என்பதை விளங்கிக் கொள்ள ஆர் எம் வீரப்பனின் வாழ்க்கை ஓர் உதாரணம்.


சேடபட்டி முத்தையா:

பிப்ரவரி, 1 ,2024



இப்போது சேடபட்டி என்றொரு தொகுதி இல்லை. 2008 இல் உருவாக்கப்பட்ட தொகுதி மறுவரையில் அதன் ஒரு பகுதி திருமங்கலம் தொகுதிக்குள்ளும் இன்னொரு பகுதி உசிலம்பட்டித் தொகுதிக்குள்ளும் கரைந்து போய்விட்டது. என்றாலும் பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் தான் இருந்தது. இப்போது அதுவும் தேனி நாடாளுமன்றத் தொகுதியாக மாறி விட்டது. அதன் பிறகும் அந்தப் பெயர் அவரது பெயருக்கு முன்னால் அடைமொழியாகவே இருந்தது. இந்த மாற்றங்களுக்கு முன்பே எனது வாக்குரிமையை அத்தொகுதியிலிருந்து மாற்றிக் கொண்டேன்.

1989 இல் புதுச்சேரிக்குப் போன பின்பு சேடபட்டித் தொகுதிக்கும் பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதிக்கும் வாக்களிக்கப் போனதில்லை. இன்று தனது 77 வயதில் இறப்பைச் சந்தித்துள்ள இரா.முத்தையா சேடபட்டித் தொகுதியின் அடையாளமாக இருந்தவர். பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்று மத்திய இணையமைச்சராகவும் ஆனவர். இப்போது யோசித்துப் பார்த்தால் அதிகம் தடவை வாக்களித்த தனியொரு அரசியல்வாதி சேடபட்டி முத்தையா என்பது நினைவுக்கு வருகிறது.

1977 சட்டமன்றத்தேர்தலில் அவருக்கு முதல் தடவை வாக்களித்தபோது எனக்கு வயது 18. ஆனால் அப்போது வாக்களிக்கும் வயது 21. என்றாலும் வாக்குச்சீட்டில் ஊரில் அழைக்கும் இன்னொரு பெயரில் வாக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்தப் பெயரிலே வாக்களித்தேன். அதற்குப் பிறகு 1980 இலும் 84 இலும் அவருக்கே வாக்களித்தேன். அப்படி வாக்களித்ததிற்குக் கட்சியைத் தாண்டி ஒரு காரணம் இருந்தது. என்னுடைய அண்ணன் அவரது உதவியாளராக இருந்தார். அதனாலேயே மிகச்சிறிய எண்ணிக்கை கொண்ட -70 வீடுகளே உள்ள எங்கள் கிராமத்திற்கு முத்தையா அடிக்கடி வருவார். அதன் அடிப்படைத் தேவைகளான குடிநீர், மின்சாரம், ஆரம்பப்பள்ளி, கூட்டுறவுப்பால் பண்ணை என ஒவ்வொன்றையும் செய்து கொடுத்தார்.
எனது படிப்பின் திசைவழியிலும் அவருக்கொரு பங்குண்டு.

நான் முதுகலை முடித்துவிட்டு எம்பில் படிக்க விண்ணப்பித்தபோது எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பல்கலைக்கழக அளவில் 10 இடங்களுக்குள் இருந்த எனக்கு இடம் மறுக்கப்பட்டதில் அப்போதைய துறைத்தலைவரோடு எனக்கு உண்டான கருத்து வேறுபாடு ஒரு காரணம். எனக்கு மட்டுமல்ல எனது வகுப்பில் இருந்த நண்பர்களுக்கும் அந்தக் கருத்து வேறுபாடு இருந்தது. கருத்து வேறுபாடு மற்றும் அரசியல் சார்பு காரணமாக மாணவர்கள் ஒருவருக்கும் பல்கலைக்கழகத்துறையில் படிப்பைத் தொடரும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. எங்கள் வகுப்பிலிருந்த அனைத்து மாணவிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. மாணவர்களைத் தொலைதூரத்தில் இருந்த கல்லூரி ஒன்றுக்கு அனுப்பிவிடப் பரிந்துரைத்தார் துறைத்தலைவர். நான் அங்கு போகவில்லை. எங்கள் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினராகவும் இருந்த இரா.முத்தையா அவர்களிடம் போனேன். எல்லாவற்றையும் சொன்னேன். எனது புகாரைக் கடிதமாக எழுதி வாங்கித் துணைவேந்தரிடம் கொடுத்து நேரடியாக ஆய்வு மாணவராகச் சேர்த்துவிட்டார். அதனால் எனக்கு நேர்மறை அனுபவங்களும் எதிர்மறை விளைவுகளும் ஏற்பட்டன என்பது தனிக்கதை.


******
திரு இரா. முத்தையா என்பது அவர் பெயர். அவரின் தகப்பனார் பெயர் இராமசாமி என்பதால் என்னைப் பெயர் சொல்லி அழைக்கமாட்டார். ‘வாங்க’ என்று மரியாதையோடு அழைப்பார். பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் என்பதால் மதுரைப்பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் அடிக்கடி தங்குவார். அப்படித் தங்கியிருக்கும்போது அவரது அறைக்குச் சென்று பலவற்றையும் பேசிக்கொண்டிருப்பேன். எனக்குத் தெரிந்த அரசியலை அறிந்துகொள்வதில் அவருக்கு எப்போதும் ஆர்வமுண்டு. அப்படியான உரையாடல் ஒன்றைப் பல மணி நேரங்கள் நீட்டிக்க வேண்டியதாகி விட்டது. திருமதி இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் அவரால் எங்கும் போகமுடியவில்லை. காரை எடுத்துக்கொண்டு போக முடியாது என்ற நிலையில் நானும் அவரும் பல்கலைக்கழக வளாகத்தில் பேசியபடியே நடந்துகொண்டிருந்தோம்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தபோது அவரது மாணவப்பருவ அரசியலைச் சொன்னார். எஸ்.டி.சோமசுந்தரம் அவர்களால் வழிநடத்தப்பட்டதையும் விளக்கினார். நான் எனது கல்லூரி மாணவப் பருவத்தின் தொடக்கத்தில் இந்திராவின் அவசர நிலையை எதிர்த்த பின்னணிகளையெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தேன். அதற்குப் பிறகு எனக்கும் அவருக்குமான நெருக்கம் கூடியது.

முதுகலை படித்துக்கொண்டிருந்தபோது தமிழ்நாடு அரசின் உயர்நிலைப் பதவிகளுக்கான போட்டித் தேர்வொன்றை -தமிழ்நாடு தேர்வாணையம் / இரண்டாவது நிலை (TNPSC Group II )- எழுதி நேர்காணலுக்கு அழைக்கப்பட்டேன். அப்போது அந்தப் பதவியைப் பிடிக்கமுடியாமல் போனது. அவர் சொன்னபடி செய்திருந்தால் அதைப் பிடித்திருக்கலாம். ஆம். பிடித்திருக்கலாம். ஆனால் செய்யும் ஆர்வமும் விருப்பமும் இருக்கவில்லை. அதனால் தொடர்ந்து ஆய்வுப்படிப்பைத் தேர்வுசெய்யும் வாய்ப்பை உருவாக்கித்தந்தார்.

***************
எம் ஜி ஆர் தொடங்கிய அ திமுகவில் அவருக்கு நம்பிக்கையான இளம் தலைவர்களில் ஒருவராக அவர் இருந்தார். அவரது அரசியலில் வழிகாட்டியாக இருந்த எஸ்.டி.சோமசுந்தரத்தோடு சேர்ந்து தனிக்கட்சிக்குப் போகாமல் அஇ அதிமுகவிலேயே தங்கியதே அவர் மீது எம்.ஜி. ஆருக்கு நம்பிக்கை உண்டாகப் பெரும் காரணம். அந்த நம்பிக்கையில் தான் கொள்கைபரப்புச் செயலாளராகச் செல்வி ஜெயலலிதாவை நியமித்த எம் ஜி ஆர், அவரை மக்களுக்கு அறிமுகம் செய்து தலைவராக்கும் பொறுப்பைச் சேடபட்டி முத்தையாவுக்கே வழங்கினார். பிரிக்கப்படாத மதுரை மாவட்டத்தின் செயலாளராக இருந்த முத்தையா தான் செல்வி ஜெயலலிதாவை எல்லா நகரங்களுக்கும் அழைத்துச் சென்று பேச வைத்தார். மதுரையில் நீண்ட செங்கோல் ஒன்றை வழங்கும் ஏற்பாட்டைச் செய்தார். அதே போல் ஜெ அணி, ஜா.அணி எனப் பிரிந்தபோது முதலில் தயங்கினாலும் பின்னர் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளராக இருந்ததால் தான் சட்டப்பேரவையின் தலைவர் ஆக்கப்பட்டார். அந்தப் பிரிவின் போது அவருக்கு நெருக்கமாக இருந்த எனது அண்ணன் ஜானகி அணியில் சேர்ந்ததால் அவரோடு இருந்த உறவு எங்கள் ஊருக்கு இல்லாமல் போய்விட்டது. அப்போது நான் புதுவையில் இருந்ததால் எனக்கும் தொடர்புகள் விட்டுப் போனது.

வாஜ்பாயி தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்தபோது கட்சித் தலைமையின் ஆணையை ஏற்காமல் வாக்களிப்பில் குளறுபடி செய்துவிட்டார் என்று கூறிக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். சில காலம் கட்சியிலிருந்து ஒதுங்கிய முத்தையா பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். ஆனால் தீவிர அரசியலில் ஈடுபாடு காட்டாமல் தனது மகனை அதில் இறக்கி விட்டார்.

நீண்ட இடைவெளிக்குப் பின் - 10 ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை தொலைபேசியில் அழைத்து அவருக்குத் தெரிந்த ஒருவரின் மகளுக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஒரு வாய்ப்புக்காக என்னிடம் கேட்டார். மறுக்காமல் செய்து கொடுத்தேன். திரும்பவும் ஒரு முறை தொலைபேசியில் தான் தொடர்பு கொண்டேன். நான் திருமங்கலத்திற்கு குடிவந்த பின் நேரில் சந்திக்க நினைத்திருந்தேன். ஆனால் அவர் நிலக்கோட்டைக்கருகில் இருந்த விவசாய வீட்டில் இருந்தார். அந்தச் சந்திப்பு நடக்காமலேயே போய்விட்டது. ஏழ்மையான குடும்பப் பின்னணியிலிருந்து இந்திய அரசியலில் ஒன்றிய அமைச்சர், பேரவைத்தலைவர் எனப் பெரிய பதவிகளை எட்டிப்பிடித்த அரசியல்வாதிகளில் அவர் முக்கியமானவர்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எட்டுக்கால் பூச்சியும் இரண்டு கால் மனிதனும்.

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்