கவிதை தினத்தில்...


கவிதைகள் தினத்தையொட்டி நேற்று மனுஷ்யபுத்திரன் தனது வருத்தமான பதிவை எழுதியிருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் -2018 ,உலகக் கவிதை நாளையொட்டி 30 கவிதைகளை முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தேன் என்பதை முகநூல் நினைவூட்டியது. அதல்லாமல் வெவ்வேறு ஆண்டுகளில் கவிதை தினத்தில் கவிதைகளைப் பதிவேற்ற்றம் செய்துள்ளேன். நாற்பது கவிகள் இக்கவிதைகள் பெரும்பாலும் நேரடியாகப் பேசும் கவிதைகள்.

இந்த ஆண்டும் கவிதைகளைப் பதிவேற்றம் செய்திருந்தால் இந்த நாற்பதுபேர் அல்லாமல் இன்னும் ஒரு 25 பேரின் கவிதையைச் சேர்த்திருப்பேன். கைவசம் கவிதைப்புத்தகங்கள் இல்லாத இடத்தில் இருப்பதால் இந்த ஆண்டு கவிதைகளைப் பதிவேற்றம் செய்யமுடியவில்லை. அப்போது கவிதைகளை வாசித்தவர்களின் ஆர்வத்தை போடப்பட்ட விருப்பக்குறிகள் காட்டின. கவிதைகளில் கலாப்ரியாவின் ’விதை’ கவிதைக்கும், ஆத்மாநாமின் ’காலம் கடந்த’ கவிதைக்கும் ஞானக்கூத்தனின் ’ அம்மாவின் பொய்கள்’ கவிதைக்கும் கிடைத்த வரவேற்பு தொடர்கின்றன.

எல்லாவகைக் கவிதைகளும் ‘சொல்லும் தன்னிலை’யை உருவாக்குவதின் வழியாகவே தனது வடிவத்தின் தொடக்கப்புள்ளியை வரைகின்றன. தொடங்கும் புள்ளிகளின் இணைவில் கோடுகளாக நகர்ந்துசெல்லும் வடிவம் எளிய வடிவம். கோடுகளைப் பின் தொடர்ந்து செல்லும் வாசகர்கள் அதன் திருப்பங்களையும் சுழற்சிகளையும் கண்டுதிரும்பி, சென்றுசேரும் இடத்தில் இருக்கும் இன்னொரு தன்னிலையைச் சந்திக்கின்றனர். கண்டறியப்பெற்ற இவ்விரு தன்னிலைகளுக்குமிடையே என்னென்ன சொற்கள், தகவல்கள், நிகழ்வுகள், கோபதாபங்கள் என்னும் உணர்ச்சிகள், ஒலித்திரள்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன என்று உணர்தல் நேரடிக்கவிதையின் இயல்பு.

இவையல்லாமல் இவற்றில் ஒன்றோ பலவோ பரிமாறியிருக்கக் கூடும் என்ற யூகத்திலிருந்து கவிதைக்கான அர்த்த்ததையும், அதன் பின்னணியாக நிற்கும் உணர்ச்சிகளின் அடுக்குகளையும் புரிந்துகொள்ளத் தூண்டுவது பல்லடுக்குக் கவிதைகளின் இயல்பு.

கவி வரையும் கோடுகளின் போக்கில் ஏற்படும் தடைகளென்னும் திரட்சிகளும் – வெளிப்படையாகப் பிரித்தறிய முடியாத படிம அடுக்குகளும் அணிகளும் உருவகங்களும் கவிதைசார்ந்த தொழில் நுட்பங்கள். தொழில் நுட்பங்கள் இல்லாத நேரடிக் கவிதைகளை மட்டுமே வாசிக்க விரும்புகிறவர்களுக்கும் நுட்பங்கள் கூடிய கவிதைகளை வாசிக்க நினைப்பவர்களுக்குமாகத் தமிழில் ஆயிரக்கணக்கான கவிதைகள் வந்துகொண்டே இருக்கின்றன.

கவிதைகளைப் பற்றி எழுதப்படும் கட்டுரைகளும் நூல்களும் கவிதைகளை அணுகுவதற்கு உதவும் தன்மையில் இருப்பன குறைவு. வெவ்வேறு கவிதையியல் நூல்கள் கவிதைகளை அணுகுவது, ரசிப்பது, விவாதிப்பது, விமரிசிப்பது பற்றித் தனித்தனியாகப் பேசியுள்ளன. அவையெல்லாம் உள்வாங்கப்பட்ட பின்புதான் கவிதைகளை வாசிக்கவேண்டும்; விவாதிக்க வேண்டுமென்பதில்லை.
 
தமிழில் எழுதப்பெற்ற கவிதையியலை உருவாக்கி உள்வாங்கிக்கொண்டாலே போதுமானது. உலகக் கவிதை ரசனைக்கும் தமிழ்க் கவிதையியல் முன்வைக்கும் ரசனைக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை என்பது எனது புரிதல். அப்படியான எழுத்துகள் தமிழுக்குத் தேவைப்படுகின்றது.. கவிதை தினத்தை அடுத்து ஒரு சபதம் எடுக்கலாம் என்று தோன்றுகிறது. அடுத்த ஆண்டு கவிதை தினத்திற்குள் 200 கவிகளின் தமிழ்க்கவிதைகளின் தொகுப்பொன்றை உருவாக்கி, ஏன் இவையெல்லாம் எனக்குப் பிடித்தமான கவிதையாக இருக்கிறது என எழுத செய்யவேண்டும். இந்தச் சபதம் நிறைவேற நமது காலத்தின் கடவுளாக மாறிக்கொண்டிருக்கும் கரோனா அருள் செய்யவேண்டும்.



1. கணியன் பூங்குன்றன்

தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்/ 192)

2 அம்மூவன்

கானல் அம் சிறுகுடிக் கடல் மேம் பரதவர்

நீல் நிற புன்னைக் கொழு நிழல் அசைஇ

தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி

அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு

அலரே அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை

அரிய ஆகும் நமக்கு எனக் கூறின்

கொண்டும் செல்வர்கொல் தோழி உமணர்

வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி

கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம்

மணல் மடுத்து உரறும் ஓசை கழனிக்

கருங் கால் வெண் குருகு வெரூஉம்

இருங் கழிச் சேர்ப்பின் தம் உறைவின் ஊர்க்கே

=========================. நற்றிணை/4


3 ஆதிமந்தி


மள்ளர் குழீஇய விழவினானும்,

மகளிர் தழீஇய துணங்கையானும்,

யாண்டும் காணேன், மாண் தக்கோனை;

யானும் ஓர் ஆடுகள மகளே; என் கைக்

கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த

பீடு கெழு குரிசிலும், ஓர் ஆடுகள மகனே.

நொதுமலர் வரைவுழித் தோழிக்குத் தலைமகள் அறத்தொடு நின்றது

---------------------------------------------- குறுந்தொகை/31



4 மருதனிளநாகன்


ஓங்கு மலைப் பெருவில் பாம்புஞாண் கொளீஇ,

ஒரு கணை கொண்டு மூவெயில் உடற்றிப்

பெரு விறல் அமரர்க்கு வெற்றி தந்த

கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப்

பிறை நுதல் விளங்கும் ஒருகண் போல,

வேந்து மேம்பட்ட பூந்தார் மாற!

கடுஞ் சினத்த கொல் களிறும்;

கதழ் பரிய கலி மாவும்,

நெடுங் கொடிய நிமிர் தேரும்,

நெஞ் சுடைய புகல் மறவரும், என

நான்குடன் மாண்ட தாயினும், மாண்ட

அறநெறி முதற்றே, அரசின் கொற்றம்;

அதனால், நமரெனக் கோல்கோ டாது,

‘பிறர்’ எனக் குணங் கொல்லாது,,

ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும்,

திங்கள் அன்ன தண்பெருஞ் சாயலும்,

வானத்து அன்ன வண்மையும், மூன்றும்,

உடையை ஆகி, இல்லோர் கையற,

நீநீடு வாழிய நெடுந்தகை! தாழ்நீர்!

வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில்

நெடுவேள் நிலைஇய காமர் வியந்துறைக்

கடுவளி தொகுப்ப ஈண்டிய

வடுஆழ் எக்கர் மணலினும் பலவே!

--------------------------------------- புறநானூறு/55.


5 பேயன்


வேந்துவிடு விழுத்தொழில் எய்தி ஏந்துகோட்டு

அண்ணல் யானை அரசுவிடுத்து இனியே

எண்ணிய நாள்அகம் வருதல் பெண்ணியல்

காமர் சுடர்நுதல் விளங்கும்

தேமொழி அரிவை தெளிந்திசின் யானே.

ஐங்குறுநூறு /467.


6. பாண்டியன் அறிவுடைநம்பி

படைப்புப்பல படைத்துப் பலரோடுண்ணும்

உடைப்பெருஞ் செல்வராயினு மிடைப்படக்

குறுகுறு நடந்து சிறுகை நீட்டி

இட்டும் தொட்டுங் கவ்வியுந் துழந்தும்

நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்தும்

மயக்குறு மக்களை யில்லோர்க்குப்

பயக்குறை யில்லைத்தாம் வாழு நாளே.

புறநானூறு/188.



7.ஒக்கூர் மாசாத்தி

கெடுக சிந்தை ; கடிதுஇவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை,
யானை எறிந்து, களத்துஒழிந் தன்னே;
நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்,
பெருநிரை விலக்கி, ஆண்டுப்பட் டனனே;
இன்றும் செருப்பறை கேட்டு, விருப்புற்று மயங்கி,
வேல்கைக் கொடுத்து, வெளிதுவிரித்து உடீஇப்,
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி,
ஒருமகன் அல்லது இல்லோள்,
‘செருமுக நோக்கிச் செல்க’ என’ விடுமே! (புறம்: 279)

8.பாரிமகளிர்

அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்,
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில்,
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே! (புறம்/112)


9.தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

நகுதத் கனரே, நாடு மீக் கூறுநர்;
இளையன் இவன் என உளையக் கூறிப்
படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்
நெடுநல் யானையும், தேரும், மாவும்,
படைஅமை மறவரும், உடையும் யாம் என்று
உறுதுப்பு அஞ்சாது, உடல்சினம் செருக்கிச்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமஞ் சிதையத் தாக்கி, முரசமொடு
ஒருங்கு அகப் படேஎன் ஆயின்; பொருந்திய
என் நிழல் வாழ்நர் சென்னிழல் காணாது,
கொடியன்எம் இறை எனக் கண்ணீர் பரப்பிக்,
குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக!
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக,
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக, என் நிலவரை;
புரப்போர் புன்கண் கூர,
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே.

புறநானூறு/ 72



10 அள்ளூர் நன்முல்லை



'குக்கூ' என்றது கோழி; அதன் எதிர்

துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம்-

தோள் தோய் காதலர்ப் பிரிக்கும்

வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே.

பூப்பு எய்திய தலைமகள் உரைத்தது

குறுந்தொகை /157

11 கபிலன்

சுடர் தொடீஇ! கேளாய் - தெருவில் நாம் ஆடும்
மணல் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து, வரிப் பந்து கொண்டு ஓடி ,
நோதக்க செய்யும் சிறு பட்டி, மேல் ஓர் நாள்,
அன்னையும் யானும் இருந்தேமா, 'இல்லிரே!
உண்ணு நீர் வேட்டேன்' என வந்தாற்கு, அன்னை
'அடர் பொன் சிரகத்தால் வாக்கிச், சுடர் இழாய்!
உண்ணு நீர் ஊட்டி வா' என்றாள்; என, யானும்
தன்னை அறியாது சென்றேன்; மற்று, என்னை
வளை முன்கை பற்றி நலியத், தெருமந்திட்டு,
'அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண்!' என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்,
'உண்ணு நீர் விக்கினான்' என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்
கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகை கூட்டம்
செய்தான், அக் கள்வன் மகன்!

கலித்தொகை /51

12 வைகையில் பெரு வெள்ளம்


நிறை கடல் முகந்து உராய், நிறைந்து, நீர் துளும்பும் தம்

பொறை தவிர்பு அசைவிடப் பொழிந்தன்று, வானம்;

நிலம் மறைவது போல் மலிர் புனல் தலைத் தலைஇ,

மலைய இனம் கலங்க, மலைய மயில் அகவ,

மலை மாசு கழியக் கதழும் அருவி இழியும் 5

மலி நீர் அதர் பல கெழுவு தாழ் வரை,

மாசு இல் பனுவற் புலவர் புகழ் புல

நாவின் புனைந்த நன் கவிதை மாறாமை,

மேவிப் பரந்து விரைந்து, வினை நந்தத்

தாயிற்றே தண் அம் புனல். 10

புதுப் புனலாட முற்படும் மகளிரது செயல்

புகை, பூ, அவி ஆராதனை, அழல், பல ஏந்தி,

நகை அமர் காதலரை நாளணிக் கூட்டும்

வகைசாலும், வையை வரவு.

வையையின் கரை உடைதலும், ஊரார்கிளர்ந்து எழுதலும்

தொடி தோள் செறிப்பத் தோள்வளை இயங்கக்

கொடி சேரா, திருக் கோவை காழ் கொளத் 15

தொகு கதிர் முத்துத் தொடை கலிழ்பு மழுக,

உகிரும் கொடிறும் உண்ட செம் பஞ்சியும்,

நகில் அணி அளறு நனி வண்டல் மண்ட,

இலையும் மயிரும் ஈர்ஞ் சாந்து நிழத்த,

முலையும் மார்பும் முயங்கு அணி மயங்க, 20

விருப்பு ஒன்றுபட்டவர் உளம் நிறை உடைத்தென,

வரைச் சிறை உடைத்ததை வையை: ‘ வையைத்

திரைச் சிறை உடைத்தன்று கரைச்சிறை; அறைக எனும்

உரைச் சிறைப் பறை எழ, ஊர் ஒலித்தன்று

மைந்தரும் மகளிரும் நீராடச் செல்லல்

அன்று, போர் அணியின் புகர்முகம் சிறந்தென, 25

நீர் அணி அணியின் நிரைநிரை பிடி செல:

ஏர் அணி அணியின் இளையரும் இனியரும்--

ஈரணி அணியின், இகல் மிக நவின்று,

தணி புனல் ஆடும் தகை மிகு போர்க்கண்

துணி புனல் ஆக, துறை வேண்டும் மைந்தின் 30

அணி அணி ஆகிய தாரர், கருவியர்,

அடு புனலது செல அவற்றை இழிவர்;

கைம்மான் எருத்தர், கலி மட மாவினர்,

நெய்ம் மாண் சிவிறியர், நீர் மணக் கோட்டினர்,

வெண் கிடை மிதவையர், நன் கிடைத் தேரினர், 35

சாரிகை மறுத்துத் தண்டா உண்டிகை

ஓர் இயவு உறுத்தர ஊர்ஊர்பு இடம் திரீஇச்

ஆற்றினது நீரோட்டம்

சேரி இளையர் செல அரு நிலையர்,

வலியர் அல்லோர் துறைதுறை அயர,

மெலியர் அல்லோர் விருந்து புனல் அயர, 40

சாறும் சேறும் நெய்யும் மலரும்

நாறுபு நிகழும், யாறு வரலாறு.

அந்தணர்கள் கொண்ட கலக்கம்

நாறுபு நிகழும் யாறு கண்டு, அழிந்து

வேறுபடு புனல் என, விரை மண்ணுக் கலிழை,

புலம் புரி அந்தணர் கலங்கினர், மருண்டு. 45

பிறரும் சேறு கலந்த புனல் கண்டு நீங்குதல்

மாறு மென் மலரும், தாரும் கோதையும்,

வேரும் தூரும், காயும் கிழங்கும்,

பூரிய மாக்கள் உண்பது மண்டி

நார் அரி நறவம் உகுப்ப ‘நலன் அழிந்து,

வேறாகின்று இவ் விரி புனல் வரவு‘ என, 50

சேறு ஆடு புனலது செலவு

வரை அழி வால் அருவி வாதாலாட்ட,

கரை அழி வால் அருவிக் கால் பாராட்ட,

‘இரவில் புணர்ந்தோர் இடைமுலை அல்கல்

புரைவது பூந் தாரான் குன்று‘ எனக் கூடார்க்கு 55

உரையோடு இழிந்து உராய், ஊரிடை ஓடிச்,

சலப் படையான் இரவில் தாக்கியது எல்லாம்

புலப்படப் புன்அம் புலரியின் நிலப்படத்

தான் மலர்ந்தன்றே

தமிழ் வையைத் தண்ணம் புனல். 60

இற்பரத்தையுடன் நீராடிய தலைமகன் காதற்பரத்தைக்கு வையை நீர் விழவு கூறியது

காதற்பரத்தையின் வினாவும் தலைமகன் மறுமொழியும்

‘விளியா விருந்து விழுவார்க்குக் கொய்தோய்,

‘தளிர் அறிந்தாய், தாம் இவை.‘

களவு வெளிப்பட்டது எனக் காதற்பரத்தை உரைத்தல்

‘பணிபு ஒழி பண்ப!--பண்டெல்லாம் நனி உருவத்து;

என்னோ துவள் கண்டீ?--

எய்தும் களவு இனி: நின் மார்பின் தார் வாடக் 65

கொய்ததும் வாயாளோ? கொய் தழை கை பற்றிச்

செய்ததும் வாயாளோ? செப்பு.‘

தளிரின் துவட்சிக்கு வையைப் பெருக்குக் காரணம் என

‘புனை புனை ஏறத் தாழ்த்ததை; தளிர் இவை

நீரின் துவண்ட; சேஎய் குன்றம்; காமர்

பெருக்கு அன்றோ, வையை வரவு?‘ 70

தலைவன் உரையை ‘உண்மை அன்று‘ என, அவள் மறுத்து உரைத்தல்

‘ஆம் ஆம்; அது ஒக்கும்; காதல்அம் காமம்

ஒருக்க ஒருதன்மை நிற்குமோ? ஒல்லைச்

சுருக்கமும் ஆக்கமும் --- சூள் உறல்!--- வையைப்

பெருக்கு அன்றோ? பெற்றாய் பிழை.

அருகு பதியாக அம்பியின் தாழ்ப்பிக்கும், 75

குருகு இரை தேரக் கிடக்கும்___பொழி காரில்,

இன் இளவேனில், இது அன்றோ வையை? நின்

வையை வயமாக வை.

செல் யாற்றுத் தீம் புனலில் செல் மரம் போல,

வவ்வு வல்லார் புணை ஆகிய மார்பினை; 80

என்னும் பனியாய் இரவெல்லாம் வைகினை;

வையை உடைந்த மடை அடைத்தக்கண்ணும்

பின்னும் மலிரும் பிசிர் போல, இன்னும்

அனற்றினை துன்பு அவிய, நீ அடைந்தக்கண்ணும்,

பனித்துப் பனி வாரும் கண்ணவர் நெஞ்சம் 85

கனற்றுபு காத்தி, வரவு!‘

தலைமகன் மேலும் கூறுதல்

‘நல்லாள் கரை நிற்ப, நான் குளித்த பைந் தடத்து,

நில்லாள் திரை மூழ்கி நீங்கி எழுந்து, என்மேல்

அல்லா விழுந்தாளை எய்தி, எழுந்து ஏற்று யான்

கொள்ளா அளவை, எழுந் தேற்றாள்: கோதையின் 90

உள் அழுத்தியாள் எவளோ? தோய்ந்தது யாது?‘ என--

காதற் பரத்தை கூற்று

தேறித் தெரிய உணர் நீ: பிறிதும் ஓர்

யாறு உண்டோ? இவ் வையை யாறு .

தலைமகன் பின்னும் சூளுற்று உரைத்தமை

‘இவ் வையை யாறு என்ற மாறு என்னை? கையால்

தலை தொட்டேன், தண் பரங்குன்று!‘ 95

விறலிக்குத் தலைமகள் கூறுதல்

‘சினவல்; நின் உண்கண் சிவப்பு அஞ்சுவாற்குத்

துனி நீங்கி, ஆடல் தொடங்கு; துனி நனி

கன்றிடின் காமம் கெடூஉம்; மகள்; இவன்

அல்லா நெஞ்சம் உறப் பூட்டக் காய்ந்தே

வல் இருள் நீயல்; அது பிழையாகும்‘ என, 100

இல்லவர் ஆட, இரந்து பரந்து உழந்து

வல்லவர் ஊடல் உணர்த்தர, நல்லாய்!

களிப்பர்; குளிப்பர்; காமம் கொடி விட,

அளிப்ப, துனிப்ப, ஆங்காங்கு ஆடுப;

ஆடுவார் நெஞ்சத்து அலர்ந்து அமைந்த காமம்

வாடற்க, வையை! நினக்கு. 106

------------------------------- நல்லந்துவன்/ பரிபாடல்/ வையை/6



13 இளங்கோவடிகள்



பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்

கொண்ட கொழுந ருறுகுறை தாங்குறூஉம்

பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்


சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்

ஈன்ற குழுவி எடுத்து வளர்க்குறூஉம் 55

சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்


தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்

வைவாளில் தப்பிய மன்னவன் கூடலில்

தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்

ஊர்சூழ்வரி

14 சீத்தலைச் சாத்தன்

பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஏற்ற
பிச்சைப் பாத்திரப் பெருஞ் சோற்று அமலை
அறத்தின் ஈட்டிய ஒண் பொருள் அறவோன்
திறத்து வழிப்படூஉம் செய்கை போல
வாங்கு கை வருந்த மன் உயிர்க்கு அளித்துத்
தான் தொலைவு இல்லாத் தகைமை நோக்கி
யானைத்தீ நோய் அகவயிற்று அடக்கிய
காயசண்டிகை எனும் காரிகை வணங்கி
'நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று


குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம்
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு
இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப்
பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால்
அன்னை கேள் நீ ஆர் உயிர் மருத்துவி
துன்னிய என் நோய் துடைப்பாய்!' என்றலும்
எடுத்த பாத்திரத்து ஏந்திய அமுதம்
பிடித்து அவள் கையில் பேணினள் பெய்தலும்
வயிறு காய் பெரும் பசி நீங்கி மற்று அவள்
துயரம் நீங்கித் தொழுதனள் உரைக்கும்


'மாசு இல்வாள் ஒளி வட திசைச் சேடிக்
காசு இல் காஞ்சனபுரக் கடி நகர் உள்ளேன்
விஞ்சையன் தன்னொடு என் வெவ் வினை உருப்பத்
தென் திசைப் பொதியில் காணிய வந்தேன்

15 பெரியாழ்வார்

மாணிக்கம்கட்டி வயிரம்இடைகட்டி

ஆணிப்பொன்னால்செய்த வண்ணச்சிறுத்தொட்டில்

பேணிஉனக்குப் பிரமன்விடுதந்தான்

மாணிக்குறளனே. தாலேலோ

வையமளந்தானே. தாலேலோ..

உடையார்கனமணியோடு ஒண் மாதுளம்பூ

இடைவிரவிக்கோத்த எழில் தெழ்கினோடு

விடையேறுகாபாலி ஈசன்விடுதந்தான்

உடையாய். அழேல்அழேல்தாலேலோ

உலகமளந்தானே. தாலேலோ.



என்தம்பிரானார் எழில்திருமார்வர்க்கு

சந்தமழகிய தாமரைத்தாளர்க்கு

இந்திரன்தானும் எழிலுடைக்கிண்கிணி

தந்துஉவனாய்நின்றான்தாலேலோ

தாமரைக்கண்ணனே. தாலேலோ.

சங்கின்வலம்புரியும் சேவடிக்கிண்கிணியும்

அங்கைச்சரிவளையும் நாணும்அரைத்தொடரும்

அங்கண்விசும்பில் அமரர்கள்போத்தந்தார்

செங்கண்கருமுகிலே. தாலேலோ

தேவகிசிங்கமே. தாலேலோ.



எழிலார்திருமார்வுக்கு ஏற்குமிவையென்று

அழகியஐம்படையும் ஆரமும்கொண்டு

வழுவில்கொடையான் வயிச்சிரவணன்

தொழுதுஉவனாய்நின்றான்தாலேலோ

தூமணிவண்ணனே. தாலேலோ.



ஓதக்கடலின் ஒளிமுத்தினாரமும்

சாதிப்பவளமும் சந்தச்சரிவளையும்

மாதக்கவென்று வருணன்விடுதந்தான்

சோதிச்சுடர்முடியாய். தாலேலோ

சுந்தரத்தோளனே. தாலேலோ.



கானார்நறுந்துழாய் கைசெய்தகண்ணியும்

வானார்செழுஞ்சோலைக் கற்பகத்தின்வாசிகையும்

தேனார்மலர்மேல் திருமங்கைபோத்தந்தாள்

கோனே. அழேல்அழேல்தாலேலோ

குடந்தைக்கிடந்தானே. தாலேலோ.



கச்சொடுபொற்சுரிகை காம்பு கனவளை

உச்சிமணிச்சுட்டி ஒண்தாள்நிரைப்பொற்பூ

அச்சுதனுக்கென்று அவனியாள்போத்தந்தாள்

நச்சுமுலையுண்டாய். தாலேலோ

நாராயணா. அழேல்தாலேலோ.



மெய்திமிரும்நானப்பொடியோடு மஞ்சளும்

செய்யதடங்கண்ணுக்கு அஞ்சனமும்சிந்துரமும்

வெய்யகலைப்பாகி கொண்டுஉவளாய்நின்றாள்

அய்யா. அழேல்அழேல்தாலேலோ

அரங்கத்தணையானே. தாலேலோ.



வஞ்சனையால்வந்த பேய்ச்சிமுலையுண்ட

அஞ்சனவண்ணனை ஆய்ச்சிதாலாட்டிய

செஞ்சொல்மறையவர்சேர் புதுவைப்பட்டன்சொல்

எஞ்சாமைவல்லவர்க்கு இல்லைஇடர்தானே.

திருவாய்மொழி/ மூன்றாம் திருமொழி




16 மாணிக்கவாசகர்


நானாரென் நுள்ளமார் ஞானங்களார் என்னையாரறிவார்

வானோர் பிரானென்னை யாண்டிலேன் மதிமயங்கி

ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்

தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ


கண்ணப்ப னொப்பதோர் அன்பின்மை கண்டபின்

என்னப்பன் என்னொப்பில் என்னையுமாட் கொண்டருளி

வண்ணப் பணிந்தென்னை வாவென்ற வான்கருணைக்

சுண்ணப் பொன்னீற்கே சென்றூதாய் கோத்தும்பீ


நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப்

பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச்

சீயேது மில்லாதென் செய்பணிகள் கொண்டருளுந்

தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ



நான்றனக் கன்பின்மை நானுந்தா னும்மறிவோம்

தானென்னை யாட்கொண்ட நெல்லாருந் தாமறிவார்

ஆன கருணையும் அங்குற்றே தானவனே

கோனென்னைக் கூடக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ

தேவாரம் / எட்டாம் திருமுறை / திருக்கோத்தும்பி




17 ஆண்டாள்

வாரணமா யிரம் சூழ வலம்செய்து

நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்

பூரண பொற்குடம் வைத்துப் புரமெங்கும்

தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்



நாளை வதுவை மணமென்று நாளிட்டு

பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்

கோளரி மாதவன் கோவிந்த னென்பான் ஓர்

காளை புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்.


நாச்சியார் திருமொழி



18 தாயுமானவன்




சாதிகுலம் பிறப்பிறப்புப் பந்தமுத்தி அருவுருவத் தன்மை நாம ம்

ஏதுமின்றி எப்பொருட்கும் எவ்விடத்தும் பிரிவற நின்றியக்கஞ் செய்யும்

சோதியைமாத் தூவெளியை மனதவிழ நிறைவான துறிய வாழ்வைத்

தீகில்பர மாம்பொருளைத் திருவருளை நினைவாகச் சிந்தை செய்வாம்..

இந்திரசா லங்கனவு கானலின்நீ ரெனவுலகம் எமக்குத் தோன்றச்

சந்த தமுஞ் சிற்பரத்தா லழியாத தற்பரத்தைச் சார்ந்து வாழ்க

புந்திமகிழுற நாளுந் தடையறவானந்த வெள்ளம் பொலிக என்றே

வந்தருளுங் குருமௌனி மலர்த்தாளை அநுதினமும் வழுத்தல் செய்வாம்

பொருளாக க்கண்டபொரு ளெவைக்கும் முதற்பொருளாகிப் போதமாகித்

தெருளாகிக் கருதுமன்பர் மிடிதீரப்பருகவந்த செழுந்தேனாகி

அருளானோர்க் ககம்புறமென் றுன்னாத பூரண ஆனந்த மாகி

இருள்தீர விளங்குபொரு ளியாதந்தப் பொருளினையாம் இறைஞ்சி நிற்பாம்.

பிள்ளைக்கவி / 106



19 சுப்பிரமணிய பாரதி/ காதலோ காதல்



கண்டதொரு காட்சி கனவுநன வென்றறியேன்,

எண்ணுதலுஞ் செய்யேன், இருபது பேய் கொண்டவன்போல்

கண்ணும் முகமும் களியேறிக் காமனார்

அம்பு துளிகள் அகத்தே அமிழ்ந்திருக்க,

கொம்புக் குயிலுருவங் கோடிபல கோடியாய்

ஒன்றே யதுவாய் உலகமெலாந்தோற்றமுற

சென்றே மனைபோந்து சித்தந் தனதின்றி,

நாளொன்று போவதற்கு நான்பட்ட பாடனைத்தும்

தாளம் படுமோ? தறிபடுமோ? யார் படுவார்?

நாளொன்று போயினது; நானு மெனதுயிரும்,

நீளச்சிலை கொண்டு நின்றதொரு மன்மதனும்,

மாயக் குயிலுமதன் மாமாயத் தீம்பாட்டும்,

சாயைபோ லிந்திரமா சாலம்போல் வையமுமா

மிஞ்சி நின்றோம். ஆங்கு மறுநாள் விடிந்தவுடன்,

(வஞ்சனை நான் கூறவில்லை) மன்மதனார் விந்தையால்,

புத்திமனஞ் சித்தம் புலனொன் றறியாமல்,

வித்தைசெயுஞ் சூத்திரத்தின் மேவுமொரு பொம்மையென

காலிரண்டுங் கொண்டு கடுகவுநான் சோலையிலே

நீலிதனைக் காண வந்தேன், நீண்ட வழியினிலே

நின்றபொருள் கண்ட நினைவில்லை. சோலையிடைச்

சென்றுநான் பார்க்கையிலே செஞ்ஞாயிற் றொண்கதிரால்

பச்சைமர மெல்லாம் பளபளென என்னுளத்தின்

இச்சை யுணர்ந்தனபோல் ஈண்டும் பறவையெலாம்

வேறெங்கோ போயிருப்ப வெம்மைக் கொடுங்காதல்

மீறவெனைத் தான்புரிந்த விந்தைச் சிறுகுயிலைக்

காணநான் வேண்டிக் கரைகடந்த வேட்கையுடன்

கோணமெலாஞ் சுற்றிமரக் கொம்பையெலாம் நோக்கி வந்தேன்.



20 ஆத்மாநாம்/காலம் கடந்த


இன்றைய கிழமை மறந்துவிட்டது

இன்றைய தேதி மறந்துவிட்டது

இன்றைய மாதம் மறந்துவிட்டது

இன்றைய வருடம் மறந்துவிட்டது

சாலையில் செல்லும் வாகனங்கள் மட்டும்

இது இருபதாம் நூற்றாண்டு என்கின்றன

அது ஒன்றுதான்

சொல்லி சொல்லி

நினைவில் மரத்துப் போயுள்ளது

மற்றபடி

அதே தேர்த் திருவிழாக்கள்

கும்பாபிஷேகங்கள்

மதகுருமார்கள்

மந்திரிப்பெயர் சூட்டிக் கொண்ட

அரச குமரர்கள்

சொத்துச் சண்டைகள்

பிரியும் குடும்பங்கள்

போட்டி பொறாமை காழ்ப்புணர்ச்சி

போர் வெறி

கொலை மிரட்டல்

ஜனநாயக சர்வாதிகாரம்

சட்டப் புத்தகங்கள்

ஆழ்ந்துறங்கும்

மனித உரிமைகள்

நிலையின்மை

கவலையை மறக்க

பத்திரிகைகள் சினிமா

ஜோதிட சமய இதழ்கள்

எதற்கிந்தக் கவிதை

எந்தக் குடிமகனுக்காக

நான் எழுதுவதை நிறுத்துகிறேன்

என் காலடியில்

கொஞ்சும் நாய்குட்டிக்காக

இன்னும் எனது நம்பிக்கை

நசித்துப் போகவில்லை

இன்னமும் கொஞ்சம்

அன்பு மீதமிருக்கிறது.

============

21 பிச்சமூர்த்தி/ காலண்டர்


ஆள் பார்த்து

அனுப்பி வைத்தானே,

காலண்டர் எனக்கெதற்கு?

ஆனாலும் நன்றி-

அனுப்பி வைத்தவருக்கு.

பணம்

உறவு,

உலகளக்கும் வாய்மரக்கால்-

ஒரு தொடர்பும் இல்லையே.

ஆனாலும் அங்கசங்க மற்ற ஆளுக்கு,

துணையற்ற வழிப்போக்கனுக்கு,

தனக்குள்ளே தூர் எடுக்கும் சஞ்சாயக்காரனுக்கு

வழிபாடாய் வந்த

காலண்டருக்கு நன்றி.

அண்டாத ஆழத்தில்

கால் அண்ட

காலண்டர் கைக்கோலா?

தனக்கென்று தலைவைத்துப் படுக்க

அகமில்லார்க்கு

காலண்டர் குடைநிழலா?

உள்ளுக்கும் வெளிக்கும்

கணநேரக் கடலில்

கடியார மின்றி

நகரும் கப்பலுக்கு

காலண்டர் துருவமீனா?

ஜன்னல் வழி ரவிவிரல்

கடிகார முள்ளும்,

கருங்காக்கை நிழலமர்

பகல் முள்ளும்,

மஞ்சள் வலை வீசும்

மாலை முள்ளும்

பார்த்து,

மேடேறி

பள்ளத் திறங்கி

கோடி காணப்போகும் கண்ணுக்கு

காலண்டர் எதற்கு?

கடிகாரம் சிலந்தி

காலண்டர் வலை

கருத்துக்கள் காற்றாடி.

காற்றில் பறக்கவிட

நூல்ல் வேண்டும்

தூக்கிவிட ஆள் வேண்டும்.

காலம்

வெளி

காரண காரியத்தொடர்பு-

அவ்வளவும்

நான்விட்ட பட்டங்கள்.

காலண்டர் வால்தானே.

ஆனாலும்

காலண்டர் அனுப்பிய

நினைப்புக்கு வணக்கம்

குழந்தைகளுக் காகும்.

======================

22 பசுவய்யா/ சாத்திக்கிடக்கும் கதவுகள்


சாத்திக்கிடக்கும் சன்னல் கதவுகள் சிக்கிக்கொள்ளும்

அவ்வப்போது திறக்காத தப்பு

இப்போது குத்து, உள்ளங்கையால் பலம் கொண்டமட்டும்

மணிக்கட்டு நரம்புகள விர்ரென்று தெறிக்கும்

குத்து

தெறிக்கும்

விடாதே

ஒரு

உபகரணம் தேடியேனும் அதைத் திறந்துவிடு

வானத்தைப் பார்க்க உனக்குப் பல இடங்களுண்டு

வானம் உன் அறையைப் பார்க்க வேறு வழி எதுவுமில்லை

சிக்கும் கதவுகளைத் திறந்துவிடு.

========================= ==============



23 சு.வில்வரத்தினத்தின் வேற்றாகி நின்ற வெளி



வெளியாரின் வருகையோடு

வேர்கொண்டவாழ்வையும் பிடுங்கிக் கொண்டு

மக்களெல்லாம் வெளியேறிய ஓரிரவிற்குப்பின்

விடியப் பார்த்தால்

வாழ்வெனும் வெள்ளம் வற்றிக் கிடந்த திடலாய்

கிராமம்

முற்றத்துச் சூரியன்,

முற்றத்து நிலா,

முற்றத்துக் காற்றென,

வீட்டு முற்றங்களுக்கே உரித்தான

வாழ்வனுபவங்கள் விடைபெற்றுக் கொண்டன.

வேலிகளையும் வெளியார் வெட்டிப் போட்டார்கள்.

வாசல் கதவுகளை உடைத்துப் போட்டார்கள்.

உள்ளதையெல்லாம் கொள்ளையடித்தார்கள்

வீடுகள் திறந்தபடியே கிடந்தன.

திறந்த வாசல்களூடே நுழைந்த காற்று

கதவுகளை சாத்தியும் ,திறந்தும்,தள்ளியும்

உள்ளோடியோடி எதையெதையோ முயன்று

உறவின்மை கண்டபின் தோற்றோடி

வேற்றாகி நின்ற வெளியிடைத் தோய்கிறது.

=

24 இன்குலாப்பின் மிச்சப்பட்டுத் துடிக்கும் வாழ்க்கை

என்ன கெட்டது -நான்

இப்படியே இருப்பதால்

பேச எனக்கு வார்த்தைகள் உண்டு

கேட்கவும் செய்கிறேன்.

பார்.

என் உதடுகளில் நெளிவதைப்

புன்னகை இல்லை என்று

உன்னால்

சத்தியம் செய்ய முடியுமா.?

நான் பார்த்து ரசிக்கத் திரைப்படம் உண்டு.

கேட்டுக் களிக்கப் பாடல்கள் உண்டு

பக்கத்தில் படுக்க ஒரு பெண்துணை உண்டு.

இரவில் ஒருபோதும்

தூங்காமல் இல்லை.

தூக்கம் வண்ணக் கனவுகளால் தளும்பும்.

காலை எனது

கனவைக் கலைக்கும்.

நான் அணிந்து கொண்டு புறப்பட

பெட்டி போடப்பட்ட

சட்டை மட்டுமல்ல.

ஒரு வாழ்க்கையும்

வீட்டுக் கொடியில் தொங்குகிறது.

என் சக்திக்கு ஏற்ப

நான்

உன் விரல்களைக் கடிக்கும் போதே

என்னிலும் பெரிய வாய் ஒன்று

என்பிடரியைக் கவ்வுவதை

நீ

பார்க்கக் கூடும்.

இருந்தாலும்

நான் கொறித்துத் தீர்ப்பதற்கும்

சிலர் குதறித் தீர்ப்பதற்கும்

வாழ்க்கை

இன்னும்

மிச்சப்பட்டுத் துடிப்பதால்

என்ன கெட்டது

இதை

மாற்றித்தொலைக்க..?

======

25 சேரனின் எனது நிலம்


அன்றைக்குக் காற்றே இல்லை;

அலைகளும் எழாது செத்துப் போயிற்று

கடல்.

மணலில் கால் புதைதல் என

நடந்து வருகையில்

மறுபடியும் ஒரு சூரிய உதயம்.

இம்முறை தெற்கிலே-

என்ன நிகழ்ந்தது?

எனது நகரம் எரிக்கப்பட்டது;

எனது மக்கள் முகங்களை இழந்தனர்,

எனது நிலம், எனது காற்று

எல்லாவற்றிலும் அந்நியப்பதிவு

கைகளைப் பின்புறம் இறுகக் கட்டி

யாருக்காகக் காத்திருந்தீர்கள்?

முகில்களின் மீது

நெருப்பு

தன்சேதியை எழுதியாயிற்று!

இனியும் யார் காத்துள்ளனர்?

சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து

எழுந்து வருக.

======



26 ப.கங்கைகொண்டானின் கொடும்பாவி.



காய்ந்த வைக்கோலால்

கட்டி வைத்துத்

துணி போர்த்தி

கரித்துண்டால்

அரக்கிப் பல்வரிசை

அரக்கன் கொடு மீசை

உடல் முழுதும்

கறுப்புத் தார் அங்கி

தாரை தப்பட்டை

தரங்கெட்ட ஒப்பாரி

செருப்புப் பூக்களால்

செய்த மலர்மாலைச்

செண்டாக்கி

எரியூட்ட

இழுத்து நடப்போரே-

எதற்குக் கொடும்பாவி?

எரிக்கின்ற உடலுக்கோ

இளகாத மனதுக்கோ ?

==


27 என்.டி.ராஜ்குமாரின் தலைப்பில்லாக் கவிதை.


விரட்ட விரட்ட எகிறிக்குலைத்த நாய்களை

கருப்பட்டிகொடுத்து சபித்துக் கொன்றாள்.

சந்தையில் விரட்டியதால்

என்னவோ தூக்கியெறிந்து

வாளை மீன்களை பாம்புகளாய் நெளிய வைத்தாள்.

கூத்தியார் வீட்டுக்கு ஏமான் போனதையும்

குதிரைவீரன் வேலி பொத்து வந்ததையும்

ஏமாத்தியைப் பார்த்து முகக்குறி சொல்லி

பின்வாசல்வழியே பிச்சை வாங்கிச் சென்றாள்.

மந்திரவாததால் ஆளுமை பெற்றிருந்த

குண்டாமண்டிகிழவியென் ஆதிப்பாட்டி

நேற்றுயென்னை கடிக்கவந்த நாயை

கோபித்து எறிந்து கொடுத்தேன்

காஞ்சிரங்காய் கலந்த கருப்பட்டித்துண்டை

நக்கிச் செத்தது நாய்

என் அப்பன் சொல்லிக் கொடுத்தான்

சித்து.




28 ஞானக்கூத்தனின் அம்மாவின் பொய்கள்.


பெண்ணுடன் சிநேகம் கொண்டால்

காதறுந்து போகும் என்றாய்

தவறுகள் செய்தால் சாமி

கண்களைக் குத்தும் என்றாய்.

தின்பதற்கேதும் கேட்டால்

வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்

ஒருமுறத் தவிட்டுக்காக

வாங்கினேன் என்னை என்றாய்

எத்தனைப் பொய்கள் முன்பு

என்னிடம் சொன்னாய் அம்மா

அத்தனைப் பொய்கள் முன்பு

சொன்ன நீ எதனாலின்று

பொய்களை நிறுத்திக் கொண்டாய்

தவறு மேல் தவறு செய்யும்

ஆற்றல் போய் விட்டதென்றா

எனக்கினி பொய்கள் தேவை

இல்லை யென்றெண்ணினாயா?

அல்லது வயதானோர்க்குத்

தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்

பொறுப்பினி அரசாங்கத்தைச்

சார்ந்ததாய்க் கருதினாயா?

தாய்ப்பாலை நிறுத்தல் போலத்

தாய்ப் பொய்யை நிறுத்தலாமா?

உன்பிள்ளை உன்னை விட்டு

வேறெங்கு பெறுவான் பொய்கள்?

====



29 பழமலய்யின் அப்பாவின் காலம்


வயலுக்குப் போகையில்

வழி நெடுகக் கிடக்கும் சாணத்தை எல்லாம்

கூடையில் பொறுக்கிப் போவாராம் தாத்தா.

"தாத்தா ஒரத்திலதான்

இன்னக்கிம்- வெளயுது என்பாள்," அத்தை.

வட்டங்கள் சரிந்து கிடக்கும்

கூரை வீட்டில்,

"களஞ்சியம் இருந்த எடம்"- என்று

காட்டுவாள், அம்மா.

தாத்தா காலத்து, சிறுமணி, கருடன் சம்பா...,

போன இடம் தெரியவில்லை.

அறிமுகமாகியுள்ள வீரிய விதைகளுக்கு

இரசாயன உரம் வேண்டும்.

பூச்சிக் கொல்லி வேண்டும்.

கணக்குப் பார்க்கையில்,

உரத்துக்கும் மருந்துக்கும் மிஞ்சவில்லை

சாலை ஓரத்தில் வாகை மரம் இருந்தது.

காவலுக்குத் தாத்தா குந்தியிருப்பார்- என்பார்கள்.

அது இன்று இல்லை

யாரோ ஏலம் எடுத்தவர்,

நெற்றுகளோடு வெட்டிப் போனாராம்.

திருகுக்கள்ளிகள் அழியவில்லை.

புதிய குடியேற்றமாக வேலிக்கருவை.

அப்பாவின் காலம்.

அந்த நிழல்களில் கழிகிறது.

கள்ளிகளில் ஏறிப்பூக்கும் செங்காந்தள்கள்

ஆண்டாண்டுக் காலமாய் உழவன் நிலைபார்த்து

அப்பாவுக்காய் கண்சிவந்து சினக்கும்

====




30 உமா மகேஸ்வரி /ஒற்றை ரகசியம்



என் மென்மைகளை

ஊற்றி விடுகிறேன் ஒவ்வொருநாளும்

செம்பருத்தியின் வேருக்கு

உருட்டி வைக்கின்ற எனது

நட்புணர்வில்

அலகு பதிக்கும் காகம்

உன்னைக் கண்டதேயில்லை

நமதில்லாத குழந்தைகளைத்

தழுவும்போதுதான்

தளிர்க்கிறது என் தாய்மை நிபந்தனைகளின்றி

நள்ளிரவில்

நட்சத்திரங்கள் தேங்கிய மாடித்தளம்

என் பாதம் வழி ஊடுருவிப்

பகிரும் கிளர்ச்சிகளை

ஒவ்வொரு மழையின் போதும்.

இளகிப் பொழிவித்திட முடிகிறது என்னையும்

மோகங்கள் தாபங்கள்

முற்றுப் பெறாத

சஞ்சலங்கள்

மற்றும் நீ தொடவொண்ணாத

தூய்மையின் ஆழங்களோடு

சாறுகள் பிழிபட்ட

வெற்றுச் சக்கையின் கிடப்பே

உன் கட்டிலுக்கு என்றுணர்கையில்

அடைகிறேன் உனை வென்ற உவகையை

நீ அறியவியலா ஒற்றை ரகசியமாக.

-----------------------------------------------------------

31 சுகந்தி சுப்ரமணியன்/ எனது டைரி


எனது டைரி எனக்கானதாய் இல்லை

எனது டைரி முகவரிகளை விழுங்கியபடி நெளிகிறது.

எனது டைர்க்குள் உபதேசங்கள் அநேகம்

யாருக்கும் தொந்திரவற்றதாய் சின்னதாய்

ஒரு புலம்பல்

மனித துயரங்களின் தடாகத்திற்குள்

எனது துயரம் வந்துவிழ நான் என்ன செய்வது?

எனக்கான முகவரியை எனது டைரியில் காணோம்.

என்றுமேயில்லாதபடிக்குப் புதுமையாய்

காலைப் பொழுதும் மாலையும்

இனிமையான அனுபவமாய்

குழந்தையின் சந்தோஷமாய்

விரல்களின் வழியே நழுவிச் செல்லும் காற்று.

எனது டைரியின் பக்கங்கள் சுயநலமற்றவை.

என் பக்கங்களை எனக்களிக்க மறுக்கும்

பிறரின் எண்ணங்களைத் தாங்கி நிற்கும்.

எனது டைரி எண்களை விழுங்கியபடி

வரவு செலவுக் கணக்கைத் தாங்கியபடி

இன்னும் மிச்ச சொச்ச பக்கங்கள்

எனது தோழிகளின் கையெழுத்தில்

நிறைந்திருக்கும்.

நானோ

எனது முகவரியை டைரியில் தேடியபடி.

===

32 மதிவண்ணன்/நெரிந்து


எல்லாமும் சாத்தியம் தானெனினும்

எதையும் செய்யப்போவதில்லைநான்.

என்னைக்கீழாகவும் உன்னை மேலாகவும் காட்ட

எனக்குப் பூட்டிய இழிமுகத்தை மட்டுமல்லாது

நீயணிந்து கொண்ட உயர் முகத்தையும்

கிழித்துக் கொண்டிருப்பதைத் தவிர.

==========================================



33 வெ.வெங்கடாசலத்தின்

பார்த்துக் கொண்டிருந்தால் சாட்சிதான் சொல்லலாம்.




பார்த்துக் கொண்டிருக்க

மிஞ்சியது

வெண்மணி சாம்பல்

கண்மூடிக் கிடக்க

கற்பிழந்தது வாச்சாத்தி

வேடிக்கைப் பார்த்தால்

கண்முன்

கொடியன்குளங்கள் சூறைக்குள்ளாகும்

திண்ணை முடக்கம்

குறிஞ்சாக் குளங்களை

கையில் திணிக்கும்

ஆழ்ந்து உறங்கும்போது

அறுந்தது

புளியங்குடி குரல்வளை

போதையில் கிடத்தல்

உடலுக்கும்

ஊருக்கும் கேடு

தூங்கும் தருணம்

விழித்துக் கொள்கின்றன

அந்த அரிவாள்கள்

அடங்குபவன் தின்ன

இன்னும் இருக்கிறது

திண்ணியத்தில் மலம்.

===================================




34 யவனிகா ஸ்ரீராம்/ பதினேழு அர்த்தங்களில் ஒரு புன்னகை.

===================================

இறந்துபோன ஓவியனின்

சித்திரம் ஒன்றுக்கு இறுதிவிலை

கோரலின்போது

கிழக்குத் திசையில் மீண்டும்

பெரும்பூகம்பம் வெடித்தது

கடவுளின் தூதனின் முன் அவள்

விபச்சாரியாய் நின்றிருந்தாள்

முடவர்கள் நடக்கவும் காதுகேளாதவர்கள்

கேட்கவும் வாய்பேசாதவர்கள்

பாடவும் ஆனபிறகு

கிழிந்த தன் யோனியின்

கன்னிமை மூடித்தர வேண்டினாள்

அந்த பூகம்ப நகரத்தில்

பிரசித்திபெற்ற மியூசியத்திற்கான சுற்றுச்சுவரை

மறுநிர்மாணம் செய்யவே

ஓவியம் ஏலமிடப்பட்டது

கிழிந்து தொங்கும்

தூதனின் ஆடைகள் இப்படியாகப்

பகிர்ந்தளிக்கப்பட்டபோது

பறவைகள் விதைக்காமல் அறுக்காமல்

விண்வழியே பாடிப்போயின

அவன் சண்ணம் மீது கேலியைத் துவங்கினாள்

அவளின் கடையோரப் புன்னகை பதினேழு அர்த்தங்களில்

சலனம் காட்டி உறைந்தபோது

ஓவியன் சித்திரத்தை முடித்தித்திருந்தான்,

===================================

35 கருணாகரனின் மத்தியூ


============

நாங்கள் மத்தியூவைச் சந்திக்கச் சென்றபோது

அவன் இறந்து கிடந்தான்.

என்ன செய்வது என்று தெரியாமல்

ஒரு கணம் தடுமாறி விட்டோம்.

அப்போது

“கவலைப்பட வேண்டாம் நண்பர்களே.

இது என்னுடைய பதின்னான்காவது மரணம்

இதுவும் ஒரு தற்கொலைதான்” என்றான் மத்தியூ

அவனுடைய இறைப்பை விட

இது தற்கொலை என்பதும்

பதினான்காவது மரணம் என்பதும்

பயத்தையும் குழப்பத்தையும் உண்டாக்கியது

“உங்களுக்குத் தெரியுமா,

ஏற்கனவே நான் ஐந்து தடவைகள்

இந்த மாதிரித் தற்கொலைகள் செய்திருக்கிறேன்” என்று

சிரித்தான்.

இதற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் நாங்கள்

தடுமாறிக் கொண்டிருப்பதற்கிடையில்..

“மற்ற ஒன்பது கொலைகள்,

ஆனால், இப்படித்திரும்பத் திரும்பக்

கொலையாவதுதான் சலிப்பூட்டுகிறது”

என்றான் மத்தியூ.

கொலைகளின் நடுவில்

கொலையாளியின் முன்னே

கொல்லப்பட்டவனின் அருகில்

என்ன செய்வதென்று தெரியாத தத்தளிப்பில்

நாங்கள் நின்று கொண்டிருந்தபோது..

“நண்பர்களே!

எல்லாக்கொலைகளுக்கும் சாட்சியங்களிருந்தன

ஆனால், எந்தச் சாட்சியும்

சாட்சியமளிக்கவில்லை” என்றான்

எங்களையும் அப்படிச் சொல்கிறானா

இதோ இந்தக் கணத்தில்

அவனுடைய உடலின் முன்னே

காட்சியாக நிற்கிறோமே…!

அவன் எங்களைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை

“சாட்சியங்களில்லாத கொலைகளுக்கு நீதியுமில்லை

கருணையுமில்லை

கருணையுமிருந்தால் கொலைகளே நேராது”

எனத் தன்னிரு கைகளையும் நீட்டி வரவேற்றான்.

என்ன சொல்வது அவனுக்கு என்று தெளிவதற்கிடையில்

“உங்களுக்கான தேநீரைத் தயாரித்து வைத்திருக்கிறேன்.

பருகிச் செல்லுங்கள்.

திரும்பிச் செல்லும்போது

தயவுசெய்து என்னுடைய நினைவை மட்டும்

அங்கேயே விட்டுவிட்டுச் செல்லுங்கள்

அதுவொரு தீண்டாப் பொருளாக இருக்கட்டும்” என்றான்.

அது கட்டளையா

அன்பிலான கோரிக்கையா என்று தெரியவில்லை

ஆனாலந்தக் குரலில் கொண்டிருந்த குழைவில்

நேசத்தின் பருக்கைகள் மின்னின.

அந்தத் தேநீரில் குருதி வாசனை வீசியபோது

நாங்கள் தலைகளைத் தாழ்த்திக் கொண்டோம்

கண்களிலிருந்து பூக்கள் சிந்தின

மத்தியூவை நாங்கள் பிறிதொரு

நத்தார்ப் பண்டிகையில்தான் சந்திக்க வாய்த்தது.

அதுவுமொரு எதிர்பாராத சந்திப்புத்தான்

அது பாலன் பிறந்த நேரம்

இது தன்னுடைய பத்தொன்பதாவது பிறப்பு என்று

கண்களைச் சிமிட்டினான்

இரண்டுவருடம் கழித்து

ஒரு நாள்

“இனந்தெரியாத முறையில்

மர்மமாகாக் கொல்லப்பட்ட சடலமொன்று

பாலத்துக் கீழே கிடக்கிறது” என்று யாரோ சொல்லவும்

பதட்டமாய்ச் சென்று பார்த்தேன் –

மத்தியூ

அது கொலையா

தற்கொலையா என்று தெரியவில்லை

எத்தனையாவது மரணமென்றும்

அந்த உடலைப் படம்பிடித்துக் கொண்டிருந்தார்கள் யாரோ

அதற்கு ஏற்றவாறு

அந்தக் கோணத்தில் தன்னை வைத்திருப்பது எனத்

தெரிந்திருக்குமா அவனுக்கு என்று

ஏனோ ஒரு எண்ணம் வந்த து எனக்கு

“இது எதற்கென்றே தெரியாமல் நடந்த கொலை

யாரால் ஆனதென்றும் தெரியவில்லை

வழமையைப் போல இதற்கும் சாட்சியங்களில்லை

அதனால் என்ன?”

என்றான் மத்தியூ மிகச் சாதாரணமாக..

==============================================



36 மனுஷ்ய புத்திரன்/நீரடியில் கொலை வாள்



நீரடியில் கிடக்கிறது

கொலை வாள்



இன்று இறந்த ஆறுகள்

எதுவும் ஓடவில்லை

எனினும்

ஆற்று நீரில் கரிக்கிறது இரத்த ருசி



இடையறாத

நதியின் கருணை

கழுவி முடிக்கட்டுமென்று

நீரடியில் கிடக்கிறது

கொலை வாள்

37 சுகிர்தராணி/ இரவுமிருகம்

======================= ========

பருவப் பெண்ணின் பசலையைப் போல

கவிழத் தொடங்கியிருந்தது இருள்

கதவடைத்துவிட்டு

மெழுகுவர்த்திகளின் மஞ்சள் ஒளியில்

தனியாக அமர்ந்திருந்தேன்

அப்போதுதான் தினமும் விரும்பாத

அதன் வருகை நிகழ்ந்தது

நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே

என்னை உருவி எடுத்துவிட்டு

இன்னொரு என்னை வெளிக்கொணர்ந்தது

நான் திகைக்க நினைக்கையில்

அந்தரங்கம் அச்சிடப்பட்ட புத்தகத்தையே

படித்து முடித்திருந்தேன்

என் கண்களின் ஒளிக்கற்றைகள்

முன்னறையில் உறங்குபவனின்

ஆடை நெகிழ்வுகளில் பதிந்திருந்தன

கோப்பை நிறைய மதுவோடு

என்னுடல் மூழ்கி மிதந்தது

கூசும் வார்த்தைப் பிரயோகங்களைச்

¢சன்னமாய்ச் சொல்லியவாறு

சுயபுணர்ச்சியில் ஆழ்ந்திருந்த வேளை

பறவைகளின் சிறகோசை கேட்டதும்

என்னை என்னிடத்தில் போட்டுவிட்டு

ஓடிவிட்டது இரவு மிருகம்.

=================================

38 கலாப்ரியா/விதை


கூடவே ஓடி வந்து

சாயும் போதெல்லாம்

சமன் செய்து தோள்தந்து

சைக்கிள் கற்றுத் தந்த நண்பன்

ஓட்டும் போதெல்லாமா

நினைவோட்டத்திலும் நிற்கிறான்

நீந்தும் போதெல்லாம்

நீச்சல் சொல்லித் தந்தவனை

மறக்காமலா இருக்கிறோம்.

ஆதியில் சொன்னது

ஆச்சியா அம்மாவா

என் குழுந்தைக்குச்

சோறூட்டும்போது சொல்லும்

கதைகளினூடே அவர்கள்

ஞாவகத்துக்கு வருவதில்லை.

காதலிக்கவும் இல்லை

கற்றுத்தரவும் இல்லை

ஒவ்வொரு கவிதையின்

முற்றுப் புள்ளியிலும் பின் ஏன்

கண்ணீர்ச் சொட்டாய் நீ.

------ ----------------------------------

39 ஔவை/நானும் நீயும்



நான் கோவிக்கிறேன்

நீ சிரிக்கிறாய்!

எனக்குப் பிரச்னை என்கிறேன்

ஒரு வசனத்தில் முடிவு சொல்கிறாய்

நான் உணர்வுகளுடன் தவிக்கிறேன் என்கிறேன்

நீ என்ன செய்வது என்கிறாய்

நான் அழுகிறேன்

நீ முட்டாள் என்கிறாய்

எனது உணர்வுகளை மதிக்கப் பழகு என்கிறேன்

நீ பெண் என்கிறாய்

உண்மைதான் -நான் பெண்

வறண்ட மரபுகளுக்குள்ளும் -நீ

வசதியாக வாழலாம்

வாழ்க்கை உனது

வாழ்வது என் கடமை என நினைக்கிறாய்

வேதனை நிரம்பிய இதயத்தோடு

எனது வாழ்வு சாத்தியமில்லை

போலி வாழ்வில் நடித்திருக்கவும்

வசனம் பேசிக் காலடியில் விழவும்

முடியாது எனக்கு

எனது வாழ்வைத் தேடி சிறகுகள் விரிகின்றன

இப்போது ஏன் மௌனமாகி விட்டாய்?

================================================

40 பாரதிதாசன்

--------------------------

என்னருமை மக்களே இன்பத் திராவிடரே

இன்னல் வடக்கர்களை எவ்வளவும் நாடாதீர்!



உங்கள் கலை ஒழுக்கம் மிக்க உயர்ந்தனவாம்

பொங்கிவரும் ஆரியத்தின் பொய்க்கதைகள் ஒப்பாதீர்



ஏமாற்றி மற்றவரை, ஏட்டால் அதை மறைத்துத்

தாமட்டும் வாழச் சதைநாணா ஆரியத்தை



நம்புவார் நம்பட்டும் நாளைக் குணர்வார்கள்

அம்பலத்தில் வந்ததின்றே ஆரியரின் சூழ்ச்சியெலாம்!



பிச்சை எடுப்பவர்கள் பேரதிகா ரம்பெற்றால்

அச்சத்தால் நாட்டில் அடக்குமுறை செய்யாரோ?



ஆட்சி யறியாத ஆரியர்கள் ஆளவந்தால்

பாட்டாளி மக்களெல்லாம் பாம்பென்றே அஞ்சாரோ?



மிக்க மதவெறியர் மேல்நிலையை எய்திவிட்டால்

தக்க முஸ்ல¦மைத் தாக்க திருப்பாரோ?



உங்கள் கடமை உணர்வீர்கள், ஒன்றுபட்டால்

இங்கே எவராலும் இன்னல் வருவதில்லை!



ஏசு மதத்தாரும் முஸ்ல¦ம்கள் எல்லாரும்

பேசில் திராவிடர் என் பிள்ளைகளே என்றுணர்க!



சாதிமதம் பேசித் தனித்தனியே நீரிருந்தால்

தோதுதெரிந் தாரியர்கள் உம்மைத் தொலைத்திடுவார்!



ஆரியரின் இந்தி அவிநாசி ஏற்பாடு

போரிட்டுப் போக்கப் புறப்படுங்கள் ஒன்றுபட்டே!



ஆண்டேன் உலகுக்கே ஆட்சிமுறை நான்தந்தேன்

பூண்ட விலங்கைப் பொடியாக்க மாட்டீரோ?



மன்னும் குடியரசின் வான்கொடியை என்கையில்

இன்னே கொடுக்க எழுச்சி யடையீரோ



==================






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்