பாரதி நினைவுகள் : எட்டயபுரமும் ஏழாயிரம் பண்ணையும்..

எட்டயபுரத்திற்குச் சென்ற முதல் பயணத்தின்போது திரும்பத்திரும்ப இந்த ஊருக்கு வரவேண்டியதிருக்கும் என்று உள்மனது நினைத்திருக்க வேண்டும். அந்தப் பயணத்தில் பாரதியின் வீட்டுக்கு ஆட்டோவில் போய் இறங்கி வீட்டிலிருந்த பொருட்களைப் பார்த்ததையும் வீடிருக்கும் அந்த வீதியில் இரண்டு தடவை நடந்ததையும் தவிர வேறு எதையும் செய்யவில்லை. அது நெல்லையிலிருந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பணிக்குப் போய்ச் சேர்ந்த மூன்றாவது வாரத்தில் . ஆனால் மூன்று வருடங்களுக்குப் பிறகு எட்டயபுரத்தின் ஒவ்வொரு தெருவும் நடந்த இடங்களாகி விட்டன. ஆண்டுக்கு ஒன்றிரண்டு தடவையாவது சென்று வரவேண்டிய அலுவலக நடைமுறையை உருவாக்கித் தந்துவிட்டுப் போய் விட்டார் பேரா. க.ப. அறவாணன் அவர்கள்தான்.பாரதி ஆவணக்காப்பகம்

துணைவேந்தர் க.ப. அறவாணன் அவர்களால் உருவாக்கப்பட்ட பாரதி ஆவணக்காப்பகம் இப்போது வரை தமிழியல் துறையின் விரிவாக்க மையம் போலச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  திருவள்ளுவராண்டு 2032, மாசி 16 அன்று (28-02-2001) கவிஞர் இரா.வைரமுத்து அதனைத் திறந்து வைத்தார். அடிக்கல் நாட்டியவர் அப்போதைய செய்தி & விளம்பரத்துறை அமைச்சர் திரு.வ.முல்லைவேந்தன்; தி.ஆ.2031 ஆவணி 28 (11-09-2000). பேரா. வசந்திதேவி அவர்களுக்குப் பின் துணைவேந்தரான பேராசிரியர் க.ப. அறவாணன் (13-05-1998 முதல் 12-05-2001 வரை) அவர்களுக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய மையங்களை -விரிவாக்க மையங்களாக ஒன்றிரண்டு இடங்களில் தொடங்கவேண்டும் என்ற விருப்பம் இருந்தது. இலக்கியம் தொடர்பான விரிவாக்க மையத்தை தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்திலும், முதுநிலைப் படிப்புகளுக்கான விரிவாக்க மையங்களைக் கன்னியாகுமரியிலும் தொடங்க நினைத்தார். அவற்றை அவர் பதவியேற்ற முதல் ஆண்டிலேயே திட்டமிட்டிருந்தால் பதவிக்காலம் முடியும் முன்பே நடந்திருக்கும். பதவிக் காலத்தின் மூன்றாம் ஆண்டுதான் அதற்கான கருத்துருக்களை முன்வைத்தார்.

இரண்டிலொன்றாக எட்டயபுரத்தில் பாரதியார் நினைவு வளாகத்தில் கவிதையியல் துறையைத் தொடங்கிடும் பணியைச் செய்தார். அத்துறையோடு இணைந்த ஒன்றாகப் பாரதியார் ஆவணக்காப்பகத்தையும் நிறுவினார். கவிதையியல் துறை தொடக்கத்தோடு நின்று போனது. ஆவணக்காப்பகம் தமிழியல் துறையின் பொறுப்பில் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவ்விரண்டையும் உருவாக்கத் துணைவேந்தர் போட்ட திட்டங்களும் நிதி திரட்டியதும் வித்தியாசமான முயற்சிகள் எனச்சொல்ல வேண்டும். அவரைத் துணைவேந்தராக்கியவர் கலைஞர் மு.கருணாநிதி. அவரது காலத்தில் தான் தமிழ்ப்பேராசிரியர்கள் அதிகமும் துணைவேந்தராக ஆக்கப்பட்டார்கள். பேரா.க.ப. அறவாணன், கலைஞரின் திட்டங்களில் ஒன்றான நமக்கு நாமே திட்ட நடைமுறையை அப்படியே பயன்படுத்திப் பல்கலைக்கழக மையத்தை நிறுவினார் என்பதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று.

மக்களின் பங்களிப்பும் அரசின் பங்களிப்புமாக உருவாக்கப்பட்ட திட்டங்களே நமக்கு நாமே திட்ட அமைப்புகள். 1996 -2001 காலகட்ட த் திராவிட முன்னேற்றக்கழக அரசால் தமிழ்நாட்டுக் கிராமங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட இணைப்புச்சாலைத் திட்டங்கள், குடிநீர்த் திட்டங்கள், பள்ளி வளாகங்களில் வகுப்பறைகள், சாலையோரங்களில் பேருந்து நிறுத்த நிழற்குடைகள் போன்றன அப்போது நமக்கு நாமே திட்டத்தின்கீழ் செயல்வடிவம் பெற்றன என்பதை இப்போதும் இருக்கும் கல்வெட்டுகள் வழி அறியலாம். மாவட்ட ஆட்சித்தலைவர்களின் அதிகார வரம்பிற்குட்பட்ட நிதியைப் பல்கலைக்கழகத்தின் திட்டமொன்றிற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் திட்டமிட்டுத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு. மாலிக் பெரோஸ்கானை அணுகினார் துணைவேந்தர். அப்படி அணுகியபோது பல்கலைக்கழகம் நிறுவவுள்ள பாரதி ஆவணக்காப்பகம் மற்றும் கவிதையியல் துறைக்கான இடத்தை இலவசமாகப் பெறமுடியும் என்பதை முதலில் சாதனையாக்கிக் கொண்டார்.

எட்டயபுரத்தில் எழுத்தாளர் கல்கி போன்றவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட பாரதி நூற்றாண்டுவிழா நினைவு வளாகம் பெரியது. அதன் கிழக்குப் பகுதியில் திறந்தவெளி அரங்கு போன்றன உள்ளன. மேற்குப்பகுதி கட்டடங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது. அவ்வளாகம் தமிழக அரசின் செய்தி விளம்பரத்துறையின் பொறுப்பில் இருந்ததால் அதன் அமைச்சரைச் சந்தித்துப் பேசி, அனுமதி பெற்றதோடு அத்துறையின் அமைச்சர் மாண்புமிகு வ.முல்லைவேந்தனை அடிக்கல் நாட்ட அழைத்துவந்தார். கட்டடம் கட்டத் தேவையான நிதியில் ஒரு பகுதியைப் பல்கலைக்கழகம் முதலீடு செய்தால் அதற்கிணையாக மாவட்ட நிர்வாகம் நிதியை வழங்கும். பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய முதலீட்டிற்காகப் பல்கலைக்கழக நிதியெதையும் எடுக்காமல், புரவலர்கள் சிலரை அணுகினார். அதற்கு முதன்மைப் புரவலராக இருந்து நிதியுதவியவர் கோவில்பட்டி கே.ஆர். கல்லூரி தாளாளர் கே. இராமசாமி. அவரோடு சென்னை வணிகர் நல்லி குப்புச்சாமி அவர்களும் தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரித் தாளாளர் ஏ.பி.சி. வீ.சொக்கலிங்கம் அவர்களும் தந்த நிதியை -தலா ஒரு லட்சம்- முதலீடாக்கி அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பாரதி ஆவணக்காப்பகத்திற்கான ஈரடுக்குக் கட்டடத்தை நான்கே மாதங்களில் கட்டி முடிக்க ஏற்பாடு செய்தார்.

கவிதையியல் துறை என்னும் கருத்துரு



எட்டயபுரத்தில் செயல்பட வேண்டிய கவிதையியல் துறை என்ற புதிய துறை குறித்த கருத்துருவைத் துணைவேந்தர் விளக்கிய போது ஆங்கிலத்துறைப் பேராசிரியரும் கவிஞருமான முனைவர் இரா. பாலச்சந்திரனோடு (பாலா) நானும் அவரது இருக்கைக்கு முன்பு அமர்ந்திருந்தேன். பாரதியார் தொடங்கி நவீனத் தமிழ்க்கவிதை மரபைப் பிறமொழிகளுக்குக் கொண்டு செல்லும் நோக்கத்தோடு முதலில் ஆங்கிலத்தில் எழுதவும் மொழிபெயர்க்கவுமான வேலைகளைச் செய்யும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட கவிதையியல் துறை தமிழ்த்துறையின் துணையமைப்பாகவோ, ஆங்கிலத்துறையின் துணை அமைப்பாகவோ இல்லாமல் தனியொரு துறையாகவே செயல்படும் என்று சொன்னார். அதன் தலைவராகப் பாலாவை நியமிக்க இருப்பதாகவும் சொன்னார். அதன் பிறகு அத்துறையில் மொழிபெயர்ப்பில் ஈடுபாடும் புலமையும் கொண்டவர்களை ஆசிரியர்களாக நியமித்து வேலைகளைத் தொடங்கலாம். மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக்குழு இதுபோன்ற துறைகளுக்கு உடனடியாக நிதியுதவி வழங்கும் என்றெல்லாம் சொன்னார். வரும் ஆட்சிமன்றக் கூட்டத்தில் வைத்து அனுமதி வாங்கியபின் முறையாக அறிவிப்புச் செய்யலாம். இந்த ஆண்டே கவிதையியல் துறை பணியைத் தொடங்கலாம். அதற்கான நிதி ஒதுக்கீடாக ஒரு லட்சம் வைப்பு நிதி ஒதுக்கப்படும். ஆவணக்காப்பகச் செலவுக்கும் வைப்புநிதி ஒதுக்கப்படும். அத்தோடு தமிழக அரசு பாரதி மற்றும் பாரதிதாசன் பெயரில் நிறுவியுள்ள ஒருலட்சம் வைப்புநிதி கொண்ட அறக்கட்டளை வருவாய்களையும் கவிதையியல் துறைக்கே வழங்கலாம் என விரிவாகச் சொன்னார். சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு நல்லதொரு துறையாக விரிவடைய வாய்ப்பிருக்கிறது என்றே தோன்றியது. என்னோடு உடனிருந்த பாலாவுக்கும் ஏற்புடைய ஒன்றாகவே இருந்திருக்கவேண்டும். மறுப்போ, மாற்றுக்கருத்தோ சொல்லாமல் வெளியேறினோம். ஆனால் ஒருவாரத்தில் கவிதையியல் துறை தொடங்கும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

கவிஞர் பாலா என்ற பாலச்சந்திரன் அப்போது ஆங்கிலத்துறையில் இணைப் பேராசிரியர். துணைவேந்தர் பேரா. க.ப. அறவாணன் அவர்களின் ஆலோசனை வட்டத்தில் இருந்தார். பல்கலைக்கழகத்தில் பதிப்புத்துறை தொடங்கப்பட்டு அதன் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு அவருக்குத் தரப்பட்டது. அதற்கான முன்னோடி வேலையாகப் பாரதி, பாரதிதாசன் அறக்கட்டளைகளின் வட்டிவருவாயைக் கொண்டு இரண்டு தொகுப்பு நூல்கள் வெளியிடப்பட்டிருந்தன. இரண்டின் பதிப்பாசிரியரும் பாலாதான். பல்கலைக்கழகத்தின் செய்திமடல் (NEWS LETTER) கொண்டு வரப்பட்டது. அதன் ஆசிரியர் குழுவில் நானும் இருந்தேன்

கவிஞர் பாலாவைத் தலைவராகக் கொண்டு ஒரு துறையைத் தொடங்குவதில் பல்கலைக்கழகத்தின் நடைமுறை மரபு ஒன்று இடையிட்டது. அரசு கல்லூரியில் பணியாற்றிய நீண்ட அனுபவத்துக்குப் பின்னர் பல்கலைக்கழகப் பணிக்கு வந்தவர் பாலா. அவரைவிட வயதில் இளையவர்கள் இருவர் அவருக்கு முன்னால் பல்கலைக்கழகத்தில் பணியேற்று பதவி மூப்பில் இருந்தனர். அவர்களைப் பின்னுக்குத் தள்ளி இவரைக் கவிதையியல் துறையின் தலைவராக்கிப் பேராசிரியர் பொறுப்பு தருவது விதிமீறலாகக் கருதப்படும் என்ற பேச்சு எழுந்தது. ஆனால் துணைவேந்தரின் கவிதையியல் துறை என்னும் திட்டவரைவுக்கும் செயல்பாடுகளுக்கும் மற்ற இருவரும் பொருத்தமானவர்கள் இல்லை என்பதைப் பல்கலைக்கழகத்தில் இருந்த அனைவரும் ஏற்றுக்கொண்டனர்; ஆனாலும் மூத்தோர் இருக்கப் பின்னவரை முன்வரிசைக்குக் கொண்டுபோவதை ஒத்துக்கொள்ள முடியாது என்று பேச்சு கிளம்பியது. அதனால் ஆட்சிமன்றத்தில் எதிர்ப்பு வரக்கூடும் என்று கருதியதால் துணைவேந்தரும் பின்வாங்கி விட்டார் என்றும், கவி.பாலாவே பல்கலைக்கழக வளாகத்தைவிட்டுவிட்டு எட்டய புரத்திற்குப் போய்ப் புதியதொரு துறையை உருவாக்கி வளர்த்தெடுக்க முடியுமா? என்ற ஐயத்தில் பின்வாங்கிவிட்டார் என்றும் பரவலாகப் பேசப்பட்டது. இவையெல்லாமே காதில் விழுந்த செய்திகளே. எல்லாவற்றையும் எனக்கு விளக்கிக் காட்டிப் பேசிய துணைவேந்தரும் உடனிருந்த பாலாவும் கவிதையியல் துறை ஏன் கைவிடப்பட்ட து என்பதைக் குறித்து என்னிடம் விளக்கிச் சொல்லவில்லை. அவர்கள் சொல்லாதபோது நாம் கேட்பது சரியில்லை என்று நானும் விட்டுவிட்டேன்.

கவிதையியல் துறை தொடங்கப்பட்டிருந்தால் அதன் செயல்பாடு தமிழகப் பல்கலைக்கழகங்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்திருக்கக்கூடும். ஆனால் கவிதையியல் துறை கானல் நீராகவே தோற்றம் கொண்டிருந்துவிட்டு மறைந்துபோனது.










நெல்லைக்குக் குடும்பம் வந்தபின்பு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு எட்டயபுரம் போகவேண்டும். பாண்டிச்சேரியோடு பாரதிக்கிருந்த தொடர்பு பற்றித் தெரிந்த கதையோடு எட்டயபுரத்துத் தொடர்பையும் சொல்ல வேண்டும் என்று நினைத்த திட்டம் தற்செயலாக மாறிப்போனது. அவர்கள் இல்லாமலேயே முதல் தடவை எட்டயபுரம் போய்த்திரும்ப நேர்ந்தது.

அவர்கள் நெல்லைக்கு வருவதற்கு முன்பே பார்த்துவிட நினைத்த ஊர் இடைசெவல். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இடைசெவலை விட்டுவிட்டுப் பாண்டிச்சேரிக்கு வந்த கி.ரா. திரும்பவும் அந்த ஊருக்குப் போவதில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை என்பது எனக்குத் தெரியும். அவர் திரும்ப நினைக்காததற்கான காரணத்தை ஊரின் வெளிகளில் தேடமுடியாது என்பதும் எனக்குத் தெரியும். சொந்தங்கள் ஏற்படுத்திய மனக்கசப்புகளும் சில கதைகளில் விரிக்கப்பட்ட நிகழ்வுகளால் ஏற்பட்ட வருத்தங்களும் காரணங்களாக இருக்கக்கூடும் என நானே ஊகித்துக் கொண்டேன். ஊர்கள் என்பது நிலமும் நீர்நிலைகளும் மரங்களும் மந்தைகளும் என்பனவற்றைத் தாண்டி மனிதர்களின் மனங்களால் உருவானது. கொத்தைப்பருத்தியின் வெடிப்பையும் கரிசல் பூமியின் கதகதப்பையும், ஆட்டுக்கிடைகளைகளின் கொடாப்புகளையும் ஒற்றைப் பனைகளையும் வாளோடியான தெருக்களையும் விரித்துவிரித்து எழுதி, அவரது கதைகளை வாசித்தவர்களை அந்தப் பகுதிகளுக்கு நேரில் சென்று பார்க்க வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டிய கி.ராஜநாராயணனுக்கு அவற்றின் மீது என்ன கோபம் இருக்கப் போகிறது. அவரது மனஸ்தாபங்கள் மனிதர்களோடு தான் இருக்கவேண்டும்.

திருநெல்வேலிக்குப் போன சில நாட்களில் அவர் இல்லாத இடைசெவலுக்குப் போகவேண்டும் எனத்தோன்றியது. இடைசெவலுக்குப் போய்த் திசைமாறி ஏழாயிரம்பண்ணை எட்டயபுரம் பார்த்துத்திரும்பிய கதையைச் சொல்லத்தான் வேண்டும். எட்டயபுரத்தில் பாரதி பிறந்தான் என்பதைத் தாண்டி, அவனது கவிதைகளில் பாரதியைப் பற்றிப் பெரிய புனைவுகளோ நடப்புகளோ இல்லை. அதற்கு மாறாகக் கி.ராஜநாராயணன் தொடங்கிப் பூமணி, பா.செயப்பிரகாசம், தமிழ்ச்செல்வன், சோ.தர்மன் வழியாகக் கோணங்கி என நீளும் கரிசல் எழுத்துகளில் வரும் கிராமங்கள் சிலவற்றைத் தனியாகச் சென்று பார்க்கவேண்டும் என்ற நினைப்பு, பல ஆண்டுகளுக்கு முந்திய நினைப்பு. பாண்டிச்சேரியில் பலதடவை கி.ரா.வோடு நடந்தபடியே பேசிய பேச்சுகளின்போது அவர் விவரித்த வெளிகளைப் பார்க்கவேண்டும் என்று தோன்றியதற்கு முன்பே பூமணியின் எழுத்துகளில் வரும் இடவருணனைகள் அந்த நினைப்பைத் தூண்டியிருந்தன.

பூமணியின் பிறகுவையும் வெக்கையையும் ரீதியையும் படித்தபோது உண்டான ஆர்வத்தில் கரிசல் எழுத்துகளில் புனைவும் இருப்பும் என்பதான ஆய்வை மேற்கொள்ள நினைத்தபோது உண்டான நினைப்பு என்றுகூடச் சொல்லலாம். புனைகதைகளில் தென்வடலாகச் சாத்தூருக்கும் வடக்கே தொடங்கிக் கயத்தாறுவரை நீளும் கரிசல் பூமி கிழமேலாக அருப்புக்கோட்டை நாகலாபுரம் தொடங்கி வத்றாப்பு வரை பரவிய நிலப்பரப்பு. கோயில்பட்டியை மையமிட்ட கரிசல் எழுத்துப் பரப்பை, வேலா ராம மூர்த்தி போன்றவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தின் கண்மாய்க்குள்ளும் கொண்டுபோய்விட்டார்கள். அப்பரப்பைக் கால்நடையாகப்பார்ப்பதென்பது தீராத தீர்த்த யாத்திரயாகத் தான் இருக்கும். சில தடவை தென்வடல் பயணங்கள் வாய்த்திருக்கிறது. பேருந்து பயணத்தில் விருதுநகரைத் தாண்டிச் சாத்தூரைக் கடந்துவிட்டால் கண்ணில் நெளியும் கானலும் கறுப்பு மண்ணும் கயத்தார் வரை நீண்டுகொண்டே இருக்கும். அதுதான் குறுக்குவெட்டாக்க கிழமேலாகக் கரிசல் நிலப்பயணமாக அமைந்த து.

கரிசல் எழுத்தாளர்களின் வரிசைப்படி முதல் காலை இடைசெவலில் பதித்துவிட்டுப் பின்னர் மற்ற பகுதிகளுக்கும் போகலாம் என்பது திட்டம். கோயில்பட்டியில் இறங்கினேன். இறங்கி விசாரித்தபோது இடைசெவலுக்கே போகும் பேருந்து அப்போது இல்லை என்றார்கள். திருநெல்வேலியிலிருந்து மதுரைக்குப் போகும் பேருந்தில் ஏறியிருந்தால் இடைசெவலைத் தாண்டி ஒரு காபிக்கடையில் நிறுத்துவார்கள். அங்கிருந்து பக்கம் தான். போயிருக்கலாம். கோயில்பட்டியில் இறங்கிப் பேருந்தில் ஏறிப்போகலாம் என நினைத்தது தவறாகப்போய்விட்டது. இப்போதைக்கு அந்த வழியாகப் போகும் வண்டி எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அப்படி விசாரித்துக் கொண்டிருந்தபோது எட்டயபுரம் வழியாக ஏழாயிரம் பண்ணை போகும் பேருந்து கிளம்பிக் கொண்டிருந்தது. ஏறி உட்கார்ந்துவிட்டேன். ஏறி உட்கார்ந்தபோது எட்டயபுரத்தில் இறங்க வேண்டும் என்று நினைத்துத்தான் ஏறினேன். ஆனால். நடத்துநர் பக்கத்தில் வந்து நின்றபோது ஏழாயிரம் பண்ணை என்று சொல்லிவிட்டேன். ஏழாயிரம் பண்ணை என்ற அந்த ஊர் பற்றிய எனது மனச்சித்திரத்திற்கு வயது முப்பத்தைந்து இருக்கலாம்.

எனது பத்தாவது வயதில் பதிவாகி இரண்டாண்டுகள் திரும்பத் திரும்ப நினைக்கப்பட்ட பத்து வயதிற்குள் நான் பார்த்த பெரிய ஊர் மதுரைதான். ஏழாயிரம் பண்ணையும் மதுரைக்குப் பக்கத்தில் இருக்கும் ஊர் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அங்கிருந்து வந்துபோன கொத்தனார்களும் தச்சாசாரிகளும் ‘ராம்நாட் டிஸ்ட்ரிக்’ என்று சொல்லியிருந்தார்கள். அதைத்தாண்டி அவர்கள் அந்த ஊரைப்பற்றி எதுவும் சொன்னதாக நினைவில் இல்லை. எனது மனக்கணக்கில் ஏழாயிரம் பண்ணை கொத்தனார்களும் தச்சாசாரிகளும் நிரம்பிய ஊராகத்தான் பதிந்து கிடந்தது. எனது பெரியம்மா பிள்ளைகள் மூவருக்கும் இரட்டை மாடிவீட்டைக் கட்டிய கொத்தனார்களும் ஆசாரிகளும் அங்கிருந்து வந்து எங்கள் ஊரிலேயே தங்கியிருந்தார்கள்; அந்த வீட்டைக் கட்டிக்கொடுத்துக் கிரகப்பிரவேசம் முடிந்த பின்பு புத்தாடைகள் எல்லாம் வாங்கிக் கொண்டு போனார்கள்.

வீடு கட்டுவதற்கான செங்கல் அறுத்துச் சூளை போடுவதற்கான மண்ணைத் தயார் செய்த போது ஒருவர் வந்தார். அதுதான் ஏழாயிரம் பண்ணை என்ற ஊர் எனக்குள் வந்த நாள். ஊர்ப்பக்கத்திலிருந்த செம்மண்ணோடு தாழங்குளத்துக் களிமண்ணையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று யோசனை சொல்லிவிட்டுப் போனார். ஒருவண்டிக் களிமண்ணோடு அஞ்சுவண்டி செம்மண் என்று கலந்து செங்கல் அறுத்தார்கள். அங்கிருந்து தான் தச்சாசாரிகள் வந்தார்கள். தேக்கம் தடிகள் வாங்கிக் கட்டைகளாக அறுத்துப் போட்டுவிட்டு அவர்களும் போனார்கள். அவர்கள் போனதும் கொத்தனார்கள் வந்து கருங்கல்லால் அடித்தளம் போட்டது தொடங்கி அந்தக் கட்டடம் மெல்லமெல்ல வளர்ந்ததைப் பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டவர்கள் ஏழாயிரம் பண்ணைக்காரர்கள்தான்.

அறுத்துப் போட்ட தேக்கங்கட்டைகள் நிலைகள், ஜன்னல்கள், கதவுகள் என ஒவ்வொன்றாக மாறியபோது பக்கத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தவன் நான். இப்போது இந்த வீட்டைக் கட்டியதற்கு முன்னால் எங்கள் ஊருக்கு வந்ததில்லை என்றும், ஆனால் எங்கள் பெரியம்மாவின் உறவினர் வீட்டைக் கட்டுவதற்காக அவரது தந்தையார் வந்ததாகவும் சொன்னார். அப்படிச் சொன்னவர் பெயர் சங்கரப்பன். பெரியம்மாவின் வீடு முடிந்த பின் பக்கத்து ஊர்க்காரர்களும் ஏழாயிரம் பண்ணைக்காரர்களை அழைத்து வந்து வீடுகட்டினார்கள். சங்கரப்பன் காலையில் குளிக்காமல் ஒருநாளும் வேலையைத் தொடங்க மாட்டார். ஊருக்குக் கிழக்கே இருந்த அரண்மனைத் தோட்டத்து வட்டக் கிணற்றில் குளிக்கப்போகும்போது என்னையும் அழைத்துப் போவார். வட்டக்கிணறு பெரியது. கமலையில் ஏறிநின்று நேராக நீருக்குள் இறங்கும் விதமாக க்கைகளை மேலே உயர்த்தியும், உடலோடு ஒட்டி வைத்தும் குதிக்கும் வித்தையெல்லாம் அவர் தான் சொல்லித்தந்தார்.

முப்பத்தைந்து வருடற்கு முன்னால் நாற்பத்தைந்து வயதிலிருந்த ஏழாயிரம்பண்ணை சங்கரப்பனைப் போய்ப் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையோடு கோயில்பட்டியில் பயணச்சீட்டு வாங்கியபோது அவநம்பிக்கையாகத் தோன்றவில்லை. ஏழாயிரம் பண்ணையில் இறங்கி தேநீர்க்கடைகளிலும் கடைத்தெருக்களிலும் விசாரித்தபோதுதான் நிறைவேறாத ஆசை என்று தோன்றியது. ஏழாயிரம் பண்ணை நான்கைந்து சாதிகள் மட்டும் இருக்கக்கூடிய கிராமமாக இருந்தால் எனது தேடல் எளிதாக இருந்திருக்கும். ஆனால் அது ஒரு பேரூராட்சி அளவுக்கு இருந்த ஒரு நடுத்தரமான ஊர். அந்த ஊரில் முகவரி, புகைப்படம் போன்ற எதுவுமில்லாமல் ஒருவரை முப்பதாண்டுகளுக்குப் பின்னர் தேடுவது அபத்தம் என்று தோன்றியது.ஆனாலும் பெருஞ்சோர்வொன்றும் ஏற்பட்டுவிடவில்லை.

கொத்தனார்களும் ஆசாரிகளும் இருந்த பழைய தெருவொன்றைச் சொல்லி அங்கே போய் விசாரித்துப் பார்க்கச் சொன்னார் ஒருவர். அந்தத்தெருவிற்குள் நுழைந்தபோது மர அறுப்புப் பட்டறைகள் எதுவும் இல்லை. ஆனால் தச்சுப்பட்டறைகள் இருந்தன. இரண்டு மூன்று பட்டறைகள் ஏறி இறங்கியபின் சங்கரப்பன் இப்போது உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று மனசு தேற்றிக் கொண்டது. அதே வேகத்தில் கோயில்பட்டிக்குப் போவதற்கு நின்ற பேருந்தில் ஏறி எட்டயபுரத்தில் இறங்கிவிட்டேன்.

ஏழாயிரம் பண்ணையில் கிடைத்த ஏமாற்றத்தை எட்டயபுரம் ஈடுசெய்யும் என்று நினைக்கவில்லை. எட்டயபுரத்தில் உயிரோடிருக்கும் ஒருவரையும் நான் சந்திக்கப் போவதில்லை. கவி. பாரதி பிறந்த வீட்டைப் பற்றி வாசித்திருக்கிறேன். படங்களையும் பார்த்திருக்கிறேன். அந்தப் படங்களில் இருந்த தெருவில் நடந்து வீட்டிற்குள் திரும்பினால் போதும். அவன் பாடிய பாடல்களின் வரிகள் காதில் விழுந்தால் இன்னும் கூடுதல் தெம்பு கிடைக்கும். பேருந்து கிளம்பித் தெற்கு நோக்கிப் போனபோது கரிசலின் வெக்கை பேருந்துக்குள் வந்து போனது. தோப்பு, துரவு எனச் சொல்லிக் கொள்ளும்படியான பச்சையம் இல்லாமல் உழுது கிடந்த கரிசல் மண்ணில் பட்டுப்போன குதிரைவாலித் தட்டைகள் நின்றிருந்தன. பெரும்பாலான கிராமங்களில் நின்று நின்று வந்த பேருந்து எட்டயபுரம் வந்தபோது உடலெங்கும் தூசி படிந்து வியர்வையில் ஒட்டியது.

பாரதியின் வீடிருக்கும் தெரு அப்போதும் அக்கிரகாரத்தெருவாகத்தான் இருந்தது. பெரும்பாலும் ஓடு பாவிய வீடுகள். சிமெண்ட் திண்ணைகளின் முன்னால் காலையில் போட்ட கோலங்கள். வெயிலுக்காகத் திண்ணைகளில் உட்கார்ந்திருக்கும் பெண்கள். வரிசையாக நடப்பட்டு வளர்ச்சி அடையாமல் இருந்த வேப்பமரங்கள் என முதல் தடவை அந்தத் தெருவில் நடந்தபோது இருந்த காட்சிகள் நினைவில் இருக்கின்றன. திரும்பி நடந்து வந்தபோதுதான் எட்டயபுரத்தில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துச்சாமி தீட்சிதர் அங்குதான் இருந்தார் என்ற தகவலைச் சொன்ன கல்வெட்டைப் பார்த்தேன். கவி.உமறுப்புலவர் வீடும் அங்கிருக்கிறது என்பதும் தெரிந்தது. திரும்பவும் எட்டயபுரத்தில் சுற்றிவர வேண்டும் என்று தோன்றியது.

பேருந்து நிலையத்திற்குப் பக்கத்தில் இருக்கும் முத்துச்சாமி தீட்சிதர் நினைவிடம் சின்னப் பொய்கையோடும் பூந்தோட்டங்கள் கொண்ட குளிர்ச்சியான இடமாகவும் இருந்த து. ஆனால் உமறுப்புலவர் வீடு இருந்த தெருவுக்குக் குறுகலான சந்துவழியாகப் போகச் சொன்னார்கள். ஒரு தர்க்காவைப்போல பராமரிக்கப்பட்டிருந்த அந்த வீட்டிற்குள் அவரது சமாதி இருந்தது. இரண்டையும் பார்த்தபின்பு பாரதி நூற்றாண்டு நினைவு மண்டபம் இருக்கும் வளாகத்திற்கும் சென்று வந்துவிடலாம் என்று தோன்றியது. ஆனால் எதனையும் நின்று நிதானமாகப் பார்க்கவேண்டும் என்று தோன்றவில்லை. ஒருவேளை இந்த எட்டயபுரத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வருடந்தோறும் வரவேண்டியதிருக்கும்; அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று உள்ளுணர்வு நினைத்ததோ என்னவோ? பேருந்து நிலையத்திற்கு வந்து கோயில்பட்டிக்குப் போகும் பேருந்தில் ஏறியபின் பாரதியின் அக்கினிக்குஞ்சும் கரிசலின் தகிப்பும் கூடவே வந்தன.

*******
எட்டயபுரத்தில் தொடங்கப்பட இருந்த கவிதையியல் துறை கானல் நீரானாலும், அங்கு பாரதி ஆவணக்காப்பகம் உறுதி செய்யப்பட்ட து. அதன் செயல்பாட்டுப் பொறுப்பைத் தமிழ்த்துறையில் விரிவுரையாளராக இருந்த முனைவர் ஞா.ஸ்டீபன் வசம் ஒப்படைத்தார் துணைவேந்தர். அவருக்கு பொருட்களை ஆவணப்படுத்தி வைப்பதில் கொஞ்சம் அனுபவம் உண்டு. முன்பு பாளையங்கோட்டை நாட்டார் வழக்காற்றியல் துறை,வழக்காற்றியல் ஆவணக்காப்பகத்தை உருவாக்கியபோது அங்கு பணியாற்றியவர். துறையின் ஆசிரியர் பொறுப்பேற்றதால் அது தமிழியல் துறையின் பகுதியாக மாறியது.

தொடக்க ஆண்டுகளில் ஆவணக்காப்பகத்திற்கான நூல்களைப் பல்கலைக்கழக நிதியிலிருந்து வாங்கியும், பாரதி அன்பர்களிடமிருந்து இலவசமாகப் பெற்றும் கிடைக்காத இதழ்கள் நூல்கள் போன்றவற்றைப் பிரதி எடுத்தும் ஆவணப்படுத்தும் வேலையை அவரே மேற்கொண்டார். சில ஆண்டுகளுக்குப் பின்னரே ஆவணக்காப்பகத்திற்கு ஒரு நிரந்தரமில்லாத பதவிப்பொறுப்பில் நூலக உதவியாளர் பணி உருவாக்கப்பட்டு இப்போதும் அங்கிருக்கிறார். அதன் பொறுப்பில் இருக்கும் திரு முத்துசாமியை இன்னும் பல்கலைக்கழகம் நிரந்தரமாக்காமல் தற்காலிகப் பணியாளராக வைத்திருக்கிறது என்பது வேதனையான ஒன்று.

பாரதி ஆவணக்காப்பகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியையும் கவிதையியல் துறைக்கென ஒதுக்கப்பட்ட வைப்பு நிதியையும் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் பாரதி ஆவணக்காப்பகத்தில் பாரதியார் நினைவுவிழாப் போட்டிகள்/ கருத்தரங்குகள்/ சொற்பொழிவுகள் நடத்தலாம் என திட்டவரைவில் இருந்ததை ஆட்சிமன்றக் குழு ஏற்றுக் கொண்டது. அதனை ஏற்று ஒவ்வொரு ஆண்டும் ஒன்று அல்லது இரண்டு நிகழ்வுகளைத் தமிழியல் துறை அங்கு நடத்தத்தொடங்கியது. நிகழ்வுகள் நடக்கும் நாளில் தமிழியல் துறையே மொத்தமாக அங்கு போய்விட்டுத் திரும்பும் நிகழ்ச்சிநிரல் இப்போதும் தொடர்கிறது. பேரா. தொ.பரமசிவன் துறையின் தலைவராக இருந்தபோது இரண்டு நாள் கருத்தரங்குகளை அங்கு நடத்தினார். அதற்காக மாணாக்கர்கள் அங்கிருக்கும் பள்ளியொன்றில் தங்கவைக்கப்பட்டனர். எமது துறையில் பயின்றவர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகம். புதிய இடத்தில் காலைக் கடன்களுக்கான வசதியின்மை பெரும் தடையாக மாறிவிடும். அந்த ஆண்டோடு அங்கு தங்கும் திட்டம் கைவிடப்பட்டது. போய்த்திரும்பும் வகையிலேயே நிகழ்வுகளைத் திட்டமிட்டோம்.
2008 இல் நான் துறையின் தலைவராக ஆனபோது பாரதி ஆவணக்காப்பக நிகழ்வுகளை இரண்டாக மாற்றினேன். கருத்தரங்கு அல்லது போட்டிகளைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்துவதும் சிறப்பு அழைப்பாளர்களைக் கொண்டு நடக்கும் விழாவை மட்டும் எட்டயபுரத்தில் நடத்துவது என்று மாற்றம் செய்யப்பட்டது. பாரதி எழுத்துகளில் கட்டுரைப்போட்டி, வினாடிவினாப்போட்டி, பாடல் இசைக்கும் போட்டி, வரையும் போட்டி போன்றன அனைத்துக் கல்லூரி மாணாக்கர்களுக்குமாக நடத்தப்பெற்றது. அதனைப் பெறுவதற்காக மாணாக்கர்கள் எட்டயபுரம் வருவது கட்டாயமாக்கப்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் எங்கள் துறை மாணாக்கர்களோடு எட்டயபுரத்திற்கருகில் உள்ள தூத்துக்குடி, கோயில்பட்டி, நாகம்பட்டி, நாகலாபுரம் கல்லூரி மாணாக்கர்களைப் பார்வையாளர்களாக அழைத்து வருவதும் நடக்கிறது. அனைவருக்கும் மதிய உணவுடன், சிற்றுண்டிகளும் வழங்கப்படும். பாரதியையும் அறிந்துகொள்ளும் வகையில் சிறப்புச் சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்யப்பட்ட து. எனது நினைவில் கவிஞர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் எனப் பலரும் அங்கு வந்திருக்கிறார்கள். பார்த்திபராஜா, ஆனந்தகுமார், கவி. தேவேந்திரபூபதி, மருத்துவர் இராமானுஜம், எழுத்தாளர் நாறும்பூநாதன், மயன் ரமேஷ் ஆகியோர் வந்தது நினைவில் இருக்கிறது. அத்தோடு அங்கிருக்கும் இளசை மணியனின் பங்கேற்பும் தொடர்ந்து உதவிகரமாக இருந்தது. ஒவ்வொரு துணைவேந்தரும் அவர்களது மூன்றாண்டுப் பதவிக்காலத்தில் ஒருமுறையாவது எட்டயபுரம் வந்து பாரதியார் நினைவு வளாகத்தையும் அவரது வீட்டையும் பாரதி ஆவணக்காப்பகத்தையும் பார்த்துவிடுவார்கள்

ஒரு கட்டத்தில் எட்டயபுரம் போவதைக் கல்விச் சுற்றுலாவாக மாற்றும் திட்டத்தை முன்வைத்து மாறுதல் ஒன்றைச் செய்தோம். சொற்பொழிவு, போட்டியில் விருதுபெற்றவர்களுக்குப் பரிசு வழங்கல் என்னும் நிகழ்ச்சியோடு மதிய உணவு என்பதை நான்கு மணி நேர நிகழ்ச்சியாக்கி(10.00 -02.00)விட்டு மீதமுள்ள நேரத்தை எம் துறையின் மாணாக்கர்களுக்கான கல்விச்சுற்றுலா வரைபடத்தை தயாரித்தோம். காலையில் எட்டு மணிக்குக் கிளம்பி கயத்தாறு கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நினைவுக் கூடத்தை ப்பார்த்துவிட்டு நேராக எட்டயபுரம் போவோம். அங்கு நிகழ்வு முடிந்ததும் அங்கேயே இருக்கும் பாரதியார் இல்லம், உமறுப்புலவர் இல்லம் ஆகியவற்றைப் பார்த்துவிட்டுப் பாஞ்சாலக்குறிச்சியில் கட்டபொம்மன் அரண்மனை, பிறகு ஒட்டப்பிடாரத்தில் வ.உ.சி. நினைவில்லம் என ஒரு வட்டப்பாதைச் சுற்று முடித்து பாளையங்கோட்டைக்கு வரும் போது இரவு எட்டு மணி ஆகிவிடும். இந்த வட்டப்பாதை சில ஆண்டுகளில் ஒட்டப்பிடாரத்துக்குப் பதிலாகத் தூத்துக்குடி துறைமுகம் என மாறியிருக்கிறது. இந்தப் பயணம் அநேகமாக எனது நெல்லை இருப்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்று வந்த பயணமாக மாறிவிட்டது. இந்தச் சிற்றுலாவில் மட்டுமே இந்த இடங்களைப் பார்த்த மாணவர்களே அதிகம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிஷ்கிந்தா காண்டம்- குற்றவியலும் உளவியலும்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்