பேரா. இராம.சுந்தரம்: நினைத்துக்கொள்கிறேன்

 முதுகலை படிக்கும் காலத்திலேயே அறிமுகமாகிச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் நண்பர்களைப் போலப் பேசிக்கொண்ட பேராசிரியர்கள் பலருண்டு. அவர்களில் ஒருவர் பேரா.இராம.சுந்தரம். நண்பர்களாகத் தொடரும் பேராசிரியர்கள் பலரையும் எனது நெறியாளரின் இருக்கைக்கு முன்புதான் சந்தித்திருக்கிறேன். அவர்களின் பேச்சில் நானும் கலந்துகொண்டதின் வழியாக ஆசிரிய - மாணவ உறவைத் தாண்டி நண்பர்களாகிவிடுவோம். தனிப்பட்ட அன்பும் நட்பும் கொண்டவர்.

தஞ்சைப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது ஒருநாள் எனது ஆசிரியர் தி.சு.நடராசனைப் பார்க்க வந்து பல்கலைக்கழகச் சிற்றுண்டிச்சாலை, திரும்பவும் ஆசிரியரின் இருக்கை எனச் சுற்றிக்கொண்டிருந்தபோது இடைவிடாது பேசிக் கொண்டிருந்தோம். அதற்குப் பிறகு எனது ஆய்வுக்கான தரவுகளைத் தேடித் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்திற்குச் சென்றபோது, அதே வளாகத்தில் இருந்த தஞ்சைப் பல்கலைக்கழகப் பழைய வளாகத்தில் பேசிக்கொண்டே திரிந்தோம். நான் தங்கியிருந்த மு.ராமசுவாமியின் (நாடகத்துறைப் பேராசிரியர்) வீட்டிற்கு இரவில் வருவார். அந்த அன்பு எப்போதும் தொடர்ந்தது.
தமிழில் அறிவியல் புலம் சார்ந்த நூல்கள் எழுதப்பட வேண்டும்; அதற்கு முன்னர் மொழிபெயர்க்கப்பட வேண்டும். இரண்டுக்கும் அடிப்படையான கலைச்சொற்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்ப்பல்கலைக்கழக அறிவியல் தமிழ்துறையின் தலைவராக இருந்தவர் அவர். அத்துறையின் வெளியீடுகளாகப் பல நூல்களைப் பதிப்பித்த பேராசிரியர். தமிழ் வழியாகப் பொறியியல், மருத்துவம் போன்ற செயல்முறை அறிவியல் பாடங்களைக் கற்பிக்கத் தமிழ்ப் பல்கலைக்கழகம் இவரையே பொறுப்பாக்கியது. அப்பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தரான பேரா.வ.அய்.சுப்பிரமணியத்தின் அன்புக்குரிய மாணவர். அவரே அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக வரும் வாய்ப்பெல்லாம் இருந்தது. ஆனால் அரசுகளையும் அமைச்சர்களையும் அனுசரித்துப் போகும் நபர் இல்லை என்பதால் வாய்ப்புகள் வரவில்லை.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் இணைப்பேராசிரியராக என்னைத் தேர்வுசெய்த வல்லுநர் குழுவில் அவரும் இருந்தார். நேர்காணலுக்குப் பிறகு அவர்தான் நான் தேர்வு பெற்றுள்ளேன் என்ற தகவலைச் சொன்னார். வார்சா பல்கலைக் கழகத்திற்குச் செல்கிறேன் என்றவுடன் அதன் விவரங்களையும் அங்கிருக்கும் சூழலையும் எடுத்துக்கூறினார். அவர் போனகாலம், சோசலிச அரசு இருந்த கால கட்டம். 30 ஆண்டுகளில் எல்லாம் மாறியிருந்தது. ஆனால் அவர் தான் அடித்தளம்.
1973 இல் இந்திய -போலந்து நட்புறவு அடிப்படையில் வார்சா பல்கலைக்கழகத்தின் கீழ்த்திசையியல் புலத்தில் தமிழ் இருக்கை தொடங்கப்பட்டது. அவ்விருக்கையின் முதல் வருகைதரு பேராசிரியராக-1974 இல் சென்றார். ஆறு ஆண்டுகள் போலந்தில் தங்கியிருந்து போல்ஸ்கி மொழியின் அடிப்படை இலக்கணத்தைக் கற்று அம்மொழியிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து போல்ஸ்கிக்கும் மொழிபெயர்ப்புகள் செய்தவர் அவர் மட்டுமே. அவரால் உருவாக்கப்பட்ட பாடத்திட்டமும், அடிப்படை நூல்களுமே நான் வார்சா போகும்வரை இருந்தது. அவரது அடிப்படையை வைத்துக்கொண்டே பின்னர் போன ஒவ்வொருவரும் பங்களிப்புச் செய்தார்கள். இப்போதும் அதுதான் தொடர்கிறது.
நீண்ட நாள் நண்பராக இருந்த பேராசிரியர் மறைந்துவிட்டார் என்ற செய்திக்குப் பின் நினைவுபடுத்திக் கொள்கிறேன்.
May be an image of 1 person




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிஷ்கிந்தா காண்டம்- குற்றவியலும் உளவியலும்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்