பெண்கள் தினக்கொண்டாட்டங்களும் நெல்லைப் பல்கலைக்கழகமும்

மனோன்மணியத்தில் நான் இணைப் பேராசிரியராக இணைந்து கொண்ட நாள் 1997,பிப்ரவரி,14, பிப்ரவரி கடைசி வாரத்தில் ஒருநாள், நாட்டுநலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்த முனைவர் மரியஜான் என்னிடம் வந்து ‘மேடம், மகளிர் தினக்கொண்டாட்டத்தில் உங்களையும் இணைத்துக்கொள்ளச் சொன்னாங்க’ என்றார். அவர் வரலாற்றுத்துறையில் இணைப்பேராசிரியர். பணியில் சேர்ந்த அந்தப் பதினைந்து நாட்களில் என்னோடு அவர் பேசும் முதல் பேச்சு அதுதான். நாட்டுநலப்பணித்திட்டம் தான் மகளிர் தினக் கொண்டாட்டத்தைப் பொறுப்பேற்றுக் கொண்டாடும் அமைப்பு என்பது அதன் மூலம் தெரியவந்தது. ‘மார்ச் 8, என்ன கிழமை வருது’ என்று கேட்டேன். அவர் ‘சனிக்கிழமை’ என்றார். “சனிக்கிழமையென்றால் என்னால் பங்கேற்க முடியாது. சனி, ஞாயிறுகளில் பாண்டிச்சேரிக்குப் போய் வதுகொண்டிருக்கிறேன் ” என்றேன். அவர் வலியுறுத்தவில்லை. ஆனால் ‘நீங்க பாண்டிச்சேரிக்குப் போயிடுவீங்க; அதனால் பங்கெடுக்க இயலாதென்று சொல்லிவிட்டதை மேடத்திடம் சொல்லிவிடுகிறேன்’ என்றார்.

சாதாரணமாகத்தான் அவர் சொல்லியிருக்கவேண்டும். எனக்கோ, அது மிரட்டலோ என்று தோன்றியது. அவர் அப்படிச் சொன்னதைப் புள்ளியியல் துறையிலிருக்கும் நண்பர்களிடம் சொன்னேன். “பெண்கள் தினம் துணைவேந்தரின் விருப்பமான கொண்டாட்டங்களில் ஒன்று;மேடம் சொல்லாமல் மரியஜான் அழைத்திருக்கமாட்டார்; இந்த வாரம் பாண்டிச்சேரிக்குப் போவதைக் கைவிட்டிருக்கலாமே? ” என்று எனது பயத்தை அதிகப்படுத்தினார்கள். ஆனாலும் திட்டமிட்டபடி பாண்டிச்சேரிக்குப் போய் விட்டேன். அந்த ஆண்டு பெண்கள் தினக்கொண்டாட்டங்களைப் பார்க்கவும் இல்லை; பங்கெடுக்கவும் இல்லை. துணைவேந்தராக இருந்த முனைவர் வே வசந்திதேவி அவர்கள். அவர் அறியப்பட்ட பெண்ணியவாதி. பெண்களுக்காகச் செயல்பட்ட அமைப்புகளில் பொறுப்புகளை ஏற்றுச் செயல்பட்டவர் என்பதைத் தெரிந்து கொண்டுதான் துணைவேந்தராக நியமிக்கப்பட்டவர். ஒரு முறை அல்ல; இருமுறை – ஆறு ஆண்டுகள் -1992 ஏப்ரல் 22 முதல் 1998 ஏப்ரல் 23 வரை துணைவேந்தராகப் பதவியில் இருந்தவர். அவரது பெண்ணிய ஈடுபாட்டுக்கு கட்டியம் கூறுவதுபோன்ற நிகழ்வுகள் பலவற்றை உருவாக்கிவிட்டுத்தான் அங்கிருந்து கிளம்பினார். பல்கலைக் கழகத்தின் எல்லாத் தளங்களிலும் பெண்களின் பாதுகாப்பும் ஈடுபாடும் உரிமைகளும் நிலைநாட்டப்படவேண்டும் என்பதைக் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணிப்பு செய்வார் என்பதற்குப் பல நிகழ்வுகளை எடுத்துக் காட்டுகளாகச் சொல்லலாம்.

பல்கலைக்கழகத்தில் பலவற்றையும் கலந்துபேசி முடிவுசெய்யும் அவை நிகழ்வுகள் சில உண்டு. அவற்றில் கல்வி நிலைக்குழு(Standing Committee of Academic Affairs-SCAA ) வும், ஆட்சிப்பேரவை(Senate)யும் பெரியவை. ஆட்சிமன்றக் குழு(Syndicate) சிறியது. ஆனால் அதிகாரம் மிக்கது.அதில் தேர்வுசெய்யப்பட்ட கல்லூரி முதல்வர்கள், ஆசிரிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்று அவர்களின் சார்பாகப் பேசுவார்கள். பல்கலைக்கழகத்துறையின் பேராசிரியர்கள், இணைப்பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் நியமன அடிப்படையில் இடம்பிடிப்பார்கள். சட்டமன்ற உறுப்பினர்களும் நியமன உறுப்பினர்களாக இடம்பெறுவார்கள். சமூக ஆளுமைகளும் ஆளுநரின் நேரடி நியமனம் வழியாக இடம்பெறுவார்கள்.அத்தோடு அரசின் நிதி, கல்வித்துறைச் செயலாளர்களும் பணி வழியாகப் பங்கெடுப்பார்கள். இதன் உறுப்பினர்கள் எல்லா அவைகளிலும் பொறுப்பு அடிப்படையில் பங்கேற்பாளர்கள். எதையும் நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட குழு. அதில் மறுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முடியாது. 

கல்வி நிலைக்குழுவில் பாடத்திட்டக் குழுவின் தலைவர்களும் சிறப்பு அழைப்பாளர்களும் இருப்பார்கள். கல்விநிலைக் குழுவில் பாட த்திட்டம், தேர்வுமுறை, கற்பித்தல் முறைமைகள், ஆய்வு வழிகாட்டுதல் போன்றவற்றை விவாதிக்கும் கல்லூரி முதல்வர்களும் பல்கலைக்கழகத் துறைத் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் தேர்வுசெய்யப்பட்ட ஆசிரியர், மாணவர் உறுப்பான்மையினரும் உறுப்பினர்களாக இருக்கும் அவை ஆட்சிமன்றக்குழு. இதில் கல்லூரி நிர்வாகம், மாணாக்கர் சேர்க்கை, புதிய கல்லூரிகள், பட்டங்கள் அறிமுகம் போன்றனவும் அரசுக்கும் பல்கலைக்கழகத்திற்குமான தொடர்புகள் போன்றன விவாதிக்கப்படும். இதைத் தவிர பல்கலைக்கழகத்திற்கு வழிகாட்டும் சான்றோர் குழுவும் உண்டு. உயர்கல்வி, அறிவியல் கண்டுபிடிப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்றோர் அதில் நியமனம் பெறுவார்கள்.

பெண்கள் தொடர்பான சொல்லாடல்களைப் பரந்த உறுப்பான்மை கொண்ட கல்வி நிலைக்குழுவிலும் ஆட்சிப் பேரவையிலும் விவாதிக்கும் வண்ணம் தூண்டுதல்களைச் செய்துவிடக்கூடிய திறமையைக் கைக்கொண்டவர் துணைவேந்தர் வே. வசந்திதேவி என்பதற்கு அவரோடு பணியாற்றிய அந்த ஓராண்டுக்குள் இரண்டு நிகழ்வுகள் சான்றுகளாக இருந்தன. இரண்டில் எது கல்வி நிலைக்குழுவில் விவாதிக்கப்பட்டது? எது ஆட்சிப்பேரவையில் விவாதிக்கப்பட்ட து? என்பது இப்போது நினைவில் இல்லை. முதலாவது நிகழ்வு மகளிர்தினத்தை ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் கொண்டாட வேண்டும் என்பதற்கான ஒத்திவைப்புத் தீர்மானம்; இன்னொன்று திருநெல்வேலி சாரதா கல்லூரி மாணவிகளுக்கு சீருடையைக் கட்டாயமாக்கும் முறையைக் கண்டித்து நடந்த விவாதம். பெண்கள் குறித்த விவாதங்களைப் பல்கலைக்கழக அவைகளில் விவாதிப்பதோடு அடுத்தநாள் தினசரி இதழ்களின் முக்கியச் செய்திகளாக்கப்பட்டு நெல்லை, தூத்துக்குடி, கன்யாகுமரி மாவட்டங்களின் மக்களுக்கும் அது கொண்டுபோகப்பட வேண்டும் என்பதுதான் துணைவேந்தரின் முக்கியமான நோக்கம்.

 மகளிர் தினத்திற்கான ஒத்திவைப்புத் தீர்மானத்தை முன்மொழிந்தவர் குற்றாலம் பராசக்தி கல்லூரியின் அப்போதைய முதல்வரும் தமிழ்த்துறைத் தலைவருமான பிரேமா அருணாசலம். பேச்சாளரும் எழுத்தாளருமான அ.பிரேமா, தனது கல்லூரியில் ஒரு நாடகப்பட்டறைக்கு ஒழுங்குசெய்து பெண்ணியப் பொருண்மைகளில் நாடகங்கள் தயாரிக்க ஏற்பாடு செய்தார். அதற்காக அக்கல்லூரியில் தங்கியிருந்த நாட்கள் நினைவில் இருக்கின்றன. முனைவர் வசந்திதேவி காலத்தில் தான் வந்தனா சிவாவின் சூழலியல் பெண்ணியம் தொடர்பான நூலொன்று அனைத்து மாணவர்களுக்குமான பாடத்திட்டத்தின் பகுதியாக ஆக்கப்பட்டு மாணாக்கர்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது.

பெண்களின் விழிப்புணர்வு, பெண்களின் உரிமைகள், பெண்களுக்கான விடுதலை பற்றிய கருத்தியல் பரப்புரையை மட்டுமே பல்கலைக்கழகத்தில் பேசு பொருளாக்கினார் துணைவேந்தர் வசந்திதேவி என்று சொல்லமுடியாது. செயல்படும் பெண்களைக் கண்டறிந்து பல்கலைக்கழக வளாகத்திற்குள் வெவ்வேறு நிகழ்வுகளில் பங்கெடுக்கச் செய்தார். கருத்தியல் விவாதங்களை முன்னெடுப்பவர்களுக்கிணையாகச் செயலாளிகளையும் அழைத்துவரச் செய்து அவர்களது அனுபவங்களை மாணாக்கர்களிடம் சொல்லவைத்தார். இதன் உச்சமாக மாணவிகளிடம் சைக்கிள் ஓட்டும் பழக்கத்தை உண்டாக்க வேண்டும் என்ற முன்னெடுப்பைச் சொல்ல லாம். இலவச மிதிவண்டித்திட்டமெல்லாம் இல்லாத காலம் அது.

ஒவ்வொரு பெண்கள் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அணியிலும் மிதிவண்டி ஒன்றை வாங்கி மாணவிகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்.அந்தப் பயிற்சியைக் கல்லூரிகளின் மைதானங்களில் தரவேண்டும் என அறிவித்தார். இப்பயிற்சிக்காகப் பலரும் கல்லூரிகளுக்கு மிதிவண்டிகளை நன்கொடையாக அளிக்க முன்வந்தனர். ஒரு பெண்ணுக்கு அந்தப் பயிற்சி இருக்கும் நிலையில் அவரிடம் ஒரு மிதிவண்டி இருந்தால் அவரால் தற்சார்பு நிலை எடுக்க முடியும் என்பதற்குப் பல உதாரணங்களைத் தென்மாவட்ட அளவில் காட்ட முடியும். இந்தப் பொருண்மையில் ஒரு புகைப்படப் போட்டி அறிவிக்கப்பட்ட பல படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. மீன்கூடையோடும் காய்கறிக்கூடையோடும் மிதிவண்டிகளை ஓட்டும் பெண்களைப் பார்ப்பது அப்போது அபூர்வம். ஓட்டமுடியாத கணவரைப் பின்னால் உட்காரவைத்து ஓட்டிச்சென்ற பெண் என்ற பொருண்மையில் ஒரு படம் பரிசு வாங்கியது நினைவில் இருக்கிறது. இருபது ஆண்டுகளுக்குப் பின்னால் இப்போது எல்லாவகை வாகனங்களையும் ஓட்டிச் செல்லும் பெண்களால் சாலைகள் நிரம்பி வழிகின்றன. பேருந்தை ஓட்டிய முதல் பெண் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்துதான் வந்தார்.

1998 இல் சாரதா பெண்கள் கல்லூரியின் சீருடைத்திட்டம் கடும் விமரிசனத்தைச் சந்தித்தது. அடிப்படைவாதச் சிந்தனையாகவும் பிற்போக்குக் கருத்தியலாகவும் மாணவியருக்கான சீருடைத் திட்டம் அடுத்த சில ஆண்டுகளில் பெரும்பாலான கல்லூரிகளில் கட்டாயமாக்கப்பட்டது கல்வியுலகத்தின் நகைமுரண் நிகழ்வு. கன்யாகுமரி மாவட்டத்தில் தோன்றிய பல கல்லூரிகள் -குறிப்பாக இந்துமதம் சார்ந்த அமைப்புகளின் கல்லூரிகள் ஒவ்வொன்றும் மாணவிகளுக்கான சீருடையை அறிமுகம் செய்தன.

 தொடர்ந்து கல்லூரிகள் பலவும் இருபாலர் படிக்கும் கல்லூரிகளாக மாறியபோது, பெண்களின் பாதுகாப்புக்காகச் சீருடை தேவைப்படுகிறது என்ற கருத்து கூறப்பட்ட து;வலிமை பெற்றது. சரியாகப் பத்தாண்டுகளில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் மட்டும் சீருடை அணிபவர்களாக மாறிவிட்டனர். இப்போது மாணவர்களும் கூடச் சில கல்லூரிகளில் சீருடையோடுதான் செல்கின்றனர். சீருடைக்குப் பின்னால் இருக்கும் கண்காணிப்பை ஆசிரியர்கள் விரும்புகிறார்கள் என்பதே துன்பியலின் இன்பியல். 

பல்கலைக்கழகத்தில் சேர்ந்த முதலாமாண்டு எனது பங்களிப்பு இல்லாமலேயே மகளிர் தினக்கொண்டாட்டங்கள் நடந்துவிட்டன. ஆனால் அடுத்த ஓராண்டுக்குள் எனது பங்களிப்போடு பெண்களுக்கான நிகழ்வுகள் பல நடந்தன. நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் நாடகப்பயிற்சிப் பட்டறைகளை ஏற்பாடு செய்தேன். பாண்டிச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறை ஆய்வாளர்களைச் சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து மூன்று நாள் பயிற்சிப்பட்டறையைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தினேன். மூன்று நாளும் பல்கலைக்கழக வளாகத்திலேயே தங்கிப் பயிற்சி பெறுவதற்காக மூன்று மாவட்டக் கல்லூரிகளிலிருந்தும் மாணவ மாணவிகள் தெரிவுசெய்யப்பட்டுப் பங்கேற்றார்கள். அவர்கள் போய் அவரவர் கல்லூரிகளில் சொல்லிய பின்னூட்டக்கருத்தோட்டங்கள் வழியாக க்கல்லூரிகளுக்கும் நாடகப்பட்டறைக்காக அழைக்கப்பட்டேன். தூத்துக்குடி புனித மரியன்னைக் கல்லூரியிலும் குற்றாலம் பராசக்தி கல்லூரியிலும் பெண்களுக்கான நாடகப்பட்டறைகள் நட த்தப்பெற்று அடுத்தடுத்த ஆண்டுகளில் பெண்கள் தினக்கொண்டாட்டங்களில் அவர்களின் பங்களிப்புகள் உறுதி செய்யப்பட்டன.

பல்கலைக்கழகத்தின் நாட்டுநலப்பணித்திட்டத்தோடு இணைந்து செயல்பட்டது போல் பல்கலைக்கழகத்தின் இளையோர் நல இயக்ககத்தோடும் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பும் உருவாக்கப்பட்டது. எனக்குப் பின்னால் ஆறுமாத இடைவெளியில் அருப்புக் கோட்டைக் கல்லூரியிலிருந்து திரு ச.மாடசாமி இளையோர் நல இயக்க கத்தின் இயக்குநராகத் தெரிவுசெய்யப்பட்டார். அவரது வருகைக்குப் பின்னால் மூன்று ஆண்டுகளும் பல்கலைக்கழகங்களுக்கிடையேயான கலைப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவ மாணவிகளிடையே பெண்கள் உரிமை தொடர்பான உரிப்பொருட்களை மையமிட்ட நாடகங்கள், பேச்சுப்போட்டிகள், கவிதை எழுதுதல் என ஊக்குவிப்புகளைச் செய்தோம். அந்த நேரத்தில் படித்த பல கல்லூரிகளைச் மாணாக்கர்கள் இப்போதும் தொடர்பில் இருக்கிறார்கள்.

முனைவர் வே வசந்திதேவியின் காலத்தில் நான் பணியாற்றிய தமிழியல் துறை மூன்று காத்திரமான கருத்தரங்குகளை நட த்தியது. பின்னை நவீனத்துவம்: கோட்பாடுகளும் தமிழ்ச் சூழலும்(1997) என்ற தலைப்பில் நடத்தியதுபோலவே அடுத்த ஆண்டு ஒரு மூன்று நாள் பயிலரங்கைப் பெண்ணியம்: கோட்பாடுகளும் தமிழ்ச் சூழலும்(1998) என்ற தலைப்பில் நடத்தினேன். அக்கருத்தரங்கில் அந்த நேரத்தில் பெண்ணிய விவாதங்களை முன்னெடுத்துப் பேசிக்கொண்டிருந்த கல்விப்புலப் பேராசிரியர்களான முனைவர் இரா.பிரேமா, முனைவர் அ.பிரேமா, முனைவர் தி.கமலி ஆகியோருடன் செயல்பாட்டாளரான ஓவியாவும் கலந்துகொண்டார். பேராசிரியை எம்.ஏ.சுசிலா அழைக்கப்பட்டும் வரமுடியாமல் போய்விட்டது. இவர்களோடு பெண்ணியச் சிந்தனையின் பால் ஈடுபாடுகொண்ட பேராசிரியர்கள் க.பஞ்சாங்கம், நடராசன் (ஆங்கிலத்துறை) ஆகியோர் பாண்டிச்சேரியிலிருந்தும், இ.முத்தையா, கா.சுந்தர் ஆகியோர் மதுரையிலிருந்தும் வந்து கட்டுரைகள் வாசித்தனர். எழுத்தாளர்கள் தமிழ்ச்செல்வன், எஸ்.ராமகிருஷ்ணன், கவிஞர் பாலா ஆகியோரும் கலந்துகொண்டு தங்கள் படைப்புகளுக்குள் பெண்ணியச் செய்திகள் பற்றிப்பேசினர். அக்கருத்தரங்கம் தமிழகப் பல்கலைக் கழகங்களில் பெண்ணியத்தைக் கோட்பாடு சார்ந்தும் செயல்தளம் சார்ந்தும் விவாதித்த முன்னோடிக் கருத்தரங்கு. அதைப்போன்றதொரு கருத்தரங்கைத் துறை பின்னர் நடத்தவே இல்லை. 

பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் பெண்ணிய வாசிப்புகள் என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கு ஒன்றைத் திட்டமிட்டபோது எழுத்தாளர்கள் சந்திராவும் இமையமும் மோதிக்கொண்டதால் தமிழகம் முழுவதும் பரபரப்பைக் கொண்டுவந்த கருத்தரங்கமாக மாறியது. இரண்டு நாட்கள் நடந்த கருத்தரங்கில் கவி கலாப்ரியா, கவி.சக்திஜோதி, எழுத்தாளர்கள் இமையம், சந்திரா ஆகியோருடன் கல்விப்புலத்தைச் சேர்ந்த முனைவர் பரிமளா (கடலூர்), முனைவர் புவனா(விழுப்புரம்) போன்றோருடன் ஆய்வாளர்கள் அஷ்வினி (நெல்லை) , பிரதீப் குமார்(கோழிக்கோடு) கட்டுரைகள் வழங்கினார்கள். இவ்விரு கருத்தரங்குகளுமே பெண்கள் தினத்தையொட்டி நடத்தப்பட்ட பெரும் கருத்தரங்குகள் என்பதை நினைத்துக்கொள்கிறேன்.
முனைவர் வே.வசந்திதேவி காலத்தில் போடப்பட்ட பெண்ணிய அடித்தளம் பின்னர் படிப்படியாகக் குறைந்து சராசரியாக நடக்கும் கோலப்போட்டி, சமையல்போட்டி, ஆடை அலங்காரப்போட்டி போன்றன நடக்கும் நிகழ்வுகளாகப் பல்கலைக்கழகத்திலும் கல்லூரிகளிலும் நடத்தப்பெற்றன. திரும்பவும் ஒரு பெண் துணைவேந்தர் பொறுப்பேற்றபோது மகளிர்தினக்கொண்டாட்டங்கள் மறு உயிர்ப்புப் பெறும் என நினைத்தேன். ஆனால் அவரது காலத்தில் கிறிஸ்துமஸ், ரம்ஜான், சரஸ்வதி பூஜை போன்ற சமயவிழாக்களே முக்கியத்துவம் பெற்றன.

இரண்டு ஆண்டுகள் அயல்நாட்டுப் பணியை முடித்துக்கொண்டு திரும்பியபோது பல்கலைக்கழகத்தில் விழாக்களே இல்லாத மௌன வளாகமாக மாறியிருந்தது. மாணவர் கொண்டாட்டம் ஒன்றில் ஏற்பட்ட சாதி மோதலில் அனைத்துக் கொண்டாட்டங்களும் நிறுத்தப்பட்டுவிட்டன. மகளிர் தினம் போன்ற நிகழ்வுகளைப் பெண்களின் விடுதிவிழாவாக மாற்றிவிட்டனர். விடுதியில் தங்கியிருக்கும் எனது மாணவிகளின் அழைப்பின் பேரில் அந்த விழாவில் அவர்களின் விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பு உணவுகளை உண்டுவிட்டு மேடையில் அவர்கள் பாடிய திரைப்படப்பாடல்களையும் அவற்றிற்கேற்ற ஆட்டங்களையும் ரசித்துக் கைதட்டிவிட்டு வந்திருக்கிறேன்.

 அப்படி மாற்றம் செய்யப்பட்ட விழாவொன்றில் நல்ல பேச்சாளர்களாகவும் கலை இலக்கியவாதிகளாகவும் இருக்கும் பெண்களை அழைக்கலாமே என்று யோசனை சொன்னபோது நீங்களே ஒருவரைச் சொல்லுங்கள் என்றார் அப்போதைய துணைவேந்தர் க.பாஸ்கர் ( 16-02-2016 முதல் 15-02-2019) ஒருவரைப் பரிந்துரை செய்யும்படி எனதுசொன்னார். ஏற்கெனவே துறைக்கு வந்து ஆய்வுக்கட்டுரைகளும் சொற்பொழிவுகளும் நிகழ்த்தியிருந்த முனைவர் சக்திஜோதியின் பெயரைச் சொன்னேன். தொலைபேசி எண்ணை வாங்கி அழைத்துவிட்டார் அப்போதைய விடுதிக்காப்பாளர். 2018 மகளிர் தின விழாவைக் கவி. சக்திஜோதியின் சிறப்புரையோடு கொண்டாடியது பல்கலைக்கழகம். அடுத்த ஆண்டு துணைவேந்தர் தொடர்வாரா? வெளியேறுவாரா? என்ற தவிப்பில் இருந்த தால் மகளிர் தினக் கொண்டாட்டங்கள் உற்சாகமாக இருக்கவில்லை.

இலட்சிய தாகம் கொண்ட கருத்தியல் நடவடிக்கைகளைத் தமிழ்ச் சமூகம் மறுபரிசீலனை செய்யாமலேயே கைவிடும் என்பதற்குப் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைப்பில் இருக்கும் கல்லூரிகளில் எந்தவிதத்தயக்கமுமில்லாமல் பெண்களுக்கெனச் சீருடை ஏற்கப்பட்டதே எடுத்துக்காட்டு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிஷ்கிந்தா காண்டம்- குற்றவியலும் உளவியலும்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்