மாற்றப்படும் சொல்லாடல்கள்

தமிழ்நாட்டு அரசியல் சொல்லாடல்களில் திரும்பத் திரும்ப உருவாகி உருண்டுகொண்டே இருக்கும் முதன்மையான எதிர்வு பிராமணர் x பிராமணர் அல்லாதோர் என்பது. இதனை உருவாக்கியவர்கள் பிராமணர் அல்லாதோரிலிருந்து உருவான பெரியாரும் அவரது வழித்தோன்றல்களும். அதனை மாற்றித் தமிழின் முதன்மைச் சொல்லாடலாக ஆக்கப்பட்ட சில எதிர்வுகள் உண்டு. அவற்றுள்,ஏழைகள் x பணக்காரர்கள் எனப்பேசிய வர்க்க அரசியல் முற்பட்டது. அதனைத் தொடர்ந்து உருவான தலித்துகள் x தலித்தல்லாதோர் எனப்பேசிய விளிம்பு நிலை அரசியல் காலத்தில் பிற்பட்டது.
வர்க்க அரசியலும் விளிம்புநிலை அரசியலும் தலா பத்தாண்டுகள் செல்வாக்கோடு இருந்தன. 

1960 களின் பிற்பாதியில் பிராமணரல்லாதார் அரசியல் அதிகாரத்திற்கு வந்துவிட்ட நிலையில் அதன் மீது ஏற்பட்ட அதிருப்திகளும் ஏமாற்றங்களும் வேறுவகைச் சொல்லாடல்களுக்குள் நகர்த்தும்/ நகரும் வேலைகளைச் செய்தன. அப்போது உருக்கொண்ட சொல்லாடலே வர்க்க அரசியல். சமத்துவம், சமதர்மம் எனப்பேசிய பொதுவுடைமை இயக்கங்களின் தோற்றம் பிராமணரல்லாதார் இயக்கங்களுக்கு முற்பட்டது என்றாலும் எல்லாத்தளத்திலும் முதன்மைப்பட்ட காலமாக எழுபதுகளின் பின்பாதியையும் எண்பதுகளின் முன்பாதியையும் சொல்லவேண்டும்.
1990 களில் ஏற்பட்ட சோவியத் வீழ்ச்சியும் உலக மயத்தின் எழுச்சியும் சேர்ந்து வர்க்க அரசியலைத் தளரச்செய்தன. அந்த இடத்தை விளிம்புநிலை அரசியல் அல்லது தலித் அரசியல் பிடித்துக்கொண்டது. பாபாசாகேப் அம்பேத்கரின் நூற்றாண்டுவிழா தந்த எழுச்சி விளிம்புநிலை அரசியலைக் குறிப்பான தலித் அரசியலாக மாற்றியது. அதன் செல்வாக்கும் வளர்ச்சியும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிதைக்கப்பட்டது . சிதைத்ததின் பின்னணியில் இருப்பது மத அரசியல். இந்தியாவில் மத அரசியல் என்பது பிராமண மேலாண்மையைத் திரும்பக் கொண்டுவர நினைக்கும் அரசியலன்றி வேறில்லை.

பிராமணர் x பிரமாணரல்லாதோர் அரசியலில் ஆதிக்கத்தின் குறியீடாக இருந்த பிராமணர்கள் வர்க்க அரசியலிலும் தலித் அரசியலிலும் பின்னகர்த்தப் பட்டார்கள். பிராமணர்களின் இருப்பு கண்ணுக்குப் புலப்படாத இருப்பாக மாற்றப்பட்டது. இந்த மாற்றம் ஒருவகையில் அவர்களைப் பாதிக்கப்பட்டோரின் இடத்திற்கு நகர்த்தியது. பிராமணர்களிலும் ஏழைகள் உண்டு என்ற கருத்தும், தலித்துகளைப் போலவே பிராமணர்களும் விளிம்புநிலையில் தள்ளப்பட்டுள்ளனர் என்ற சொல்லாடல்களும் உருவாக்கப்பட்டதை நினைவில் கொள்ளவேண்டும்.

1970 முதல் 2020 வரையிலான ஐம்பதாண்டுக்காலத்தை எனது அறிதலின் காலமாக நினைக்கிறேன். இந்த அரைநூற்றாண்டுக் காலத்தை கருத்தியல் எதிர்வுகள் வழியாகவே கடந்து வந்திருக்கிறேன். இப்படிக் கடந்ததைத் தொடரமுடியாமல் தடுக்கின்றன அண்மைய நிகழ்வுகள். குறிப்பாகக் கடந்த ஐந்தாண்டுகளின் நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் பாரதிய ஜனதாவை மையப்படுத்திய சொல்லாடல்களாக மாற்றிவிட்டார்கள்.
 
செல்வி ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின் தமிழ்நாட்டில் தொடரும் ஆட்சியை அந்தக் கட்சியே நடத்துகிறது என்ற பாவனையை உண்டாக்கி விட்டது. அ இ அதிமுகவின் உடையக்காரணம் அதுதான். உடைந்த கட்சியை ஒட்டுவைத்ததும் அதுதான். ஒட்டிய பின்னும் நிரந்தரத்தன்மையை உண்டாக்காமல் தற்காலிகத் தன்மையை நீட்டிப்பதின் பின்னணியிலும் அதுதான். இப்போது தேர்தல் கூட்டணிகளை உருவாக்குவதில் அது ஒரு முனை; வலுவான முனை. தனது இருப்பைக் காட்டிக்கொள்ள எதனையும் தவறவிடுவதில்லை பா.ஜ.க.. திருமதி சசிகலா குற்றவாளி எனச் சிறைக்கு அனுப்பியதும் அதுதான். டி.டி.வி. தினகரனை அமைதியாக்கியதும் அதுதான். ஆளுங்கட்சி உடையப் போகிறது என்பதின் பின்னணியில் இருப்பதும் அதுதான். சசிகலா அரசியலுக்கு வருகிறார் எனச் சொல்லவைப்பதும்; அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொண்டார் எனச் சொல்லத்தூண்டுவதும் அதுதான் எனக் கருத்துருவாக்கம் நடந்துவிட்டது. எல்லாம் அதுவாக இருக்கும் இந்த நிலையில் பாரதப்போரின் இடையில் உபதேசிக்கப்பட்ட கீதாபதேசத்தின் வரிகள் -எல்லாம் நானே; நீங்கள் எல்லாம் கருவிகள். கொல்வதும் நானே; கொடுப்பதும் நானே - என்பன நினைவுக்கு வரலாம்.
தமிழ்நாட்டு மக்களிடம் - வாக்காளர்களிடம் குறிப்பிட்ட வாக்குச் சதவீதம் எதுவும் இல்லாமலேயே எல்லாவற்றின் எதிர்வாகவும் அந்தக் கட்சி மாறிக் கொண்டுவிட்டது. எல்லாவற்றையும் தீர்மானிக்கும் இடத்தில் இருப்பதான பாவனையை உருவாக்கிவிட்டது. தி.மு.க x பா.ஜ.க., என்பதான இரட்டை எதிர்வின் பின் ஒன்றாக மாறிவிட்ட நிலையில், முன் ஒன்றாக மாறுவது அடுத்த கட்ட வேலை. அதுவும் நடக்கலாம்.
 
நடத்த நினைக்கும் இந்த நகர்வில் பா.ஜ.க. என்பது சனாதன மீட்பு; முதலாளிய மீட்பு என்பதை நேரடியாகச்சொல்லும் கருவிதான். அதன் கருத்தியல் வடிவம் என்பது பிராமணர் x பிராமரல்லாதார் என்று பெரியார் கட்டமைத்த எதிர்வின் தற்போதைய வடிவம் தான். இப்போதும் பிராமணர்கள் கண்ணுக்குப் புலப்படாத இருப்பாகப் பா.ஜ.க.விற்குள் அலைகின்றார்கள். கண்ணுக்குப் புலப்படாதனவற்றை மருத்துவ அறிவியல் கிருமிகள் என்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்